~ரமேஷ்-பிரேம்
தொன்மங்கள் இல்லாத இனமோ, குழுவோ தனக்கென ஒரு அடையாளத்தைக் கொண்டிருத்தல் என்பது சாத்தியமற்றது. தன் நிலம் பற்றி, தன் இனம் பற்றி, தன்னைச் சூழ்ந்துள்ள தாவரங்கள், விலங்குகள் மற்றும் பிற இயற்கை வடிவங்கள் பற்றி, தன் வெளி மற்றும் காலம் பற்றி, இன்னும் விரிந்த பொருளில் தன்னைச் சூழ்ந்துள்ள பேரண்டம் பற்றி எல்லாம் ஒவ்வொரு இனத்திற்கும் தொன்மங்கள் தேவை. தொன்மம் அற்ற சமூகத்திற்கு வரலாறும் இல்லாமலேயே போகும். வரலாறு அற்ற சமூகத்தில் அடையாளம் என்பது பெரும் சிக்கலாகப் போகும். அடையாளம் என்பது, வேறொன்றுமல்ல மனத்தின் திசை வடிவம், இயக்கமுறை, யாராக இருந்து, யாரை நோக்கி, யாருக்காக சிந்திப்பது, எதுவாக இருந்து, எதனை அறிந்து, எதுவழியாக, எதுவாக மாற உணர்வு கொள்வது என்பவை அனைத்துமே ‘தான்’ என்பதும்; தான் என்ற அடையாளமும் வரையறுக்கப்பட்டபின்பே இயலக் கூடியது. இந்த அடையாளம் எப்போதும் தனி மனிதர் சார்ந்ததோ ‘அகம்’ அல்லது ‘உள்ளுணர்வு’ சார்ந்ததோ அல்ல. கூட்டுத் தன்மை உடையது. தனி மனிதர், தனி ஒரு மனம் என்பதெல்லாம் உள்ளங்கையில் அள்ளிய நீர் போன்றதுதான். அது வேறொரு பெருநீர் பரப்பின் அக்கண வடிவம். அதே அக்கண வடிவமும், அதுவான நிலையும் அடையாளம் மற்றும் ‘தனது நிலை’ மற்றும் நிகழ்வு நிலை’ என்பவற்றைப் பொருத்தது. இந்த அடையாளத்தை, பாத்திரத்தை, பாவனையை ஒவ்வொருவருக்கும் வழங்குவது அவர் ‘வாழ நேர்ந்து’விட்ட வரலாறு, சமூகம், நம்பிக்கைச் சூழல் என்பவையே. இவற்றைச் சுருக்கமாக இனச்சூழல் என்று வைத்துக் கொள்ளலாம். இனம் என்றவுடன் நமக்கு மொழியும், சமயமும், வழக்காறுகளும், நம்பிக்கைகளும், இன விதிகளும் கூடவே நிலமும் நினைவுக்கு வரும். இவை அனைத்தும் நமக்குள் பதிவாகி உள்ள முறை அல்லது வடிவமைப்பு என்பதுதான் தொன்மம். தொன்மம் என்பது புனைவோ, கற்பனையோ, பொய் மொழியோ அல்ல; அது ஒரு சமூகம் தன்னைப் பற்றியும் தன்னைச் சூழ்ந்த இயற்கை மற்றும் செயற்கை பற்றியும்; தன் வாழ்தல் மற்றும் மறைதல் பற்றியும், புரிந்து கொண்டமுறை; புரிதல்களுக்கு அடிப்படையாக அமைந்த மொழிக் கட்டமைப்பு.
