Thursday, August 09, 2007

நேர்காணல்: அழகிய பெரியவன்

இங்கு நல்ல விமர்சகர்களே இல்லை: அழகிய பெரியவன்
நேர்காணல் கண்டவர்கள்:: மினர்வா & நந்தன்
...........................
............................
வெகுஜன பத்திரிகைகளிலும் சரி, பொது இடங்களிலும் சரி தலித் எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் தரப்படுவது போன்ற தோன்றம் அண்மைக்காலமாகத் தென்படுகிறது. தலித் எழுத்துக்கு தரப்படும் இந்த முக்கியத்துவம் தலித் பிரச்சனைகளுக்கு தரப்படுவதில்லை. இதை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?

வெகுஜனப் பத்திரிகைகள் தமிழில் அதிகரித்து விட்டன. பத்திரிகைகள் அதிகரித்த அளவுக்கு தலித் எழுத்தாளர்களின் கவிதைகள், அனுபவம் சார்ந்த படைப்புகள் இடம்பெறவில்லை என்பதுதான் உண்மை. தலித் எழுத்தாளர்களின் அதிகம் அறியப்பட்ட, மிகவும் பிரபலமான படைப்பாளிக்குத் தான் அந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. படைப்புகளுக்கு இருக்கும் இந்த குறைந்த முக்கியத்துவம் கூட தலித் பிரச்சனைகளுக்கு இல்லை என்பதும் உண்மைதான்.

வெகுஜன பத்திரிகைகள் சினிமா, பரபரப்பு போன்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் தருவதால் சமூக மாற்றம் தொடர்பான விஷயங்களுக்கு அதிக கவனம் தருவதில்லை. ஒரு சில நேரங்களில் தலித் பிரச்சனைகளுக்கு எதிராகவே வெகுஜனப் பத்திரிகைகள் செயல்படுகின்றன. உதாரணமாக மதுரை நல்லக்காமன் பிரச்சனையை எடுத்துக் கொள்ளலாம். மதுரையைச் சேர்ந்த நல்லக்காமன் என்பவர் மீது காவல்துறை ஆய்வாளர் ஒருவர் மனித உரிமை மீறல் செய்ததாக சில ஆண்டுகளுக்கு முன் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சட்டம் ஒழுங்கின் பெயரால் மனித உரிமைகளை மீறுவதைத் தான் அவர் தொடர்ந்து செய்து வந்தார். பல பதவி உயர்வுகள் பெற்று பல முக்கியமான வழக்குகளையும் விசாரித்து வந்தார்.

இந்நிலையில் தொடர் புகார்களுக்குப் பிறகு சில மாதங்களுக்கு முன் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். அடுத்த வாரமே ஆனந்த விகடனில் அவரைக் கதாநாயகன் போல் சித்தரித்து கட்டுரை வெளியானது. அவரது சொந்த ஊருக்கே போய் புகைப்படம் எடுத்து அதை வெளியிட்டிருந்தார்கள். இது எவ்வளவு அநியாயமான ஒரு விஷயம். அடிவாங்கியவனை கண்டுகொள்ளாமல் விடுவதும், அடித்தவனை தூக்கிப் பிடிப்பதும் போன்ற இயல்பு வெகுஜனப் பத்திரிகைகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பத்துக் கொலை செய்தவனின் வாழ்க்கையை தொடராக வெளியிடுவதில் தான் பத்திரிகைகள் ஆர்வம் காட்டுகின்றன. வெட்டுப்பட்டவனின் வாழ்க்கை, அவனது குடும்பம் பற்றி யோசிக்க இங்கு யாரும் தயாராக இல்லை. வெகுஜனப் பத்திரிகைகள் தலித் பிரச்சனைக்கு தரும் முக்கியத்துவம் இவ்வளவு தான்.

தீவிர இலக்கியப் பத்திரிகைகளில் தலித் பிரச்சனைகளை சொல்வதற்கு இடம் இருக்கிறது. அதிலும் சில பத்திரிகைகள் தலித் பிரச்சனைகளை பிரச்சாரம் சார்ந்த இலக்கியம் என்று சொல்லி நிராகரித்து விடுகின்றன. இடம் தரும் பத்திரிகைகளும் சில படைப்பாளிகளுக்கே இடம் தருகின்றன. அதனால் புதிய சிந்தனைகள், புது எழுத்துக்கள், புது படைப்பாளிகளுக்கு இங்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.
...........................
...............................
..................................
தலித் சிந்தனையாளர்கள் சிலர் பெரியாரைப் புறக்கணித்து விட்டு சாதியை ஒழித்து விடலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பெரியாரைப் புறக்கணித்து விட்டு சாதி ஒழிப்பு என்பது சாத்தியமா?

