Monday, July 13, 2009

வாசிக்க‌வேண்டிய‌ சில‌ க‌ட்டுரைக‌ள் ம‌ற்றும் மேல‌திக‌க் குறிப்புக‌ள்

வ‌வுனியாவிலுள்ள‌ இடைத்த‌ங்க‌ல் முகாங்க‌ளுக்கு ஒரு ப‌த்திரிகையாளராக‌ சென்ற‌ ந‌ண்ப‌ன் ச‌ஜீத‌ர‌னின் க‌ட்டுரை, எவ்வாறு மெனிக் பாமில், அக‌திக‌ள் வ‌லய‌ங்க‌ளாக‌ப் பிரிக்க‌ப்ப‌ட்டு த‌ங்க‌ வைக்க‌ப்ப‌ட்டிருக்கின்றார்க‌ள் என்ப‌தையும், எவ்வாறான‌ சூழ‌லில் வாழ‌ நிர்ப்ப‌ந்திக்க‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன‌ர் என்ப‌தையும் விப‌ரிக்கின்ற‌து. வ‌ல‌ய‌ம் பூச்சிய‌மென‌க் குறிக்க‌ப்ப‌டும், க‌திர்காம‌ர் இடைத்த‌ங்க‌ல் முகாமே ஒர‌ள‌வு அடிப்ப‌டை வ‌சதியுடைய‌தாக‌ இருக்கின்ற‌து. அத‌னுள்ளே இய‌ங்க‌த்தொட‌ங்கியிருக்கும் பாட‌சாலை,வ‌ங்கி, தபாற்க‌ந்தோர் என்ப‌வ‌ற்றைப் பார்க்கும்போது, இம்முகாமிலே உள்ள‌ ம‌க்க‌ளை விரைவில் அவ‌ர்க‌ளின் சொந்த‌ இட‌ங்க‌ளிலே மீள‌க்குடிய‌ம‌ர்த்தும் எண்ண‌ம் அர‌சாங்க‌த்திற்கு இல்லைப் போல‌த்தான் தெரிகிற‌து. வ‌ல‌ய‌ம் 4 என‌ப்ப‌டும் மெனிக் பாமிலுள்ள‌ அக‌திமுகாமில் யுத்த‌த்தின் இறுதிக்க‌ட்ட‌த்தில் வ‌ந்த‌ ம‌க்க‌ள் எந்த‌வ‌கையான‌ அடிப்ப‌டை வ‌சதிக‌ளுமில்லாது இருப்ப‌தை மிக‌ச் சொற்ப‌ நேர‌ம் ம‌ட்டுமே அனும‌திக்க‌ப்ப‌ட்ட‌ பொழுதில் க‌ண்ட‌றிந்து ச‌ஜித‌ர‌ன் எழுதியிருக்கின்றார். இவ‌ர்க‌ள் இறுதி யுத்த‌ம்வ‌ரை இருந்த‌த‌னால், மிக‌ப்பெரும் உள‌விய‌ல் பிர‌ச்சினைக‌ளுக்கு உள்ளாகியிருப்பார்க‌ள் என்ப‌தை வார்த்தைக‌ளில் கூற‌த்தேவையில்லை.

கூட‌வே ஒரு உப‌ரிக்குறிப்பாய், முல்லைத்தீவு அர‌சாங்க‌ அதிப‌ர் இடைத்த‌ங்க‌ல் முகாங்க‌ளிலுள்ள‌ ம‌க்க‌ளுக்குச் சொன்ன‌ செய்தியையும் சேர்த்து வாசிக்க‌வேண்டும். இனி முல்லைத்தீவு மாவ‌ட்ட‌ம் உய‌ர்பாதுகாப்பு வ‌ல‌ய‌மாக‌ ஆக்க‌ப்ப‌டும். அங்கே பூர்வீக‌மாய் வ‌சித்த‌ ம‌க்க‌ள் இனி அங்கே மீள‌க்குடியம‌ர்த்த‌ப்ப‌ட‌மாட்டார்க‌ள் என்ப‌து. இத்தோடு, நாகார்ஜூன‌ன் த‌மிழாக்கிய‌ அக‌ம்பென்னின் 'முகாம் என்ப‌து யாது?' க‌ட்டுரையையும் சேர்த்து வாசித்தால், இடைத்த‌ங்க‌ல் முகாங்க‌ளிலுள்ள‌ ம‌க்க‌ளின் எதிர்கால‌ம் சொல்லிக்கொள்ளும்ப‌டியாக‌ இருக்க‌ப்போவ‌தில்லை என்ப‌து உறுதி.

அண்மையில், சில‌ க‌னடிய‌ர்க‌ள் இடைத்த‌ங்க‌ல் முகாமிலிருக்கின்றார்க‌ள் என்ப‌தை க‌னேடிய‌ அர‌சாங‌கமும் உறுதி செய்துள்ள‌து. அங்கே த‌ங்க‌வைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ க‌ன‌டிய‌ பிர‌ஜாவுரிமையுள்ள ஓர் இளைஞ‌ர், 'இங்குள்ள‌ ம‌க்க‌ளுக்கு அத்தியாவ‌சிய‌மாய்த் தேவைப்ப‌டுவ‌து க‌வுன்சிலிங்' என்று குறிப்பிட்ட‌தும், இம்முகாங்க‌ளுக்கு சென்ற‌ ஒரு க‌னடிய‌ பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர், இடைத்த‌ங்க‌ல் முகாங்களில் ந‌ல்ல‌ வ‌ச‌தியுடன் இருப்ப‌வை, வ‌ச‌தி அற்று இருப்ப‌வை என்ற‌ க‌ருத்துக்க‌ளுக்கு இட‌மில்லை. இடைத்த‌ங்க‌ல் முகாங்க‌ள் என்ப‌தே அடிப்ப‌டையில் மிக‌வும் கோர‌மான‌வை என்றும் கூறியிருக்கின்றார்.

ச‌ஜீத‌ரனின் ல‌க்பிமநியூஸில் வ‌ந்த‌ க‌ட்டுரையை இங்கே வாசிக்க‌லாம்...
......

வ‌ள‌ர்ம‌தி, ஈழ‌ப் பிர‌ச்சினை குறித்து எழுத‌த் தொட‌ங்கியிருக்கின்றார். ஒவ்வொரு கால‌க‌ட்ட‌த்திலும் யாரோ எவ‌ரின‌தோ முக‌மூடிக‌ள் க‌ழ‌ன்று விழுந்த‌ப‌டியே இருக்கின்ற‌ன‌. வ‌ள‌ர்ம‌தி த‌னிப்ப‌ட்ட‌ காழ்ப்புண‌ர்வின்றி ஆதார‌ங்க‌ளுட‌ன் த‌ன‌து இக்க‌ட்டுரையைத் தொட‌ர்வாரென‌ ந‌ம்புகின்றேன். பொதுவெளிக்கு வ‌ந்தால் யாரும் விம‌ர்ச‌ன‌ங்க‌ளில் இருந்து த‌ப்ப‌முடியாது. முக்கிய‌மாய் தாங்க‌ள் த‌னித்துவ‌மான‌வ‌ர்க‌ள், மாற்றான‌வ‌ர்க‌ள் என்று க‌ல‌க‌ம் செய்வ‌தான‌ பாவ‌னையில் முட்டாள்த‌ங்க‌ளை நோக்கிப் ப‌ய‌ணித்துக்கொள்ப‌வ‌ர்க‌ளை, அவ‌ர்க‌ளைத் த‌ட்டி எழுப்ப‌வாவ‌து எதிர்வினைக‌ள் அவசிய‌மாகின்ற‌ன‌.

வ‌ள‌ர்ம‌தி குறிப்பிடுவ‌தைப் போன்று, இனி சிறுபான்மையின‌ர் என்ற‌ பெய‌ரே அக‌ராதியில் இருக்க‌க்கூடாது என்கின்ற‌ ராஜ‌பக்சவிட‌ம், ம‌லைய‌க‌த்த‌மிழ‌ர், முஸ்லிம் ம‌க்க‌ள், த‌லித் ம‌க்க‌ள் என்ற‌ சிறுபான்மையின‌ரின் குர‌ல்க‌ளைச் செவிம‌டுக்க‌வேண்டுமென‌ அகில‌ன் க‌திர்காம‌ர் போன்ற‌வ‌ர்க‌ள் கூறிக்கொண்டிருப்ப‌தைக் கேட்கும்போது எங்க‌ளுக்கு ஏற்க‌ன‌வே காதில் பூச்சுற்றியாகிவிட்ட‌து என்றுதான் வேண்டியிருக்கிற‌து.. அண்மையில் புலிக‌ள் அல்லாத‌ வேறொரு இய‌க்க‌ ந‌ண்ப‌ர் த‌ங்க‌ள் நிக‌ழ்வொன்றுக்கு வ‌ர‌ச்சொல்லியிருந்தார். போயிருந்த‌போது அங்கே ஒருவ‌ர் கூறிய‌துதான் ‍வ‌ள‌ர்ம‌தியின் க‌ட்டுரையை வாசிக்கும்போது நினைவுக்கு வ‌ந்த‌து.... 'இனி என்ன‌ சொன்னாலும், வெள்ளாள‌ன் எங்க‌ள் த‌லையில் குதிரை ஓட்ட‌ப் போகின்றான், பார்த்துக்கொண்டிருக்க‌ வேண்டிய‌துதான்'.

க‌வ‌னிக்க‌, இவ்வாறு கூறிய‌வ‌ர் ஒரு ப‌ழ‌ம்பெரும் மார்க்சிய‌வாதி

வ‌ள‌ர்ம‌தியின் க‌ட்டுரையை இங்கே வாசிக்க‌லாம்...

