Thursday, May 17, 2007

துவிதம் - ஆழியாள்

வலியும் வலியறிதலும் விரிந்தவெளி

-யாழ்மதி

துவிதம் - ஆழியாள், வெளியீடு: மரு Mathubashini - 20 Dulverton Street, Amaroo, Canberra ACT 2914, Australia.

காலைகளால் இவ்வுலகம் நிரம்பி வழியும் காலமிது. உடல்சிதறி, குருதி பீறிட்டுப்பாய மரண ஓலங்களும் இழப்புகளும் பொங்கிப் பெருக் கெடுக்க வெடிச்சத்தங்கள் அதிகாரத்தின் கொக்கலிப்பாய் நீளும் காலமிது. அடர்ப்பச்சை வனங்களும் அதன் பெருவெளியெங்கும் மேவித்திரியும் உயிரினங்களும் அதனூடாகக் கலந்து கரைந்துபோன பூர்வகுடிகளின் வாழ்வும் மொழியும் கொன்று அவைகளின் புதைமேட்டில் கேளிக்கை நடனமிடும் காலமிது. நமது வித்தும் வேரும், திசையெட்டும் தழைத்த சீர்மையும், மரபும் வெடிவைத்துத் தகர்க்கப்படும் காலமிது. ஞாபக அடுக்குகளில் எஞ்சியிருக்கிற நிலப் பரப்பின் நினைவுகளும் திட்டமிட்டு பிடுங்கி எறியப்படுகிற உணர்வுக் கொலைகளின் காலமிது.

சட்டென கலிங்கத்துப்பரணியின் போர்க்களக் காட்சி நம் நினைவில் வருகிறது. குருதியாற்றில் உடல்கள் மிதந்து செல்கின்றன. நரிகளின் ஊளையிடல், கழுகுகளின் மலர்ந்த முகம், பேய்களின் குதூகலம் யாவும் காட்சிகளாய் எதிரே நிகழ் கின்றன. "மூளைகளால் கூந்தல் கிளப்பித் தேய்த்து குருதித் தடாகத்தில் கூட்டமாகப் பாய்ந்து மூழ்கி நீந்தி விளையாடுங்கள்' என்று காளி பேய்களிடம் கூறுகிறாள் (கலிங்.508). உலகின் காளியாக தன்னை முன்னிறுத்திக்கொள்கிற அமெரிக்கா முதலிய ஆதிக்க நாடுகளும் தம் கைக்கூலிப் பேய்களை நோக்கி இன்றும் அப்படித்தான் கூறுகின்றன. அந்தப் பேய்கள் இயற்கையையும் கிராமியத்தையும் விளிம்பையும் பெண்ணையும் கொன்று அதன் சிதிலங்களைப் பந்தாகத் தூக்கி வீசி விளையாடுகின்றன. இவ்வாறான கொலை களின் காலத்தில் நம் மனத்தில் துயரமும், இழப்பும், அழுகையும், இயலாமையும், ஏக்கமும் ஒருசேரத் தெறிப்பதைக் காணமுடிகிறது.

உறவுகள், நட்பு, மண்வாசனை, மரங்கள், கடலின் கரிப்புச்சுவை, மீன்களின் மொழிகள் போன்றவற்றை இழந்த இழப்பு; பல்வேறு நாடுகளுக்குச் சிதறிச் செல்ல நேர்ந்த புலம்பெயர் வாழ்வின் சொல்லொனாத் துயரம்; தன் பூர்வீகத்தை, மொழியை, இயற்கையை தனது நாட்டிலேயே இழந்துத் தவிக்கும் அவுஸ்திரேலியப் பழங்குடி மனத்தின் தவிப்பு போன்றவை குருதிக்கறை படிந்த வலியோடு தோற்றம் கொள்கிற ஆழியாளின் கவிதைகள் இயற்கை சார்ந்த பிரபஞ்சம் தழுவிய தனது பரவசத்தின் குதூகலத்தோடும், பெண் முதன் மையின் கொண்டாட்டத்தோடும் உயிர்த் தெழுகின்றன.