ஒவ்வொரு சமூகமும் தனது வரலாற்றை, நினைவை, கனவை தொன்மத்திலிருந்தே தொடங்குகிறது, தொடங்க முடியும். அதே வகையாய் பிறரைப் பற்றிய தொன்மத்தையும் அது உருவாக்கி வைத்துக் கொள்கிறது. இயற்கை என்பது இயல்பில் என்னவென்று அறியவே முடியாததாக உள்ள நிலையில் மனிதர் வாழும் இடம் ‘பண்பாடு’ என்றும், ‘கலாசாரம்’ என்றும் கூறப்படும் இடம்தான். இயற்கையும் பண்பாடும் என்ற இணை இருமைகளை இணைக்கும் ஒரு மனிதச் செயல்பாடுதான் தொன்மத்தில் தொடக்கம் பெறுகிறது. இருவேறு இனங்கள், இருவேறு குழுக்கள், இருவேறு தேசங்கள் எதிர்ப்படும் பொழுது முதலில் சந்தித்துக் கொள்பவை, அவற்றின் தொன்மங்கள்தான். ஒரு இனம் மற்ற இனத்தால் அடிமை கொள்ளப்படும் பொழுது அங்கு ஒரு தொன்மம் நிலைகுலைக்கப்படுகிறது. அது மற்றொரு தொன்மத்தின் ஆதிக்கம் நிறைந்த அதிகாரம் நிறைந்த கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டி இருக்கிறது. இரண்டுக்குமிடையிலான ஊடாட்டமும் இடையீடுகள் இடையூறுகள் இடையுறவுகளும் கூடி இன்னொரு வகையான தொன்மத் தொகுதியை உருவாக்கிவிடுகிறது. இதுவரை உருவான எவ்வகை மனித அறிவும் தனது தொன்மம் பின்புலத்தை முடிக்க மறுத்து உருவானதில்லை; உருவாகவும் இயலாது. ஏனெனில், மொழியின் அடிப்படைத் தன்மையே தொன்மம் சார்ந்தது; ஒருவகையில் மொழி என்பதே தொன்மம்தான். அதற்கு ‘காரணகாரிய’ நியாய வாத அடிப்படைகள் இல்லை; எப்படியோ தோன்றிவிட்ட ஒரு அதிசயம் அது. ஆனால் ‘மனிதர்’ என்ற நிலையையே அதுதான் உருவாக்கிக் கொடுத்திருக்கிறது; இன்னும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. தொன்மத்தால் அமைந்த தொன்மமாய் இயங்கிக் கொண்டிருக்கும் மொழிகளின் மூலம் உருவாக்கப்பட்ட ‘மனித நிலை’ எந்த ஒரு எல்லை வரையிலும் ஒரு தொன்மத்தன்மை கொண்டதாகவே இருக்கும்.
ஆனால், தன்னைப் பற்றி தான் உருவாக்கிக் கொண்ட தொன்மத்தில் ஒரு இனம் அல்லது குழு இடப்படுத்தப்பட்டிருப்பதற்கும் தன்னைப் பற்றி பிற இனம், பிற குழு உருவாக்கிய தொன்மத்தில் இடப்படுத்தப்படுவதற்கும் இடையில் பெரும் வேறுபாடு உண்டு. அடிமைப்படுத்தப்பட்ட சமூகங்களின் தொன்மங்கள் அலைக்கழிக்கப்பட்டு, பொய்யானவை எனத் தீர்ப்பளிக்கப்பட்டு திரிந்து போவதும், வேறு வகையில் மற்ற தொன்மங்களின் பகுதியாகி விடுவதும் கவனத்துக்குரியவை. தமது நிலம், மொழி, தொன்மம் என ஏதாவதொன்றைத் தகவமைத்துக் கொள்ளாத, தங்க வைத்துக் கொள்ளாத இனம் உண்மையில் அழிந்துபோன இனமாகவே இருக்கும். அழிந்து போன இனங்களில் இருந்து மீண்டும் ஒரு அடையாளம் கட்டமைக்கப்படும் சாத்தியம் அமையும் என்றால், அது உருமாறிய தொன்மத்திலிருந்துதான் தொடக்கம் பெறும். இனங்களை அழித்தலில் நிலம் பறிக்கப்பட்டு தமதாக்கப்படும், ஆனால் மொழியும், தொன்மமும் அடையாளமழிக்கப்படும். இனங்களை அழித்தவர்களும் அழிப்பவர்களும் மொழியையும் தொன்மத்தையும் அழிப்பதன் மூலம் நிலத்தைத் தமதாக்கிக் கொள்கின்றனர். மீந்து நிற்கும் மக்கள் இனமற்ற இனங்களாய், வேறு இனமுற்ற இனங்களாய் திரிக்கப்படுகின்றனர். இந்தத் திரிபுதான் அவர்களைத் தமது நிலத்திற்குள்ளாகவே நிலமற்றவர்களாக மாற்றிவிடுகிறது.
