நேர்காணல்: ப.சிவகாமி
சந்திப்பு: ஸ்டாலின் ராஜாங்கம்
புகைப்படம்: குட்டிரேவதி
1980களின் மத்தியில் எழுதத் தொடங்கியவர். தலித்தியம், பெண்ணியம் சார்ந்து செயல்பட்டவர். பழையன கழிதலும், ஆனந்தாயி அவருடைய நூல்கள். தமிழில் எழுத்து பற்றிய புனைவு எனப்படும் ப.க.ஆ.கு. இவருடையதாகும். குறுக்கு வெட்டு, சிவகாமி சிறுகதைகள் போன்ற படைப்புகளும் உண்டு. ஊடாக என்னும் குறும்படத்தை இயக்கியிருக்கிறார். முன்பு கோடாங்கி என்றும் இப்போது புதிய கோடாங்கி என்றும் வெளியாகும் பத்திரிகையின் பின்னணியாய் இருந்து இயங்கிவருபவர். கவிதைகளும் எழுதியுள்ளார். கருத்தம்மா, முனிமா போன்ற பெயர்களிலும் படைப்புகள் வெளியாகியுள்ளன. இவருடைய நாவல் அண்மையில் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது.
தமிழக தலித் இயக்கங்கள், தலித் மேடைகள் பலவற்றிலும் பங்குபெற்ற இவர் 90களுக்குப் பிந்தைய தலித் கலை இலக்கிய அடையாள நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். தென்னிந்திய தலித் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் பேரவையை ஏற்படுத்தியவர். தலித் நிலவுரிமை இயக்கத்தின் மூலம் பல்வேறு போராட்டங்களையும் மாநாடுகளையும் ஒருங்கிணைத்தார். பெண்கள் ஐக்கியப் பேரவையை ஏற்படுத்தினார். பெண்ணிய அடையாளம் பற்றிய உடலரசியல் நூலை எழுதியுள்ளார். அரசு அதிகாரியாய் இருந்தபோது தலித்துகள், பழங்குடியினர் சார்ந்து துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்தவர். தலித்தியம் குறித்த கருத்துப் போராட்டத்திலும் முன்னிற்கும் இவர் அண்மையில் தான் வகித்து வந்த ஐஏஎஸ் பொறுப்பிலிருந்து விலகி பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்துள்ளார். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக கன்னியாகுமரி பொதுத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
எழுத்துப் பணி, சமூகப் பணி எனச் செயல்பட்டு வந்த நீங்கள் அரசியலில் நேரடியாக ஈடுபட இந்தத் தருணத்தைத் தேர்ந்தெடுக்கக் காரணம் என்ன?
பல வருடங்களாகவே வேலையை விட்டுவிடுவது குறித்து யோசித்துக்கொண்டிருந்தேன். வேலை மதிப்பிற்குரியது என்றாலும் எனக்குப் போதுமானதாக இல்லை. எழுத்தும் இயக்கச் செயல்பாடுகளும் அரசியலை நோக்கி என்னை உந்திக்கொண்டிருந்தன. குடும்பம், எழுத்து, இயக்கம், அரசு வேலை என்று பார்க்கும்போது மிகச் சுலபமாக நான் தியாகம் செய்யக்கூடியது அரசு வேலை என்பதால் அதை நான் துறந்தேன். நான் சார்ந்திருந்த தலித் நில உரிமை இயக்கம், பெண்கள் ஐக்கியப் பேரவையினர் மற்றும் எழுத்தாளர்கள், நண்பர்கள், என் குடும்பத்தார் உட்பட அனைவரும் நான் வேலையைவிடப்போகிறேன் என்றதும் திகைத்தார்கள். யாரும் விரும்பவில்லை. அதிகாரமில்லையெனில் வாழ்வு இல்லையென்பதுபோலப் பார்த்தார்கள். உண்மைதான். அதிகாரமில்லையெனில் வாழ்வு இல்லை. அதை வெகுசன மக்களின் அதிகாரமாக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பமும். ஐஏஎஸ் பதவி வகித்துக்கொண்டே அரசியல் கட்சியிலும் செயல்பட முடியாது என்பதால் இந்த முடிவு.
இடையில் பிற்பட்டோர் சிறுபான்மை ஊழியர் சங்க நிர்வாகி பூபாலனைச் சந்தித்த போது, ‘பெண்கள் ஐக்கியப் பேரவை தேர்தலில் 10 இடங்களில் போட்டியிடும், ஆனால் தேசிய அளவில் மாயாவதியை ஆதரிக்கும்’ என்றேன். அகமகிழ்ந்த அவர் அடுத்த நாளே பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளரை (சுரேஷ் மானே) வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டார். கடந்த 25 ஆண்டுகளாகக் கட்சிப் பணி ஆற்றிவரும் சுரேஷ் மானேவுடன் விவாதித்த பின் பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்து பணியாற்ற முடிவுசெய்தேன்.
தலித் நில உரிமை இயக்கம், பெண்கள் ஐக்கியப் பேரவை மூலமாக ஏழைகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் என்னும் திட்டம் உருவாகவும் அரசியல் கட்சிகள் பெண்களுக்கு மாநாடு நடத்தவும் காரணமாக இருந்தேன் என்றும் சொல்லிக்கொள்வதில் என்ன பெருமை? இரண்டு ஏக்கர் நிலத் திட்டம் அரைகுறையாகத்தான் நிறை வேற்றப்பட்டுள்ளது. பெண்களுக்கு 33சதவிகித இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை. ஆனால் மாயாவதி 2007இல் பதவியேற்ற ஒரு வருடத்திலேயே பல லட்சம் ஏக்கர் நிலங்களை ஏழைகளுக்குப் பங்கிட்டிருக்கிறார். பிரதமரா னால் 50 சதவிகித இட ஒதுக்கீடு தருவேன் என்கிறார். அவருடன் சேர்ந்து உழைப்பதுதான் சரியானதாக இருக்கும் என முடிவுசெய்து அக்கட்சியில் சேர்ந்தேன்.
அரசியலில் இருப்பவர்களைக் காட்டிலும் அரசு அதிகாரிகளாக இருப்பவர்களுக்கு அரசுத் திட்டங்கள், அமலாக்கம் குறித்து அதிகம் தெரியும் வாய்ப்பு இருக்கிறது. அரசியலைக் காட்டிலும் அரசியல் நிர்வாகத்தில் செய்வதற்குப் பணிகள் அதிகமுள்ளபோது உங்களின் ராஜினாமா எப்படிச் சரியானது?
ஐஏஎஸ் அதிகாரி நிர்வாகம் சார்ந்தவர். சட்டங்கள் இயற்றுவது சட்டமன்றம், அமைச்சரவை. இவர்களுக்கு உதவுவதோடு அதிகாரியின் கடமை நின்றுவிடும். யாருக்கு எதற்கு முன்னுரிமை தருவது என்பதைத் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள்தாம் முடிவு செய்வார்கள். இன்றுள்ள அரசியல்வாதிகள் தாழ்த்தப்பட்டவர்கள், பெண்கள், மலைவாழ் மக்கள், ஏழைகள் ஆகியோருக்கு முன்னுரிமை தருகிறோம் என்று கூறி இலவசங்களைத் தான் அளிக்கிறார்களே அன்றி, அவர்களுக்கு வாழ்வாதாரங்களை உருவாக்கித் தந்து அவர்கள் முன்னேற்றம் அடையும் வழிகளைப் பற்றிச் சிந்திப்பது கிடையாது. இதற்கு என்னைப் போன்றவர்கள் உடந்தையாக இருக்க வேண்டுமென்று எதிர் பார்க்கிறார்கள்.
நான் அரசின் ஆதி திராவிட நலத் துறைச் செயலாளராகப் பணியாற்றினேன். மலைப் பகுதிகளில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளிகள் சரிவர இயங்குவதில்லை. காரணம் அங்கே பணியமர்த்தப்படும் ஆசிரியர்கள், அங்கே தங்கி வேலைபார்க்கப் பிரியப்படுவதில்லை. அவர்களின் பிள்ளைகள் படிக்க நல்ல பள்ளியோ மருத்துவமனையோ இருக்காது. ஆகையால் விடுப்பில் செல்வதும் மாற்றலுக்கு விண்ணப்பித்துவிட்டு வராமல் இருப்பதும் அடிக்கடி நடக்கும். இதைத் தடுக்க இப்போதிருக்கும் முறைப்படி ஆசிரியர்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம். அதைவிட மலைவாழ் மக்களுக்கே ஆசிரியர், தாதி, காவலர் பயிற்சி அளித்து அவர்களை அங்கேயே வேலைக்கு அமர்த்தலாம் என்ற என் யோசனை நிராகரிக்கப்பட்டது. அதைப் போல் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்படும் 18 சதவிகித நிதியை ஆதி திராவிட நலத் துறைக்கு ஒதுக்கி, அத்துறை மூலம் தேவைக்கேற்பத் திட்டங்கள் தீட்டிச் செயல்படுத்தலாம் என்ற என் கருத்து புறந்தள்ளப்பட்டதில் எனக்கு வருத்தமில்லை. ஆனால் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் மலைவாழ் மக்களுக்கும் சிறிதளவேனும் அதிகாரம் வழங்கும் எந்தத் திட்டத்தையும் அமைச்சரவையோ அதன் தலைவரான முதலமைச்சரோ ஏற்றுக்கொள்வதில்லை என்பதைக் கண்கூடாகப் பார்த்தேன். வெற்றிபெற்ற அரசியல் கட்சிகளின் உருப்படியற்ற இலவசம் குறித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தான் நாங்கள் மூளையைக் குடைந்துகொள்ள முடியும். பெருவாரியான வாக்கு வங்கிகள் வாக்கு வங்கிகளாகவே வைக்கப்பட வேண்டும் என்கிற சுயநல அரசியல்வாதிகளின் உத்தரவுகளை மீற எமக்கு ஏது அதிகாரம்?
எளிய மக்கள் ஒன்றிணைய வேண்டிய தலித் அரசியலுக்கு அரசு அதிகாரிகள் வருவது நல்லதுதானா? அதிகாரத்தைக் கைப்பற்றுவோம் என்று சொல்லும் ஙிஷிறி கட்சியில் அதிகளவு அரசு அதிகாரிகள் சேருகிறார்கள் இல்லையா?
எல்லாக் கட்சிகளிலும் ஐஏஎஸ் அதிகாரிகள் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள். யார் யார் அரசியலுக்கு வர வேண்டும், யார் யார் அரசியலுக்கு வரக் கூடாது என்று யாரும் கூறிவிட முடியாது. நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா, இது நாட்டை உலுக்குகின்ற கேள்வி. வந்தாலென்ன? ஆனால் அந்த நடிகரின் நோக்கமென்ன, ஸ்டண்ட் அடிப்பதா மக்களை ஏமாற்றுவதா? அவர் கொள்கையென்ன? இந்த நாட்டின் வரலாறு, பொருளாதாரம் பற்றி என்ன பார்வை உடையவராக இருக்கிறார்? இதையெல்லாம்தான் பார்க்க வேண்டுமே தவிர, யார் வரலாம், வரக் கூடாது என வகைப்படுத்தக் கூடாது. சிறந்த அறிஞராகயிருப்பார், பொருளாதார நிபுணராயிருப்பார். ஆனால் மக்களை நேசிக்காதவராக இருப்பார். இவரால் என்ன நன்மை விளையும், நடிகரோ அரசு அதிகாரியோ எழுத்தாளரோ பொருளாதார நிபுணரோ யாராகயிருப்பினும் முதல் தகுதி மக்களை நேசிப்பதும் சேவை மனப்பான்மையும்தான்.
நான் அரசியலுக்கு வந்தது ஒரு நீண்ட செய்முறையைக் கொண்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரி என்றாலும் எழுத்தாளர் அடையாளம் பெற்றவள் நான். எழுத்து சமூகத்தை நோக்கி என்னை இழுத்துச்சென்றது. பிறகு புதிய கோடங்கி கிராம முகாம்கள் பெண்கள் விழிப்புணர்வுப் பிரச்சாரத்திற்கும் காரணமாயின. இம்முகாம்களும் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களும் என்னை தலித் நிலவுரிமை இயக்கத்திற்கும் பெண்கள் ஐக்கியப் பேரவைக்கும் இட்டுச்சென்றன. இவ்வியக்கங்களை வேகப்படுத்த வேண்டும், இவ்வியக்கத்தை ஆழமாக வேரூன்றச் செய்ய வேண்டும் என நான் நினைத்ததன் விளைவு இன்று என்னையும் இவ்வியக்கத்தில் உள்ள பலரையும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு அழைத்துச் சென்றுள்ளது.
அதிகாரிகள் ஏன் அரசியலுக்கு வருகிறார்கள் என்று கேட்டால் நான் என்ன சொல்வது? அஜித் ஜோகி ஐஏஎஸ் சத்தீஷ்கர் மாநிலத்தின் முதல்வராகவும் மணி சங்கர் அய்யர் ஐஏஎஸ் மந்திரியானதும்கூட மிக நுட்பமாகப் பாதித்திருக்கலாமோ என்று நீங்கள் எண்ணுவது எனக்குப் புரிகிறது. அவர்களைக் கேட்டால்தான் அவர்கள் கதை வெளியில் வரும்.
பண்பாட்டுத் தளம் நுட்பமாகச் செயல்படக்கூடியது. அவ்வாறு செயல்பட்ட நீங்கள் வெகுமக்கள் இயக்கத்திலும் அத்தொடர்ச்சியைக் காப்பாற்ற முடியுமா?
அம்பேத்கருக்குப் பல அடையாளங்கள் உண்டு. வழக்கறிஞராக இருந்தபோதிலும் வெகுசில காலமே அப்பணியைச் செய்தார். அவரளவுக்குப் புதிய சிந்தனையோடு அதிகமாக எழுதிய வேறு ஒருவரைப் பார்க்கமுடியாது. அது எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று. அவரே தலைவராகவும் இருந்தார். நுட்பமான தளத்தையும் அரசியல் தளத்தையும் இணைத்த புள்ளி அவரிடமிருந்தது. ஏகப்பட்ட மக்கள்திரளோடு இருந்தார். அவருடைய எழுத்துக்கள் பலவும் அவருடைய பேச்சாகவே இருந்தது. இந்த இரண்டையும் இணைக்க முடியாது என்றால், நான் நுட்பமாக எழுதிக்கொண்டிருப்பேன். யாராவது மக்கள் தலைவன் பிறந்துவந்து இதையெல்லாம் படித்துப் புரிந்துகொண்டு செயல்படுத்துவான் என்று காத்திருக்க முடியாது. இரண்டும் ஒன்றாக வேண்டிய அவசியமும் இருக்கிறது. அவர்தான் இத்தளத்தில் நமக்கு முன்னோடி.