ஈழத்தில் தொடர்ந்து நிகழ்கிற போர்ச் சூழலின் பெருங்கொடூரத்தைப் பலகவிதைகள் பேசு கின்றன. போரில் சிதறுண்டு இறந்தவர்களுட னான தன் நினைவுகளை ஒரு பாலம் "சின்னப்பாலம்' எனும் கவிதையில் பகிர்ந்து கொள்கிறது. "பிணங்கள் பாலத்தினருகே விளைந்து கிடக்கின்றன. தன்னூடாகக் கடந்து போனவர் களை அது நினைவில் பதிந்துகொள்கிறபோதும்,

ஊறி வெடிப்புற்றுச் சிதிலமாய்த் தொங்கும் தசைகளை
ஒட்டவைத்து
அடையாளம் காண்பதற்குள்
தலை கிறுகிறுத்துப் போய்விடும்.

என்று கவிதை அமைகிறது. பாலம் இத்துயரின் கிறுகிறுப்பில் “என்னை மட்டும் தனிக்கவிட்டு / இந்த மனிதர் எங்கு போயினர் / எங்கு போயினர்” என்று தன் மக்களைத் தேடி பெருங்குர லெடுத்து அழுகையில் வாசக மனத்துள் உதிரம் கொட்டுவதைத் தவிர்க்க இயலாது. இவை போலவே இனவாதி, ஞாபக அடுக்குகள், பேச்சுவார்த்தை போன்ற கவிதைகள் அமைந் துள்ளன.

போர்ச்சூழலின் காரணமாக புலம்பெயர் வாழ்வு மேற்கொண்டு பதினைந்து ஆண்டு களுக்குப் பிறகு விமான நிலையத்தில் சந்திக்கும் இளவயது பழங்காதலரின் நினைவுகளை "விமான நிலையச் சந்திப்பு' கவிதை தருகிறது. புலம்பெயர் வாழ்வில் அடையாளம் என்பது எப்படியெல்லாம் எழுதப்படுகிறது என்பதைச் சுட்டுகிற "அடையாளம்' கவிதை

ஆதிக்குடிகளிடம் / திருடப்பட்ட தீவாயிருக்கும்
என் புகுந்த நாட்டில் / அப்பாடா!
பழையபடி நான் கறுப்பியானேன்.

என்று முடிகிறபோது தன்னை ஒரு அவுஸ்திரேலிய ஆதிக்குடியாக உணர்கிற தாய்மையும் வெள்ளை ஆதிக்கத்திற்கு எதிரான கலகமும் ஒருசேர வெளிப்படுவதைக் காண முடிகிறது.
அடுத்த முக்கிய அம்சமாக அவுஸ்திரேலிய நிலப்பரப்பில் வாழ்கிற வாழ்வனுபவம், வெள்ளை அதிகாரத்தால் அவுஸ்திரேலிய மண்ணின் பழமை அழிக்கப்பட்ட துயர நிலையை அங்குள்ள பூர்வ குடிகளின் மனத்தவிப்பில் இருந்து வெளிப்படுத்துதல் போன்றவை.

அவுஸ்திரேலியப் பருவகாலமொன்றில் இலையுதிர்க்கும் நெடுமரக்காடுகள் பேசுகின்றன. கடைசி இரு நூற்றாண்டுகளின் மேல்

அரிதாரம் நீலம் பூசி
நட்சத்திரங்கள் ஓர் அறை
அள்ளி அதில் தெளித்து
உச்சிக்கம்பத்தில் பறக்கவிட்ட
வெள்ளை விளைநிலம் இது.

என்றும் சரித்திரகாலத் தொல்நினைவுகளை பசுபிக்கடலில் புதைக்கும் தேசமாகவும் மாறிப் போன துயரை "அவுஸ்திரேலியப் பருவகாலம் ஒன்று' என்ற கவிதை பேசுகிறது. அவுஸ்திரேலிய நிலப்பரப்பை பூமிக்குஞ்சாகவும் அதை வானமான கழுகு தனது அக்குஞ்சைத் தவறவிட்டுத் தேடிக் கொண்டிருக்கிறது. விரைந்து செல்கிற நெடிய நிழலிடம் தன் குஞ்சின் மொழியில் கேட்க, அதுவோ

சொந்தமொழி
ரத்தத்தின் சிவப்பில் தெறிக்கும்போது
வந்தமொழி பேசிச் செரித்து
தானோர் அந்நிய நிழலான
கதை பகிரத் தொடங்கிற்று.

என்று "வேற்றுவெளி' என்ற கவிதை முடிகிறபோது அவுஸ்திரேலிய பழங்குடிகள் தம் மரபு மொழி, இயற்கையாவற்றையும் இழந்து தவிப்பில், கோபத்தில் இருக்கிற சூழலையும், வந்த மொழியாகிய ஆங்கிலம் பேசி அந்நியராகிப் போன துயரையும் பதிவு செய்கிறது. அத்துடன் பூர்வீக வாழ்வின் குருதிச் சிவப்பையும் புலம்பெயர் வாழ்வின் அந்நியச் சூழலையும் பதிகிற இன்னொரு பரிமாணத்தையும் கொண் டுள்ளது. பழங்குடிகளுக்குச் சொந்தமான இயற்கையைப் பறித்த குற்றவுணர்ச்சி அபோக்களாகிய அவுஸ்திரேலியப் பழங்குடிகளைக் காணதவரையில் தோன்றாது என்பதாக "குற்றவுணர்ச்சி' எனும் கவிதை அமைகிறது.

2003இல் நிகழ்ந்த ஈராக் போரின் போது ஏற்பட்ட இழப்புகளின் குவிமையமாக "கி.பி.2003 இல் தைகிரீஸ்' எனும் கவிதை அமைந்துள்ளது. எண்ணெய்க் கிணறுகள் பற்றியெறிகிற காட்சியை "உலகத்துக் கடவுளரெல்லாம்' ஒருசேர வந்தாற் போல, சோதிப் பெரும் பிரகாசமாய் இருந்தன. செவிப்பறைகள் அதிர்ந்து நோகும்படியாக அசரீரியாய் குண்டுகளின் வெடியோசையும் நிரம்பி வழிகிறது. உயர்ந்த தனது மெசப்பத் தோமிய நாகரீகத்தை உடைய தைகிரீஸ் நதி தனது கைகளை உயர்த்திப் பிடித்திருக்கிறது.

சுருங்கிய வெறுங்கைகளே
வெம்பி அல்லாடிச் சொல்லப்
போதுமானதாய் இருந்தன
வேண்டாம் போர் என்று

இப்படி அமெரிக்காவின் கொடுங்கோன்மை யின் பேரிழப்பில் தைகிரீஸ் நதியின் துயரக்காட்சி தாய்மையின் அழுகையாய் அமைந்துள்ளது.

இப்படி எங்கும் மரணங்களும் துயரமும் நிகழ்ந்து கொண்டிருக்க, மரணம்தான் துயரங் களில் இருந்து விடுபடும் வழி என்பதுபோல உலகியல்சார் எல்லாவிதமான வரையறை களையும் உடைத்துக்கொண்டு "மரணம்' என்ற கவிதை அமைந்துள்ளது.

"தமிழ்மொழி வாழ்த்து என்ற கவிதை மிக நிதர்சனமாக வெளிப்பட்டுள்ளது. தமிழ் மொழியை வெறும் உன்னதம் பேசி சமூகம், மொழிகுறித்த அக்கறையற்றுப் பாடுகிற பழம் போக்கிலிருந்து வேறுபடுகிறது. தமிழ் மகள் தனது மொழியின், தேசத்தின், மக்களின் துயரங்களை, இழப்புகளைக் கண்டு வேதனையில் பாடுகிறாள்.

வார்த்தைகளைக் கடந்த / அவ் இசை
ஞாபக அடுக்குகளில் படிந்த
இழப்புகள் அனைத்தினதும்
ஒற்றை மெட்டாக அமைந்திருந்தது.

என்று தமிழ்மகள் ஆன்ம வேதனையில் பாடுவதாக அமைகிறது "தமிழ் மொழி வாழ்த்து' என்ற கவிதை. போலித் தமிழ்பேசி பிழைப்பு நடத்துபவர்களைக் கண்டும், நவீன காலச்சூழலில் தமிழுக்கு நேர்ந்த நெருக்கடிகளைக் கண்டும் தமிழ்மகள் பாடும் கவிதையாகவும் இதைக் கொள்ளலாம்.

அடுத்த மிக முக்கிய அம்சமாக, அனைத்து விதமான அதிகாரங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் எதிரான குரல். இது சூரிய வெடிப்பாக அமைந் துள்ளது "நோட்டு அளத்தல்' என்ற கவிதையில் மகாபலிச் சக்ரவர்த்தியை விசுவரூபமெடுத்து வென்ற வாமணன் அதிகாரத்தின் ஆதிக்கத்தின் குறியீடாக்கப்பட்டு விளிம்பிற்குத் தள்ளப்படு கிறான். இது தாய்மை, பெண் முதன்மையின் உலகம். பெண்தான் உண்மையில் விசுவரூப தரிசனத்தைத் தரமுடியும் என்பதாக

தொடுவானக் கடல் உடுத்து
நுரைமுகில் என் முந்தானை அசைவாக
சூரியப் பொட்டிட்டுப்
புறப்பட்டேன் உலாப்போக
கால்களில் / தேய்ந்த காலணியாய்
வாமணன்.

என்று பெண் முதன்மையின் வெளி பிரபஞ்ச வயமானதாக மாற்றப்படுகிறது. இப்படியாகப் பல்வேறு தளங்களில் விரியும் ஆழியாளின் கவிதைகளுள் இயற்கையின் வார்ப்புகள்,

மணலாற்றுக் கம்பிச் சுருள்களில்
மடங்கிச் சுருண்டு துளிர்த்ததைப்போல்
உறைகுளிரில் விரியும் குறுணிப்பூக்கள்
வெயில் ஏற தீப்பிடித்து எரியும் கரும்பச்சை மரங்கள்
இவ்வாறு மிக நுட்பமாய் அமைந்துள்ளன.

ஆழியாளின் "துவிதம்' என்ற இத்தொகுப்பு பூர்வீகத்தின் வலியும் புலம்பெயர் நிலத்தின் வலியும் என்கிற இருமையும் சேர்ந்து உலகம் தழுவிய பிரஞ்சம் தழுவிய பெரும் வெளியாய் விரிந்து செல்வதைக் காணமுடிகிறது. அந்த வகையில் கவிதைகளில் வெளிப்படும் இயற்கை வார்ப்புகளும், புனைவும், கவிதை மொழியின் கனமும், உள்ளடக்க நுட்பமும் கச்சிதமாக அதே சமயம் இயல்பாக அமைந்துள்ளன. இவ்வாறான பல்வேறு அம்சங்களில் அமைந்த இத்தொகுப்பு நவீனத்தமிழ் கவிதைப் பரப்பில் / புலம்பெயர்ந்த தமிழ்க் கவிதைப் பரப்பில் மிக முக்கியமான கவனத்தைப் பெறும் என்று உறுதியாகச் சொல்ல முடியும்.

நன்றி: அணங்கு (டிசெம்பர் -பெப்ரவரி 2007)

No comments: