Saturday, November 15, 2008

ஏ.ஆர்.வி.லோஷன் (லோஷன்) கைது

இவரும், வலைப்பதிவு எழுதும் லோஷனும் (http://loshan-loshan.blogspot.com) ஒருவரே என்று நினைக்கின்றேன். இவருடன் எவ்விதமான தொடர்புமில்லாததால் நண்பரொருவரின் -Facebook- மூலமாகவே இச்செய்தியை அறிந்தேன். லோஷனின் நண்பர்கள், தெரிந்தவர்கள் மேலும் இச்செய்தி குறித்து எழுதக்கூடும். ஏற்கனவே ஊடகவியலாளர்களான ஜ‌சிதரன், வளர்மதி, திஸ்ஸநாயகம் போன்றவர்கள் இன்னமும் சிறைக்குள் இருப்பதை நாமனைவரும் அறிவோம்.

லோஷன் விரைவில் விடுதலையாவார் என்பதை நம்புவதை விட வேறு எதைத்தான் இந்தக்கணத்தில் நம்புவது?

(~டிசே)
...............

ஏ.ஆர்.வி.லோஷன் (லோஷன்) கைது

தமிழ் ஊடகவியலாளரும் வெற்றி எப்.எம். வானொலி முகாமையாளருமான ஏ.ஆர்.வி.லோஷன் (லோஷன்) இன்று சனிக்கிழமை அதிகாலை 12.50 மணியளவில் வெள்ளவத்தையிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்திருக்கிறது. பயங்கரவாதிகளோடு தொடர்புவைத்திருத்தல், பயங்கரவாத செயல்களுக்கு துணைபோதல் ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இவரைக் கைதுசெய்யும்போது பொலிசாரால் வழங்கப்பட்ட பதிவுச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக் தெரிவிக்கப்படுகிறது. இவரைக் கைதுசெய்து பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்வதாக தெரிவிக்கப்பட்டபோதிலும் பின்னர் அவர் எங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என்பதை அறிய முடியவில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். லோஷன் கைது செய்யப்படுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக வெற்றி எப்.எம். அறிவிப்பாளர் சந்திரமோகனும் (சந்துரு) அவரது வீட்டில் வைத்து பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிசாரால் கடுமையாக விசாரணை செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.
--

நன்றி: http://thambiluvilweb.blogspot.com/2008/11/blog-post_9962.html

Facebook: http://www.facebook.com/group.php?gid=25329430013

Tuesday, November 04, 2008

காஷ்மீர் ப‌ற்றிய‌ இர‌ண்டு க‌ட்டுரைக‌ள்

(1)மானுட‌த்தை நேசித்த‌வ‌ர்க‌ள் ஏன் தேச‌ப‌க்தியை வெறுத்தார்க‌ள்
அ.மார்க்ஸ்

(2)
அஸாதி, அஸாதி, அஸாதி…
-சாரு நிவேதிதா

---------------------
அ.மார்க்ஸின் தீராந‌தி க‌ட்டுரை ந‌ன்றியுட‌ன் (நேர‌டியாக‌ வாசிக்க‌ அனும‌தியில்லாத‌தால்) ‍ மீள் பிர‌சுரிக்க‌ப்ப‌டுகின்ற‌து. சாரு நிவேதிதாவின் க‌ட்டுரையை அவ‌ர‌து த‌ள‌த்திலேயே சென்று வாசிக்க‌லாம்.

~டிசே
---------------------



மானுட‌த்தை நேசித்த‌வ‌ர்க‌ள் ஏன் தேச‌ப‌க்தியை வெறுத்தார்க‌ள்

-அ.மார்க்ஸ்


நகைச்சுவை என்கிற பெயரில் தமிழ்ச் செல்வன் தொடங்கி விக்ரமாதித்தன் வரை சமகாலத் தமிழ் எழுத்தாளர்கள் பலரையும் கேலி செய்து எழுதியுள்ள ஜெயமோகனின் கட்டுரையைச் சென்ற `தீராநதி' (அக்.2008) இதழில் பார்த்தேன். சமூகச் சுரணையுள்ள எழுத்தாளர்கள் மீது அவரது காழ்ப்பு சற்றுக் கூடுதலாகவே வெளிப்பட்டுள்ளது! அதிரடியாக எதாவது சொல்லி, எழுதி தன் மீது கவனத்தை ஈர்ப்பதில் ஜெயமோகன் கில்லாடி. கிட்டத்தட்ட இதே நேரத்தில் தனது `ப்ளாக்'கில் பாசிச எதிர்ப்புணர்வுடன் எழுதும் தமிழ் எழுத்தாளர்களைக் கேவலப்படுத்தி அவர் எழுதிய கட்டுரை ஒன்றும் (`எனது இந்தியா') எனது கவனத்திற்கு வந்தது. கவன ஈர்ப்பிற்காக அரை நிர்வாணத்துடன் அந்தர்பல்டி அடிக்கவும் தயங்காத ஜெயமோகனின் வலையில் நான் விழ விரும்பாதபோதும், சங்க இலக்கியம் முதல் இந்தியத் தத்துவம் வரை எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதக் கூடியவர் என்ற பெயருடன் எல்லாவற்றினூடாகவும் மனித வெறுப்பை, சமூக அநீதிகளைக் கொண்டாடும் அவரது மன நிலையைத் தோலுரிப்பது அவசியம் என்பதால் இதை எழுதுகிறேன்.

மத அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தி, இந்தியச் சமூகத்தில் பன்மைத் தன்மையை ஒழித்துக்கட்ட வெறுப்பு அரசியல் செய்யும் பாசிஸ்டுகளின் பத்திரிகைகளில் வர வேண்டிய கட்டுரை அது. அவரது நூல்களை வாங்கி விற்கும் ஆர்.எஸ்.எஸ். நிறுவனங்கள், தேவஸ்தானங்கள், வாங்கி இலவசமாக விநியோகிக்கும் தொழிலதிபர்கள் இக்கட்டுரையை மறுபிரசுரம் செய்யக் கூடும்.

தன்னார்வ அமைப்புக்கள் வெளியிடும் பத்திரிகைகள் இந்திய எதிர்ப்பைக் கண் மூடித்தனமாக வெளிப்படுத்துவதாகத் தொடங்கும் ஜெ.மோ விரைவில் `சமரசம்' `விடிவெள்ளி' முதலான முஸ்லிம் இதழ்கள், ஜமாத்-ஏ-இஸ்லாமி முதலான முஸ்லிம் அமைப்புகள், அருந்ததிராய் போன்ற சமூகச் சுரணையுள்ள எழுத்தாளர்கள் எல்லோரையும் ஒன்றாக்கி வெளிநாட்டிலிருந்து கூலி பெற்று இயங்குபவர்களாகவும், மத அடிப்படைவாதிகளாகவும், பயங்கரவாதத்தை நியாயப்படுத்துபவர்களாகவும் சித்திரிக்கிறார். தன்னார்வ அமைப்புக்களை இடதுசாரிகளும் விமர்சிக்கிறார்கள், இந்துத்துவவாதிகளும் எதிர்க்கிறார்கள். கூடவே முஸ்லிம் இதழ்களையும் இலக்காக்குவதிலிருந்து ஜெ.மோ யார் என்பது விளங்கி விடுகிறது.

காஷ்மீர் பிரச்சினை தொடர்பான அருந்ததி ராயின் சமீபத்திய கட்டுரை ஒன்றை `அலசுகிறார்' ஜெ.மோ. முஸ்லிம் வெறுப்பு ஒன்றை மட்டுமே மூலதனமாகக் கொண்டு கடை விரிக்கும் ஜெ.மோ, மிக அடிப்படையான அரசியல் உண்மைகளையும் கூட அறியாத ஞானசூன்யம் என்பதை வரிக்கு வரி வெளிப்படுத்தி விடுகிறார்.

1947-ல் தொடங்கி காஷ்மீர மக்களின் குரலை ஒடுக்குவது, ஆண்டு தோறும் பத்தாயிரக் கணக்கில் அப்பாவி மக்கள் மீது படுகொலைகள், சித்திரவதைகள், கற்பழிப்புகள் நிகழ்த்துவது ஆகியவற்றைச் செய்கிற இந்திய அரசைக் கண்டிக்கும் அருந்ததிராயை `வெளிநாட்டு ஏஜன்ட்' என்கிற அளவில் இழி மொழிகளால் அவதூறு செய்கிறது ஜெ.மோவின் கட்டுரை. இரண்டு வாரங்களுக்கு முன் காஷ்மீர் பள்ளத்தாக்கில் நான்கு நாட்கள் தங்கி நிலைமையை நேரில் பார்த்த அனுபவம் எனக்குண்டு. அந்த நான்கு நாட்களில் இரண்டு நாட்கள் ஒரு விடுதியில் வைத்துப் பூட்டப்பட்டிருந்தோம் நாங்கள். வெளியில் சி.ஆர்.பி.எஃப் படைவீரர்கள் ஆயுதங்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் இன்று ஒவ்வொரு ஐந்து காஷ்மீரிக்கும் ஒரு இந்தியப் படைவீரர் என்கிற அளவில் இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. சுமார் எட்டு லட்சம் வீரர்கள், யாரை வேண்டுமானாலும் கைது செய்ய, சுட்டுக் கொல்ல முழு அதிகாரம் அளிக்கப்பட்டு அங்கே நிறுத்தப்பட்டுள்ளனர். பள்ளிகள், மருத்துவமனைகள், பழத் தோட்டங்கள் எல்லாம் இன்று இராணுவக் குடியிருப்புகள். உலக அளவில் பல்வேறு மனித உரிமை அமைப்புக்களும் வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் கடந்த 18 ஆண்டுகளில் ஒரு லட்சம் காஷ்மீர் முஸ்லிம்கள் இந்தியப் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். 80,000 குழந்தைகள் இன்று அனாதைகள் விடுதிகளில். அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படியே 2000-2002 ஆண்டுகளில் மட்டும் `காணாமலடிக்கப்பட்டவர்களின்' எண்ணிக்கை 3784. மனித உரிமை அமைப்புகள் இன்னும் பலமடங்கு அதிகமாக இந்த எண்ணிக்கையைச் சொல்கின்றன. பல்லாயிரக்கணக்கான இளம் விதவைகள், எந்தச் சட்ட உரிமைகளும் இல்லாத `அரை விதவைகள்' அதாவது காணாமலடிக்கப்பட்டவர்களின் மனைவிகள்: இதுதான் இன்றைய காஷ்மீர்.

எங்கு நோக்கினும் இராணுவ `கேம்ப்'கள். சாலையில் ஒரு இராணுவ வீரனைப் பார்த்தால், நீங்கள் செல்லும் வாகனத்தின் `ஹெட் லைட்'டை அணைத்து உள் விளக்கைப் போட வேண்டும். இல்லாவிட்டால் சுடுவார்கள்.

நான் சொல்கிற எதுவும் ஜெ. மோவுடையதைப் போல ஆதாரமற்ற அவதூறுகளல்ல. வெளிவர உள்ள எனது நூலில் அத்தனைக்கும் ஆதாரங்களுள்ளன. எந்தப் பொது மேடையிலும் அவருடன் விவாதிக்கத் தயாராக உள்ளேன்.

``அமர்நாத் குகைக் கோயில் சார்ந்து எழுந்த கிளர்ச்சியை ஒட்டி காஷ்மீரில் உருவான எதிர்க்கிளர்ச்சியை மாபெரும் மக்கள் புரட்சியாக நேரில் சென்று கண்டு ஆனந்த பரவசத்துடன் எழுதியிருக்கிறார் அருந்ததி ராய்'' - ஜெ.மோ.

பள்ளத்தாக்கிலுள்ள மக்களுக்கு அத்தியாவசிய மருந்துகள், குழந்தை உணவுகள் உட்படச் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி, கொய்த ஆப்பிள் பழங்களை அழுகடித்துப் பொருளாதாரத் தடைவிதித்த இந்துத்துவ வன்முறை (தன்னெழுட்சியாக) எழுந்த கிளர்ச்சியாம். தமது நிலத்தைச் சட்ட விரோதமாக, மக்களின் சம்மதமின்றி ஆலய நிர்வாகத்திற்கு மாற்றியதை சுற்றுச் சூழல் நோக்கிலிருந்தும், உரிமைகள் அடிப்படையிலும் எதிர்த்த காஷ்மீர் மக்களின் செயற்பாடுகள் மக்கள் புரட்சி இல்லையாம்.

அமர்நாத் பற்றி தினசரி இதழ்களைக் கூட ஒழுங்காகப் படிக்காத அறிவுச் சோம்பேறிகளுக்கு என்ன தெரியும்? யாரும் எளிதில் செல்ல இயலாத `கிளேசியர்' பகுதியொன்றில் குகைக்குள் இருந்த `பனிலிங்கத்தை'க் கண்டுபிடித்தது ஒரு முஸ்லிம் ஆட்டிடையர் (1860). விக்கிரக ஆராதனையில் நம்பிக்கையற்றவர்களாக இருந்த போதும் அந்தச் செய்தியை இந்துச் சகோதரர்களுடன் பகிர்ந்து கொண்ட முஸ்லிம் ஆட்டிடையர்கள் (`மாலிக்'கள்), கடந்த 150 ஆண்டுகளாக அதைத் தமது பாதுகாப்பில் வைத்திருந்தனர். ஆண்டு தோறும் வரும் யாத்ரிகர்களுக்கு எல்லாவிதமான வசதிகளையும் செய்து தருதல், மிகப் பெரிய உணவுச் சாலைகளை அமைத்து உணவு வடித்துத் தருதல் எல்லாம் முஸ்லிம்கள் தான். ஸ்ரீநகரிலிருந்து அமர்நாத் வரை செல்லுமிடமெல்லாம் முஸ்லிம்களின் விருந்தோம்பல்கள் அன்றும் உண்டு, இன்று உண்டு. காஷ்மீரிகளின் விருந்தோம்பல் உலகப் பிரசித்தமானது.

இந்த ஆண்டு இத்தனை பிரச்சினைகளுக்கு மத்தியிலும் கூட நான்கு லட்சம் யாத்ரிகர்கள் வந்துபோயுள்ளனர். அவர்களில் ஒருவருக்கும் கூட ஒரு சிறு தீங்கும் விளைவிக்கவில்லை. மாறாக வழக்கமான அத்தனை விருந்தோம்பல்களும் நடைபெற்றன. இந்து யாத்ரிகர்களுக்கு முழுப் பாதுகாப்பும் அளிக்கப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் ஜம்முவிலிருந்து கொண்டு இந்துத்துவ அமைப்புக்கள் மேற்கொண்ட `கிளர்ச்சியை' ஒட்டி 30 முஸ்லிம் இளைஞர்கள் கொல்லப்பட்டனர். உண்டா, இல்லையா?

காஷ்மீரில் இந்திய அரசு மேற்கொள்ளும் விரிவாக்க ஆக்ரமிப்பு இந்துக் குடியேற்றங்களைச் செய்யும் வடிவிலானதல்ல. மாறாக எல்லாவிதமான நிறுவனங்களின் மீதுமிருந்த காஷ்மீர மக்களின் அதிகாரம் படிப்படியாகப் பறிக்கப்பட்டது. இதனுடைய ஒரு உச்ச கட்டம்தான் அமர்நாத் ஆலய நிர்வாகம் (Shrine Board) உருவாக்கப்பட்டதும், 100 ஏக்கர் நிலம் கையளிக்கப்பட்டதும். பா.ஜ.க. அரசால் நியமிக்கப்பட்ட அறிஞர் சின்ஹாவின் சதித்திட்டம் அது. ஒவ்வொரு ஆண்டும் உருப்பெறும் அந்தப் பனிலிங்கத்தின் ஆயுள் இரண்டு வாரங்கள் மட்டுமே. பின் அது உருகி `லிட்டர்' மற்றும் `ஜீலம்' நதிகளில் கரைந்தோடிவிடும். படிப்படியாக யாத்ரிகர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியது, யாத்திரைக் காலத்தை இரண்டு வாரங்களிலிருந்து இரண்டு மாதமாக அதிகரித்தது, பனி லிங்கத்தின் இடத்தில் நிரந்தரமாக ஒரு பளிங்கு லிங்கத்தை அமைக்கும் சதித்திட்டம் தீட்டியது ஆகியவற்றின் உச்ச கட்டமாகவே 100 ஏக்கர் நிலம் ஆலய நிர்வாகத்திற்கு அளிக்கப்பட்டதும், ஆலய நிர்வாகக் குழுவில் உள்ளவர்கள் சுங்கம் வசூலிக்கத் தொடங்கியதும் கிளேசியர் பகுதி ஒன்றில் யாத்ரீகர்கள் வசதிக்கென நிரந்தரமாக கட்டிடங்கள் உருவாக்குவதும். கடந்த 18 ஆண்டுகளில் உபரியாக எட்டு லட்சம் இராணுவத்தினரைச் சுமந்து அழிந்துள்ள காஷ்மீரின் இயற்கை வளங்கள் நிரந்தரமாக அழித்து விடும் எனச் சுற்றுச் சூழலாளர்கள் சொல்லியிருப்பது தெரியுமா ஜெ.மோக்களுக்கு.

``அந்த மண்ணின் மைந்தர்களான காஷ்மீரி பண்டிட்டுகளைக் கொன்று குவித்து அடித்துத் துரத்திய பின்னர்தான் அவர்களின் (காஷ்மீரிகளின்) போராட்டம் தொடங்கியது'' -ஜெ.மோ.

ஜெ.மோவின் வெறுப்பு அரசியலின் உச்சகட்ட வெளிப்பாடு இது. அவரது ஞானசூன்யத்திற்கான அப்பட்டமான சாட்சியம் இது. பண்டிட்கள் மண்ணின் மைந்தர்கள் என்பதில் நமக்கு மட்டுமல்ல, காஷ்மீர முஸ்லிம்களுக்கும் கருத்து மாறுபாடு இல்லை. ஆனால் பண்டிட்கள் + முஸ்லிம்கள் என்றொரு எதிர்வை உண்டாக்கி பண்டிட்களை மட்டும் மண்ணின் மைந்தர்கள் எனச் சொல்வதன் பொருளென்ன? முஸ்லிம்களை `அந்நியர்களாக'ச் சித்திரிப்பதுதானே.

பிரிவினைக் கலவரங்களின்போது ஜம்முவில் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை 5 லட்சம். கட்டாயமாகப் பாகிஸ்தானுக்கு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை ஒரு லட்சம். ஆனால் பள்ளத்தாக்கிலிருந்த பண்டிட்கள் யாரும் அப்போது கொல்லப்படவில்லை என்பது நினைவிருக்கட்டும். காந்தியடிகளும் கூட இந்த உண்மையைக் கணக்கிலெடுத்துக் கொண்டு காஷ்மீர முஸ்லிம்களைப் பாராட்டினார். 1990-களில் ஆளுநர் ஜெக்மோகனின் (ஜெய மோகனுக்கும் ஜெக்மோகனுக்கும் மூளையில், சிந்தனை முறையில் எந்தப் பெரிய வித்தியாசமும் கிடையாது) ஊக்குவிப்புடன் வெளியேறியவர்கள்தான் இன்று அகதிகளாக உள்ள பண்டிட்கள். இந்தியாவில் வேறு எந்த அகதிகளுக்கும் வழங்கப்படாத சலுகைகள் இன்று பண்டிட்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. டெல்லியில் மக்கள் நெருக்கமுள்ள பகுதிகளில் கடைகள், அரசு ஊழியர்களுக்கு வேலையின்றியே முழு ஊதியம்...

காஷ்மீரில் தீவிரவாதம் தலையெடுத்திருந்த கடந்த 18 ஆண்டுகளில் எஞ்சிய அப்பாவிப் பண்டிட்கள் மீது பயங்கரவாதம் ஏவப்பட்டதில்லை என்பதையும் நினைவிற்கொள்ளுங்கள். உளவு சொன்னார்கள், காட்டிக் கொடுத்தார்கள் என்கிற ரீதியில் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில தனிநபர்கள் கொல்லப்பட்டிருக்கலாம். குஜராத்தைப் போலவோ, மும்பையைப் போலவோ பெரிய அளவில் இனப் படுகொலையை பண்டிட்கள் மீது காஷ்மீரத் தீவிரவாதிகள் நிகழ்த்தியதில்லை. இன்னொன்றையும் மனசில் நிறுத்துங்கள். காஷ்மீரில் இன்று அகதிகளாகியிருப்பது பண்டிட்கள் மட்டுமல்ல. அதே அளவில் காஷ்மீரி முஸ்லிம்களும் இடம் பெயர்ந்துள்ளனர். இம்முறை நான் பண்டிட்களின் பிரதிநிதியாக குமார் வாஞ்சு என்பவரையும் சந்தித்துப் பேசினேன்.

``காஷ்மீர் மக்கள் தேடுவது சுதந்திரத்தை அல்ல. பாகிஸ்தானோடு இணைவது மட்டுமே என்பது வெளிப்படை'' - ஜெ.மோ.

இதுவும் உண்மையறியாமையின் விளைவான பிதற்றலே. சையத் அலி ஷா கீலானி போன்றவர்கள் பாகிஸ்தானுடன் இணைதல் என்கிற கருத்தை முன் வைத்தபோதிலும் சுதந்திர காஷ்மீர் (`ஆஸாதி') என்கிற கோரிக்கையை முன் வைப்பவர்களே அங்கு அதிகம். அமர்நாத் பிரச்சினைக்குப் பின் இன்று அங்கு நிலைமை முற்றிலும் மாறியுள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின் தீவிரவாதம் பின்னுக்குச் சென்று அமைதி வழியிலான மக்கள் எழுச்சியாக அது மாற்றமடைந்துள்ளது. அதையொட்டியே அக்டோபர் 6-ல் அறிவிக்கப்பட்ட லால் சவுக் பேரணி. இதை நேரில் காண்பதும் எங்களின் நோக்கமாக இருந்தது. ஆனால் இந்திய அரசின் கொடுங்கரங்கள் இந்த எழுச்சியை கொடூரமாக ஒடுக்கியதைத்தான் நாங்கள் நேரில் பார்க்க முடிந்தது. இன்று உருவாகியுள்ள `காஷ்மீர் ஒருங்கிணைப்புக் குழுவில்' பிரிந்திருந்த ஹூரியத் அமைப்புகள் தவிர, பார்கவுன்சில், வணிகப் பேரவை எனப் பல தரப்பு சிவில் சமூகத்தினரும் ஒன்றிணைந்துள்ளனர். பெரியவர் கீலானியையும் எங்கள் குழு சந்தித்து உரையாடியது. அவரது கருத்தும் மாறியுள்ளது. பல தரப்பட்ட மக்களையும் சந்தித்தோம். பொதுமக்கள், வழக்குரைஞர்கள், பாதிக்கப்பட்டவர்கள், சீக்கிய சமூகத்தினர் எல்லோருடனும் உரையாடினோம். இன்று காஷ்மீர மக்களின் ஒரே கோரிக்கை `ஆஸாதி. தான் பாகிஸ்தானுடன் இணைப்பு அல்ல.

பாகிஸ்தானை ஒரு தாலிபானிய அரசு எனவும், இன்று காஷ்மீருக்கு இருக்கும் அடிப்படை உரிமைகளும் இல்லாத சர்வாதிகார அமைப்பு எனவும் ஜெ.மோ குறிப்பிடுகிறார். இதுவும் அப்பட்டமான அறியாமையின் விளைவே. இது குறித்து நான் விரிவாக எழுதியுள்ளேன். ஜியாஉல்ஹக்கின் காலத்தைத் தவிர வேறெப்போதும் பாகிஸ்தான் தன்னை ஒரு முஸ்லிம் அரசாகப் பிரகடனப் படுத்திக் கொண்டதில்லை. ஜின்னா முஸ்லிம்களுக்கான ஒரு நாட்டைத்தான் கோரினாரே ஒழிய இஸ்லாமிய அரசு ஒன்றையல்ல. இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புகள், ஜனநாயகத்திற்குப் பொருந்தாத நிலப் பிரபுத்துவ மதிப்பீடுகளினடிப்படையிலான அரசியல் எல்லாவற்றிற்கும் அப்பால் கடந்த ஐந்து ஆண்டுகளாக அங்கே நடைபெற்ற ஜனநாயகத்திற்கான பேரெழுச்சியையும், போராட்டங்களையும் நாம் கவனிக்க வேண்டும். இராணுவ ஆட்சி வீழ்த்தப்பட்டதையும் மனங்கொள்ள வேண்டும். வழக்குரைஞர் அமைப்புக்கள், நீதிமன்றங்கள் ஆகியன இந்தியாவைக் காட்டிலும் அங்கே போர்க்குணத்துடனும், சுதந்திரமாகவும் செயல்படுகின்றன. அதன் விளைவே நீதிமன்றங்களின் மீதான முஷரெப்பின் தாக்குதல். அதன் பலன்களை இன்று அவர் சந்தித்துக் கொண்டுள்ளார். பாகிஸ்தான் தெருக்களில் பிச்சைக்காரர்களைப் பார்க்க முடியாது.

ஒப்பீட்டளவில் அகக்கட்டுமானங்கள், சாலை வசதிகள் முதலியன அங்கு அதிகம். இந்தியா பீற்றிக்கொள்ளும் `பொருளாதார வளர்ச்சிக்கும்' கூட பாகிஸ்தானின் வளர்ச்சி குறைந்ததல்ல. பாகிஸ்தானில் பல மட்டங்களில் பெண்களுக்கு அரசியல் ஒதுக்கீடு வழங்கப்பட்டாலும், சிறுபான்மை மதத்தவருக்கு அவர்கள் வேண்டாமென்று சொன்ன வரை இரட்டை வாக்குரிமை அளிக்கப்பட்டிருந்ததும் ஜெயமோகனுக்குத் தெரியுமா?

ஏதோ பாகிஸ்தானில் பாலும் தேனும் ஓடுவதாகவும், ஜனநாயகம் செழித்திருப்பதாகவும் நான் சொல்வதாக நினைக்க வேண்டாம். அமெரிக்க விசுவாசத்திலாகட்டும், சொந்த மக்களை ஒடுக்குவதிலாகட்டும் இந்திய அரசுக்கு எந்த வகையிலும் குறைந்ததல்ல பாகிஸ்தான்.

காஷ்மீர் பிரச்சினையை, 1. பாகிஸ்தானின் தூண்டுதல், 2. `ஜிஹாதி' பயங்கரவாதம், 3. தேசப் பிரிவினையின் எச்ச சொச்சம் ஆகியவற்றின் விளைவு என்பதாக மட்டுமே முன்னிறுத்தி காஷ்மீர மக்களின் சுய நிர்ணய உரிமை, சுதந்திர வேட்கை என்கிற அம்சத்தை மூடி மறைப்பது இந்திய ராஜ தந்திரத்தின் சதித் திட்டங்களில் ஒன்று. இந்தச் சதியைத் தோலுரித்து அவர்களின் சுதந்திர வேட்கையை வெளிப்படுத்திக் காட்டுவதே அருந்ததிராய் போன்ற எழுத்தாளர்களின் கடமையாகிறது. ஒரு எழுத்தாளனின் கடமை அதுதானே. வாழுங் காலத்தின் சமூக அநீதிகைளக் கண்டு கொதித்து சம காலத்தையே நிராகரிப்பவன்தானே எழுத்தாளன். டால்ஸ்டாய் முதல் ஆஸ்கார் வைல்ட் வரை அப்படித்தானே வாழ்ந்துள்ளனர். எழுத்துக்கள் காலத்தைக் கடந்து நிற்கவில்லை என்பதன் பொருளும் இதுதானே.

பாகிஸ்தான் தூண்டுதல், பயங்கரவாதப் பிரச்சினை எல்லாவற்றையும் மறைத்து அதை ஒரு சுதந்திர வேட்கையாகச் சொன்னதைச் சுட்டிக் காட்டி அதற்காகவே அருந்ததியை `குருவி மண்டை' எனவும், கூலிக்கு எழுதுபவர் எனவும் இழிவு செய்கிறார் ஜெ.மோ. ஒரு எழுத்தாளனின் மண்டைக்குள் சம கால ராஜதந்திரியின் மூளை அமைந்துள்ளதெப்படி? ஜெ.மோ. ஒரு வினோதப் பிராணிதான்.

ஒன்றைச் சொல்லியாக வேண்டும். உலகெங்கிலும் நடைபெறும் விடுதலைப் போராட்டங்களுக்கும், காஷ்மீரி மக்களின் போராட்டத்திற்கும் ஒரு வேறுபாடு உண்டு. காஷ்மீர மக்கள் தமக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றக் கோரித்தான் போராடிக் கொண்டுள்ளனர். காஷ்மீரி மக்களின் விருப்பைக் கேட்டு அதன்படி முடிவெடுப்பது என்கிற வாக்குறுதியை இந்திய அரசு ஐ.நா. அவையின் முன் அளித்தது. இந்த நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளுக்காகவும், அரசியல் துரோகங்களை எதிர்த்துமே காஷ்மீரிகள் இன்று போராடிக் கொண்டுள்ளனர்.

இன்று காஷ்மீர மக்கள் அமைதி வழியை நோக்கித் திரும்பியுள்ளனர். ஒற்றைக் கோரிக்கையுடன் ஒருங்கிணைந்துள்ளனர். இந்தியாவிலிருந்து காஷ்மீரத்திற்குச் சுதந்திரம் என்பதன் இன்னொரு பக்கம் காஷ்மீரத்திலிருந்து இந்தியாவிற்கும் சுதந்திரம் என்பதே. காஷ்மீர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஏற்படும் போதே இந்திய மண்ணில் பயங்கரவாதம் முடிவுக்கு வரத் தொடங்கும். தினந்தோறும் இந்த அம்சத்தில் செலவிடப்படும் ரூ.500 கோடியையும் இந்திய மக்களின் நலனுக்குச் செலவிட இயலும்.

ஜெயமோகன் கக்கியுள்ள இதர விஷக் கருத்துக்களைச் சுருக்கம் கருதி விட்டு விடுகிறேன். இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டு உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் அஃப்சல் குருவின் மனைவி குடியரசுத் தலைவரைச் சென்று மிரட்டினாராம். ``இந்தியச் சமூகம் அளிக்கும் வாய்ப்புக்கள்'' மூலம் முஸ்லிம்களில் பெரும்பகுதியினர் முன்னேறி வருகிறார்களாம் (பார்க்க : சச்சர் அறிக்கை); உலகப் பரப்பில் வாழும் முஸ்லிம் சமூகங்களை ஆங்காங்கு புதைக்கப்பட்ட கண்ணி வெடிகளாக மாற்றுகின்றனவாம் முஸ்லிம் அமைப்புகள் (எத்தனை கொடூரச் சித்திரிப்பு பாருங்கள்); மாற்று தேசியங்களை மத நோக்கில் அழிக்க முஸ்லிம்களுக்குத் தயக்கம் இருக்காதாம்.

``காரணம், இஸ்லாம் என்பது ஒரு தேசிய கற்பிதம் - ஒரு தேசிய கற்பிதம் - ஒரு மதமோ வாழ்க்கை முறையோ மட்டும் அல்ல. அது பிற தேசிய அற்புதங்களை ஏற்காது'' - ஜெ.மோ.

ஜெயமோகனுக்கு இஸ்லாம் பற்றியும் ஒன்றும் தெரியாது என்று மட்டுமே மேற்குறித்த வாசகங்களிலிருந்து நாம் புரிந்து கொள்கிறோம். இஸ்லாமின் `தேசியம்' என்கிற கருத்தாக்கமே கிடையாது. `உம்மா' - சமூகம், நம்பிக்கையாளர்களின் கூட்டமைப்பு என்பதற்கே அங்கு முக்கியத்துவம். பிற நம்பிக்கையாளர்களுடன் சமூக இணக்கத்தை அது மறுத்ததில்லை. காஷ்மீர மக்கள் அதற்கொரு நடைமுறை எடுத்துக்காட்டு.

சமூக அநீதிகளுக்கு எதிராக நிற்கும் தமிழ் எழுத்தாளர்களைப் பெயர் குறித்து ஏசுகிறார் ஜெ.மோ. மாவோயிஸ்டுகளுக்கு சீனாவிலிருந்து நிதி வருகிறதாம். ``ஆங்கில இதழ்களின் ஞாயிறு இணைப்பில்'' வரும் கட்டுரைகளைப் பார்த்து தமிழில் எழுதுகிறவர்களாம் இத்தகைய அறிவுஜீவிகள். இப்படிச் சொல்வதற்கு ஜெயமோகனுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்பதை, ``மனச்சாட்சியுள்ள வாசகர்கள்'' யோசிக்க வேண்டும். தமிழில் வெளிவந்த நூற்களையே ஈயடிச்சான் காப்பி அடித்து பொ. வேல்சாமி போன்றவர்களிடம் மாட்டிக் கொண்டு குடும்ப சகிதமாக அவமானப்பட்டவர் ஜெ.மோ. இவர் ஆங்கில இதழ்களைப் பார்த்து கட்டுரை எழுதுவதில்லை என்பதை மட்டும் ஏற்றுக் கொள்ளலாம். ஏனெனில் இவர் ஆங்கிலத்தில் எதையும் படிப்பதில்லை. மலையாளத்தில் வரும்வரை அவர் காத்திருப்பார்.

``தேசபக்தியே பாவமென்றாகிவிட்ட இச் சூழலில், முத்திரை குத்தப்பட்டு, வசைபாடப்பட்டு, அவமதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டு நின்ற போதும் உரக்கச் சொல்வோம் நண்பர்களே `வெல்க பாரதம்' '' எனக் கட்டுரையை முடிக்கிறார் ஜெ.மோ. அவரது கட்டுரையை முழுமையாகப் படித்துப் பாருங்கள் - முத்திரையை வேறு யாரும் அவர் மீது குத்த வேண்டுமா என்பது விளங்கும். முத்திரை குத்துவதற்கு அவர் முதுகில் இடமில்லை. அவரது உடல் முழுவதும் காவி முத்திரை படிந்துள்ளதற்கு இந்தக் கட்டுரையே சாட்சி.

`தேசபக்தி பாவமென்றாகி விட்ட சூழல்' என அவர் சமூகச் சுரணையுள்ள எழுத்துக்களைக் குறிப்பிடுகிறார். உண்மைதான். தேசபக்தியைப் பாவமென்று மட்டுமல்ல, கொடூரம், அயோக்கியத்தனம், vicious என்றெல்லாம் பெரியார் ஈ.வெரா மட்டுமல்ல, டால்ஸ்டாய் உள்ளிட்ட மனிதரை நேசித்த, சமூகச் சுரணையுள்ள எழுத்தாளர்கள் அவ்வளவுபேரும், ஆம் அவ்வளவு பேரும் சொல்லித்தான் உள்ளனர்.

ஜெயமோகனைச் சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு `தேசபக்தி', `தேசியம்' ஆகியன குறித்தும் கொஞ்சம் ஆழமாகச் சிந்திப்போம்.

குறிப்பு : ஜெ.மோ போன்றவர்களுக்காக ஒரு தகவல்: காஷ்மீர் பயணம் முழுக்க முழுக்கச் சொந்தச் செலவில் மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொருவர் செலவு ரூ.19,200/-.
(அடுத்த இதழில் முடியும்..)

த‌ன்னாட்சி உரிமை

-ம‌ணி வேலுப்பிள்ளை


`காக்கேசியக் கோட்டைகளை இரஷ்யா கைப்பற்றிய பொழுதும், வீரஞ்செறிந்த போலாந்தை அது தீர்த்துக்கட்டிய பொழுதும் ஐரோப்பிய மேல்தட்டு வர்க்கங்கள் அதனை வெட்கமின்றி ஏற்றுக்கொண்டோ, பரிவுகாட்டிக்கொண்டோ, மூடத்தனமான பராமுகத்துடனோ அவதானித்துக் கொண்டிருந்ததாக' மார்க்ஸ் அன்று சாடியதுண்டு வன்னிக் கோட்டைகளை இலங்கை ஆட்சியாளர் கைப்பற்றும்பொழுதும், தமிழ் பேசும் மக்களின் ஆள்புலத்தை அவர்கள் தீர்த்துக்கட்டும்பொழுதும் வெளியுலக மேன்மக்கள் அதனை வெட்கமின்றி ஏற்றுக்கொண்டோ, பரிவுகாட்டிக் கொண்டோ, மூடத்தனமான பராமுகத்துடனோ அவதானித்துக் கொண்டிருப்பதைச் சாடுவதற்கு மார்க்ஸ் இன்று உயிருடன் இல்லை. இந்தக் கொடுமையை அனுபவிப்பதற்குத் தமிழ் பேசும் மக்கள் புரிந்த குற்றம்: தன்னாட்சிப் போராட்டத்தில் குதித்த குற்றம்!

தன்னாட்சி உரிமை (right of selfdetermination) என்பது `மக்கள் திரள் ஒன்று, அதன் அரசவிசுவாசத்தை அல்லது ஆட்சி முறையைத் தீர்மானிக்கும் சுதந்திரம்' எனப்படுகிறது …the freedom of a people to decide their own allegiance or form of government… (Oxford). அத்தகைய தன்னாட்சி உரிமையின் தோற்றுவாயாக அமெரிக்க விடுதலைப் போரையும் (1775-1783), பிரெஞ்சுப் புரட்சியையும் (1789 - 1799) வரலாற்றறிஞர்கள் எடுத்துக்காட்டுவதுண்டு. அமெரிக்க விடுதலையும், பிரெஞ்சுப் புரட்சியும் தோற்றுவித்த தன்னாட்சி உரிமை, தமிழ் பேசும் மக்கள் விடயத்தில் மன்னிக்கமுடியாத குற்றமாகிவிட்டது!

`ஒரு நாட்டின் தேசிய ஐக்கியத்தையும், ஆள்புலக் கட்டுறுதியையும் ஓரளவு அல்லது முற்றிலும் குலைக்கும் முயற்சி எதுவும் ஐ.நா. பட்டயத்துக்கு முரணாகும்' என்பதை மறுப்பதற்கில்லை. எனினும், `மக்கள்திரள்கள் அனைத்துக்கும் தன்னாட்சி உரிமை உண்டு' என்பதை ஐ.நா. பொது அவை 1960-ல் ஏற்றுக்கொண்டது. `எவ்வாறு பிரிவினை இயக்கங்களுக்கு அல்லது கிளர்ச்சி இயக்கங்களுக்கு உதவுவது சட்டவிரோதம் ஆகுமோ, அவ்வாறே தன்னாட்சி உரிமையைத் தடுப்பதற்கு வன்முறையைப் பயன்படுத்துவதும் சட்டவிரோதம் ஆகும்' (Daniel Patrick Moyniham, Pandaemonium, Oxford, 1993, p.151). இதில் பொதிந்துள்ள உண்மையை லெனின் நன்கு சுவைபட விளக்கியுரைத்தார்:

`தமது கணவர்களை மணவிலக்குச் செய்யும்படி பெண்களை நாம் தூண்டவில்லை. ஆனால், அவ்வாறு செய்வதற்கான சுதந்திரம் அவர்களுக்கு இருக்க வேண்டும்.'

`தொழிலாளிகளுக்குத் தாயகம் இல்லை, பொதுவுடைமை வாதிகள் தேசியத்துக்கு அப்பாற்பட்டவர்கள்' என்று மார்க்சும் (1865), `சமூகவுடைமையின் நலன்கள் தன்னாட்சி உரிமைக்கு மேம்பட்டவை' என்று லெனினும் (1912) முழங்கியது முற்றிலும் உண்மையே. அதேவேளை இங்கிலாந்திலிருந்து அயர்லாந்தும், இரஷ்யாவிலிருந்து போலாந்தும் பின்லாந்தும், சுவீடனிலிருந்து நோர்வேயும் விடுதலை பெறுவதற்கு மேற்கொண்ட போராட்டங்களை மார்க்சும், லெனினும் முற்றுமுழுதாக ஆதரித்தார்கள். அத்தகைய மார்க்சியலெனினிய நிலைப்பாட்டை மார்க்சியமும் தேசிய இனங்களும் (Marxism and Nationalities) என்னும் தலைப்பில் ஓர் ஆய்வுரையாக முன்வைத்தார் ஸ்டாலின் (1913).

அதேவேளை, சுவீடிய ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவதற்கு நோர்வே மக்கள் மேற்கொண்ட போராட்டத்தை அன்னை றோசா லக்சம்பேர்க் (Rosa Luxemburg 1870-1919) எதிர்த்து நின்றார். அவருடைய நிலைப்பாட்டைக் கண்டித்து லெனின் முன்வைத்த விளக்கம் கவனிக்கத்தக்கது: (1) நோர்வேயின் விடுதலை சுவீடிய எதேச்சாதிகார அரசைப் பலவீனப்படுத்தும். அது சுவீடிய மக்களின் சொந்த விடுதலைக்கு வழிவகுக்கும். (2) நோர்வேயின் விடுதலை, அங்கு (நோர்வேயில்) தேசியத்தை நிலைநிறுத்தும். தேசியம், மக்களாட்சிக்கு ஒரு படிக்கல்.'

`தேசியப் போராட்டத்துள் மக்களாட்சிப் பண்பு பொதிந்துள்ளது' என்று வாதிட்ட லெனின், சோவியத் நாட்டை அமைத்த கையோடு, தாம் சொன்னதைச் செயலில் காட்டுமுகமாக, இரஷ்யப் பேரரசினால் கட்டியாளப்பட்ட பின்லாந்து, லற்வியா, எஸ்தோனியா, லிதுவேனியா முதலியவற்றின் தேசியத்தை ஏற்றுக்கொண்டு, அவற்றுக்கு விடுதலையளிக்க ஆணையிட்டார் (1918). 1944-ல் சோவியத் நாட்டினால் திரும்பவும் கைப்பற்றப்பட்ட லற்வியா, எஸ்தோனியா, லிதுவேனியா மூன்றும் 1991-ல் மீண்டும் விடுதலை பெற்றமை கவனிக்கத்தக்கது.

`இங்கிலாந்திலிருந்து அயர்லாந்து பிரியமுடியாது என்றுதான் நான் முதலில் கருதினேன். அது பிரியாமல் இருக்க முடியாது என்று நான் இப்பொழுது கருதுகிறேன்' என்று மார்க்ஸ் குறிப்பிட்டார். அதன்படி, `அயர்லாந்து விடுதலை பெறும்வரை ஆங்கிலேயத் தொழிலாளிகள் விடுதலை பெறமுடியாது' என்ற முழக்கத்தை அவர் முன்வைக்க நேர்ந்தது. ஆங்கிலேயத் தொழிலாளிகள் தமது சொந்த விடுதலைக்கான போராட்டத்தில் குதிப்பதைத் தடுப்பதற்காக, அதாவது அவர்களுடைய கவனத்தைத் திசை திருப்புவதற்காக, அவர்களை, அவர்களுடைய ஆட்சியாளர் அயர்லாந்து மக்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுத்திய படியால், மார்க்ஸ் அவ்வாறு முழங்க நேர்ந்தது. அந்த முழக்கத்தில் பொதிந்துள்ள தருக்கம் இலங்கைக்கும் பொருந்தும்.

1948-ல் பிரித்தானியர் வெளியேறுந் தறுவாயில், ஏழு இடதுசாரிகளைத் தமது பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய 10 இலட்சம் தமிழ் மக்களின் குடியுரிமையும், வாக்குரிமையும் பறிக்கப்பட்டு, தமிழர் சிங்களவர் பிரச்சனை தோற்றுவிக்கப்பட்டமை, தற்செயலாக இடம்பெற்ற ஒரு சங்கதி அல்ல. குடியுரிமைச் சட்டம் (1949), தனிச் சிங்களச் சட்டம் (1956), அரச (பௌத்த) மதச் சட்டம் (1972) போன்ற பேரினவாத அரசியல் நடவடிக்கைகள் மூலம் இலங்கையில் இடதுசாரித்துவம் தொடர்ச்சியாகத் தோற்கடிக்கப்பட்டு வந்துள்ளது.

1971-ல் கிளர்ந்தெழுந்த உறோகண விஜயவீரா (19431989), சோமவன்ச அமரசிங்கா, விமல் வீரசிங்கா போன்றவர்கள், தமிழ் பேசும் மக்கள் விடுதலை பெறும்வரை சிங்களத் தொழிலாளிகள் விடுதலை பெறமுடியாது என்பதைப் புரிந்து கொள்ளவில்லை. தமிழ் பேசும் மக்களின் போராட்டம் சிங்கள மக்களுக்கு எதிரானதல்ல, ஆட்சியாளருக்கு எதிரானது என்பதை அவர்கள் புரிந்துகொண்டிருந்தால், மக்களின் பொது எதிரியை அவர்கள் இனங்கண்டிருந்தால், தமிழ் பேசும் மக்களின் போராட்டத்தை அவர்கள் ஆதரித்திருப்பார்கள்.

அவர்களுக்கு முந்தைய இடதுசாரிகள் தமது முழுமுதல் நிலைப்பாடுகளை காலப்போக்கில் மாற்றியதுண்டு. எடுத்துக்காட்டாக, `ஒரு மொழி என்றால் இரு நாடுகள், இரு மொழிகள் என்றால் ஒரு நாடு!' (One language two nations, two languages one nation!) என்று முழங்கிய அதே கொல்வின் ஆர். டி சில்வா 1972-ல் வரைந்த அரசியல் யாப்பில் சிங்களம் ஆட்சி மொழியாக நீடித்தது மட்டுமல்ல, பௌத்தம் வேறு அரச மதம் ஆனது (இனி `மதம் மனிதனுக்கு அபின்' இல்லை போலும்!). எனினும், தோழர் நா.சண்முகதாசன், தோழர் வ.பொன்னம்பலம் ஆகிய இருவரின் நிலைப்பாடுகளும் தமிழ் பேசும் மக்களின் தன்னாட்சி உரிமைக்குச் சார்பாகவே மாறிவந்தன. தோழர் சண்முகதாசன் தலைவர் மாவோவின் புத்திமதிகளைப் போராளிகளுக்கு அள்ளி வழங்கினார். தோழர் பொன்னம்பலம் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்தார். அவர் நிறுவிய அமைப்பின் பெயர்: செந்தமிழர் இயக்கம். மார்க்சியமும் (சிவப்பும்), தேசியமும் (தமிழரும்) ஒன்றுடன் ஒன்று உடன்பட வல்லவை என்பதை அவர் சூட்டிய பெயரே பறைசாற்றியது!

`வடக்கில் தமிழர்களும் தெற்கில் சமுத்திரமும் இருப்பதால் என்னால் கால்நீட்டிப் படுக்க முடியவில்லை' என்று துட்டகைமுனு (கி.மு. 161-137) வெம்பியதுண்டு. `தமிழனின் முதுகுத் தோலை உரித்து, செருப்புத் தைத்து, காலில் மாட்டித் திரிவேன்' என்று கே.எம்.பி.ராஜரத்தினா சூளுரைத்ததுண்டு. `சிங்கள மக்கள் ஒரு மரம், சிறுபான்மையோர் அதில் படரும் கொடிகள்' என்று ஜனாதிபதி டி.பி.விஜேதுங்கா (1993-1994) குறிப்பிட்டதுண்டு. `இலங்கை சிங்களவருக்குச் சொந்தமான நாடு. அவர்களைச் சிறுபான்மையோர் மேவி நடக்க வேண்டும்' என்று சேனாதிபதி பொன்சேகா வேறு அறிவுறுத்தியுள்ளார்!

இவ்வாறு தமது மெய்யான நிலைப்பாட்டை ஆட்சியாளர்கள் அவ்வப்பொழுது கக்குவதுண்டு (அவர்களுடைய வாய்மை பெரிதும் மெச்சத்தக்கது!). இலங்கையின் இறைமை, ஆள்புலக் கட்டுறுதி, தேர்தல்கள் என்னும் போர்வைக்குள் அத்தகைய நிலைப்பாட்டை அவர்கள் மூடிமறைத்து வருகிறார்கள். ஹிட்லரும், முசோலினியும் கூட மக்களாட்சித் தேர்தலில் வெற்றி ஈட்டியே ஆட்சி ஏற்றவர்கள். தத்தம் நாடாளுமன்றங்களின் ஒப்புதலுடன்தான் அவர்கள் போர் தொடுத்தார்கள். இலங்கை ஆட்சியாளரும் தமது நாடாளுமன்றத்தின் ஒப்புதலுடனேயே தமிழ் பேசும் மக்கள்மீது போர் தொடுத்தார்கள்!

1991-ம் ஆண்டு ஈராக்கில் குர்திசு மக்கள் துருக்கிய, ஈரானிய எல்லைகளுக்கு விரட்டியடிக்கப்பட்ட பொழுது, `தலையிடும் உரிமை' என்னும் கொள்கையை பிரெஞ்சு அரசு முன்வைத்தது. அதனை அடுத்து ஐ.நா. பாதுகாப்பு மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட (688_ம் இலக்கத்) தீர்மானத்தின்படி, ஒரு நாட்டின் உள்விவகாரத்தில் மனிதாபிமான நோக்குடன் தலையிடும் உரிமை உலக சமூகத்துக்கு உண்டு.

தலையிடும் உரிமை என்பது சம்பந்தப்பட்ட நாட்டின் இறைமையை அல்லது ஆள்புலக் கட்டுறுதியை விஞ்சிய உரிமை என்பது பெறப்படுகிறது. அந்த வகையில், இறைமையோ, ஆள்புலக் கட்டுறுதியோ அப்படி ஒன்றும் புனிதமான சரக்கல்ல என்பது புலப்படுகிறது. எனினும், அதனைப் புனிதமான சரக்கென்று கொண்டாடி, சம்பந்தப்பட்ட ஆட்சியாளருக்கு ஒத்தாசை புரியும் பிறிதொரு வேடிக்கையான உலகமும் இருக்கத்தான் செய்கிறது!

அத்தகைய இறைமையும், ஆள்புலக் கட்டுறுதியும் வாய்க்கப்பெற்ற நாடுகள் தோற்றுவிக்கப்பட்ட விதத்துக்கு ஒரு சுவையான எடுத்துக்காட்டை எம்மால் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை: `நாங்கள் அடுத்த அறைக்குள் நுழைந்தோம். கீழே வெளியாக இருந்தது. (அமெரிக்க ஜனாதிபதி வுட்றோ) வில்சன் (எங்கள் அலுவலகத்தில் வரையப்பட்ட) ஒரு பெரிய படத்தை கீழே விரித்து வைத்து, அதன்மீது தவழ்ந்த நிலைகொண்டு, தாங்கள் செய்த வேலையை எங்களுக்குக் காட்ட ஆயத்தப்படுத்தினார். நாங்களும் தவழ்ந்து நிலைகொண்டோம். முன் வரிசையில் தவழ்ந்து நிலைகொண்ட என்னைப் பின் வரிசையிலிருந்து யாரோ இடித்துத் தள்ளியதை உணர்ந்து, நான் ஆத்திரத்துடன் திரும்பிப் பார்த்தேன். (இத்தாலியப் பிரதமர்) ஓலாந்தோ அந்த வரைபடத்தை நோக்கி ஒரு கரடி போல் தவழ்ந்து வந்துகொண்டிருந்தார். அவருக்கு நான் இடம் விடவே, அவர் சட்டுப்புட்டென்று முன் வரிசைக்குள் ஊடுருவிவிட்டார். உலகின் மிகமுக்கிய பேர்வழிகள் அந்த வரைபடத்தின்மீது தவழ்ந்து நிலைகொண்டதைப் படம்பிடிப்பதற்கு ஒரு புகைப்படக்கருவி என் கைவசம் இல்லாது போனதையிட்டு நான் மிகவும் மனம் வருந்துகிறேன்' (Charles Seymour, quoted by Daniel Patrick Moyniham, Pandaemonium, Oxford, 1993, p.102).

அமெரிக்க ஜனாதிபதி வில்சன் (1913-1921), பிரித்தானியப் பிரதமர் லாயிட் ஜார்ஜ் (1916-1922), இத்தாலியப் பிரதமர் ஓலாந்தோ (1917-1919) ஆகியோர் தவழ்ந்து நிலைகொண்ட அதே காட்சி வேறொரு விதமாகவும் மட்டுக்கட்டப்பட்டுள்ளது: `அன்பே, இந்த அறிவற்ற பேர்வழிகள், பொறுப்பற்ற பேர்வழிகள் மூவரும் சின்ன ஆசியாவை (ஒட்டோமன் துருக்கியை) கேக் வெட்டுவதுபோல் வெட்டியது கண்டு நான் திகைத்து நிற்கிறேன் (Harold Nicolson மனைவிக்கு எழுதிய கடிதம், அதே நூல், அதே பக்கம்).

எவ்வாறாயினும், தன்னாட்சி உரிமையை முதன்முதல் அதிகாரபூர்வமாக முன்வைத்தவரும், அதனை ஐ.நா.பட்டயத்தில் இடுவித்தவரும் வில்சனே. அவருடைய பெயர்போன 14 அம்சத் திட்டத்தில் (1918) தன்னாட்சி உரிமை பொதிந்துள்ளது. தேசியத்துக்கு அது துணைநிற்க வல்லது. எனினும் `தேசியத்தை வில்சன் தோற்றுவிக்கவில்லை. மாறாக, தன்னாட்சி உரிமையின் மூலம் தேசியத்தை அவர் எதிர்கொண்டார்' (Moyniham, அதே நூல், ப.81). எனினும் தன்னாட்சி என்பது இன வாரியாகவா, சமய வாரியாகவா, மொழி வாரியாகவா நிலைநாட்டப்பட வேண்டும் என்னும் சிக்கலான வினாவுக்கு அவர் விடை அளிக்கவில்லை.

பிரித்தானிய, இரஷ்ய, ஜேர்மனிய, (ஒற்றோமன்) துருக்கிய பேரரசுகளினால் கட்டியாளப்பட்ட தேசங்களின் விடுதலையையே மார்க்ஸ், லெனின், ஸ்டாலின், வில்சன் முதலியோர் பெரிதும் தன்னாட்சி என்று கருதினார்கள். பிரித்தானியாவிலிருந்து அயர்லாந்து விடுதலை பெறவேண்டும் என்று மார்க்சும், இரஷ்யாவிலிருந்து போலாந்தும் பின்லாந்தும், சுவீடனிலிருந்து நோர்வேயும் விடுதலை பெறவேண்டும் என்று மார்க்சும், லெனினும், ஸ்டாலினும் வாதிட்டார்கள். வில்சனின் 14 அம்சத் திட்டத்தின்படி ஜேர்மனியிலிருந்து பெல்ஜியம் விடுதலை பெற்றது. (ஒற்றோமன்) துருக்கியிலிருந்து ஈராக்கும், லெபனானும், பாலஸ்தீனமும், ஜோர்தானும், சீரியாவும் தோற்றுவிக்கப்பட்டன. இரஷ்யாவிலிருந்து பின்லாந்தும், எஸ்தோனியாவும், இலற்வியாவும், லிதுவேனியாவும், போலாந்தும் விடுதலை பெற்றன (எஸ்தோனியா, இலற்வியா, லிதுவேனியா மூன்றும் 1944-ல் மீண்டும் சோவியத் நாட்டின் ஆட்சிக்கு உட்பட்டு, 1991-ல் மீட்சி பெற்றன).

யூகோசிலாவியாவுக்குள் ஒடுக்கப்பட்ட குறோசியா, பொஸ்னியாகெசகோவினா, மொந்தெனிகிறோ ஆகிய தேசங்கள் முறையே 1991-ம், 1992-ம், 2006-ம் ஆண்டுகளில் தனி நாடுகள் ஆகின! அப்புறம் 1971-ல் வங்காளதேசமும், 1993-ல் எரித்திரியாவும், 2002-ல் கிழக்கு திமோரும், 2008-ல் கொசொவோவும் தனி நாடுகள் ஆகின. ஏறத்தாழ 50 நாடுகளுடன் தோன்றிய ஐ.நா.வில் இன்று 192 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. பேரரசுகள் அருகி வருகின்றன, நாடுகள் பெருகி வருகின்றன. அதாவது, (1) மனித உரிமைகளும் (2) தன்னாட்சி உரிமையும் நிலைநாட்டப்பட்டு வருகின்றன. மனித உரிமைகளும், தன்னாட்சி உரிமையும் ஒன்றுடன் ஒன்று உடன்பட வல்லவை என்னும் உண்மையைப் பின்வரும் கூற்றுக்கள் இரண்டும் உணர்த்துகின்றன:

(1) `இனம், நிறம், பால், மொழி, மதம், அரசியல் கருத்து, மற்றும் பிற கருத்து, தாயகம், அல்லது தாய்ச் சமூகம், உடைமை, பிறப்பு, மற்றும் பிற வேறுபாடுகளின்றி சரிநிகரான உரிமைகளை அனுபவிக்கும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு' (உலக மனித உரிமைப் பிரகடனம், ஐ.நா. பொது அவை, 1948/12/10).

(2) `ஒரு மொழி, ஓர் ஆள்புலம், மூலவளம், உளப்பாங்கு, பண்பாடு, திண்மை கொண்டு மலர்ந்த வரலாறு படைத்த ஒரு சமூகமே ஒரு தேசிய இனம் ஆகும். தன்னாட்சியுடன் வாழும் உரிமை ஒரு தேசிய இனத்துக்கு உண்டு. ஏனைய தேசிய இனங்களுடன் கூட்டாட்சி அடிப்படையில் கூடி வாழும் உரிமையும் அதற்கு உண்டு. அத்துடன் முற்றிலும் பிரிந்து செல்லும் உரிமையும் அதற்கு உண்டு. தேசிய இனங்கள் இறைமை படைத்தவை, ஒன்றுக்கொன்று சரிநிகரானவை. தேசிய இனங்களுக்குப் பரந்த அளவில் தன்னாட்சி அளிக்கப்பட வேண்டும். மத்திய அரசின் தலையீடு ஒழிக்கப்பட வேண்டும். ஒரு மொழி கட்டாய ஆட்சி மொழியாக விளங்கக் கூடாது. உள்ளூர் மக்களே தத்தம் சமூக, பொருளாதார நிலைமைகளைக் கருத்தில் கொண்டு தமது ஆள்புல எல்லைகளை வரையறுக்க வேண்டும்' (J.V.Stalin, Marxism & National Question, Prosveshcheniye, Moscow, 35, MarchMay 1913).

தமிழ் பேசும் மக்கள் தன்னாட்சிப் போராட்டத்தில் குதித்தது முற்றிலும் நியாயமே ஒழிய, சற்றும் குற்றமல்ல என்பதற்கு இவ்விரு கூற்றுகளும் கட்டியம் கூறுகின்றன.

ந‌ன்றி: தீராந‌தி (கார்த்திகை, 2008)

Saturday, November 01, 2008

மேய்ப்பரின் களவுபோன ஆடுகளைத் தேவதைகள் தேடிப்போன குளிர்காலத்தின் கதை

-கலீஸ்தினோ மிகுந்தன்


நீர‌ஜாவோடான‌ ப‌தின்ம‌ ஈர்ப்பு (அல்ல‌து அவ‌ன‌து வார்த்தைக‌ளில் சொல்வ‌தா‌னால் காத‌ல்) கையிலும் காலிலும் உள்ள‌ மொத்த‌ விர‌ல்களையும் எண்ணுவ‌த‌ற்கும் குறைவான‌ நாட்க‌ளிலேயே நீர்த்துப் போய்விட்ட‌து. இத‌ன்பின் சில‌ முய‌ற்சிக‌ள் ந‌டைபெற்ற‌ன‌, ஆனால் சொல்லிக்கொள்ளும்ப‌டியாக‌ எதுவும் வெற்றிய்டைந்த‌தாய் அவ‌ன‌து 'ச‌ரித‌த்தில்' இல்லை. வ‌ருட‌ங்க‌ள் செல்ல‌ச் செல்ல‌ எப்ப‌டி காத‌லிப்ப‌தில் ஈர்ப்புக் குறைந்துபோன‌தோ அதே போன்று ப‌டிப்பிலுமிருந்த விருப்பும் போன‌து. வ‌குப்புக‌ளுக்கு க‌ட்ட‌டித்து குடித்த‌லும் குதூக‌லித்த‌த‌லும், தெருக்க‌ளில்/பூங்காக்க‌ளில்/அங்காடிக‌ளில் போய் வ‌ருப‌வ‌ர்க‌ளுட‌ன் வ‌ம்புச் ச‌ண்டைக‌ளில் ஈடுப‌டுவ‌தும் முக்கிய‌ம் வாய்ந்த‌தாகிவிட்ட‌ன‌. அவ‌னோடு சேர்ந்து திரிந்த‌வ‌ர்க‌ளில் அநேக‌ர் உய‌ர்க‌ல்லூரியை இடைந‌டுவில் நிறுத்திவிட்டு வேலைக்கு முழு நேர‌மாய் போக‌த்தொட‌ங்கிய‌போது அவ‌ர்க‌ளோடு சேர்த்து வேலைக்குப் போகும் பெருவிருப்பை அம்மாவின் க‌ண்ணீர் த‌டுத்து நிறுத்திய‌து. தாயின் ம‌ன்றாட்ட‌த்தால், ஒரு மாதிரி ப‌ன்னிர‌ண்டாம் வ‌குப்பை முடித்து க‌ல்லூரிக்குப் போகும் சந்த‌ர்ப்ப‌ம் வாய்த்திருந்த‌து. ' மேற்படிப்புக்குப் போவ‌தென்றால் யூனிவ‌ர்சிற்றிக்குப் போய்ப் ப‌டிக்க‌வேண்டும்; இல்லாவிட்டால் எல்லாம் பாழ்' என்று இவ‌ன‌து நிலையைக் க‌ண்டு க‌தைக்கும் உற‌வுக‌ளின் க‌ழுத்தை நெரித்துக் கொன்றால் என்ன‌ என்ற‌மாதிரி இவ‌னுக்குத் தோன்றும். உதைத்தாலும் உடைந்தாலும் இந்த‌த் த‌மிழ்ச் ச‌க‌தியிற்குள்ளேயே... ம‌ன்னிக்க‌ ச‌ன‌த்திற்குள்ளேயே உழ‌ல்வேண்டியிருக்கிற‌தே என்ற‌ அலுப்பு இவ‌னுக்கு ம‌ன‌ச்சோர்வாய் வ‌ந்து சூழும். க‌ல்லூரிக்குப் போக‌த் தொட‌ங்கிய‌தால் பழைய‌ ந‌ண்ப‌ர்க‌ளோடு பொழுதைக் க‌ழிப்ப‌தும் குறைந்து, அவ‌ர்க‌ள் தொலைவில் போன‌துமாதிரி இவ‌னுக்குத் தோன்றிய‌து. கல்லூரியில் ந‌ட‌க்கும் வ‌குப்புக‌ளுக்கு ஒழுங்காய்ப் போகாவிட்டாலும், க‌ல்லூரியிலேயே த‌ன‌து பொழுதை அதிக‌ம் க‌ழிக்க‌ப் ப‌ழ‌கியிருந்தான். க‌ல்லுரியில் ந‌ட‌க்கும் அமெரிக்க‌ன் ஃபுட்போல், கூடைப்ப‌ந்தாட்ட‌ம் போன்ற‌வைப் பார்ப்ப‌து இவ‌னுக்குப் பிடித்த‌மாயிருந்த‌து. க‌ல்லூரி ஜிம்மிலும், ப‌ப்பிலும் பொழுதைத் த‌னியே க‌ழிக்க‌ப் ப‌ழ‌கியிருந்தான். க‌ல்லூரி ப‌ப்பில் இருட்டி மூலையைத் தேடி ஆறுத‌லாய் இர‌சித்து இர‌சித்துக் குடிப்பது இவனுக்குப் பிடித்தமாயிருந்தது. சில‌நாட்க‌ளில் ப‌தினொரு ம‌ணியானால் ப‌ப்பிலின் ஒருப‌குதி டான்ஸ் ப்ளோராகா மாறிக் கொண்டாட்ட‌மாகிவிடும். ப்ளோரில் ஆடுவ‌தைவிட‌ ஆட்ட‌த்தைப் பார்ப்ப‌துதான் இவ‌னுக்கு விருப்பாயிருந்த‌து. ஆட்ட‌ம் உச்ச‌மேற‌ அப‌த்த‌/அங்க‌த‌/துரோக‌ நாட‌க‌ங்க‌ள் ப‌ல‌ சோடிக‌ளுக்கிடையில் அர‌ங்கேறும். பிய‌ர் போத்த‌ல்க‌ளை உடைக்காது, கைக‌ல‌ப்பு வ‌ந்து ப‌வுண்ச‌ர்க‌ள் குழ‌ப்புப‌வ‌ர்க‌ளை வெளியே தூக்குப் போடாது ந‌ட‌ந்த‌ ஆட்ட‌ நாட்க‌ள் மிக‌க் குறைவான‌தே. ஆனால் இவற்றுக்கப்பாலும் ச‌ந்தோச‌மும் கொண்டாட்ட‌மும் இர‌வின் வெளியெங்கும் த‌தும்பி வ‌ழிந்துகொண்டேயிருக்கும்.

இவ்வாறு ஒருநாள் த‌னிமையையும், ம‌துவையும், இர‌வையும் சுவைத்துக்கொண்டிருந்த‌பொழுதில் ஒருத்தி மிக‌வும் ப‌த‌ற்ற‌த்துட‌ன் ஒரு பிய‌ரைக் கையிலேந்திய‌ப‌டி இவ‌னோடு மேசையைப் ப‌கிர்ந்துகொள்ள‌முடியுமா என்று கேட்ட‌ப‌டி வ்ந்தாள். 'பிர‌ச்சினையில்லை, அம‌ர‌லாம்' என்றான். நாளை காலை ஒரு முக்கிய‌மான‌ பிர‌ச‌ன்டேச‌ன் இருக்கிற‌து. ஒரு பாட‌த்தின் இறுதித்தேர்வாய் இந்தப் பிர‌ச‌ன்டேச‌ன் இருக்கிற‌து. அதுதான் மிக‌வும் ப‌த‌ற்ற‌மாயிருக்கிற‌தென்று பிய‌ரை வாயில் வைத்தாள். அவ‌ள் நெற்றியில் துளிர்த்திருந்த‌ விய‌ர்வைக்கும், பிய‌ர் போத்த‌லில் ப‌ர‌வியிருந்த‌ துளிக‌ளுக்குமிடையில் இருக்கும் வித்தியாச‌ந்த்தான் வாழ்வுக்கும் ம‌ர‌ண‌த்திற்குமான‌ வித்தியாச‌மாக்குமென‌ நினைத்த‌ப‌டி அவ‌ளின் பேச்சைக் கேட்க‌த் தொட‌ங்கினான். அவ‌ள‌து ப‌த‌ற்றத்தில் அவ‌ள் இங்கே அங்கேயென‌ விட‌ய‌ங்க‌ளைக் க‌தைத்துக்கொண்டிருந்தாள். அவ‌னுக்குப் ப‌திலுக்குப் பேசுவ‌த‌ற்கென்று எதுவுமேயிருக்க‌வில்லை. அவ‌ளும் இவ‌ன் எதையும் பேசாது த‌ன்னைக் கேட்டுக்கொண்டிருப்ப‌தையே விரும்பிய‌வ‌ள் போல‌ இடைவிடாது பேசிக்கொண்டிருந்தாள். விடைபெற்றுப்போகும்போது, தானிங்கே ரெசின்ட‌ஸிலேயே த‌ங்கியிருக்கின்றேன், நேர‌மிருக்கும்போது நீ என்னோடு க‌தைக்க‌லாம் என்று அவ‌ள் த‌ன‌து தொலைபேசியை இல‌க்க‌த்தைப் ப‌கிர‌, அவ‌னும் த‌ன‌து இல‌க்க‌த்தைக் கொடுத்திருந்தான்.

அடுத்த‌நாள் காலை எழும்பிய‌போது, இவ‌ன் நேற்றிர‌வு ந‌ட‌ந்த‌து நினைவுக்கு வ‌ர‌, தொலைபேசியில் அவ‌ள் பிர‌ச‌ன்டேச‌னுகுப் போக‌ முன்ன‌ர் வாழ்த்துத் தெரிவித்தான். 'நீ ந‌ன்றாக‌ச் செய்வாய், எதற்கும் ப‌ய‌ப்பிடாதே; அப்ப‌டிச் செய்யாதுவிட்டாலும் உல‌க‌ம் அழிந்துபோய்விடாது' என்று ந‌கைச்சுவையாக‌ இவன் சொன்னான். அவ‌ளுக்கு அவ‌ன‌து அழைப்பு விய‌ப்பாயிருந்த‌து என்ப‌து அவ‌ள‌து ந‌ன்றி சொன்ன‌ குர‌லிலேயே தெரிந்த‌து, அவ‌ளிருந்த‌ ப‌த‌ற்ற‌த்தில் இப்ப‌டி யாரோ ஒருவ‌ர் த‌னக்காய் யோசிக்கின்றார் என்ற‌ நினைப்பு அவ‌ளுக்கு தேவையாக‌வுமிருந்த‌து. இந்த‌ பிர‌ச‌ன்டேச‌ன் ந‌ன்றாக‌ச் செய்தேன் என்றால் இன்று மாலை என‌து செல‌வில் பிய‌ர் வாங்கித்த‌ருகினறேன் என்றாள் அவ‌ள்.

மாலை, அவ‌ன் க‌ல்லூரி ஜிம்முக்குள் நின்ற‌போது தொலைபேசி அழைப்பு அவ‌ளிட‌மிருந்து வ‌ந்த‌து. தான் ப‌ப்பில் நிற்கின்றேன, வ‌ந்து ச‌ந்திக்க‌ முடியுமா என்று கேட்டாள். இன்று நேற்றுப் போல‌ ப‌த‌ற்ற‌மில்லாது புன்ன‌கைத்த‌ப‌டி வ‌ர‌வேற்றாள். வெளியே கொட்டிக்கொண்டிருந்த‌ ப‌னியின் துக‌ள்க‌ள் அவ‌ள் த‌லைம‌யிரில் ம‌ல்லிகைப்பூக்க‌ள் பூத்திருந்த‌மாதிரியான‌ தோற்ற‌ததைக் கொடுத்திருந்த‌து. காதுக‌ள் குளிரில் சிவ‌ந்திருந்த‌ன‌. குளிர்க்கோட்டை க‌ழ‌ற்றிய‌ப‌டி 'நான் திருப்திப்ப‌டும‌ள‌வுக்கு என‌து பிர‌ச‌ன்டேச‌னைச் செய்திருக்கின்றேன்' என்றாள். ஏற்க‌ன‌வே பிய‌ரிற்கு ஓட‌ர் செய்திருப்பாள் போல‌. அவ‌ன் வ‌ந்திருந்த‌துமே வெயிட்ட‌ர்ஸ் ஒரு பிச்ச‌ரில் பிய‌ரை நிர‌ம்பிக் கொண்டுவ‌ந்து மேசையில் வைத்தார். பின் அவ்விர‌வு மிக‌ நீண்ட‌தான‌து. மாறி மாறி உரையாட‌ல். அவ‌னையும் அவ‌ளையும் அறிய‌ முய‌ன்ற‌ அற்புத‌க்க‌ண‌ங்க‌ள். இர‌ண்டு பேரும் ஒருமிக்கும் புள்ளியென்று எதையும் க‌ண்டுபிடிக்க‌ முடியாவிட்டாலும்...தொட‌ர்ந்து உரையாடிக்கொண்டிருந்த‌து அவ்விர‌வில் இருவ‌ருக்கும் பிடித்த‌மாயிருந்தது. ஆங்கில‌மென்ற‌ பொதுமொழிதான் அவ‌ர்க‌ளைப் பிணைத்துக்கொண்டிருந்த‌து. மொழியாலும், க‌லாசார‌த்தாலும்,மேற்கு‍ ‍ கிழ‌க்கு என்று வெவ்வேறு பின்புல‌ங்க‌ளாலும் இருவரும் தூர‌த் தூர‌வாகவே இருந்த‌னர்‌. ஒவ்வா முனைக‌ள் அதிகம் க‌வ‌ர்வ‌தில்லையா, அதுபோல் எதுவோ அவ‌ர்க‌ளை இணைத்துவைத்த‌து போலும்.

பிற‌கான‌ நாட்க‌ள் எவ்வ‌ள‌வு இனிமையான‌வை. நேச‌ம் இவ்வ‌ள‌வு க‌த‌க‌த‌ப்பாய் இருக்க‌முடியுமா என்று வியக்கவைத்த நாட்க‌ள். ப‌க‌லிலும் இர‌விலும் திக‌ட்ட‌வே முடியாது என்று பொங்கிப் பிரவாகரித்த அன்பு. இப்ப‌டியொரு பெண்ணிட‌மிருந்து காம‌ம் பீறிட்டுக் கிள‌ம்ப‌முடியுமா என்று திகைத்து பின் திளைத்த‌ பொழுதுக‌ள். அவ‌ள் இருந்த‌ பெண்க‌ளுக்கான‌ ரெசிட‌ன்ஸில் கூட‌விருக்கும் அறைத்தோழிக‌ள் வெளியில் போகும்போது, ரெசிட‌ன்ஸின் front desk secutrityற்கும் க‌ண்ணில் ம‌ண்ணைத் தூவிட்டு -குறுகிய‌‍/நீண்ட‌- ப‌த‌ற்ற‌மும் க‌ள்ள‌மும் காம‌மும் பின்னிப்பிணைந்த‌ பொழுதுக‌ளை வார்ததைக‌ளுக்குள் நின்று வ‌ர்ணித்த‌ல் அவ்வளவு சாத்திய‌மில்லை.

கிட்ட‌த்த‌ட்ட‌ ஒருவ‌ருட‌ம் முடிந்து, வ‌ந்த‌ இர‌ண்டு வார‌ கிறிஸ்ம‌ஸ் விடுமுறையில் தான் த‌ன‌து பெற்ரோரைப் பார்க்க‌ த‌ன‌து ந‌க‌ரிற்குப் போக‌ப்போகின்றேன் என‌ வெளிக்கிட்டிருக்கிறாள். கிறிஸ்ம‌ஸ் கொண்டாட்ட‌ங்க‌ள் முடிந்து ஸ்நோ பொழியும் அல்லோலோக‌ல்லோல‌த்துட‌ன் குளிர்கால‌த் த‌வ‌ணையிற்கான‌ வ‌குப்புக்க‌ளும் ஆர‌ம்பித்துவிட்டிருந்த‌ன‌. இவ‌னால் அவ‌ளைச் ச‌ந்திக்க‌ முடிய‌வில்லை. தொலைபேசி அழைப்புக்க‌ளுக்கும் எவ்வித‌மான‌ ப‌தில்க‌ளையும் காண‌வில்லை. அவ‌ளிலிருந்த ரெசிடென்ஸில் போய்த்தேடிய‌போது அவ‌ள் இப்போது அங்கே வ‌சிப்ப‌தில்லையென‌ச் சொன்னார்க‌ள். அவ‌ளோடு அறையைப் ப‌கிர்ந்த‌ ம‌ற்ற‌ ந‌ணபிக‌ளிட‌ம் கேட்ட‌போது ஏதோ co-op வேலை எடுத்து, ரெசிடென்சை விட்டு வெளியே வ‌சிக்க‌ப்போய்விட்டாள் என்ற‌ன‌ர். அவ‌ள‌து த‌ற்போதைய‌ முக‌வ‌ரி த‌ர‌முடியுமா என்று இவ‌ன் கேட்ட‌போது த‌ங்க‌ளுக்குத் தெரியாது என்று இவனைத் தவிர்க்கச் செய்தனர். இவ‌னுக்குப் பித்துப்பிடித்த‌து மாதிரியிருந்த‌து. ஏன் அவ‌ள் அப்படிச் செய்கின்றாள் ஏதாவ‌து பிழையைத் தான் செய்துவிட்டேனா என்று மூளையைத் தோண்ட‌த்தொட‌ங்கினான்.

திரும்ப‌வும் தனிமையும, இருளும், கொடுமையான‌ குளிரும் அவ‌னைச் சூழ‌த்தொட‌ங்கின‌. ஆனால் இவை முன்போதில்லாது தாங்க‌முடியாத‌வையாக‌ யாராவ‌து த‌ன்னோடு வ‌ந்து பேச‌மாட்டார்க‌ளா என்று ஏங்க‌ வைப்ப‌வையாக‌ அவனை மாற்றிவிட்ட‌ன‌. திக‌ட்ட‌த் திக‌ட்ட‌ அன்பைத் த‌ந்த‌வள் இப்ப‌டி பெரும் இடைவெளியைவிட்டு ஒன்றும் சொல்லாம‌ற்போய்விட்டாளென்ற‌ நினைப்பு அவ‌ள் மீது ஒரேநேர‌த்தில் வெறுப்பையும், கோப‌த்தையும் உண்டாக்கின‌. ஆக‌வும் நினைவுக‌ள் வ‌ந்து அவ‌ன் உண‌ர்வுக‌ளை அரிக்க‌த்தொட‌ங்கும்போது த‌ன‌க்குத் தெரிந்த‌ அவ‌ள‌து தொலைபேசி இல‌க்க‌த்தில் அழைக்க‌த் தொட‌ங்குவான். இப்போது தொட‌ர்ச்சியாக‌ மூன்று நான்கு முறை அவ்வில‌க்க‌த்தை அழைக்கும்போது ஒரு ஆண் எடுத்து 'பிழையான‌ இல‌க்க‌த்தை அழைக்கிறாய், நீ கேட்கும் அவ‌ள் இவ்வில‌க்க‌த்க்தில் இல்லை; இனி அழைக்க‌வேண்டாமென‌ச்' சொல்ல‌த்தொடங்கினான். ஒருநாள் ப‌ப்பில் இய‌லாத் தனிமையில் பொதுத்தொலைபேசியிலிருந்து அவ‌ள‌து இல‌க்க‌த்திற்கு அழைத்த‌போது, ஒரு பெண் குர‌ல் ம‌றுமுனையில் எடுத்துக் க‌தைப்ப‌து தெரிந்து. நிச்ச‌ய‌ம் அவ‌னால் அடையாளங்கொள்ள‌க்கூடிய‌தாயிருந்த‌து. அவ‌ளேதான். நீ ......... தானே என்று அவள் பெயரைச் சொல்லி இவ‌ன் கேட்க‌ ம‌றுமுனை துண்டிக்க‌ப்ப‌டடுவிட்ட‌து. திரும்பி நாலைந்துமுறை இவ‌ன் எடுப்ப‌தும், எதிர்முனை துண்டிப்ப‌துமாயிருக்க‌, க‌டைசியாய் 'த‌ய‌வுசெய்து வைத்துவிடாதே நான் சொல்வ‌தைக் கேள். இப்போது என் நிலை எப்ப‌டியென்ப‌து அறிவாயா? நீ என்னை உண்மையில் நேசித்திருபாயின் தொலைபேசியை வைக்காது நான் சொல்வ‌தைக் கேள்' என்று உடைந்த‌குர‌லில் பேச‌த்தொட‌ங்கினான். இம்முறை ம‌றுமுனை துண்டிக்காது மிகுந்த‌ ம‌வுன‌த்துட‌ன் இவ‌ன் பேசுவ‌தைக் கேட்க‌த் தொட‌ங்கிய‌து. இறுக்க‌ப்பூட்டியிருந்த‌ அவ‌ள் ம‌ன‌து ச‌ற்று நெகிழ்ந்திருக்க‌வேண்டும்போல‌. 'இவ‌ன் என்ன‌ நட‌ந்த‌து உன‌க்கு?' என்று தொட‌ங்கி எல்லாவித‌மான‌ த‌ன் துய‌ர‌ங்கையும் சொல்ல‌த்தொட‌ங்கினான். அவ‌ள‌து மிக‌ப்பெரும் ம‌வுன‌ம் இவ‌னை ஒரு இராட்ச‌த‌ வில‌ங்காய் விழுங்க‌த் தொட‌ங்கியிருந்தது. அன்றிர‌வு குடித்த‌ ஏழாவ‌து பிய‌ர் தந்த‌ உச்ச‌போதை போன‌த‌ன் சுவடே தெரியாம‌ற்போய்விட்ட‌து.

மிகவும் இய‌லாத‌ப‌ட்ச‌த்தில் இவ‌ன் 'நீயொரு வார்த்தை பேச‌மாட்டாயா?' என்று திருப்ப‌த் திருப்ப‌க் கேட்க‌த்தொட‌ங்கினான். இறுதியில் அவள், 'ச‌ரி, த‌ய‌வுசெய்து இனி தொலைபேசி எடுக்காதே, நான் வ‌ருகின்ற‌ ச‌னிக்கிழ‌மை க‌ல்லூரிக்கு இந்த‌ நேர‌ம் வ‌ந்து க‌தைக்கின்றேன்' என்றாள்.

ச‌னிக்கிழ‌மை வ‌ந்த‌து; வ‌ந்தாள். இப்போதிருக்கும் நான் முன்பு இருந்த‌வ‌ள் அல்ல‌. நாங்க‌ளிருவ‌ரும் இருந்த‌ ந‌ல்ல‌ நினைவுக‌ளோடு பிரிந்துவிடுவோம் என்றாள். ஏன் என்ன‌ ந‌ட‌ந்த‌து? என்னில் என்ன‌ பிழையைக் க‌ண்டாய்? த‌வ‌றுக‌ள் இருந்தால் சொல், நான் திருத்திக்கொள்கின்றேன். த‌ய‌வுசெய்து என்னைவிட்டுப் போகாதே. நீயில்லாத் த‌னிமையை யோசிக்க‌ முடிவ‌தில்லை என்றான் இவன். 'இல்லை த‌ய‌வு செய்து என்னை ம‌ற‌ந்துவிடு' என்று அவ‌ள் திருப்ப‌த் திருப்ப‌ச் சொல்ல‌த் தொட‌ங்கினாள். என்னால் முடியாது என்று அவ‌ள் கையைப் பிடித்து இத‌ழில் முத்த‌மிட‌ முனைந்துபோது... F*** you, you are trying to abuse me... உன‌க்குக் கார‌ண‌ந்தானே வேண்டும். நான இன்னொருத்த‌னுட‌ன் சேர்ந்து வாழ‌த்தொட‌ங்கியிருந்தேன். கார‌ண‌ம் போதுமா?' என்று கூறிவிட்டு இருட்டில் க‌ரைந்துபோயிருந்தாள். அவ‌ன் அன்றிலிருந்து கிட்ட‌த்த‌ட்ட‌ ஆறு நாட்க‌ள் வீட்டுக்கு வ‌ராது வெளியில்தான் திரிந்திருக்கின்றான். சாப்பாடு, இய‌ற்கை உபாதையெல்லாம் வெளியேதான். அந்த‌ ஆறு நாட்க‌ளில் ஒருநாள் தான் ஒரு பொதுக்க‌ழிப்ப‌றையில் குளித்திருக்கின்றான். ஆடை காயும்வ‌ரை சில‌ ம‌ணித்தியால‌ங்க‌ள் பாத்ரூம் கதவை மூடிப்போட்டு உள்ளே அம‌ர்ந்திருக்கின்றான்.

அப்போது வெளியே மிக‌ உக்கிர‌மான‌ குளிர். Homeless நண்பர்கள்தான் இவ‌னை அந்த‌ ஆறு நாட்க‌ளும் காப்பாற்றியிருக்கின்றார்கள். குளிர் தாங்காத‌போது மிக‌வும் ம‌லிவாய் தாங்கள் வாஙகி வைத்திருந்த‌ க‌ஞ்சாவை ஊத‌த்த‌ந்து குளிரை ம‌ரைக்க‌ச் செய்திருந்தார்க‌ள். இன்னும், த‌ங்க‌ளுக்குக் கிடைத்த‌ க‌ம்ப‌ளிக‌ளை இவ‌னோடு ப‌கிர்ந்திருக்கின்றார்க‌ள். இப்ப‌டிக் க‌ழிந்த‌ ஆறாவ‌து நாளில்தான் இவ‌னோடு உயர்க‌ல்லூரியில் ப‌டித்த‌ தோழியொருத்தி க‌ண்டு, ரோட்டிலிருந்து எழுப்பிக்கொண்டுபோய், த‌ன‌து வீட்டில் வைத்து பிட்டும் மாம்ப‌ழ‌மும் பிசைந்து ஊட்டிவிட்டிருக்கின்றாள். தானாய் இருந்து கையால் எடுத்துச் சாப்பிட‌ முடியாத‌ அள‌வுக்கு மிக‌வும் ப‌ல‌வீன‌மாய் இருந்திருக்கின்றான்.

இவ்வாறு அவ‌ன் த‌ன‌து க‌தையை எனக்குச் சொல்லி முடித்த‌போது, 'இந்த‌க் காத‌லுக்காக‌வா இவ்வ‌ள‌வு சித்திர‌வ‌தைக‌ளை நீ அனுப‌வித்தாய், சும்மா தூசென‌ இதைத் த‌ட்டிப்போயிருக்க‌லாம்' என்று எல்லோரைப் போல‌வே என‌க்கும் சொல்ல‌வே விரும்ப‌மிருந்தாலும் அவ‌ன் குர‌லில் க‌னிந்துகொண்டிருந்த‌ நேச‌ம் என்னை எதையும் பேசாது த‌டுத்துநிறுத்திய‌து. 'அந்த‌ ஆறு நாட்க‌ளில் உன்னை உன‌து பெற்றோர் தேட‌வில்லையா?' என்று ச‌ம்பிர‌தாய‌மான‌ கேள்வியை நான் அவ‌னிட‌ம் கேட்டேன். 'ஓம். அவைய‌ளும் தேடினைவைதான். ஏலேத க‌ட்ட‌த்தில் பொலிஸிட‌மும் முறையிட்டிருக்கின‌ம். நானும் ட‌வுன் ர‌வுக்குள்ளேதான் ஒளித்துக்கொண்ட‌னான். அத்தோடு பொலிஸும் ப‌தின‌ம‌ வ‌ய‌துக‌ள் என்றால் கொஞ்ச‌ம் தேடுவான்க‌ள். ப‌தினெட்டு வ‌ய‌துக்குப் பிற‌கு என்டால் அவ்வ‌ள‌வு அக்க‌றை எடுக்க‌மாட்டான்க‌ள். எனென்டால் இங்கை க‌ன‌ ச‌மய‌ம் வீட்டை உற‌வுக‌ளைவிடடு ஓடிப்போற‌து சாதார‌ண‌மாய் ந‌ட‌க்கிற‌துதானே' என்றான்.

அவ‌னை நான் ச‌ந்தித்த‌து, அவ‌னின் இந்தக் க‌தையைக் கேட்ட‌து எல்லாம் அந்த‌ க‌ல்லூரி வ‌ளாக‌த்தில்தான். நானும் அங்கே ப‌குதிநேர‌மாய் வ‌குப்புக்க‌ள் எடுக்க‌த் தொட‌ங்கியிருந்த‌ கால‌ம் அது. 'இதுவெல்லாம் ந‌ட‌ந்து எவ்வ‌ள‌வு கால‌ம் ஆகின்ற‌து?' என்று கேட்டேன். நான்கு மாத‌ங்க‌ளாகிவிட்ட‌து. இப்போது இஙகே வ‌குப்புக்க‌ள் எடுப்ப‌தில்லை, ஆனால் வ‌ந்து வ‌ந்து போய்க்கொண்டிருப்பேன் எனறான். ஏன்னெறு கேட்ட‌த‌ற்கு அவ‌ளை எங்கேயாவ‌து பார்க்கும் ச‌ந்த‌ர்ப்ப‌ம் வ‌ந்துவிடாதா என்று. பிறகு இந்த‌ நான்கு மாத‌ங்க‌ளில் தானொருநாள் அவ‌ளைச் ச‌ந்தித்த‌தாக‌வும், தான் அவ‌ளோடு க‌தைக்க‌ முற்ப‌ட்ட‌போது, த‌ன்னோடு க‌தைக்க‌வேண்டாமென்று சொல்லி வில‌த்திப் போன‌தாக‌வும் தான் பின் தொட‌ர்ந்தபோது க‌மப‌ஸ் பொலிஸிட‌ம் அவள் முறையிட்டதாக‌வும் சொன்னான்.

அநேக‌மாய் உல‌கிலிருக்கும் எல்லோருமே இவ்வாறான‌ காய‌ங்க‌ளைத்தாண்டித்தான் வ‌ந்திருப்போம். இவ்வாறான‌ கொடுங்கால‌ங்க‌ளைத் தாண்டிப் போய்ப்பார்த்தால் வாழ்க்கை இன்னும் அழ‌காயிருக்கும். ஏன் நீ ந‌ட‌ந்துபோன‌ விட‌ய‌ங்க‌ளை ம‌ற்ந்துவிட்டு முன்னே நகர்கின்ற வாழ்க்கையைப் பார்க்க‌க்கூடாது? என்றேன். நான் சொல்வ‌தை ம‌வுன‌மாய்க் கேட்டுக்கொண்டிருந்த‌வ‌ன் கொஞ்ச‌ நேர‌ அமைதியைக் குலைத்து, 'என்ன‌தான் இருந்தாலும் ஒரு த‌மிழ்ப்பெட்டையை நான் ல‌வ் ப‌ண்ணியிருந்தால் இப்ப‌டியெல்லாம் செய்திருக்க‌மாட்டாள்தானே' என்றான். த‌மிழ்ப்பெட்டை என்றில்லை, ம‌னித‌ ம‌ன‌ங்க‌ளே விசித்திர‌மான‌துதான். க‌ண‌ந்தோறும் மாறிக்கொண்டிருப்ப‌வை. மாறும் ம‌ன‌ங்க‌ளிற்கு ஏன் தாம் மாறினோம் என்று சொல்வ‌த‌ற்கு சில‌வேளைக‌ளில் கார‌ண‌ங்க‌ளே இருப்ப‌தில்லை. நீ இப்ப‌டி அவ‌ளுக்காய் ஏங்கிக்கொண்டிருப்ப‌தில், அவ‌ள் உன்னை நிராக‌ரித்த‌ற்கு ஒரு வ‌லுவான‌ கார‌ண‌த்தைத் தேடிக்கொண்டிருக்கின்றாய். அதுதான் உன்னை இன்னும் க‌ஷ்ட‌ப்ப‌டுத்துகின்ற‌து. உல‌கில் ந‌ட‌க்கும் விச‌ய‌ங்க‌ளுக்கு எல்லாம் கார‌ண்ங்க‌ள் இருக்கா என்ன‌? நீயும் உன‌து காத‌ல் விட‌ய‌த்தை இவ்வாறு எடுத்துவிட்டு ந‌க‌ர‌ முய‌ற்சி செய்யேன் என்று நான் கடைசியாய்ச் சொன்ன‌தாக‌வும் நினைவு.

பிற‌கு சில‌ மாத‌ங்க‌ளில் என‌து ப‌குதி நேர‌ வ‌குப்புக்க‌ள் முடிந்து நான் அக்க‌ல்லூரிக்குப் போவ‌தை நிறுத்த்தியிருந்தேன். அவ‌னைப் ப‌ற்றிய‌ நினைவுக‌ளும் ம‌ற‌க்க‌ப்ப‌ட்டுக்கொண்டிருந்தாலும் அவ‌ன் விழிக‌ளுக்குள் தெரிந்த‌ ஏதோ ஒரு இன‌ம்புரியாத‌ த‌விப்பு ம‌ட்டும் என்னைவிட்டுப் போக‌வில்லை. ஒருநாள் ச‌ப்வேயில் போகும்போது இர‌ட்டைக் கொலை ச‌ம்பவ‌ம் ப‌ற்றிய‌ செய்தி பேப்ப‌ரில் இருந்த‌து. கொல்ல‌ப்ப‌ட்ட‌ இர‌ண்டுபேரில் அவனது ப‌ட‌மும் பிர‌சுரிக்க‌ப்ப‌ட்டிருந்த‌து . மிக‌வும் அவ‌ச‌ர‌ப்ப‌ட்டுவிட்டனோ என்று ம‌ன‌ம் பெரும் மழையின் ஏற்பட்ட மண்சரிவைப்போல அரிக்கத்தொடங்கியது. பின் ஒருநாள் இரட்டைக்கொலைகள் ந‌ட‌ந்த‌க‌தையை அங்கே ப‌டித்துக்கொண்டிருந்த‌ என‌து க‌சின் ஒருவ‌ன் சொல்ல‌க்கேட்டேன்.

2.
கொலை ந‌ட‌ந்த‌ அன்று, இவ‌ன் அவ‌ளையும் அவ‌ள‌து புதிய‌ காத‌ல‌னையும் க‌ண்டிருக்கின்றான். த‌ங்க‌ளைப் பின் தொட‌ர‌வேண்டாம் என்று அவர்கள் கேட்டும் இவ‌ன் பின்தொட‌ர்ந்திருக்கின்றான். அவ‌ர்க‌ளும் தாம் வ‌ழ‌மையாக‌ப் போகும் திசையை மாற்றி க‌ல்லூரிக்குப் பின்னாலிருக்கும் சிறு காடு இருக்கும் ப‌குதியால் சென்றிருக்கின்றன‌ர். இவ‌னுக்குத் த‌ன்னைப் புற‌க்க‌ணித்து அவ‌னோடு க‌தைத்துக்கொண்டு போகும் அவ‌ளைப் பார்க்க‌ வ‌ன்ம‌ம் ம்ன‌திற்குள் வெடித்துப் ப‌ர‌வியிருக்கிற‌து போலும். ஜீன்ஸிற்குள் வைத்திருந்த‌ ம‌ட‌க்கு க‌த்தியால் ச‌ட‌க்கென்று அவ‌ளோடு போன பெடிய‌னின் க‌ழுத்தால் நாலைந்து முறை வெட்டியிருக்கின்றான். த‌டுக்க‌ முய‌ன்ற‌ அவ‌ளுக்கும் க‌ன்ன‌த்தில் வெட்டு விழுந்திருக்கிற‌து. அவ‌ன் உயிர‌ட‌ங்கிப்போகும்வ‌ரை இவ‌ன் அவளது த‌லைம‌யிரைப்பிடித்துக்கொண்டு பார்க்க‌ வைத்திருக்கின்றான். பிற‌கு த‌ன‌து பெற்றோர் இருந்த‌ மாடியின் மேல்மாடிக்குப் போய், இந்த‌ பூமியிற்கு இனி வ‌ர‌க்கூடாது என்ப‌த‌ற்காய் மேலே ப‌ற‌ந்துபோவ‌த‌ற்காய் கீழே குதித்திருக்கின்றான்.

பதினைந்தாம் மாடியிலிருந்து குதித்துக்கொண்டிருக்கும்போது
ஒரு பறவையைப்போல தான் இறுதிக்கணத்தில் மேலெழும்ப முடியுமென நினைத்திருப்பானா
குதிக்கமுன்னர் குத்தப்பட்டிறந்த மற்றவனின் இதயத்திற்கு
பின்னேரம் மழைபெய்யுமென்பது தெரிந்திருக்குமா
பச்சைப்புல்வெளி எத்தனையாவது தற்கொலையைச் சந்திக்கின்றேனென
சூரியன் மறைந்தபொழுதில் கணக்கிட்டபடி தூங்கப்போயிருக்கும்
நான் தான் பல்லிகள் ஊரா மேற்சுவரை
நள்ளிரவில் வெறித்தபடி வளையங்களை உருவாக்கியபடியிருக்கிறேன்
இரண்டு கடல் மூன்று கண்டந்தாண்டி
அவசரமவசரமாய் உன்னையெழுப்பி பதட்டப்படுத்தாதிருந்திருக்கலாம்
என்ன செய்ய அகதியொருத்தனுக்கு பொழுதைத் தாரைவார்த்தவளாயிற்றே
சகித்தபடி புன்னகைக்க நீ கற்றுக்கொள்ளளத்தான் வேண்டும்
ஆமி
ஒருத்தனை நடுப்பகலில் மண்டையில் போட்டதைப்பார்த்தும்
அடுத்தநாள் புன்னகையோடு நானவனைக் கடந்துபோனதுபோல.

.....................................

நாவ‌லின் -ஏற்க‌ன‌வே ப‌திவிலிட்ட‌- ப‌குதிகள்:

-க‌விழ்ந்த‌ வான‌த்தின் மேல் முளைத்த‌ காளான்க‌ள்
-உறைந்த‌ ந‌தியின் மீது ப‌ற‌ந்துகொண்டிருந்த‌ கொள்ளிவால்பிசாசுக‌ளை ஆடு தின்ற‌ ஆதிக்க‌தை