வெகுமக்கள் இயக்கம் ஆண்மைய அரசியலால் நிரம்பியிருக்கும் சூழலில் பெண்கள் பிரச்சினையில் நடைமுறைரீதியாக என்ன செய்ய முடியும்?
இதில் விதிவிலக்கும் இருக்கிறது. விதிவிலக்குகளுக்கு ஒருவகையில் பின்புலம் தேவைப்படுகிறது. ஒரு பெண் அரசியலில் ஈடுபட வேண்டுமானால் பின்னணி தேவையாய் இருக்கிறது. கனிமொழியை எடுத்துக்கொள்ளுங்கள். கனிமொழி அரசியலுக்கு வரும்போது அவரை எதிர்கொள்ளும் யாரும் மறுக்க முடியாத இடத்தை ஏற்படுத்திக் கொடுத்துத்தான் அனுப்புகிறார்கள். ‘பெண்’ணுக்கான மதிப்பு உள்வாங்கப்படாது என்பதோடு நில்லாது அவரை எம்பியாக்கி அனுப்புகிறார் கருணாநிதி. ஜெயலலிதாவுக்குக் கொள்கைப் பரப்புச் செயலாளர் பொறுப்பைக் கொடுத்து ஒரு தளத்தை உருவாக்கி அரசியலில் இறக்கினார் எம்ஜிஆர். இப்படி அரசியலில் ஈடுபடுகிற முக்கால்வாசிப் பெண்களுக்கு அதிகாரப் பின்புலம் இருப்பதால் வர முடிகிறது. பெண்கள் அரசியலில் ஈடுபடும்போது ஏற்படும் தடைகளுக்குத் தீர்வாகக் குடும்பப் பின்னணியை வைத்திருக்கிறார்கள்.
மம்தா, மேதா பட்கர் என விதிவிலக்குகளும் இருக்கிறார்கள். மேதா பட்கர் நேரடி அரசியலில் இல்லை என்றாலும் அரசியலைப் பாதிக்கிற இயக்கமாக இருக்கிறார். அதற்கு ஆளுமையும் பொறுமையும் தேவைப்படுவதோடு பெண் என்னும் சலுகையை எதிர் பாராமலும் இருக்க வேண்டியுள்ளது.
பெண்கள் சார்ந்து நாம் எதிர்பார்க்கிற அளவிற்குச் சாதகமான விளைவுகள் இருக்கும் எனச் சொல்ல முடியாது. பெண்கள் அரசியலுக்கு வர விரும்புகிறார்கள். அது மெதுவாகவே நடக்கிறது. அதை விரைவுபடுத்த வேண்டும். வரும்போது சில சமயத்தில் திசைமாறியும் போகலாம். அதில் இரண்டும் இருக்கும். ஆனால் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது 50 வருடத்திற்கு முன்பும் இன்றும் பெண்களின் அரசியல் நுழைவு எப்படியிருக்கிறது என்றால், பஞ்சாயத்தில் 33% கொடுக்கும்போது முதல்கட்டமாகப் பஞ்சாயத்துத் தலைவர்களாகவும் அடுத்த கட்டமாகப் பிரச்சினைகளை எதிர்கொள்பவர்களாகவும் மாறுகிறார்கள். பிரச்சினைகள் இல்லாமல் இல்லை. உள்ளே சென்று போராடும் போதுதான் படிப்படியாக இந்நிலை மாறும். ஆனால் பெண் தலைமையை ஏற்பதில் ஆண்களுக்கு மிகுந்த சிரமம் இருக்கிறது. வாரிசு அடிப்படையில் வந்தால் மட்டுமே ஏற்கிறார்கள். ஜால்ரா அடிக்கிறார்கள். தன்னிச்சையாக எழுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளன. அதனால் எங்களைப் போன்றோர் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
எழுத்தாளர்கள் அரசியலில் நுழைந்துதான் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டுமா?
எழுத்தாளர்கள் தாங்களே பதிப்பாளர்களாக நினைத்தால் பிறகு அவர்கள் புத்தகக் கடைக்காரர்களாக மாறிவிடுவார்கள். அதுதான் அவர்கள் விருப்பம் என்றால் நாம் ஏன் தடைவிதிக்க வேண்டும்? எழுத்தாளர் அரசியல்வாதியாவதால் அவரது எழுத்துப் பணி தடைபடுமா? மக்களைச் சந்திப்பதும் பிரச்சினைகளுக்கு நடுவில் அவற்றிற்குத் தீர்வு காண்பவராக இருப்பதும் அவரை வளப்படுத்தும். எழுத்தாற்றலுடன் சமூக மாற்றமும் உருவாகும். தான் எழுதுவது தனக்கும் சேர்த்துத்தான் எனும்போது இடைவெளி குறையும். மக்களுக்கும் எழுத்தாளருக்குமிடையே இடைவெளி குறையும்போது எழுத்து வளம்படும் என நாம் நம்பலாமா?
ஜெயகாந்தன் அரசியலில் இறங்கினார். பிறகு அவர் ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் என்று இலக்கியப் பணியையும் முடித்துக்கொண்டு அரசியலுக்கும் முழுக்குப் போட்டுவிட்டார்.
ரவிக்குமார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்தார். கட்சி ஒருவகையிலும் அவரது எழுத்து வேறுவகையிலும் பயணிக்கின்றன. ஒன்றின் பாதிப்பு இன்னொன்றில் விழாமல் தந்திரமாகச் செயல்படுகிறார். இது குற்றச்சாட்டா அல்லது பாராட்டா என எனக்கே தெரியவில்லை. அவரைக் கேட்டால் முரண்பாடுதானே வாழ்க்கை என்று சுலபமாகச் சொல்லிவிடலாம். அதோடு எழுத மட்டும்தான் முடியும் என்பவர்கள் எழுதட்டும். எழுதிக்கொண்டே களமிறங்குவேன் என்பவர்கள் அப்படிச் செய்யட்டும். என்னைக் கேட்டால் என் இருப்பு எழுத்தையும் எழுத்து இருப்பையும் பாதிக்கிறது. என் சூழலை மாற்றியமைப்பதன் மூலம் என்னை மாற்றுகின்றேன். என் எழுத்தை மாற்றுவதன் மூலம் சூழலை மாற்றிக் கொள்கிறேன். இந்தச் சுழற்சி எனக்குப் பிடிக்கிறது. சவாலாக உள்ளது. இந்தச் சவால் வாழ்க்கையின் மீது ஒருவகைப் பிடிப்பை உண்டாக்குகிறது. என் அனுபவத்தை விதியாக்க விரும்பவில்லை. விதியாக்கும் அளவிற்குத் தர்க்கங்களைப் புகுத்த விரும்பவில்லை. எதிலுமே நெகிழ்வுத் தன்மையை விரும்புபவள் நான்.
எழுத்தாளர்கள் தங்கள் அறிவின் மீது கர்வம் உள்ளவர்கள். சுயமரியாதை நிரம்ப உள்ளவர்கள். அரசியல் என்பது வெகுமக்கள் இயக்கம். பெரும்பாலும் கல்வியறிவற்ற பாமர மக்கள் இயக்கமாக அது உள்ளது. அதில் எழுத்தாளர்கள் நுழையும்போது தலைவர்களாகவும் இருக்கப் பிரியப்படுகிறார்கள். ஒரு சிலர் மட்டுமே இதில் விதிவிலக்குகள். ஆகையால் நேரடி அரசியல் சிலருக்கு வாந்திபேதியை உண்டாக்கிவிடுகிறது. சிலர் சாமர்த்தியமாக முக்கியப் பொறுப்புகளைப் பெற்றுவிடுகிறார்கள்.
அரசியலில் பல்வேறு கருத்துகளைப் பொருத்தமுற இணைப்பது தேவையான நடைமுறை. இதுதான் யதார்த்தம். இதனால் கருத்தியல் நீர்த்துப்போய்விடும் என நினைக்க வேண்டியதில்லை. எழுத்தில் நடை முறைக்கும் கற்பனைக்கும் உள்ள எல்லையை நம்முடைய ஆளுமையால் இடைமறிப்பதாக நினைக்கிறோம். அதைப் போல் அரசியலிலும் புதியதாகத் தெரிந்துகொள்ள, புதியதாக உருவாக வாய்ப்பிருக்கிறது.
இப்பணிகளால் எழுத்துப் பணியில் திட்டமிருந்தும் எழுதுவதில் தடைகள் ஏற்படாதா?
எனக்குக் கிடைக்கிற தளங்களைச் சரியாகப் பயன்படுத்தி அதை எழுத்தாக்குவதில் ஆர்வம் இருக்கிறது. ஆனால் முன்பும் சரி, இப்போதும் சரி, எழுத நினைத்த அனைத்தும் எழுத்தாகிவிடுவதில்லை. அவகாசம் இல்லாமலும் எழுதிய முறை சரியில்லாததாலும் எவ்வளவோ தடைபட்டிருக்கின்றன. அதுபோல்தான் இப்பவும். அரசியல் பெரிய சமுத்திரம். எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன எழுத. அந்த ஆர்வம் எப்போதும் உள்ளே கனன்றுகொண்டுதான் இருக்கிறது. எரிமலையாகப் பீறிடுவதும் உண்டு. நெறிப்படுத்தப்பட்ட கவிதையாவதும் உண்டு. ஆனால் கூடியவரையில் தவறவிடாமல் எழுதுவேன். சேகுவேராவின் டைரிக் குறிப்பைப் பார்க்கிறேன், கற்றுக்கொள்கிறேன். ஆவணப்படுத்துவது எவ்வளவு அவசியம் என்பதை உணர்கிறேன். பிற அரசியல்வாதிகள் போலல்லாது, கட்சிக் கூட்டங்கள் எவ்வளவு நடத்தினேன், மக்கள் கருத்து என்ன, கட்சி உறுப்பினர்கள் கருத்து என்ன, எத்தனை உறுப்பினர்களைச் சேர்த்தேன் என்ற விவரங்கள் அனைத்தையும் பதிவுசெய்து மேலிடத்திற்கு அனுப்பினேன். ஒரு எழுத்தாளர் நேரடி அரசியலில் ஈடுபடும்போது நன்மைகள் இருக்கத்தான் செய்கின்றன.
பெண்கள் ஐக்கியப் பேரவையுடன் கட்சிக்குள் வருகிறீர்கள். அப்பேரவையிலிருந்து வந்த பெண்களுக்குக் கட்சியில் என்ன வாய்ப்பு இருக்கிறது?
இப்போதுள்ள கட்சிகளில் பெண்களுக்கு இடமிருப்பதில்லை. இருந்தாலும் பெயரளவில் இருக்கிறார்கள். கூட்டம் காட்டுவதற்காக அழைத்துவரப்படுவது, மேடைகளில் அலங்காரமாக அமர்த்திவைக்கப்படுவது என்றுதான் நிலைமை இருக்கிறது. உட்கட்சியளவில் அவர்களோடு எதுவும் கலந்து ஆலோசிக்கப்படுவதில்லை. அண்மையில் ஒரு மாவட்டத்தில் கூட்டம் நடத்தினேன். பெண்கள் ஐக்கியப் பேரவையிலிருந்து சிறப்பாகப் பணியாற்றிய ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்துத் தலைவராக அறிவிக்கும்போது பரபரப்பாகப் பார்க்கிறார்கள். பலவிதமான தடைகளை எழுப்புகிறார்கள். தலைவரும் துணைத் தலைவரும் ஒரே ஊரில் இருக்கக் கூடாது என்றும் ஒரே சமூகமாக இருக்கக் கூடாது என்றும் சொல்கிறார் ஒருவர். அதற்குச் சமாதானம் சொல்லும்போது எல்லோரும் புதிதாய் இருந்தால் கட்சி நடத்துவது கடினம் எனத் தடை வருகிறது. இவ்வாறு ஒரு பெண்ணைப் பொறுப்புக்குக் கொண்டுவரும்போது பலவித எதிர்ப்புகளை மீறித்தான் செயல்பட வேண்டியிருக்கிறது. இம்முயற்சிகளில் தோற்பவர்கள் சரியாக நிர்வகிக்கத் தெரியவில்லை என்னும் கட்டுக்கதைக்கு ஆளாகிவிடுவார்கள். பெண்களாய் இருந்தால் செயல்பட முடியாது எனக் கதையை வளர்த்து ஓரங்கட்டும் வேலை நடக்கும். பெண்களுக்குத் தகுந்த பயிற்சி, எவ்விதச் சலுகையையும் எதிர்பாராமல் விழிப்பாயிருந்து அதிகாரத்திற்குள் நுழைகிற வேலையைச் செய்தால்தான் நிலைக்க முடியும் என்கிற சூழ்நிலை இருக்கிறது. இப்போது எழுத்தாளர் குட்டிரேவதி சேர்ந்தார். தற்காலிக நடவடிக்கையாக என்ன செய்யலாமென என்னிடம் யோசனை கேட்டபோது, தொகுதியொன்றைத் தேர்ந்தெடுத்துத் தகவல்களைத் திரட்டி வேலையைச் செய்யலாம் என்றேன். எல்லாம் போகப் போகச் சரியாகும்.
பொதுவாகத் தலித் அரசியல் தளத்திற்குள் செய்ய வேண்டிய வேலைகளாக நீங்கள் நினைப்பது எவை?
இங்கு 18 சதவிகித தலித்துகள் இருக்கிறார்கள். தலித் கிறித்தவர் உள்ளிட்டோரைச் சேர்த்தால் மக்கள் தொகையில் கால் பங்கினர். அந்தக் கால் பங்கினரை ஒருங்கிணைக்கும் பணிதான் முதன்மையானது. அதற்கு இசைவான தளம் உருவாகியுள்ளது. பல்வேறு காரணங்களால் பிரிந்திருந்தவர்கள் பல்வேறு செயல்பாடுகளால் ஒருங்கிணைகிறார்கள். விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், அம்பேத்கர் மன்றங்கள் போன்றவற்றிலிருந்து விலகிவருபவர்களும் இருக்கிறார்கள். தேமுதிகவில் இருப்பவர்களும் திரும்புகிறார்கள். எனவே ஒருங்கிணைப்புப் பணியைச் செய்வது அவசியம். திருமாவளவன், கிருஷ்ணசாமி எல்லோருமே இந்த ஒருங்கிணைப்புப் பணிக்குத்தான் முயல்கிறார்கள். அதை மறுக்கவில்லை. ஆனால் அக்கட்சிகளின் கட்டமைப்பில் எல்லோரும் பார்க்கும்படியாக அதை எடுத்துவைக்க முடியவில்லை. இங்கு ஆரம்பத்திலேயே பள்ளர், பறையர் என்னும் உரையாடல் ஏற்பட்டுவிட்டது. தலைவர்கள் இதை ஆதரிக்கிறார்கள் என்று சொல்லமாட்டேன். ஒருங்கிணைப்பை எப்படி மறுப்பார்கள்? ஆனால் பள்ளர், பறையர் என்று இரு கூறாகப் பிரிவதும் தலைவர்களும் அதற்கு ஆட்பட்டுவிடுவதும் நடக்கிறது. அதற்கு பலிகடாவாகிறார்கள். அதைத் தாண்ட முயல்வதில்லை. இதைத் தலைவர்களோ மக்களோ விரும்புகிறார்கள் என்பதல்ல. இது இப்படித்தான் இருக்கிறது. தாழ்த்தப்பட்டோர் அல்லாதவர்களும் வெளியிலிருந்து இம்மாதிரியான பணிகளைச் செய்துகொண்டே இருக்கிறார்கள். இதன் மூலம் இருவரையும் பிரித்துவைப்பதற்குச் சூழலும் அதிகமாக இருக்கிறது. ஆனால் உ.பியில் பிஎஸ்பியின் கட்டமைப்பு இதற்கு உதவியாக இருந்திருக்கிறது. இவ்வாறான ஒருங்கிணைப்பின் மூலமாக ஆட்சியமைத்திருக்கிறார்கள் எனும்போது தமிழகத்தில் அக்கட்சி பரவும்போது கூடுதலான மதிப்பு உண்டாகிறது. பிற சமூகத்தினரும் தலித் தலைமையை ஏற்க முடியும்.
இந்நிலையில் பிஎஸ்பியைத் தலித் கட்சியாகப் பார்க்க முடியாது. இருந்தாலும் அது ஏன் தலித் மக்களையே மையம் கொள்ளுகிறது என்றால் வெகுஜன மக்களில் கால் பங்கினர் தாழ்த்தப்பட்ட மக்கள். அநேகம்பேர் ஒருங்கிணைந்து அரசியல் சக்தியாக மாறும்போது கலக அரசியல் எளிதாக நிறைவேறுகிறது. கலக அரசியல் என்று சொல்வது ஆர்ப்பாட்டம், போராட்டம் என்பதன்று. வாக்குகளைப் பிரிக்கும்போது மற்றவர்கள் தங்கள் பலம் என்ன என்பதைப் பார்ப்பார்கள். திமுக, அதிமுக தாழ்த்தப்பட்ட மக்களை ஓட்டு வங்கியாகப் பயன்படுத்திய நிலைமை மாறி இவர்களே தனித்துத் திரளும்போது அதைத் தங்களின் பலவீனமாகப் பார்ப்பார்கள். கலக அரசியலின் முதல்கட்டம் இது. இதில் எவ்விதச் சமரசமும் கிடையாது.
அடுத்து ஒருங்கிணைப்புப் பணி என்னும்போது கூட்டணி விஷயம் முக்கியமாகிறது. ஏனென்றால் திருமாவளவன் எவ்வளவுதான் களப்பணி செய்தாலும் இதுவரை தாழ்த்தப்பட்டவர்களின் ஓட்டுகளைப் பெற்றுக்கொண்டு அவர்களுக்குத் துரோகம் செய்த திராவிடக் கட்சிகளை ஆதரித்து வெளிப்படையாகப் பேசக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். மாற்றி மாற்றி அவர்களையே ஆதரித்து இம்மக்களிடமே பேச வேண்டிய நிலை. இந்நிலை திராவிடக் கட்சிகளை அம்பலப்படுத்துவதில்லை. இந்நிலையில்தான் பகுஜன் சமாஜ் கட்சியின் அணுகுமுறை அவசியமாகிறது. உங்களுடைய ஓட்டில் திமுகவோ அதிமுகவோ காங்கிரஸோ ஆட்சி நடத்தக் கூடாது. உங்களுடைய ஓட்டில் உங்கள் ஆட்சி நடக்க வேண்டும் என்று பேசத் தலித் தலைவர்களால் முடியாது. இந்த 40 ஆண்டுகளில் மக்கள் எந்தெந்த வகையில் ஏமாற்றப்பட்டு மேலும் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டார்கள் என்பது முக்கியம். தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமல்ல, சமூகத்தின் பல்வேறு பிரிவினரும் இதில் அடக்கம். இதை முன்னிலைப்படுத்தும்போதுதான் ஒருங்கிணைப்பு சாத்தியமாகும். ஒருங்கிணைப்புக்கான மையப் பிரச்சினையைத் தவிர்த்துவிட்டுச் செயல்படுகையில் திமுகவோடு இருக்கும்போது அதிமுகவையும் அதிமுகவோடு இருக்கும்போது திமுகவையும் தாக்கிப்பேசுவதால் நம்பகத்தன்மை குறைகிறது. மற்றுமொன்று நிதி வசதி. இதைப் பார்க்கும்போது பிஎஸ்பி மக்களிடமிருந்தும் உறுப்பினர்களிடமிருந்தும் நிதி சேர்க்கிறது. அடுத்து என்ன பேசி மக்களைச் சேர்ப்பது? இங்கே தமிழர் என்று பேசும்போது அதிமுகவும் திமுகவும் அதைத்தான் பேசுகின்றன. ஆனால் திரட்டப்பட்டுள்ளவர்கள் தலித்துகளே. இம்மக்களுக்குப் பல்வேறு பிரச்சினைகள். அதில் தமிழ் என்னும் அடையாளத்தைவிட அடிப்படையானவையாக இப்பிரச்சினைகளே இருக்கின்றன. கல்வி, வேலைவாய்ப்பு, வாழ்வாதாரத்திற்குத் தேவையான அம்சங்கள் என எதுவும் செய்யப்படவில்லை. முக்கியமானது நிலமின்மை. அதை எப்போதுமே யாருமே பேசுவதில்லை. அவர்களுக்குரிய அரசின் திட்டங்களைப் பற்றிப் பேசுவதில்லை. பேசினாலும் பட்டும்படாமலும் பேசுகிறார்கள். இதையெல்லாம் மக்கள் மத்தியில் பிரச்சாரமாக எடுக்கவே இல்லை. இதையெல்லாம் நிரப்புவதாகப் பகுஜன் சமாஜ் கட்சி மாறும்போது பெரும்வீச்சு ஏற்படுமென நம்புகிறேன். சில திட்டங்கள் குறித்துப் பேசும்போது - குறிப்பாகச் சிறப்பு உட்கூறுத் திட்டத்தைப் பற்றிப் பேசும்போது - மக்கள் அது தங்களுக்குத் தெரியாது என்கிறார்கள். அதனால் பகுஜன் சமாஜ் கட்சியின் நோக்கம், கொள்கை, கட்டமைப்பு இவற்றைக் கொண்டு திராவிடக் கட்சிகள்மீதான அதிருப்தியை உணரும்படி செய்யும்போது அரசியல் தளத்தில் இந்த ஒருங்கிணைப்பு சாத்தியமாகும். இந்நிலையில் புறக்கணிக்கப்பட்ட சமூகங்களும் பிஎஸ்பியின் கொள்கையை ஏற்று உள்ளே வர வேண்டும். அதற்கான வெளியையும் உருவாக்க வேண்டும்.
புறக்கணிக்கப்பட்ட சமூகங்கள் என்றால்?
தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர், சிறுபான்மையினர். இவைபோகப் பிற்படுத்தப்பட்ட சமூகங்களிலுள்ள ஏழைகள் என்றுதான் சொல்ல வேண்டும். அதிமுகவும் திமுகவும் தொடாத பல அடிப்படைப் பிரச்சினைகள் இருக்கின்றன. அதனால் பிரச்சினை அடிப்படையில் செயல்படுவது, இதில் என்ன மாதிரியான சமரசங்கள் ஏற்படும் என்றால் மக்கள்தொகைக்கு ஏற்றவாறு தொகுதிகள், அமைச்சர்கள் கேட்கலாம். இது இயல்புதானே.
உண்மையில் இது உத்தியா? அரசியலா?
அனைத்து மக்கள் சகோதரத்துவம் என்றுதான் மாயாவதி பேசுகிறார். அம்பேத்கர் சுதந்திரம் மட்டும் போதாது. சகோதரத்துவமும் சமத்துவமும் வேண்டும் என்கிறார். சமத்துவத்தைச் சகோதரத்துவம்தான் ஈடுசெய்யும். பிறகுதான் சுதந்திரம். அனைத்து மக்கள் சகோதரத்துவ மாநாடு நடத்துகிறது பிஎஸ்பி. சமத்துவம்தான் நம்முடைய இலக்கு. இலக்கை அடையக்கூடிய குறிக்கோள் சகோதரத்துவம். எல்லோரும் சேர்ந்து வாழும்போது யார் யாருக்கு எது தேவையோ அதை நிறைவேற்றுவதுதான் சரி. சமத்துவம்தான் நம்முடைய அரசியல்.
பல்வேறு சமூகத்தினர் எனும்போது சாதியடையாளத்தை அழித்து வருவது அல்லது அதே அடையாளத்தோடு வருவது என்பவை இருக்கும் இல்லையா?
அண்மையில் திருச்செந்தூர் போயிருந்தபோது அக்ரஹாரத்தில் இருப்பவர்கள் திரண்டு வரவேற்றார்கள். நாங்கள் சாதி வித்தியாசம் பார்ப்பதில்லை. ‘பிராமணாளக் காப்பாத்துங்கோ’ என்றார்கள். இது எனக்குப் புது அனுபவமாகவும் நகைச்சுவையாகவும் இருந்தது. அவர்களை எது துரத்துகிறது என்று பார்த்தால் கோயிலை நம்பித்தான் அவர்கள் வாழ்கிறார்கள். ஏழைகளாய் நிறுத்தப்பட்டவர்களை மீட்பதற்குக் குறைந்தபட்சத் திட்டத்தை நாம் பேசுகிறோம்.
நீங்களும் பிஎஸ்பியும் உயர்சாதி ஏழைகள் என்று பேசும்போது அது சரியாக யாரைக் குறிக்கும்.
தலித், பழங்குடி, சிறுபான்மையினரைத்தான் மாயாவதி அடிப்படையாகக் கொள்கிறார். பிறகு உயர்சாதி ஏழைகள். ஊடகங்கள் இரண்டாவதைப் பெரிதுபடுத்துகின்றன. தாழ்த்தப்பட்டவர்கள் பிறரைப் பற்றிப் பேசுவதை அவர்கள் ஈர்ப்பாகக் கருதலாம். அதில் அவர்களுக்கான சார்புத்தன்மையும் இருக்கிறது. அதிகாரம் யாரிடம் என்பதைப் பொறுத்தே எல்லாம் அமைந்துள்ளது. எனவே இதை அதிகாரம் சம்பந்தப்பட்டதாகப் பார்க்கலாம். அப்போதுதான் பொதுவான சொல்லாக இருப்பதைக் குறித்துப் பேச முடியும். ஏழை என்றால் யார் அது எதுவரை என்பதெல்லாம் பேசப்படும்.
இந்த அணுகுமுறை எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தாதே. மாநிலங்களுக்குரிய தனித்துவமான சூழலைக் கணக்கில் கொள்ள வேண்டும் என்பது சரியானதுதானே?
எந்தக் கட்சியும் மாநிலம் சார்ந்த பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளித்து மாநிலத்தில் இயங்காவிடில் தேசியக் கட்சியாக இருக்க முடியாது. தொடக்கத்தில் சில விமர்சனங்கள் எழலாம். அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
ஆனால் மாயாவதியை ஏற்பதில் தமிழ் சென்டிமெண்ட் என்பது தடையாக இருக்கும் என்னும் கருத்து பற்றி?
அப்படியென்றால் இந்தியாவுக்குப் பிரதமர் தமிழர் என்றுதான் சொல்லியிருக்க வேண்டும். மாயாவதி மட்டுமா வட இந்தியர். சோனியா, மன்மோகன் எல்லாம் யார்? மாயாவதியை நிராகரிப்பதற்குச் சொல்லப்படும் காரணம் மட்டுமே இது. களப்பணியில் மாயாவதி கால் நூற்றாண்டையும் கடந்துவிட்டார். அவர் எப்படிச் செயல்படுகிறார்? என்னென்ன செய்துள்ளார் என்கிற அடிப்படையில் விமர்சனங்களை முன்வைக்க வேண்டும். பேனர் வைத்து மட்டுமே அரசியல் செய்ய முடியாது. திருமாவளவன் களப்பணி செய்யவில்லை என்பது என் கருத்தல்ல. கூட்டம் கூட்டியதோடு நின்றுவிட்டார். அது மட்டும் போதுமா? திருமாவளவன், கிருஷ்ணசாமி போன்றோரெல்லாம் ஒருங்கிணைந்து செயல்படச் சகபோராளியாய் அழைக்கிறேன்.
உங்கள் அரசியல் ஈடுபாடு இவ்வளவு விமர்சனங்களைச் சந்திக்கும் என்று எதிர்பார்த்தீர்களா?
நான் வேலையை விடுவது பெரிய செய்தியாகும் என எதிர்பார்க்கவில்லை. என்னைப் பற்றிய செய்தியோடு பிஎஸ்பியின் அறிமுகமும் நடக்கிறது என்பது நல்லது. பலரும் விமர்சித்துள்ளனர். இதுவரையிலும் சரியாகவே போய்க்கொண்டிருக்கிறது. மாற்றம் வேண்டுமென்ற ஆவல் பல தளத்திலும் இருப்பதைக் காட்டுவதாகவே இதை நினைக்கிறேன். விஜயகாந்தின் வருகையைக் கொண்டாடுவதற்குப் பத்திரிகைகள் மாற்றம் என்பதை மட்டுமே காரணமாகச் சொல்கின்றன. என்னுடைய வருகையை அப்படித்தான் அவர்கள் பார்ப்பதாக நினைக்கிறேன். என்னுடைய வருகை நல்ல மாற்றமா என்று உடனடியாக நானே சொல்ல முடியாதில்லையா?
தமிழ்ச் சூழலில் பேசப்படும் பெண்ணியம் சார்ந்த உரையாடலில் உங்கள் தனித்துவமான பார்வை உண்டா? குறிப்பாக உடலரசியல்.
நிச்சயமாக உண்டு. உடலரசியல் என்று சொல்லும்போது உடல் சார்ந்த கிளர்ச்சி, பாலியல் தேவை போன்றவை பெண்களுக்கு மறுக்கப்பட்டதாகவும் இருப்பதால் அதைப் பற்றிப் பேச வேண்டும் என்கிறார்கள். அதை நான் மறுக்கவில்லை. ஆனால் உடல் என்பதை உழைப்பின் களம் போன்றவற்றோடும் பார்ப்பது தலித் பெண்ணியமாகிறது. உடல் உழைப்பும் மதிப்பு குறைந்ததாக இருக்கிறது. அதைக் கவனப்படுத்த வேண்டியிருக்கிறது. மூளை உழைப்பு உடல் உழைப்பைக் கட்டுப்படுத்துவதாக இருக்கிறது. எல்லாக் கலாச்சாரங்களிலும் இந்தப் பிரச்சினை இருக்கிறது. ஆனால் மேற்கே அந்நிலையிலிருந்து மீண்டுவிடுகிறார்கள். இந்தியாபோல சாதியோடு தொடர்புடைய நாட்டில் உடல் உழைப்பு சாதியத்தோடு இணைக்கப்படும்போது முக்கியமானதாகிறது. உடலரசியல் என்பதை மதிப்புக் குறைந்தவற்றை மீட்டெடுத்து மதிப்பளிப்பதாகப் பார்க்கிறேன். இது முதல் கட்டம். பெண் தொடர்பான உடல் எனும்போது சில சாதாரண வாதங்கள் வைக்கப்படுகின்றன. ஆணைக்கண்டு பயப்படுகிறாள் என. பெண்ணைப் பார்த்து ஆணும் பயப்படுகிறான். மேலும் செக்ஸை நாம் பொழுதுபோக்காக, கேளிக்கையாகப் பார்க்கிறோம். அது இயல்பூக்கத்திலிருந்து விலகிப்போயிருக்கிறது. அந்த இயல்பூக்கத்திற்குக் கொண்டுவர சூழ்நிலையை வைத்திருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அதுதான் செக்ஸைக் கொண்டாடுவதாக இருக்க முடியும். பாலியல் சுதந்திரம் என்பது செக்ஸைப் பொழுதுபோக்கு என்ற இடத்திற்குக் கொண்டுபோய்விடுகிறது. பெண் உடலைப் பலவீனமானதாகச் சொல்கிறார்கள். உண்மையில் பெண்ணுடல் பலவீனமானதல்ல. பெண்ணுடலின் வலிமையைச் சொல்ல வேண்டியுள்ளது. இனவிருத்தி உள்ளிட்ட ஆற்றல் போன்றவற்றை உள்ளடக்கிய பெருமைக்குரிய விசயமாக அதைப் பார்க்க வேண்டும்.
நீங்கள் பேசுவது பெண்ணியக் கருத்தாகப் பார்க்கப்படுகிறதா?
இப்போது பெண்ணியத்தோடு நிலம் போன்ற பிரச்சினையைப் பேசும் நிலை ஏற்பட்டிருப்பதாக நினைக்கிறேன். ஆண், பெண் உறவுச் சிக்கல் மட்டுமே பெண்ணியம் பற்றியதாகக் கருதப்பட்டுவருகிறது. வளப் பகிர்வு, நிலவுரிமை, பெண்களை அதிகம் பாதிக்கும் அடிப்படை வசதிகள் போன்றவற்றை உள்ளடக்கிய பெண்ணிய உரையாடல் கட்டமைக்கப்பட வேண்டும். காலப்போக்கில் இந்த வகையான உரையாடல் விரிவடைய வாய்ப்பிருக்கிறது.
தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுக்கவுமிருந்து வருகிற பெண்ணியம் சார்ந்த தளங்களில் சாதி தனியாகவும் பெண்ணியம் தனியாகவும் அணுகப்படும் முறைகளே அதிகம். பெண்ணிய உரையாடல் வெளிச்சத்தில் சாதியம் பற்றிய புதிய புரிதல் என்ன? பெண்ணியப் பிரதிகளில் அம்பேத்கரின் தாக்கம் என்ன?
இது பெண்ணிய உரையாடலில் பெரிய தேக்க நிலையைக் கொண்டுவந்திருக்கிறது. சாதிய அரசியலில் வைத்துப் பெண்ணியத்தை விளங்கிக்கொள்ளும் போதுதான் அது புதிய பரிணாமத்துக்குப் போகும். மேலும் பொதுத்தளங்கள் சார்ந்தும் பெண்ணியத்தை நகர்த்துவது பற்றியும் இங்கே போதுமான அளவு பேசப்படவில்லை. பெண்களைப் பற்றிப் பேசினால் மட்டுமே கலந்துகொள்வதாக இல்லாமல், ஒவ்வொரு விஷயத்தையுமே பெண்ணியத்தின் பார்வையில் பார்ப்பதும் அணுகுவதும் அவசியம். உதாரணமாக இப்போது பட்ஜெட் வெளியாகிறது என்றால் அதைப் பெண்களின் பார்வையிலிருந்து பார்க்க வேண்டும்.
90களுக்குப் பிந்தைய தலித் இலக்கியத்தின் இன்றைய நிலை குறித்துப் பலரும் கருத்துச் சொல்கிறார்கள். சிலர் அதைத் தேக்கம் என்றும் வேறு சிலர் நிதானம் என்றும் சொல்கின்றனர்.
ஸ்டிரியோடைப்தான் இதற்குக் காரணம். இலக்கியத்திற்கு இலக்கணம் வகுக்கும்போதே அதைக் கட்டுப்படுத்துகிறோம் என்று பொருள். ராஜ்கௌதமன் போன்றோர் இலக்கணம் வகுப்பதில் ஆர்வம் காட்டினர். தலித் இலக்கியம் என்றால் பகடி அல்லது நக்கல், கேலி என்று சொல்லப்பட்டது. அதற்கேற்றாற்போலப் பக்தீன் போன்றோர் மேற்கோள்களாகச் சுட்டப்பட்டனர். எந்த இலக்கியத்தையும் இலக்கண வரம்புக்குள் இருக்க வேண்டும் எனச் சொல்ல முடியாது. வழக்கிலிருந்த இலக்கியத்தில் என்ன இருந்தது என்று ஆய்வு அணுகுமுறை இருக்க முடியுமே தவிர, உருவாக இருக்கிற இலக்கியத்துக்கு வரையறை உருவாக்க வேண்டியதில்லை. உதாரணமாக ராஜ்கௌதமன் ஒரு கதையைச் சொல்லுகிறார். சுடுகாட்டில் பிணம் எரியும்போது வெட்டியான் பிணத்தை அடித்துக் கோபத்தைத் தீர்த்துக்கொள்வான் என்று. அது தவறு என்று நான் சொல்லவரவில்லை. கதை அப்படி இருக்கலாம். அதை வரையறைக்குள் நிறுத்திப் பேசும்போது அப்படித்தான் இருக்க வேண்டுமென்கிற விஷயம் வந்துவிடுகிறது. இயலாமையின் வெளிப்பாட்டைத் தலித் இலக்கியத்தின் வெளிப்பாடாகச் சொல்வது சரியல்ல. தலித் இலக்கியம் இதையெல்லாம் தாண்ட வேண்டும்.
மற்றொன்று சுய வரலாறு. அத்தகைய நோக்குதான் தலித் இலக்கியம் என்று சொல்கிறார்கள். இவை வரவேற்கப்படுகின்றன என்பது தெரிந்ததும் இதைவிடத் துயரமான சம்பவங்களை எழுத வேண்டும் என்கிற முனைப்பு அதிகமாகிவிடுகிறது. இது தட்டையான தன்மையைத்தான் கொணர்ந்திருக்கிறது. இதுவே மொழி சார்ந்தும் வெளிப்படுகிறது. கொச்சை என்று சொல்லப்படுவதால் இன்னும் அதை எவ்வாறு தோண்டி எடுத்துவந்து தட்டையாக வெளிப்படுத்துவது என்கிற முனைப்புக்குள்ளும் போய்விட்டது. தலித் விடுதலையை மையப்படுத்திப் பல்வேறு தளங்களையும் பார்க்கிற பார்வையை இந்நிலைமை புறக்கணித்திருக்கிறது. எந்த இடத்தில் சாதி இல்லை? கிராமங்களில் வெளிப்படையாகவும் நகரங்களில் நுணுக்கமாகவும் இருக்கிறது. இந்த எல்லாத் தளங்களையும் கைப்பற்ற வேண்டிய அவசியமிருக்கு. இதில் கட்டுடைப்பும் அவசியம். கிராமத்திலிருப்பதை எழுதுவதுதான் தலித் இலக்கியம் எனக் குறுக்குகிறபோது அதன் வளர்ச்சியைத் தடைசெய்வதாகிறது. அதை வெளிப்படையாக வையுங்கள். ஒரு தலித் எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம். எப்படி எழுதினாலும் அதில் ஒரு வித்தியாசம் இருக்கும். ஏனென்றால் வித்தியாசமான முறையில் அவன் வைக்கப்பட்டிருக்கிறான். அதுதான் அதனுடைய பலம். இந்நிலையில் எழுத்தாளர்களுக்கு மதிப்பெண், முத்திரையெல்லாம் வழங்குவது கூடாது.
தலித் இலக்கியம் எனும் வகைமை உருவாகும் முன்பே எழுத ஆரம்பித்துவிட்டீர்கள். நீங்கள் வாழ்ந்த சமூகம் மாற வேண்டும் என்பதை அதில் சொல்ல விரும்பினீர்கள். பிறகு அந்நாவல்களை அடிப்படையாக வைத்து விமர்சன எழுத்தை எழுதினீர்கள். அந்த விமர்சன அணுகுமுறை பற்றி ...
என்னை நானே விமர்சனம் செய்துகொள்வது இங்கு முக்கியமல்ல. ஆனாலும் நான் செய்துகொள்கிறேன். ஆனால் தலித் அல்லாத எழுத்தாளர்கள் தங்களைச் சுயவிமர்சனம் செய்துகொண்டது உண்டா என்றால் இல்லை. எந்த எழுத்தாளரின் அப்பாவும் போற்றுதலுக்குரியவராக, மாமனிதராகத்தான் கட்டமைக்கப்படுகிறார். அப்பாவின் குடி, வன்முறை பற்றியோ சாதிரீதியாகப் ‘பறையா’ என்று திட்டியதைப் பற்றியோ ஒருவரும் வாக்குமூலம் தந்து எழுதியதில்லை. இந்த எழுத்தாளர்களின் அப்பாக்களும் உறவினர்களும் நல்லவர்களாக இருந்திருந்தால் சமூகம் வேறுமாதிரி அல்லவா இருந்திருக்கும். சுயவிமர்சனப் பார்வையோ நுட்பமான பார்வையோ இங்கு இல்லை. ஆகிருதியான ஆளுமையிடம் சுதந்திரமாகக் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள வரும் தயக்கத்தைப் போலத் தன் அனுபவத்தை, குடும்பத்தில் நடந்ததாகக்கூட எழுத முடியவில்லை. ஆனால் இவர்கள் தலித் தன் வரலாற்றைச் சுவைத்துப் படிப்பதன் பொருள் என்ன, நம்மால் எழுத முடியாததை அவர்களே எழுதுகிறார்கள் என்பதுதான். அப்பாக்களிடமிருந்து கற்றுக்கொண்டது என்ன? மீறிச் செய்தது என்ன என்பதையெல்லாம் ஒருபோதும் ஆராய்ந்ததில்லை. என்னுடைய பழையன கழிதல் நாவலில் வரும் ஒரு பாத்திரம் தாழ்த்தப்பட்டோர் தலைவராக வருகிறது. அப்பாத்திரத்தை விமர்சனத்திற்கு உள்ளாக்குகிறேன். மறுவருகையின்போது அது ஆசிரியரின் அப்பா என்கிறேன். அப்புறம் எந்தெந்த இடத்தில் புனைவை எழுதினேன், நிஜம் எழுதினேன் என்று ஒப்படைக்கிறேன். அதையும் ஒரு புனைவாகவே திரும்பவும் எழுதுகிறேன்.
அவை தலித் மனநிலையிலிருந்து எழுதப்பட்டவைதானா?
எந்த மனநிலையிலிருந்து எழுதப்பட்டது என்பது முக்கியமல்ல. எது மனத்தை ஆக்கிரமித்திருந்தது, எது எழுத்தானது என்பதுதான் முக்கியம். நாவலைப் படிக்கும்போது தெரியும் எது ஆக்கிரமித்திருந்தது என்று. தலித் இலக்கிய எழுச்சிக்குப் பின்னாலும் திரும்ப நான் அதை எழுதறேன். பாதிக்கப்பட்ட மனநிலையும் சாதி என்னும் இறுக்கமான கட்டமைப்பும் அதில் வெளிப்பட்டிருக்கின்றன. அதுதான் முக்கியம். என் நாவலைத் தலித் நாவல் அல்ல என்றனர். நான் அப்படி அறிவித்துக்கொள்ளவில்லை. முதலில் ராஜ்கௌதமனால் தான் அந்த விமர்சனம் வைக்கப்பட்டது. பாமாவின் நாவலைத் தூக்கி நிறுத்த எழுதப்பட்ட விமர்சனம் அது. ஆனால் அவருடைய அறிவிப்பை நான் சந்தேகப்படுகிறேன். விமர்சனம் உண்மையென்றால் பாமாவின் நாவலுக்கு முன் ஏன் எழுதப்படவில்லை?
உங்களுடைய வாசிப்பு எப்படியிருக்கிறது?
நான் எழுதத் தொடங்கியபோது பெரிதாய்ப் படித்துவிடவில்லை. படித்ததெல்லாம் காண்டேகர், சரத்சந்திரர், சோவியத் நாவல்கள்தாம். எழுத ஆரம்பித்த பின்னால்தான் பரவலாகப் படித்தேன். காப்கா பிடிக்கும். தமிழில் ஜெயகாந்தன், பிறகு அசோகமித்திரன். உறுத்தாத எளிமையான சொல்லல் முறை அவருடையது. தேர்ந்தெடுத்த வாசிப்பில் நிறையப் பேர் உண்டு. எழுத்தாளர் ஒருவரின் எல்லாப் படைப்புகளும் கவர்ந்ததில்லை. அதே சமயம் ஓரிரண்டு படைப்புகள் என்றாலும் அருமையாக எழுதியவர்கள் உண்டு. போர்ஹே, மார்க்குவெஸைப் படித்தபோது பிடித்திருந்தது. இப்போது சாருநிவேதிதாவின் சில படைப்புகள். அதிலும் அவர் எழுதும்முறை படிக்கும் படியாய் இருக்கும். தலித் எழுத்தாளர்களில் இமையம் முக்கியமானவர். அண்மையில் ஆதவன் தீட்சண்யா படித்தேன். பெண் எழுத்தில் குட்டிரேவதி. ஒரு தொகுப்பிலுள்ள எல்லாக் கவிதைகளும் பிடிக்காவிட்டாலும் மிகவும் பிடித்த கவிதைகளை எழுதிய பெண் படைப்பாளிகள் உண்டு. மாலதி மைத்ரி, தமிழச்சி, சல்மா, உமாதேவி, சுகிர்தராணி போன்றோர் தெறிப்பான கவிதைகளை எழுதியுள்ளனர்.

நன்றி: காலச்சுவடு(ஏப்ரல்,2009)