....

அநாம‌தேய‌ன், யாழ்ப்பாண‌ச் சூழ‌லில் இருந்து த‌ன‌து குறிப்புக்க‌ளை மீண்டும் கால‌ச்சுவ‌டில் எழுதியிருக்கின்றார். இறுதி யுத்த‌ வெற்றிக் கொண்டாட்ட‌ங்க‌ளில்போது, வெள்ள‌வ‌த்தையில் நிக‌ழ்ந்த‌தாய்க் கூற‌ப்ப‌டுவ‌தாய்க் குறிப்பிடும் ச‌ம்ப‌வ‌ங்க‌ள் நான‌றியாத‌ன‌. சில‌வேளைக‌ளில் பெருப்பிக்க‌ப்ப‌ட்டிருக்க‌லாம். ஆனால் ந‌ட‌ந்திருக்கூடிய‌ சூழ‌ல்தான் என்ப‌தையும் ம‌றுக்க‌முடியாது. இந்த‌ வெற்றிக்கொண்டாட்ட‌த்தின்போது, சிங்க‌ள் ம‌க்க‌ள் சில‌ர் கூறிய‌ க‌ருத்துக்க‌ளாய் அவ‌ர் குறிப்பிடுவ‌துதான் அச்ச‌மூட்ட‌க்கூடிய‌வை.
அதேச‌ம‌ய‌ம், யாழ்ப்பாண‌த்திலுள்ள‌ இடைத்த‌ங்க‌ல் முகாம் ஒன்றில் ச‌ந்தித்த‌ ‍ புலிக‌ளின் க‌ட்டுப்பாட்டில் இருந்த‌ ஒருவ‌ர் கூறிய‌ வாக்குமூல‌மும் முக்கிய‌மான‌து. அந்த‌க் குர‌ல்க‌ளையும் செவிம‌டுக்காது, நாம் நாடு க‌ட‌ந்த‌ அர‌சு குறித்தோ வேறு எந்த‌ விட‌ய‌மோ க‌தைப்ப‌துகூட‌ ப‌ம்மாத்தாய்தான் போய்முடியும்.

அநாம‌தேய‌னின் க‌ட்டுரைக்கு...

.....

ய‌முனா ராஜேந்திர‌னின் ஈழ‌ம் தொட‌ர்பான‌ அண்மைக்கால‌த்தைய‌ க‌ட்டுரைக‌ள் நீண்ட‌ உரையாட‌லுக்கான‌ க‌ள‌ங்க‌ளைத் திற‌ப்ப‌வை. இனி ஆயுத‌ப்போராட்ட‌த்தின் முடிவின் பிற‌கான‌ கால‌க‌ட்ட‌த்தில் எப்ப‌டி ந‌க‌ர்வ‌து என்ப‌தையும், ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் த‌ங்க‌ளை எப்படித் த‌க‌வ‌மைத்துக் கொள்வ‌து என்ப‌து ப‌ற்றியும் -உல‌க‌ வ‌ர‌லாற்றைச் ச‌ரியாக‌ விள‌ங்கிக்கொள்ளாது- எதையும் செய்துவிட‌முடியாது. ய‌முனாவின் முன்பு எழுதிய‌ ஒருக‌ட்டுரைக்கு நீண்ட‌ பின்னூட்ட‌ம் எழுதிவிட்டு நிறைவில்லாத‌ நினைப்பில் அதை அனுப்பாது விட்டிருந்தேன். புலிக‌ளின் ஆயுத‌ப்போராட்ட‌தின் தோல்விக்கு 9/11 முக்கிய‌ கார‌ண‌ம் போல‌, பின்-கால‌னித்துவ‌க் கார‌ணிக‌ளும் க‌ண்ணுக்கு வ‌கையில் இருந்து செய‌ற்ப‌ட்டிருந்தை முக்கிய‌ப்ப‌டுத்தவேண்டுமென‌த்தான் -அந்த‌ அனுப்பாத‌ பின்னூட்ட‌த்தில்- எழுதியிருந்த‌தாய் நினைவு.

இப்போது உயிரோசையில் ய‌முனா எழுதியுள்ள‌ இந்த‌க் க‌ட்டுரையும் முக்கிய‌மான‌ ஒரு க‌ட்டுரையே...

11 comments:

Thava Sajitharan said...

நன்றி டிசே, எனது கட்டுரையில் வெளிப்படையாக விளக்க்ப்படாத விடயங்களையும் ஊகித்து எழுதியிருக்கிறீர்கள் - சரியாக . நான் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையாளருக்கு மொழிபெயர்ப்பாளராகச் சென்றபடியாலேயே முகாம்களுக்குப் போக முடிந்தது.... அதிலும் சில சிக்கல்களுக்கு முகங்கொடுக்க வேண்டியதாயிருந்தது.. நினைவு மழுங்காமல் போனால் பின்னொரு நாளில் இந்த அனுபவங்களை விரிவாக எழுதலாம்...

Sri Rangan said...

(எழுத்துப் பிழைகள் திருத்திய பின்னூட்டம் இது.)


டி.சே,காலச்சுவட்டில் எழுதும் அநாமதேயன்,கடந்தகாலத்தில் தூண்டிலைப் புலிக்கான கருத்துத்தளத்துக்குப் பயன்படுத்தியவர்.இப்போது,அநாமதேயன்.அப்போது,
பிரஜைகள்.சரி இனி விஷயத்துக்கு வருவோம்.

இடைத் தங்கல் முகாமுக்குள் "தற்செயலாக"ச் சந்தித்த கவிஞர்";இப்போது சொல்வதிலிருந்து"பிரகரனையோ அல்லது புலிகளது போராட்டத்தையோ மிதிப்பிட வெளிக்கிட்டால் மிஞ்சுவது பூச்சியம்.

முதலில் அந்த"ஆய்வாளர்-கவிஞருக்கு"கருக்கு மட்டையால் சாத்த வேண்டும் என்றே சொல்வேன்.

தனது வார்த்தைகளால் எத்தனையோ அப்பாவிகளது கொலைகளை நியாப்பத்திய அவரது மக்கள் விரோதம்,இன்று பிரபாகரனைப் பெரும் சர்வதிகாரியாக்கும் அரசியலோடு மக்களிடம் வருகிறது.இதையேதாம் "அநாமதேயன்"கூடச் செய்கிறார்.அன்று புலிகளைத் "தேசியச் சக்தி-தேசிய இராணுவம்"எனக் கருத்துக்கூறியவர்,இன்றோ அனைத்துக்கும் பிரபாகரனது தவறே காரணமென்று புலிகளுக்குப் பின்னாலிருந்து இயக்கிய சக்திகளை மறைத்து மீளவும் தமிழர்களுக்கு ஆப்பு வைக்கிறார்.

இலங்கையில் இனவாதம் என்பது நிலவும் முரண்பாடுகளோடு"தாழ்ந்தும்-உச்சம்"பெறுவதும் கண்கூடு.இன்றைய இந்தச் சகாப்தத்தில் இலங்கையென்பது வெறுமனவே சிங்கள-சிங்கக் கொடியின்கீழ் இயங்குவதாக யாரும் கற்பனை பண்ணினால் அது புலிகளது பினாமிகளது நலத்திற்கு இசைவானது.அதை"அநாமதேயன்" செய்கிறார் என்பது என் வாசிப்பும்-கடந்தகாலத்து அநுபவமும்.இலங்கையில் இன்னொரு இனக்கலவரம் என்பது இலங்கையின் இராணுவ வாதத்துக்கு அவசியமில்லை.இதை,இலங்கைப் பாசிச இராணுவம் நாளாந்தம் செய்தே வருகிறது-புதிய வடிவில்.

இத்தகைய வடிவத்தைக் குறுக்கி,அதை பொதுத்தளத்துக்கு எடுத்துவருவதும் அநாமதேயனது அரசியலுக்கு அவசியமாகலாம்.ஆனால்,சிங்கள மக்களில் பெரும்பான்மையானர்வர்கள் இதைக்கடந்துவிட்டது இன்றைய சூழலில் விரிவாக அறியத்தக்கது-ஆராயத்தக்கது!

எந்தச் சமுதாயத்திலும் இனவாதக் குண்டர்கள் இருக்கவே செய்கிறார்கள்.அவர்களது பின்னால் ஒளிந்துள்ள பொருளாதாரக்காரணிகளும்-கட்சிகளும் அனைத்து மக்களையும் ஏமாற்றிவிடமுடியாது.இது,ஜேர்மனியச் சூழலில் கடந்த சில வருடங்களாகவும்-வாரங்களாகவும் நடந்தேறும் இனவாதத் தாக்குதல்-கொலைகளிலிருந்து புரிய முடியும்.எனினும், பரந்துபட்ட ஜேர்மனிய மக்கள் இனவாதத்தை எதிர்த்தே போராடுகிறார்கள்.அங்ஙனம் இல்லையென்றால்,ஜேர்மனியில் உலகத்தின் அனைத்து இனமும் குடியேறி வாழுஞ் சூழலொன்று இல்லை.இன்று, ஜேர்மனியில் உலகத்திலுள்ள அனைத்துத் தேசிய இனங்களும்-குழுக்களும் பெருந்தொகையாக வாழவே முடிகிறது.இது, இலங்கைச் சூழலுக்கும் பொருந்தும்.ஆனால்,தமிழ்ச் சூழலில் இத்தகைய எதிர்ப்பு அறவே பட்டுப்போச்சு.தொடர்ந்து இனவாதத் தீயில் கருத்துக்கட்டுவதில் "அநாமதேயன்"பரம்பரை உறக்கங்கொள்வதில்லை.கூடவே, பிரபாகரனுக்குள் புலிகளது போராட்டத்தைத் திணித்துவிட்டுத் தாமெல்லோரும் தங்கக் கம்பிகளாகக் கவிஞர்வழி பேசமுனைவது சுத்தமோசடி.

வரலாற்றில் புலிகளது வரவுக்கும்,பிரபாகரனது பாத்திரத்துக்குமான சரியான புரிதல் இங்ஙனம் குறுக்கப்பட முடியாது.நமது மக்களது சுயநிர்ணயப் போரைச் சிதைப்பதற்குப் பிரபாகரனுக்குப் பின்னால் நின்றவர்கள், இப்போது பிரபாகரனை அழித்துவிட்டுத் தம்மை எம் மக்களது மேய்ப்பர்களாக்குவதில் மையமுறும் அரசியலை"அநாமதேயன்"எழுத்துக்களுக்குள் இனங்காண்பது ஒன்றுஞ் சிரமமான காரியமில்லை!

ப.வி.ஸ்ரீரங்கன்

Anonymous said...

இளங்கோ அண்ணா,நீங்கள் இணைப்பிட்ட பதிவுகள் சிற்சில இ... இளங்கோ அண்ணா,நீங்கள் இணைப்பிட்ட பதிவுகள் சிற்சில இடங்களில் கசத்தாலும் , மாற்றுக் கருத்துக்களின் அவசியத்தின் பால் , எம்மை சுய பரிசோதனைக்கு உட்படுத்தியே ஆகவேண்டும் என உணர்த்தி நிற்கின்றன.
ஆனால் இந்த கண்மூடித்தனமான வெள்ளாள எதிர்ப்பானது , இந்தியாவில் யார் என்ன மாற்றுக்கருத்து கூறினாலும் , அவருடலில் பூணூலை தேடுவது போலாகி விடுமோ என அச்சமூட்டுகின்றது. ( எனக்கும் சில முறை அணிவித்து விட்டார்கள் :-)

ஒரு எடுத்துக்காட்டு அகிலன் கதிர்காமர் இங்கே சைவ வெள்ளாளப் பிள்ளை எனக் குறிப்பிடபடுகிறார். உண்மையில் லக்ஷ்மன் கதிர்காமரே பிறப்பால் ஒரு ஆங்கிலிகன் கிறிஸ்தவர் மற்றும் இறப்பால் ஒரு புத்த சமயத்தவர். அதாவது இலங்கை அரசு அவரது இறுதி சடங்கை அவ்வாறே நடத்தி உடலை எரித்தது.அப்படிப்பட்ட ஒருவரை , சைவ வெள்ளாளப் பிள்ளை என முத்திரை குத்தி , ஒரு வெகுஜன அபிப்பிராயத்தை ஏற்படுத்துவது ஏற்புடையதல்ல.

-பிர‌ஷாந்த‌ன்
....

(இப்ப‌திவை facebookல் வாசித்து ந‌ண்ப‌ர் பிர‌ஷாந்த‌ன் இட்ட‌ பின்னூட்ட‌ம். அவ‌ர் கூறும் புள்ளி முக்கிய‌ம் என்ப‌தால் இங்கேயும் இடுகின்றேன். ந‌ன்றி ~டிசே)

DJ said...

ச‌ஜி,
உங்குள்ள‌ நிலைமைக‌ளில் எதையும் விரிவாக‌ எழுத‌ முடியாது என்ப‌தை அறிவேன். இய‌ன்ற‌வரை அங்கே என்ன‌ ந‌ட‌ந்துகொண்டிருக்கின்ற‌து என்ப‌தைப் ப‌கிர்ந்த‌மைக்கு ந‌ன்றி. அதேவேளை, ப‌த்திரிகையாள‌ர்க‌ளுக்கு ஈழ‌த்தில் எந்த‌வித‌ப்பாதுகாப்பும் இல்லாத‌ நிலையில், நீங்க‌ள் இவ‌ற்றையெல்லாம் என்றேனும் ஒருநாள் விரிவாக‌ எழுத‌வேண்டும் என்ப‌தைக் கேட்க‌க் கூட‌த் த‌ய‌க்கமாயிருக்கிற‌து.

.....
சிறிர‌ங்க‌ன்,
அநாம‌தேய‌ன் என்ற‌ பெய‌ரில் எழுதுப‌வ‌ர் இளைஞ‌ராக‌ இருக்க‌லாம் என்ப‌து என‌து ஊக‌ம். இளைய‌வ‌ர்க‌ளுக்கு ஏற்ப‌டும் உண‌ர்ச்சிவ‌ச‌ப்ப‌ட‌ல்க‌ளும், த‌டுமாற்ற‌ங்க‌ளும் நீங்க‌ள் அறியாத‌தும் அல்ல‌. எங்க‌ளைப் போன்ற‌ த‌லைமுறை உண‌ர்ச்சிக‌ளாலேயே க‌ட்டிய‌மைக்க‌ப்ப‌ட்ட‌ ஒரு த‌லைமுறை. நாம் அதிலிருந்து மீள்வ‌தும் எழுவ‌தும் என்ப‌து எல்லாவித‌ த‌டுமாற்ற‌ங்க‌ளோடுதான் நிக‌ழுமென‌ நினைக்கின்றேன். ம‌ற்றும்ப‌டி, சிங்க‌ள் ம‌க்க‌ள், பேரின‌வாத‌த்தைப் போல‌ன்றி த‌மிழ் ம‌க்க‌ளை ந‌ன்கே விள‌ங்கிவைத்திருக்கின்ற‌ன‌ர் ('சிங்கள மக்களில் பெரும்பான்மையானர்வர்கள் இதைக்கடந்துவிட்டது இன்றைய சூழலில் விரிவாக அறியத்தக்கது-ஆராயத்தக்கது!' என‌ நீங்க‌ள் குறிப்பிடுவ‌தைப் போன்று).
எங்க‌ள் ம‌க்க‌ளின் பேர‌ழிவைக் கொண்டாடுகின்ற‌ சிங்க‌ள‌ப் பேரின‌வாத‌த்தை ம‌றுத்து இந்த‌ அழிவுக்காய் ம‌ன‌ம் வ‌ருந்துகின்ற‌ ஒரு சிங்க‌ள‌ச் ச‌ந்த‌தி எழுமென்றே ந‌ம்புகின்றேன். ஓரிட‌த்தில் குந்த‌ர் கிராஸ் குறிப்பிடுவ‌தைப் போல‌, நாஸிக‌ள் செய்த‌ அழிவுக‌ளுக்குப் பொறுப்பேற்று அதிலிருந்து த‌ங்க‌ளைப் போன்ற‌ ஜேர்ம‌னிய‌ர்க‌ள் எழுத‌ வ‌ருவ‌து ஒருகால‌த்தில் மிக‌க் க‌டின‌மாய் இருந்த‌தென்ற‌மாதிரி, இந்த‌ அழிவிற்காய் ம‌ன‌ம் வ‌ருந்துகின்ற‌, த‌ங்க‌ளின் த‌வ‌றுக‌ளையும் ஒப்புக்கொள்கின்ற‌ சிங்க‌ள ம‌க்க‌ள் என்றேனும் ஒருநாள் நிச்ச‌ய‌ம் வ‌ருவார்க‌ள்.

/வரலாற்றில் புலிகளது வரவுக்கும்,பிரபாகரனது பாத்திரத்துக்குமான சரியான புரிதல் இங்ஙனம் குறுக்கப்பட முடியாது/
என‌ நீங்க‌ள் கூறுவ‌தும் என‌க்கு ஏற்புடைய‌தே.

தமிழன்-கறுப்பி... said...

இதில் எல்லா கட்டுரைகளையும் வாசிக்கவில்லை ஆனாலும் அநாமதேயன்னின் கட்டுரை நான் வாசித்திருக்கிறேன் அவர் சொல்கிற பிரபாகரன் பற்றிய கூற்றுக்கு எனக்கும் ஏற்புடையதல்ல அந்த நிலமை வருவதற்கும் நாங்களே காரணம் என்பதையும் அதில் பெரும்பங்கு புலம்பெயர் மக்களிடம் இருந்தததையும் மறைக்க முடியாது.
மற்றும்படி உணர்ச்சிவசப்பட்ட நிலையில் எழுதியிருப்பதென்பது ஒரு சமாளித்தல் போலத்தான் எனக்கு தெரிகிறது அந்த நாட்களில் நிகழ்ந்ததது உணர்வுகளோடு விளையாடுகிற வேலைதான் நீங்கள் தோற்றுப்போனீர்கள் இனி நாங்கள் சொல்வதை கேட்கத்தான் வேண்டும் நாங்கள் என்ன வேணும் எண்டாலும் செய்வோம் என்பது மாதிரித்தான் இருந்தது சில ரின் அறிக்கைகளும் கொழும்பில் நிகழ்ந்த செயல்களும்..
இவ்வளவு என்ன வெளிநாட்டு சிங்கள் ஊடகங்கள் செய்யதது கூட அப்படித்தான். நாடு பற்றிய எந்த அக்கறையுமில்லாமல் இருந்தன நம்முடைய சில தமிழ் ஊடகங்கள் போல.


ரணில் சம்பந்தமான கூற்று இங்கேயிருக்கிற சிங்களவர்களிடமும் இருந்தது.

சனம் செத்துப்போகுது என்பதைக்கதைக்காமல் சனத்தை யார் கொன்றது என்பதற்கான வாதங்களே நடந்து கொண்டிருந்தது.

அவ்வளவு சனம் அப்படி இருக்கும் பொழுது ஒரு ராணுவ வெற்றியை கொண்டாடும்படியும் பங்கெடுக்கும் படியும் உத்தரவு பிறப்பித்த அரசை பார்த்துக்கொண்டு உணர்ச்சி வசப்படாமல் எழுதுவதென்பது கொஞ்சம போலித்தனமாகத்தான் தெரிகிறது.

மற்றும்படி இன அழிவுக்காய் சீற்றம் கொள்கிற சிங்களச்சமுதாயம் வருவதற்கு இன்னும் சில தலை முறைகள் தேவைப்படலாம் என்பது என் எண்ணம் அப்பொழுதில் இலங்கை முற்றாக வஆசிய பிராந்திய வல்லாதிக்கஙகளின் பிடியில் இருக்கும் ஒன்றுக்கும் இயலாது போக ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்கிற நிலை வருகையில் அது நிகழலாம்.

இதை நான் சொல்வதற்கு இவ்வளவு பிரச்சனைகளின் பொழுதும் அல்லது அதற்கு பிறகும் எந்த வொரு இளைய சக்தியும் மாற்று கருத்தக்களை பொதுவில் வைக்கவில்லை என்பதும் எல்லா இன இளையவர்களும் இருக்கிற பல்கலைக்கழகங்கள் கூட முகாம்களில் இருக்கிற மக்களது அடிப்படை உரிமைகளுக்காக முழுவீச்சில் செயற்படவில்லை என்பதும் ஆகக்குறைந்து அரபு நாடுகளில் இருந்து கடினப்படுகிறவர்கள் கூட அதுக்கான புரிதல்களோடு இருப்பதாதய் எனக்கு தெரியவில்லை என்பதும்.

இன்னும் பகிரலாம் இந்த சலிப்பான உரையடலில் நான் பங்கெடுக்க விருமபுவதில்லை அறை அதிரும்படியாய் பல தடைவைகள் உரையாடியும் புரிதலே இல்லாத என் அறைத்தோழர்கள் போலத்தான் எங்கடை நாடு திருந்துறது நடக்காத காரியம் மாற்று சக்கதியோ மாற்று கருத்தோ சனங்களுக்கிடையிலான கதையாடலோ அப்படியெண்டால் என்ன...

Anonymous said...

சிறிரங்கன் அவலை நினைத்து உரலை இடிக்கிறார்.

DJ said...

பிரஷாந்தன்,
நீங்கள் குறிப்பிடுவதுமாதிரி கண்மூடித்தனமான வெள்ளாள எதிர்ப்பானது எதையும் சாதித்துவிடாது என்பது உண்மையே. அவ்வாறான கண்மூடித்தனமான பிராமண எதிர்ப்பே, இந்தியாவிலிருந்த அடுத்தடுத்த நிலையிலிருந்த சாதிகளும் பிராமணியத்தைச் சுவீகரித்துக்கொண்டு தலித்துக்களை மேலும் ஒடுக்கவும் துணைபோனதும் கடந்தகால நிகழ்வுகள். அதேபோன்று வெள்ளாள மனோநிலையை ஈழத்திலும் அடுத்தடுத்த நிலைகளிலிருக்கும் சாதிகள் சுவீகரித்துக்கொள்ள முயற்சிப்பதும், தங்களையும் 'வெள்ளாளர்களென' அடையாளப்படுத்துவதுமெனவும் நிகழச் செய்கின்றன. எனவே பிறப்பால் அல்ல, தங்களுக்குள் உருவாகிக்கொள்ளும் ஆதிக்க மனோநிலைகளையைப் பொறுத்தே வெள்ளார்களென ஒவ்வொருத்தரையும் நான் எடுத்துக்கொள்ள விரும்புகின்றேன். இதற்குள் குறிப்பிட்ட ஒரு சாதியினர் மட்டும் உள்ளடக்கப்படத் தேவையில்லை. ஒர் இலக்கிய நிகழ்வில், ஒருவரைத் தொடர்ச்சியாக கேள்விகள் கேட்டபோது, ஒரு கட்டத்தில் நான் மேடையில் இருப்பவன்/ள், நீங்கள் எனது உரையைக் கேட்க வந்திருக்கின்றவர்கள் என்று எங்களை ஆண்டான் - அடிமை மனோபாவத்தில் அடக்க முயற்சித்தது நிகழ்ந்தது. இதை நான் வெள்ளாள மனோபாவமாகவே எடுத்துக்கொண்டேன். இதைத்தான் ஈழத்தில் செய்துகொண்டிருந்தார்கள், முன்னேற விரும்பியவர்களைச் சாதியைச் சொல்லி கீழிறக்க முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். இங்கே பொதுவெளியில் (தமிழ்ச்சமூகத்தில் அல்ல) சாதியை வைத்து பம்மாத்துச் செய்யமுடியாதுதானே. எனவே வெள்ளாள மனோநிலை இப்படி வேறுவிதங்களில் தங்களை நிரூபித்து தங்களை உயிர்ப்பிக்க முயலும் என நினைக்கின்றேன்.
....
அகிலன் கதிர்காமரும், லஷ்மண் கதிர்காமரும் தகப்பம் மகன் முறையானவர்கள் அல்ல, வெவ்வேறானவர்கள். தவறு உணர்ந்து வளர்மதியும் மன்னிப்புக் கேட்டிருக்கின்றார். அதைக் குறிப்பிடாது விட்டமைக்கு எனது மன்னிப்பும்.

DJ said...

தமிழன் - கறுப்பி,
அனைத்து நம்பிக்கையீனங்களுக்கும் அப்பால் எதையோ சிலதில் நம்பிக்கை வைக்கமுடிவதால்தானே வாழ முடிகின்றது அல்லவா? இன்றைக்கு முள்ளுக்கம்பிகளுக்குள் முடக்கப்பட்ட எங்களின் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும் ஏதோவொரு நம்பிக்கைதானே இன்னமும் உயிர்ப்பித்துக்கொண்டிருக்கிறதல்லவா. அவர்களுக்கு முன் எமக்கு ஏற்படும் நம்பிக்கையீனங்கள் எல்லாம் ஒன்றுமே இல்லை போலத்தான் சிலவேளைகளில்படும்.
....
சிங்கள மக்களில் அப்படிச் சில இளைஞர்களை எனது நண்பர்களினூடாக நானறிவேன். அவர்களில் சிலரைச் சந்திந்துமிருக்கின்றேன். இந்த யுத்தத்தின் வெற்றியானது சிங்களவர்கள் கொண்டாடக்கூடியதல்ல என தங்கள் இயங்கும் தளங்களில் வெளிப்படையாகச் சொல்லியும் இருக்கின்றார்கள். மற்றும்படி அந்தக் குரல்களை முக்கியப்படுத்துவதற்கு இன்னமும் ஒரு சுமூகமான சூழல் ஈழத்தில் இல்லை என்பது உண்மை. லசந்த போன்றவர்களுக்கே மரணம் பரிசாகக் கொடுக்கப்பட்டபோது...அவர்களை நோகவும் முடியும்.

Kasthurisamy said...

anpulla dj-
please send me your intended feedback. it may help me to enrich.
anpudan yamuna rajendran

வளர்மதி said...

டிசே,

நேற்று மாலையே ஃபேஸ் புக்கில் பார்த்து இங்கு வந்தபோது எழுத உட்கார்ந்ததில் மிக விரிவாகப் போய்விட்டது. பின்னொரு சந்தர்ப்பத்தில் எழுதலாம் என்று விட்டுவிட்டேன்.

தற்சமயம் இந்த விஷயத்தில் குறுகிய பார்வையில் அணுகவில்லை என்பதைச் சுட்ட இந்தச் சுட்டியையும் அப்பக்கத்திலிருந்து சில வரிகளையும் மட்டும் இங்கு தருகிறேன்.

விஷயத்தை எப்படி அணுகலாம் எனபதற்கான குறிப்புகளாக இதை அணுகலாம்:

http://issues.lines-magazine.org/Art_Nov05_Feb06/Nandaka_Kadirgamar.htm

(மொழியாக்கம் செய்ய போதிய நேரமில்லை)

”One of the most significant trends in constructing the image of Mr. Kadirgamar is to attribute a certain Sinhalese and Buddhist identity to him.”

”Accordingly, these newspaper accounts attempt to construct Mr. Lakshman Kadirgamar’s identity based on three factors: that he was the best diplomat and foreign minister Sri Lanka has had, that he was born as a Tamil (rather an Anglican Tamil) but still acted as a true patriot, and that he had become a true Sinhala Buddhist in spirit.”

“The way these accounts construct Mr. Kadirgamar’s identity may lead someone to see him as a person who always stood for the interests of the majority Sinhala Buddhists. As a result, this would also lead Mr. Kadirgamar to be read as a traitor who fought against the interests of certain powerful minority movements like the LTTE that is said to represent the interests of the minority Tamils.”

நன்றிகள்.

DJ said...

யமுனா,
நானெழுதிய பின்னூட்டம் அவ்வளவு முக்கியமானதல்ல. அத்தோடு தொடர்ந்து வந்த கட்டுரைகளில் நீங்கள் அந்தப்புள்ளிகளைத் தொட்டிருக்கின்றீர்களென நினைக்கின்றேன். இப்போது சிறிதளவேயான அந்தப் பின்னூட்டம் உள்ளது. உங்கள் மின்னஞ்சல் முகவரியைத் தந்தால் அனுப்பிவிடுகின்றேன். நன்றி.
...
வளர்,
விளக்கந்தந்தமைக்கு நன்றி.