Friday, July 04, 2008

ச‌ங்க‌ இல‌க்கிய‌த்தில் பாலிய‌ல்: ஆண்‍ பெண் உற‌வு நிலை


-ந.முருகேச‌பாண்டிய‌ன்

சமூக இருப்பில் மனித உயிரானது தனது நினைவுகளையும் அனுபவங்களையும் பிறரிடம் பரிமாறிக் கொள்வதில் மொழி அடிப்படையாக விளங்குகிறது. மொழி இல்லாவிடில் மனித உயிர்கள் இருக்கும்; மனித சமுதாயங்கள் இருக்காது; வரலாறு இருக்காது. முன்னர் எப்பொழுதோ நடைபெற்ற நிகழ்வுகள் அல்லது எதிர்கொண்ட அனுபவங்களின் நினைவாக மொழி இருப்பதனால், வரலாற்றை மனிதன் மீது சுமத்துவதன் மூலம், இடையறாத சமுதாய இயக்கத்தினைச் சாத்தியப்படுத்துகிறது. இத்தகைய பின்புலத்தில் தமிழ்மொழி, தமிழ் நிலம், சங்க இலக்கியம் போன்ற கருத்தியல்களைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். `வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம்' என்று பனம்பாரனர் வரையறுத்துள்ள நிலப்பரப்பு அரசியல் நோக்கமுடையது. இங்குத் தமிழ் மொழியானது பரந்துபட்ட நிலப்பரப்புடன் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது; தமிழரின் புழங்கும் வெளி வரையறுக்கப்பட்டுள்ளது.

தமிழரின் வாழ்க்கை சார்ந்த நிலமானது ஐந்தினையாகப் பாகுபடுத்தப்பட்டது தற்செயலானது அல்ல. நிலமானது மொழியின் வழியே தமிழ்ச் சமுதாயத்தின் பொது நினைவினுக்குள் தகவமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல்வேறு இனக்குழுக்களாகவும் குடிகளாகவும் வேறுபட்டிருந்த மக்களைத் தமிழ் என்ற மொழி அடையாளம் ஒருங்கிணைத்தது. இயற்கையான நிலப்பரப்பானது, மொழியின் வழியே நினைவுகளாக உருமாறி, காலப்போக்கில் நாடாக மாற்றம் பெறும் அரசியல் நடந்தேறியது. இனக்குழுவினரின் பாரம்பரியமான வாழ்க்கை முறை, சடங்குகள், விலக்குகள், குலக்குறிச் சின்னங்கள், பலிகள், தொல்சமய நம்பிக்கைகள் போன்றனவற்றைச் சிதைத்துவிட்டுப் புதிய வாழ்க்கை முறையை வாழவேண்டிய நெருக்கடியை எற்படுத்தின மாறிவரும் அரசியல் நிலமைகள். இதனால்தான் மனிதர்களிடையே இயல்பூக்கமாகப் பொதிந்துள்ள காதலும் சண்டையும் சங்க இலக்கியத்தில் முதன்மைப்படுத்தப்பட்டன. எதிர் இனக்குழுவை போரில் வென்று, அக்குழுவினரின் நிலப்பரப்பைத் தனது நிலத்துடன் இணைக்கும்போது, பிரச்சினைகள் தோன்றுகின்றன. இத்தகு சூழலில் பாணர்கள், புலவர்கள் மூலம் நடைபெற்ற சமூக ஒருங்கிணைப்புகள் முக்கியமானவை. `யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற பூங்குன்றனாரின் பாடல், போரில் தோற்றுப் போய், இன்னொரு குழுவினருக்கு அடிமைப்பட்ட மக்களுக்குத் தேறுதல் சொல்லுவதற்காகப் பாடப்பெற்றது என்று கருத இடமுண்டு. குடி, கணம், மன்பதை என்று அடையாளப்படுத்தப்படும் ஒரு குழுவைச் சார்ந்த இளம்பெண்ணுக்கு, முற்றிலும் அந்நியமான குழுவிலிருந்து வரும் இளைஞனுடன் உறவு கொள்ளக் `காதல்' மட்டும் போதுமானது என்ற கருத்து சங்கப் பாடல்களில் பொதிந்துள்ளது. ஒரே இனக்குழுவிற்குள் நிகழும் காதல் எனில், இலக்கிய ஆக்கத்தில் இத்தகைய முக்கியத்துவம் தரப்பட வாய்ப்பில்லை.

அகம், புறம் என இரு எதிரிணைகள் மூலம் கட்டமைக்கப்பட்ட சங்க இலக்கியப் பிரதியானது, ஏற்கெனவே நிலவிய தாய் வழிச் சமூக அமைப்பின் சிதைவினுக்குப் பின்னர் வடிவமைக்கப்பட்டுள்ளது. (எனினும் தாய் வழிச் சமூக அமைப்பின் எச்சங்கள் சங்க இலக்கியத்தில் பதிவாகியுள்ளன.) சக உயிர் என்ற நிலையில் பெண்ணை ஆணுக்கு எதிராக வைக்காமல், ஆணை மட்டும் முதன்மைப்படுத்தும் போக்கு உருவாக்கப்பட்டது. அக வாழ்வில் காதல் மூலம் பெண்ணை வெல்வதும், புற வாழ்வில் போர் மூலம் நிலத்தை வெல்வதும் ஆணின் இலக்கணமாகப் புனையப்பட்டன. தமிழரின் அடிப்படை நினைவாகக் காதலும் வீரமும் முன்னிறுத்தப்பட்டன. போர் என்பது இனக்குழுச் சமூகத்தில் கூட்டுக் களிப்பைக் குறிக்கும் கொண்டாட்டம். வன்முறை மூலம் பிற இனக்குழுவினரின் நிலப்பரப்பைக் கைப்பற்றுவதன் வாயிலாகச் சமூக விரிவாக்கமும், ஆணின் மேலாதிக்கமும் நடந்தேறுகின்றன. அகநிலையில் பிற குழுவைச் சார்ந்த பெண்ணுடல்கள் உள்பட பெண்ணுடல் என்பது ஆணுக்கான துய்ப்பு மையமாகின்றது. புறநிலையில் நிலமானது போரின் மூலம் ஆணுக்கான துய்ப்பு நிலமாக மாறுகின்றது. நிலமும் பெண்ணும் ஆணின் கட்டுப்பாட்டிற்குட்பட்டவை என்ற பொதுப் புத்தி சங்க இலக்கியத்தில் சூட்சுமமாகப் பொதிந்துள்ளது.

