Thursday, March 27, 2008

நாங்களும் தமிழிலை கதைப்பம்!

இன்றைக்கு எங்கடை anniversary என்பதாவது உங்களுக்கு நினைவிருக்கா?
ஆ...அது இண்டைக்கா, கல்யாணமே ஒரு கெட்ட கனவு என்று கலங்கிக்கொண்டிருக்கிறன்...அதற்குள் எப்படி இந்தச் சோகமான நாளையும் நினைவில் வைத்துக்கொள்வது...?
நீர் இப்படிச் சொல்லுவீர் என்டு தெரியுந்தான்...
'சகியே உன்னை நினைக்கையில்
என் மனசு சொதி போலக் கொதிக்கிறது
கறிவேப்பிலையாய் மிதந்த என்னை
புளிமாங்காயாக கரைத்துவிட்டாய்
நானும் நீயும் இனி சொதியில்
பிரிக்க முடியாத பாலும் நீரும்.

என்று நாங்கள் லவ் பண்ணிக்கொண்டிருந்த காலத்தில் கிறுக்குத்தனமாய் எழுதித் தந்ததாவது உமக்கு நினைவிருக்கா?
என்ன செய்ய? எனக்கு திருமணம் எனும் எதிர்கால அசம்பாவிதம் நிகழுமென அப்பவே தெரிந்திருந்தால் இப்படியெல்லாம் எழுதியிருக்கமாட்டேன்... ஆனால் அதை விடக்கொடுமையானது...
என்னப்பா? என்ன கொடுமை... ?
இல்லை, நீர் படித்துக்கொண்டிருக்கிற காலத்தில், கடையில் இடியப்பத்தையும், சொதியையும் வாங்கிச்சாப்பிட்டுவிட்டு, அதை எப்படிச் சாப்பிட்டேன் என்பதை மட்டும் மணித்தியாலக்கணக்கில் போனில் கதைத்துக்கொண்டிருப்பீரே...அதை அனுபவித்தனுக்குத்தான் அந்த வேதனை தெரியும்.
ஏன் நீர் உந்த உளுத்துப்போன அரசியல் இலக்கியச் சண்டைகளை அரசியல்வாதியின் மேடைப்பேச்சுப்போல பேசும்போது நானும் சகித்துக்கொண்டுதானே கேட்டிருக்கிறேன்....ஒரு கொஞ்சநேரம் நான் எப்படி இடியப்பமும் சொதியும் சாப்பிடுகிறனான் என்டு மனோரதியமாய்ச் சொன்னால் மட்டும் உமக்கு கசக்கிறதாக்கும்.
இடியப்பமும் சொதியும் எல்லோரும் சாப்பிடுகிறதுதானே...அதை மணித்தியாலக்கணக்கில் கதைத்து என்னப்பா கிடைக்கப்போகிறது?
ஏன் உங்கடை இலக்கியச் சண்டைகளும் கூட அப்படித்தானே? பிறகேன் என்னோடு அதைப்பற்றி வளவளவென்று பேசுகிறனீர்?
ஆ...மனுசர் உங்களோடு கதைக்க முடியுமே? இப்படியே விட்டால் எதையாவது அலம்பிக்கொண்டிருப்பீர்...இந்தாரும் இந்த ரீயைக் குடித்து சாந்தியடையும்.
என்னப்பா? இண்டைக்கு புது விதமாய் ரீயெல்லாம் ஊற்றி எனக்குத் தருகிறீர்? எஙகே உந்த ரீ போடுகிறதை learn பண்ணினனீர்...
எனக்கு வாற விசருக்கு......அதுவோ நேற்றைக்கு coffee timeக்கு, நான் உம்மை லவ் பண்ணமுன்னம் லவ் பண்ணிக்கொண்டிருந்தேனே அந்த கேர்ள் வந்து சொல்லித்தந்தவா? விளக்கம் போதுமா?
நீர்தானே பதினொரு வயசிலிருந்து வருசத்திற்கொருவர் என்டு எத்தனையோ பேரைக் காதலித்துக்கொண்டிருந்தனீர்...? அதிலை இவா எந்த அவாவோ தெரியாது. விளக்கமாய்ச் சொன்னால்தானே விளங்கும்..
ஏனப்பா கொஞ்ச நேரம் கதைக்காமலிரும் என்டுதானே ரீ ஊற்றித்தந்தனான்....இப்ப என்ன தான் நான் செய்ய?
எதிர்வினை செய்வது எமது மரபு.
ஆ...நாசமாய்ப் போச்சுது... 'என்ரை தங்கச்சி எதையும் எதிர்த்துக்கதைக்கா சொக்கத் தங்கம்' என்டு sentiment கதைத்த உம்மடை அண்ணனை பிடித்து உதைத்தால்தான் என்ரை விசர் தீரும்போலக் கிடக்கு.

******************************************
முன்னர் எழுதியவை)

என்னப்பா உங்கடைபாட்டில முணுமுணுத்துக்கொண்டு என்னத்தை எழுதிக்கொண்டு இருக்கிறியள்?’
ச்சாச்சா…என்ன எழுத்து நடையப்பா இவனுக்கு. இவனைப்போல எழுதோணும் என்று ஆசைப்பட்டு எழுதிப்பார்த்தால் அவனது எழுத்துக்கு பக்கத்தில் கூட எதுவும் வரமாட்டேன் என்கிறது.
இதைத்தானேயப்பா, நீர் கல்யாணங்கட்டினதிலிருந்து சொல்லிக்கொண்டிருக்கின்றீர். உந்த மண்ணாங்கட்டி வேலையை விட்டுவிட்டு, கூகிளிலை இருந்து எடுத்துப்போட்டு உம்மடை ஆக்கம் என்று பத்திரிகைக்கு அனுப்பிவிடும்.
கூகிளிலிருந்தா? எனக்கு அப்படிச்செய்து பழக்கமில்லை.
அதுசரி, முந்தி யூனியில் படிக்கும்போது, நீர் கூகிளிலிருந்து உருவிப்போட்டு கட்டுரைகள் எழுத, நானும் உமக்கு அந்தமாதிரி எழுத்துத் திறமை என்டெல்லோ தவறாக நினைத்து காதலித்தனான்.
சரி, சரி பழையதெல்லாம் இப்ப ஏன் கிண்டுகின்றீர்? நான் பழையதெல்லாம் மறக்க முயன்று என்ரைபாட்டில் ஒரு கட்டுரை எழுதலாம் என்டு பார்க்கிறன்…. என்டாலும் நீர் வர வர எங்கடை அம்மா மாதிரிதான் கதைக்கிறீர்?
‘எப்படியப்பா?’
‘இல்லை அம்மா அடிக்கடி சொல்லுவா….உன்னைப் பெத்ததற்குப் பதிலாய் இரண்டு தென்னம்பிள்ளைகளை வைத்து தண்ணி ஊற்றியிருந்தால் இந்த நேரம் தேங்காயாவது பிடுங்கியிருக்கலாம், நான் ஒரு பன்னாடையை எல்லோ பெத்துவிட்டேன் என்று.’
அப்படியா சொல்லுறவா...? நான் உம்மளை கலியாணங்கட்டப்போகின்றேன் என்றபோது, அந்த மனுசி இதை என்னிடம் சொல்லியிருந்தால் நானும் இந்த நரகத்திலிருந்து தப்பியிருக்கலாமே.’
அவா, இதுவரை தான் பெற்ற கஷ்டம் போதும் என்றுதான் உம்மளிடம் என்னைத் தள்ளிவிடுகின்றேன் என்றவா! சரி அதைவிடும். நான் ஒரு அறிவுஜீவியாக வரவேண்டும் என்று கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கின்றேன். அதற்கு ஏதாவது உதவி செய்யுமன்?
‘அதற்கெல்லாம் நீர் தத்துவங்களைக் கரைத்துக் குடித்திருக்கவேண்டும். அடிக்கடி இச(க்) கிளப்புகளுக்கு போயிருக்கவேண்டும். எனக்குத் தெரிந்து நீர் போனதெல்லாம் யோகா கிளப்புகளுக்கும், கோப்பிக்கடைகளுக்கும் தான். அங்கே போயும், நீர் ஒழுங்காய் உருப்படியான விடயத்தையா செய்தனீர்? அங்கு வாற போற கேர்ல்ஸை சைட் அடித்தது மட்டுந்தானே சின்சியராய்ச் செய்தனீர்.’
‘அவனவன் கதைகள், கவிதைகள் எழுதி உலகம் சுற்றும் PLAYERகளாக குதூகலித்துக் கொண்டிருக்கின்றாங்கள் என்ற பொறாமையிலை நான் வயிறெரிந்து கொண்டிருக்கிறன். நீர் என்னடா என்றால்….
என்னப்பா எங்கையப்பா இப்ப அவசரமாகப் போகின்றீர்?’
‘இல்லை ஏதோ player, கவிஞர் என்று கேட்டிச்சுது. அதுதான் இந்த இடியப்ப உரல் எங்கே இருக்கிறது என்று தேடப் போகின்றேன்.’
‘ஏனப்பா கோபப்படுகின்றீர். கொஞ்ச நாளாய் இடியப்ப உரலுக்கு வேலை தராது நல்ல மனுசனாய்த்தானே இருக்கிறன். எதைச் சொன்னாலும் உடனே இடியப்ப உரலைத் தேடும்...’
‘சரி சரி, உந்த எழுதிறது கிழிக்கிறது என்பதை விட்டு விட்டு சமைக்கிறதுக்கு வந்து ஏதாவது உதவி செய்யும்.’
(மனதுக்குள் முணுமுணுத்துபடி…) முந்தி அம்மாவோட இருக்கைக்க, றூமுக்குள்ள கணணியோடும் ரீவியோடும் பொழுதுபோக்கிக்கொண்டிருக்க, நேரந்தவறாது சாப்பாடு தேத்தண்ணி என்டெல்லாம் வரும்…இப்ப என்னடா என்றால்…
‘என்னப்பா ஏதோ சொல்கிற மாதிரிக்கேட்குது…?’
இல்லை. இன்டைக்கு கத்தரிக்காய் குழம்பு வைக்கிறதோ உருளைக்கிழங்குப் பிரட்டல் செய்கிறதோ என்று யோசித்துப்பார்த்தனான். உம்மளுக்கு என்னப்பா பிடிக்கும்?
‘சரி சரி எனக்கு ஐஸ் வைக்காமல், உம்மடை சொந்தக்காரர்களை எடுத்து உரிக்கத் தொடங்கும்.’
‘என்னதையப்பா..?’
‘என்னதையோ? ஏதோ தெரியாத மாதிரிக் கேட்கிறீர்…..வெங்காயம்…. வெங்காயத்தை உரியும்.
******************************************

என்னப்பா எழும்புங்கோவன்…..எத்தனை முறை வந்து எழுப்பிறது…எருமைமாடு மாதிரி படுத்திருக்கிறியள்
கொஞ்சநேரம் விடுமனப்பா…இப்பத்தான் அஸினைப் பற்றி ஒரு கனவு வந்தது…எப்ப பார்த்தாலும் சிவபூசையில் புகுந்த கரடிமாதிரி வந்து கனவைக் குழப்பும்.
என்ன அஸினைப் பற்றிக் கனவோ….அவாதானே உம்மடை தொல்லை தாங்காது கலியாணங்கட்டி இரண்டு குழந்தையும் பெற்று சந்தோசமாய் வாழ்கிறா…உமக்கு ஒருத்தர் நல்லாயிருக்கிறது பிடிக்காதே!
எனக்கு இப்பவும் ஏழு வருசத்துக்கு முன் படங்களில் நடித்துக்கொண்டிருந்த அஸின்தான் இன்னும் கண்ணுக்குள் நிற்கிறா.
அதுசரி எப்பவும் உமக்கு மன்மதக்குஞ்சென்று நினைப்பு.
சரி சரி புறுபுறுக்காதையும்….நீரும் என்னை லவ் பண்ணேக்கில சூர்யாவைப் பார்த்து பார்த்து உருகித்தானே என்னையும் ஜிம்முக்குப் போ போ என்று துரத்தினனீர்...
அது சரி…ஜிம்முக்கு போனால் pacs வருமென்றால்… உமக்கு கண்டகிண்ட தலையிடி, இழுப்பு, இரத்தஅழுத்தம் எல்லோ வந்தது…
நான் என்னப்பா செய்ய… அங்கேயும் ஸல்சா, சாச்சா என்று அங்குமிங்குமாய் பொம்பிளையப் பிள்ளைகள் ஒடித் திரிந்துகொண்டிருக்க, அவையளைப் பார்த்த பிரமிப்பில் ஒரேயடியாய் வெயிட்ஸை கூட எல்லோ தூக்கிவிடுகிறனான்…கடைசியில் எல்லா வருத்தமும் எனக்கு வந்துவிட்டது.
நான் தான் பிழை விட்டு விட்டேன்….மனுசர்தானே ஜிம்முக்கு போறது… உம்மையெல்லாம் அங்கே அனுப்பின என்ரை புத்தியைச் செருப்பாலை அடிக்கோணும்.
******************************************

