Monday, February 08, 2010

வேருல‌கு: க‌ன‌வுக‌ளின் தொகுப்பு நூல் வெளியீடு

மெலிஞ்சி முத்த‌னின் நான்காவ‌து தொகுப்பாய்  'வேருல‌கு' வெளிவ‌ருகின்ற‌து. ஏற்க‌ன‌வே மூன்று க‌விதைத் தொகுப்புக்க‌ளை வெளியிட்டிருக்கிறார். முத‌ல் இர‌ண்டு தொகுப்புக்க‌ள் ஈழ‌த்திலும், மூன்றாம் தொகுப்பு பிரான்சிலும், நான்காவ‌து தொகுப்பான‌ வேருல‌கு க‌ன‌டாவிலும் வெளிவ‌ருகின்ற‌து.



இத்தொகுப்பை ஒருவ‌கைக்குள் அட‌க்குவ‌தாயின் 'குறுநாவ‌ல்' என்று பெய‌ரிட்டாலும், மெலிஞ்சி இதைத் த‌ன‌து 'க‌ன‌வுக‌ளின் தொகுப்பு' என‌வே அழைக்க‌ விரும்புகிறார். இத்தொகுப்பில் ய‌தார்த்த‌திற்கும் க‌ன‌வுக்கும் இடையிலான‌ மிக‌ அந்த‌ர‌ங்க‌மான‌ மொழியில்  (நான் வாசித்த‌வ‌ளவில்) மெலிஞ்சி எழுதியிருக்கிறார். துய‌ர‌மான‌ ஈழ‌த்தின் வாழ்வும் அத‌ற்கு ச‌ற்றும் குறைவில்லாத‌ இன்னொரு துய‌ர‌மான‌ புல‌ம்பெய‌ர் வாழ்வும் இதில் மிக‌ நெருக்க‌மாய்ப் ப‌திவு செய்ய‌ப்ப‌டுகிற‌து. அண்மைய‌ கால‌த்தில் த‌மிழ்ச்சூழ‌லில் வெளிவ‌ருகின்ற‌ புனைவுக‌ளில் முக்கிய‌மான‌ ஒன்றாய் இத‌னைக் க‌ருதுகிறேன்.

ந‌ண்ப‌ர்க‌ள் நாங்க‌ள் இணைந்து ந‌ட‌த்துகின்ற‌ இவ்வெளியீட்டு விழாவில் க‌ல‌ந்துகொள்ள‌ அனைவ‌ரையும் அழைக்கிறோம்.

Friday, February 05, 2010

ஆயிர‌த்தில் ஒருவ‌ன்: சாருவின் அப‌த்த‌ உள‌ற‌ல்க‌ள்

'ஆயிர‌த்தில் ஒருவ‌ன்' ப‌ற்றிய‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ளைப் பார்த்த‌போது, க‌ற்ற‌து த‌மிழுக்கு வ‌ந்த‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ளே நினைவிற்கு வ‌ந்த‌ன‌. ஒருசாரார் அதிக‌ம் புக‌ழ‌வும் இன்னொரு சாரார் வைய‌வும் என‌... க‌ட‌ந்த‌கால‌த்தில் க‌ற்ற‌து த‌மிழுக்கு நிக‌ழ்ந்த‌தே ஆயிர‌த்தில் ஒருவ‌னுக்கு நிக‌ழ்ந்திருக்கின்ற‌து. சில‌ க‌ருத்துக்க‌ளோடு உட‌ன்ப‌டாவிட்டாலும் ஆயிர‌த்தில் ஒருவ‌ன் ப‌ற்றி(நான் வாசித்த‌ளவில்) சுகுணா திவாக‌ர், அபிலாஷ் போன்ற‌வ‌ர்க‌ளின் க‌ட்டுரைக‌ள் முக்கிய‌மான‌வை. ஆயிர‌த்தில் ஒருவ‌ன் குறித்து ந‌ண்ப‌ர்க‌ளுடான‌ என் ப‌கிர்த‌ல்க‌ளை சிறுசிறு துண்டு ரூவிற்ற‌ர்களை இர‌ண்டு சிறு ப‌திவுக‌ளாக‌ தொகுத்திருக்கிறேன். சாரு நிவேதிதாவின் ஆயிர‌த்து ஒருவ‌ன் ப‌ற்றிய‌ மிகுந்த‌ அப‌த்த‌மான‌ உயிர்மைக் க‌ட்டுரையைப் பார்த்த‌பின், சிலவ‌ற்றையாவ‌து உட‌ன‌டி எதிர்வினையாக‌ முன்வைத்த‌ல் அவ‌சிய‌மென‌ப்ப‌டுகிற‌து.

சாரு குறிப்பிட்ட‌ பிற‌ (ஆங்கில‌) திரைப்ப‌ட‌ங்க‌ளின் பாதிப்புக்க‌ளை ஏற்க‌ன‌வே ப‌ல இட‌ங்க‌ளில் குறிப்பிட்டு ப‌ல‌ர் எழுதிய‌தால் அவ‌ற்றைத் த‌விர்த்தே எழுதுகின்றேன். முக்கிய‌மாய் இரும்பு உருண்டையில் க‌யிற்றைக் க‌ட்டிய‌டிக்கும் (கிளேடியேற்ற‌ர்) காட்சியைக் கூட‌ த‌மிழ்ச்சூழ‌லிற்கு ஏற்ப‌ மாற்ற‌ முய‌லாத‌ செல்வ‌ராக‌வ‌னின் ப‌டைப்பு ம‌ந்த‌த்தை எல்லாம் ஏற்றுக்கொண்டே சாருவின் ப‌திவிற்கு எதிர்வினையாற்றுகிறேன்.

வ‌ர‌லாற்றில் ந‌ம‌க்குச் சொல்ல‌ப்ப‌ட்ட‌ சோழ‌ர்க‌ளின் பொற்கால‌ம் என்ப‌து குறித்து நிறைய‌க் கேள்விக‌ள் பிற்கால‌த்தில் எழுப்ப‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன‌. இவ்வ‌ள‌வு பெரிய‌ இராஜ்ஜிய‌த்தைக் க‌ட்டிய‌மைத்த‌ சோழ‌ர்க‌ளின் வ‌ர‌லாறு நிச்ச‌ய‌ம் இர‌த்த‌த்தாலே நிறைந்திருக்கும் என்ப‌து சொல்லாம‌லே எவ‌ருக்கும் புரியும். அவ‌ர்க‌ள் க‌ட்டிய‌ மிக‌ப்பெரும் கோயில்க‌ளிலேயே எத்த‌னை அடிமை ம‌க்க‌ளின் இர‌த்த‌மும் விய‌ர்வையும் உறைந்துகிட‌க்கும் என்ப‌து நாம் அறியாத‌தும‌ல்ல‌.

அவ்வாறான‌ ஒரு சோழ‌ ப‌ர‌ம்பரையில் வ‌ந்த‌வ‌ரை சாரு...
"சோழ மன்னன் தன் குடிமக்களை அடித்துக் கொல்லுகிறான்; வெட்டிச் சாய்க்கிறான். நர மாமிசம் தின்னும் காட்டுமிராண்டியை விடக் கேவலமாக நடந்து கொள்கிறான். ஆனால் இப்படிப்பட்ட ஒரு மன்னன் ஒரு காவிய நாயகனைப் போல் படத்தின் பிரதான பாத்திரமாகவும், பார்வையாளர்களின் கருணையைக் கோருபவனாகவும் சித்தரிக்கப்பட்டிருப்பது எப்படி? நம்முடைய இதிகாச நாயகன் ராமனை எடுத்துக் கொள்வோம். ஒரு காட்சியில் ஏக பத்தினி விரதனாகவும், இன்னொரு காட்சியில் தன் குலப் பெண்டிரையே வன்புணர்ச்சி செய்பவனாகவும் சித்தரித்தால் எப்படி இருக்கும்? அதேதான் சோழ மன்னனின் பாத்திரப் படைப்பில் நடந்திருக்கிறது."
என்றெழுதுகின்றார். ஏன் அவ்வாறு இருக்க‌முடியாது என்றொரு கேள்வியை நாம் சாருவிட‌ம் திருப்ப‌ எழுப்ப‌ வேண்டியிருக்கிற‌து? வ‌ர‌லாற்றில் பேர‌ர‌சுக‌ளை க‌ட்டியெழுப்பிய‌வ‌ர்க‌ள் அனைவ‌ருமே தாம் சார்ந்த‌ ப‌குதியின‌ருக்கு திரு உருக்க‌ளாக‌வும், பிற‌ருக்கு கேவ‌ல‌மாக‌வும் ஆகிய‌து ய‌தார்த்த‌ம் என்றால், மாபெரும் பேர‌ர‌சைக் க‌ட்டிய‌ சோழ‌ர்க‌ளும் ஏன் அப்ப‌டி இருந்திருக்க‌முடியாது? ந‌ல்ல‌தும் கெட்ட‌தும் பிரிக்க‌முடியாது அல்ல‌து ந‌ல்ல‌தும் கெட்ட‌தும் இணைந்திருப்ப‌தே இய‌ல்பான‌து என்று எத்த‌னையோ சிந்த‌னையாள‌ர்களை ப‌டித்துக் க‌ரைத்த‌தாய்க் கூறும் சாருவால் ஏன் இதை விள‌ங்கிக்கொள்ள‌முடியாது இருக்கின்ற‌து. த‌ன்னையொரு 'பின்ந‌வீன‌த்துவ‌வாதி'யாக‌ ம‌ட்டுமின்றி, 'பின் ந‌வீன‌த்துவ‌ விம‌ர்ச‌க‌ர்க‌ள்' என்று பிற‌ரையும் சுட்டிக்காட்டுகின்ற‌ சாருதான் ஒரு க‌தாபாத்திர‌ம் ந‌ல்ல‌தாக‌/உய‌ர்ந்த‌தாக‌ ம‌ட்டுமே சித்த‌ரிக்க‌வேண்டும் என்று அடித்துக்கூறுகிறார். ஆக‌ இதுநாள் வ‌ரை எழுதிய‌து/வாசித்த‌தும் எல்லாம் பட‌ங்காட்ட‌த்தானா சாரு?

அடுத்து, "இந்திய ராணுவமே ஏதோ கூலிப்படையைப் போலவும், சினிமாவில் வரும் அடியாள் கூட்டத்தைப் போலவும்தான் காண்பிக்கப்பட்டிருக்கிறது."
இதில் சாருவிற்கு ஏன் க‌வலை வ‌ருகின்ற‌து?. இந்திய‌ இராணுவ‌ம் கூலிப்ப‌டை போல‌ த‌ன்னைச் சுற்றியிருக்கும் நாடுக‌ளில் ந‌ட‌க்க‌வேயில்லையா? நான் யதார்த்தில் ஈழ‌த்தில் பார்த்த‌ இந்திய‌ இராணுவ‌ம் ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளில் கூலிப்ப‌டையை/அடியாள் கூட்ட‌த்தை விட‌வும் மிக‌வும் மோச‌மாக‌த்தானே இருந்திருக்கிற‌து? உண்மையை உண்மையாய்ச் சொன்னால் சாருவிற்கு வ‌லிக்கிற‌து என்கின்ற‌போது அவ‌்ர் அண்மைக்காலமாய் அருந்திவரும் அருட்பாலில் 'இந்திய‌த் தேசிய‌ப் பாலையும்' கொடுத்துவிட்டாரோ என்றூதான் ச‌ந்தேகிக்க‌ வேண்டியிருக்கிற‌து. தேசிய‌ப்பாலிற்காவ‌து ஏதாவ‌து விஷ‌ம் கொடுத்து இற‌க்கி வைக்க‌லாம். ஆனால் சாருவிற்கு உதார‌ண்க்காட்ட‌ வேறு ஒருவ‌ருமில்லாது இராம‌னே வ‌ர‌வேண்டியிருந்த‌தால், வ‌ந்திருக்கும் இந்துத்துவ‌க் காய்ச‌லிற்கு எந்த‌ ஊசி குத்துவ‌து என்றும் தெரிய‌வில்லை? அது கூட‌ப்ப‌ர‌வாயில்லை சோழ‌ர‌து காலமாவ‌து வ‌ரலாற்றில் இருந்திருக்கிற‌து, க‌ட‌வுளான‌ இராம‌ரின் க‌தையெல்லாம் 'இதிகாச‌ங்க‌ளிற்கு' ம‌ட்டுமே ப‌ய‌ன்ப‌டும்.

மேலும்,"நீலப் படங்களில் fetish என்ற ஒருவகை படம் உள்ளது. அதில் சிறுநீரைக் குடிப்பார்கள். இன்னும் அதுபோல் கற்பனைக்கே எட்டாதபடி கண்ட கண்ட கண்றாவியெல்லாம் வரும். அந்த ஃபெடிஷ் ரக நீலப் படங்களை ஞாபகப்படுத்தும்"
அட‌டா சாரு நீங்க‌ள் முன்பு நீங்க‌ள் எழுதிய‌வ‌ற்றின் பிர‌க்ஞையோடு தான் இதையெல்லாம் எழுதுகின்றீர்க‌ளா? உங்க‌ளின் 'உன்ன‌த‌ ச‌ங்கீத‌த்தில்' ஒரு ப‌தின்ம‌க்காரியை மூத்திர‌ம் பெய்ய‌ச் சொல்லி அதை ந‌க்க‌ விரும்புகின்ற‌ பாத்திர‌ப் ப‌டைப்பு 'க‌லைத்துவ‌மாக‌' இருக்கும்போது ஏன் உங்க‌ளிற்கு ரீமா சென் நின்ற‌ப‌டியே மூத்திர‌ம் பெய்வ‌து எரிச்ச‌லூட்டுகிறது; நீல‌ப்ப‌ட‌ங்க‌ளை நினைவுப‌டுத்துகிற‌து. ழார் ப‌த்தாயின் 'விழியின் க‌தை'யை(The Story of Eye) வாசித்துக் கொண்டுமா இப்ப‌டிக் கூசாம‌ல் சிறுநீரைக் க‌ழிப்ப‌தையெல்லாம் fetish வ‌கைக்குள் உள்ளட‌க்குவீர்க‌ள்? உன்ன‌த‌ ச‌ங்கீத‌த்தில் சிறுநீரைக் க‌ழித்தால் விழியின் க‌தையும், ஆயிர‌த்தில் ஒருவ‌னைப் பார்த்தால் fetish வ‌கையும் நினைவுக்கு வாச‌க‌ருக்கு/பார்வையாள‌ருக்கு வ‌ர‌வேண்டும் என்று நினைவூட்டுவ‌து கூட‌ ஒருவ‌கை வ‌ன்முறைதான்.

இன்னும் சாரு, "ஆயிரத்தில் ஒருவன் மூன்று ஆண்டுகள் எடுக்கப்பட்ட படம் என்பதால் இடையில் பிரபாகரனின் மரண சம்பவம் வேறு நிகழ்ந்து விட்டதால் கதை திடீரென்று பாதை மாறி இலங்கைத் தமிழர் பிரச்சினையின் பக்கம் நகர்ந்து விடுகிறது. புலிக்கொடி தாங்கிப் போராடும் சோழர்கள் புலிகள். அவர்களுக்கு எதிராக இந்திய ராணுவம். புலிகளைக் கொன்று குவித்து, அவர்களின் பெண்களைக் கற்பழிக்கும் இந்திய ராணுவம். என்ன ஒரு வரலாற்றுப் பார்வை! அப்படியானால், இந்திய ராணுவம் சோழனின் குடிமக்களை என்ன செய்ததோ அதைத்தானே சோழ மன்னனும் செய்தான்? மிகக் கொடூரமான காட்டுமிராண்டியாகத்தானே சோழ மன்னனைப் படைத்திருக்கிறார் இயக்குனர்? அவனுக்கும் இந்திய ராணுவத்துக்கும் என்ன வித்தியாசம்? காவிய நாயகன் இறுதிக் காட்சியில் சாகும் போது நமக்குள் கண்ணீரல்லவா சுரக்க வேண்டும்? பதிலாக சோழ மன்னன் சாகும் போது ‘இது என்னடா பெரிய மண்டைக் குடைச்சலாக இருக்கிறது? ’ என்ற மன உளைச்சலே ஏற்படுகிறது. அதுவும் தவிர, இலங்கையில் இந்திய ராணுவத்தின் அத்துமீறல் என்றால், விடுதலைப் புலிகள் மற்ற தமிழ்ப் போராளி இயக்கத்தினர் மீது நடத்திய வன்முறையை என்னவென்று சொல்வது?"
இல்லாத‌ வாசிப்பை இருக்கிற‌து போல‌ச் செய்ய‌வேண்டும் என்ப‌த‌ற்கு மேலேயுள்ள‌துதான் பொருத்த‌ம். செல்வ‌ராக‌வ‌னே த‌ன‌து ப‌ட‌ப்பிடிப்பு ஈழ‌ப்போர் ந‌ட‌க்க‌முன்ன‌ரே முடிந்துவிட்ட‌து என்று கூறியிருக்கிறார் என்று அறிகிறேன். ஆனால் பார்ப்ப‌வ‌ருக்கான‌ எல்லை விரிந்துள்ள‌து என்ப‌தை ஒப்புக்கொண்டு ஆயிர‌த்தில் ஒருவ‌னை ஈழ‌த்து வ‌ர‌லாற்றோடு ஒப்பிடுப‌வ‌ர்க‌ளை ம‌றுக்க‌வும் முடியாது (என‌து த‌னிப்ப‌ட்ட‌ க‌ருத்தாய் இது ஈழ‌த்தின் வ‌ர‌லாற்றோடு ஒப்பிட‌முடியாது என‌த்தெளிவாக‌ எழுதியிருக்கிறேன்).

ஆனால் ஒரு பேச்சுக்கு சோழ‌ ப‌ர‌ம்ப்ப‌ரைதான் விடுத‌லைப்புலிக‌ளாக‌ சித்த‌ரிக்க‌ப்ப‌ட்டிருந்தால் கூட‌ அதிலென்ன‌ த‌வ‌றிருக்கிற‌து என்று, சாரு மேலே எழுதிய‌தை வைத்து புரிந்துகொள்ள‌ முடிய‌வில்லை. இந்திய‌ இராணுவ‌ம் ஈழ‌ம் போன்ற‌ சிறு நாடுக‌ளில் ம‌ட்டுமில்லை, ம‌ணிப்பூர் காஷ்மீர் ப‌குதிக‌ளிலும் பெண்க‌ளிட‌ம் அத்துமீறியிருக்கிற‌து. ச‌த்திய‌ம‌ங்க‌ல‌ம் காடுக‌ளில் வீர‌ப்ப‌ன் வேட்டை என்று  ஆதிவாசிப் பெண்க‌ளிட‌ம் இந்திய‌ இராணுவ‌ம் அதிர‌டிப்ப‌டை எந்த‌ 'வேட்டை'யை ந‌ட‌த்திய‌து? (பால‌முருக‌னின் 'சோளகர் தொட்டி'யை வாசித்தால் 'அதிர‌டிப்ப‌டை' என்று எழுத‌வே இந்திய‌த் த‌மிழ‌ரிற்கு கூச்ச‌ம் வ‌ர‌வேண்டும்). இதே இராணுவ‌ந்தான் போராடும் இய‌க்க‌ங்க‌ளை மிக‌ மோச‌மாக‌ எல்லா இட‌ங்க‌ளிலும் ஒடுக்கியிருக்கிற‌து. புலிக‌ள் அழிக்க‌ப்ப‌ட்ட‌தைப் பாட‌மாக‌ வைத்துக்கொண்டு மாவோயிஸ்டுக்க‌ளை கோர‌மாக‌ அழிக்க‌ இந்திய‌ இராணுவ‌ம் இப்போது ஓட‌வில்லையா? ஆக‌வே செல்வ‌ராக‌வ‌ன் ச‌ரியாக‌த்தான் இந்திய‌ இராணுவ‌த்தை சித்த‌ரித்திருக்கின்றார். அதே ச‌ம‌ய‌ம் சோழ‌ர்தான் புலிக‌ள் என்ற‌ க‌ருத்தை வைப்பவ‌ர்க‌ளின் க‌ருத்தை ஏற்றுக்கொண்டால் சோழ‌ன் போல‌ புலிக‌ளின் வ‌ர‌லாறும் அவ்வ‌ளவு ஒன்றும் புனித‌ம‌ல்ல‌ என்றுதானே செல்வ‌ராக‌வ‌ன் கூறியிருக்கின்றார் என்றும் எடுத்துக்கொள்ள‌லாம். ஆனால் ந‌ம‌து சாருவிற்கு "புலிகள் மற்ற தமிழ்ப் போராளி இயக்கத்தினர் மீது நடத்திய வன்முறையை என்னவென்று சொல்வது?" என்று உட‌னே அறிவுஜீவிக் கொம்பு முளைத்துவிடுகிற‌து. அட‌ முட்டாள் ம‌னுசா சோழ‌ன் த‌ன் அடிமைக‌ளைக் கொலை செய்ய‌விட்டு மகிழ‌வில்லையா என்ன‌??

இந்த‌ச் சாருதான் ஈழ‌த்தின் இறுதிப்போரின்போது க‌ள்ள‌ ம‌வுன‌ம் சாதித்த‌வ‌ர் என்ப‌தையும் க‌வ‌ன‌த்தில் எடுக்க‌வேண்டும். அதைவிட‌ உன்ன‌த‌ ச‌ங்கீதத்தில் இந்திய‌ இராணுவ‌ம் சிங்க‌ள‌ப் பெண்ணைப் பாலிய‌ல் வ‌ல்லுறவு செய்வ‌தாய்ச் ச‌ம‌கால‌த்தின் வ‌ர‌லாறே தெரியாம‌ல் எழுதிய‌வ‌ர்; இன்று  செல்வ‌ராக‌வ‌னிற்கு சோழ‌ரின் வ‌ர‌லாறு தெரியாது என்று பாட‌ம் ந‌ட‌த்துகிறார். எழுதுவ‌த‌ற்கு ஓரிட‌ம் இருக்கிற‌து என்ப‌த‌ற்காய் தான் எழுதிய அனைத்தையும் வ‌ச‌தியாய் மூடிம‌றைத்துவிட்டு எழுதுவ‌து எந்த‌வ‌கையில் அறஞ்சார்ந்த‌ நியாய‌ம்?

இவையெல்லாவ‌ற்றையும் விட‌ மிகுந்த‌ அப‌த்த‌மாய் அவ‌தார்(Avatar) ப‌ட‌த்தை உய‌ரிய‌ ப‌டைப்பாய் வைத்து ஒப்பிடுவ‌து. அவ‌தாரில் கூற‌ப்ப‌டுவ‌து எல்லாம் இங்கே ஆதிக்குடிக‌ளின் வாழ்க்கை முறைய‌ல்ல‌வா? வெள்ளையின‌ வெறி இதைத்தான் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் ஆதிக்குடிக‌ளிற்கு செய‌தது? ஆதிக்குடிக‌ள் ப‌ற்றிய‌ திரைப்ப‌ட‌ங்க‌ள் கூட‌ தேவையில்லை, ஆதிக்குடிக‌ள் ப‌ற்றிய‌ சாதார‌ண் ஒரு க‌ட்டுரையை வாசித்தால் கூட‌ க‌ம‌ரூன் அவ‌தாரில் குறிப்பிடுகின்ற‌ விட‌ய‌ங்க‌ளை (being so close with nature) அறிந்துகொள்ள‌லாம். இதை (Avatar) ஏதோவோர் மாஸ்ர‌ர் பீஸ் போல் எழுதுகின்ற‌ சாருவை என்ன‌ செய்ய‌? வெள்ளையின‌ வெறியை நேர‌டியாக‌க் காட்ட‌க்கூட‌ வ‌க்கில்லாத‌ க‌ம‌ரூன் இப்போது Global Warming மாற்ற‌த்தால் தாங்க‌ள் பாதிக்க‌ப்ப‌ட‌ப்போகின்றோம் என்ப‌த‌ற்காய் ஆதிக்குடிக‌ளை ஒரு  க‌ச்சாய்ப்பொருளாய் பாவித்து எந்த‌ வெட்க‌முமின்றி 'உய‌ரிய‌ ப‌டைப்பாய்' எடுக்கிறார்   சாருவிற்கு நாங்க‌ளும் உல‌க‌ வ‌ரலாறு ப‌டிக்க‌ ப‌ரிந்துரைக்க‌த்தான் வேண்டுமா? அதுவும் அவ‌தாரில் இறுதியாய் இவ‌ர்க‌ள்தான் போய் அந்த‌ ம‌க்க‌ளைக் காப்பாற்றுவார்க‌ளாம்? அமெரிக்கா, க‌ன‌டா போன்ற‌ நாடுக‌ளை ஆக்கிர‌மித்த‌ வெள்ளையின‌த்த‌வ‌ரில் ஏவ‌ரேனும் ஒருவ‌ர் இப்ப‌டி மாறி அந்த‌ ம‌க்க‌ளைக் காப்பாற்றியிருந்தால் அந்த‌ ம‌க்க‌ள் இந்த‌ளவு கொடுமையான‌ வாழ்வை இன்று தேர்ந்தெடுக்க‌வேண்டி வ‌ந்திருக்காது அல்ல‌வா? ஆக‌க்குறைந்து அவ‌ர்க‌ள் எப்ப‌டி இய‌ற்கையை தெய்வ‌மாக‌, ப‌ரிசுத்த‌ பொருளாய்ப் ப‌ய‌ன்ப்டுத்தினார்க‌ள் என்று க‌ற்றுக்கொண்டிருந்தால் 'இன்று அய்யோ உல‌க‌ம் கால‌நிலை மாற்ற‌ங்க‌ளினால் அழிய‌ப்போகின்ற‌து' என்று க‌த‌றிக்கொண்டிருக்க‌ வேண்டியிருக்காது? இந்த‌ எந்த‌ புரித‌லில்லாம‌ல் சாரு அவ‌தாரை ஆகா ஒகோவென்று புக‌ழும்போது வ‌ரும் எரிச்ச‌லில் எங்க‌ள் த‌லையை எங்கே கொண்டுபோய் இடிப்ப‌து? (அவ‌தாரை நான் முற்றுமுழுதாக‌ நிராக‌ரிக்க‌வில்லை; அவ‌தார் ப‌ற்றிய‌ உரையாட‌லைத் தொட‌க்க‌ இக்க‌ட்டுரையை வாசிக்க‌ப் ப‌ரிந்துரைக்கிறேன்)

ஆக‌ இத்த‌கைய‌ அப‌த்த‌ங்க‌ளைக் கொண்டு எழுத‌ப்ப‌ட்ட‌ சாருவின் க‌ட்டுரையை 'சாருவின் பாணியிலேயே' நாம் கிழித்தெறிய‌லாம். இன்னும் நிறைய‌ விவாதிக்கலாம். இப்போதைக்கு இது போதும்; வேறு 'உருப்ப‌டியான‌' வேலைக‌ள் எங்க‌ளுக்கும் இருக்கிற‌து.

(இது ஆயிர‌த்தில் ஒருவ‌ன் ப‌ற்றிய‌ ப‌திவ‌ல்ல‌; சாருவின் க‌ட்டுரை மீதான‌ எதிர்வினை என்ப‌தைக் க‌வ‌ன‌த்திற் கொள்ள‌வும்)

ஆயிர‌த்தில் ஒருவ‌ன் (Twitter)