16.04.2009
புலம் பெயர்ந்த
என் ஈழத்து நண்பர்களை
இப்போது நான் சந்திப்பதில்லை
அவர்களது மின்னஞ்சல்களை
நான் திறப்பதில்லை
கணினியின் உரையாடல் அறையில்
அவர்களது வணக்கங்களுக்கு
இப்போது நான் பதில் வணக்கம் சொல்வதில்லை
வரலாற்றில் இதற்கு முன்பும்
இது போல்தான் இருந்ததா
அழிவின் மௌனங்கள்?
*
நிறைய பார்த்தாகிவிட்டது
சிதைக்கப்பட்ட உடல்களின் புகைப்படங்களை
நிறைய காண்பித்தாகிவிட்டது
படுகொலைகளின் படச்சுருள்களை
நிறைய படித்தாகிவிட்டது
கொரில்லா போர் முறையின் யுத்த தந்திரங்களை
வரலாற்றில்
இதற்கு முன்பும் இப்படித்தான் சொல்லப்பட்டதா
விடுதலையின் கதைகள்?
*
முப்பதாண்டுகளின் குருதிவெள்ளம்
ஒவ்வொரு சதுரமைலாகச் சுருங்கி
இப்போது ஒரு கண்ணீர்த்துளியாக
எஞ்சி விட்டது
தோழி
நாம் இன்று அருந்துகிற
ஒவ்வொரு கோப்பை மதுவும்
உன் விடுதலைக்காக இறந்தவர்களின்
குருதியால் நிரம்புகிறது
அது மரணத்தின்
எல்லையற்ற போதையை
நம் இதயத்தில் கலக்கிறது
வரலாற்றில் இதற்குமுன்பும்
இப்படித்தான் அணைந்ததா
விடுதலையின் சுடர்கள்?
*
கொலைகாரர்கள்
தன்னம்பிக்கையுடன்
இறுதி வெற்றியை நோக்கி
முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்
சாத்தான்கள்
மர்மப் புன்னகையுடன்
வேறு எங்கோ பார்த்தபடி
பேச்சுவார்த்தைக்கு அழைக்கின்றன
நீதி தேவதைகளோ
இதைப்பற்றிய தகவல்கள்
இன்னும் தமக்கு வரவில்லை என்கின்றனர்
வரலாற்றில்
இதற்கு முன்பும்
கொலைக்களங்களில் மனிதர்கள்
இப்படித்தான் கைவிடப்பட்டார்களா?
*
வெவ்வேறு தலைநகரங்களில்
கண்டன ஊர்வலங்கள் நிறைவுற்று
தனிமையின் இருளில்
என் ஈழத்து நண்பர்கள் வீடு திரும்புகிறார்கள்
அரசியல் சூதாடிகள்
தங்கள் சீட்டுக் கட்டுகளை
கலைத்துக் கலைத்து அடுக்குகிறார்கள்
நான் ஒரு கூட்டுப் பிரார்த்தனையில்
பங்கெடுத்துவிட்டு
சாலையோரம் அமர்ந்து மூத்திரம் போகிறேன்
வரலாற்றில்
இதற்குமுன்பும் இப்படித்தான்
சகோதரத்துவம் நிலைநாட்டப்பட்டதா?
*
அமைதிக்குப்பின்
கருணை எல்லா முனைகளிலும்
ரத்து செய்யப்படுகிறது
புதுப்பிக்கப்படாத விஸாக்கள்
நிறுத்தப்படும் உதவித் தொகைகள்
காலி செய்யப்படும் அகதி முகாம்கள்
எங்கும்கொண்டு சேர்க்காத திரும்பும் பாதைகள்
மயான பூமியை நோக்கிக்
கிளம்புகிறது
இறுகிய முகங்களுடன்
சமாதானத்தின் மரணக் கப்பல்
வரலாற்றில் இவ்வாறு ஒடுக்கப்பட்டவர்கள்
இதற்குமுன்பு எப்போதாவது பறவைகளாக மாறி
வனாந்தரங்களுக்குள் பறந்து சென்றிருக்கிறார்களா?
*
புலம் பெயர்ந்த
என் ஈழத்து நண்பர்கள்
இப்போது கொல்லப்பட்டவர்களை
நினைவுகூர்வதில்லை
நம்பிக்கையூட்டும்
வதந்திகள் எதையும்
நம்புவதில்லை
யுத்தமுனைச் செய்திகளைப்
படிப்பதில்லை
அவர்கள் ஒரு பைத்தியக்காரனின் முகத்தை
சுவரில் வரைகிறார்கள்
குழந்தைகளின் இதயத்தைத்
தின்பவனின் பெயரை
சுவரில் எழுதுகிறார்கள்
ஒரு அபத்த தியாகத்தின் கதையை
எஞ்சியிருக்கும் தம் குழந்தைகளுக்குச்
சொல்லாமல் மறைக்கிறார்கள்
வரலாறு
இதற்குமுன்பும் இப்படித்தான்
ஒரு பைத்தியக்காரவிடுதியாக இருந்ததா?
*
நன்றி: உயிர்மை & Charu Online
2 comments:
//புலம் பெயர்ந்த
என் ஈழத்து நண்பர்களை
இப்போது நான் சந்திப்பதில்லை//
நான் இப்பொழுது தொலைபேசுவது கூட இல்லை.
:((((((
ஆவ்!
ஆனால்,
அதைப் பற்றி
ஒரு கவிதை(!)
எழுதுவேன்.
கை தட்டுங்கள்
Post a Comment