ஆப்பிரிக்க மண்ணில் கருப்பின மக்களைப் போலவும், இந்திய மண்ணில் தலித்துகள் மற்றும் பழங்குடியினரைப் போலவும். நிலம் அற்ற வாழ்வு என்ன பொருளுடையது. நிலம் அற்று மனிதருக்கு உடல் உண்டா? உடல் அற்று மனிதருக்கு மனம் உண்டா? மனம் அற்றுப்போன மனிதர் என்பது ஒரு மனிதரற்ற நிலையல்லவா? தொன்மமும் நிலமும்; உடலும் மனமும் பிணைந்துதான் மனிதர் நிலை என்பது தோன்ற முடியும் என்னும்போது தொன்மங்கள் அனைத்தும் நிலம் சார்ந்து அமைந்து விடுகின்றன. நிலமற்ற, நிலமிழந்த மக்களின் நிலமோ அவர்களின் தொன்மங்களுக்குள் மீந்து நின்றுவிடுகின்றன. நிலமற்ற பின்னும் அவர்களின் வாழிடம் அவர்களின் தொன்மங்களில்; மீந்து நிற்கும் தொன்மங்களில் பதுங்கி நிற்கும் நிலத்தினில் உள்ளது அந்த நிலமே அவர்களின் உடலையும் மனதையும் கட்டமைத்துத் தருகிறது. திசை நோக்கி வணங்குதலும், ஒரு நிலத்தைத் தமது புனித நிலமாகத் தொழுதலும், உடலையும் மனதையும் கட்டமைத்து இயக்கும் கூறுகளாக முடிகிறது. நிலம் சில சமயங்களில் நிலம் கடந்த வேறு உலகமாக கற்பனை வடிவம் கொள்கிறது. நிலம் இழந்த மனம் கூட வேறு ஒரு ‘புனித நிலம்’ ‘மறு உலகம்’ என்ற நிலப்பரப்பைச் சுற்றிச் சுற்றி வருகிறது; அதற்கேற்ப தனது உடலை வடிவமைத்துக் கொள்கிறது. நிலம் என்பது இவ்வகையாய் தொன்மமாக மாறுவதும், தொன்மம் மறுவகையில் நமது நிலத்தைச் சுட்டி நிற்பதும் ஒன்றுடன் ஒன்று பிணைந்த செயலாகின்றன. தொன்மம் இன்று நிலமும், நிலமின்றி தொன்மமும் நிகழமுடியாத இடத்தில நிலத்தொன்மமும், தொன்ம நிலமும் உருவாகி விடுகின்றன. இவை இரண்டும் சேர்ந்து உடலையும் மனதையும் உருவாக்கித் தருகின்றன. நிலத்திலிருந்து உருவான உடல் மனதை உருவாக்கித் தருகிறது. பிறகு மனம் உடல் வழியே தனக்கான நிலத்தை உருவாக்கிக் கொள்கிறது. மனம் உருவாக்கும் இந்த நிலம்தான் அது வாழும் இடம், அதன் இன நிலம், வாழ்வதற்கு, தான் உருவாவதற்கு மூலமான நிலத்திற்காக தனது வாழ்வை, உடலைத் தர தயாராக உள்ள நிலைதான் எந்த ஒரு இனத்திற்குமான மனத்தகவமைப்பாக மாறுகிறது. தனது நிலம், பிற நிலம் என்ற எல்லை நிலைகளில் கொலை செய்யவும், கொல்லப்படவுமான ஒரு மனத் தகவமைப்பு எவ்வளவு புராதனமானது? எத்தனை தொன்மையானது. இதனைத்தான் தமிழின் தொன்மை இலக்கியங்கள் அகம், புறம் எனப் பிணைத்து அடையாளப்படுத்தின. இன்பம் என்பது இரண்டையும் இணைக்கும் ‘புலன் வழியாக’ அடையாளம் காணப்பட்டது. உண்மையில் புறம் என்பது நிலமும்_அகம் என்பது மனமுமாக நிற்கும்போது உடல் என்பது இருவகைச் செயல்பாடுகளாக பாவனை கொள்கிறது; ஒன்று போர், மற்றது காதல்; போரில் கொல்லுதல் கொல்லப்படுதல் நிகழ்கிறது; இரண்டும் இன்பமே. வெற்றி அல்லது வீரமரணம் இரண்டுமே புகழ், இசை, பேரின்பம். காதலில் புணர்ச்சியும் பிரிவும் நிகழ்கிறது. இரண்டுமே இன்பம், ஏனெனில் அங்கு காதல் உறுதி செய்யப்படுகிறது. இறப்பும் வாழ்வும் இணையும் இடம் ‘புகழ்’ என்றாவதுடன், புகழ், இசை என்பது மாறாததும் மறையாததும், இறப்பற்று நிலைக்கும் புகழாக, பெருமையாக விரிந்த வடிவம் கொள்கின்றன.
‘‘ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பரவின் அல்லது
நெல் உகுந்துப் பரவும் கடவுளும் இலவே’’
(பகைவரைத் தடுத்து அவர் யானையைக் கொன்று தானும் இறந்த வீரனின் நடுகல் அல்லாமல் வேறு கடவுள் இல்லை.
_ மாங்குடி கிழார், புறநானூறு : 335)
பகைவரைத் தன் நிலத்திற்குள் நுழைய விடாமையும், தன் நிலத்தைக் கவர வரும் எதையும் அழிக்கும் வேகமும், அதற்கெனத் தன் உயிரை விடுவதற்கான மனஉறுதியும் ஒரு உடலைக் கடவுள் நிலைக்குக் கொண்டு செல்கிறது. அந்த மரணம், மரணமிலாப் பெருவாழ்வாகப் பொருள்படுகிறது. அந்த உடலின் அடையாளமான ‘கல்’ ஒரு இனத்தின், நிலத்தில் வழிபாட்டுக்குரிய கடவுளாகி விடுகிறது. இந்தக் கடவுள், கல், பரவுதல் என்பவைதான் அச்சமூகத்தின் வழிபடுத்துத் தொன்மங்கள். இத்தொன்மம்தான் அச்சமூகத்தின் இன்பம், துன்பம், இசை, வசை, வாழ்வு, சாவு என்பவற்றை வரையறை செய்தவை.
****************************
தமிழின் தொன்மை இலக்கியங்கள் என இன்று நம்முன் மீந்து நிற்கும் தொகை நூல்கள் என்பவை தொல் தமிழ்ச் சமூகங்கள் அனைத்தின் சமூக மனப்பதிவுகளையும் கொண்டவை அல்ல என்றாலும், சில பொதுக் கருத்துக்கூறுகளை, பொது நம்பிக்கைகளைப் பதிவு செய்து வைத்திருப்பவை. இலக்கியம் என்பது எப்போதும் ஒரு வகைக் கோட்பாட்டாக்கத்தை, அறம் உரைத்தலைத் தமக்குள் கொண்டிருக்கும்; அது அனைத்திற்கும் இறுதியில் ஒரு அறம், விதி அல்லது அறிவுறுத்தல் என்பதைக் கொண்டே தன்னை வடிவமைத்துக் கொள்ளும். இன்றுவரையும் எந்தக் கலை, இலக்கிய, அழகியல் படைப்பும் இந்த விதிமுறையிலிருந்து விலகிவிட்டதோ விலகிவிட முடிந்ததோ இல்லை. ஆனால், ஒரு அறம், விதி, அறிவு மற்றொரு சூழலில் மற்றொரு சமூகத்திற்கு அறமாக, விதியாக, அறிவாக இருக்க வேண்டிய தேவையோ நியாயமோ இருப்பதில்லை. அது பலவிதிகளின், பல அறங்களின், பலவித அறிவுகளின் ஊடாட்ட களமாக, மோதல் இடமாக; சில சமயங்களில் உரையாடல் தளமாக இருக்க முடிகிறது. இன்று உள்ள எல்லா இலக்கியச் சொல்லாடல்களும் ஏதோ ஒரு வகையில் இந்த அறம், விதிகள், அறிவுகள் பற்றிய கேள்விகளை ஏதோ ஒரு வகையில் கையாண்டு கொண்டே இருக்கின்றன. தமிழின் தொன்மை இலக்கியங்களும் ஏதோ ஒரு வகைகளில் மனித மனம், இருப்பு, அறம் மற்றும் வாழ்தலின் அடிப்படை இலங்கு நெறிகள் பற்றிய