இஞ்சையப்பா, இன்டைக்கு காலமை அம்மா கோயிலுக்குப் போகப்போறன் என்டவா அவாவை ஒருக்கா கொண்டுபோய் காரில் இறக்கிவிடுகிறிரே…
உம்மடை கொம்மாவையோ…எனக்கு வேற வேலை இல்லையோ…நீர்தானே சோத்து மாடு மாதிரிக் கிடக்கிறீர்… உந்த வேலைகளையாவது செய்யும்.. அத்தோடு அந்த மனுசியின்ரை கடியும் தாங்கேலாது.
ஏனப்பா என்ன நடநது?
இல்லை…அன்டைக்கு தலைமயிரை சரியாய் முடியாமல் அவாவை கோயிலிலை இறக்கிவிடப்போனால், அவா சொல்கிறா….நான் அம்மன் கோயிலுக்குப் போறன்…இஞ்சை காரை ஓட்டிக்கொண்டு என்ரை அம்மாளாச்சியே காட்சியளிக்கிறா போலக் கிடக்கிறது என்டா…
ஹ..ஹ…ஹ
நான் அவாவுக்குச் சொன்னன்….அப்ப ஏன் நீங்கள் கோயிலுக்குப்போகிறியள்? உங்கடை மகனை காளியின்ரை காலுக்குள் நசுங்கி கிடக்கிற அசுரன் மாதிரித்தானே வைத்திருக்கிறன்…மற்றக்கால் சும்மாதான் கிடக்கிறது…வேண்டுமென்றால் அங்கை ஒரு இடந்தரட்டோ என்றேன்… அதற்குப்பிறகு மனுசி வாய் திறக்கிறதில்லை பாத்தியளோ.
ஏன் உம்மடை கொம்மா மட்டும் என்ன திறமோ…நான் உம்மடை வீட்டுக்கு வந்த முதல்நாளே…நான் மருமகனுக்கு அந்தமாதிரி ரீ போட்டுத்தாறேன் என்டு சொல்லிப்போட்டு சீனிக்குப் பதிலாய் உப்பைப் போட்டுக் கொண்டுவந்து தந்துவிட்டு 'மருமகனே தேத்தண்ணி எப்படி இருக்கு?' என்டு நக்கலாய்க் கேட்டதை மறக்கமுடியுமா என்ன?
எங்கடை அம்மாவுக்கு முதல் நாளிலேயே உமது வண்டவாளம் எல்லாம் தெரிந்துவிட்டது போல..
அதாவது பரவாயில்லை….மருமகனுக்கு மத்தியானச் சாப்பாட்டுக்கு கோழி அடித்துக்கொடுக்கப்போறேன் என்று சொல்லிவிட்டு மனுசி என்னைத்தானே அந்தச் சேவலை துரத்திப் பிடித்து தா என்று கேட்டது….நான் அண்டைக்கு முழுதும் அந்தச் சேவலோடுதானே ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனான்….
முந்தின காலத்திலே காளையை அடக்கினால்தான் பெடியங்களுக்கு தங்கடை பொம்பிளைப்பிள்ளையளை கலியாணஞ்கட்டிக்கொடுப்பினமாம்…உமக்குச் சேவலாவது பிடிக்கத் தெரிகிறதா என்று அம்மா போட்டி வைத்துப் பார்த்திருக்கிறா.
எனக்கு அண்டைக்கு வந்த ஆத்திரத்தில் வளவுக்கிலை கிடந்த உலக்கையாலே ஒரு போடு போட்டால் என்ன என்ற மாதிரி இருந்தது
என்ன சேவலுக்கா…?
இல்லை உம்மடை கொம்மாவின்ரை மண்டையிலை.
******************************************

ஏனப்பா உமக்கு ஞாபகமிருக்கா…நாங்கள் லவ் பண்ணிக்கொண்டிருந்த காலத்தில் நான் எழுதித்தந்த கவிதை ஒன்று….
கவிதையோ…உம்மடை கவிதைகளை வாசிக்கத்தொடங்கினாப்பிறகுதான் அதுவரை கவிதைகளை நேசித்துக்கொண்டிருந்த எனக்கு கவிதைகள் மீது வெறுப்பே வந்தது…கண்டறியாத உம்மடை கவிதை…
நீர் முந்தி பெரிய வளையம் ஒன்டை உம்மடை காதில் போட்டியிருப்பீரே…அதுவின்ரை அழகைப்பார்த்துத்தானே எனக்கு முதலில் லவ்வே வந்தது.
உந்த அற்புதமான காரணத்தை வெளியிலை ஒருத்தருக்கும் சொல்லிப்போடாதையும்…கேட்கிற சனங்கள் கொதிப்பில் தங்களைத்தாங்களே செருப்பாலை அடிக்கத் தொடங்கப்போகுதுகள்.
ஆ…ஞாபகத்துக்கு வந்துவிட்டது கவிதை..
உன் காது வளையத்தில்
ஊஞ்சல் ஆடி
செவியினுள் நுழைந்து
மூளையில் புதைந்து
தலையில் மலர்ந்த்
காதல் பேன்
நான்.
எனக்கு உந்த புல்லரிக்க வைக்கின்ற கவிதை நினைவிலை இல்லை….ஆனால் உதை வாசித்த என்ரை தோழி சொன்ன ஒன்றுதான் இப்பவும் நினைவிலிருக்கிறது…
என்ன சொன்னவா அவா?
அந்தாளிட்டை சொல்லு…காதிலை எதுவும் நுழைந்தால் காதல் வராது…காதுக் குத்துதான் வரும்…எதுக்கும் ஒருக்காய் பைத்தியக்கார டொக்கரைப் பார்க்கச் சொல் என்டு…
அவா தனக்கொருத்தரும் காதற்கவிதை எழுதித்தரவில்லையென்ற பொறாமையிலை அப்படிச் சொல்லியிருக்கிறா...
அது மட்டுமில்லை…இந்தக் கவிதை எழுதிற.. , குடுகிறவன்கள் எல்லாம் சரியான கள்ளங்கள் அவங்களை மட்டும் நம்பிவிடாதே என்டும் சொன்னவா…ம்..ம்.. அப்பவே அவளின்டை அட்வைஸைக் கேட்டிருந்தால் நான் இப்படி படுகுழிக்குள் விழாது இருந்திருப்பேன்..
உமக்கு எப்பவும் என்ரை கவிதைபற்றி நக்கல்தான்…எனக்கு எத்தனை விசிறிமார் இருந்தினம் என்டு உமக்குத் தெரியுமோ?
விசிறிகளோ….கவனமாய் வைத்திருங்கோ…வருகிற கோடைகாலத்தில் விசுக்க உதவும்…
உம்மளை கலியாணங்கட்டின நேரத்தில் கூட, எனக்கு ஒரு இரசிகை கடிதம் எழுதிக் கேட்டிருந்தவா…நீங்கள் கவிதை எழுதாத நேரங்களில் என்ன செய்யிறனியள் என்டு..
நீர் என்னத்தைச் சொன்னனீர்..?
கவிதை எழுதாத நேரத்தில் என்ரை மனுசிக்கு வெங்காயம் உரித்துக் கொடுக்கிறனான் என்டு உண்மையைத்தான் சொன்னனான்.
அது சரி…
அந்த இரசிகை எனக்கொரு கடிதம் திருப்பி எழுதியிருந்தா…
'கவிதை எழுதும் இந்தக் கரங்கள்
நீல வானில் நட்சத்திரங்களுக்கும்
கதை சொல்லும் என்று கனா வளர்த்திருந்தேன்!
வேதனை வேதனை
தமிழுக்கு வந்த சோதனை சோதனை!
வெங்காயம் உரிப்பதா கவிஞனின் கைகள்?
எடுத்து வருகிறேன் கத்தியை
எங்கே அந்த இராட்சசி?
வெட்டி நாலாய்
ஊறப்போடுகின்றேன்
ஊறுகாய்! '

அவா இங்கை வந்திருந்தால் இரண்டு கொலைகள் விழுந்திருக்கும்…
ஏனப்பா அவா ஒராள்தானே வருவா?
முதலில் உம்மைப் போட்டுத்தள்ளிவிட்டுத்தானே…அவாவை ஊறுகாய் ஆக்கியிருப்பேன்.
*****************************************

Monday, March 17, 2008

மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்

-சற்று தள்ளியிரும் பிள்ளாய்-

சரவணன் எழுதிய, நாலே வரியில் பின்நவீனத்துவத்துக்கு மிக எளிய அறிமுகம்! என்ற பதிவில்...
/முன்னர் ஒருமுறை டீ சே தமிழனும் பின்னவீனத்தைத்தான் புரிந்துகொண்ட விதம் என்று ஒரு பதிவை இவ்வாறு எழுதமுயன்று தோல்விகண்டிருந்தார்./
போகின்றபோக்கில் மு.மயூரன் எனது பெயரையும் இழுத்திருப்பதால் தன்னிலை சார்ந்து சில குறிப்புகளையாவது குறிக்கவேண்டியிருக்கிறது.
....
(1) முதலில், 'என்னுடைய பின் நவீனத்துவப் புரிதல்கள்' என்ற கட்டுரையில் எனது போதாமைகளைத் தெளிவாகக் குறிப்பிட்டே அதை எழுதியிருந்தேன். பின் நவீனத்துவத்தை வரையறுத்தோ அல்லது இதுதான் பின் நவீனத்துவமென அதட்டிய குரலிலோ எதுவுமே அங்கே எழுதப்படவில்லை.

(2) இரண்டாவது பின் நவீனத்துவ(ம்) காலம் வெற்றி X தோல்வியென்பதையே நிராகரிக்கின்றது. எதிரெதிரான துவித முனைகளில் எதையும் வைத்து உரையாடுவதை பின் நவீனத்துவம் ஏற்றுக்கொள்வதில்லை. இன்னும் எளிமையாகச் சொல்லப்போனால் வெற்றி தோல்வியற்ற ஒரு சுவாரசியமான ஆட்டத்தை ஆடச்செய்வதற்கான ஒரு முன் நிபந்தனையாக பின் - நவீனத்துவம் இருக்கின்றது.

(3) எழுதப்பட்ட எனது கட்டுரையை -என்னைப் போன்ற ஆரம்ப வாசிப்பில்லாத - வேறு சில நண்பர்களும் வாசித்திருக்கின்றார்கள். முக்கியமாய் பின் -நவீனத்துவம் குறித்த நிறைந்த வாசிப்பும் மற்றும் விரிவாக எழுதவும் செய்கின்ற வளர்மதி போன்றவர்கள் வாசித்திருக்கின்றார்கள். எனது அந்தக் கட்டுரை ஒரு எளிய புரிதல் என்றளவில் அவர்கள் அதை ஏற்கவும் செய்திருக்கின்றார்கள் (கட்டுரையில் பிழையாக விளங்கிக்கொள்ளப்பட்டிருக்கின்றதென்று ரோலன் பார்த்தின் pleasure of the text, மற்றும் தெரிதாவின் deconstruction பற்றிக் குறிப்பிட்டு வளர்மதி அதன் தொடர்ச்சியாக கட்டுரையொன்றை பதிவுசெய்திருக்கின்றார்). அதன் பிறகு ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பார்த்தின் முழுநூலையும், தெரிதாவின் deconstruction பற்றி எழுதப்பட்ட சில நூல்களையும் வாசித்து எனது புரிதல்களைச் செம்மைப்படுத்தியிருக்கின்றேன்.

(4) 'பூர்த்தியாவும் மார்க்சிசமும்' நூலில் எஸ்விஆர், பூர்தியாவை முன்வைத்து சில விடயங்களைக் கூறுவார். இன்றைய காலத்தில் நம் எல்லோருக்கும் எந்த விடயம் என்றாலும் ஆழமின்றி ஓடிவந்து 'கருத்து' என்று சொல்வதற்கு தொலைக்காட்சிகள் பழக்கிவிட்டன. சுடச்சுடக் கருத்துச் சொல்வது என்பது நம்மைத் தொடர்ந்து ஆழமாய் அறியவும் வாசிக்கவும் தடை செய்கின்றன என்று அந்நூலில் விரிவாக எழுதப்பட்டிருக்கும்.. உரியவர்கள் தொப்பியை எடுத்து மாட்டிக்கொள்ளலாம்/கொள்ளுவோம்.

(5) நானறிந்தவரை எனது பதிவில் அற்புதன் மட்டுமே தொடர்ச்சியான உரையாடலைச் செய்திருந்தார். நான் வாசித்தவற்றை/விளங்கிக் கொண்டவற்றைக்கொண்டு என்னாலியன்றளவு அற்புதனோடு உரையாடியிருக்கின்றேன். ஒன்றேயே திருப்பத் திருப்ப உரையாடுகின்றோம் என்ற அலுப்பில் அந்த உரையாடலிருந்து ஒருகட்டத்தின்பின் விலகியிருந்தேன். மற்றக் காரணம், எனக்கு தெளிவில்லாத சில விடயங்களுக்கு தெரியாது என்று சொல்வதே நேர்மையாக இருக்குமென்று அற்புதனிற்கு சொல்லியுமிருக்கின்றேன். அற்புதனோ அல்லது நானோ 'வெற்றி' X 'தோல்வி' கண்டுவிட்டோமென எவரும் பிரகடனப்படுத்தவும் இல்லை. அந்த ஆட்டம் ஒரு முடிவிறாத ஆட்டம். அவ்வளவே. எங்கேனும் ஒரு புள்ளியில் நாங்கள் மீண்டும் அந்த ஆட்டத்தை ஆடுவோம். எனெனில் இருவருமே உரையாடுவதற்கான வெளியையும் மேலும் அறிந்துகொள்வதற்கான ஆர்வத்தையும் கொண்டிருக்கின்றோமென நினைக்கிறேன்.

அங்கே எந்த உரையாடலையும் செய்யாத மு.மயூரன் இங்கே ஓடிவந்து எனது பதிவை இழுப்பதன் அரசியல் எதுவுமறியாத ஞானசூனயமாயினேன். ஆகக்குறைந்தது எந்த விடயங்களில் எனது பதிவு 'தோல்வியை'த் தழுவியதென்றாவது கூறி நிராகரிக்கும் குறைந்தபட்ச நேர்மையாவது ஒருவருக்கு அவசியமென்று நம்புகின்றேன்.

(6) ஏற்கனவே வெற்றி X தோல்வி என்ற துவித நிலைகளை நிராகரித்திருக்கின்றேன். நமது பெரியண்ணான் ஜோர்ஜ் டபிள்யு புஷ் கூட ஒன்று எங்களோடு இருங்கள் அல்லது ஒசாமாவோடு இருக்கின்றீர்கள்' என்றுதான் அடிக்கடி கூறுகின்றார் என்பதையும் கவனத்திற்கொள்ளவும். என்றபோதும் இன்னமும் பின் நவீனத்துவம் 'எல்லாவற்றையும் அழிக்க வந்ததாய்' அடிக்கடி கவலைப்படும் மு.மயூரனிற்காய் அந்தப் பதிவு 'தோல்வி' கண்டிருப்பதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கின்றேன். எனெனில் வெற்றி கண்டிருந்தால் அதற்கு மேலே அறியத்தேவையில்லை என்ற உணர்வு வ்ந்துவிடும். ஆனால் தோல்வி மீண்டும் மீண்டும் அறியவும் வாசிக்கவும் புரிந்துகொள்கின்ற வெளியைத் தருவதால் வெற்றியை விட 'தோல்வியே' எனக்கு உவப்பானதென மு.மயூரனுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.

(8) இறுதியில் மு.மயூரன் நிவேதாவின் பதிவொன்றில் இப்படியெழுதியிருக்கின்றார்.