நான் திராவிடக் குடும்பத்தில் இருந்து வந்தவன். திராவிடச் சிந்தனைகள் எனக்குள் ஊறிப்போன விஷயம். பெரியாரின் பங்களிப்பை நாம் சரியாக மதிப்பிடவும் புரிந்து கொள்ளவும் இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. தற்போது ஏற்பட்டுள்ள இந்த சமூக மாற்றத்திற்கு பெரியாரின் தீண்டாமை ஒழிப்பு, சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு போன்றவை தான் காரணம். பெரியாரை முன்னிறுத்துவதால் தனக்கான இடம் இல்லாமல் போய்விடுமோ என்று இவர்கள் நினைக்கிறார்கள். தலித் தலைவர்களைத் தான் அந்த இடத்தில் வைக்க வேண்டும் என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.

பெரியாரின் பங்களிப்பை மறுத்து விட்டு சாதி ஒழிப்பு பேசுவது என்பது ஒருவகையான துரோகம் தான். பெரியாரின் பங்களிப்பு தான் நம் சமூகத்தில் பரவலான, வலுவான அடித்தளத்தை உருவாக்கித் தந்திருக்கிறது. சாதிய ஒழிப்பை நீங்கள் கடுமையாக இன்று பேச முடியும் என்றால் அதற்கு பெரியார் ஏற்படுத்திக் கொடுத்த அடித்தளம் தான் காரணம். தலித் அறிவுஜீவிகளைத் தான் பெரியார் இடத்தில் நிறுவ வேண்டும், பெரியாருக்கு பிறகு பிற்படுத்தப்பட்ட சமூகம் ஒன்று திரண்டிருக்கிறது அதனால் தலித்களுக்கான இடம் பறிபோய்விட்டது போன்ற விமர்சனங்களை, தவறான அனுமானங்களால் எழக்கூடிய விமர்சனங்களாகத் தான் நான் பார்க்கிறேன்.

இந்திய அளவிலேயே தலித்துகளுக்கான போராட்டத்தில் தலித்கள் அல்லாத இடைச்சாதியினரும் தீவிரமான பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில் தான் பகுஜன் போன்ற கருத்தோட்டங்கள் வடமாநிலங்களில் உருவானது. அந்தச் சிந்தனை ஏன் தமிழ்நாட்டில் வரவில்லை என்று எனக்குத் தெரியவில்லை. பெரியாரை நிராகரித்து விட்டு தலித்துகளின் முன்னேற்றம் சாத்தியமே இல்லை. அவரை வைத்துக்கொண்டே நாம் அந்தப் பாதையில் பயணிப்பதுதான் நம்முடைய பலம்.
..........................
...........................
.............................
பெண் எழுத்தாளர்கள் உடல் எழுத்துக்கு அதிக முக்கியத்துவம் தருவதாக, ஆசிரியர் குழுவில் ஒருவராக இருக்கும் தலித் முரசுவில் ஒரு விமர்சனம் வெளிவந்தது. கவிஞராக, சக படைப்பாளியாக நீங்கள் இதை எப்படி பார்க்கிறீர்கள்?

இந்தப் பிரச்சனையில் பெண் எழுத்தாளர்களுக்கு ஆதரவானது தான் என்னுடைய குரல். பெண் எழுத்தாளர்கள் வெளிப்படையாக எழுதுவதாக ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. வெளிப்படையாக எழுதுவது அவ்வளவு தவறா, ஆண் எழுத்தாளர்கள் வெளிப்படையாக பேசுவதில்லையா? போன்ற கேள்விகள் இந்த இடத்தில் எனக்குத் தோன்றுகிறது.

காலங்காலமாக ஊறிக்கிடக்கும் ஆணாதிக்கச் சிந்தனையின் வெளிப்பாடாகத் தான் நான் இதை பார்க்கிறேன். பெண்கள் உரத்துப் பேசக்கூடாது, வீட்டை விட்டு வெளியே வந்து பேசக்கூடாது, பஞ்சாயத்திலோ, பொதுவிடங்களிலோ பேசக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள் இருந்த சமுதாயம் தானே இது. அதன் எச்சங்கள் இன்னமும் இருந்து கொண்டிருக்கிறது என்பதற்கான அடையாளம் தான் பெண்கவிஞர்கள் மீது வைக்கப்படுகிற குற்றச்சாட்டு.

இந்த ஆணாதிக்க மனநிலை தான் பெண் கவிஞர்களின் வெளிப்படையான எழுத்தை கொச்சையானதாக, அருவருப்பாக பார்க்கிறது. பெண் எழுத்தாளர்கள் எந்த மாதிரியான விஷயங்களை பார்க்கிறார்கள், எதன் அடிப்படையில் எழுதுகிறார்கள் என்றுதான் பார்க்க வேண்டும். ஆரம்பத்தில் தலித் எழுத்துக்கு இருந்த எதிர்ப்பை இந்த இடத்தில் பொருத்திப் பார்த்துக் கொள்வது சரியாக இருக்கும் என்றே தோன்றுகிறது.

