Tuesday, February 10, 2009

நாலு வார்த்தை பேச விடு; எழுத விடு!

-சேரன்


1

"உன்னுடைய கருத்துகளில் ஒன்றுடனோடுகூட எனக்கு உடன்பாடு கிடையாது. ஆனால் அக்கருத்துகளைச் சொல்ல உனக்கு இருக்கும் உரிமையை என்னுடைய உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றுவேன்”

இது ஊடக வட்டாரங்களில் அடிக்கடி எடுத்தாளப்படும் ஒரு கூற்றாகும். இக்கூற்றிற்குச் சொந்தக்காரர் பிரெஞ்சு மெய்யியலாளரும் அரசியல் சிந்தனையாளரு மான வால்டயர். வால்டயரும் அவரோடு கூடவே ஜோன் லொக் (John Locke), கொட்பிறி லீப்நிஸ் (Gottfried Leibnitz), இம்மானுவல் கான்ட் (Immanuel Kant), டேவிற் ஹியூம் (David Hume) போன்றோரும் வேறு பல அறிஞர்களும் ஐரோப்பிய அறிவொளிக் காலத்திற்குச் சிறப்பாகப் பங்களித்தவர்கள். தாராளவாத ஜனநாயகம், மானிட உரிமைகள் சுதந்திரம் போன்ற கருத்தாக்கங்கள் மேல் எழவும் ஆழம்பெறவும் அறிவொளிக் காலம் துணைசெய்தது. எனினும் இந்த மெய்யியலாளர்களதும் அரசியலாளரதும் சிந்தனைகளிலும் எழுத்திலும் உள்ளடங்கியிருந்த இனவாதமும் காட்டுமிராண்டிகள்- நாகரிகமற்றோர் என்னும் இனம் சார்ந்த பிரிப்புகளும் அறிவொளிக் காலத்திலும் பிற்பாடு தாராளவாத ஜனநாயகங்களதும் இரட்டை நிலைப்பாட்டைத் தெளிவாகக் காட்டுகின்றன.

எல்லோருடைய கருத்துச் சுதந்திரத்தையும் வலியுறுத்துகிற வால்டயர்தான் “குரங்குகளைவிடக் கொஞ்சம் முன்னேறியவர்கள் நீக்ரோக்கள். அவர்களைவிட முன்னேறி உயர்ந்த தளத்தில் இருப்பவர்கள் வெள்ளையர்கள்” என்று எழுதுகிறார்.

“உச்சி முதல் உள்ளங்கால்வரை அந்தப் பயல் மிக மிகக் கறுப்பாக இருந்தான் என்பது மட்டுமே அவன் சொன்னது. எல்லாம் அபத்தம் என்பதை நிரூபிக்கப் போதுமாயிருந்தது” என்று எழுதுகிறார் இமானுவல் கான்ட். உரிமைகளும் சுதந்திரமும்கூட எல்லோருக்கும் எல்லாக் காலத்திலும் உரியன அல்ல என்பதுதான் யதார்த்தம்போலும்.

இந்த இரட்டை நிலைப்பாடு, ஊடக சுதந்திரம், அடிப்படை உரிமைகள் தொடர்பாகத் தாராள வாத ஜனநாயக அரசுகளில் இன்று வரை தொடர்வதாகும்.

பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்ற சுலோகமும் கருத்தியலும் அடிப்படை உரிமைகளை வேரறுக்கிற ஒரு பேராயுதமாக அரசுகள் பலவற்றால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆளுங் கட்சிப் புத்திஜீவிகளும் அரசாங்கத்தின் ஊடகத் துறை அமைச்சர்களும் ஊடகத் துறையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பெருநிதிநிறுவனங்களும் இவற்றை நியாயப்படுத்தி வருகின்றன.