கேள்விகளைக் கையாள்வதுடன் பதிலுரைக்கவும் முயற்சிக்கின்றன. அவை மீண்டும், மீண்டும் நிலம், உடல், மனம் என்ற கருதுகோள்களை கருத்தமைவுகளை, இருப்புநிலைகளை மற்றொரு வகையில் மெய்மைகளை வரையறுக்கவும் அப்படி வரையறுக்கும் முயற்சியில் ஏற்படும் இடைவெளிகளை வேறு அழகியல்களால் நிரப்பவும் முயன்றுகொண்டே உள்ளன. அவை கையாலும் சிக்கல் மற்றும் மெய்மை என்பவை என்றுமே மனித சமூகங்களை, மனித மன இயந்திரவியலைத் தாக்கிக் கொண்டே இருக்கும் ஒரு தீவிரமான கேள்வி அது; வாழ்வு_மறைவு, இன்பம்_துன்பம், பொருளுடைய நிலை_பொருளின்மை, அறம்_அறமின்மை, அழிவு_அழிவற்ற நிலை என்று தொடரும் நீண்ட எதிர்வுகளின் ஊடாட்டம் அவற்றிற்குள் உள்ளது. இந்திய மெய்யியல்கள் பலவும் ஏதேதோ வகையில் கையாண்டு பதிலுரைக்க முயற்சி செய்த கேள்விகளை தமிழின் பன்மை மரபுகளும் கையாண்டுப் பதிலுரைக்க முயற்சி செய்துள்ளன.
மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம் புகழ் நிறீஇத் தாம்மாய்ந்தனரே.
(புறம். 165)
(நிலையற்ற உலகில் நிலைத்திருக்க விரும்பினோர் தமது புகழை இங்கு விட்டு தாம் மறைந்து போயினர்)
நிலையின்மையே நிலைத்ததாகிய இவ்வுலகில் தம்மை நிலைப்படுத்திக் கொள்ளும் வழி என்பது தனது வாழ்வை பொருள்படுத்திக்கொள்வதற்கான வழியாக இங்கு அர்த்தம் பெறுகிறது. நிலைத்தல் நிலையின்மை என்ற இருபெரும் எல்லைகளுக்கு இடையில் மனித மனத்தை நிலைப்படுத்தும் எத்தனிப்பில்தான் அனைத்து மெய்யியல்களும் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. அறம் என்ற கேள்விக்குப் பதிலுரைக்க இந்த நிலைப்புள்ளியே தகுந்த இடம். பொருளின்மையை உணர்ந்த மனம் அறத்தைத் தேர்ந்தெடுக்க என்ன தேவை இருக்கிறது. இருக்கவேண்டும் என்று பதிலுரைக்கின்றன. இந்திய மாற்று மரபுகள், தமிழின் தொன்மை மரபுகளும் இதற்கு ஏதோ சில வகைகளில் விடைகூற முயற்சிக்கின்றன. அந்த விடை கூறும் முயற்சியில் அவை கண்டடைந்த இணைப்புகள்தான், அகம், புறம் என்ற கோட்பாட்டு வடிவங்கள். இவை கோட்பாடுகளா என்று கேட்பவர்கள் சற்றே தள்ளியிருக்கட்டும், அகம், புறம் என்ற புரிதல் மனம், சமூக அறம் என்பவை பற்றிய ஒருவகை கோட்பாட்டாக்கங்களே. இவை நிலம், உடல், மனம் என்ற இணைப்புகளைக் கொண்டு எதையோ விளக்க முயற்சிக்கின்றன.
*****************************************
முதல் பொருளாகிய இடமும் பொழுதும் என்பதிலிருந்து தொடங்குவோம். காலம், வெளி என்ற இருபெரும் ஆதி கூறுகள் இவை; நிலமும் பொழுதுமாக இங்கு வடிவம் பெருகின்றன. அனைத்திற்கும் அடிப்படையான மர்மங்கள் இவை. நிலம், வெளி என்பவை இயற்கை வெளி என்பதிலிருந்து பண்பாட்டு வெளியாக, சமூக வெளியாக, அரசியல் வெளியாக சமய வெளியாக, சடங்கு வெளியாக, தனி மனித மற்றும் கூட்டு மனித வெளியாக, குடும்ப வெளியாக மாறிமாறி மனித மயப்பட்டு அடுக்கடுக்காக உருவம் கொள்கிறது. காலமும் கூட மனித மயப்பட்டு சிறு பொழுது பெரும்பொழுது என்று பிரிவுற்று மேலும் சமூக காலம், வரலாற்றுக் காலம், தனித்த உடல் சார்ந்த காலம் என வகை பிரிந்து பின்னலுறுகிறது. இந்தப் பின்னலாக்கம் மனித உடல் சார்ந்த அறிதலால், புலன் சார்ந்த புரிதலால் ஏற்படுவது. இந்த முதற்பொருள்களாகிய நிலமும் பொழுதும் வகை பிரிவதன் மூலம்தான் வேறுபட்ட உடல்களைத் தோற்றுவித்து சமூக வெளியாக, பண்பாட்டு வெளியாக மனித காலத்திற்குள் வடிவமைக்கின்றன. இதற்கு அடிப்படையானவை கருப்பொருள்கள், தெய்வம், உணவு, விலங்கு, மரம், பறவை, பூ, பறை, பண், நீர், தொழில் இவற்றில் இயற்கை சார்ந்த சமூகச் சூழலும் மனிதரால் படைக்கப்பட்ட சமூகச் சூழலும் அடங்கும். இதன் விரிவாக வாழிடம், ஊர், வீடு, கருவிகள், அரசு என்பவையும் சேரமுடியும்; இவை அனைத்தும் ‘உடல்’ என்ற பகுதியாகக் கூடியவை. இவை அனைத்தும் சேர்ந்தே மனதைத் தோற்றுவிக்கின்றன. மனம் என்பதின் மாறுபாடுகள் கருப்பொருள் மற்றும் முதற்பொருள்களின் மாறுபடு இணைப்புகளால் தோற்றம் கொள்கின்றன. நிலம், காலம், சமூகப்பொருள் சூழல் என்பவை இணைந்து உருவாகும் மனநிலையே ‘மனித நிலை’ என்பதைத் தோற்றுவிக்கிறது. மனம் என்பது தனித்ததல்ல என்பதை இந்த இணைப்பு நிலை விளக்கி விடுகிறது. நிலம் உருவாக்கிய உடலும், உடல் உருவாக்கிய மனமும் என்ற நிலை தவிர்க்கமுடியாத வகையில் மனதால் புரிந்து கொள்ளப்படும் உடல், உடலுக்கு அடிப்படையான நிலம் என்ற உறவமைப்பைத் தோற்றுவிக்கும் பொழுது மனம் நிலத்தை வரையறை செய்யும் வினை தொடக்கம் பெறுகிறது. மனதால் அடையாளப் படுத்தப்படும் ‘நிலம்,’ மனதால் எல்லைப்படுத்தப்படும் ‘நிலம்’, மனதால் வடிவமைக்கப்பட்ட நிலம்; இந்நிலம்தான் ‘மனிதநிலை’ ‘மனித இருப்பு’ என்ற அனைத்திற்கும் அடிப்படையாகி விடுகிறது. நிலம் இழத்தல் என்பது உடலையும் மனதையும் இழத்தல் என்பதாகப் பொருள்படுகிறது. நிலம் அற்ற நிலையில் ‘மனித நிலையும்’ ‘மனித அறமும்’ சாத்திய மற்றுப்போகிற நிலையும் இதனால்தான் ஏற்பட்டு விடுகிறது.
****************************
நிலம் காத்தல் என்ற நிலையும், நிலம் கவர்தல் என்ற நிலையும் எதிரெதிர் திசை சார்ந்தவை. ஆயினும் ‘போர்’ என்பதை ‘அறம்’ என்பதற்குள் அடக்கும் தமிழ்க் கோட்பாடு, இறப்பு என்பதை இருவகைப்படுத்துகிறது; வீரமரணம், இழிமரணம், வெற்றி என்பது இரண்டாம் நிலையிலேயே வைக்கப்படுகிறது. ‘குழந்தை இறந்து பிறந்தாலும் வெறும் ஊன் மண்டம் பிறந்தாலும் ஆள் இல்லையென வாளால் வெட்டிப் புதைத்தலை மறக்காத’ நிலை மறம் என்பதன் அடையாளமாகிறது. யானையும், குதிரையும் மனித உடல் மீது குறியீடாகத் தளப்படுத்தப்பட்டு அழித்தலின் ஆற்றல் நிறைந்த மனித உடல் கட்டமைக்கப்படுகிறது. போரில் யானையும், குதிரையும் மனித வடிவம் பெருகின்றன. மனித மனதின் செயல்பாடு கருவிகளாகின்றன. கோட்டைகள் தகர்க்கப்படுகின்றன, அரண்கள் அழிக்கப்படுகின்றன அகழிகள் தூர்க்கப்படுகின்றன, ஊர் தீயிடப்பட்டு வானம் புகையால் மூடப்படுகிறது, காடுகளும் வயல்களும் அழிக்கப்படுகின்றன. கொல்லப்பட்ட உடல்களோ எண்ணற்றவை, பருந்தும் கழுகும் வானமெங்கும் வட்டமிட்டு ஊனைத் தின்கின்றன. நரியும், பேயும் மனித உடல்களைக் கொண்டாடிப் புசிக்கின்றன, வயல்களில் எருக்கு விதைக்கப்படுகிறது, வெற்றி பெற்றோர் கள்ளுண்டு களியாட்டம் ஆடுகின்றனர். தோற்றவர்களும் கூட வீர மரணத்தால் விண்ணுலகடைந்து பெருமைப்படுகின்றனர். ‘உயர்ந்தோர் நாட்டு உடம் பொடும் சென்மார்’ என்ற நிலையை அடைகின்றனர். இந்த நிலையை விளக்க மற்றொரு உலகம் என்பது பயன்படுகிறது. இந்நிலம் நீங்கினும் வேறு உலகத்தில் உனது புகழ் நிலவும் என்பது காலம் கடந்து மொழியில் வாழும் நிலையைக் குறிக்கிறது. நிலம், உடல், மனம் என்பவற்றை இணைக்க இங்கு மொழியே முதலும் கடைசியுமாக தேவைப்படுகிறது. மொழியில் வாழும் நிலையை ‘ஆண்டு நீ பெயர்ந்த பின்னும் ஈண்டு நீடு விளங்கும் நீ எய்திய புகழே (புறம் 359) என்ற தொடர் விளக்குகிறது.உடல் புகழப்படுதலும், அதுவே இன்பத்தின் இருப்பிடம் என்று கூறப்படுதலும் ஒருவகையில் வலியானது, அது உடல் அழிதல் பற்றிய, மரணம் பற்றிய அச்சத்தை மிகுத்து, வாழ்தலை மனம் சார்ந்த இருப்பை தொடர் வலியாக்கி விடுகிறது, அப்படியெனில், உடலைவிட ஆயத்தமாதலில் இறப்பு பற்றிய அச்சம் நீக்கப்படுகிறது. பிற்கால பக்தி மரபில் உடலை விடுதல், உயிரை விடுதல் என்பது பேரின்பமாக இறைவனுடன் கலத்தலாக அர்த்தப்பட்டதற்கு முன்பு நிலத்துடன் கலத்தல் என்ற நிலையை போர் சார்ந்த மனத் தகவமைப்பு உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. இந்த மனத் தகவமைப்பு நிலத்தையும் பெண்ணையும் ஒன்றாகப் பொருள்படுத்தும் நிலையில், ஆண்மை என்பதை உருவாக்கிக் கொள்ள முடிந்தது. பெண்மை இனத்தின் மைய இடத்திலிருந்து நீக்கப்பட்ட தன் தொடக்க]மும் இதுவாகவே அமைந்து விட்டது. நிலம், பெண் என்ற இருமை இணைப்புகளைப் புரிந்து கொள்ளும் பொழுது, உடல், மனம் என்பவை போர், காதல் என்பவற்றால் பிணைக்கப்படுதலையும் புரிந்து கொள்ள இயலும், இது வேறு வகைச் சிக்கல்.
(தொடரும்....)
நன்றி: தீராநதி
No comments:
Post a Comment