(2)

சங்க காலத்தில் நிலவுடைமைச் சமுதாயம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. இனக்குழு வாழ்க்கையின் எச்சங்கள் ஏற்றத் தாழ்வான நிலையில் பரவலாக வழக்கிலிருந்தன. உணவுக்காக வேட்டையாடுதல் என்ற நிலையிலிருந்து சில குழுக்கள் மாறியிருந்தன. காட்டை எரித்து வேளாண்மை செய்தல், மாடு வளர்த்தல் காரணமாக மக்களின் வாழ்க்கைமுறை மாற்றமடைந்திருந்தது. மனித இருப்புக் குறித்த அக்கறையும் சமூக விழுமியங்கள் குறித்த ஈடுபாடும் மொழியின் வழியே நினைவில் பதிவாகியது, கருத்தியல் ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. பௌத்த, ஜைனக் கருத்துகளுடன் வைதிக சமயக் கருத்துகளும் மக்களிடையே பரவியுள்ளதனை சங்க இலக்கியத்தில் கண்டறிய முடிகின்றது. இந்நிலையில், தமிழ் நிலப்பரப்பில் இனக்குழுக்களாக வாழ்ந்து வந்த தமிழரிடையே நிலவிய ஆண்-பெண் உறவு, பாலியல் பற்றி இதுவரை உருவாக்கப்பட்டுள்ள கருத்துகளும் மறுவாசிப்புச் செய்ய வேண்டிய தேவையேற்பட்டுள்ளது.

சங்க இலக்கியப் பிரதிகள் சித்திரிக்க விரும்பும் பெண் பற்றிய பிம்பம் முக்கியமானது. அந்தப் பெண்ணின் சமூக மதிப்பீடுகள் யாவை? சமூகத்தில் தொடர்ந்து பெண் பற்றிய புனைவுகளைக் கட்டமைக்க வேண்டிய நிர்ப்பந்தம் யாது? பெண்ணைக் குடும்ப நிறுவனத்திற்குள் இணைத்து அவளுடைய ஒவ்வொரு செயற்பாட்டினையும் வரையறுத்திடச் சமூகச் சூழல் முயலுவது ஏன்? பிரிந்துபோன கணவனுக்காகப் பொறுமையுடன் வீட்டில் ஆற்றாயிருக்க வேண்டியது பெண்ணின் இயல்பு என்ற போதனையில் பொதிந்துள்ள அரசியல் யாது? இப்படிப் பல கேள்விகள் தோன்றுகின்றன. பெண்ணின் மனவுணர்வுகள், பாலியல் விருப்பம் போன்றவற்றைச் சிதைத்து, அவளை வெறும் உடலாக மாற்றி, ஆணின் மேலாதிக்கத்தினுக்கேற்ப மாற்றும் முயற்சிக்கான தடயங்கள் சங்க இலக்கியத்தில் காணப்பெறுவது ஆழ்ந்த ஆய்விற்குரியது.

ஒப்பீட்டளவில் பெண்ணுடல் இயற்கையுடன் நெருங்கிய தொடர்புடையது. மாதவிலக்கும் மகப்பேறும் பெண்ணுடலில் ஏற்படுத்தும் மாற்றங்கள் ஆணைப் பொறுத்தவரையில் மர்மமானவை. பாலூட்டி என்ற நிலையில், இயற்கையாகவே குழந்தைகள் மீது அன்பு மிக்க பெண், காலப்போக்கில் தன்னைச் சுற்றி ஒரு குழுவை உருவாக்கும் திறனுடையவள். வன்முறை என்பது பெண்ணுக்குத் தேவையற்றது. ஆண் முழுமையாக வளர்ந்தவுடன், தான் சார்ந்த குழுவை விட்டு விலகித் தனக்கான இடத்தை நிறுவ முயலுகிறான். இந்நிலையில், எதிர்க் குழுவினரை அழித்தொழித்து நிலப் பரப்பைக் கையகப்படுத்தும்போது பெண்ணையும் தன்னுடைய அதிகாரத் திற்குள் கொண்டு வர முயலுகிறான். ஆணின் அடிப்படைக் குணம் `மறம், வீரம்' என்ற சொல்லாடலில் பெண்ணின் சமூக இடம் வெறும் பதிலியாக மாறுகின்றது. சமூக இருப்பில் பெண்ணுடலை இரண்டாம் தரப்படுத்திடச் செய்திடும் முயற்சிகள் சங்க இலக்கியத்தில் பதிவாகியுள்ளன. உடல்ரீதியில் பெண்ணுடலைக் கட்டுப்படுத்திட முயலும் சமூகச் சூழலில், பெண்கள் மடமகளாக, அறிவு மெல்லியராகச் சித்திரிக்கப்பட்டுள்ளனர். மடநடை, மடமா, அரிமா, மடமகள் போன்ற சொற்கள் பெண்ணைக் குறித்திட பயன்படுத்தப்பட்டுள்ளன.

பெண் பூப்படைவதிலிருந்து முழுமையானவள் என்ற கருத்து சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது. கன்னிப் பெண், குடும்பத் தலைவி, பரத்தை, விதவை ஆகிய நான்கு நிலைகளில் உடல்ரீதியாகப் பெண்ணை அணுகிடும் போக்கு சங்க இலக்கியம் முதலாக இன்றுவரை தொடர் கின்றது. பெண்ணுக்கு ஒரு கணவன் மட்டும் தான் என்ற வரைமுறை வலுவாக நடைமுறைப்படுத்தப்பட்டது. பெண் குடும்பத்திற்கு வெளியே தான் விரும்பியவனுடன் பாலுறவு கொள்வது பற்றிய சிந்தனைப் போக்கு நடைமுறையில் இல்லை. பெண் தனித்து இயங்கும் ஆற்றலை மட்டுப் படுத்தி, அவளை முழுக்க ஆணைச் சார்ந்து இயங்கும் சூழலை ஏற்படுத் தியது, ஆணின் உடைமையானது பரம்பரை வழியாக மகனுக்குச் சேர வேண்டுமென்ற ஆண்மையைப் போக்கின் விளைவாகும். பெண்ணின் உடல், மனத் தூய்மையைக் குறிக்குமாறு `கற்பு' என்ற சொல் சங்க இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. போர், பொருள் தேடல் காரணமாகப் பிரிந்து சென்ற தலைவனுக்காக வீட்டில் காத்திருத்தல் சிறந்த பெண்ணின் அடையாளமாகக் கருதப்பட்டது. பெண் தன்னுடைய பாலியல் விருப்பத்தை அடக்கிக் கொண்டு, கணவனின் நலத்தைப் பேணி மென்மையான பண்புகளுடன் வாழ்வது கற்புடைய மகளிரின் இலக்கணமாகப் போதிக்கப்பட்டது.

`கடவுட் கற்பு', `வடமீன் போல்... கற்பினள்', `அருந்ததி அனைய கற்பு', `அணங்குறு கற்பு' போன்ற தொடர்கள் கற்பு பற்றிய புனிதப் புனைவுகளைக் கட்டமைக்க முயலுகின்றன. இதனால்தான் பெண் தனித்துப் பொருள் ஈட்டிய நிலையிலும், வறுமையில் வாடிய போதிலும், பரத்தையிடம் கணவன் சென்று விட்ட சூழலிலும், அவள் கணவனைப் பிரிந்து, தான் விரும்பிய ஆணுடன் பாலுறவு கொண்டதாகக் குறிப்புகள் எதுவுமில்லை. எத்தகைய பிரச்சினைகளில் சிக்கி வாழும் சூழலிலும், பெண் குடும்ப நிறுவனத்தில் அடங்கியொடுங்கி இருப்பது வலியுறுத்தப்பட்டது.

கணவன் இறந்தவுடன் வளையல் நீக்குதல், முடி களைதல், பாயின்றி படுத்தல், இழை களைதல் போன்றவற்றை விதவை மேற்கொள்ள வேண்டுமெனச் சங்க இலக்கியத்தில் குறிப்புகள் உள்ளன. ஆனால், மனைவியை இழந்த கணவன் பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகள் பற்றியோ, ஆணின் கற்பு பற்றியோ மதிப்பீட்டு நிலையில் கூட எதுவும் பதிவாகிடவில்லை. தான் விரும்பிய ஆணுடன் சேர்ந்து வாழ்வதற்காகப் பெற்றோரை எதிர்த்து வீட்டை விட்டுக் கிளம்பும் பெண், குடும்பத்தில் அடங்கியொடுங்கி `கற்பு' பற்றிய புனைவுடன் வாழ்தல் வலியுறுத் தப்படுகிறது.

ஆண் மேலாதிக்கச் சமூகத்தின் இன்னொரு முக்கியமான விளைவு `பரத்தமையை உருவாக்குதல்'. சங்க கால ஆண் தன்னுடைய மனைவியுடன் வாழும் போதும் பரத்தையை நாடிச் செல்கிறான். ஆண் தனது பாலியல் தேவையைப் பரத்தையிடமிருந்து பெற்றது குற்றமாகக் கருதப்படாத சூழல் அன்று நிலவியது. அதாவது பரத்தையை முன்னிறுத்தி ஆணின் ஒழுக்கம் மதிப்பிடப்படவில்லை. குடும்பத்தில் கணவனாக இருக்கும் ஆண், தன்னுடைய விருப்பம் போல காமக்கிழத்தி, காதற்பரத்தை போன்ற பெண்களிடம் பாலுறவு கொள்வதை ஒழுக்கக் கேடாக அன்றைய சமூகம் கருதவில்லை. மனைவி வீட்டிலிருக்கும் போது, பரத்தையை வீட்டிற்கு அழைத்து வந்து உடலுறவு கொள்ளும் ஆண் பற்றிய பதிவு தற்செயலானது அல்ல. கற்பொழுக்க நெறியில் வாழும் மனைவி, தன்னுடைய கணவனின் பரத்தமைத் தொடர்புக்காக ஊடல் கொள்ளலாம். அவ்வளவுதான் அவளால் முடிந்தது.

சங்க காலத்தில் பெண்கள் எதிர்கொண்ட சமூகப் பிரச்சினைகள் அளவற்றவை. ஆனால் சங்க இலக்கியப் பிரதிகள் மூலம் பெண் பற்றிய புனைவுகளைக் கட்டமைக்க வேண்டிய தேவை ஆண்களுக்கு ஏன் ஏற்பட்டது என்பது முக்கியமானது. சமூகத்தில் ஆண் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்துவதற்கான தளத்தை உருவாக்கிட கற்பு பற்றிய சித்திரிப்பைச் சங்கப் பாடல்கள் முன்னிறுத்தியுள்ளன.

(3)

குடும்பம் என்ற சமூக நிறுவனத்தின் உருவாக்கத்தில் பெண்ணின் இடம் முதன்மையானது. குழந்தை பிறப்பினுக்காகப் பாலுறவு கொள்ளுதல், குழந்தைப் பேறு, குழந்தை வளர்ப்பு எனப் பெண்ணின் அன்றாடப் பணிகளைக் குடும்ப அமைப்புச் சுருக்கினாலும், வாரிசுகளை உருவாக்குவது என்பது முக்கியமானது. சமுதாயத்தில் குடும்பம் சிறிய அலகெனினும், கருத்தியல் ரீதியில் ஆதிக்கம் செலுத்தி, வரலாற்றுத் தொடர்ச்சியைச் சாத்தியப்படுத்துகின்றது. சங்க இலக்கியத்தில் குடும்பம் என்ற சொல் இல்லை. குடி என்ற சொல் குழு, குடும்பம், ஊர், குடியினர், குடியிருப்பு என்ற பொருள்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மனை, இல் ஆகிய சொற்களும் ஒரு நிலையில் குடும்பம் பற்றிய கருத்தாக்கத்துடன் நெருங்கிய தொடர்புடையன.

சங்க இலக்கியம் சித்திரிக்கும் குடும்பம் என்ற அமைப்பு பாலுணர்வின் நெறிமையை மையமாகக் கொண்டுள்ளது. கணவன், மனைவி, குழந்தைகள் கொண்ட தனிக் குடும்பமே நடைமுறையிலிருந்தது. குடிப் பெருமையை முன்னிறுத்தும் இனக்குழுச் சமூக அமைப்பில் குடும்பம் இரண்டாம் நிலை பெற்றுள்ளது. குடியின் தலைவன் குறுநில மன்னன் போல அதிகாரம் மிக்கவன் அல்ல. இனக் குழுத் தலைவன், வீட்டிற்கு வந்த விருந்தினரை உபசரிக்க வாளை ஈடு வைக்குமளவு பொருளியல் வளமற்றவன்; அவனுக்குக் கள் விற்பவன், கடனுக்குக் கள் தர மறுக்குமளவு குடியினரின் நிலைமை எளிமையாக இருந்தது. இத்தகைய குடிச் சூழலில் பெண்ணின் தனித்துவத்தை மதிப்பிட வேண்டும். சங்க காலம் என மதிப்பிடப் பெறும், 500 ஆண்டுகளில் தகவல் தொடர்பு வசதியற்ற நிலையில், வேறுபட்ட இனக்குழுக்களின் பண்பாடு பன்முகத்தன்மையுடையதாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் சங்க இலக்கியப் பிரதிகள் முன்னிறுத்தும் குடும்பப் பெண் ஒற்றைத் தன்மையுடையதாக இருப்பது ஏற்புடையதாக இல்லை.

சங்க இலக்கியப் பெண் தான் விரும்பிய ஆணைத் தேர்ந்தெடுத்து அவனுடன் பாலுறவு கொண்டு, பின்னர் அவனுடன் உடன் போக்குச் செல்லுமளவு சுதந்திரம் மிக்கவளாக விளங்குகிறாள். பெண்ணுக்குப் பரிசம் அளித்து அவளை மணக்க முயலுதல், பெண்ணின் வீட்டில் சில மாதங்கள் தங்கி அக் குடும்பத்தாரின் நன் மதிப்பைப் பெற்று மணம் செய்ய முயலும் ஆண் போன்ற மணமுறைகள், சமூகத்தில் பெண் மதிப்பை உறுதி செய்கின்றன. இத்தகைய முறைகள் பெண் வழிச் சமுதாயத்தின் எச்சங்கள். பெண்ணின் வீட்டில் திருமணம் நடைபெற்ற போதிலும், மணமான பெண் பிறந்த வீட்டில் இல்லை என்பதும் குழந்தைகள் தாயின் குலத்தைச் சார்ந்தவர்களாகக் கருதப்படுவது இல்லை என்பதும் பெண் பற்றிய மதிப்பீட்டில் முக்கியமானவை. ஒப்பீட்டளவில் தாய்_மகள் உறவு, தாய்-மகன் உறவு அழுத்தமாகச் சித்திரிக் கப்பட்டுள்ளன. இதனால் குடும்ப உறவில் பெண்ணின் இடம் வலுவானது என்று பொருள் கொள்ளத் தேவையில்லை. சங்க இலக்கியத்தில் உறவினர் தொடர்பை விட, தான் சார்ந்து வாழும் குடியினருடனான வாழ்க்கையைப் பெரும் உறவாகக் கருதும் நிலை நிலவியது.

காதல் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் சமனிலையை உருவாக்குகிறது என்றும் பெண்ணின் தனித்துவத்தை உறுதிப்படுத்துகிறது என்றும் பொதுவாக நம்பிக்கை உள்ளது. சங்க இலக்கியப் பிரதிகளை நுணுகி ஆராய்ந்திடும்போது, காதல் வயப்பட்ட நிலையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்றத் தாழ்வுகள் இருப்பதனை அறிய முடிகின்றது. ஆணின் உடைமைக்கு வாரிசு உருவாக்கிடவும் இனக்குழுச் சமூக அமைப்பைக் கட்டிக் காப்பாற்றவும் பெண்ணின் தூய உடல் தேவைப்படும் நிலையில் `காதல்' முன்னிறுத்தப்பட்டுள்ளது. ஆணும் பெண்ணும் உழைத்து வாழும் வாழ்க்கையில் காதல் இருக்கும்; காதல் பற்றிப் புனிதமாக இட்டுக் கட்டப்படும் நிலை இருக்காது. காதல் அதியற்புதமானது; தெய்விகமானது; புனிதமானது; ஒரே ஒருமுறை தான் ஒருவர் வாழ்வில் மலரும்; சொர்க்கத்தில் கடவுளால் நிச்சயிக்கப்படுகிறது; போன பிறவியின் தொடர்ச்சி; எல்லாப் பிறவிகளிலும் தொடர்ந்து வரும் மேன்மையானது... இவ்வாறு காதல் பற்றி இட்டுக் கட்டப்பட்டவை முழுக்கப் பெண்ணைக் குறி வைத்துத்தான் செயற்படுகின்றன. தூய்மையான காதலை முன்னிறுத்தி, காதலுக்காகக் காத்திருக்கும் பெண்ணுடல்களைக் கட்டமைத்திடும் சமூகச் சூழலில், காதல் என்பது பெண்ணுக்குச் சிறை. சுதந்திரமாக வெளியில் புழங்கிக் கொண்டிருந்த பெண்ணை, அவளுடைய இயல்பான பாலியல் விருப்பத்தை அடக்கி விட்டு, அதற்கு மாற்றாகக் காதலை முன்னிறுத்துவது, அவளைப் பொறிக்குள் சிக்க வைக்கும் முயற்சியாகும். காதல், கற்பொழுக்கம் என்பது பெண்ணுக்கெனவும், காதல் களவொழுக்கம், பரத்தமை ஆகியன ஆணுக்கானதாகவும் சங்க காலத்திலேயே நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், ஆண்_பெண் பாலியல் உறவு கேள்விக்குள்ளாகிறது. எதிர் இனக் குழுவினரைப் போரில் வென்று, அக்குழுப் பெண்களைக் கவர்ந்து வந்து, கொண்டி மகளிராக்கிப் பரத்தமையில் ஈடுபட்டது ஆணின் வீரமாகப் போற்றப்படும் நிலையில், பெண்ணின் இருப்புக் கேள்விக்குள்ளாகின்றது.

சமூக அமைப்பில் பெண்ணின் நிலையானது தொடர்ந்து ஆண் மையம் நோக்கி ஈர்க்கப்படுவதாகச் சங்கக் கவிதைகள் சித்திரிக்கின்றன. பெண்ணுடல் புணர்ச்சிக்குரிய காதலி, பரத்தை, மனைவி, காமக்கிழத்தி, புணர்ச்சிக்காக ஏற்பாடு செய்யும் தோழி என்று எப்பொழுதும் தன்னைப் புணர வரும் ஆணுடலுக்காகவே காத்துக் கிடக்கின்றது. காதல் என்ற மனவுணர்வு மூலம் தனக்கான ஆண் உடலைக் கண்டவுடன், தன்னை முழுமையாக அவனிடம் ஒப்படைத்துத் தன்னிலை இழக்கிறது பெண்ணுடல். அடக்கியொடுக்கப்பட்ட பெண்ணுடலிலிருந்து, தான் விரும்பிய பிரதியான உடலைப் பிரதியெடுத்து, அதைப் பிரதிக்குள் (Text) புதைப்பதன் மூலம், மீண்டும் மீண்டும் ஆணுக்கு அடிமையான பெண்ணுடலை உற்பத்தி செய்யக் `காதல்' போதை போலப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சங்க இலக்கியப் படைப்புகளில் பதிவாகியுள்ள காதல் பற்றிய சித்திரிப்புகள், லட்சிய நோக்குடன் மேட்டுக் குடியினர் சமூகத்தில் ஏற்படுத்த விரும்பிய விருப்பங்களை முன்னிலைப்படுத்துகின்றனவாக உள்ளன. ஏவலர்கள், அடிமைகள், கொண்டி மகளிர் போன்ற அடித்தட்டு மக்கள் விரும்பிய களியாட்டங்களுக்கும், காதல் கொண்டாட்டங்களுக்கும் சங்கப் பிரதிகளில் அடையாளம் எதுவுமில்லை.

(4)

சங்க காலச் சமுதாயத்தினர் பாலியலை மிக இயற்கையானதாகக் கருதினர். அதனைக் குற்றமானது, சிற்றின்பம், தீமையானது என்று இழிவாகக் கருதி ஒதுக்கும் போக்கு அறவே இல்லை. அதுபோல பாலுறவை மையப்படுத்தி காமத்தை உடலிலிருந்து பிரித்துக் காமக்கலையாக (eroticism) மாற்றும் முயற்சியும் இல்லை. ஆணும் பெண்ணுக்குமிடையிலான உடலுறவை இயல்பானதாகக் கருதும்போக்கு சங்க இலக்கியப் பிரதிகளில் காணப்படுகிறது. போர், நாடு, உடைமை என விரிந்திடும் ஆணின் வாழ்க்கையில் பாலியல் வேட்கை மட்டுப்படும் வேளையில், வீட்டில் காத்திருக்கும் பெண்ணின் பாலியல் விருப்பம் அளவற்றுப் பொங்கி வழிகின்றது. இந்நிலையில், பாலியல் விழைவை எப்படி எதிர்கொள்வது என்பது சில பாடல்களில் சூசகமாக வெளிப்பட்டுள்ளது.

சங்க இலக்கிய மரபானது பாலியல் விருப்பம், புணர்ச்சி, கலவியின்பம் என்று மூன்று நிலைகளில் ஆணும் பெண்ணும் சேர்ந்து உடல், மனரீதியில் அனுபவிக்கும் அனுபவங்கள், மற்றும் அதனால் ஏற்படும் மாற்றங்களுக்கு முக்கியத்துவம் தந்துள்ளது. காதலன் தன்னுடைய காதலியிடமிருந்து பெறும் சுகத்தைப் பெரிதும் கொண்டாடுகிறான். அவளை ஒரு தடவை புணர்ந்து விட்டால், அதற்குப் பின்னர் அரை நாள் வாழ்க்கை கூடத் தேவை இல்லை என்கிறான் ஒருவன்; கடலால் சூழப்பட்ட உலகமும் நாடும் கூட தன் காதலியின் பூப் போன்ற மேனியை அணைத்துப் பெறும் இன்பத்துக்கு ஈடாக முடியாது என்கிறான் இன்னொருவன். பெண்ணும் தன்னுடைய பாலியல் விருப்பத்தை வெளிப்படுத்தத் தயங்கிடவில்லை. தலைவன் வாழும் மலையிலிருந்து வரும் நீரில் மிதந்து வருகின்ற காந்தள் மலரை முயங்குவது தனக்கு ஆறுதலாக உள்ளது என்கிறாள் ஒருவள்; `காம நோயுற்று அதனால் துயர் பொறுக்கல்லேன்' தோழி' என்று ஒரு பெண் காமவயப்பட்டுக் கதறுகின்றாள். காதலனுடைய மார்பைத் தழுவிப் புணர்ந்து பெற்ற இன்ப நினைவைத் தன் தோழியிடம்.

... வேட்டோர்க்கு
அமிழ்தத்தனை கமழ்தார் மார்பின்
வண்டிடைப் படா அ முயக்கமும்
தண்டாக் காதலும் தலைநாள் போன்மே''
என்று பகிர்ந்து கொள்கிறாள்.

காதல் வயப்பட்டு உள்ளத்தால் ஒருங்கிணைந்து ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்வதை இயல்பானதாகச் சங்க இலக்கியம் சித்திரிக்கின்றது. புணர்வதில் ஆர்வம் மிக்க காதலர் இருவரும், மிகவும் விருப்பத்துடன் அச்செயலில் ஈடுபடுகின்றனர். ஏதோ ஒரு காரணத்தினால் பிரிவேற்பட்ட போது, பால் வேட்கையுடன் புலம்பித் தவிக்கின்றனர். திருமணத்திற்கு முந்தைய உறவுக் காலத்திலும் காதலர் பாலுறவு கொள்வது சங்க காலத்தில் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. காமம் என்ற சொல் காதலுடன் நெருங்கிய தொடர்புடையதாக விளங்கியது. பெண்ணுக்குத் தன் இளமை எழில் ஆடவரின் வேட்கைக்கு உள்ளாகாமல் வீணே கழிவது வருத்தத்தைத் தருகிறது. பெண்ணின் புழங்கு வெளியையும் மனவோட்டத்தையும் தடைப்படுத்திட முயலும் சமூகச் சூழலில், அவளுடைய காமம் பற்றிய வெளிப்பாட்டிற்கு ஆதரவான நிலை நிலவியது. இனக்குழுவினருக்கிடையிலான சண்டைகளில் போராடி மடிய ஆணுடல்களை உற்பத்தி செய்திட பெண்ணின் காமம் போற்றப்பட்டுள்ளது. `ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே' என்ற வரிகள் பெண்ணின் அடையாளத்தை உணர்த்துகின்றன. (சங்க இலக்கியத்தில் பெண் குழந்தை பற்றிய பதிவு எதுவுமில்லை என்பது இங்கு ஒப்பு நோக்கத் தக்கது) ஒத்த கருத்துடைய ஆணும் பெண்ணும் `மெய்யுறு புணர்ச்சி' மூலம் துய்த்திடும் இன்பத்தின் வாயிலாகக் காமம் விளங்கியது. பெண் தன்னுடைய காம உணர்வுகளை வெளிப்படுத்தும் அருமையான பாடல்கள் சங்க இலக்கியத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.

முட்டுவென் கொல்? தாக்குவென் கொல்?
ஓரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு
ஆ அ அல் எனக் கூவு வேன் கொல்
அலமரல் அசைவளி அலைப்ப, என்
உயவு நோய் அறியாது, துஞ்சும் உயிர்க்கே
(குறுந்தொகை : 28)

என் காதல் நோயின் கொடுமை அறியாமல் தென்றல் காற்று அலைக்கழிக்கிறது; அதனை அறியாமல் ஊரும் உறங்குகிறது. என் நிலையை எப்படிக் கூறுவேன்? முட்டுவேனோ? தாக்குவேனோ? கூவுவேனோ? என்ற ஔவையாரின் பாடல் வரிகள் பெண்ணின் காமம் மிக்க மனத்தைத் துல்லியமாகச் சித்திரித்துள்ளன. பாலியல் துய்ப்பில் பெண்ணும் கொண்டாட்டம் மிக்கவளாக விளங்குகிறாள். பொதுவாக ஆணின் எதிர் பால் வேட்கை என்பது உடலுறவு என்ற மைய நிகழ்வினை நோக்கியதாக உள்ளது. பெண்ணின் காம வேட்கை வெவ்வேறு தளங்களில் நுட்பமாக விரியக் கூடியதாக இருக்கிறது. காதலனின் வருகையைப் பார்த்தால் போதும், காதலனின் மார்பில் சாய்ந்தால் போதும் என்று பெண்ணின் காமம் பன்முகத் தன்மையுடையதாக விரிகின்றது. பெண் தன்னுடைய காமத்தைப் பொருட்படுத்தாமல், தன்னிடம் ஆண் கொண்ட அன்பை மட்டும் எண்ணி, அவனுடைய தொடர்பை முன்னிறுத்தி மகிழ்கின்றாள்.

காமம் ஒழிவ தாயினும் யாமத்துக்
கருவி மாமழை வீழ்ந்தென அருவி
விடரகத்து இயம்பு நாட எம்
தொடர்பு தேயுமோ நின்வயி னானே
(குறுந்தொகை : 42)

காமத்தைத் தவிர்த்துப் பெண்ணின் மனம் கொண்டாடும் நட்பு, ஆணுக்கு முற்றிலும் அந்நியமானது. பெண்ணின் மனத்தைப் புறக்கணித்துப் பெண்ணுடலைத் தனது ஆளுமைக்குக் கீழ் கொண்டு வந்து அதிகாரம் செலுத்த முயலும் ஆணுடன் ஒப்பிடும்போது, பெண்ணின் காமம் மனம் சார்ந்து விரிகின்றது.

ஆண் சமூக வாழ்க்கையில் புறவுலகினால் ஏதோ ஒரு காரணத்தினால் ஈர்க்கப்பட்டு வெளியே அலைந்து திரிகின்றான். பெண் வீட்டில் ஆணுக்காகக் காத்திருக்கின்றாள். பிரிவினை எண்ணி வருந்தும் பெண்ணின் மனம் துடிக்கின்றது; புலம்புகின்றது.

உள்ளார் கொல்லோ? தோழி உள்ளியும்
வாய்ப்புணர்வு இன்மையில் வாரார் கொல்லோ
மரற்புகா அருந்திய மா எருத்து இரலை
உரற்கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய
யா அவரி நிழல் துஞ்சும்
மா இருஞ்சோலை மலை சிறந் தோரே!
(குறுந்தொகை : 252)

அடர்ந்த காட்டினைக் கடந்து சென்ற காதலன்/கணவன், தன்னை நினைக்காமல், இருந்து விட்டாரோ அல்லது செயல் முடித்துத் திரும்பும் வாய்ப்பற்று அங்கேயே தங்கி விட்டாரோ என்று பிரிவினால் பெண் வருந்துவதில், அவளுடைய பாலியல் வேட்கை பொதிந்துள்ளது. கார் காலம் தொடங்குவதற்கு முன் என்னுடைய தேர் முந்தும் எனச் சொல்லி வினை முடிக்கப் போனவன், கார் காலம் தொடங்கிய பிறகும் வரவில்லையே என வேதனைப்படும் பெண்ணின் காம வேட்கை அள வற்றுப் பொங்குகின்றது. அவளுக்கான பாலியல் தேவை நிறை வேற்றப்படாமல் காத்திருக்கின்றாள்.

பிரிந்து சென்ற கணவன் பரத்தையின் வீட்டில் தங்கிவிட்ட பிறகு, பெண்ணின் மனம் படும் துயரம் அளவற்றது. `நீ எனக்கு யார்? நான் ஊடல் கொள்வதற்கு நீ என்ன உறவு? நீ பரத்தையிடம் போ. உன்னைத் தடுக்க யார் உள்ளார்?' என்று மனம் வெதும்புகிறாள் பெண். தன்னை விட்டுப் பிரிந்து போன கணவனை எதுவும் செய்யவியலாமல் துயரமடையும் பெண்ணை அள்ளூர் நன்முல்லையார் நுட்பமாகச் சித்திரித்துள்ளார்.

(5)

சங்க காலத்தில் பெண்கள் கல்வியறிவு பெற்றிருந்தனர்; பலர் பாடல்கள் இயற்றினர். ஆண்களால் தொகுக்கப்பெற்றுள்ள தொகை நூல்களில் நாற்பத்தொன்று பெண் கவிஞர்களின் கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. சங்கப் பெண் கவிஞர்களின் கவிதைகளில் பெண் நிலை, மனவுணர்வு, உடல் பற்றிய வருணனை போன்றன தனித்து விளங்குகின்றன. பெண்ணின் பாலியல் மனநிலையை ஆழமாக விவரித்துள்ளன.

மகப்பேற்றுக்குப் பின்னரே பெண்ணுடல் முழுமையடையும் என்று கருதுகின்றார் வெள்ளி வீதியார்.

கன்றும் உண்ணாது, கலத்தினும் படாது
நல் ஆன் தீம்பால் நிலத்து உக்கா அங்கு
எனக்கும் ஆகாது, என்னைக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மானமக் கவினே
நல்ல பசுவின் இனிய பால் நிலத்தில்

சிந்தியது போல, கணவனுக்காகக் காத்திருக்கும் பெண்ணின் அல்குல் தடத்து மாமை அழகு அவளுடைய கணவனுக்கும் மட்டுமின்றி, அவளுக்கும் பயனில்லாமல் பசலை உண்ணும் நிலையைப் பெற்று விட்டதே என்று வருந்துகிறாள். பெண் தன்னுடைய உடலை அடையாளங் கண்டு, ஆணுடனான உடலுறவின் மூலம் துய்க்கும் இன்பம் கிடைக்காமல் போகிறதே என்று எவ்விதமான மனத்தடைகளற்றுக் கூறுகின்றாள்.

இரவுப் பொழுதில் நிச்சயம் வருவதாகக் கூறிய காதலன் வராத நிலையில் ஏக்கத்துடன் தூங்குகிறாள் ஒரு பெண். காதலனுடன் பாலுறவு கொண்டதாகக் கனவு கண்டு மயங்கிப் பின்னர் விழித்தெழுந்து, குழப்பத்துடன் அவள் அருகில் படுத்திருக்கிறானோ எனத் தடவிய பெண் பற்றிய கச்சிப்பேட்டு நன்னாகையாரின் பாடல், காம வயப்பட்ட பெண்ணின் ஆழ்மனத்தை பதிவாக்கியுள்ளது.

`பல நாட்கள் வந்து பழகி, உறவு கொண்டு பெண்ணின் மனத்தை நெகிழ வைத்தவன் எங்கே இருக்கிறான்' என்ற வருமுலையாரித்தியின் பாடல் பெண்ணின் பிரிவுத் துயரை வெளிப்படுத்துகிறது.

பெண்ணுடல் இயற்கையாகவே முலை, அல்குல், தாய் வயிறு (கருப்பை) எனத் தனித்த அடையாளங் கொண்டது. பெண்ணுறுப்புகள் பற்றிய பெண் கவிஞர்களின் பார்வையில் பாலியல் நோக்கமுடையதெனினும், தனித்து விளங்குகின்றன.

பொருள் தேடிப் பிரிந்து போன கணவனுக்காக வீட்டில் காத்திருக்கும் பெண் எதிர்கொள்ளும் பாலியல் மனநிலையை ஔவையார் நுணுக்கமாக விவரித்துள்ளார்.

வெந்திறல் கடுவளி பொங்கர்ப் போந்தென
நெற்றுவிளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும்
மலையுடை அருஞ்சுரம் என்ப நம்
முலையிடை முனிநர் சென்ற ஆறே

பெண், `தன்னுடைய முலைகளிடையே துயிலுவதை விடுத்துக் கொடிய பாலை வழி சென்றாரே கணவன்' என்று வருந்துகிறாள். பிரிவு பற்றி யோசிக்கும் போது பாலியல் விழைவு இயற்கையாக இடம்பெறுவது சங்கக் கவிதைகளின் தனித்துவம்.

சங்கக் கவிதைகளிலிருந்து பாலியல் ரீதியில் கற்றுக்கொள்ள நிரம்ப விஷயங்கள் உள்ளன. ஏனெனில் சங்க காலத்திற்குப் பின்னர் மதங்கள் தமிழரின் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்தியவுடன் பாலியல் எதிர்மறை அம்சமாகிவிட்டது. உடல் பற்றிய கொண்டாட்டங்கள் புறந்தள்ளப்பட்டன. உடலை வருத்தித் தவமிருப்பது, உடலைத் துறப்பதன் மூலம் வீடுபேறு அடைதல் போன்ற கருத்துப் போக்குகள் பாலுறவைக் கேவலமாக ஆக்கின; பாலியல் என்பது குற்றமனம் தொடர்புடையதாக மாறியது. சிற்றின்பம் என்று இழிவுபடுத்தப்பட்ட பாலியல் புறக்கணிப்பு, மனிதர்களை அதிகாரத்துக்குட்பட்ட வெறும் உடல்களாக மாற்றி விட்டது. ஒத்த கருத்துடைய ஆணும் பெண்ணும் சேர்ந்து துய்க்கும் பாலுறவு என்பது பெரும் பேறு; அற்புதமானது.

இன்று அடிப்படை மதவாத அமைப்புகள் தமிழர் வாழ்க்கையில் ஆழமாக ஊடுருவ முயன்று வருகின்றன. அவை ஹிட்லரின் பாசிச அரசு கருதியது போல பெண்களை வெறும் பிள்ளை பெற்றுத் தரும் இயந்திரமாக மாற்ற முயலும். பெண்ணின் ஆடைகள் தொடங்கிப் பெண் நடத்தை வரை எல்லாவற்றையும் கண்டிக்க முயலும் பண்பாட்டுப் போலீஸ்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டிருப்பது அபாயகரமானது.

இன்னொருபுறம் ஆபாசத்தையும் பாலியல் வக்கிரத்தையும் தாராளமாக வழங்கிக் கொண்டிருக்கும் ஊடகங்களினால் இளைய தலைமுறையினர் மனக்குழப்பத்திற்குள்ளாகியுள்ளனர். பாலியல் பற்றிய தவறான புரிதலைப் புறந்தள்ளிவிட்டு, அதை இயற்கையானதாகக் கருதி வரவேற்கும் மனநிலை இன்று தேவைப்படுகிறது. இத்தகு சூழலில் சங்கக் கவிதைகள் சித்திரிக்கும் இயல்பான பாலியல் பற்றிய பார்வை, வாசிப்பில் பன்முகத்தன்மையை ஏற்படுத்துகின்றது. இரண்டாயிரமாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த நம் முன்னோர்களிடமிருந்து பாலியல் ரீதியில் கற்றுக்கொள்ள விஷயமிருப்பது வரலாற்றின் விநோதம்தான்.

ந‌ன்றி: தீராந‌தி (ஜூலை, 2008)

1 comment:

kalai said...

"ஏவலர்கள், அடிமைகள், கொண்டி மகளிர் போன்ற அடித்தட்டு மக்கள் விரும்பிய களியாட்டங்களுக்கும், காதல் கொண்டாட்டங்களுக்கும் சங்கப் பிரதிகளில் அடையாளம் எதுவுமில்லை" எனத் தங்கள் கட்டுரையில் படித்தேன். கலித்தொகையில் ஏவலர்களின் காதல் காட்சிகள் இருக்கின்றன. சிறப்பித்துப் பேசுமளவுக்கு அக்காட்சிகள் இல்லையெனினும், அடித்தட்டு மக்களின் காதலுக்குச் சங்க இலக்கியங்களில் அடையாளம் எதுவுமில்லை என்கிற கருத்துக்கு முரண்பட இது உதவும்.
-
முனைவர் கலை.செழியன்