தலித் எழுத்துக்கள் வெளிப்படையாக இருக்கிறது, அதிகம் வசவுச்சொற்களை பயன்படுத்துகிறார்கள் போன்று மிகக்கடுமையாக விமர்சித்தார்கள். தலித்களின் மொழியை அப்படியே பயன்படுத்திய காரணத்திற்காக என்னுடைய சில கதைகள் கூட தொகுப்புகளில் இடம்பெறாமல் போயிருக்கிறது. இந்த வார்த்தைகளை வேண்டுமென்றோ, சுவாரஸ்யத்திற்காகவோ பயன்படுத்துவதில்லை. கதையில் வரும் தலித் கதாபாத்திரங்களின் கோபம், ஆத்திரம் வெளிப்பட வேண்டுமானால் உக்கிரமான வார்த்தைகளைத் தான் பயன்படுத்தியாக வேண்டும். இதேபோன்று தான் பெண் படைப்பாளிகளும் உடல்சார்ந்த மொழியை பயன்படுத்துகிறார்கள்.

அந்த வார்த்தைகள் வைத்திருக்கக் கூடிய அரசியல் என்ன, அந்தக் கவிதை என்ன மாதிரியான அரசியலில் இயங்குகிறது என்பதைப் புரிந்து கொண்டால் இப்படியான கேள்விகள் எழாது என்று நினைக்கிறேன்.

விரிவான வாசிப்புக்கு....


நன்றி: கீற்று

3 comments:

ஜீவி said...

//தலித் எழுத்தாளர்களின் அதிகம் அறியப்பட்ட, மிகவும் பிரபலமான படைப்பாளிக்குத் தான் அந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. படைப்புகளுக்கு இருக்கும் இந்த குறைந்த முக்கியத்துவம் கூட தலித் பிரச்சனைகளுக்கு இல்லை என்பதும் உண்மைதான்.//
'தலித்' என்று இல்லை, எந்த 'இஸத்துக்கு'ச் சொந்தக்காரர்களுக்கும்,
வெகுஜன ஊடகங்களில், அந்தப் படைப்பாளிக்கு ஒரு அறிமுகம் தந்து
பிரபலப் படுத்தி, அவர்தம் வாழ்க்கை
நிலையை மாற்றிவிட்டால், அவர்
பின் பிரச்னைகளைப் பேசுவது எங்கே?
மாறிய வாழ்க்கைப் போக்குக்கு ஏற்ப தான், அவர் செயலும் பேச்சும் அமைந்து விடும்' என்கிற எதிர்ப்பார்ப்பும், அது பற்றிய அவர்களின் வெற்றியடைந்த அனுபவங்களும் தான் காரணம்.
பஞ்சு மெத்தையாகத் தெரியும் இந்தப்
புதை குழியிலிருந்து, சரித்திரத்தில் மீண்டு வந்தவர் வெகு சிலரே.

செல்வநாயகி said...

அருமையான இடுகை டிசே. நான் நேரப்பற்றாக்குறைகளில் இம்மாதிரியான சிறந்த எழுத்துக்களைப் பலசமயங்களில் தவறவிடுகிறேன். எடுத்தப்போட்டமைக்கு மிக்க நன்றி.

தன்னைச் சுயபரிசோதனை செய்துகொள்ளவும், தன்னைச் சுற்றிய வாழ்வை உணரத் திறந்த மனமும் கொண்டவர்களுக்கு இம்மாதிரி நேர்காணல்களேகூடப் போதிமரங்கள்தான். இவற்றையெல்லாம் நாம் எளிதில் படிக்க வகைசெய்யும் கீற்றுக்கும் நன்றி.

உங்களின் சென்றவாரத்தைய கவிதையும் எனக்குப் பிடித்திருந்தது டிசே. அவசரமாய் வாசித்தது, அப்போது சொல்லமுடியவில்லை.

இளங்கோ-டிசே said...

/'தலித்' என்று இல்லை, எந்த 'இஸத்துக்கு'ச் சொந்தக்காரர்களுக்கும்,
வெகுஜன ஊடகங்களில், அந்தப் படைப்பாளிக்கு ஒரு அறிமுகம் தந்து பிரபலப் படுத்தி, அவர்தம் வாழ்க்கை நிலையை மாற்றிவிட்டால், அவர் பின் பிரச்னைகளைப் பேசுவது எங்கே?மாறிய வாழ்க்கைப் போக்குக்கு ஏற்ப தான், அவர் செயலும் பேச்சும் அமைந்து விடும்' என்கிற எதிர்ப்பார்ப்பும், அது பற்றிய அவர்களின் வெற்றியடைந்த அனுபவங்களும் தான் காரணம்.பஞ்சு மெத்தையாகத் தெரியும் இந்தப்
புதை குழியிலிருந்து, சரித்திரத்தில் மீண்டு வந்தவர் வெகு சிலரே/
உண்மைதான் ஜீவி. நீங்கள் குறிப்பிடுவதுபோல, அப்படிப்பலியாகிப்போன நிறையப்பேர்களை உதாரணம் காட்டலாம்.
....
நன்றி செல்வநாயகி.