/இணையத்தில் இப்போது அந்த"லேபிள்" உடன் இருப்பவர்களுள் நான் அதிகம் உடன்படக்கூடியதாயிருப்பது ஜமாலனுடன் மாத்திரம்தானே? :-)/

நானறிந்தவரை- நண்பர் ஜமாலன் தன்னை ஒரு மார்க்சியராகவே அடையாளங்காட்ட விரும்புகின்றவர் என வெளிப்படையாக -தனது பதிவிலோ அல்லது பின்னூட்டத்திலோ- அறிவித்துக்கொண்டவரென நினைக்கின்றேன். அவரையும் அந்த 'லேபிளுக்குள்' அடைக்க முன்னர், மு,.மயூரன் சற்று ஒவ்வொருவரின் பதிவுகளையும் அவர்கள் என்ன சொல்லியிருக்கின்றார்கள் என்பதை வாசித்தல் நலம். ஓடிவந்து சுடச்சுட கருத்து கந்தசாமிகளாய் மாறுவதைத் தவிர்த்தால் எல்லோருக்கும் நன்மை பயக்கும். அல்லது நான் (4)ல் குறிப்பிட்டதை மு.மயூரனைத் திருப்ப வாசிக்க தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

(7) இந்த 'லேபிளில்' ஒன்றுமில்லை ஒன்றுமில்லையெனச் சொல்பவர்களுக்குத்தான் அந்த 'லேபிள்' பற்றி எது எழுதினாலும்/பேசினாலும் மிகவும் பதட்டமடையச் செய்கின்றது. அது ஏன் என்று யோசித்தால் இந்த லேபிளை ஏற்காதவர்கள் கூட மறைமுகமாய் அதன் இருப்பை அங்கீகரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்கள் என்ற அரசியல் புரியும். தமிழ்ச்சூழலில் கிட்டத்தட்ட இரண்டு தசாப்த காலத்துக்கு மேலாய் இதற்குள் ஒன்றுமில்லை ஒன்றுமில்லை என்ற எத்தனையோ பனமைக் குரல்களைக் கேட்டும் இன்றும் அந்த 'லேபிள்' பேசப்பட்டுக்கொண்டிருக்கின்றதென்றால் அங்கே ஒன்றுமில்லாமல் சும்மா பேய்க்காட்டிக்கொண்டிருக்கமுடியாது என்ற எளிய புரிதலாவது நமக்கு வரும். அந்த 'லேபிள்' நாளை விரைவில் அழிந்துபோனாலும் அதற்குச் சார்பாய் பேசுபவர்கள் எவரும் ஒப்பாரி வைக்கப்போவதில்லை. அந்த லேபிள் தனக்கான சிதைவை தன்னகத்தே கொண்டிருக்கின்றது என்பபதை அறிந்தே அனைவரும் பேசிக்கொண்டிருக்கின்றார்கள் (எதை நாம் அதிகம் நம்புகின்றோமோ. நாம் அதற்கு அடிமைகளாய் விடுகின்றோம் அல்லது அதை வைத்து அதிகாரஞ்செய்பவர்களாய் மாறிவிடுகின்றோம்).

---இதை சரவணனின் பதிவில் பின்னூட்டமாய் எழுதத்தொடங்கி சற்று அதிக தன்னிலை விளக்கமாயிருப்பதால் -புதிதாய் வலைப்பதிய வந்திருக்கும் சரவணனைப் பயமுறுத்தாதிருக்கும் பொருட்டு- தனிப்பதிவாய் இடுகின்றேன். நன்றி.---

Saturday, March 08, 2008

அம்மாவிற்கு...

Boys II Men



(அம்மாவின் பிறந்தநாளுக்கு...Mar,08)

Tuesday, March 04, 2008

குறும்படங்களில் புலம்பெயர்ந்தோர் வாழ்வு

-நிழல் ப.திருநாவுக்கரசு

புலம்பெயர்வு என்பது பல காரணங்களுக்காக நடந்ததை மனித இன வரலாறு முழுவதிலும் காணலாம். அவற்றில் இரண்டு காரணிகளுக்காகவே பெருமளவு புலப்பெயர்வு நடந்துள்ளது.
1.உணவு தேடல்,
2.வெற்றி கொண்ட இனம், தோல்வி அடைந்தவர்களை விரட்டியதால் ஏற்பட்டது.
மனித இனம் தொடக்க காலத்தில் உணவுத் தேடலுக்காகப் பல இடங்களில் அலைந்து தமக்கான இடத்தினைத் தேர்வு செய்து நிலையாகத் தங்கிவிட்ட பின்னர், போர்களினால்தான் பெருமளவு புலம்பெயர்ந்துள்ளனர்.

வணிக நிமித்தம் சோழர்காலத்தில் சென்ற வணிகக்கூட்டம் மலேஷியாவில் தங்கி இன்று மலாக்கா செட்டிகள் என்ற தமிழ் மொழி அறியாத ஒரு பிரிவினராக வாழ்ந்து வருகின்றனர். இவர்களைப் போலவே, 19ம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் ஆங்கில, பிரஞ்சு இந்தியக் கம்பெனிகளால், அவர்களது காலனிகளுக்குத் தேவையான கூலிகளாக தமிழ்நாட்டுத் தமிழர்கள், இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர், பிஜி, மொரிஷியஸ், மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா, ரியூனியன், செசெல்ஸ், பர்மா, மாட்டினித் தீவுகள், ட்ரினிடாட்-டுபாக்கோ, பிரஞ்சு கயானா முதலிய நாடுகளுக்கு கொண்டு செல்ப்பட்டு, மொழி, இனம் இழந்து இன்றும் வாழ்ந்து வருவதைப் பார்க்கலாம்.

மேலே கண்டவைகளிலிருந்து வித்யாசப்பட்டது, ஈழத்தமிழர்களின் புலம்பெயர்வு. அரசியலில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுகளினால் ஒதுக்கப்பட்டு, இன அழிப்புக்கு அஞ்சி, புகலிடம் தேடி இன்று மேலை நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.

ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வினை ( Diaspora) யூதர்களின் புலப்பெயர்வோடு ஒப்பிடுவார் எஸ்.பொ. கி.மு 538-இல் யூதர்கள் யூதரல்லாதோரால், யூதர்களின் சொந்த மண்ணில் இருந்து விரட்டியடிக்கப்பட்டனர். இதேபோன்று, 1983க்குப் பின்னர் தமிழர்களுக்கும் இந்தக்கதி ஏற்பட்டது. புகலிடத்தில் புலம் பெயர்ந்தோர் படைத்தவைகளே புலம்பெயர்ந்தோர் படைப்புகளாயின.

ஐவகை நிலங்களையே அறிந்திருந்த தமிழர், புகலிடம் சென்ற பின்னர் ஆறாம் திணையாக பனிப்பாலையைக் கண்டனர். அதற்குரிய கருப்பொருட்கள், உரிப்பொருட்கள் அவர்களது படைப்பில் இடம்பெறலாயின. புதிய நிலம், மனிதர்கள், மொழி, உணவு, உடை, பண்பாடுகளை இன்றைய புலம்பெயர்ந்தோர் படைப்பிலே காணக்கூடியதாக உள்ளது.

தங்கள் சொந்த நாட்டில் வாழ்ந்தபோது கிடைக்காத ஜனநாயகம், புகலிடத்தில் கிடைத்ததால், கதை, கவிதை, நாவல், போன்ற இலக்கியப் படைப்புகள் வெளிவந்தன. இவற்றில் மற்ற ஊடகங்களில் வெளிப்படுத்த முடியாத பல உணர்வுகளைக் கவிதையில் சொல்ல முடிந்ததால், இத்துறையில் பெருமளவு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது என்றுதான் சொல்லவேண்டும்.

புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் தங்களின் சொந்த விருப்பத்தின் அடிப்படையிலேயே குறும்படம் எடுக்கத் தொடங்கியுள்ளனர். பலரும் தொழில்முறை சாராதவர்களே ஆவர். தொழில் தொழில்நுட்பத்தில் முன்னேறிய நாடுகளில் வாழ்ந்தாலும், கேமரா போன்ற கருவிகளை வாடகைக்கு எடுத்தே தயாரிப்பு வேலையில் ஈடுபடுகின்றனர். வாடகைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் படம் எடுப்பதற்கான நேரத்தை சுருக்கவேண்டிய தேவை இருப்பதாகவும், இதனால் படத்தில் தரம் பாதிக்கப்படுவதாகவும் பலரும் தெரிவித்தனர். பொதுமக்கள் பலரும் பெரிய திரையில் நாட்டம் மிகுந்தவர்களாக இருப்பதால், குறும்படப் படைப்புகளுக்கு மதிப்பு குறைவாகவே காணப்படுவதாகத் தெரிவிக்கின்றனர். பொருளாதாரரீதியாக எதையும் எதிர்பார்க்காததால் தாங்கள் உணர்ந்தவைகள், பார்த்தவைகளை மட்டுமே படமாக்குகின்றனர். தங்கள் நாடுகளில் விலக்கப்பட்டவைகள் / ஒதுக்கப்பட்ட பல பிரச்சனைகளையும் குறும்படங்கள் பேசுகின்றன. பெருமளவான குறும்படங்கள் சுவிஸ், கனடா பிரான்ஸ் முதலிய நாடுகளிலேயே தயாரிக்கப்பட்டுள்ளன.

சுவிட்ஸர்லாந்து நாட்டில் வாழும் அஜீவன் ஊடகக் கல்வியைப் பெற்றவர். பலருக்கும் பயிற்சி அளித்துக் கொண்டிருப்பவர். அவர் எச்சில் போர்வை, கவிக்குயில், யாத்திரை போன்ற படங்களைத் தந்திருக்கிறார். கவிக்குயில் படத்தில் மூன்று பெண்கள் Even in my home; I See என்ற பாடலைப் பாடித்திரிகின்றனர். அப்போது லாரியில் இருந்து வீசியெறியப்பட்ட சி.டியில் இருந்து 'ஊரு சனம் தூங்கிடுச்சி, /ஊதக்காத்தும் அடிச்சிடுச்சி, /
பாவி மனம் தூங்கலையே...' என்ற பாடலை மீண்டும் மீண்டும் முணுமுணுக்கிறாள் ஒரு இளம்பெண். இழந்துபோய்விட்ட ஊர் ஞாபகம் வருகிறது. பிறகு இப்பாடலைப் பழகி பலர் முன்னிலையில் பாடுவதுடன் படம் முடிகிறது. ஊர் பற்றிய மன ஏக்கத்தை (நாஸ்டால்ஜியா) இக்குறும்படம் சித்தரித்தது.

எச்சில்போர்வையின் கதை, சராசரியாக புலம்பெயர்ந்தவர்கள் எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கும் அனுபவத்தையொட்டி அமைக்கப்பட்டிருந்தது. ஒரே பாத்திரம் கடிதம், பின்னணிக்குரல் இவற்றினூடாக படத்தின் தளம் விரிகிறது. வெளிநாடு வந்து ஆறுமாதம் கழித்து கடிதம்போட்ட அண்ணனுக்குத் தங்கை எழுதிய கடிதம். இவனோ இங்கு வேலையற்று, தஞ்சம் மறுக்கப்பட்ட நிலை. புகலிட நாட்டிற்கு வந்த பணத்தைக் கொடுக்காததால் ஏஜெண்டின் மிரட்டல், இவற்றிற்கிடையில் தங்கையின் எதிர்பார்ப்புகளை எவ்வாறு நிறைவேற்றுவது என்கிற குழம்பிய மனநிலையை லூயிஸ் என்ற நடிகர் அற்புதமாக வெளிப்படுத்தி இருந்தார்.

நிழல் யுத்தம் படம் புலம்பெயர்ந்து வரும் பெண்ணின் மனவுணர்வுகளைப் பிரதிபலிக்கிறது. வெளிநாட்டுக் கணவனுடன் சுதந்திரமாக வாழலாம் என்கிற சந்தோஷத்துடன் வரும் மணமகளுக்குத் திருமண வாழ்க்கையே சிறையாகிப் போகிறது. அம்மாவோடு தொலைபேசியில் பேச முடியவில்லை; கணவனுடன் இன்பமாக இருக்க முடியவில்லை; இச்சூழலில் இவர்களுக்குள் நிழல் யுத்தம் தொடங்குகிறது. இச்சிக்கலை எவ்வாறு தீர்ப்பது என்கிற கேள்வியை புலம்பெயர்ந்து வந்துள்ள குடும்பங்களிடம் முன் வைத்துள்ளனர்.

யாத்திரை படம் பாதி குறும்படமாகவும், மீதி ஆவணப்படப் பாணியிலும் செல்கிறது. தற்கொலை செய்துகொள்ளும் இளைஞனின் மனவுணர்வுகளைச் சொன்னது. அதற்கான காரணம் நாட்டிலும், புலம்பெயர்ந்த இடத்திலும் அவர் எதிர்கொள்ளும் பிரச்சினையை மாறி, மாறி காண்பிக்கப்பட்டு படம் கொண்டு செல்லப்படுகிறது.

ஜெயாகரனின் நல்லதோர் வீணை செய்து படத்தின் கதை, சியாமளா என்ற பெண், தாயாரின் வற்புறுத்தலால் வெளிநாட்டிற்கு வருகிறாள். அவளைத் திரமணம் செய்துகொள்ளப்போகும் பிரகாஷுடன் தங்குகிறாள். ஒருநாள், தான் சிங்கள ராணுவத்தால் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்ட நிலையை விவரிக்கிறாள். பிரகாஷ் தன் நண்பனுடன் பேசிவிட்டு, பரவாயில்லை, உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்கிறான். சியாமளா இதை மறுத்து, தான் மீண்டும் நாட்டிற்குச் சென்று போராடப்போவதாகச் சொல்கிறாள். இனியும் கோணேஸ்வரிகளும், கிருசாந்திகளும் தோன்றக் கூடாது என்கிறாள். இவள் எந்த முடிவு எடுத்தால் உங்களுக்கு சம்மதம் என்ற கேள்வியுடன் படம் முடிகிறது.

முடிவல்ல படம் சிறு சம்பவத்தை அடியொற்றியது. சங்கர், சிவா என்ற இரு இளைஞர்கள் ஐரோப்பிய நாடொன்றிற்கு ஏஜண்டால் அழைத்து வரப்படுகிறார்கள். அவர்களுடன் சுமதி என்ற பெண்ணும் இணைந்து கொள்கிறாள். சுமதி தன் எதிர்கால கணவனுடன் சென்று விடுகிறாள். மற்ற இருவரும் போலீசாரால் கைது செய்யப்படுகின்றனர் என்பதோடு படம் முடிகிறது.

பால்ராஜா இயக்கியுள்ள மீண்டும் வருவோம் படம், தாய்நாட்டுக்கு வந்த இரண்டு பெண் குழந்தைகளும், அவர்களின் பாட்டிக்குமான உரையாடலால் படம் நகர்த்தப்படுகிறது. இப்படம் மேலை நாட்டில் வாழ்பவர்களுக்கும் நாட்டில் இருப்பவர்களுக்குமான தொடர்பை விளக்குகிறது.
சுவிஸ் பாலகிருஷ்ணனின் தாப்பு சீரழிவும் இளைஞர்களின் அரசியல்துரோகம் பற்றிப் பேசுகிறது. சுதந்தனின் எச்சரிக்கை படம் எயிட்ஸ் நோயாளியான இளைஞனைப் பற்றியது. சுதன் ராஜாவின் அலைகள் படத்தில், வெளிநாடு சென்ற இளைஞன் கனவொன்று காணுகிறான். அதில் கொலைக்கரம் ஒன்று தன்னைத் துரத்துவதுபோல் உணர்கிறான். இப்படத்தில கதைக்கேற்ப கேமராவும் அலைகிறது.