2
1979 ஜூலை மாதத்திலிருந்தே பயங்கரவாதத் தடைச்சட்டமும் அவசரகால நிலையும் இலங்கையில் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இடையிடையே ஒரு சில ஆண்டுகள் இவை நடைமுறையில் இருந்திருக்கவில்லை என்றாலும் அவசரகாலநிலையின் கீழ் நீண்ட காலமாக ஆட்சி நடாத்துகிற அரசு இலங்கை அரசாகத்தான் இருக்க வேண்டும். விதிவிலக்காக அமைய வேண்டியதே விதியாக அமைகின்ற ஒரு அவலமான சூழல் இலங்கையில் நிலவுகின்றது. இலங்கை ஒரு ஜனநாயக அரசு என்பதை எத்தகைய கேள்விகளுக்கும் இடமில்லாமல் “சர்வதேசச் சமூக”மும் இந்திய அரசும் ஏற்றுக்கொண்டு நடப்பதால் ஊடக சுதந்திரங்களும் அடிப்படை உரிமைகளும் சிறுபான்மை மக்களின் வாழ்வுரிமையும் மோசமாக மீறப்படுகிறபோதும் போர்ச் சூழலில் இவை தவிர்க்க முடியாதவை எனவும் பயங்கரவாதிகளுக்கு எவ்வித உரிமையும் கிடையாது எனவும் நியாயப்படுத்தப்படுகிறது. எதிரிகளுக்கும் காட்டுமிராண்டிகளுக்கும் எந்த உரிமையும் கிடையாது என்பதே தாராளவாத ஜனநாயகத்தின் இரட்டை நிலைப்பாடாக இருக்கிறது.

இதுவரை காலமும் இலங்கையில் கொல்லப்பட்ட மற்றும் காணாமல்போன ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்களின் எண்ணிக்கை மிக அதிகம். ஜனவரி 2006இலிருந்து டிசம்பர் 2008 வரை 20 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவர்களுள் மிகப் பெரும்பாலானோர் இலங்கை அரசப் படைகளாலும் இலங்கை அரசின் கொலைக் குழுக்களாலும் கொல்லப்பட்டவர்கள். 20க்கும் மேற்பட்ட அனுபவம்வாய்ந்த ஊடகவியலாளர்கள் அரசியல் தஞ்சம் கோரி வேறு நாடுகளுக்குச் சென்றுவிட்டார்கள். ஊடகவியலாளர்களுக்கு மிகவும் ஆபத்தான நாடு என்ற வரிசையில் முதல் இரண்டு இடங்களிலும் இருப்பவை ஈராக்கும் இலங்கையும்தான். காணாமல் போனோர் எண்ணிக்கையிலும் உலகின் முதலிடத்தில் இரண்டு இடங்களிலும் இருப்பவை இலங்கையும் ஈராக்கும்தான். எல்லைகளற்ற செய்தியாளர்கள் (Reporters Sans Frontiers) அமைப்பு ஆண்டுதோறும் வெளியிட்டு வருகின்ற ஊடக சுதந்திர சுட்டெண் (Press Freedom Index) வரிசையில் 169 நாடுகளில் இலங்கை 153ஆம் இடத்தில் இருக்கிறது. இலங்கையை விட மிக அதிகப்படியான ஊடக சுதந்திரம் சவூதி அரேபியாவிலும் சிம்பாவேயிலும் கிர்க்கிஸ்தானிலும் இருக்கிறது என ஸிஷிதி தெரிவிக்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளிலும் குறிப்பாக இப்போதைய அரச அதிபர் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்த பிற்பாடும் ஊடகவியலாளரதும் ஊடக சுதந்திரத்தினதும் நிலை பல மடங்கு மோசமாகிவிட்டது. இலங்கையின் வானொலி, தொலைக்காட்சி, அச்சு ஊடகங்களில் பெரும்பான்மையானவை அரசக் கட்டுப்பாட்டில் இயங்குபவை. எனினும் தனியார் வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள்கள் இயங்கி வந்துள்ளன. போர்ச் செய்திகள், சிறுபான்மை மக்களது உரிமைகள் என்பவற்றைப் பொறுத்தவரை ஆங்கில, சிங்கள மையநீரோட்ட ஊடகங்கள் எல்லாவகையான இலங்கை அரசுகளுக்கும் மிகுந்த விசுவாசமாகவே எப்போதும் தொழிற்பட்டு வந்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இல்லாத காலங்களில் மட்டும் சண்டே லீடர் சற்று விதிவிலக்காக இருந்தது என்று சொல்லலாம்.

