Monday, February 23, 2009

ஒஸ்கார், ரகுமான், விருதுகள், உலகமயமாதல், இந்திய மேலாதிக்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் போர்.

(ஏ.ஆர்.ர‌ஹ்மானுக்கு ஒஸ்காரில் இரு விருதுக‌ள் கிடைத்த‌ ப‌திவுக்கு பின்னூட்ட‌மாய் ந‌ண்ப‌ரொருவ‌ர் (பெய‌ர் குறிப்பிட‌ விரும்பாது) எழுதிய‌து. உரையாட‌லுக்கான‌ ப‌ல‌ முக்கிய‌ புள்ளிக‌ளை ந‌ண்ப‌ரின் பின்னூட்ட‌ம் உள்ள‌ட‌க்குவ‌தால் த‌னியான‌ ஒரு ப‌திவாக அத‌னை இங்கே இடுகின்றேன். ந‌ன்றி. ~டிசே)

ஒஸ்கார், ரகுமான், விருதுகள், உலகமயமாதல், இந்திய மேலாதிக்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் போர்.

=================================
ஏ.ஆர்.ரகுமான் இற்கு ஒஸ்கார் விருது கிடைத்திருக்கின்றது. அவரது இசைப்பயணத்திற்கு வாழ்த்துக்கள். மாயா அருள்பிரகாசத்திற்கு ஒஸ்கார் கிடைக்கவில்லை. வெளியே திறமை என்ற அளவில் மட்டுமே ஒஸ்கார் மற்றும் நோபல் பரிசுகள் வைத்துப் பார்க்கப்படுகின்றன. ஆனால் அதன் பிழையான பக்கங்களையும் தவறான போக்குகளையும் நாம் நிச்சயமாக யோசித்தே ஆகவேண்டும்.

ஒஸ்கார் மற்றும் நோபல் பரிசுகளின் அரசியல் பல இடங்களிலும் பேசப்பட்டிருக்கின்றது. ஸ்டாலின் கால ரஷ்யாவை விமர்சித்த டொக்டர் ஷிவாகோ விற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டிய தேவையும் காலனியாதிக்கத்தை மறைமுகமாக நியாயப்படுத்தும் வி.எஸ்.நைபோலுக்கு நோபல் பரிசு கிடைத்ததும் அதன் பின்பு Midnight's Children இற்காக சல்மான் ருஷ்டிக்கு புக்கர் பரிசு கிடைத்ததும் இஸ்லாமிய எதிர்ப்பு இலக்கியங்கள் இன்றும் உலகத்தரத்திலான பரிசுகளை அள்ளிச் செல்வதும் தனியே தற்செயலான நிகழ்வுகளோ அல்லது தனியே திறமை என்பதுடன் பார்க்கப்படும் நிகழ்வுகளோ அல்ல. இதே கோட்டிலேயே நாம் ஸ்லம்டோக் மில்லியனேர்ஸ் இனது விருதுகளையும் வைத்துப் பார்க்க முடியும்.

அமெரிக்க-ஐரோப்பிய விருதுகள் பெரும்பாலும் உலகமயமாதலை இலகுவாக்கும் பொருட்டு பாதையைத் திறந்து விடுபவர்களுக்கானவை என்னும் வாதத்தில் உண்மை இல்லாமல் இல்லை. ஆபிரிக்க அழகிகளை உலக அழகியாக்குவதும் இந்திய அழகிகளை உலக அழகிகளாக்குவதும் தனியே அவர்களது அழகை ஆதரிக்கும் காரணமும் அல்ல. அதன் பின்னால் நீண்டிருக்கும் பெருவர்த்தக நிகழ்வுகளும் உலகமயாமதலை விரிவுபடுத்தும் ஆயத்தப்படுத்தல்கள் தொடர்பாகவும் நாம் நிச்சயமாகச் சிந்தித்தே ஆக வேண்டும். சனாதன் மார்க்சியர்கள் போன்று இதன் நிராகரிப்பின் அரசியலை நான் இவ்விடத்தில் செய்ய விரும்பவில்லை. மாறாக அதன் பாதக அம்சங்களை உள்வாங்கியவாறு சாதகமான புள்ளிகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற பார்வையே எனது எழுத்தில் எப்போதும் விரவிக் கிடைப்பது. ஏ.ஆர்.ரகுமானைப் பாராட்டி மகிழும் நம்மவர்களது கூக்குரலுக்கிடையில் எனது குரல் அமிழ்ந்து போகலாம். ஆனால் அதன் உண்மைத் தன்மையை நாம் எப்போதும் மறுத்துவிட முடியாது.

அமெரிக்க ஐரோப்பியர்களது தென்னமெரிக்கா, ஆபிரிக்கா, ஆசியா தொடர்பான பார்வைகளையும் அவர்களது இயற்கையூடான அவர்களது வளர்ச்சியில் இருந்து முற்றாக பிய்த்து எறிந்து விடும் நோக்கிலான நடவடிக்கைகளும் எமக்கு புதிதானவை அல்ல. ஆனால், அவை தொடர்பாக நாம் எப்போது கரிசனையுடன் இருந்திருக்கின்றோம் என நிச்சயம் யோசித்தே ஆக வேண்டும். தென்னமெரிக்க இசையை மேற்கு சில காலங்களுக்கு முன்பே தனக்குள் உள்வாங்கியாகிற்று. சகீரா மூலமாகவும் ரிக்கி மார்டின் மூலமாகவும் தென்னமெரிக்கர்கள் பெற்றுக்கொண்டதை விட இழந்தது மேல் என்பதை நாம் நிச்சயம் உணர்ந்து கொள்ள வேண்டும். ஆயினும் தெனமெரிக்க இசை தற்போது மேற்குடன் இயைந்த இசையாகவே பார்க்கப்படும் நிலை காணப்படுகின்றது. உலகமயமாதல் தீவிரத்துடன் இயங்கும் போது அதனை மறுதலிக்க முடியாவிட்டாலும் அதன் பாத அம்சங்களை நாம் கருத்தில் எடுத்துக் கொண்டே ஆகவேண்டும். அதன் மூலமே உலகமயமாதலின் சாதக வெளிகளில் எம்மால் புகுந்து கொள்ள முடியும்.

சல்மான் ருஷ்டி, வி.எஸ். நைபோல் போன்றவர்கள் இந்தியா தொடர்பான தமது பார்வையை கீழ்த்தட்டில் இருந்து முனைத்தவர்கள் அல்ல. அவர்கள் இந்திய கலாச்சாரத்தின் காட்டுமிராண்டித்தன்மையை மேற்கின் பார்வையில் இருந்து முன்வைத்தார்கள். அதனால் அவர்கள் மேற்கால் கொண்டாடப்பட்டார்கள். அமிதாப்பச்சன் ச்லம்டோக் மில்லியனர்ஸ் தொடர்பாக முன்வைத்த விமர்சனம் தொடர்பாக நாம் சில கவனத்தைச் செலுத்தியே ஆக வேண்டும். இந்திய தேசியத்திற்காக மராட்டிய சமூக அமைப்பைத் தூக்கி எறியக்கூடிய பச்சன் குடும்பம் ச்லம்டோக் மில்லியனர்ஸ் இந்திய சமூகத்தை வெளிநாடுகளுக்கு காட்டிக் கொடுக்கும் திரைப்படம் என்று கூறுவதில் நாம் வியப்படையத் தேவையில்லை. ஆனால், மேற்கின் பார்வையில் இந்திய சமூகத்தை விளங்கிக் கொள்ள முனையயும் பலரும் இத்திரைப்படத்தை மூர்க்கமாக ஆதரிப்பார்கள் என்பதில் எனக்கு எப்போதும் மாற்றுக்கருத்தில்லை. இதே செயற்பாடுதான் நோபல் மற்றும் புக்கர் பரிசுகள் விடயத்திலும் நடைபெற்றது. தேசியம் காயப்படும் பொது நொந்துபோகும் பச்சன் குடும்ப மனநிலையில் இருந்து வருவதல்ல எனது கருத்து. மாறாக உலகமயமாதலுக்கான கதவு ரகுமான் மூலம் இன்னொரு தடவை ஆசியாவில் திறக்கப்பட்டிருக்கின்றது என்பதே எனது மாற்றுப் பார்வை. இதனை முற்றாக நிராகரிப்பது என்பது எம்மால் முடியாதது. ஆனால், திறந்த கதவின் மூலம் நாம் கடந்து வந்த மரபின் தொடர்ச்சியுடன் முன்னேறப் போகின்றோம் என்பதே எனது கேள்வி. ரகுமானுக்காக குதூகலிக்கும் மனங்களுக்கு இது தொடர்பான பிரக்ஞை இருக்கின்றதா எனக் கேட்டால் நான் நிச்சயமாக இல்லை என்றே பதில் சொல்லுவேன்.

வி.எஸ்.நைபோலுக்கும், சல்மான் ருஷ்டிக்கும், ஐஸ்வர்யா ராய் இனது முற்றான தொடர்ச்சிதான் ரகுமான் எனக்கூறுவோர் உலக அரசியல் வரலாறு தொடர்பாக தீர்க்கமான அறிவு இல்லாதோரே. முன்னையவர்கள் காலங்களில் இல்லாத விசேட அரசியல் காலம் ஒன்று ரகுமான் காலத்தில் இருக்கின்றது. முன்னையவர்களது இருந்த இந்திய சமூகம் பற்றிய எதிர்ப்பு மனநிலை ரகுமானிடம் இல்லை. இந்திய தேசியத்தை ஆதரிக்கும் மனநிலை ரகுமானிடம் அதிகம் உண்டு. முன்பும் இந்தியர்கள் சர்வதேச அளவில் புகழ் பெற்ற அதே தொடர்ச்சிப்புள்ளியில் ச்லம்டோக் மில்லியனர்ஸ் புகழ் பெற்றுள்ளது. ஆனால், இத்தொடர்ச்சிப் புள்ளியில் ரகுமான் விலகுகின்றார். ரகுமானது முகம் உலக அளவிலான புதிய முகத்தை இந்தியாவிற்கு வழங்கப் போகின்றது.

1987 ஆம் ஆண்டு பிராந்திய வல்லரசு என்ற அளவில் இருந்த இந்தியா இன்று உலக வல்லரசுகளில் ஒன்று என்பதே எம்மிடம் இருக்கும் மிகப்பெரிய செய்தி. இதற்காக அது தனது அனைத்து 'அறிவை' யையும் மேற்கினது அறிவுத் தொடர்ச்சியிடம் இழந்தது என்பதே சோகம். பண்பாடுகளது 'கலப்பு' என்பது எப்போதும் ஒன்றினது 'இழப்பின்' மூலம் நடந்தேறுவது அல்ல. அதை நாம் எப்போதும் கவனத்தில் வைத்தே ஆகவேண்டும். சமூகம் தனக்கான 'அறிவை' முற்றாகப் புறக்கணித்து புதிய அறிவை உள்வாங்குவது தொடர்பில் எமக்கிருக்கும் கரிசனை கேவலமானது. அதுதனியே தொழில்நுட்பம், மருத்துவம், இசை, சமூகவியல், அறிவியல் என அனைத்துத் துறைகளுக்கும் பொருந்தும். மேற்குலகுடனான அறிவு ஊடாட்டத்தில் இந்தியா செலுத்திய விலையே இன்று ரகுமானுக்கான விருதாக வந்து கிடைத்திருக்கின்றது.

இவ்விடத்தில் ஈழப்பொராட்டத்தில் பங்குபற்றிய ஈரோஸ் அமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவரான அருளரது மகளான மாயா விற்கு விருது தவறியிருக்கின்றது. அதன் அரசியல் முக்கியமானது. இன்றைக்கு மாயா விற்கு ஒச்கார் கிடத்திருந்தால் இலங்கை இனப்பிரச்சனை உலக அளவில் முக்கியத்துவப்படுத்தப்பட்டிருக்கும். அது தவறிப் போய்விட்டது. அது தொடர்பானதே எனது கரிசனை எல்லாமே தவிர மாறாக இன உணர்விற்கு தீனி போடுவது தொடர்பாகவோ அல்லது கீழைத்தேய இசை மரபை முற்றாக இழந்த மாயா தொடர்பாகவோ அல்ல. அதே நேரத்தில் மேற்கிசையிலாயினும் விளிம்பாக்கப்பட்ட விடயத்தை அவர் தன்னிடம் கொண்டிருந்தார். அதற்காக நாம் அவரைப் பாராட்ட வேண்டியிருக்கின்றது. அவரது அரசியல் காரணமாகவே அவர் தனது விருதை இன்று இழந்திருந்திருக்கக் கூடும். ரகுமானுக்காக சந்தோசப்படுவதை விட மாயாவிற்காகக் கவலைப்பட வேண்டும் என எப்போது வன்னியில் பலியாகும் மக்களுக்காக கவலைப்படுவதையே தமது பங்களிப்பாகக் கருதும் முட்டாள்களுக்குத் தெரிந்திருக்காது என்பது பரம ரகசியம் அல்ல. அது மிக வெளிப்படையானது. எப்போதும் தமது நலன்களை மாத்திரம் கொண்டியங்கும் எதுவித அரசியல் பிரக்ஞையுமற்ற எமது முட்டாள் சமூகத்திற்கு இவற்றை எப்போதும் புரிய வைக்க முடியாது என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை எனக்கெப்போதும் இருக்கின்றது.

( இலங்கைத்தேசியத்தை வளர்த்தெடுத்தைல் இலங்கை கிரிக்கெட் அணிக்கு முக்கிய பங்குண்டு. அதை உணர்ந்து கொள்ளாமல் இலங்கை அணிக்கும் ஆதரவளித்தவாறு இலங்கைத் தேசியத்தையும் எதிர்க்கும் முட்டாள்தனம் மிக்கவர்கள் தான் எமது சமூகத்தில் அதிகமாக உண்டு.)

1987 ஆம் ஆண்டிற்கும் 2009 ஆம் ஆண்டிற்கும் இடையில் இந்தியாவின் முகத்தில் மாற்றம் உண்டு. அன்றைய பிராந்திய வல்லரசான இந்தியா இன்றைய உலக வலரசுகளில் ஒன்று. இந்தியாவின் காட்டுமிராண்டித்தனத்தையும் வறுமையையும் எழுதிய சல்மான் ருச்டிக்கும் இந்திய தேசிய கீதத்தைப் பாடி இந்திய தேசியத்தை ஒன்றிணைத்த ரகுமானுக்கும் வித்தியாசம் உண்டு. இன்றைய இந்தியா வல்லரசுக்கனவுக்காக தனது அனைத்து கதவுகளையும் உலகமயமாதலுக்காகத் திறந்துவிட்ட இந்தியா. அன்றைய இந்தியா அணிசேராக் கொள்கையைக் கடைப்பிடித்தவாறு முன்னேறிய இந்தியா. இந்த மாற்றங்களுக்குப் பின்னரும் தமிழீழப் போராட்டம் தனியே இராணுவ ரீதியாகப் படைகளைக் கட்டியெழிப்பியதை மாத்திரம் செய்து கொண்டிருந்தது. இந்தியாவ்ன் முகம் மாறுவதை நாம் அவதானிக்கவில்லை. தற்செயலாக மாயா போன்றவர்களது வரவு அமைந்ததே தவிர நாம் எப்போது திட்டமிட்டு இயங்கியிருக்கின்றோம். ?

மேற்கு ஊடகங்கள் இலங்கையில் நடைபெறும் இன அழிப்பு போரை உதாசீனப்படுத்துகின்றன. காசாவிற்காக குரல் கொடுத்தவர்கள் நமது விடயத்தில் பாராமுகமாகவே இருக்கின்றார்கள். இவ்விடத்தில் மாயா விற்கு இவ்விருது கிடைத்திருந்தால் மாயா நிச்சயமாக எமது பிரச்சனையை இன்று சர்வதேசம் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் கூறியிருப்பார். ஆனால், நாம் அதை இழந்துவிட்டோம்.

இவ்விடத்திலேயே தமீழப் போரில் ஈழத்தமிழர்கள் தொடர்பாக அக்கறை கொண்டிருக்கும் மாயா ஒஸ்கார் விருதை இழந்திருப்பதையும் தமிழர்களுக்கெதிராக யுத்தத்தை நடாத்தும் இந்திய தேசியத்திற்காக தேசிய கீதம் பாடிய ரகுமான் விருதைப் பெற்றிருப்பதும் நிகழ்ந்திருக்கின்றது.

பழைய இயக்ககாரர் ஒருவர் கூறிய விடயம் ஒன்றைக் கூற வேண்டும். 80 களில் பிரபாகரன் கூறிய விடயம் தொடர்பானது. 'நாம் பிராந்திய வல்லரசை எதிர்கொள்ள வேண்டி வரலாம். அவ்வாறே உலக வல்லரசையும் எதிர்கொள்ள வேண்டி வரலாம்' என்று. அது இன்று உண்மை. 1987 இல் போராட்டம் பிராந்திய வல்லரசை எதிர்கொண்டது. இன்று உலகவல்லரசாக மாறிய இந்திய வல்லரசை எதிர்கொள்கின்றது.

எம்மை ஒடுக்கும் அனைத்துக் கூறுகளையும் ஆதரித்தவாறு நாம் வன்னியில் சாகும் பிணங்களைக் கண்டு அழுவதில் பிரயோசனம் இல்லை. அப்படி அழுபவர்கள் மறைமுகமாக பிணங்களி எண்ணிக்கையைக் கூட்டுவதை மட்டுமே செய்துகொண்டிருப்பார்கள் தாம் செய்வது புரியாமலே..! நாம் இவ்விருதில் சந்தோசப்படுவத்ற்கு நமக்கு சாதகமாக இருப்பது குறைந்தளவு வெளிகளே. ஒருவகையில் இந்தியா வல்லரசாகியற்கும் இலங்கையில் தமிழர்களை அழிப்பதற்கும் மேற்குலகு கொடுத்த சான்றிதழ். அதே மாயா விற்கு கிடைத்திருந்தால் ரகுமானது விருதை நினைத்து நாம் சந்தோசப்பட்டிருக்கலாம். அது ஒடுக்கப்பட்டவர்களுக்கான அங்கீகாரம். அதனாலேயே மாயாவிற்கான விருது மறுக்கப்பட்டிருக்கும்.

சாராம்சமும் சில மேலதிக குறிப்புக்களும்.
1. மேற்குலகத்தினது ஆபிரிக்கா, ஆசியா பற்றிய பார்வையைத் திருப்திப்படுத்தும் விடயங்களை மேற்குலகம் தூக்கிப்பிடிப்பது இது முதல்முறை அல்ல. ஆனால், அதைக் கூறியவாறிருப்பது என்பதும் தீர்வல்ல. மேற்கின் விருதுகள் பெரும்பாலும் அரசியல் மற்றும் பொருளாதார நலன் சார்ந்தவை. அதை யாரும் மறுக்கவும் முடியாது. ஆனால், இதைக்கூறியவாறு நாம் மறுதலிப்பு அரசியல் செய்து கொண்டிருக்கவும் முடியாது. மாறாக அது தொடர்பான பிரக்ஞையை ஏற்படுத்துவதை மட்டுமே செய்ய முடியும். விருதுகளின் அரசியல் என்பது இன்று நேற்றான விடயம் அல்ல. அதன் பாதை மிக நீண்டது. அதன் பாதையில் ரகுமானுக்கான விருதும் மாயாவுக்கான மறுப்பும் நிகழ்ந்திருக்கலாம். ஏற்கனவே பொறிஸ் பஸ்டர்நாக், நைபோல், சல்மான், ஞாபகத்திற்கு வராத ஆபிரிக்க எழுத்தாளர்கள் நம் கண்முன் வந்து போகின்றனர். அதை இலகுவாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. அதற்காக முற்றுமுழுதாக வலியுறுத்த்வும் முடியவில்லை.

2. இந்திய தேசியத்தால் முஸ்லிம்கள் ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் ரகுமான் இந்திய தேசிய கீதம் பாடி இந்தியாவை வலுபடுத்தினார். இந்தியாவில் இருந்து பிரிந்து போக எத்தனிக்கும் காஸ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் வாழவர்களுக்கு ரகுமான் மீது எரிச்சல் வந்திருப்பதில் சந்தேகமில்லை. நரேந்திர மோடியால் முச்லிம்கள் குஜராத்தில் கொல்லப்பட்டபோதும் ரகுமான் இந்திய தேசியவாதம் சார்ந்தே தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அன்றி மறைமுகமாக வெளிப்படுத்தினார். ரகுமான் அரசியல் விடயங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதில்லை என்ற போதிலும் இந்திய தேசியவாதத்தை அவர் ஆதரித்தே வந்திருக்கின்றார். ரகுமான் இந்திய தேசியவாதத்தை எதிர்க்கும் நபராக இருந்திருப்பின் அவரால் இந்திய அளவிலேயே புகழடைய முடியாமல் போயிருக்கலாம். ரகுமானது இசைத்திறமை பற்றி எனக்கெப்போது மாற்றுக்கருத்து இருந்ததில்லை. உண்மையில் நான் ரகுமானது இசையின் ரசிகன். ஆனால், அவரது அரசியல் மௌனம் அபாயகரமானது. ஆளும் வர்க்கத்தை மறைமுகமாக ஆதரிப்பது. சமூகம் தொடர்பான அக்கறையின் காரணமாகவும் ரகுமானை விடத்திறமையான எத்தனையோ இசைக்கலைஞர்கள் இவ்வுலகத்தில் இருந்திருக்கின்றார்கள். இருக்கின்றார்கள். இறந்திருக்கின்றார்கள்.

3. உலகமயமாதலுக்கு தன்னை பெரும்பாலும் உட்படுத்திக் கொண்டதே ரகுமானது இசை. மேற்கினது இசையைப் பெரும்பாலும் உள்வாங்கியதே அவரது இசைவடிவம். கீழைத்தேய இசை மரபை அவர் மேற்கு இசையுடன் கலப்பு செய்தமை என்பற்கான சந்தர்ப்பங்கள் மிகக்குறைவானது. இனிமேல் அவர் அது தொடர்பான கரிசனையை வெளிபடுத்துவார் என் நாம் எதிர்பார்க்கவும் முடியாது. மரபுகளையும் பண்பாட்டையும் பேண முற்படும் அடிப்படைவாதிகளதொ அல்லது பாமர இசையில் தம்மை மூழ்கடித்துவிட்டு புதிய இசை என்பதையே இரைச்சலாகப் பார்க்கும் மனநிலையில் இருந்தோ எனது விமர்சனம் எழவில்லை. மாறாக ஒவ்வொரு சமூகத்தினது தனிப்பட்ட அறிவு தொடர்பானதே எனது கருத்து.

4. ரகுமான் இந்திய தேசியத்தினது ஒதுக்கல்களை விமர்சித்தோ அல்லது பாரம்பரிய இந்திய இசைக்கூறுகளை முன்னிறுத்தியோ தனது இசைப்பயணத்தை தொடர்ந்திருந்தால் இந்நிலையை அடைந்திருக்க முடியுமா என்பது சந்தேகமே. இவ்வாறே மாயா அருள்பிரகாசம் தீவிரவாத எதிர் நிலைப்பாட்டை எடுத்தவாறு புலிகளை விமர்சித்திருந்தால் அவருக்கு இந்நேரம் ஒச்கார் கிடைத்திருக்கக் கூடும். ஆளும் வர்க்கங்கள் சில அளவீடுகளைக் கொண்டுள்ளன. அவற்றைத் திருப்தி செய்பவர்களுக்கு மாத்திரமே வளர்ச்சி, புகழ், விருது எல்லாம் சுலபமானவை. மாயாவிற்கான வாய்ப்பு அவரது அரசியல் நிலப்பாடால் தகர்ந்து போயிருக்கலாம் என்பதை நினைத்து வருத்தப்படுவதா அல்லது ரகுமானது அரசியல் நிலைப்பாடற்ற நிலையைக் கண்டு சந்தோசப்படுவதா என்பது அவரவர் நிலைப்பாடு.

5. இந்தியர்கள் பெரிய அளவில் ஏற்கனவே புகழ்பெற்றிருக்கின்றார்கள். ஆனால், அவர்கள் பெரும்பாலும் மேற்கத்தையவர்களாக முற்றுமுழுதாக மாறிப்போன இந்தியர்களே. நான் இந்தியன் என்று மார்தட்டி நின்ற இந்தியன் ரகுமானாக இருப்பது தான் இந்தியாவின் அரசியல் பரிமாணத்தை புதிதாகக் காட்டுகின்றது. இந்தியாவின் வல்லரசுத்தன்மையை எமக்குணர்த்தி நிற்கின்றது. இம்மனநிலை மேற்கிற்குப் புதிது. இதே நேரம் பீகாரில் ஸ்லம்டோக் இல் வரும் 'டோக்' என்பதை நீக்கக்கோரி ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று அருகின்றன.

6. விருதுகளால் ஓரஙட்டப்பட்டவர்கள் ஒருபுறமிருக்க, அரசியல் காரணங்களுக்காக விருதுகளை நிராகரித்த சம்பவங்களும் இவ்விடத்தில் எமக்கு ஞாபகம் வருகின்றது. ழீன் போல் சர்த்தர் என்ற பிரெஞ்சு எழுத்தாளருக்கு 1964 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது. அதை அவர் நிராகரித்தார். அதற்காக அவர் கூறிய காரணம் மிக முக்கியமானது. நோபல் பரிசானது மேற்கு ஐரோப்பிய நாடுகளது எழுத்தாளர்களுக்கும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளது கலகக்காரர்களுக்கும் ஒதுக்கி வைக்கப்பட்டது போல் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். அது மட்டுமல்லாது விளையாட்டில் அதாவது ஒலிம்பிக்கில் இனவெறிக்கெதிராக கறுப்பர்கள் பதக்கங்களை நிராகரித்த சந்தர்ப்பங்களும் உண்டு. இவ்வாறே பிரச்சன்ன விதானகே என்னும் சிங்கள திரைப்பட இயக்குநருக்கு ஜனாதிபதி விருது கிடைத்த போது அவர் அவ்விருதை மறுத்துவிட்டார். அவரது புரகந்த கலுவர என்னும் திரைப்படத்தை சந்திரிக்கா தடைசெய்து வைத்திருந்தமையை காரணமாகக் குறிப்பிட்ட்ருந்தார்.

இவ்வாறே, அசோக ஹந்தகம என்னும் இயக்குநர் தனக்கான விருதை மறுத்தார். இலங்கையில் இனப்பாகுபாடு அரசாங்கத்தால் காட்டப்படுவதாகக் கூறியே விருதை அவர் மறுத்திருந்தார். மறுத்ததோடு மட்டுமல்லாது அவ்விருதின் மூலம் கிடைக்க வேண்டிய பணத்தை யாழ்ப்பாணப் பொது நூலகத்திற்கு கொடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். சிலவேளை ரகுமான் இலங்கையில் நடைபெறும் இன அழிப்பு போரைப்பற்றி ஏதாவது கூறியிருந்தால் விருதுகளின் அரசியல் பற்றிக் கவலைப்படாமல் நான் 'எதிர்-இசை' அல்லது 'இசையும் போராட்டமும்' அல்லது 'புரட்சியில் இசைக்கலைஞர்களின் பங்கு' பற்றிக் கதைத்துக்கொண்டிருப்பேன்.

11 comments:

குப்பன்_யாஹூ said...

good writing but if u write short all will read.

if u write economics exam paper, people will not have patience to read.

தமிழன்-கறுப்பி... said...

நிறைய உரையாடல்களை முன்வைத்திருக்கிறீர்கள்...

இந்தியா மாயாவை இருட்டடிப்பு செய்ததும் இந்த உரையாடல்களின் முன்வைப்புகளில் அடங்கும்தானே...

தமிழன்-கறுப்பி... said...

இதற்குள் இவ்வளவு அரசியல்!!

Anonymous said...

உங்களது பதிவு அருமை. உலகமயமாக்கல் அதன் பின்னால் இருக்கும் மேற்கத்தைய அரசியல் பற்றி நன்றாக ஆய்வு செய்து இருக்கிறீர்கள். ஆனால் நம்மவர்கள் இதை சரியாக புரிந்து கொள்வார்களா என்று தெரிய வில்லை. மாயா வுக்கு விருது கிடைக்காது பற்றி முன்னமே யோசித்தேன் . விருதால் அவருக்கு கிடைக்கும் புகழ் மேற்கத்தைய தற்போது ஈழ அரசியல் நிலைப்பாட்ட்க்கு உகந்தது இல்லை. எனவே கண்டிப்பாக அவருக்கு விருது கிடைக்காது என்பதை என்னால் உணர முடிந்தது.

அடிப்படையில் ஈழ போர் உலகமயமாக்கலுக்கு எதிரானது. ஒரு வகையான சுதேசி தன்மையுடன் விளங்குவது. எனவே வியாபாரம் மற்றும் சந்தை மூலம் ஆக்கிரமிப்பு செய்ய நினைப்பவர்கள் ஈழத்தை எதிர்ப்பது இயல்பானதுதான் .

இன்றைய நிலையில் உலகமயமாக்கலை சாமர்த்தியமான புரிதலுடன் எதிர்கொண்டு சம அளவிலான அறிவு மற்றும் கலாசார கலப்பு ஏற்பட்டு புதிய உலக மனித இனம் தோன்றும் அளவுக்கு நம்மவர்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை. பாரம்பரிய வேர்களை மறந்து விட்டு கண்மூடித்தனமான மேற்கத்திய மோகம் அல்லது பாரம்பரிய வடிவங்களை இருகமாக பிடித்துகொண்டு அடிப்படைவாதம் பேசுவது தான் நம்மவர்களிடையே அதிகம். பாரம்பரிய விசயங்களில் நல்ல புரிதலுடன், உலகமயமாக்களில் கிடைக்கும் நல்ல மேற்கத்திய வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொண்டு உலகமயமாக்கலை நமது திசையில் கொண்டு செல்ல நினைப்பவர் சிலரே. அப்படி இல்லாத வரை உலகமயமாக்கல் என்பது மேற்கத்திய மயமக்கலாகத்தன் இருக்கும். நம்மையும் அறியாமல் அதற்கு துணை போயிகொண்டிருப்போம் , நம்மை அறியாமையாலே.

Siva.

DJ said...

பெய‌ரைக் குறிப்பிட‌ விரும்பாது மேலேயுள்ள‌ ப‌திவை எழுதிய‌ ந‌ண்ப‌ரே, உட‌ன‌டியாக‌ இப்ப‌திவுக்கு வ‌ர‌வும் :-). தெளிவில்லாது இருக்கிற‌தோ என்ன‌வோ... மேலேயுள்ள‌ இந்த‌ப்ப‌திவு என்னால் எழுத‌ப்ப‌ட‌வில்லை என்ப‌தை இன்னொருமுறை குறிப்பிட்டு விடுகின்றேன்.
....
ந‌ண்ப‌ரின் -மேலேயுள்ள‌ ப‌திவை- ஒத்த‌க‌ருத்தே அதிக‌ம் என‌க்கும் இருக்கிற‌து.
மேலேயுள்ள‌ ப‌திவு சார்ந்தும் வெட்டியும் சில க‌ருத்துக்க‌ளை இப்பின்னூட்ட‌த்தில் எழுத‌ விரும்ப‌முண்டு. பார்ப்போம்.

Anonymous said...

ரஹ்மான் தன்னை இந்தியராக அடையாளப்படுத்திக் கொள்வதில்
என்ன தவறு.சூபி இஸ்லாத்தை
ஏற்ற அவர் எந்த மத/இன அடிப்படைவாதத்தினையும் ஆதரிக்கவில்லை.அன்பினைத்
தேர்ந்தெடுத்தேன் என்று ஒஸ்கார்
விருதுரையில் கூறிய ரஹ்மான்
தன் முயற்சி,திறமையால்
முன்னேறியவர்.அதில் மதம்,
சிறுபான்மை,பெரும்பான்மை
அரசியலுக்கு இடமில்லை.

முன்பு வர்க்கப் பார்வை, முற்போக்கு இலக்கியம் என்ற பெயரில் வைக்கப்பட்ட எளிமைப்படுத்தப்பட்ட,
பிழையான கருப்பு-வெள்ளை
வாதங்களைப் போல்தான் இந்தப்
இடுகையில் உள்ள கருத்துக்களும்
உள்ளன.விருதுகளில் அரசியல்
இருக்கிறது என்று கருதுவதற்கும்
விருதுகளில் அரசியல்தான் இருக்கிறது
என்பதற்கு வேறுபாடு உண்டு.

இந்தியா மாயாவை இருட்டடிப்பு
செய்யவில்லை, செய்யத் தேவையுமில்லை.மாயாவின் இசை
நிகழ்ச்சிகளுக்கு இந்தியாவில்
தடை இருந்ததா, என்ன?.

எம்ஜிஆர்,சிவாஜி,
கருணாநிதி என்று பலருடன்
பணியாற்றிய எம்.எஸ்.விஸ்வநாதன்
உட்பட பலருக்கும் அரசியலில் அக்கறை இருந்ததில்லை.இது ரஹ்மானுக்கும் பொருந்தும்.
இந்தியப் படங்களும்,கலைஞர்களும்
இன்று சர்வதேச அங்கீகாரம் பெற
பல காரணங்கள் உள்ளன.இந்தியா
குறித்த பார்வை இன்று உலகில்
மாறியுள்ளது. இந்தியாவின்
பொருளாதார வளர்ச்சியும் அதற்கொரு
காரணம்.உலகில் மிக அதிகமான
எண்ணிக்கையில் திரைப்படங்களை
தயாரிக்கு நாடுகள் வெகு சிலவே,
அதில் இந்தியாவும் ஒன்று.
மேலும் இந்தியர்களின் திறமை
இன்று முன்பைவிட
தெளிவாக உலக அரங்கில் பல துறைகளில் பளிச்சென தெரிகிறது.
உலகமயமாதலை இந்தியர்கள்
பயன்படுத்திக் கொண்டதின் விளைவு
அது.விஸ்வநாதன் ஆனந்த், ஸ்ரீனிவாசன் வரதன் என்ற அந்தப்
பட்டியலில் ரஹ்மானும் இடம் பெற்றதுல் வியப்பில்லை.

Anonymous said...

டி.ஜே,
இன்றைக்குத்தான் இவ்விடயத்தைப் பார்த்தேன். :(

மேலும், முன்னைய பதிவுக்கு பின்னூட்டமாய் நான் அதை இடவுமில்லை. யாரோ இட்டிருக்கின்றார்கள் போலுள்ளது. பரவாயில்லை.

நீங்கள் உரையாட அழைத்திருக்கின்றீர்கள். நான் கவனிக்கவில்லை. மன்னிக்க வேண்டும். மேலும், உரையாடல் மூலம் சமூக அசைவியக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்ற நம்பிக்கை அற்றுப் போய்விட்டது. இனிமேல், வேறெதாவது வழியிருக்கின்றதா எனத் தேட வேண்டியிருக்கின்றது. நான் இரண்டு தரப்பினருடன் மிகவும் காரசாரமாக உரையாடியிருக்கின்றேன். 'எருமை மாட்டின் மீது மழை பெய்வது போல' என்ற பழமொழி இவ்வுலகத்தில் அதிகம் வாழும் என்று தோன்றுகின்றது. :)

முதல் தரப்பினர் சிவப்பு 'உள்ளாடைகளை' மட்டுமே அணிபவர்கள். உள்ளாடை இல்லாமல் இருந்தாலும் இருப்போமே தவிர வேறுநிற 'உள்ளாடைகளை' அணிய மாட்டோம் என்று அடம்பிடிப்பவர்கள். உள்ளாடையின் தேவை மற்றும் அதன் சாதக நிலை பற்றி எதுவித அக்கறையுமற்றவர்கள். அவர்கள் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால், புலிப்பெண்களின் நிர்வாணப்படத்தைப் போட்டு நூறு நாட்கள் ஓட்ட வேண்டும் என்று அடம்பிடித்த போது அவர்களது வர்க்கச் சார்புக்குப் பின்னால் உள்ள மனம் தெளிவாகவே விளங்கிப் போயிற்று. மார்க்சியப் 'பட்டத்தை' சாகும் போது கொண்டா செல்லப் போகின்றார்கள்? தமிழாம் அரங்காம்.

அடுத்த தரப்பினரைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு டிஸ்கவரி சனலில் வரும் ஹனா வின் ஞாபகம் வந்து தொலைத்து விடுகின்றது. வேட்டை நடக்கும் போது புதர்களுக்குப் பின்னால் நின்று அமைதியாகப் பார்த்துக் கொண்டு நிற்கும். வேட்டை முடிந்ததும் 'ஞைஞை' என்ற சத்ததுடன் வந்து இரையைப் பெற்றுக் கொள்ளும். இந்த உலகத்தில் நான் அதிகம் வெறுக்கும் விலங்கு ஹைனா வே.. அதன் நேர்மையற்ற தன்மையும் கள்ளக் குணமும் எவராலும் இலகுவாக ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல. அதே மாதிரி நினைத்த மாதிரிக்கும் பெரியாரையும் இடைக்கிடை மார்க்சையும் கூப்பிட்டுக் கொண்டு ஹைனா வின் குணத்தோடு அசிங்க அரசியல் செய்பவர்கள். அவர்களது தேவை வேட்டை முடிய வேண்டும். இரை தமக்குக் கிடைக்க வேண்டும் என்பது மட்டுமே. ஆனால், எனது உரையாடலின் பின்பு ஒரு விடயம் அவர்களுக்குப் புரிந்து விட்டது. தமது விடயங்களை எல்லோரும் நன்றாக உணர்ந்து கொண்டுவிட்டார்கள் என்பது. தமது பெயர் 'கெட்டுப்போகப்' போகின்றதே என்பதற்காக இப்போது 'இராணுவத்தை வெளியேற்று' என்று முதலைக் கண்ணீர் வடிக்கின்றார்கள் ஹனாக்கள். சத்தியமாம் கடதாசியாம்.

இப்பதிவு தொடர்பாக சில விளக்கங்களைக் கூற வேண்டும். இலங்கை நேரம் காலை 8 மணியளவிலேயே ஒஸ்கார் நிகழ்ச்சி நடந்தது என நினைக்கின்றேன். முதல் நாளைய மயக்கத்தில் காலை எழும்பும் போது வழமைக்கு மாறாக காலையிலேயே போன்களும் எஸ்.எம்.எஸ் களும். ரகுமானுக்கு ஒஸ்கார் கிடைத்து விட்டது என்ற செய்தியே அது. எழுந்து பேஸ்புக்கிற்குப் போனால் நீ முந்தி நான் முந்தி என்று ரகுமானுக்கு வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். அத்துடன் இன்னுமொரு செய்தியும் கிடைத்தது. எனது முனைநாள் நண்பன் ஒருவர் இறந்த சேதி.

ரகுமானது விருது ஒருதலைப்பட்சமாக வியக்கப்படுவது எனக்குச் சரியாகத் தெரியவில்லை. அதன் மற்றொரு பக்கமும் அதன் பாதகங்களும் எமது மக்களுக்கு உறைக்கவுமில்லை. காற்றடிப்பதற்கும் மழை பெய்வதற்கும் கூட அமெரிக்கா தான் காரணமெனக்கூறும் நமது மார்க்சியப் பெருமக்கள் தொடர்பாக எனக்கு எள்ளளவும் மரியாதை இருப்பதில்லை. தோமஸ் அல்வா எடிசன் தான் அதிக கண்டு பிடிப்புக்களை நிகழ்த்தியவர்கள் என்று கூறுவார்கள். ஆனாலும், நமது மார்க்சியர்களிடம் அவர் நிச்சயமாகப் பிச்சை வாங்க வேண்டும். பல்ப் எரிந்தால் தான் அவருக்கு கண்டுபிடிப்பு. ஆனால் நம்மவர்களுக்கு ஒருமுறை கக்குசுக்கு போய் வந்தாலே போதும் கைவசம் ஒரு கண்டுபிடிப்பு.

ஆனாலும் பொருளாதாரம் சார்ந்து ஒடுக்கப்பட்டோர் தொடர்பாக எனக்கு எப்போதும் கரிசனை இருக்கின்றது. அதற்குரிய வெளிகள் சிவப்பு உள்ளாடைகள் அணிந்தவர்களால் நிரப்பப்படக்கூடது என்பதே எனது கருத்து. அவர்கள் புடவைக்கடையில் துணி விற்கும் பகுதியிலோ அல்லது சிவப்பு சாயம் தொடர்பான ஆராய்ச்சியிலோ தமது நேரத்தைச் செலவிடுவது பொருளாதாரம் சார்ந்து ஒடுக்கப்பட்டவர்களுக்கு நிறைந்த பலனைத் தரக்கூடும்.

மேகுறித்த கட்டுரை முழுமையாக ரகுமானது விருதைக் கண்டபடி வியந்து கொண்டாடிக் கொண்டிருந்தோருக்காக அவர்களுக்கு எதிர்மனநிலையில் இருந்து எழுதப்பட்டதே. இக்கட்டுரையில் உள்ள விடயங்களை விடவும் மேலதிகமான சிலவிடயங்களு கருத்துக்களும் என்னிடம் உண்டு. அதை நான் மேலே தெரிவிக்கவில்லை. உண்மையில் அவற்றைச் சொல்ல ரகுமான் ரசிகர்கள் என்னை விடவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

முதலாளித்துவத்தின் இடைவெளிகளில் புகுதலும் அதனூடு அதற்கெதிராக இயங்குதலுமே அதுவாகும். இது என்னிடம் இருக்கும் சாதகமான புள்ளியாகும். இவ்விடத்தில் இன்னும் சில வருடங்களில் மேற்கின் அறிவுபரப்பையும் கலையின் பரப்பையும் ஈழத்தில் இருந்து சென்றவர்கள் நிர்ப்ப வேண்டும் என்ற பேரவா என்னிடம் உண்டு. என்னும் போது மக்கள் கூட்டத்தை வசீகரிக்கும் முதலாளித்துவம் சார் விடயங்களையும் சேர்த்தே குறிப்பிடுகின்றேன். என்னைப் பலரும் பேயன் என்று தூற்றக்கூடும். ஆனால், நான் அதில் மிகத் தெளிவாக இருக்கின்றேன். பின்னவீனத்துவம் என்பது மனநிலை என்பதுடன் சேர்ந்ததே. நாம் ஒரே விடயத்தின் இரு பக்கங்களை ஒரே நேரத்தில் ஆதரித்தவாறும் எதிர்த்தவாறும் இருக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. இம்மனநிலை புலம்பெயர் சமூகத்தில் இருந்து மட்டுமே தோன்ற முடியும் என்ற மனநிலை எனக்கு இருந்தது. ஆனால், இப்போது 'மாடர்ன் ட்ரெஸ்சில சில மங்காத்தாக்களைப்' பார்த்ததன் பிற்பாடு அந்நம்பிக்கையும் அற்றுப்போய்விட்டது. மேற்கில் வாழும் புலம்பெயர் சமூகத்தவ்ர்கள் மத்தியில் தற்போதெல்லாம் ஒரே ஒரு வேற்றுமையையே காண முடிகின்றது. ஒரு தரப்பு பூவையும் பொட்டையும் கோயிலையும் சாமியையும் கொண்டு போயினர். மற்றையதரப்பு மேற்கூறிய விடயங்களை விட்டுவிட்டு மற்ற விடயங்கள் எல்லாத்தையும் கொண்டு போயினர். அதில் இருந்து தப்பி வளர்வது இலேசுப்பட்ட காரியமல்ல. ஆனால், அது மிக அவசியமனது.

-உரையாடும் அனானி-

டிசே த‌மிழ‌ன் said...

'உரையாடும்' அனானிக்கு,
உரையாட‌ல்க‌ளில் ஏற்ப‌டும் அலுப்பும், எருமை மாடு மேலே பெய்யும் ம‌ழையாகிப் போன‌ ந‌ம் ச‌மூக‌த்து அவ‌ல‌மும் புரிந்துகொள்ள‌க்கூடிய‌தே. அண்மைய‌ சில‌ வ‌ருட‌ங்க‌ளாய் இந்த‌ச் ச‌லிப்பே எந்த‌ உரையாட‌லிலும் தீவிர‌மாய் ப‌ங்குப‌ற்ற‌ வைக்காது ‍ முக்கிய‌மாய் அர‌சிய‌ல் சார்ந்து ‍என்னையும் ஒதுக்கி வைத்துள்ள‌து. ஆடுகின்ற‌ மேடை விரிந்துள்ள‌து, ஆட‌ விரும்புப‌வ‌ர்க‌ள் 'அற்புத‌மாய்' ஆடிக்கொண்டிருக்கின்றார‌கள். நிறைய‌ விட‌ய‌ங்க‌ளை அவ‌தானித்துக்கொண்டிருக்கின்றேன். புனைவாக‌வோ அல்ல‌து க‌ட்டுரையாக‌வோ இவ‌ற்றையெல்லாம் எழுத‌வொரு கால‌ம் வ‌ராம‌லா போய்விடும். ஒரேயொரு அவ‌தான‌த்தை ம‌ட்டும் சொல்லிவிட்டு விட‌ய‌த்திற்கு ந‌க‌ர்ந்துவிடுகின்றேன். அர‌சிய‌ல் பேசும் ந‌ம‌து ஈழ‌த்தவ‌ர்க‌ள் இன்னும் பின் ந‌வீன‌த்துவ‌ச் சூழ‌லுக்கு ந‌க‌ர‌வேயில்லை. எல்லாத் த‌ர‌ப்புமே ந‌வீன‌த்துவ‌ச் சூழ‌லுக்குள் நின்றுகொண்டு நான் ந‌ல்ல‌வ‌ன் X நீ கெட்ட‌வ‌ன் என்று பேசிக்கொண்டிருக்கின்றார்க‌ள். எல்லோரிட‌மிருந்தும் எல்லாவ‌ற்றிலிருந்தும் எடுத்துக்கொள்ள‌வும் நிராக‌ரிக்க‌வும் விட‌ய‌ங்க‌ள் இருக்கின்ற‌தென்ப‌தை எவ‌ருமே விள‌ங்கிக்கொள்ள‌வில்லை. அவ்வாறு விள‌ங்கியிருந்தால் ஒரு உறுதியான‌ அர‌சிய‌ல் அசைவிய‌க்க‌ம் தோன்றி -இன்றைய‌ கால‌த்து எவ‌ர‌து அர‌சிய‌லையும் ஏற்காது உதிரிக‌ளாக‌ இருக்கும்- பெரும் ம‌க்க‌ட் கூட்ட‌த்தை உள்வாங்கி வ‌ள‌ர்ந்திருக்கும்.ஆனால் இத‌ற்கு எவ‌ரும் த‌யாரில்லை. எல்லோரும் க‌ட‌ந்த‌கால‌த்திலேயே இருக்கின்றார்க‌ள் என்ப‌துதான் மிக‌ அவ‌ல‌மான‌து.
.............
மேலே ப‌திய‌ப்ப‌ட்ட‌ க‌ட்டுரையை ஏற்க‌ன‌வே நீங்க‌ள் எங்கையாவ‌து எழுதியிருந்தீர்க‌ளா? நான் க‌வ‌னிக்க‌வில்லை. மூல‌த்தைக் குறிப்பிட்டால் அத‌ற்கு ந‌ன்றியென‌ப் போட்டுவிடுகின்றேன். ஏற்க‌ன‌வே கூறிய‌துபோல‌ உங்க‌ளின் அநேக‌ க‌ருத்துக்க‌ளோடு ஒத்தே போகின்றேன். மேற்குல‌குக‌ள் எப்ப‌டி இந்தியா போன்ற‌ மூன்றாமுல‌க் நாடுக‌ளுக்கு உல‌க‌ அழ‌கி, பிர‌ப‌ஞ்ச‌ அழ‌கி என்று ப‌ட்ட‌ங்க‌ள் கொடுத்து, த‌ம‌து உற்ப‌த்திக‌ளை எப்ப‌டிச் ச‌ந்தைப்ப‌டுத்தின‌வோ அதேபோன்று த‌ங்க‌ள் திரைப்ப‌ட‌ங்க‌ளையும் விரிவாக‌ ச‌ந்தைப்ப‌டுத்த‌வே இவ்வாறான‌ விருதுக‌ளும் என்ப‌தை ஊகித்த‌றிவ‌து அவ்வ‌ள‌வு க‌டின‌மில்லை. அமெரிக்கா போன்ற‌ நாடுக‌ளில் ப‌ட‌ங்க‌ளை விநியோகித்து ப‌ண‌ம் ச‌ம்பாதிப்ப‌தை விட‌ அதிக‌ ச‌ன‌த்தொகையுள்ள‌ இந்தியா போன்ற‌ நாடுக‌ளில் மிக‌ எளிதாக‌ வெளியிட்டு இலாப‌த்தைச் ச‌ம்பாதிக்க‌லாம். ஏற்க‌ன‌வெ சோனி போன்ற‌ (கொல்ம்பியா) நிறுவ‌ன‌ங்க‌ள் இந்தியாவில் ப‌ட‌ங்க‌ளைத் த‌யாரிக்க‌த்தொட‌ங்கிவிட்ட‌ன‌.அண்மையில் இங்கே வெளியான‌ அக்ஷ்ய‌குமாரின் ஒருப‌டம் ஏதோ ஒரு வெளிநாட்டு நிறுவ‌ன‌த்தின் த‌யாரிப்பே. இந்தியாதான் உல‌கில் அதிக‌ ப‌ட‌ங்க‌ளை வ‌ருட‌மொன்றில் த‌யாரிக்கும்போது இவ‌ர்க‌ள் கால்க‌ளை அக‌ல‌ப‌திப்ப‌தை விள‌ங்கிக்கொள்ள‌முடியும். இத‌னால் இந்தியாவின் உள்ளேயே புழ‌ங்கிக்கொண்டிருக்க‌க்கூடிய‌ மிக‌ப்பெரும் ப‌ண‌ம் வெளியே போக‌ப்போகின்ற‌து என்ப‌தை அறியாது எல்லோரும் ஆகா என்று இருக‌ர‌ங்கொண்டு அங்கே வ‌ர‌வேற்கின்றார்க‌ள் என்ப‌து இன்னொரு சோக‌ம். ஆனால் இவ‌ற்றுக்காய்
ஏ.ஆர்.ஆரின் திற‌மையை ம‌திக்கவில்லை என்ப‌த‌ல்ல‌ அர்த்த‌ம். என்னைப் போல‌வே நீங்க‌ளும் ஏ.ஆர்.ஆரின் தீவிர‌ இசைர‌சிக‌ராக‌ இருந்திருப்பீர்க‌ள். இளைய‌ராஜா எப்ப‌டி ஒரு கால‌த்திற்குரிய‌வ‌ராக‌ இருந்தாரோ எங்க‌ளைப் போன்ற‌ வ‌ய‌துடைய‌வ‌ர்க‌ளுக்கு இசையில் ஏ.ஆர்.ஆர் இருந்தார். அந்த‌வ‌கையில் எல்லா அர‌சிய‌லையும் தாண்டி என்னால் அவ‌ரை வாழ்த்த‌ முடிந்த‌து.

/சிலவேளை ரகுமான் இலங்கையில் நடைபெறும் இன அழிப்பு போரைப்பற்றி ஏதாவது கூறியிருந்தால் விருதுகளின் அரசியல் பற்றிக் கவலைப்படாமல் நான் 'எதிர்-இசை' அல்லது 'இசையும் போராட்டமும்' அல்லது 'புரட்சியில் இசைக்கலைஞர்களின் பங்கு' பற்றிக் கதைத்துக்கொண்டிருப்பேன்./

இந்த‌ப்புள்ளியில் ம‌ட்டுமே நான் ச‌ற்று முர‌ண்ப‌டுகின்றேன். ஏ.ஆர்.ஆரும், மாயாவைப் போல‌ தீவிர‌மாய் அர‌சிய‌ல் பேசிக்கொண்டிருந்துவிட்டு, ஒஸ்கார் மேடையில் எதுவுமே பேசாது ம‌வுன‌மாய் இற‌ங்கியிருப்பாரென்றால் நிச்ச‌ய‌ம் நானும் இதே கேள்வியை எழுப்பியிருப்பேன். ஆனால் ஏ.ஆர்.ஆர் இவ்வாறான‌ ஒரு த‌ட‌த்தில் எந்த‌க்கால‌த்திலையும் போகாத‌போது எப்ப‌டி நாம் அவ‌ரைக் கேள்வி கேட்க‌லாம். அல்ல‌து மேடையில் அர‌சிய‌ல் பேசுவார் என்று எப்ப‌டி எதிர்பார்க்க‌முடியும்? காஷ்மீருக்காய், 'ஆஸாதி ஆஸாதி', கேர‌ளாவுக்காய் அடுத்த‌ அருந்த‌தி ரோய், மேதா ப‌ட்டேக‌ர் போல‌த்தான் தானும் என்று built-up ப‌ண்ணும் சாரு நிவேதிதா போன்ற‌ 'க‌ல‌க‌கார‌ரின்' ம‌வுன‌மே மிக‌வும் அருவ‌ருப்பான‌து. இற்றைவ‌ரை த‌மிழ‌க‌ம் எவ்வ‌ள‌வு எழுச்சியுற்ற‌போதும் க‌ள்ள‌ ம‌வுன‌ம் சாதிக்கின்றாரே அதைத்தான் நாம் கேள்வி கேட்க‌வேண்டும். எனெனில் இவ‌ர்க‌ள்தான் அர‌சிய‌ல் பேசிய‌வ‌ர்க‌ள், எங்க‌ளுக்கு ஒருகால‌த்தில் ஆத‌ர்ச‌மாய் இருந்த‌வ‌ர்க‌ள்...சாரு நிவேதிதா, ஜெய‌மோக‌ன், அ.மார்க்ஸ் போன்ற‌வ‌ர்க‌ளின் க‌ள்ள ம‌வுன‌ம் குறித்து ஒன்றிர‌ண்டு மாத‌ங்க‌ளுக்கு முன் எழுதிய‌ ப‌திவொன்று அரைகுறையில் இருக்கிற‌து. தொட‌ர்ச்சியாக‌ எழுதி முடிப்ப‌த‌ற்கு என‌க்கு விருப்ப‌மில்லை. இவ‌ர்க‌ளோடு சொறிவ‌தைவிட‌ நான் ஏதேனும் இர‌ண்டு ஆர்ப்பாட்ட‌ங்களுக்குப் போய்விட்டு வ‌ர‌லாம். இல்லை யாரேனும் இங்கேயிருக்கும் ஒரு அர‌சிய‌ல்வாதிக்கு இன்றைய‌ ஈழ‌நிலைமை குறித்து க‌டிதமாவ‌து எழுத‌லாம். அதிலும் அண்மையில் ஜேய‌மோக‌ன் வாச‌க‌ர் க‌ருத்துக்க‌ளுக்கு க‌ருத்துக்கூறினாரே..அட‌டா...த‌மிழ‌க‌த்தில் எல்லோரும் உண‌ர்ச்சிவ‌கைப்ப‌ட்ட‌ அர‌சிய‌ல் செய்கின்றார்க‌ளாம். அத‌னால் தான் ம‌வுன‌மாய் இருப்ப‌தே மேலாம். நீண்ட‌ கால‌த்துக்குப் பிற‌கு கொஞ்ச‌ம் வாய் திற‌ந்த‌ ஜெமோவிட‌ம், ஈழ‌த்தில் இருப்ப‌வ‌ர்க‌ளைப் போல‌வே ஜெமோவும் ஒரு சூழ்நிலைக்குள் சிக்கியிருந்தால், நானும் எல்லோரும் உண‌ர்ச்சிவ‌ச‌ப்ப‌டுகின்றார்க‌ள், என‌வே நானும் ம‌வுன‌மாக‌ இருக்கின்றேன் என்றால் ஜெமோவின் சூழ்நிலையில் ஏதேனும் மாற்ற‌ம் வ‌ருமா? இவ‌ர்க‌ள் ந‌ட‌ப்பு வாழ்வைக்கூட‌ தத்துவார்த்த‌ ரீதியாக‌ப் பார்ப்ப‌வ‌ர்க‌ள். எல்லாம் முடிந்த‌பின் பிண‌ங்க‌ளின் குவிய‌ல்க‌ளில் நின்று இவ‌ர்கள் பேசுவ‌தால் ந‌ம‌க்கு என்ன‌ ப‌ல‌ன் கிடைக்க‌ப்போகின்ற‌து?எல்லாவ‌ற்றையும் த‌த்துவார்த்த‌மாய் ஆராய‌ முய‌ன்ற‌ சார்த்த‌ரிலிருந்து தெரிதா வ‌ரை, அல்ஜீரியா, பால‌ஸ்தீனிய‌ம் உட்ப‌ட‌ ப‌ல‌ பிர‌ச்சினைக‌ளில் த‌ம‌து நிலைப்பாட்டை வெளிப்ப‌டையாக‌வே முன்வைத்திருக்கின்றார்க‌ள் என்ப‌தை இந்த‌த் த‌த்துவார்த்த‌க் குஞ்சுக‌ள் அறியாத‌வையும‌ல்ல‌‌. இதிலும் ந‌கைச்சுவை என்ன‌வென்றால் ஜெய‌மோக‌ன் போன்ற‌வ‌ர்க‌ளுக்கு பின் ந‌வீன‌த்துவ‌ம் போன்ற‌வை பிடிக்காது, ஆனால் அது குறித்து அவ்வ‌ப்போது பேசாவிட்டால் த‌ம்மை எவ‌ரும் ம‌திக்க‌மாட்டார்க‌ள் என்ப‌தும் ந‌ன்கு தெரியும். அண்மைய‌ உள‌ற‌ல் ஏ.ஆர்.ஆரின் இசை பின் ந‌வீன‌த்துவ‌மான‌து என்று எழுதுகின்றார். நானும் அட‌டா அடுத்த‌வ‌ரியில் என்ன‌ சொல்ல‌ப்போகின்றார் என்றால், ஏ.ஆர். ஆர், பாட‌லாசிரிய‌ர்க‌ளை எவ்வ‌ள‌வு எழுதிக்கொடுக்க‌முடியுமே அதைக்கேட்பார். பிற‌கு குறிப்பிட்ட‌ சில‌ ச‌ர‌ண‌த்தை ம‌ட்டுமே எடுப்பாராம். இத‌னால் உட‌னே பின் ந‌வீன‌த்துவ‌ இசையாகிவிடுமா? என்ன‌வொரு கொடுமை. பின் ந‌வீன‌த்துவ‌ இசை என்ன‌வென்று சும்மா கூகுளிலோ அல்ல‌து விக்கிபீடியாவிலோ தேடினாலே வ‌ந்துவிடுமே. ப‌ல‌ரை/ப‌ல‌தைக் கொப்பிய‌டித்த‌ தேவா விளிம்புக‌ளின் கானாவைத் திரையிசையாக்கிய‌ அள‌வுக்குக் கூட‌ ஏ.ஆர்.ஆர் தேடிப்போக‌வில்லை என்ப‌தை நினைவுப‌டுத்திக் கொள்ள‌லாம். பின் ந‌வீன‌த்துவ‌ என்ப‌து இசை, நீண்ட‌ பாட‌லை விரும்பிய‌ அள‌வுக்கு வெட்டியெடுப்ப‌தாலோ அல்ல‌து பின்ன‌ணி இசைக்க‌ருவிக‌ள் இல்லாது பாட‌க‌ரைத் த‌ன்பாட்டில் பாட‌விடுவ‌தாலோ ம‌ட்டுமே உருவாகிவிடுவ‌தில்லை. அது ப‌ல‌வேறு கூறுக‌ளை உள்ள‌ட‌க்கிய‌தாக‌ இருக்க‌வேண்டும். (இப்ப‌டியான‌வ‌ர்க‌ளின் க‌ட்டுரைக‌ளை வாசிக்கும்போதுதான், வ‌ள‌ர்ம‌தி போன்ற‌வ‌ர்க‌ள் அள‌வுக்க‌திக‌மான‌ மவுன‌த்தோடு இருப்ப‌து அலுப்பூட்டுகின்ற‌து).

மீண்டும் சொல்ல‌வ‌ந்த‌ க‌ருத்துக்கு வ‌ருகின்றேன். ஏ.ஆர்.ஆர் ஈழ‌த்தில் ந‌டைபெறும் இன‌வ‌ழிப்பைப் ப‌ற்றி எதுவும் கூறாத‌தால் அவ‌ர‌து விருது ம‌திப்ப‌ற்ற‌தாகிவிடும் என்ப‌தை என்னால் ஏற்றுக்கொள்ள‌ முடிய‌வில்லை. இப்போதுதான் இன்னொன்று நினைவுக்கு வ‌ருகின்ற‌து. (ஜெய‌மோக‌ன் ஸ்ல‌ம்டோக் மில்லிய‌ன‌ரைக் கிழிகிழியென்று கிழிப்பார்; ஆனால் ஏ.ஆர்.ஆரும், ராசுக்குட்டியும் அதே ப‌ட‌த்தில் வேலைசெய்து விருது கிடைக்கும்போது ஆஹாவென்று எந்த‌ விம‌ர்ச‌ன‌ம‌ற்றும் பாராட்டுவார். இங்கேதான் பூனைக்குட்டிக‌ள் வெளியே வ‌ருகின்ற‌ன‌.)

கிட்ட‌த்த‌ட்ட‌ இதேபோன்ற‌ ஒரு உரையாட‌ல் இளைய‌ராஜா க‌த்தாரின் இசை குப்பை என்ற‌போது (ரோஸாவ‌சந்தினுடைய‌ வ‌லைப்ப‌திவில் என்று நினைக்கின்றேன்). இளைய‌ராஜா இப்ப‌டி அப‌த்த‌மாய்ச் சொன்ன‌த‌ற்காய், இளைய‌ராஜாவின் இசை கேவ‌ல‌மாகி ஆகிவிடாது என்றோ அல்ல‌து அத‌ற்காய் அவ‌ர‌து திற‌மையை நிராக‌ரிக்க‌ முடியாதோ என்றுதான் சில‌ ந‌ண்ப‌ர்க‌ள் உரையாடிய‌தே என்னுடைய‌ க‌ருத்தாக‌வே இருந்த‌து, இங்கேயும் அப்ப‌டியே.

அருண்மொழிவர்மன் said...

//ஆனால் ஏ.ஆர்.ஆர் இவ்வாறான‌ ஒரு த‌ட‌த்தில் எந்த‌க்கால‌த்திலையும் போகாத‌போது எப்ப‌டி நாம் அவ‌ரைக் கேள்வி கேட்க‌லாம். அல்ல‌து மேடையில் அர‌சிய‌ல் பேசுவார் என்று எப்ப‌டி எதிர்பார்க்க‌முடியும்? காஷ்மீருக்காய், 'ஆஸாதி ஆஸாதி', கேர‌ளாவுக்காய் அடுத்த‌ அருந்த‌தி ரோய், மேதா ப‌ட்டேக‌ர் போல‌த்தான் தானும் என்று built-up ப‌ண்ணும் சாரு நிவேதிதா போன்ற‌ 'க‌ல‌க‌கார‌ரின்' ம‌வுன‌மே மிக‌வும் அருவ‌ருப்பான‌த
//

இதுதான் எனது கருத்தும். தன்னை தொடர்ந்து ஒரு சமூகப்போராளி என்று முன்னர் கோணல் பக்கங்களிலும் இப்போது இணையத்திலும் எழுதி வரும் சாரு சாதிக்கும் கள்ளா மௌனம் புரிபடவில்லை. இது கூட பரவாயில்லை, யாரோ தருண்யன் என்று எழுதிய கடிதத்தை மட்டும் வெளியிடுகிறார். அப்படியானால் அதுதான் சாருவின் கருத்துமா என்றூ கேட்டால் கோபிக்கிறார். கருத்து சுதந்திரத்தினால் வெளியிடுகிறேன் என்றால் அது எல்லா தரப்புக்கும் பொதுவானது. இது பற்றி யாரோ கேட்டதுக்கு அப்படி எழுதினால் தனக்கு குண்டெறிவார்கள் என்கிறார்.

மேலும் இளையராஜாவுக்கு வருவோம். கத்தாரின் இசையை குப்பை என்றாதால் இளையராஜாவை தான் நிராகரிக்கிறேன் என்கிறார். அப்படியே வைத்தால் கிட்ட தட்ட தமிழின் ஏறத்தாழ அனைத்து எழுத்தாளர்களையும் குப்பை என்று தொடர்ந்து திட்டி வரும் சாருவை என்ன சொல்வது. தனது பெயர் ஒரு பெண் போல இருப்பதனால் தான் பாலகுமாரன் தன்னை முன்பு ஒருமுறாஇ சந்திக்க ஒத்துக்கொண்டார் என்று இவர் இணையத்தில் எழுதிய நினைவு......

ஆசிரியனை மறாந்துவிட்டு படைப்பை மட்டும் பாருங்கள் என்று இவர் சொன்னதை ஏற்றால் தான் இவரது படைப்புகளை தொடர்ந்து படிக்கமுடியும் போல உள்ளது

Anonymous said...

டி.ஜே,
'பிரதிகளில் சரியாய் இருப்பது' என்ற வகையினர் இருக்கின்றார்கள். அவர்களுக்கு முக்கியமான வேலையே பிரதிகளில் சரியாய் இருப்பது மட்டும் தான். அதற்காக அவர்கள் இருதரப்பையும் அடிக்கடி குற்றம்சாட்டுவார்கள். இரண்டையும் ஒரே தளத்தில் வைத்து அணுகுவார்கள். கெமிஸ்ட்ரியில் சில பரிசோதனைகளுக்கு நியம வெப்ப அமுக்க நிபந்தனைகளில் என்று போடாவிட்டால் அது அப்பட்டமான பிழையாகிவிடும். ஆனால் இரண்டு தரப்பையும் காலநேரம் பார்க்காமல் விமர்சிக்கும் மூன்றாம் தரப்பாரை நித்திரையால் எழுப்பிக் கேட்டாலே சொல்லி விடுவார்கள் விடை என்னவென்று.

முதலாவது புலிகளையும் இராணுவத்தையும் ஒரே தளத்தில் வைத்து விமர்சிக்க முடியாது. மற்றையது சூழ்நிலை மாறும் போது ஒரே மாதிரிப் பேசுவதில் பிரயோசனம் இல்லை என்பது பற்றிய தெளிவும் இல்லை. கணிதத்தை விட நுணுக்கமானது சமூகவியலில் மாறும் கணியங்கள். அதை அவதானிக்க முடியாதவனெல்லாம் அறிவுஜீவிப்பட்டத்தை சுமப்பது எமது சமூகத்தில் மாத்திரமே என்று நினைக்கின்றேன்.

தமிழரங்க புத்திஜீவிகளுக்கு மாறும் கணியங்கள் என்று எதுவும் இல்லை. 1917 ஆண் ஆண்டு போதையே அவர்களுக்கு இன்னும் தெளியவில்லை. மாற்றம் என்பதை எதுவித தயக்கமுமற்றி கடாசும் கொடுப்பனவு அவர்களைத் தவிர வேறு யாருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. 'பிரதிகளில் சரியாக இருப்பதென்பது' நிலையானதல்ல. அது மிகவும் நெகிழ்ச்சித்தன்மையுடையது. இவ்வளவு புரிதல் அற்று இருக்கின்றார்களே என்று அழுது குளறுவதைத் தவிர நமக்கு வேறு வழி இல்லை.

பொய்களைக் காவித்திரியும் சத்தியக்கடதாசிக் காரர்கள் கதையைக் கேட்கவே வேண்டாம். 1917 ஆண் ஆண்டுப் போதை தமக்கு தெளிந்துவிட்டது என்று நினைத்துக் கொண்டிருக்கும் இவர்களது லொள்ளு இன்னும் பயங்கரமானது. ரகசிய வேலைத்திட்டங்களையும் உள்ளடக்கியது. கேட்டால் தாம் நடுநிலமையானவர்கள் என்ற கதைவேறு. லட்சக்கணக்கான மக்கள் அழிந்தாவது புலிகள் அழிந்தால் சரி எனற கணக்கான நடவடிக்கைகளை புரிந்து கொள்ள நமக்கு அதிக அளவு புத்திசாலித்தனம் தேவை இல்லை. முன்பு புலிகள் அழிய வேண்டும். இப்போது சரணடைய வேண்டும் அல்லது தாமாகவே சாக வேண்டும். அவர்களுடன் சம்பந்தப்பட்ட மக்களை இலங்கை அரசு காப்பாறும் என்ற பிரச்சாரம் வேறு. சுகனது கோவணம் நாகர்ஜுனன் தளத்தில் கிழிந்து தொங்கியது. எங்கே காப்பாற்றுகின்றது? அந்த முகாம்களைத் தாண்டி இளைஞரோ அல்லது யுவதியோ வந்து விட முடியுமா என்ன? வடக்கு கிழக்கு எனறால் என்னவென்றே அறியாக மலையகத் தமிழ் இளைஞர்களையே விட்டுவக்காதவர்கள் எப்படி அவர்களை விட்டு வைக்கப் போகின்றார்கள். யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட 3000 இளைஞர்களுக்கும் வரி இருந்ததா என்ன?

அடுத்து இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை என்ற் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ள எஸ்.எல்.டி.எஃப் காரர். மாயா அருள்பிரகாசம் அப்படிச் சொன்னது சர்வானந்தனக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது. அவா இலங்கையில் இருக்கவே இல்லை என்று அகழ்வாராய்ச்சி வேறு. புத்திஜீவ்களைச் சந்தித்து விளக்கம் கொடுப்பது இன்னொருபுறம்.

மேற்கூறியவர்கள் இரண்டு தரப்பையும் தவிர்த்து மறுத்தோடி என்ற கவுரவமான பட்டத்தை சுமந்து வரலாற்றில் வாழ நினப்பவர்கள். :( (அரசுடன் இணைந்துள்ள தமிழ்க்கடசிகளைப் பற்றிக் கதைப்பதில் வேலை இல்லை. அவர்கள் தம்மை நேரடியாக வெளிக்காட்டியவர்கள். அவர்கள் நடுநிலமை வேசம் கட்டி ஆடவில்லை.)

அ. மார்க்ஸ் யார்? சோபாவின் தலைவனா? சேனனின் தலைவனா? என்ற கேள்விக்கு இப்போது விடை கிடத்திருக்கின்றது. சேனன் இந்தியா சென்று அ. மார்க்ச சந்தித்ததன் பிற்பாடு அ.மார்ஸ் ஒரு பல்டியை அடித்துள்ளார். அ. மார்சின் பல்டிக்கு அவருடுடன் இயங்குபவர்களது நிலைப்பாடுகளும் காரணமாக் இருந்திருக்க கூடும். சோபா வின் குரு பட்டத்தைச் சுமப்பதை விட நாம நம்மளது பெயரைக் காப்பாற்றிக் கொள்வதே மேல் என்ற கணக்காக மனுசன் பேட்டி கொடுத்திருக்கிறார். புலிகளை கொஞ்ச காலத்திற்கு விமர்சிக்காமல் இருப்போம் என்று திருவாய் மலர்ந்திருக்கின்றார். நாளும் பொழுதும் பேரசான் அ.மார்க்ஸ் என்று வணங்கி வந்த சுகன் தற்போது என்ன செய்ய போகின்றாரோ தெரியவில்லை. (பேராசான் சிவசேகரம் என்று பக்தியோடு சுகன் கூறிக்கொண்டிருக்க மனுசன் சம்புகன் என்ற பேரில சுகனுக்கு அடிபோட்ட போது சுகன் வெகுண்டெழுந்து அறிக்கை விட்டது இன்னும் எனக்கு ஞாபகமிருக்கிறது.) அ. மார்க்ஸ் கடசியில சுகனதும் சோபாவினதும் கையை கழுவிவிட்டு போட்டு கொடுத்த பேட்டிக்கு பல காரணங்கள் இருக்கலாம்.

இவ்விடத்தில் பலரது கருத்துக்களையும் விட்டுவிடுவோம். ஆனால், சேனன் என்ற நபர் பற்றி நாம் பேச வேண்டியுள்ளது. தீவிர புலி எதிர்ப்பாளரான சேனன் அண்மைக்காலமாக 2000 புலிகள் காப்பாற்றப்பட்டாலும் 200,000 மக்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்று சொல்லி வருகின்றார். இதைத் தயங்காமல் உரக்கக் கூறும் சேனனுக்கு சபாஸ் போடலாம் என்றே தோன்றுகின்றது. அவரது செயற்பாட்டு வட்டம் புலியெதிர்ப்பாளர்கள் குழு. அதையும் தாண்டி அவர் கூறும் கருத்துக்களை நாம் நிச்சயம் பாராட்டவே வேண்டும்.

தண்ணியடிக்க காசு வராது என்று பயந்து ஈழம் பற்றிபேச வாயத்திறக்காமல் இருக்கும் இந்திய பின்னவீனத்துவக் கலகக்காரர்களுக்கு மத்தியிலும் இந்தியா யுத்தம் நடாத்துகின்றது என்பதற்காகவோ என்னவோ மூச்சு விடாமல் இருக்கும் ஜெயமோகன் களுக்கு மத்தியிலும் இந்நேரம் அரசாங்கத்தை எதிர்த்தால் நண்பர்கள் கோவித்துக் கொள்வார்களோ என்ற நினைக்கும் ஈழத்து மறுத்தோடிப் பன்னாடைகளுக்கு மத்தியிலும் சேனன் உயர்ந்து தெரிகின்றார்.

புலியை எதிப்பதில் பலரும் பலவிதத்தில் லாபம் அடைகின்றார்கள். அதே லாபம் புலியை ஆதரிப்பவர்கள் அனைவருக்கும் கிடப்பதில்லை. இது மற்றவர்களுக்குப் புரியாது என அவர்கள் நினைப்பது சிரிப்புக்குரியது. நீங்கள் சொலவது மாதிரி எல்லோரும் கடந்த காலத்தில் இல்லை டி.ஜே. அவர்கள் ப்லர் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் இருக்கின்றார்கள் என்பது நிச்சயம் தெளிவாகும் காலம் வெளிவரும். எல்லோரையும் அப்பாவிகள் என நினைப்பது தவறென்று உணர்கின்றேன்.

இலங்கை அரசாங்கம் பாசிச நிலைப்பாடு எடுத்தே புலியை அழிக்க முடியும் என்பது கூடத் தெரியாமல் புலியெதிர்ப்பு அரசியல் செய்த முட்டாள்கள்கள் தான் நமது அறிவுஜீவிகள். இந்நிலையில் தாம் என்ன நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்று கூடத்தெரியாமல் முழிகிறார்களே இவங்களை எங்க கொண்டு போய் விட.. புலிகள் அழியும் போது பேரினவாதம் தமிழர்களுக்கு உரிமைகள் எதனையும் வழங்கி விடாது என்று தெரிந்தும் அது பற்றிய கரிசனை இல்லாமல் புலியை எதிர்த்தார்களே இவங்களை என்ன செய்ய? பேரினவாதம் ஒடுக்குமுறையை இறுக்கும் போது அதை எதிர்கொள்வதற்கு என்ன வழி வைத்திருந்தார்கள் இந்த முட்டாள்கள்? கேட்டால் தாங்களே தங்களுக்கு அறிவுஜீவிகள் என்ற கதை வேறு. 50 மகசின், 100 பேர் 25 வருசமா சும்மா இருந்திருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மாற்று மரபுக்கு வயசு 25 ஆம்.. என்ன கொடுமைடா இது? எதுவித திட்டமோ இயக்கமோ இல்லாமல் அலம்பிக் கொண்டிருந்திருக்கிறார்கள் என்பது இபோதுதான் தெரிகின்றது.

இசை பற்றி நேரமும் மனநிலையும் இருந்தால் பின்னர்...

-உரையாடும் அனானி

டிசே த‌மிழ‌ன் said...

அருண்,
உங்க‌ள் வ‌லைப்ப‌திவில் எழுதிய‌ க‌ட்டுரையான‌, 'நீங்களுமா சாரு நிவேதிதா அல்லது கருத்து சுதந்திரம்' ச‌ரியான‌ நேர‌த்தில் எழுத‌ப்ப‌ட்ட‌ முக்கிய‌மான‌ ஒரு க‌ட்டுரை.
.....
உரையாடும் அனானி,
சேன‌ன‌து அண்மைய‌ க‌ட்டுரைக‌ளை நான் தொட‌ர்ந்து வாசித்து வ‌ருகின்றேன்.

/மாயா அருள்பிரகாசம் அப்படிச் சொன்னது சர்வானந்தனக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது. அவா இலங்கையில் இருக்கவே இல்லை என்று அகழ்வாராய்ச்சி வேறு. /
மாயாவை முன்வைத்து சேன‌ன் ச‌ர்வான‌ந்த‌ருக்கு எதிர்வினையாற்றிய‌ கட்டுரை ந‌ல்ல‌தொன்றே. மாயா இங்கிலாந்தில் புக‌லிட‌ம் பெற்ற‌பின் இல‌ங்கைக்குச் சென்றிருக்கின்றார் என்று மாயாவே நேர்காண‌ல் ஒன்றில் கூறியிருக்கின்றார். ச‌ர்வான‌ந்த‌ர் போன்ற‌ அறிவுசீவிக‌ளுக்கு மாயா போன்ற‌வ‌ர்க‌ள் -உட‌னே இப்ப‌டிப் பேச‌த்தொட‌ங்கிய‌பின்- ந‌டுக்க‌ம் ஏற்ப‌டுவ‌தும், உண்மைக‌ள் ப‌ற்றிய‌ அக்க‌றைக‌ள் இருக்காது என்ப‌தும் இய‌ல்பே. மாயாவே கூறியிருக்கின்றார், தான் இல‌ங்கையிலுள்ள‌ ம‌க்க‌ளின் பிர‌ச்சினைக‌ளை ஒரு ஆவ‌ண‌ப்ப‌ட‌மாய் எடுத்த‌தாக‌வும், ஆனால் 9/11 கார‌ண‌மாக‌ த‌ன்னால் அதை திரையிட‌ முடியாதிருக்கின்ற‌து என்றும். இதையெல்லாம் ப‌ருத்தித்துறைக்கார‌ருக்குத் தெரியுமா என்ப‌தை நான‌றியேன் (ப‌ருத்தித்துறைக்கார‌ர் என்று பிர‌தேச‌வாத‌ம் க‌தைக்கிறான் என்டு எவ‌ரும் ஓடிவ‌ர‌வேண்டாம், ச‌ர்வான‌ந்தார் எழுதிய‌ புத்த‌க‌ங்களைத் தேட‌ப்போனால் எல்லாம் ப‌ருத்தித்துறை ப‌ருத்தித்துறை என்றே தொட‌ங்குகிற‌து, அத‌னாற்றான் அப்ப‌டிச் சொல்கின்றேன்). எனினும் உரையாடும் அனானி சேன‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் ச‌ற்று விதிவில‌க்காக‌ இருந்தாலும் அவ‌ர் மீதும் ந‌ம்பிக்கை கொள்ளும் ம‌னோநிலை என‌க்கு இப்போதில்லை. எனெனில் இத்த‌கைய‌வ‌ர்க‌ளைக் க‌ட‌ந்த‌கால‌த்தில் பார்த்துவ‌ந்த‌ ச‌லிப்பான‌ அனுப‌வ‌ங்க‌ள் இவ்வாறான‌வ‌ர்க‌ள் மீது ந‌ம்பிக்கை வைக்க‌த் த‌ய‌க்க‌மாயிருக்கிற‌து. எவ‌ரையெல்லாம் எங்க‌ளுக்கு வ‌ழிகாட்டியாக‌ இருப்பார்க‌ள் என்று ந‌ம்பினோ அவ‌ர்க‌ளெல்லாம் த‌லைகீழாக‌க் க‌விந்துபோனார்க‌ள், எவ‌ரையெல்லாம் மிக‌க்க‌டுமையாக‌ விம‌ர்சித்தேனோ அவ‌ர்க‌ள் த‌ங்க‌ள‌வில் நேர்மையாக‌ நின்று என‌து ம‌திப்பீடுக‌ளின் ச‌ரிவைச் சாட்சிய‌மாக்குகின்றார்க‌ள்.