அகதி நிலையை மறந்து மேற்கத்திய வாழ்வில் கரைந்துபோன இளைஞனைப்பற்றிய படம் ரூபன் இயக்கிய தாகம். இங்கிலாந்தில் எடுக்கப்பட்ட படமான நிறப்பிரிகை மதத்தின் பெயரால் இரு சிறுமிகள் பிரிக்கப்படுவதைக் காட்டிய படம். கலைச்செல்வனின் பனிப்பூக்கள் எம்.கே.டி. பாலகுமாரனின் படிவுகள் முதலிய படங்கள், புலம்பெயர்ந்த தமிழர்கள், தங்களின் பழைய பாணியிலான பிள்ளை வளர்ப்பை எதிர்க்கும் படங்களாகும். உயிரே உன்னை அழைத்தேன் இங்கிலாந்துக்குப் புலம் பெயர்ந்த இளைஞனொருவடினின் காதலையும், தற்கொலையையும் சொல்லும் படம்.

வசந்த காலப்பூக்கள் புலம் பெயர்ந்து வந்த இளைஞனொருவனின் மனம் பேதலித்த நிலையை விளக்கியது. ‘Escape from Geneside இனப்படுகொலையிலிருந்து தப்பி ஐரோப்பாவுக்கு வந்து, நிறவாதக் குடியேற்றக் கொள்கைகளால் படும் அவதிகளை விளக்கும் இந்த ஆவணப் படத்தை இயக்கியவர் ராஜேஸ்வரி பால சுப்ரமணியம். ‘The ball’ நார்வேயில் வாழும் ஒரு குழந்தைக்கும், பந்துக்குமான ஒப்புமைகளைப் பேசியது.

சிங்கப்பூருக்குக் கூலியாக வரும் தமிழக இளம்பெண்ணின் துயரம் சந்தோஷமான வாழ்வை, மூர்த்தி இயக்கிய கூலி படம் விளக்கியது. நிறைய சம்பளம் தருவதாக ஆசைகாட்டி சிங்கப்பூருக்கு அனுப்புகிறது ஏஜென்ஸி. அங்கு போனவுடன் சொன்ன தொகையில் கால்பங்குதான் தருகிறார்கள். இதனால் ஏமாறறமடையும் தொழிலாளிகளின் நிலையை விளக்கி N.R.I A/C என்கிற படத்தினை சபா இயக்கியிருந்தார்.

புலம்பெயர்ந்தோர் படங்களில், தொழில்நுட்பத் தேர்ச்சியைக் கனடாவிலிருந்து வெளிவந்த படங்கள் காட்டுகின்றன. வேலையிலிருந்து திரும்பும் கணவன், வீட்டில் மனைவி இல்லாமல் இருப்பதைப் பார்த்து, சந்தேகப்பட்டு, அடுத்தடுத்து நிகழ்வதை பேட்ரிக் பத்மநாபனின் அந்த ஒருநாள் சித்தரித்தது. இதில் கேமரா மிகச் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டிருந்தது.

புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் இளம் தலைமுறை எவ்வாறு உருவாகி வருகிறது, தலைமுறை இடைவெளி எவ்வாறு ஏற்படுகிறது, இதை எவ்வாறு சமப்படுத்துவது என்கிற செய்திகளை முதன்மையாகக் கொண்டு சகா என்கிற படத்தை திவ்வியராஜன் இயக்கியுள்ளார். கனடாவில் வாழும் தமிழர்களின் வாழ்வியலில் ஒரு மோசமான பகுதியை எடுத்துக்காட்டும் வகையில் இப்படம் முக்கியத்துவம் பெறுகிறது.

புலம்பெயர்ந்த நாடுகளுக்குச் சென்ற பெண்கள், சுதந்திரமான உணர்வைப் பெற்றுள்ளனர் என்பதை சுமதி ரூபன் எடுத்துள்ள படங்கள் காட்டுகின்றன. ஆண்களால் கைவிடப்பட்ட இரு பெண்கள் இணைந்து குடும்பம் நடத்துகின்றனர். லெஸ்பியன் உறவை எந்தவித வக்ரமும் இல்லாமல் இயல்பான முறையில் விளக்கியது ‘You too?’
வேலைக்குச் சென்று களைத்து வரும் மனைவி வீட்டுக்கு வந்ததும், வீட்டு வேலைகள் மற்றும் சமையல் வேலைகளையும் செய்துவிட்டு கணவனின் விருப்பத்திற்கும் பலியாக வேண்டிய நிர்ப்பந்தத்தை மனுஷி படம் தெளிவுபடுத்துகின்றது. சிறு குழந்தைகளைப் பாலியல் வக்ரத்துக்கு உட்படுத்தம் போக்கைத் தோலுரிக்கிறது உஷ் படம்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் சென்ற நாடுகளில் அவர்களுக்கு முதலில் கிடைக்கும் வேலை ஹோட்டல்களில் கோப்பை கழுவும் வேலை. அப்படிப்பட்ட ஒருவன் தான் குடித்த கோப்பையைத் தான் கழுவாமல் மனைவியே கழுவ வேண்டும் என்று விட்டுச் செல்வதை கோப்பை படம் காட்டியது.

பொது இடங்களில் மனைவி மற்றவர்களுடன் சாதாரணமாகப் பேசுவதைக் கூடப் பொறுத்துக்கொள்ள முடியாததைச் சித்தரித்த படம் உனக்கொரு நீதி. மூன்று குழந்தைகளையும் மனைவியையும் விட்டு வேறு பெண்ணுடன் வாழ்ந்துவிட்டு பின்னர் தன் குடும்பத்திற்கே திரும்பும் கணவனைப் பற்றிய படம் வாழ்வு எனும் வட்டம். வயதான தாய் தந்தையரைப் பிரிந்து வாழும் மகன், மருமகளுடைய உணர்வுகளைப் பிரதிபலிக்கும் படம், ஊருக்குப் பயணம். இந்த மூன்று படங்களையும் இயக்கியவர் கனடா கே.எஸ். பாலச்சந்திரன்.

மனசு என்கிற படத்னை சுதாகரன் இயக்கியுள்ளார். இப்படம், வெளிநாட்டில் வாழும் மணமகனுக்க, மணமகளின் படத்தை அனுப்புகின்றனர். அதைப்பார்த்த வில்லன், மணமகளைத் தன் வசப்படுத்தி மணந்து கொள்கிறான். இதைப்பிறிதொரு சந்தர்ப்பத்தில் மணமகன் அறிகிறான். இது ஈழத்தமிழர்கள் பலரது வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவம். இதை அற்புதமாகப் படமாக்கியுள்ளார் சுதாகரன்.

புலம்பெயர்ந்த தமிழர் வாழ்வில் கணவன் மனைவி இருவரும் சம்பாதிப்பதால் குழந்தைகளின் கல்வி வீணாக்கப்படுவதை, சுவிஸ் பாலகுமார் இயக்கிய வகுப்பு படம் காட்டியது. பரா இயக்கிய பேரன், பேத்தி தாய்மொழியைப் படிக்காமல், புகலிட மொழியை வீட்டுமொழியாக்கிக்கொண்ட சிறுவர்கள் தம் தாத்தாவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, அவர் பேசுவதைப் புரிந்துகொள்ள இயலாததால் மரணத்தக்க இலக்காகி விடுவதை இப்படம் பேசியது.

நோய்வீதி என்கிற படத்தினை இயக்கியிருப்பவர் ப்ரான்ஸ் பிரேமா. ப்ரான்ஸில் உள்ள தமிழ் இளைஞர் குழுக்களிடையே வன்முறை எவ்வாறு தலைதூக்குகிறது என்கிற செய்தியினை இப்படம் பேசியது. ஓசைமனோ இயக்கியிருந்தபடத்தில் நாட்டிலிருந்து வந்த தாத்தா புகைக்கும் சுருட்டு மணத்தை பேரப்பிள்ளைக் வெறுக்கும் சூழலைப் பேசியது. பாஸ்கி எடுத்திருந்த ஒரு படத்தில் புலம்பெயர்ந்த தமிழர்கள், வீண் ஆடம்பரச் செலவு செய்வதை விடுத்து நாட்டு மக்களுக்கு இவர்கள் பயன்பட வேண்டும் என்ற செய்தியைச் சொன்னது.

மைக்கேல், ப்ரேமா போன்ற இளைஞர்கள் ப்ரான்ஸில் குறும்படங்களுக்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஏ.ரகுநாதன் என்ற முதிய படைப்பாளியும் நிறைய குறும்படங்களை எடுத்துள்ளார். குறும்படங்களைத் தவிர்த்து புலம்பெயர்ந்தோரின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் பிடிக்கல, பிடிக்கல என்கிற, சாம் ப்ரதீபன் இயக்கி வெளிவரும் தீபம் தொலைக்காட்சித் தொடர பல்வேறு கோணங்களில் புலம்பெயர்ந்தோர் வாழ்க்கையை விளக்குகிறது.

மேலே கண்ட படங்களில் புலம்பெயர்ந்தோர் வாழ்க்கையில், எதிர்கொள்ளும் பிரச்சினைகளான கல்விமொழி ஜ் வேலைமொழி; நாஸ்டால்ஜியா; பெண்பார்ப்பது; சீரியல் பார்ப்பது; கோப்பை கழுவுவது; குழந்தைகளைக் கவனிக்காதிருப்பது; வீண் ஆடம்பரம், வெளிநாட்டில் இருப்பவர்களிடம் காசு கேட்டுத் துன்புறுத்தவது; ஏஜென்ஸிகளிடம் பணம் கட்டி ஏமாறுவது, இளைஞர்களின் வன்முறை போன்ற பல்வேறு பிரச்சினைகளையும் பேசின. புலம்பெயர்ந்தோர் வாழ்க்கையில் அகதி வாழ்வு மறுக்கப்படுதல், நிறவாதத்தால் பழிவாங்கப்படுதல் போன்ற முக்கிய பிரச்சினைகளை புலம் பெயர்ந்தோர் படங்கள் அழுத்தமாகப் பேசவில்லை என்று தெரிகிறது. புலம்பெயர்ந்தோர் குறும்படங்களில், ஈழத்து வட்டார வழக்கு மொழியைப் பயன்படுத்தாமல் இந்தியத் தமிழைப் பயன்படுத்துவது அப்படங்களுக்கான யதார்த்தத்தை இழக்கச் செய்கிறது.


புலம்பெயர்ந்தோர் எடுத்த குறும்படங்கள்.

1. எச்சில் போர்வை - அஜீவன் - ஸ்விஸ்,
2. கவிக்குயில் - அஜீவன் - ஸ்விஸ்
3. நிழல்யுத்தம் - அஜீவன் - ஸ்விஸ்,
4. யாத்திரை - அஜீவன் - ஸ்விஸ்,
5. நல்லதோர் வீணை செய்தே - ஜெயாகரன் - ஜெர்மனி,
6. முடிவல்ல - ஜெயாகரன்- ஜெர்மனி
7. மீண்டும் வருவோம் - பால்ராஜ்,
8 தாப்பு - பாலகிருஷ்ணன் - ஸ்விஸ்,
9 எச்சரிக்கை - சுகந்தன்
10. அலைகள் - சுதன் ராஜா - ப்ரான்ஸ்
11. தாகம் - ரூபன் - ப்ரான்ஸ்,
12. நிறப்பிரிகை - !க.எம்.டி பாலகுமார் - இங்கிலாந்து,
13 படிவுகள் - கே.எம்.டி. பாலகுமார் -இங்கிலாந்து,
14. உருகும் பனிப்பூக்கள் - கலைச்செல்வன் -
15. Escape from genocide - ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்- இங்கிலாந்து
16. உயிரே உன்னை அழைத்தேன் - குமரேஷ்வரன் - இங்கிலாந்து
17. வசந்தகாலபூக்கள் - குமரேஷ்வரன் - இங்கிலாந்து
18. The ball - தமயந்தி - நார்வே
19. கூலி - கனடா மூர்த்தி - சிங்கப்பூர்
20. N.R.I A/C - சபா - சிங்கப்பூர்
21. கனவுகள் நிஜமானால் - புதியவன் - இங்கிலாந்து
22. மாற்று - புதியவன் - இங்கிலாந்து
23. பூண்டு - ப்ரேம்
24. அந்த ஒருநாள் - பேட்ரிக் பத்மநாபன் - கனடா
25. சகா - திவ்வியநாதன் - கனடா
26. Its All about - ரஞ்சித் யோசப்
27. பெயரிடப்படாதது - ரூபன் - கனடா
28. To be continued - ரூபன் - கனடா
29. மனசு - சுதாகரன் -
30. இளிச்சவாயன் - யேசன் - கனடா
31. கழுவாய் - யசோதா கந்தையா
32. தொடரும் நாடகம் - எஸ்.சண்முகம்
33. மனுஷி - ரூபன் - கனடா
34. Untitled - சுதாசன்
35. உஷ் - சுமதி ரூபன் -
36. சப்பாத்து - சுமதி ரூபன்
37. மனமுள் - சுமதி ரூபன்
38. You Too - சுமதி ரூபன்
39. உனக்கொரு நீதி - கே.எஸ். பாலச்சந்திரன் -கனடா
40. வாழ்வு எனும் வட்டம் - கே.எஸ்.பாலச்சந்திரன் -கனடா
41. ஊருக்குப் பயணம் - கே.எஸ்.பாலச்சந்திரன் -கனடா
42. அம்மா - ப்ரீஜீவி துரைராஜா
43. ஹூ வாஸ் இட் - வலன்ரையன் ஞானாநத்தன்
44. பிள்ளை - சுமதி
45. உபசாந்தி - செல்வக்குமார்
46.பேரன், பேர்த்தி - பரா - ஃப்ரான்ஸ்,
47.வகுப்பு - பாலகுமார் - சுவிஸ்
48.நோய்வீதி - ப்ரேமா
49.சாரல் - ஏ.ரகுநாதன் - ப்ரான்ஸ்
50.நீரைக் காணாத வேர்கள் - சுரேஷ் - லண்டன்

இக்கட்டுரை எழுத உதவிய நூல்கள்
1. புலம்பெயர்ந்தோர் சினிமா - யமுனா ராஜேந்திரன் - முகம் வெளியீடு
2. சொல்லப்படாத சினிமா - நிழல் ப.திருநாவுக்கரசு நிழல் வெளியீடு
3. நிழல் இதழ்கள்


(கோவை காந்திகிராம பல்கலைக்கழகத்தில் புலம்பெயர்ந்தோர் கருத்தரங்கில் வாசித்தளிக்கப்பட்ட கட்டுரை)

.......................
(இக்கட்டுரையை வாசிக்க அனுப்பியும்..., இப்பதிவில் பிரசுரிக்க அனுமதியும் தந்த நண்பருக்கு நன்றி)