மகிந்த ராஜபக்சவின் அரசில் ஊடகவியலாளர்களின் சுதந்திரம் ஒட்டுமொத்தமாகப் பறிக்கப்பட்டு விட்டது. நேரடியான தணிக்கைமுறை பெருமளவுக்கு இல்லாவிட்டாலும் பத்திரிகை ஆசிரியர்களையும் ஊடகவியலாளர்களையும் நேரடியாகவே எச்சரிப்பது, அச்சமூட்டுவது ஆகிய நடவடிக்கைகளால் ஊடகத் துறைக்குப் பெரும் வாய்ப்பூட்டுப் போடப்பட்டுள்ளது. போரைப் பற்றிய தகவல்களையும் இராணுவத்தின் “குரல் தரவல்ல அதிகாரி” அவ்வப்போது தருகிற செய்திகளையும் மட்டும்தான் இலங்கை ஊடகவியலாளர்கள் எழுத வேண்டும் பிரசுரிக்க வேண்டும் என்ற நிலை இப்போது உள்ளது. இவற்றைச் சற்று மீறினாலும் ஊடகவியலாளர்கள் கொல்லப்படுகிறார்கள் (லசந்த விக்ரமதுங்க) அல்லது அடித்து நொறுக்கப்படுகிறார்கள் (கீத் நொயார் - நேசன் ஆங்கில வாரஇதழ் போரியல் ஆய்வாளர்) அல்லது நாட்டைவிட்டு வெளியேறுகிறார்கள் (ரோஹித பாசண ஹிரு பத்திரிகை ஆசிரியர், நடராசா குருபரன், சூரியன் திவி செய்தி முகாமையாளர்).

பிரபல ஆங்கிலப் பத்திரிகையான சண்டே ரைம்ஸ்இன் பத்தி எழுத்தாளரும் போரியல் ஆய்வாளருமான இக்பால் அத்தாஸ் சென்ற வாரம் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார். அத்தாஸ் இலங்கை ஊடகங்களுக்கு மட்டுமல்லாமல் வெளிநாட்டு ஊடகங்களுக்கும் Jane's Defence Weekly போன்ற சஞ்சிகைகளுக்கும் தொடர்ச்சியாக எழுதி வருபவர். ஊடகத் துறைக்காகச் சிறப்புப் பரிசுகள் பல பெற்றவர். இக்பால் அத்தாஸ் இலங்கைப் படையினருக்கும் அவர்களுடைய போருக்கும் ஆதரவான ஒரு ஊடகவியலாளர்தான். போரில் அரசு வெல்ல வேண்டும் என்பது அவரது விருப்பம் மட்டுமல்ல அவருடைய வேண்டுகோளுமாகும். எனினும் போர் நிலவரங்கள் பற்றியும் இரு தரப்புக்கும் ஏற்பட்டு வருகின்ற இழப்புகள் பற்றிச் சரியான விடயங்களை இயன்றவரை முழுமையாகவும் உண்மையாகவும் எழுத முயல்பவர் அவர்.

“பலியாகிவருகின்ற இராணுவத்தினரின் எண்ணிக்கை மிக அதிகம் எனினும் அந்த எண்ணிக்கையை என்னால் குறிப்பிட முடியாமல் இருக்கிறது. அதற்கான காரணம் வாசகர்களுக்குப் புரியும்” என்று எழுதியமைக்காகவே நாட்டைவிட்டு விரட்டப்பட்டுள்ளார். தன்னுடைய 40 வருட கால ஊடகத் துறை வாழ்வில் இவ்வளவு மோசமான நிலையைத் தான் ஒருபோதுமே சந்தித்திருக்கவில்லை. இவ்வளவு பயங்கரமான அச்சத்திற்கும் தான் இதுவரை ஆட்பட்டதில்லை என்றும் சொல்கிறார் இக்பால் அத்தாஸ்.

ஈழத்தமிழர்களின் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் இந்தப் போர் உலக அளவில் மறக்கப்பட்ட ஒன்றாகும். கொல்லப்படுவோர் எண்ணிக்கையிலும் மானிட அவலத்திலும் உலகின் மிக மோசமான போர் என்று சர்வதேசத் தொண்டு நிறுவனங்களாலும் மனித உரிமை அமைப்புகளாலும் வர்ணிக்கப்படும் இந்தப் போர் பற்றிய சரியான விவரங்களையும் பொதுமக்களுக்கு ஏற்படும் பாரிய இழப்புகள் பற்றிய தகவல்களையும் களத்திலிருந்தும் தளத்தில் இருந்தும் தருவதற்கு எந்தச் சர்வதேச ஊடகமும் இல்லை.

ஊடகவியலாளர்களையும் தொண்டு நிறுவனங்களையும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனங்களையும் போர்ப் பகுதிகளிலிருந்து அரசாங்கம் எப்போதோ வெளியேற்றிவிட்டது. எந்த ஊடகவியலாளருமே அங்கே செல்வதற்கு அரசாங்கம் தடைவிதித்திருக்கிறது. உடன்படுகையாளர்களாகக்கூடப் பத்திரிகையாளர்கள் அங்கு இல்லை.

இந்த நிலையில் இப்போது உக்கிரமாக இடம்பெற்று வரும் வன்னிப் போர் குறித்து இந்தியாவின் ஆங்கில ஊடகங்களும் சர்வதேசச் செய்தி நிறுவனங்களான ஏ.பி,ஏ.எப்.பி, ரொய்ட்டர் போன்றவையும் தருகிற “தகவல்கள்” நிதானமாகச் சிந்திக்கிற எந்த வாசகரையும் ஊடகவியல், செய்தி அறிக்கையிடல், ஊடகவியல் அறம் பற்றிய கேள்விகளை உரத்த குரலில் எழுப்பத் தூண்டும்.

இதுவரை காலப் போரில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 70,000 என்பதே இந்த நிறுவனங்களின் கணக்கீடு. கடந்த பல ஆண்டுகளாக மாறாமல் இருந்துவந்த 65,000 என்பது இப்போது சற்றுக் கூடியுள்ளது. எனினும், Harvard Medical School, Washington University ஆய்வாளர்களின் தகவலின் படி (Ziad Obermeyer, Christopher J.L. Murray, Emmanuela Gaidou) இதுவரையான மோதல்களில் 2,15,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 24,000 புலிகளையும் அதே எண்ணிக்கையான படையினரையும் விட்டுவிட்டால் மற்றைய அனைவரும் பொதுமக்கள்தான். எனினும், இனத்துவ முரண்பாட்டின் மூலம், உண்மைத் தகவல்கள், பின்னணி பற்றியெல்லாம் எந்த அக்கறையும் இல்லாத சோம்பேறிப் பத்திரிகையாளர்களும் அவர்களுடைய அசையாப் புள்ளிவிவரங்களும்தான் பெரும் செய்தி நிறுவனங்களின் மையம்.

இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்குச் சுதந்திரமாகப் போய்வர எத்தகைய தடைகளும் இல்லாத காலத்திலும்கூட ஊடகவியலாளர்கள் பலர் இப்பகுதிகளுக்குச் செல்வதில்லை. கொழும்பின் சொகுசான குடியிருப்புகளில் வாழ்ந்தபடி இராணுவத்தின் குரல் தரவல்ல அதிகாரிகள் சொல்வதை அப்படியே திருப்பி எழுதி அனுப்பிவிடுவதே வழமையாக இருந்து வருகிறது. வாய்பாடுபோல ‘இப்படி இராணுவம் சொல்கிறது’ என்ற ஒரு வரியைச் சேர்த்துவிடுவது மட்டும் ஊடக அறத்தை நியாயப்படுத்தும் என்பது அவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. எனினும் இது போன்ற பத்திரிகைகளும் வேறு பல இணையதளங்களும் இராணுவம் தருகின்ற செய்திகளை அப்படியே எழுதிவிடுவது மட்டுமன்றி அவற்றின் செய்தித் தலைப்புகள்கூட இலங்கை இராணுவத்தின் தகவல் அடிப்படையிலேயே எழுதப்படுகின்றன. ஈராக் யுத்த காலகட்டங்களில் ஊடகத் துறையைக் கட்டுப்படுத்தவும் உடன்படுகையாளர்களாகவும் மாற்றுவதற்கு என்னென்ன முயற்சிகளை எல்லாம் செய்ததோ அதே முயற்சிகளையும் அதே நடவடிக்கைகளையும் நாங்கள் இப்போது பார்க்க முடிகிறது. ஊடகத் துறையின் அடிப்படையான அறமான செய்தி மூலங்களைச் சரிபார்த்தல் மீளவும் மீளவும் உறுதிப்படுத்தல், பக்கச்சார்பின்மை, பொதுமக்களின் நலன் போன்றவை காற்றில் பறக்கவிடப்படுகின்றன.

இந்தியாவின் ஆங்கில ஊடகங்களைப் பொறுத்த வரை ஹிண்டு ஆங்கில நாளிதழ் இலங்கைப் போர் பற்றியும் ஈழத்தமிழர்களின் தேசிய இனச் சிக்கல் பற்றியும் தருகிற செய்திகளும் வெளியிடும் கருத்துகளும் கட்டியெழுப்பும் மாயைகளும் ஊடக அறத்தைக் குரூரமான களிப்போடு மீறுகிற ஒரு நடவடிக்கையாக இருக்கிறது. ஹிண்டு பத்திரிகையின் இந்த நிலைப் பாட்டுக்கு நீண்ட வரலாறு இருந்தாலும் அண்மையில் இடம்பெற்ற இரண்டு நிகழ்வுகள் பற்றிக் குறிப்பிட வேண்டியிருக்கிறது.

கிளிநொச்சியை இலங்கைப் படையினர் ஆக்கிரமித்த பிற்பாடு இலங்கையின் தெற்குப் பகுதிகளில் நடைபெற்ற கொண்டாட்டங்களையும் களிக்கூட்டுகளையும் வரவேற்றுப் பேசிய அதிபர் மகிந்த ராஜபக்ச “தமிழ் பொதுமக்கள் ஒருவரையாவது கொல்லாமலேயே இந்தச் சாதனையை நாம் நிகழ்த்தியிருக்கிறோம்” என்று குறிப்பிட்டார். கிளிநொச்சி வெற்றிக்குப் பிற்பாடு இலங்கை அதிபரோடு தொலைபேசியில் பேட்டி கண்ட என்.ராம் அவர்களிடம் இலங்கை அதிபர் இதே கருத்தைத் தெரிவித்திருந்தார் “அப்பாவிப் பொதுமக்கள் ஒருவரையாவது கொல்வதில்லை” (zero civilain casualty policy) என்பதே எனது கொள்கை என மீண்டும் வலியுறுத்தினார் இலங்கை அதிபர். ஏராளமான பொதுமக்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டமையும் ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தமையும் மருத்துவ வசதிகளின்றி நூற்றுக்கணக்கானோர் இறந்தமையும் பரவலாக எல்லோருக்கும் தெரிந்த செய்தி என்றாலும் இவை பற்றிய எந்த உணர்வுமில்லாது இலங்கை அதிபரின் கருத்தை ஆமோதிக்கும் வகையில் ஹிந்து நாளிதழ் செய்தியைப் பிரசுரித்திருந்தது. கொல்லப்பட்டவர்களில் எவருமே பொது மக்கள் அல்ல என்று வாதிடுவதானால் எல்லாப் பொதுமக்களும் புலிகள்தாம் என்பதைவிட வேறு தர்க்கம் இருக்க முடியாது. இலங்கை அதிபரும் இலங்கை அரசும் இந்த நிலைப்பாட்டில் இருப்பது பற்றி எவருக்கும் சந்தேகம் இருக்கத் தேவையில்லை. ஆனால் பொறுப்பான ஊடகங்கள் என்று பெயரெடுத்தவை இப்படிச் செய்ய முடியுமா?

இலங்கையில் சுதந்திர ஊடக இயக்கம் என்பது ஊடக சுதந்திரத்திற்காகப் போராடுகின்ற ஒரு முக்கியமான அமைப்பாகும். இதனுடன் சேர்ந்து இயங்கும் அமைப்புகளான உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், முஸ்லிம் மீடியா போரம், ஊடகத் தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு என்பன ஊடக சுதந்திரத்தை முன்னெடுப்பதற்காகத் தொடர்ச்சியாக நடாத்திவந்த போராட்டங்கள் மிகவும் துணிச்சலானவை மட்டுமல்ல, உலகளாவிய ஆதரவையும் பெற்றுவருபவை. மகிந்த அரசு பதவிக்கு வந்த பிற்பாடு சிறிலங்கா மாஸ் மீடியா சொசைற்றி (Sri Lanka Mass Media Society) என்னும் அமைப்பைத் தோற்றுவித்தது. அரசினதும் ஆளுங்கட்சியினதும் எடுபிடிகளாலும் அடிவருடிகளாலும் தொண்டரடிப் பொடிகளாலும் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு நவம்பர் 2008இல் ஒரு விருது விழாவை நடாத்தியது. அந்த விருது விழாவில் மிகச் சிறந்த இலங்கைப் பத்திரிகையாக சண்டே ரைம்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆசியாவில் சிறந்த ஊடகவியலாளர் என்ற விருது என். ராமுக்கு வழங்கப்பட்டது. சண்டே ரைம்ஸ் வார இதழ் இந்த விருதை வாங்க மறுத்ததோடு அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்குகின்ற எந்த ஊடக நிறுவனமும் தருகிற விருதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்றும் ஊடகவியலாளர்மீது நடைபெறும் தாக்குதல்களை மூடிமறைப்பதற்காகவே இந்த விழாவும் விருது வழங்கலும் நடைபெறுகின்றன என்று காட்டமாக விமர்சித்திருந்தது. ஆனால் தனக்கான விருதை நேரில் சென்று பெற்றுக்கொண்டது மட்டுமல்லாமல் “சமாதான முன்னெடுப்புகளில் ஊடகத் துறையின் பொறுப்பு” என்னும் பொருள் பற்றிப் பேருரை ஆற்றினார் என். ராம். தாராளவாத ஜனநாயகத்தின் ஊடக முகத்திற்கும் இரட்டை நிலைப்பாட்டிற்கும் இதைவிடச் சிறப்பான தற்கால எடுத்துக்காட்டுகள் வேறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

3

படுகொலைகளுக்கும் சித்திரவதைகளுக்கும் அப்பால் இலங்கையின் ஊடகச் சூழல் சார்ந்து இன்னுமொரு முக்கியமான கேள்வியையும் நாங்கள் எழுப்ப வேண்டியிருக்கிறது. ஒரு ஊடகவியலாளர் கட்சி சார்ந்து அல்லது அரசு சார்ந்து அல்லது இயக்கம் சார்ந்து செயற்படுகிறபோது அவர் கொல்லப்பட்டால் அல்லது காணாமல் போனால் அதனை நாங்கள் எப்படி அணுகுவது?

சின்ன பாலா என்றழைக்கப்படும் பாலநடராஜ ஐயர் முன்னாள் ஈரோஸ் போராளி, எழுத்தாளர், இளையவன் என்ற பெயரில் பல நல்ல சிறுகதைகள் எழுதியிருப்பவர். பிற்பாடு டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இயங்குகின்ற ஈபிடிபியின் வார இதழான தினமுரசுக்குப் பொறுப்பாக இருந்தவர். இவர் விடுதலைப் புலிகளால் 2004 ஒகஸ்ட் மாதம் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

2007 நவ. 27 அன்று புலிகளின் குரல் வானொலி நிலையத்தை இலங்கை விமானப்படை குண்டு வீசித் தாக்கியபோது இசைவிழி செம்பியன், ரி. தர்மலிங்கம், சுரேஸ் என்ற மூன்று ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டார்கள்.

இவர்களைவிடக் கேதீஸ் லோகநாதன் (சத்யா என்ற பெயரில் பத்தி எழுத்தாளராக இருந்தவர்; மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தில் பணிபுரிந்து பின்னர் இலங்கை அரசின் சமாதானச் செயலகத்தில் உயர் பதவியில் சேர்ந்தவர்) போன்ற பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

தங்களுடைய அமைப்புக்குச் சாதகமாகச் செயல்பட்டவர்கள் அல்லது தங்களது அமைப்பை ஆதரித்தோர் என்ற காரணங்களுக்காக மட்டுமே சில ஊடகவியலாளரின் படுகொலைகளைக் கண்டிப்பதும் ஏனைய படுகொலைகளையிட்டு மௌனமாக இருப்பது அல்லது நியாயப்படுத்துகிற ஒரு போக்கு நம் மத்தியில் ஆழமாக இருக்கிறது. அல் ஜசீரா மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள், பலஸ்தீன ஊடகத் துறையின் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் போன்றவற்றைக் காரணம் காட்டி இவையெல்லாம் தவிர்க்க முடியாதவை என்று அமைதிகொள்ள முடியாது.

எந்த அமைப்பு சார்ந்து இருந்தாலும் ஊடகவியலாளர்களின் படுகொலை அனுமதிக்கப்பட முடியாதது. நியாயப்படுத்தப்பட முடியாதது. இது பொதுவான அரசியல் அறத்தின்பால்பட்டது மட்டுமல்ல, போர் அறத்தின்பால்பட்டதுமாகும். தமிழீழத் தேசியத்தை உணர்வுபூர்வமாக வலியுறுத்துபவர்களும் விடுதலைப் புலிகளை விமர்சனமற்று ஆதரிப்பவர்களும் நிமலராஜன், நடேசன், சிவராம் ஆகிய ஊடகவியலாளர்களின் கொலைகளைப் பற்றி மிகுந்த கண்டனம் தெரிவித்தார்கள். நிமலராஜனும் நடேசனும் சிவராமும் ஒரு வகையில் ஈழத்தமிழ்த் தேசியத்தின் ஊடகத் தியாகச் சின்னங்களாக மாறி விட்டார்கள். விடுதலைப் புலிகளாலும் ஏனைய இயக்கங்களாலும் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்களைப் பற்றி இவர்கள் கண்டுகொள்வது கிடையாது. மறுபுறமாக விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகிற கட்சிகளும் அமைப்புகளும் புலிகளால் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை மட்டும் தமது தியாகச் சின்னங்களாக உயர்த்திப் பிடிக்கிறார்கள். மற்ற தரப்பையும் மாற்றுத் தரப்பையும் சேர்ந்த ஊடகவியலாளர்களைக் கொல்வது அல்லது அவர்கள் கொல்லப்படும்போது அதை நியாயப்படுத்துவது வழமையாகிவிட்டது.

ஊடகவியலாளர்கள் என்ற முறையில் எத்தரப்பைச் சார்ந்த ஊடகவியலாளர்களும் கொல்லப்படுகிறபோது அல்லது காணாமல்போகிறபோது அதற்கெதிராகக் குரல் எழுப்ப வேண்டிய தார்மீகப் பொறுப்பு எல்லா ஊடகவியலாளர்களுக்கும் இருக்க வேண்டும். இது இலட்சியம் சார்ந்த நிலைப்பாடு மட்டுமல்ல அரசியல் கடப்பாடும் ஆகும்.

இலங்கைச் சூழலில் இப்போது இவற்றை எதிர்பார்ப்பவர்கள் யாராவது இருக்கிறார்களா?

நன்றி: காலச்சுவடு (பெப்ரவரி, 2009)

(மேலேயுள்ள அழுத்தம் என்னுடையவை -டிசே)

No comments: