Tuesday, June 30, 2009

சிவம் அவர்களின் நினைவு நிகழ்வும் பேருரையும்

நினைவுப் பேருரை: பேராசிரியர் சிவசேகரம்

காலம்: யூலை 04, 2009 (சனிக்கிழமை 4.30 பி.ப)

இடம்: Everest Banquet Hall
1199 Kennedy Road, Toronto

Sunday, June 28, 2009

Toronto Pride Parade - 2009

"Won't Stop Can't Stop"
June 29, 2009

இன்று ரொறொண்டோவில் 29வது Pride Parade நடைபெற்றது. LGBTTIQQ2S communities என்பவற்றில் Lesbian, Gay, Bisexual, Transsexual, Transgender, Intersex, Queer, Questioning, Two-Spirited ஆகியவர்கள் உள்ளடக்கப்படுகின்றனர். ஒவ்வொரு வருடமும் ஒரு கோசத்தை உள்ளடக்குவதுமாதிரி, இம்முறை 'நிறுத்த மாட்டோம், நிறுத்த(வும்) முடியாது' என்பதாய் இருந்தது.

இத்தோடு LGBTTIQQ2S னருக்கு ஆதரவளித்தும், பாலஸ்தீனியர்களுக்கான நாட்டை அங்கீகரிக்கக் கோரியும் No One Is Illegal அமைப்பும் பங்குபற்றியிருந்தது.

























Thursday, June 11, 2009

யாழ்ப்பாணக் குறிப்பேடு : அநாமதேயன்

யாழ்ப்பாணம்
20.03.2009

இத்துடன் யாழ்ப்பாணக் குறிப்பேடு எனும் யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலைமைகளைப் பிரதிபலிக்கும் விடயங்களை உள்ளடக்கிய பகுதியை அனுப்பிவைக்கிறேன். எனது சொந்தப் பெயரைப் பாதுகாப்பு நோக்கங்கருதிக் குறிப்பிடவில்லை. இங்கிருந்து அனுப்பப்படும் தபால்கள் கிழித்து வாசித்த பின்னரே அனுப்பப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. சிலவேளை இப்பிரதி உங்களுக்குக் கிடைக்காமலும் போகலாம். தற்செயலாகக் கிடைத்தால் காலச்சுவட்டில் பிரசுரிப்பீர்கள் என நம்புகிறேன். பிரசுரிப்பதும் பிரசுரிக்காமல் விடுவதும் உங்களைப் பொறுத்தது. பிரபாகரனின் படம் முகப்பில் வெளியான ‘ஆனந்த விகட’னை விற்பனைசெய்தமைக்காக பூபாலசிங்கம் புத்தகசாலை உரிமையாளர் ஸ்ரீதரசிங் கைதுசெய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டிருப்பதை அறிந்திருப்பீர்கள். இதுதான் ஈழத்தின் இன்றைய நிலவரம்.

அநாமதேயன்


குறிப்பு (1)

மட்டக்களப்பிலிருந்து சலீம் தொலைபேசியில் கதைத்தான். ஜூலை 2008 காலச்சுவடு பற்றிய பேச்சு வந்தது. சலனி, நவாஸ் சௌபி ஆகியோரது கவிதைகளும் 1983 கறுப்பு ஜூலை பற்றிய சிறப்புப் பகுதியும் அதற்கேற்ற முகப்புப் படமும் தாங்கி அவ்விதழ் வெளிவந்திருப்பதாகச் சொன்னான். எனக்கு அது இதுவரை வாசிக்கக் கிடைக்கவில்லை. யாழ்ப்பாணத்திலுள்ள பூபாலசிங்கம் புத்தகசாலையில் பலதடவைகள் விசாரித்தும் வரவில்லையென்று சொன்னார்கள். சிற்றிதழ்களுடன் பரிச்சயமுள்ள நண்பன் ஒருவனிடம் இது பற்றிக் கேட்டேன். 1983 கறுப்பு ஜூலை பற்றிய சிறப்புப் பகுதி அவ்விதழில் இடம்பெற்றுள்ளதால் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு அவ்விதழை எடுத்துவர இராணுவம் தடைவிதித்துள்ளதாகச் சொன்னான். இதேபோல் செப்ரெம்பர் 2006 காலச்சுவடு இதழின் முகப்பில் ‘சுதந்திர இலங்கை’க்குள் இராணுவ ‘வீரன்’ ஒருவன் நின்றுகொண்டு ‘Stop’ எனக் காட்டும் (ஏ-9 வீதி மூடப்பட்டிருப்பதை வெளிப்படுத்தும்) படம் இடம்பெற்றதால் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்பட்ட அவ்விதழின் எல்லாப் பிரதிகளினதும் முகப்புக் கிழிக்கப்பட்டிருந்ததையும் நினைவுகூர்ந்து ‘ஒக்கமே மஹிந்த சிந்தனையாக்’ (எல்லாம் மகிந்த சிந்தனை) எனச் சிரித்தான்.

குறிப்பு (2)

இப்போது நான் செய்தித்தாள்களைப் பார்ப்பதைத் தவிர்த்துவருகிறேன். ‘புதுக்குடியிருப்பில் எறிகணை வீச்சு’, ‘நூற்றுக்கு மேற்பட்டோர் உடல் சிதறிப் பலி’, ‘ஐம்பதிற்கும் மேற்பட்டோர் படுகாயம்’, ‘வீதியெங்கும் சடலங்கள்’ எனத் தலைப்பிட்டு ஒவ்வொரு நாளும் கண்டு சகிக்க முடியாத படங்களுடன் யாழ்ப்பாணத்துச் செய்தித் தாள்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இரண்டு மூன்று தினங்கள் இவற்றைத் தொடர்ந்து வாசித்ததில் சாப்பிட முடியவில்லை. உறங்க முடியவில்லை. கனவில்கூடப் படுக்கை விரிப்புகளிலும் சாக்குகளிலும் கூழாகிப்போன பிரேதங்கள் அள்ளப்படும் காட்சிகளே தொடர்ந்து வருகின்றன. அலென்ரனேயின் ஹிரோஸிமா மொர் அமோர் திரைப்படந்தான் உடனடியாக நினைவுக்கு வருகிறது. இணையதளத்துடன் பரிச்சயமுள்ள நண்பனொருவன் வீட்டிற்கு வந்திருந்தபோது இணையதளமொன்றில் ‘மனதைரியமுள்ளவர்கள் மட்டும் பார்க்கலாம்’ என்ற தலைப்பில் சில படங்களைப் பார்க்க நேர்ந்ததாகவும் எறிகுண்டு வீசப்பட்டுக் கருகிப்போன நிலையில் பற்கள் வெளித்தள்ளிய நிலையில் குவியல் குவியல்களாகச் சடலங்கள், தலை சிதறிய முண்டங்கள் அப்படங்களில் நிரம்பியிருந்ததாகவும் ஐந்தாறு படங்களுக்கு மேல் பார்க்க முடியவில்லையென்றும் சொன்னான்.

குறிப்பு (3)

அண்மையில் யாழ்ப்பாணம் மத்தியூஸ் வீதியில் வசிக்கும் தேவராஜா சாளினி (வயது 18) சுருக்கிட்டுத் தற்கொலைசெய்துகொண்டதாகத் தகவல் வந்தது. இப்பெண் சென்ற வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தேற்றி 2AB என்ற பெறுபேற்றைப் பெற்றிருந்தும் ‘Z’ முறைத் தரப்படுத்தலின் காரணமாக யாழ் பல்கலைக் கழகத்தின் கலைப்பீட உள்நுழைவுக்கான அனுமதியைப் பெற முடியாத நிலையில் மனவிரக்தியுற்றுத் தற்கொலை செய்துகொண்டதாகவே கூறப்பட்டது. ஆனால் உண்மையில் நடந்ததோ வேறு. சம்பவம் நடைபெற்ற தினத்தில் இப்பெண் வீட்டில் தனித்திருந்துள்ளார். இவரது வீட்டிற்கருகில் இராணுவக் காவலரண் அமைந்துள்ளது. அங்கே காவற்பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் வீட்டினுள் புகுந்து சாளினியை வல்லுறவுக்குட்படுத்திக் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டுத் தூக்கில் தொங்கவிட்டுச் சென்றுள்ளனர். வெளியே சென்றிருந்த பெற்றோர் திரும்பி வந்து பார்த்தபோது தூக்கில் தொங்கிய சாளினியின் தொடைப் பகுதியிலிருந்து இரத்தம் கசிந்திருந்தது. படையினர் சாளினியை வல்லுறவுக்குட்படுத்தியமைக்கு வலுவான ஆதாரங்கள் இருந்தும் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்க முடியவில்லை. இதுதவிர சாளினியின் மரண விசாரணை அறிக்கைகூடத் தற்கொலையால் மரணம் சம்பவித்துள்ளதாகவே வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் தற்போது யாழ்ப்பாணத்தில் பரவலாக நடைபெற்றுவருகின்றபோதிலும் வெளிக்கொணர முடியாத நிலையில் பத்திரிகையாளர்களையும் மனித உரிமை ஆர்வலர்களையும் எந்நேரமும் துப்பாக்கிகள் குறிபார்த்துக்கொண்டிருக்கின்றன.

குறிப்பு (4)

யாழ்ப்பாணத்துக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வருகை தந்துவிட்டால் மக்கள் பதகளிக்கத் தொடங்கிவிடுவர். அவர் கொழும்புக்குத் திரும்பிச் செல்லும்வரை ஆகக் குறைந்தது நாலைந்து பேராவது ‘அடையாளம் தெரியாத நபர்களால்’ சுட்டுக்கொல்லப்படுவர். அவர் யாழ்ப்பாணத்திற்கு வரும்போதே இம்முறை யார் யாரைச் சுட்டுக்கொல்வது என்ற பட்டியலுடனேயே வருவார். யாழ்ப்பாணத்திற்கு வந்து இறங்கியதுமே அப்பட்டியலைத் தமது தொண்டரடிப்பொடிகளிடம் கொடுத்துவிடுவார். அவர்களும் நாளுக்கொருவராகப் போட்டுத்தள்ளிவிடுவர். பத்திரிகை நண்பர் ஒருவரைச் சந்திக்க ஒரு நாள் சென்றேன். அவர் பரபரப்பாக இருந்தார். காரணம் கேட்டேன். ‘டக்ளஸ் யாழ்ப்பாணம் வந்திட்டானடாப்பா. இனி Front pageஇல் சுட்டுக் கொலைக்கெண்டு ஒரு column ஒதுக்க வேணும்’ என்றார். இனி வரவிருக்கும் நாள்களை எண்ணிப் பார்க்கும்போது பயமாக இருக்கிறது.

சுட்டுக்கொல்வது ஒருபுறமிருக்க யாழ் மக்கள் மோசமாக அவமதிப்பிற்குள்ளாகும் இன்னொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டியுள்ளது. சமூக சேவைகள், சமூகநலத் துறை அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்து, ஸ்ரான்லி வீதியிலமைந்துள்ள ஸ்ரீதர் தியேட்டரில் தங்கியிருப்பது வழக்கம். அக்காலப்பகுதியில் கல்லூரி அதிபர் மற்றும் ஆசிரியர்கள், கூட்டுறவுச் சங்கப் பணியாளர்கள், அரசாங்க அலுவலர்கள் ஆகியோரைத் தனது அலுவலகத்திற்கு அழைத்து மாநாடுகள் நடத்துவார். இதுதவிரப் பொதுமக்கள் குறைகேள் சேவையையும் நடத்துவார். இதற்கென யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் வருகைதரும் மக்கள் மோசமான உடற்சோதனைக்கு உள்ளாக்கப்பட்டே அமைச்சரைச் சந்திக்க முடியும். உடற்சோதனை சாதாரணமானதல்ல. ஆண், பெண் இருபாலாரும் தனித்தனி மறைவிடங்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டே இவ்வுடற்சோதனை நிகழ்த்தப்படுகிறது. இதன்போது பெண்களே மிகுந்த நெருக்கடிக்குள்ளாகின்றனர். மார்பகங்கள் உண்மையானவைதானா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளப் பல தடவை அமுக்கப்படுகின்றன. யோனித் துவாரங்களுக்குள் விரல் நுழைத்தும் பார்க்கப்படுகிறது. ஆண்களுக்கோ விதைப்பைகள் நசுக்கிப் பார்க்கப்படுகின்றன. இக்‘கௌரவிப்பு’ நிகழ்வுகளை மூலைக்குமூலை பொருத்தப்பட்டிருக்கும் கமராக்கள் பதிவுசெய்கின்றன. எனக்குத் தெரிந்தவொரு பெண் தனது பணி இடமாற்றம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைச் சந்திக்கப் போய்வந்தாள். அவளிடம் இவ்வுடற்சோதனை குறித்து விசாரித்தபோது சொன்னாள், “எங்களுக்கு மார்பகப் புற்றுநோய் இருக்கா? எண்டு பரிசோதிக்க ஆஸ்பத்திரிக்குப் போகத் தேவையில்லை. ஸ்ரீதர் தியேட்டருக்குப் போனால் போதும்.”


குறிப்பு (5)

வன்னிப் பெருநிலப்பரப்பில் நிகழ்ந்துகொண்டிருக்கும் அகோர எறிகணை வீச்சு மற்றும் கண்மூடித்தனமான விமானக் குண்டுவீச்சுத் தாக்குதல்களால் காயமடைவோரை சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தின் வழித்துணையோடு வவுனியா மற்றும் திருகோணமலை வைத்தியசாலைகளுக்குக் கொண்டுசென்று சிகிச்சையளிப்பதுடன் அவ்வைத்தியசாலைகளைச் சுற்றிப் பலத்த இராணுவப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. எவரும் வைத்திய சாலைகளுக்குட் சென்று நோயாளரைப் பார்வையிட முடியாத நிலைமையே காணப்படுகின்றது. இந்நிலையில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் உதயன், தினக்குரல், வலம்புரி ஆகிய நாளிதழ்களில் வன்னியில் காயமடைந்து சிகிச்சைக்காக வவுனியா மற்றும் திருமலை வைத்திய சாலைகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டவர்களின் பெயர்ப்பட்டியல்கள் பிரசுரமாகிவருகின்றன. சில தினங்களுக்கு முன்பு பத்திரிகை வாங்கக் கடைக்குச் சென்றபோது பத்திரிகைகள் விற்றுத் தீர்ந்துவிட்டன. கடைக்காரர் சொன்னார், ‘இப்ப காயப்படுகிற ஆக்களின்ரை பெயர்ப்பட்டியல் வாறதால பேப்பரெல்லாம் உடனை முடிஞ்சுபோகிடுது. மேலதிகமாக அஞ்சு பேப்பர் எடுத்தும் போதாமலிருக்கு. இன்னும் பத்துப் பேப்பர் மேலதிகமாய் எடுத்தால்தான் சரிப்பட்டுவரும்.’ இதைக் கேட்டு நான் வேதனைக்குள்ளானேன். யாழ்ப்பாணத்தில் பத்திரிகை விற்பவர் உட்பட எல்லா வியாபாரிகளுமே யுத்தம் தொடர்வதைத்தான் விரும்புகின்றனர்.

மேலும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துசேரும் வன்னி மக்களைப் படைத்தரப்பினர் வவுனியா மற்றும் மன்னார் பகுதிகளிலமைக்கப்பட்ட புனர்வாழ்வு முகாம்களில் தங்கவைத்திருப்பதாகச் செய்திகள் வெளியாகின்றன. இம்முகாம்களிலிருந்து எவரும் வெளியேறிச் செல்ல முடியாதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றிலிருக்கும் இளம்வயதினரின் நிலைமை கேள்விக்குள்ளாகி வருகின்றது. கடந்த சில தினங்களில் இம்முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த இளம்வயதினரில் 28 பேர் காணாமற்போயுள்ளனர். மேலும் இங்குள்ள பெண்களை விசாரணைக்கென அழைத்துச்சென்றுள்ள படைத் தரப்பினர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி எரித்துக் கொன்றுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இதை முற்றாக மறுத்துள்ள படைத்தரப்பானது புலிகள் தமது கட்டுப்பாட்டிலுள்ள மக்கள் வெளியேறிச் செல்வதைத் தடுக்குமோர் உத்தியாகவே இப்பொய்ப் பிரசாரத்தை மேற்கொண்டுவருவதாகத் தெரிவித்துள்ளது.

குறிப்பு (6)

அண்மையில் வடமராட்சிப் பகுதியில் நடைபெற்ற துவாரகனின் ‘மூச்சுக் காற்றால் நிறையும் வெளிகள்’ கவிதைத் தொகுதிக்கான விமர்சனக் கருத்தரங்கில் ஓர் இலக்கியவாதி கருத்துரை வழங்கியபோது இக்கவிதை நூலுக்கான விமர்சனக் குறிப்பொன்றைக் காலச்சுவடு டிசெம்பர் 08 இதழில் ராஜமார்த்தாண்டன் எழுதியிருப்பதாகவும் அக்குறிப்பில் ‘முதுகுமுறியப் பொதிசுமக்கும் ஒட்டகங்கள்’, ‘வெள்ளெலிகளோடு வாழுதல்’ போன்ற சமகால ஈழத்தின் சூழலைப் பிரதிபலிக்கும் கவிதைகளை சூழ்நிலை பற்றிய புரிந்துணர்வின்மையால் ராஜ மார்த்தாண்டன் முக்கியத்துவப்படுத்தவில்லையெனவும் காலச்சுவடு பெப்ருவரி 09 இதழில் ஈழத்துச் சிறுகதையென்ற பேரில் வெளியாகியுள்ள தி. மயூரனின் ‘கண்ணீர் தேசம்’ என்ற கதையும் சமகாலச் சூழலைப் பற்றிய காலச்சுவட்டினது புரிந்துணர்வின்மையையே எடுத்துக் காட்டுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இவ்விமர்சனக் கருத்தரங்கு முடிவுற்று இருதினங்களின் பின்பே பெப்ருவரி மாதக் காலச்சுவடு எனக்குக் கிடைத்தது. தி. மயூரனின் சிறுகதையை வாசித்தபோது முழு அபத்தமாகத் தோன்றியது. குறித்த எழுத்தாளரைப் பற்றிய அறிமுகத்தில் தினக்குரல், சுடரொளிப் பத்திரிகைகளில் கதை எழுதியிருப்பவர் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இவ்விரு பத்திரிகைகளுமே சராசரிக்கும் கீழான தரத்திலமைந்த சிறுகதைகளையே பிரசுரித்துவருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இக்கதையில் மாதவி என்ற பெண்ணைப் படையினனொருவன் விரும்புவதாகவும் அவனைத் திருமணம்செய்து தருமாறு அவளது வீட்டிற்கு வந்து கேட்பதாகவும் அவளது தந்தை மறுத்து ஆவேசிப்பதாகவும் பின்னர் அவளுடன் கொழும்புக்குப் புறப்படத் தயாராகவுள்ள நிலையில் இரவு வீட்டிற்குள் படையினர் உட்புகுந்து மாதவியைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயலும்போது அவள் குறித்த படையினனைத் துப்பாக்கியால் சுட்டுக்கொல்வதாகவும் வருகிறது. எழுத்தாளர் ராஜேஷ்குமாரையும் சுஜாதாவையும் நிறைய வாசித்து வருகிறார் என நம்புகிறேன். ஏனெனில் அவர்களின் கதைகளிலேயே மாதவிகள் தம்மைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்த வருபவர்களைச் சுட்டுக்கொல்வது சாத்தியம். சமகால யாழ்ப்பாணச் சூழலில் இது சாத்தியமல்ல. யாழ்ப்பாணத்தில் படையினர் பெண்களை விரும்புவது வழமை. ஆனால் அவர்களது அணுகுமுறை மயூரனின் கதையில் வருவது போன்றதல்ல. முற்றிலும் வேறுவிதமானது. படையினனொருவன் தமிழ்ப் பெண்ணொருத்தியை விரும்பினால் அவளை அடைய அதற்குப் பல்வேறு மாற்று வழிகளைக் கையாளக்கூடிய சாத்தியமுள்ளது. இதற்கான ஒரு தகுந்த எடுத்துக்காட்டாக தேவராஜா சாளினியின் கொலைச் சம்பவத்தைக் குறிப்பிடலாம் [பார்க்க: குறிப்பு(3)]. இதைத் தவிர வீட்டைச் சோதனையிடுதல் என்னும் பேரில் உள்நுழைந்து அங்கே வெடிபொருட்களை மறைத்துவைத்துவிட்டு வீட்டிலுள்ளவர்களே மறைத்துவைத்திருந்ததாகவும் அவர்களுக்குப் புலிகளுடன் நீண்ட காலமாகத் தொடர்பிருக்கிறதெனவும் கூறி அவ் வீட்டிலுள்ளவர்களைக் குறிப்பாக இளம் பெண்களை, கைதுசெய்து கொண்டுசென்று பாலியல் வல்லுறவுக்குட்படுத்தும் சம்பவங்களும் நிகழ்ந்துவருகின்றன. மேலும் தற்போது யாழ்குடா நாட்டில் இரவு 9:00 மணி தொடக்கம் அதிகாலை 4:30 மணிவரை ஊரடங்குச் சட்டம் அமலிலிருப்பதால் நள்ளிரவு வேளையில் படையினரதும் ஒட்டுக்குழுக்களினதும் அட்டகாசம் எல்லைமீறியதாகக் காணப்படுகிறது. அண்மையில் யாழ்ப்பாணத்திலுள்ள நாயன்மார்கட்டு என்ற பகுதியிலமைந்துள்ள அரச நிர்வாக அலுவலர் ஒருவரின் வீட்டினுள் புகுந்த ஆயுததாரிகள் அவ்வலுவலரின் மகளை ஆயுதமுனையில் மிரட்டிப் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியுள்ளனர். இது போன்ற சம்பவங்கள் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் நிகழ்ந்துவருவது வழமையாகிவிட்டது. இதுதவிரப் பதின்ம வயதுப் பிள்ளைகளை ‘எனது ஆசையைப் பூர்த்திசெய்யாவிடின் உனது குடும்பத்தையே சுட்டுக் கொன்றுவிடுவேன்’ என மிரட்டி ஆயுததாரிகள் சிலர் வல்லுறவுக்குள்ளாக்கிய சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. அண்மைக் காலமாக யாழ்ப்பாணத்திலுள்ள மனித உரிமை ஆர்வலர்கள் சிலர் யாழ்குடா நாட்டில் திருமணமாகாமலே கருத்தரிக்கும் பெண்களினது எண்ணிக்கை (குறிப்பாகப் பதின்ம வயதினர்) வேகமாக அதிகரித்துவருவதாகவும் இதன் பின்னணியில் படையினரும் ஒட்டுக்குழுக்களுமே இருந்துவருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்நிலையில் தி. மயூரனின் ‘கண்ணீர் தேசம்’ என்ற சிறுகதை காலச் சூழலைப் பிரதிபலிப்பதில் எவ்வளவுக்கு விலகி நிற்கிறது என்பதை வாசகர்கள் உணர்ந்துகொள்ளலாம்.

குறிப்பு (7)

வெகுசன இதழொன்றில் உதவி ஆசிரியனாகப் பணிபுரிந்து வரும் நண்பன் ஒருவன் வில்லு என்ற திரைப்படம் தொடர்பாக விமர்சனக் குறிப்பொன்றை எழுதித் தரும்படி கேட்டுக்கொண்டான். வில்லு யாழ்ப்பாணத்தில் வெளியாகி ஓரிரு தினங்களே ஆகியிருந்த நிலையில் வீடியோக் கடைகளில் சீடியும் கிடைக்காதென்பதால் சீடி கிடைத்ததும் படத்தைப் பார்த்துவிட்டு எழுதுவதாக நண்பனிடம் சொன்னேன். அவன் படம் இப்போதுதான் வெளியாகியிருப்பதால் சீடி வெளி வருவதற்கு ஒரு மாதமாகுமென்றும் அத்திரைப்பட விமர்சனம் அடுத்த கிழமை தன் இதழில் வெளியாக வேண்டுமென்றும் என்னைத் திரையரங்கில் போய்ப் பார்த்துவிட்டு உடனடியாக விமர்சனத்தை எழுதும் படியும் நுழைவுச் சீட்டுக்கான செலவைத் தானே பொறுப்பேற்றுக்கொள்வதாகவும் அவன் கேட்டுக் கொண்டதால் அப்படம் வெளியாகி ஓடிக்கொண்டிருந்த திரையரங்குக்குப் போனேன். நான் போனது காலை 10:30 காட்சிக்கு. திருவிழாவைப் போல் கூட்டம் அலை மோதியது. பிற்பகல் 2:30 காட்சியைப் பார்க்கவுள்ளோரும் அப்போதே வந்திருந்தனர். நான் திரும்பிவிடலாமென்று தான் நினைத்தேன். அங்கே வந்திருந்த நண்பனொருவன் நுழைவுச் சீட்டெடுக்க முண்டியடித்துக்கொண்டு நின்றிருந்தவர் வரிசையில் தென்பட்டான். அவனிடம் 150 ரூபாய் கொடுத்துப் பின்வரிசை நுழைவுச் சீட்டை எடுத்துக்கொண்டு உள்ளே போனேன். ஆசனங்கள் ஏற்கெனவே நிறைந்திருந்தன. ஒதுக்குப்புறமாக இருந்த ஆசனமொன்றில் அமர்ந்தேன். எனக்குப் பின்புறம் ஙிஷீஜ் என்னும் பெயரில் அமைக்கப்பட்ட 200 ரூபாய் நுழைவுச் சீட்டுக்குரிய கூண்டுகளுக்குள் சோடிகளாகச் சிலர் அமர்ந்திருந்தனர். ஒருவாறு 10:45 மணியளவில் படம் தொடங்கியது. இளம் வயதினர் துள்ளிக்குதித்துக் கூக்குரலிட்டு ஆரவாரித்தனர். சிலர் உள்ளங்கைகளில் கற்பூரம் கொழுத்திச் சுற்றினர். வேறு சிலர் கரகோச மெழுப்பியும் விசிலடித்தவாறுமிருந்தனர். இந்த ஆரவாரங்கள் ஓய்வதற்குச் சுமார் பத்து நிமிடங்கள் எடுத்தன. பின்னர் கூண்டுப் பகுதியிலிருந்து இடைக்கிடையே (படம் முடியும்வரை) முனகல் சத்தங்கள் கேட்டன. உண்மையில் நான் திகைப்படைந்துபோனேன். நான் யாழ்ப்பாணத்தில்தான் இருக்கிறேனா? என ஒரு கணம் அதிர்ந்துதான் போனேன். படம் முடிந்து வரும்போது நண்பனிடம் இது குறித்த ஆதங்கத்தைத் தெரிவித்தேன். அவன் சிரித்து விட்டுச் சொன்னான். ‘யாழ்ப்பாணத்தில இண்டைக்கு மொத்தமாக 3 தியேட்டர் இயங்குது. எல்லாத்திலயும் இது நடக்குது. நாதன் தியேட்டருக்குப் போய்ப்பார். மூன்றாவது மாடியில படுக்கையறை வசதியளுமிருக்கு. அதுக்குள்ள சோடியள் மட்டுந்தான் போகலாம். சோடியள் முதல்ல சேர்ந்து வாறேல்ல. பொடியன் வந்து தியேட்டருக்குள்ள நிண்டுகொண்டு மிஸ்ட்கோல் அடிக்கப் பெட்டை வரும். இரண்டு பேரும் ரிக்கற் எடுத்துக்கொண்டு மூண்டாம் மாடிக்குப் போவினம். இன்ரேர்வலுக்கும் வெளில வராயினம். ஆனால் படம் முடிய முன்னம் வெளிக்கிட்டு வேற வேற திசையால போவினம்.’ அவன் இதையெல்லாம் ஒரு சாதாரண நிகழ்வாகவே கருதுகிறான். யாழ்ப்பாணத்தின் பண்பாடு, விழுமியம் என அனைத்தையுமே திட்டமிட்டுச் சீரழிக்கும் செயற்பாடுகள் 1996 காலப்பகுதியில் யாழ்ப்பாணம் படையினரின் ஆக்கிரமிப்பிற்குள் வந்ததும் படிப்படியாக ஆரம்பித்தன. இதனொரு பகுதிதான் யாழ்நகரில் திரையரங்குகளை மீளவும் செயற்பட அனுமதி வழங்கியமையாகும். இதைத் தொடர்ந்து 2002 காலப்பகுதியில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்தாகித் தரைவழிப் பாதை திறந்தவுடன் கைத்தொலைபேசிப் பாவனை மிகப் பரவலடைந்தது. இப்போது 2700 ரூபாய் விலையில் டயலொக் நிறுவனம் யாழ்ப்பாணத்தில் கைத்தொலைபேசியை அறிமுகப்படுத்தியுள்ளது. விற்பனை முகவர் நிலையங்களெங்கும் இளம் பிராயத்தினர் கூட்டம் அலைமோதுகிறது. இன்றைக்கு யாழ்ப்பாணத்தில் கைத்தொலைபேசிகளை நோண்டிக்கொண்டும் காதில் வைத்துக்கொண்டும் அலையும் இளம் பிராயத்தினரே நீக்கமற நிறைந்துள்ளனர்.

இதற்கிடையில் நான் வில்லு பற்றிய எனது விமர்சனத்தை நண்பனுக்கு அனுப்பிவைத்தேன். குறித்த விமர்சனம் அவ்வெகுசன இதழில் வெளிவந்ததைப் பார்த்தபோது உண்மையில் அதிர்ச்சியடைந்தேன். நான் மூன்று பக்கங்களில் எழுதியிருந்த விமர்சனம் ஒரு பக்கத்தில் சுருக்கப்பட்டு இடைவெளிகளுக்குள் வில்லுவின் வண்ணமயமான ‘ஸ்ரில்’கள் சொருகப்பட்டிருந்தன. நண்பனிடம் தொடர்புகொண்டு கேட்டபோது எனது விமர்சனத்தைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட ஆசிரியர் குழுவானது நயன்தாரவைப் பற்றி மோசமாக எழுதப்பட்டிருப்பதாகவும் அவர் ஈழத் தமிழர்களுக்கு 5,00,000 ரூபாவை நன்கொடையாக வழங்கியிருப்பதால் இவ்விமர்சனம் முழுமையாகப் பிரசுரமானால் வாசகர்களின் எதிர்ப்பைச் சந்திப்பதுடன் விஜய் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதமிருந்ததால் அவரைக் கிண்டலடித்து எழுதிய பகுதிகளை வெளியிடுவதும் குறித்த இதழின் விற்பனையில் சரிவை ஏற்படுத்திவிடுமெனக் கருதி எனது விமர்சனம் சுருக்கப்பட்டதாக அவன் விளக்கமளித்ததுடன் வெகுவிரைவில் நுழைவுச் சீட்டு மற்றும் விமர்சனப் பகுதிக்கான கொடுப்பனவுகளை உள்ளடக்கிய 650 ரூபாய் பெறுமதியான காசோலை எனது முகவரிக்கு அனுப்பிவைக்கப்படுமெனவும் தெரிவித்தான்.

குறிப்பு (8)

இந்த வருடத்தின் பெப்ருவரி நான்காம் திகதி இலங்கை சனநாயகச் சோசலிசக் குடியரசின் அறுபத்தொராவது சுதந்திர தினம் தலைநகர் கொழும்பில் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது. முன்னைய வருடங்களில் கொண்டாடப்பட்ட சுதந்திர தினங்களைக் காட்டிலும் இது சிங்களப் பேரினவாதிகளுக்கு இவ்வாண்டின் சுதந்திர தினம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துவிட்டது. ஏனெனில் இவ்வாண்டின் தொடக்கத்தில் புலிகளின் கோட்டை எனக் கருதப்பட்ட கிளிநொச்சியைப் படையினர் கைப்பற்றி ஏ-9 வீதியையும் திறந்துவிட்டனர். இதன் பிரதிபலிப்போ யாழ்ப்பாணத்தில் வேறுவிதமாக அமைந்திருந்தது. சுதந்திர தினத்திற்குச் சில வாரங்கள் முன்னதாகவே மோட்டார் சைக்கிள்கள் உட்படச் சகல வாகனங்கள் மற்றும் வீடுகளிலும் சிங்கக் கொடி பறக்கவிடப்பட வேண்டுமென்ற கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வியாபாரிகள் பாடு படுகொண்டாட்டம்தான். ரூ. 300 தொடக்கம் ரூ. 1000 வரையான விலைகளில் சிங்கக் கொடிகள் அமோகமாக விற்பனையாகின - சிங்கக் கொடியைப் பறக்கவிடாதோர் படையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து குறித்த ஒரு நாளில் சிங்கக் கொடி விற்பனை 25,000 ரூபாயை எட்டியதாகத் தெரியவந்தது. பெப்ருவரி மாத முடிவில் சிங்கக் கொடியின் விற்பனை வருமானம் ரூ. 7,00,000 எனக் கணக்கிடப்பட்டது. யாழ்நகரின் புத்தக சாலை உரிமையாளர் ஒருவர் சொன்னார், ‘புத்தகங்களை விக்கிறதைக் கைவிட்டுட்டு இனிச் சிங்கக் கொடி விக்கலாம்போல இருக்கு.’

குறிப்பு (9)

யாழ்ப்பாணத்தில் மின்விநியோகம் மூன்று மின்பிறப்பாக்கிகள் மூலமே நடைபெற்றுவருகிறது. இதனடிப்படையில் தினமும் மாலை வேளைகளில் 6:30 அல்லது 7:30 மணிக்கு அமல்படுத்தப்படும் மின்வெட்டு ஏறத்தாழ இரண்டு மணித்தியாலங்கள்வரை நீடிக்கும். சில தினங்களில் இரவு முழுவதும் மின்வெட்டு நிகழ்வதும் வழமையாகிவிட்டது. பிரதேசச் செயலக மட்டத்தில் மின்சார சபை ஊழியர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலொன்றில் இம்மின்தடை பற்றி விவாதித்தபோது அவர்கள் சட்டரீதியற்ற மின் பாவனை அதிகரித்திருப்பதாகவும் தவிர்க்க முடியாத சில காரணங்களால் நடவடிக்கை எடுக்க முடியாதிருப்பதாகவும் தெரிவித்தனர். அவர்களிடம் தனிப்பட்ட முறையில் விசாரித்தபோது சில இடங்களில் இராணுவத்தினரே தமது முகாம்களுக்குச் சட்டரீதியற்ற மின்னிணைப்புகளை மேற்கொண்டு மின்சாரம் பெறுவதாகவும் வேறு சில இடங்களில் தனிப்பட்டவர்கள் சட்டரீதியற்ற மின் பாவனையை மேற்கொண்டு வருவதையறிந்து அம்மின்னிணைப்புகளைத் துண்டித்து நடவடிக்கை எடுக்க முயன்றபோது இராணுவத்தினர் வந்து மின்னிணைப்புகளைத் துண்டித்தால் சுட்டுக் கொன்றுவிடுவோம் என மிரட்டியதாகவும் வேறுசில இடங்களில் விசாரித்துப் பார்த்தபோது அத்தனிப்பட்டவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் இராணுவத்தினருடன் பாலியல் தொடர்புகளை வைத்திருப்பதாகவும் அறிய முடிந்ததெனத் தெரிவித்தனர்.


ந‌ன்றி:
கால‌ச்சுவ‌டு (மே, 2009)

'தோல்விய‌டைந்த‌து ம‌க்க‌ள்தான்' - தீப‌ச்செல்வ‌னின் நேர்காண‌ல்


தளவாய் சுந்தரம்: யுத்தம் மற்றும் யுத்தத்தின் முடிவு பற்றி மக்கள் என்ன கருதுகிறார்கள்?

தீபச்செல்வன்: யுத்தம் முடிவுக்கு வந்திருப்பது ஒன்றுதான் மக்களுக்கு ஆறுதல்தரக்கூடிய விடயம்;. ஆனால் அதை முடிவுக்கு கொண்டவிதம் கொடுமையான அனுபவங்களைத் தந்திருக்கிறது. குறிப்பாக கடைசித் தாககுதலில் கணக்கிடப்படாத பெரும் எண்ணிக்கையான மக்கள் பலியாகியிருக்கிறர்hகள். யுத்தம் முடிவுக்கு வந்திருப்பதில் இன்னொரு துயரம் ஒளிந்திருக்கிறது. ஈழப்போராட்டம் மற்றும் அதன் கனவுவெளி அழிக்கப்பட்டிருக்கிறது. மீளவும் அதற்காக மக்கள் தலை தூக்கப்போவதில்லை என்ற தோல்வியின் அனுபவ வெளிப்பாடு தரப்பட்டிருக்கிறது. வெறும் இராணுவ வெற்றிகளால் மட்டும் ஒருபோதும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர முடியாது என்பது யுத்தத்தின் முடிவை கேள்விக்குள்ளாக்கிறது.

தேவையற்ற யுத்தம் ஒன்று நிகழந்திருக்கிறது. அதை இலங்கை அரசு சிங்கள இனவாத போக்குடன் தமிழ்மக்கள்மீது திணித்திருக்கிறது. பெரிய அழிவை கண்ட மக்கள் தற்போது எலலாவற்றையும் வெறுத்து ஒதுங்கியிருகக விரும்புகிறார்கள். பெரும் அழிவுடன் முடிந்த யுத்தம் திரும்பவும் தமிழ் மக்களை மீள முடியாத குருட்டுத்தனமான இருளில் தள்ளி விட்டிருக்கிறது. மக்களை தொடர்ந்தும் துயரங்கள் பீடிக்கின்றன. எதுவும் செய்யவும் பேசவும் திறனற்றுக்கிடக்கிறார்கள் எங்கள் மக்கள். ஆயுதங்கள் ஓயப்போவதில்லை என்பதைப்போல தமிழ் மக்கள்மீதான அடக்குமுறை யுத்தம் முடியப்போவதில்லை எனவும் மக்கள் நன்கு உணர்ந்து வைத்திருக்கிறார்கள். அத்துடன் கிழக்கில் பதுங்கியிருக்கிற போராளிகள்மீது அறிவிக்கப்படாத தாக்குதல் நடந்துகொண்டிருக்கிறது.


தளவாய் சுந்தரம்: இந்த யுத்தத்தின் இலங்கை அரசுடன் பின்னணியில் சேர்ந்து இயங்கிய வல்லமையுள்ள நாடுகள் பற்றிய குறிப்பிடுங்கள்?

தீபச்செல்வன்: இந்த யுத்தம் விடுதலைப்புலிகளுக்கு மட்டும் எதிரானது அல்ல. தமிழ் மக்களுக்கும் எதிரானதுதான். இதில் உலகத்தின் வல்லமையுள்ள நாகள் பல சேர்ந்தியங்கியுள்ளன. அதிலும் இந்தியாவின் ஆதிக்கமும் தலையிடும் ஒத்துழைப்பும் வேவ்வேறு வடிவங்களில் இருந்துள்ளன. பிரபாரனை பழிவாங்கும் நோக்கில் பல்லாயிரம் மக்களை கொன்று அவர்களை அலைத்து துயரப்படுத்தி விட்டது இந்தியா.

பாகிஸ்தான் பகிரங்கமாகவே இலங்கை இராணுவ வெற்றியை தனக்குரியதாக உரிமை கோரியுள்ளது. சீனா, அமரிக்கா, ஜப்பான் போன்ற பல நாடுகள் இந்த யுத்தத்தில் இலங்கை அரசுடன் சேர்ந்தியங்கியுள்ளன. எங்கள் தேசத்தின் நிலம் மற்றும் அதன் வளங்களை சுறண்டுகிற அரசியல் பொருளாதார நோக்கத்துடன் இவை செயல்படுகின்றன. உலக அதிகார நிகழ்ச்சி நிரலுக்கு எமது மக்கள் மற்றும் அவர்களின் கனவு பலியாக்கப்பட்டுள்ளது.


தளவாய் சுந்தரம்: இனி ஈழ விடுதலைப் போராட்டம் என்ன ஆகும் என்பது பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

தீபச்செல்வன்: ஈழப்போராட்டத்தை மிகவும் செப்பனிடப்பட்ட கருத்தியலுடன் முன்னெடுக்க வேண்டிய தேவை ஈழச்சமூகத்திற்கு இருந்தது. குறிப்பாக எழுபதுகளின் பிற்பகுதியில் ஈழப்பேராட்டம் தொடங்கியவேளையில் ஈழத்தமிழ் போராளிகளிடம் இருந்த ஒற்றுமை பிறகு இந்திய இலங்கை மற்றும் சருவதேச சதிகளால் சீர்குலைந்துபோனது. அந்த நிகழ்ச்சிநிரலிலுக்கு விடுதலைப்புலிகளது ஆதிக்கம் சாதகமாக இருந்தது. அவர்கள் சகோதரப் போராளிகளை இணைத்து தமிழ் மக்களுக்கான விடுதலையை வென்றெடுத்திருக்க வேண்டும். புலிகள் தவிர்ந்த ஏனைய இயக்கங்களும் புலிகளது ஆதிக்கத்தால் இலங்கையரசிற்கு அடிபணிந்து புலிகளுக்கு எதிராக நிற்பதற்காக மக்களுக்கு எதிராகவும் மாறினர்.

பெரிய ஒறறுமையினமையையும் பிழைகளையும் தந்திருந்தபோதும் கடையிசில் புலிகளது இராணுவ பலம் ஓங்கியிருந்தது. அவர்கள் சிலவற்றை திட்டமிடடு நடத்தினார்கள். நடத்துகிற நிலமும் வல்லமையும் அவர்களுக்கு இருந்தது. அதுவும் மீறிய இன்றைய நிலையில் ஈழப்போராட்ம் என்பது குறித்து மக்களிடம் தேக்கம் இருக்கிறதே தவிர, மீளவும் ஒரு எழுச்சிக்கான இடத்தையோ வாய்ப்பையோ இல்லாமல் செய்திருக்கிறது அரசு. ஈழப்போராட்டம் பற்றி குறிப்பாக இந்த மக்ளே தீர்மானிக்க முடியும். அவர்கள் அதற்காக தமது முழுக்குருதியையும் சிந்தியிருக்கிறார்கள். விலையும் பலியும் கொடுத்திருக்கிறார்கள். இப்படியான துயரமான சூழ்நிலையை ஏற்படுத்தி தனது எண்ணத்தை வெறறியாக்கியிருக்கிறது இலங்கை அரசு. பேராட்டத்திற்கான தேவையிருக்கிறபோதும் அதற்கான சூழல் முற்றிலும் நிர்மூலமாக்கப்பட்டிருக்கிறது.

தளவாய் சுந்தரம்: எல்லாம் போதும், போராட்டங்களை கைவிட்டுவிட்டு, இருக்கும் சூழ்நிலையில் அமைதியான வாழ்க்கையை மேற்கொள்ளலாம் என மக்கள் கருதுகிறார்களா?

தீபச்செல்வன்: அனுபவித்தவை, அலைந்தவை, இழந்தவை, பலியிட்டவை எல்லாம்போதும் என மக்கள் நினைக்கிறார்கள். அளவுக்கதிமான இழப்புக்களையும் உலகத்தால் கைவிடப்பட்ட நிலமைகளையும் உலகத்தின் சூழ்ச்சிகளையும் பேரவலத்தையும் கண்;ட மக்கள் அப்படித்தான் நினைக்கிறார்கள். பேராட்டம் தோல்வியில் முடிந்திருக்கிறது அதை வாய்வாதத்தினாலும் அரசியலுக்காகவும் தர்க்கத்திற்காகவும் பேசி அதற்கு நீட்சிகளை கற்பிக்கிற மனநிலையில் மக்கள் இல்லை. போராட்டம் மக்களிடமிருந்து எல்லாவற்றையும் பறித்துவிட்டது. இனி போதும் என்கிற மனநிலையை உருவாக்கிவிட்டது. இராணுவம் முற்றகையிட்ட போதெல்லம் அவர்கள் தோற்கடிக்கப்படுவார்கள் என்று நம்பி மக்கள் ஏமாந்தனர். அதற்காக மீளமீள இழப்புக்கைள மக்கள் சந்தித்தனர். உலகத்தின் சூழ்சசியாலும் இராணுவ அரசியல் ரீதியான ஓத்துழைப்பாலும் புலிகள் தோல்வியை சந்தித்தனர் அவைகளின் விளைவாக மக்கள் தான் பேரிழப்புக்களை கண்டனர்.
இனி அமைதியான வாழ்க்கையை மேற்கொள்ளலாம் என மக்கள் கருதுகிறார்கள்தான். ஆனால் அப்படியொரு அமைதி திரும்பாமல் தொடர்ந்தும் துயரங்களை அவர்கள் அனுபவிக்கிறார்கள். இந்த துயரம் என்றைக்குத் தீரும் என்று யாராலும் அறிய முடியவில்லை. வன்னி மக்கள் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அங்கும் அமைதியாக வாழ முடியவில்லை. தமது சொந்த மண்ணுக்கு திரும்பினாலும்கூட அமைதிக வாழவார்களா? என்ற கேள்வியிருக்கிறது. ஏனென்றால் மக்கள் இராணுவத்தால் ஆளப்படுகிற வாழ்வை விரும்பவில்லை. அவர்களால் மேற்கொள்ளப்படுகிற அடக்குமுறைகள் மீறல்கள் மிகவும் கொடுமையானவை. அப்படியிருக்க மக்கள் எதிர்பார்க்கிற அமைதியான வாழ்வு சாத்தியங்களற்றிருக்கிறது.

தளவாய் சுந்தரம்: விடுதலைப் போராட்டம் தொடரவேண்டும் எனக் கருதுபவர்களில்... ஆயூதப் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு அரசியல் போராட்டத்துக்கு திரும்பலாம் என கருதுபவர்களும் இருக்கிறார்களா?

தீபச்செல்வன்: விடுதலைப்போராட்டம் தொடரவேண்டும் என்று கருதுபவர்கள் குறிப்பிடதக்க புலம்பெயர் தமிழர்களும் தமிழகத்தமிழர்களும்தான். தமிழகத்தலைவர்கள் சிலர் தொடர்ந்தும் கற்பிக்கிற கற்பிதங்கள் குறித்து மிகவும் அதிருப்தி காணப்படுகிறது. நடந்து முடிந்த இந்தியத்தேர்தலின் அனுபவமும் முள்ளிவாக்காலில் நடந்த கடைச் சமரும் ஈழப்போராட்டம் அதற்கான ஆதரவுத்தளம் பற்றிய மாறுபட்ட அனுபவத்தை தந்திருக்கிறது. தமிழ் மக்கள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட சூழலில் அரசியல் ரீதியாகவும் தோற்கடிக்கப்ப்டிருக்கிறார்கள். ஆயதப்போராட்டத்தை முன்னெடுக்க எந்த வாய்ப்புமற்றிருப்பதால் ஜனநாயக ரீதியாக பேராடி அரசியல் உரிமைகளை வென்றெடுக்க ஈழத்தமிழ் சமூகத்தலிருந்து சிலர் கருகிறார்கள். உண்;மையில் தமக்கு அரசியல் உரிமை தேவை என்ற நிலைப்பாடு மக்களுக்கு இருக்கிறது. வன்னி மக்களிடம் மிகுந்த தற்போதைய நெருக்கடிகளின் காரணமாக அதன் வெளிப்பாடு தெரியாமல் இருந்தாலும் மற்ற மக்களிடம் அப்படியிருக்கிறது.

ஆனால் தமிழ் மக்களுக்கான நல்ல ஜனநயாக தலைமைத்துவத்தையோ போராட்ட முனைப்பையோ சிங்கள அரசு விரும்பவில்லை. புலிகளின் சருவதேச விவகார பொறுப்பாளர் கே.பத்மநாதன் மற்றும் மட்டக்களப்பு அரசியல் துறைப்பொறுப்பாளர் தயாமோகன் முதலியோர் அரசியல் நீரோட்டத்தில் இணைய விரும்பியது குறித்த அறிவிப்பை இலங்கையின் பாதுகாப்பு செயளாலர் கோத்தாபாயராஜபக்ஷ நிராகரித்துள்ளார். இதனோடு தமிழ்தேசிய கூட்டமைப்பு எம்பிக்களை நாடாளமன்றத்தலிருந்து வெளியேற்ற வேண்டும் எனவும் கூறியிருக்கிறார். தமிழ் மக்களுக்காக பிரக்ஞை பூர்வமாக செயல்படக்கூடிய ஜனநாகத்தையோ அரசியல் தலைமையையே சிங்கள அரசு விரும்பவில்லை. சமூகநலத்துறை அமைச்சர் டக்ளஸ், கிழக்குமாகாண முதலமைச்சர் சிவனேசபிள்ளை சந்திரகாந்தன், தேசிய நல்லிணக்கதுறை அமைச்சர் முரளிதரன் போன்றவர்கள் மாதிரி தனது நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவர்களை தமிழ்மக்களின் ஜனநாயக முனைப்புக்களாக காட்டுகிறது. தமிழ்மக்களை தனது அதிகாரம் ஆட்சி என்பவற்றுக்குள்ளாக வைத்திருந்து எந்த அரசியல் உரிமைகளையும் வழங்காமல் இழுத்தடிப்பதற்குத்தான் இப்படியான ஜனநாயகம்தான் இங்கு காணப்படுகிறது.

தளவாய் சுந்தரம்: விடுதலைப்புலிகள் யுத்தத்தில் தோல்வியடைந்துள்ளது தமிழர்களின் அன்றாட வாழ்க்கையை எந்த வகையில் பாதித்துள்ளது? வழக்கம் போல் மக்கள் அன்றாட வேலைகளைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார்களா? அல்லது அதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதா?

தீபச்செல்வன்: விடுதலைப்புலிகளுக்கு விமர்சனமற்ற முறையில் பெரிய ஆதரவு இருந்தது. அதே வேளை எதிர்ப்பும் இருந்தது. குறிப்பாக ஆதரவானவர்களிடம் புலிகளின் தேர்ல்வி பாதிப்பை ஏற்படுத்தியது. விடுதலைப்புலிகளுடன் அங்கு பல்லாயிரம் மக்களும் இருந்ததால் கடைசிச்சமர் மற்றும் தோல்வி என்பன அநேகமான மக்களது அன்றாட வாழ்க்கையை பாதித்தது. ஆனால் மக்கள் எதையும் வெளிப்படுத்த முடியாத சூழ்நிலையில் இருக்கிறார்கள். எல்லோருக்குள்ளும் பெரியளவிலான துக்கம் இருந்ததை உணர முடிகிறது. விமர்சனங்களுக்கப்பால் புலிகள் இராணுவ பலத்தால் உயர்ந்திருந்ததால் அவர்களுக்கு பெரிய ஆதரவு இருந்தது. அவர்கள் ஊடாகத்தான் ஈழம் காண முடியும் என்ற நம்பிக்கையை இந்த தோல்வி வழகிவிட்டது.

தளவாய் சுந்தரம்: விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மரணம் குறித்த மர்மம் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

தீபச்செல்வன்: தலைவரது மரணம் குறித்து மாறுபட்ட யெ;திகள் வந்தன. அவரது மரணத்தை உறுதி செய்வதற்கு இலங்கை அரசாங்கம் தனது தேசிய தொலைக்காட்சியில் அவரது சடலம் என ஒன்றை ஒளிபரப்பியது. அது பொம்மைத்தனமானதாகவும் அசைவில் யதார்த்தமற்றும் இருந்தது. அதைப் பார்த்த மக்கள் அதை பிரபாரகரன் என்று ஏற்கவில்லை. பின்னர் கருணாஅம்மானும் தயாமாஸ்டரும் சடலத்தை இனங்காட்டும் காட்சியை அந்த தொலைக்காட்சி ஒளிபரப்பியது. அதில் சடலம் வித்தியசமாக இருந்தது. அது அவரது சடலம் என கூறக்கூடிய மாதிரியிருந்தது. முதலில் பிரபாகரன் மரணிக்கவில்லை எனக்கூறிய பத்மநாதன் பின்னர் அவர் மரணித்ததை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

இப்படி தலைவர் பிரபாகரனின் மரணத்தில் மாறுபட்ட நிலையும் மர்மமும் இருக்கிறது. அது தொடர்ந்து நீடித்தபடியிருக்கிறது. பிரபாகரனின் மரணம் பற்றி கதைத்தவர்களை இராணுவம் கைது செய்து கொண்டு போயுள்ளது. அத்துடன் முதியவர் ஒருவர் வெட்டியும் கொலை செய்யப்பட்டுள்ளார். இப்படியிருக்க இதைப்பற்றி இன்னும் மக்கள் என்ன கதைக்கிறார்கள் என்று வெளிப்படையாக அறிய முடியாதிருக்கிறது.

தளவாய் சுந்தரம்: வடக்கில் தேர்தல் நடத்துவதற்கான வேலைகள் நடப்பதாக செய்திகள் வருகின்றன? அதுபற்றி...

தீபச்செல்வன்: வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் மாநகரசபைத்தேர்தல் நiபெறவிருக்கிறது. அவை ஒரு சுகந்திரமான ஜனநாயகத்தை ஏற்படுத்தக்கூடிய தேர்தலாக இருக்கும் என்று கூற முடியாது. அப்படித்தானே தேர்தல்கள் அங்கும் நடக்கின்றன. இங்கும் அப்படித்தான் சமூக பிரனக்ஞை உள்ள ஒருவர் தேர்தலில் நிறகப்போதுமில்லை அப்படி நின்றால் அவர் வெல்லப்போதுமில்லை. தேர்தலிலும் ஜனநாயகத்திலும் துவக்குத்தான் ஆளுகிறது. முடிவு செய்யப்பட்ட சபைக்கான தேர்தல்தான் நடக்கப்போகிறது. பல வருடங்களின் பின்னார் வடக்கில் மாநகர சபைத்தேர்தல் என அரசு அறிவித்த போதும் இது மக்களை எந்த வித்திலும் கவனப்படுத்தவில்லை. அவர்கள் இந்த தேர்தல் குறித்து எதுவும் அலட்டவும் இல்லை.


தளவாய் சுந்தரம்: யுத்த வலயத்தில் இருந்து வருகை தந்து அகதிமுகாம்களில் உள்ள மக்களின் நிலமை எப்படியிருக்கிறது.

தீபச்செல்வன்: அவர்கள் விலங்குகளைப்போல அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். முற்றிலும் எந்தச் சுகந்திரமும் அற்றிருக்கிறார்கள். இடவசதியில்லாமல் மக்கள் குறுகிய இடத்தில் நெருங்கியிருக்கிறார்கள். ஐம்பதுபேர் இருக்கக்கூடிய இடத்தில் நுர்று பேர் இருக்கிறார்கள். நோய் முதலிய நெருக்கடிகளை அனுபவிக்pறார்கள். உழைப்பு வருமானம் முதலியவற்றை இழந்து தேவையான பொருட்களை வாங்க முடியாமலும் விரும்பிய உணவை சாப்பிட முடியாமலும் எதுவரை இந்த நிலை என வெறுமையுடன் இருக்கிறார்கள்.

தளவாய் சுந்தரம்: அகதி முகாம்களில் இருப்பவர்களுடன் வெளியேயுள்ளவர்கள் தொடர்புகொள்ள முடியுமா?

தீபச்செல்வன்: தொடக்கத்தில் மிகவும் சிக்கலாக இருந்தது. தற்போது குறிப்பட்ட நாட்களில் குறிப்பிட்ட நேரங்களுக்குள் சந்திக்க முடிகிறது. அவ்வளுதான்., சோதனைகள் மிக இறுக்கமாக இருக்கும். தொலைபேசி வதமிகள் செய்து கொடுக்கப்பட்டள்ளன என்று கூறப்பட்டபோதும் அப்படி எந்த வசதியும் இல்லை. நிறைய மக்கள் உயிருடன் இருக்கிறார்கள், இல்லை என்ற செய்திகளை பிள்ளைகள் பெற்றோர் உறவினர்கள் என்று தமது உறவுகளுக்கு தெரிவிக்க வழியற்றிருககிறார்கள். பல குடும்பங்கள் பல்வேறு முகாம்களில் பிரிந்து வாழ்கிறார்கள்.

தளவாய் சுந்தரம்: புலிகள் மீண்டும் எழுந்துவர சாத்தியப்பாடுகள் உள்ளதா?

தீபச்செல்வன்: புலிகள் மீண்டு வருவதற்கான சாத்தியப்பாடுகள் கொஞ்சமும் இல்லை. கிழக்கிலும் வடக்கிலும் சில போராளிகள் மறைந்திருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். அண்மையில் மட்டகளப்பு மாவட்ட அரசியல் தலைவர் தயாமோகன் பிபிசிக்கு பேட்டியளித்திருந்தார். போராளிகள் சிலர் எஞ்சியிருப்பினும் முன்னர் போல வெளிப்பட சாத்தியமில்லை. அதற்கான அடிப்படைகளை அழித்து மேலும் தேடியழித்துக்கொண்டிருக்கிறது இலங்கை அரசு. அதற்கு உலகளவில் தொடர்ந்து முழுமையான ஆதரவு இருக்கிறது. அதற்கேற்ப இலங்கை-ஈழச் சூழல் மாற்றி அமைக்கப்பட்டுக் கொண்டிருககிறது.

தளவாய் சுந்தரம்: போர் நடந்து முடிந்த பகுதிகளைப் பார்க்க மற்றவர்கள் (மக்கள்) செல்ல முடியுமா?

தீபச்செல்வன்: போர் நடந்து முடிந்த இப்பொழுது பார்க்க முடியாது என்பது பிரச்சினை இல்லை எப்போது பார்க்க முடியும் என்பதுதான் பிரச்சினை. மக்கள் சென்று பார்வையிடுவதற்கு எந்த அனுமதியும் கிடையாது. மூடுமந்திரங்காளக அந்த பகுதிகள் இருக்கின்றன. மனிதநேய அமைப்பு என்று வருகிறவர்களுக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. மனிதாபிமானத்தை கருதி வந்த ஐநா செயளாலர் பர்கீமூனாலும் மற்றும் விஜய் சம்பியாராலும் சுகந்திரமாக பார்வையிட முடியவில்லை. அவை பெரும் அடையாள அழிபபுகளுக்கம் மாற்றங்களுக்கும் அப்பால்தான் வேறு நிறத்துடன் காணமுடியும் என நினைக்கிறேன்.
...............

குமுதம் செய்தி ஆய்விற்காக தளவாய் சுந்தரம் என்னுடன் உரையாடல் ஒன்றை நிகழ்த்தியிருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்விக்கு பிறகு அவர் நிலமைகளை கேட்டறிய தொடர்பு கொண்டார். நம்பிக்கைகள் தகர்ந்து போய் பீதியும் யுத்தத்தின் வடுக்களும் துயர் தருகிற சூழலில் எமது மக்கள் வெறுமையுடன் இருப்பதை அவருக்கு தெரிவித்தேன்.


உரையாடியவர்:தளவாய்சுந்தம்
ந‌ன்றி: தீப‌ம்

Monday, June 08, 2009

சுட‌ருள் இருள்: நிக‌ழ்வு ப‌ற்றிய‌ அறிவித்த‌ல்




------------------------------------------------------------------------

சுடருள் இருள்


ஆளுமைகளும் அனுபவங்களும்
-'நிலக்கிளி' அ. பாலமனோகரன்
-தேவகாந்தன்


தீபச்செல்வனின் ' பதுங்குகுழியில் பிறந்த குழந்தை"
சில‌ ப‌கிர்த‌ல்க‌ள்
-க.நவம்
-தர்சன்
-தீபச்செல்வனின் உரை(சுதன்)


குறுந்திரைப்படம் திரையிடல்

கருத்துக்கள்/சிந்தனைகள்/பரிமாறல்கள்


June 13, 2009 (Saturday) at 3.00 p.m
Scarborough Civic Centre
(150 Borough Drive, Scarborough)


தொடர்புகளுக்கு:
இளங்கோ 416 725 4862 சுதன் 647 829 9350 நிவேதா 647 293 0673 தீபன் 905 599 6375

சுட‌ருள் இருள்

Thursday, June 04, 2009

BLEEDING HEARTS - நூல் வெளியீட்டு விழா

எழுத்தாளர் “நிலக்கிளி” அ.பாலமனோகரனின் “BLEEDING HEARTS”
நூல் வெளியீட்டு விழா




இடம் -: மல்வேர்ண் நூலக அரங்கு
MALVERN PUBLIC LIBRARY
30 SEWELLS ROAD, SCARBOROUGH

காலம் -: யூன், சனிக்கிழமை 6ஆம் தேதி, 2009
பிற்பகல் 6.00 மணி

நூல் திறனாய்வு
பேராசிரியர் செல்வா கனகநாயகம்

ஏற்புரை
அ.பாலமனோகரன்


நூல் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
தொடர்புகளுக்கு : (416) 994-9616 , (647) 237-3619 , (416) 500-9016

உண்மைக‌ளைப் பேசுவோம் ‍- 2

தில்லையின் கீழேயுள்ள க‌ட்டுரை, முக்கிய‌மான‌ சில‌ விட‌ய‌ங்க‌ளைப் பேசுகின்ற‌து. குடும்ப‌ அமைப்பாய் இருந்தாலென்ன‌, போராட்ட‌ங்க‌ள்/போர்க‌ளாய் இருந்தாலென்ன‌ பெண்க‌ளே அதிக‌ம் பாதிக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌ர். புலிக‌ள் பெண் போராளிக‌ளைச் சேர்க்கும்போது அவ‌ர்க‌ள‌து த‌லைம‌யிரை குட்டையாக‌ வெட்டுவ‌தென்ற‌ ப‌ழ‌க்கம், இன்று போர் முடிந்துவிட்ட‌தாக‌க் கூற‌ப்ப‌டுகின்ற‌ சூழ்நிலையில் வ‌ன்னிக்குள்ளிலிருந்த‌ பெண்க‌ளை எளிதாக‌ இன‌ங்க‌ண்டு எதையும் செய்து முடிக்கும் சுத‌ந்திர‌ம் இல‌ங்கை இராணுவ‌த்திற்கு வாய்க்கின்ற‌து. இறுதி இர‌ண்டு/மூன்று வ‌ருட‌ங்க‌ளில் ப‌ல‌ர் க‌ட்டாய‌மாக‌ப் போராட்ட‌டத்தில் சேர்க்க‌ப்ப‌ட்ட‌போது, விருப்ப‌மின்றி போராட்ட‌த்தில் இணைக்க‌ப்ப‌ட்டவ‌ர்க‌ளும் புலிக‌ள் என்ற‌ அடையாள‌த்தின் கீழ் மிக‌ மோச‌மாக‌ சித்திர‌வ‌தைக்கு ஆளாகும் அபாய‌மும் உண்டு.

ஈழ‌/புல‌ம்பெய‌ர் தேச‌த்திலிருக்கும் பெண்க‌ள் சார்ந்த‌ அமைப்புக்க‌ள் என்றில்லாது எல்லா அமைப்புக்க‌ளும் இவை குறித்து குர‌ல் கொடுக்க‌வும், இடைத்த‌ங்க‌ல் ம‌ற்றும் சித்திர‌வ‌தை முகாங்க‌ளிலுள்ள‌ (க‌வ‌னிக்க‌, ஒரு ப‌த்திரிகையாள‌ரின் க‌ட்டுரையில், தெற்கில் இருக்கும் ஒரு சிறை த‌ம‌து 'குவாண்டனாமோ சிறை' என்றொரு சிங்க‌ள‌ இராணுவ‌த்தின‌ன் குறிப்பிட்டிருக்கின்றார்) பெண்க‌ளின் பாதுகாப்பை உறுதி செய்ய‌வும் வேண்டிய‌வ‌ராயிருக்கின்றோம்.

முக்கிய‌மாய் (நானென‌து 15/16 வ‌ய‌துக‌ளில் வாசித்த‌) ச‌ரிநிக‌ரில் பெண் போராளிக‌ள் ப‌ற்றிய‌ விவாத‌மொன்று ந‌ட‌ந்த‌தாய் நினைவு. அதில் 'பெண்மையின் அடையாள‌ம்' புலிக‌ளால் அழிக்க‌ப்ப‌டுகின்ற‌தென்று விவாதித்த‌ ராதிகா குமார‌சாமி இன்று ஜ‌.நாவின் சிறுவ‌ர்க‌ளுக்கான‌ அமைப்பில் இருக்கின்றார். என‌வே அவ‌ர் இன்று -த‌ன்னை ஒரு ந‌டுநிலையாள‌ர் என்று க‌டின‌ப்ப‌ட்டு நிரூபிக்க‌வானும்- குர‌ல் கொடுப்பார் என்று ந‌ம்புகின்றேன். ம‌ற்ற‌து, , புலிக‌ள் பெண்புலிக‌ளுக்குச் ச‌ரியாக‌க் கொடுமை செய்கின்றார்க‌ளென‌ கூறி, க‌ண்ணீரும் உகுத்த‌ நிர்ம‌லா இராஜ‌சிங்க‌ம் -தான் கொடுக்கும் எல்லா பேட்டிக‌ளில் தானொரு முன்னாள் புலி, முத‌லாவ‌து பெண் அர‌சிய‌ற் கைதி‍ ‍என்று ஒன்றையே திருப்பிக் கூறிக்கொண்டிருக்காம‌ல் - இன்று புலிக‌ள் அமைப்பற்று ஏதிலிக‌ளாக‌ இருக்கும் போராளிக‌ளுக்காய் த‌ம‌து குர‌லை அவ‌சிய‌மாய் எல்லா இட‌ங்க‌ளிலும் ப‌திவு செய்து அவ‌ர் உகுத்த‌ க‌ண்ணீர் போலிக்க‌ண்ணீரில்லை என்ப‌தை நிரூபிப்பாரென‌வும் ந‌ம்புவோமாக‌.
-----

ஆண்களின் போரில் வலிந்திழுக்கப்பட்ட பெண்களின் எதிர்காலம்?

-தில்லை (சுவிஸ்)

பெண் ஒடுக்கு முறையின் தத்துவார்த்தப் பின்புலமாக அமைந்த மேலாதிக்கவாதத்தால் வீட்டுவேலை மட்டுமே விதிக்கப்பட்ட வாழ்வு என்ற மாயைக்குள் பெண்கள் வைக்கப்பட்ட போதும் பின்னர் பெண்கள் போராட்டத்தின் அங்கமாகவும் ஆக்கப்பட்டார்கள். இலங்கை சிங்கள பேரினவாத அரசு காலம் காலமாகத் தமிழர்களின் உரிமைகளை அடக்கி ஒடுக்கிச் சிறுமைப்படுத்தியது. இந்த ஒடுக்குமுறைக்கு எதிராகத் தமிழ்த்தேசிய போராட்டச் சிந்தனை எழுச்சி பெற்ற காலத்தில் அரசியலில் ஆண்கள் ஏகபோக உரிமையாளர்களாக இருந்த போதிலும் தமிழ்த்தேசியப் போராட்டம் தமது இலக்கை அடைவதற்காக தமது ஆளணித் தேவைக்காகப் பெண்களையும் இணைத்துக்கொண்டது.

ஆணாதிக்க மயப்பட்ட இந்தப் போராட்டத்திற்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட இந்த பெண்போராளிகள் போராட்டத்தில் மட்டுமல்லாது அரசியல் மற்றும் கலை இலக்கியங்களிலும் தமக்கு கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டனர். இவ்வாறான போராளிகளின் படைப்பிலக்கியங்களை எத்தனை பேர் கண்டுகொண்டார்கள்? கடந்த காலங்களில் பெண்களின் கருத்துரிமை அரசியலைக் கற்றுத்தேர்ந்த பெண்ணியலாளர்கள் வாய்திறக்காத பக்கமாக பெண் போராளிகள் இருந்தனர்.

பிள்ளைகளை இழந்த தாயாக, கணவனை இழந்த மனைவியாக, பெற்றோரை இழந்த மகளாக, பெண்களே போரின் வடுக்களைச் சுமப்பவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து விட்டதாகக் கூறும் இலங்கைப் பேரினவாத அரசு ஆயிரக்கணக்கான போராளிகளைக் கைது செய்திருப்பதாகவும்,சரணடைந்திருப்பதாகவும் அறிவித்திருக்கிறது இவர்களில் ஏராளமானோர் பெண்போராளிகள்.

இவர்களில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டார்கள்? எத்தனை பேர் சரணடைந்தார்கள்? இவர்களில் எத்தனை பேர் தண்டனைக்கு உள்ளாக்கப்படடார்கள்? இவர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதாகவும் சீர்திருத்தம் அளிப்பதாவும் வாயளந்து கொண்டிருக்கும் அரசு அல்லது பரப்புரை செய்து கொண்டிருக்கும் அரசு மனித உரிமையாளர்களையோ அல்லது சர்வதேசக் கண்காணிப்பாளர்களையோ அனுமதிக்காதது ஏன்?

கடந்த சில நாட்களுக்கு முன்பு விசேட தடுப்பு முகாமில் தடுத்துவைத்துள்ளதாக அரசு அறிவித்திருந்த பெண்போராளிகள் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்? அவர்களுக்கு எத்தகைய பாதுகாப்புள்ளது? ஜே.வி.பி. கிளர்ச்சியின் போது இலங்கை இராணுவத்தால் பாலியல் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பெண்போராளி மனம்பேரி மனக்கண்களில் நிறைகிறாள்.

பெண்கள் உரிமைகளுக்காக போராடுவதாகக் கூறும் உள்ளூர் மற்றும் சர்வதேச பெண்ணுரிமைவாதிகள் கூட இப்போராளிகள் விடயத்தில் அவர்களுடைய பாதுகாப்புத் தொடர்பாக வாய்திறக்காதது வருத்தம் தருகிறது? கடந்த காலங்களில் தமிழ்த்தேசிய விடுதலைக்காகப் போராடிய பெண்களின் ஆளணி எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவு இருந்தது. அவ்வாறெனில் அப்பெண்களின் வரலாறும் அப்பெண்களின் நிலையும் பலரும் அறியாதவாறு மறைக்கப்பட்டிருக்கிறது? இன்றைய நிலையில் பெண்போராளிகளின் நலனில் விசேட கவனம் செலுத்துவது சமூக ஆர்வலர்களின் கடமையாகிறது.


ந‌ன்றி: ஊட‌று