Tuesday, February 10, 2009

ஒரு மரணமும் ஒரு கடிதமும்: அது தரும் செய்தி

-தமிழவன்

தமிழ்ச்சமூகம் அதன் மொழிசார்ந்த உணர்வுகளால் கட்டியமைக்கப்பட்டது. உணர்வும், மொழியும் அறிவும் பின்னி அமைந்த ஒரு புராதன சமூகம்.

எனக்கு இப்படிப்பட்ட நினைவுகளை மீண்டும் எழுப்பிய நிகழ்ச்சி, முத்துக்குமார் என்ற இளைஞரின் செயல். தன்னைக் கொன்று ஒரு மக்கள் கூட்டத்தின் அடிமன உணர்வை உலகத்துக்குப் புரியவைத்த செயல்.

பல தற்கொலைகளைப் போன்றதல்ல இச்செயல். இவருடைய உதாரணம் பிற இளைஞர்களால் பின்பற்றத்தக்கதல்ல. ஆனால் நடந்துவிட்ட இச்செயல் ஒரு பிரதி; ஒரு எழுத்து. ஒரு எழுத்தை எப்படி பலவித வியாக்கியானங்களுக்கும் உட்படுத்துகிறோமோ அப்படி இம்மரணம் பல வியாக்கியானங்களுக்கும் (அல்லது உரைகளுக்கும்) உட்படுத்தப்படுவது தவிர்க்கவியலாதது.

அடுத்து முக்கியமானது அந்தக் கடிதம். அந்தக் கடிதத்தையும் ஒரு மரணத்தையும் இணைத்துத்தான் பார்க்கவேண்டும். வேறு சில மரணங்களும் இந்த மாதிரி நடந்துள்ளதாகக் கூறுகிறார்கள். மொத்த சமூகத்தின் குணம் இந்த மரணத்தாலும் கடிதத்தாலும் வெளிப்படுகிற தென்று நான் நினைக்கிறேன்.

லசந்த விக்கிர‌ம‌சிங்க‌ என்ற சிங்கள பத்திரிகையாசிரியன் மரணம் பற்றி, சிவராம் என்ற பத்திரிகையாசிரியர் மரணம் பற்றி எல்லாம் இலங்கையிலிருந்து செய்திகள் வந்தன. எனக்கென்னவோ, லசந்த விக்கிர‌ம‌சிங்க‌ என்ற பத்திரிகையாளரான சிங்களவரின் மரணமும் முத்துக் குமார் என்ற பத்திரிகையாளன் மரணமும் இணைத்து வைத்துப் பார்க்கத் தக்கவையாகத் தென்படுகின்றன. லசந்த, சிங்கள அரசின் அமைப்பைக் காக்க நினைப்பவர்களால் கொல்லப்பட்டார். முத்துக்குமார் இன்றைய தமிழக அரசிலுள்ளவர்களின் இந்திய அரசு பற்றிய அறியாமையால் கொல்லப்பட்டார்.

ஒன்று சிங்கள அரசின் கொலை; இன்னொன்று, மறைமுகமாக, இந்திய அரசின் கொலை.

இந்திய அரசின் தனிக்குணம் என்பது சமீபத்தில் இங்கிலாந்தின் மிலிபண்ட் மூலமாகவும் ஓபாமாவின் கருத்துக்களாலும் அறியமுடியும். இங்கிலாந்தும் அமெரிக்காவும் காஷ்மீர் பற்றிக் கூறும் கருத்துக்களை இந்தியா ஏற்கவில்லை. காஷ்மீர், வடகிழக்குப் பகுதிகள், அஸ்ஸாம், மணிப்புரி பகுதிகளின் பிராந்திய கலாச்சாரம் இந்திய தேச நவீனத்துவத்தை ஏற்கவில்லை. இறுகிய ஒற்றைத்தேசம் என்ற பன்மையற்ற கதையாடலை (Mono-Cultural Narrative) தான் இந்தியா விரும்புகிறது. காஷ்மீர், அண்ணாவின் திரவிடஸ்தான் போன்ற கருத்தாக்கங்களுக்கிடையில் ஒற்றுமைகள் உண்டு.

ஒரு பின்நவீனத்துவ பன்முகக் கதையாடலைத்தான் அண்ணாத்துரையின் பாராளுமன்ற உரையில் (1-May-1962) வந்த தேசம் என்ற சொல் உணர்த்துவது. அவர் சொல்லுகிறார்:

But the time has come for a rethinking for a reappraisal, for a re-valuation and for a reinterpretation of the word "nation".

இந்தியா தென்கிழக்காசியாவில் ஒரு பெரிய அரசாக உருவாவதோடுதான் பிரச்சினைகளைப் பார்க்கவேண்டும் என்ற குறிப்பு அண்ணாத்துரையின் ‘தேசம்’ என்ற மறு வியாக்கியானத்தில் இல்லை என்றாலும் அன்றைய தேச உருவாக்கம் என்ற கருத்தை ஆழமாக அண்ணா அவர்கள் யோசித்திருப்பது புரிகிறது.

முத்துக்குமாரின் கடிதம், 1965-இல் இந்தியை எதிர்த்த மாணவர்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தவர்கள் எனக் குறிப்பிடுவது முக்கியமானது. அண்ணா நின்று நடத்திய இந்தி எதிர்ப்போடு இன்றைய ஈழப்போராட்டம் சார்ந்த தமிழக உணர்வை அவர் கடித வரி இணைக்கிறது. 1965-இல் இந்தி எதிர்ப்பில் காங்கிரசார் செய்த அதே காரியத்தை 2009-இல் காங்கிரசார் என்ற ஒரு சில தமிழர்கள் செய்கிறார்கள்.

அண்ணா ஆரம்பித்த ‘இந்திய பெடரலிசம்’ என்ற சிந்தனை வலுவாகத் தமிழகத்தில் உருவாகியிருந்தால் டெல்லியிடம் கருணாநிதி கையேந்தும் நிலை ஏற்பட்டிருக்காது. இத்தகைய எதிர்கால தென்கிழக்காசிய பிராந்திய மேலாண்மைக்காக இந்தியா பயணப்படும் செயல் சார்ந்த விமரிசனமாக முத்துக்குமாரின் இந்தியப்படை வீரர்கள் பற்றிய விமரிசனம் அமைகிறது. இலங்கைத் தமிழ்ப் பெண்களுடன் நடந்துகொண்ட முறையும், அஸ்ஸாமில் நடந்து கொண்ட முறையும் பற்றிய முத்துக்குமார் கருத்துக்கள் இந்தியப்படைகளைப் பற்றிய பாலியல் விமரிசனம் மட்டுமல்ல. வேறு அர்த்தம்-ஜியார்ஜியோ அகம்பென் என்ற இத்தாலிய தத்துவவாதியின் ‘பையோ-பாலிட்டிக்ஸ்’ சார்ந்த அர்த்தம் தோன்றுகிறது. அகம்பென் பிறப்பையும் சாவையும் அரசு, கட்டுப்பாட்டில் கொண்டுவருவதுபோல் நியாயத்தையும் புதிய வியாக்கியானத்துடன் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்துகிறது என்கிறார். செப்டம்பர் 11-ஆம் தேதி, அமெரிக்காவில் இரு கோபுரங்கள் தாக்கப்பட்ட பிறகு அமெரிக்கா உலகமெங்கும் இந்தப்புதிய நியாயத்தைப் பரப்பியது என்கிறார். முத்துக்குமாரின் கடித வரிகளுக்குள் இருக்கும் உள்ளுறைந்த அர்த்தம் இதுதான். இந்தியா இந்தப் பிராந்தியத்தில், அது ஈழத்துக்கு ஆயுத உதவி வழங்குவதானாலும் சரி-அஸ்ஸாமில் பெண்களைத் தொல்லைக்குள்ளாக்குவதானாலும் சரி-புதிய அரச நியாயத்தை உருவாக்க முயல்கிறது என்கிறார்.

அன்று அண்ணா தேசம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இன்று முத்துக்குமார் தன் கடிதவரிகளின் மூலம் உள்ளுறையாக இந்தியத் தேசத்தின் பிராந்திய ஆதிக்க சக்தியாகும் ஆசையை இனம் காண்கிறார். அதனோடு ராஜீவ்காந்தி, இன்றைய தமிழக அரசியல், அதன் பல்வேறு கட்சிகள், அதன் தலைவர்கள் என்று ஒரு பார்வையை முன் வைக்கிறார்.

தமிழ், தமிழர் நலம் என்பது இந்தப் பிராந்திய ஆசைக்கு எதிரானது என்று டெல்லி ஆலோசகர்கள் கூறுகிறார்கள். இந்தி எதிர்ப்பு என்பது ஒரு மொழியை எதிர்ப்பதல்ல. அது ஒரு தமிழ் வரலாற்றுத் தத்துவம். ஆதிக்கத்தை எதிர்த்து சமத்துவத்தை உலகமெங்கும் பரப்பும் தத்துவம் அது. இந்தி எதிர்ப்பு என்பதை அண்ணாவும் பெரியாரும் பெருந்தேசியத்துக்கெதிரான நடவடிக்கையாகப் பார்த்தார்கள்.

திராவிட அரசியலை, கருணாநிதி அண்ணாவின் பரம்பரையில் முன்னெடுத்தார் என்பதில் நிறைய நியாயம் உண்டு. ஆனால் இந்திய பெருந்தேசிய ஆசை உருவானபிறகு மாநிலங்கள் தங்கள் தங்கள் கலாச்சார வேறுபாடுகளை விட்டுவிட்டு அனைத்திந்திய கலாச்சாரமற்ற-அல்லது இந்திக் கலாச்சார அமைப்பை உருவாக்க முன் வந்துள்ளன. அண்ணாவும் கருணாநிதியும் இந்தக் கலாச்சார அரசியலைப் பல தியாகங்களுடன் முன்னெடுத்தார்கள். ஈழத்தமிழ் பிரச்சினையில் திராவிட கலாச்சார அரசியல் ஆட்டம் கண்டுள்ளது. கருணாநிதி அண்ணா பாரம்பரியத்தைக் காப்பாற்றுவாரா இல்லையா என்பது மிக விரைவில் தெரிந்துவிடும்.

இன்னொரு நோக்கிலிருந்து பார்க்கும்போது தமிழ், அகில உலகத் தன்மையை மிக விரைவில் பெற்றுள்ளது. எங்கோ ஒரு தீவில் நடக்கிற செயல் என்பது மாறி இந்தியா, ஈழம், மலேசியா, ஐரோப்பிய நாடுகள் என்று ஒரு பரப்பு திடீரென உருவாகியுள்ளது. முத்துக்குமார், இன்றைய ஊடக வளர்ச்சியால், ஒரே நாளில் அகில உலகத் தமிழர்களை ஒன்றிணைத்திருக்கிறார். இத்தகைய செயல் ஒன்றை இந்தி எதிர்ப்புக்கால கட்டத்தில் ஈழத்தமிழர்கள் செய்யவில்லை. இன்னும் மலையகத்தமிழர்களும் ஈழத்தமிழர்களும் ஒரே அடையாளமாக மாறவில்லை என்பதும் கவனம் கொள்ளத்தக்கதாகும். இரண்டு பிரதேசங்களைச் சார்ந்தவர்கள் ஏன், (ஒரே நாட்டுக்குள்) ஒன்றிணையவில்லை என்பதும் கேட்கப்பட வேண்டிய கேள்விதான்.

முத்துக்குமார் செய்த தீக்குளிப்பு பிற தீக்குளிப்புகளிலிருந்து தனித்துப் பார்க்கத்தக்கது. தீக்குளிப்பும் அறிவுரீதியான சொல்லாடலும் (கடிதம்) இணைகின்றன.

அகில உலக அளவிலும் ஈழத்தமிழர்களின் நிலைமை கவனத்துக்குள்ளாகியுள்ளது. எட்வர்ட் டேவி என்ற பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் இலங்கையில் போர்நிறுத்தம் செய்ய ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டுவரும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த வேண்டுகோளில், இந்த உறுப்பினர், காஸாவில் இஸ்ரேலுடன் போர் நிறுத்தம் செய்து வெற்றி பெற்றுள்ள பிரிட்டிஷ் பிரதமர் இலங்கை விஷயத்திலும் போர் நிறுத்தம் கொண்டுவரும்படி கூறியுள்ளார். அதாவது அனைத்துலக கவனத்தை ஈழத்தமிழ்ப் பிரச்சினை ஈர்த்துள்ளது. ஆனால் அருகில் இருக்கும் இந்தியாவில் முக்கியமான ஆளும் கட்சிக் கூட்டணி உறுப்பினர் தமிழக தி.மு.க. எனினும் மத்திய அரசு ஈழத் தமிழ்மக்களின் துயரத்தைத் தீர்க்க முன்வரவில்லை. திராவிடக் கட்சி கோட்பாட்டுக் காலம் முடிந்துவிட்டதை இது காட்டுகிறதென்ற பார்வைதான் சரியானதா என்றும் தெரியவில்லை. தி.மு.க. என்ற உணர்வின் அடிவேரில் புழு விழுந்திருக்கிறது என்றுதான் நினைக்கிறேன்.

இலங்கையிலிருந்து ஒரு முக்கியமான செய்தி வந்துள்ளது. ஜெர்மன் நாட்டுத் தூதுவரும் ஸ்விஸ் நாட்டு தூதுவரும் இலங்கையிலிருந்து துரத்தப்படுவார்கள் என்று ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார். பி.பி.சி.யைச் சார்ந்த கிறிஸ்மோரிஸ் என்பவரை விரட்டப்போகிறாராம். ஆனால் இந்தியத் தூதுவரைத் துரத்தப்போவது இல்லை. ஏனெனில் இவர் ஒழுங்காக நடந்து கொள்கிறார்.

ஜெர்மனியும் ஸ்விட்சர்லாந்தும் ஈழப்புலிகளின் நண்பர்களா? இல்லை. அந்நாட்டுத் தூதுவர்கள். நியாயத்தைப் பேசுகிறார்கள்.

இந்தியாவும் அனைத்துலகப் பார்வையில், தனது பிராந்திய ஆசையால் சரியான வெளிநாட்டுக் கொள்கையைக் கொண்டு செயல்படவில்லை. தி.மு.க. போன்ற முக்கியமான இந்தியக் கூட்டணிக் கட்சி இந்திய வெளிவிவகாரக் கொள்கை பற்றிக் கவலைபடாதது எவ்வளவு பெரிய தவறு என்பது இப்போது புரிகிறது.

நாராயணன், மேனன் போன்றோர் வெளிவிவகாரத்துறையில் கருத்து உருவாக்கி கருணாநிதியை முடக்கமுடிகிறது ஏன் என்று இளந்தலைமுறை தி.மு.க.வினராவது யோசிக்க வேண்டும். சங்க இலக்கியத்தையும் திருக்குறளையும் பற்றிக் கருணாநிதி அறிந்து வைத்திருப்பது பெரிய விஷயம்தான். ஆனால் சங்க இலக்கியத்தை இவர் குறுகியமுறையில் படிக்கிறார். வள்ளுவரையும் அப்படித்தான். சரியாகப்படிப்பது என்பது வெளிவிவகார அறிவை மேற்கொள்வது. எந்த தமிழகப் பல்கலைக்கழகத்திலாவது வெளிவிகாரக் கல்வி துறை உண்டா, இல்லை என்றே கருதுகிறேன். தி.மு.க.வின் கோட்பாட்டு வளையத்தில் வெளிவிவகாரக்கல்வி முக்கியமானதாக ஆக்கப்பட்டிருந்தால் அத்தகைய அறிவுள்ள தமிழர்கள், இந்தியா-இலங்கை உறவை வேறு வகையில் உருவாக்கியிருப்பார்கள். பார்த்தசாரதியால் இந்திராகாந்தி காலத்தில் வேறு முறையில் வெளிவிவகார அறிவு சமைக்கப்பட்டது. அதன் விளைவு எப்படி இருந்தது என்று நாம் அறிய முடிந்தது. ராஜீவ் கொலை அல்ல வெளிவிவகார அறிவுத்துறையை சிங்களர்களுக்கும் ராஜபக்ஷவுக்கும் ஆதரவாக மாற்றியது. பிராந்தியம் பற்றிய ஒரு வகையான கணிப்பு. அந்தக் கணிப்புத் தவறு என்று மன்மோகனுக்கு, ப.சிதம்பரமோ வேறு ஆட்களோ கூற முடியும். அதற்கான தரவு சேகரிக்காதிருப்பதில் இப்போது இந்தியா தவறு செய்கிறது என்கின்றனர் நிபுணர்கள். ஐ.நா.சபையும், ஜெர்மனியும் ஸ்விட்சர்லாந்தும் வேறுபார்வையை மனித அவலத்தின் அடிப்படையில் உருவாக்குகிறார்கள் எனில் இந்தியாவுக்கு அது ஏன் முடியவில்லை?

பி.ஜே.பி. கட்சி ஆட்சிக்கு வந்தால் ஒருவேளை தமிழர்கள் சார்பான வெளிவிவகாரக்கொள்கை வரலாம் அல்லது வடநாட்டுப்பார்வை தொடர்ந்தால் ஒருவேளை வராமல் போகலாம். காங்கிரஸும், சி.பி.எம். கட்சியும் அனைத்திந்தியாவை ஒரு தொழில் நுட்பம், அதிகார வர்க்கம் என்ற ‘அகலாச்சார’ முறையில் கற்பனை செய்கின்றன. பி.ஜே.பி.யின் பண்பற்ற, பிராந்தியம் சார்ந்த கலாச்சாரங்களின் கட்டமைப்பாய் இந்தியாவைக் கற்பனை செய்வதுதான் மாநில அரசுகளுக்கு நல்லது. மொழிவாரி மாநிலம் தோன்றியதன் தர்க்கம் இது. மொழிவாரி மாநிலத்தை எதிர்த்த ராஜாஜியின் அரசியல் பார்வைவழி சோனியாவின் இந்தியப்பார்வை அமைகிறது.

இந்த மாதிரி யோசிக்க வேண்டிய வேர்க்கூறுகளைக் கொண்டிருக்கிறது முத்துக்குமார் என்ற இளைஞனின் கடிதம். அறிவுசார் இயல்புணர்வு இந்த இளைஞனிடம் உள்ளது. இப்படிப்பட்டவர்களின் இழப்புத்தான் தமிழகத்தின் இழப்பு.

முத்துக்குமாரின் கடிதத்தில் ஒரு திருக்குறள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கருணாநிதியின் திருக்குறள் மேற்கோளுக்கு எதிர்ச்செயலாக முத்துக்குமார் இக்காரியத்தைச் செய்திருக்கிறார். ஆனால் குறிப்பிட்ட கால நிகழ்வுகளுடன் திருக்குறளை இணைப்பது என்ற செயலில் முத்துக்குமாரும் கருணாநிதியும் ஒரே தளத்தில் செயல்படுகிறார்கள் என்று கருதுகிறேன். ஒருவகையில் கருணாநிதியால் உருவாக்கப்பட்டவர் முத்துக்குமார். உருவகரீதியில் தந்தையை எதிர்க்கும் மகன் எனலாம். புலிகளின் மறம் அவர்களின் அறம் சார்ந்த செயலின் தர்க்கநீட்சியே என்கிறார் முத்துக்குமார். இது தமிழர்களின் பார்வைதான். அறமும் மறமும் பின்னிப் பிணைந்த மரபு.

முத்துக்குமாரின் கடிதமும் மரணமும் இப்படியெல்லாம் யோசிக்கவைக்கின்றன.

ந‌ன்றி: உயிரோசை (பெப்ர‌வ‌ரி 10, 2009)

No comments: