எனது கதவைத் தட்டிக் கேட்காதே எதுவும்.
மரணத்தால் விறைத்திருக்கிறது என் வீடு
நான் உனக்குத் தரும் சொற்களில்
மிருகங்களின் கோரைப் பற்கள் முளைத்திருக்கலாம்
உன்னுடன் பகிர்ந்து கொள்ளும் சிகரெட்டில்
விஷத்தின் துகள்கள் இருக்கலாம்
உன்னுடைய தட்டில் பரிமாறும் உணவில்
சகோதரர்களின் மாமிசம் கலந்திருக்கலாம்
உனக்குத் தயாரிக்கும் தேநீரில்
கண்ணீரின் உப்பு கரைந்திருக்கலாம்
இந்த நாட்கள்
காக்கிநிறப் பேய்களால் நிர்வகிக்கப்படுகின்றன
இன்று
பூககளும் பறவைகளும் குழந்தைகளின் புன்னகைகளும்
பெண்களும் எரிந்து போயினர்
உறுப்புக்கள் வெட்டப்பட்டவர்களின் குரல்கள்
வெளிகளில் தடுமாறுகின்றன
பிணங்களின் நடுவில் நொறுங்கும்
புத்தனின் மண்டையோட்டிலிருந்து கழுகுகள் அலறுகின்றன
கடவுள் மொழி இனம் என்று
துருப்பிடித்த தகரத்தால்
உன் தொண்டையை அறுப்பது சுலபம் - இன்று
மனிதனாக இருப்பது குற்றம்
பூமி எலும்புக் கூடுகளின் தாழ்வாரம்
(எலும்புகள் இன்னும் குவிகின்றன)
காற்று வெடிமருந்துப் புகைகளின் கிடங்கு
(புகைகள் இன்னும் அடர்கின்றன)
மணலில் பதியும் ஒவ்வொரு சுவடிலும்
ரத்தமும் சீழும் படிகின்றன
சிலந்திகள் பின்னிய வலையில்
சரித்திரத்தின் ஆந்தைக்கண்கள் வெறுமையாய் உறையும்
துயரங்கள் விடிவின்றி நீளும்
கறை - நம் எல்லோர் கைகளிலும்
எனது கதவைத் தட்டிக் கேட்காதே எதுவும்
இன்று
மனிதனாக இருப்பதே குற்றம்.
ஜூலை-83
நன்றி: கோடைகாலக் குறிப்புகள் (அகரம் பதிப்பகம்)
2 comments:
true...
Hi, What do you think about the post LTTE SL? Where is going lead the tamils now?
your comment please.
Thanks
Kavi
Post a Comment