Thursday, May 28, 2009

என்னதான் செய்வ‌து ந‌ண்ப‌ர்க‌ளே?

(ச‌யந்த‌னின் இப்ப‌திவுக்கு -ச‌ய‌ந்த‌னின‌தும், பெய‌ரிலியின‌தும் பின்னூட்ட‌ங்க‌ளைத் தொட்டு- எழுத‌த் தொடங்கிய‌து ...நீண்ட‌தாக‌வும் த‌னிப்ப‌ட்ட‌ விட‌ய‌ங்க‌ளுமாய் போன‌தால் இங்கே த‌னிப்ப‌திவாய் இடுகின்றேன்...)


என்னையே விம‌ர்சித்தலும், இய‌லாமையும், இன்ன‌ பிற‌வும்

"புலிகள் இயக்கம் தோல்வியுற்றது மே 18 ஆக இருக்கலாம். ஆனால் உண்மையென்னவெனில் அது தன்னை கடைசி வரை நம்பியிருந்த தன்னோடிருந்த மக்களிடம் தோல்வியுற்று மாதங்களாயிற்று என்பதுதான். அந்தக் கடல்களும் காடுகளும் நிறையக் கதைகளை வைத்திருக்கின்றன. அதனை அவைகளே சொல்லட்டும்."
(ச‌ய‌ந்த‌னின் ப‌திவிலிருந்து...)

இர‌ண்டு அல்ல‌து இர‌ண்ட‌ரை ஆண்டுக‌ளுக்கு முன், வ‌ன்னிக்குள் இருந்த‌வ‌ர்க‌ள்/த‌ப்பியோடிவ‌ந்த‌வ‌ர்க‌ளின் க‌தைக‌ளைக் கேட்ட‌ பொழுதில் இதையே நான் உண‌ர்ந்திருக்கின்றேன். அப்போது என‌க்கு நெருக்க‌மான‌ ந‌ண்ப‌ர்க‌ளிட‌மும், இந்த‌ச் சூழ‌ல் என‌க்கு இந்திய‌ இராணுவ‌ கால‌த்தில் த‌மிழ்த் தேசிய‌ இராணுவ‌ம் மாதிரியான‌ தோற்ற‌ப்பாட்டைத் த‌ருகின்ற‌து என்றே கூறியிருக்கின்றேன். இதுதான் புலிக‌ளிட‌ம் இறுதிக்கால‌ம், ஒன்று எதையாவ‌து சாதிப்பார்க‌ள் அல்ல‌து த‌மிழ்த் தேசிய‌ இராணுவ‌ம் மாதிரி ம‌க்க‌ளிட‌மிருந்து முற்றாக‌ அந்நிய‌ப்ப‌ட்டு, சுவ‌டுக‌ளின்றிப் போக‌ப் போகின்றார்க‌ள் என்றும் கூறியிருக்கின்றேன்.

ஏன் இவ‌ற்றையெல்லாம் முன்பு எழுத்தில் ப‌திவு செய்ய‌வில்லை என்று ஒருவ‌ர் கேள்வி எழுப்பினால், 'தெரிந்த‌ பிசாசைவிட‌ தெரியாத‌ பிசாசு இன்னும் கொடுர‌மான‌து' என்று என‌க்கு நானே க‌ற்பித்த‌ கார‌ண‌மும், புலிக‌ளோடு ம‌ட்டுமே நான் ஈழ‌த்தில் வ‌ள‌ர்ந்த‌ சூழ‌லில் வ‌ந்த‌ ம‌ன‌த்த‌டையாக‌வும் இருக்க‌லாம்.

இத‌னால், நானொருபொழுதில் சி.புஸ்ப‌ராசா உட்ப‌ட‌ புல‌ம்பெய‌ர்ந்த‌ ப‌ல‌ EPRLF தோழ‌ர்க‌ளிட‌ம், த‌மிழ்த் தேசிய‌ இராணுவ‌ம் குறித்து காட்ட‌மாய் எழுதிய‌து/பேசிய‌து மாதிரி, வ‌ன்னியிலிருந்து எங்க‌ளுக்கு அடுத்துவ‌ரும் ச‌ந்த‌தி புலிக‌ளை முன்வைத்துக் கேட்கும்போது நான் கூனிக்குறுகி அவ‌மான‌ப்ப‌ட்டே நிற்க‌வேண்டிவ‌ரும் என்ப‌தையும் நான்றிவேன். அந்த‌ப் பெரும் பிழையிலிருந்து என்றைக்குமே த‌ப்ப‌முடியாது என்ப‌தும் உண்மையே.
.....

ஒரு இய‌க்க‌ம் அழிய‌ப்போகின்ற‌து/அழிந்துவிட்ட‌து என்ப‌த‌ற்காய் த‌ப்பியோட‌வும் இல்லை. இங்கு அண்மையில் ந‌ட‌ந்த‌ அநேக‌மான‌ எல்லாக் க‌வ‌ன‌ ஈர்ப்புப் போராட்ட‌ங்க‌ளில் க‌ல‌ந்து கொண்டிருக்கின்றேன். ம‌க்க‌ளை முன்வைத்து தொட‌ங்கிய‌ ம‌னித‌ச்ச‌ங்கிலியிலிருந்து, உட‌ன்பாடேயில்லாது புலிக்கொடிக‌ளும், புலித்த‌லைவ‌ரின் ப‌ட‌ங்க‌ளை முன்னிறுத்திய‌ போராட்ட‌ங்க‌ள் வ‌ரை, ப‌ங்குப‌ற்றியிருக்கின்றேன். ஒன்றுமே செய்யாது எல்லோரும் அயோக்கிய‌ர்க‌ள் என்று வாளாவிருப்ப‌தைவிட‌, ஏதோவொரு வ‌கையில் அங்கே கொல்ல‌ப்ப‌டும் ம‌க்க‌ளையும், க‌ட்டாய‌மாக‌ச் சேர்க்க‌ப்ப‌ட்ட‌ போராளிக‌ளையும் காப்பாற்ற‌வேனும் ஒரு சமாதான‌ச் சூழ‌ல் கொண்டுவ‌ர‌ப்ப‌டுப‌டுத‌ல் முக்கிய‌மென‌வே ந‌ம்பினேன். அதேவேளை ஒரு ப‌க்க‌ச் சார்புச் செய்திக‌ளை ம‌ட்டுமே பேசினாலும், உண்மையான‌ அர்ப்ப‌ணிப்போடும், துணிச்ச‌லோடும் முன் நின்ற என்னைவிட‌ வ‌ய‌து குறைந்த‌ இளைய‌வ‌ர்க‌ளைக் க‌ண்ட‌போது, நான் இவ‌ர்க‌ளுக்கு முன் எதுவும‌ற்ற‌வ‌னே என‌ வெட்க‌ம‌டைந்த‌தும் உண்டு. இந்த‌ அற்புத‌மான‌ அர்ப்ப‌ணிப்புள்ள‌ இளைய‌வ‌ர்க‌ளின் ந‌ம்பிக்கைக‌ள், த‌னிப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளின் அர‌சிய‌ல் ஆட்ட‌ங்க‌ளில் ப‌க‌டைக்காய்க‌ளாக்கி - நான் முற்றாக‌ வளாக‌ கால‌த்தின் பின் வெறுத்து ஒதுங்கிய‌போல‌- அவ‌ர்க‌ளுக்கும் நிக‌ழ்ந்திவிட‌க்கூடாதென‌ க‌வ‌லைப்ப‌ட்டும் இருக்கின்றேன். ம‌க்க‌ளை முன்வைத்து நட‌த்திய‌ போராட்ட‌த்தில் முத‌ன்முத‌லாய் நானறிந்து ‍ சோமாலிய‌வ‌ர்க‌ளுட‌ன் சேர்த்து ந‌ட‌த்திய‌ போராட்ட‌த்தில் புலிக்கொடிக‌ள் ஏந்த‌ப்ப‌ட்ட‌போது, உட‌ன்பாடில்லை என்ப‌தால், ஒரு ஓர‌த்தில் நின்று ம‌னித‌ப்ப‌டுகொலைப் பதாதைக‌ளை வைத்துக்கொண்டு, ஈழ‌த்தில் ந‌டைபெறும் விட‌ய‌ங்க‌ள் குறித்த‌ துண்டுப்பிர‌சுர‌ங்க‌ளை வ‌ருகின்ற‌/போகின்ற‌ பிற‌ ம‌க்க‌ளிட‌ம் கொடுத்து வ‌ந்திருக்கின்றேன். ரொறொண்டோவில் ந‌ட‌ந்த‌ இர‌ண்டாவ‌து ம‌னித‌ச்ச‌ங்கிலியில் வெளிப்ப‌டையாக‌ புலிக‌ளைப் ப‌ற்றிய‌ கோச‌ங்க‌ளும் கொடிக‌ளும் ஏற்ற‌ப‌ப‌டுவ‌து தெரிந்தும் அதில் ப‌ங்குப‌ற்றியிருக்கின்றேன் ம‌ட்டுமில்லாது தொட‌ர்ச்சியாக‌ சென்ற‌ வெள்ளிகிழ‌மை ந‌ட‌ந்த‌ கொலையுண்டுபோன‌ ம‌க்க‌ளுக்கும் போராளிக‌ளுக்கும் ந‌ட‌ந்த‌ அஞ்ச‌லி நிக‌ழ்ச்சி வ‌ரை ப‌ங்குப‌ற்றியே இருக்கின்றேன். (அந்நிக‌ழ்விலும் ம‌க்க‌ளை இன்னும் இருண்மையாக‌ வைக்க‌ விரும்பும், நிக‌ழ்வை ஒழுங்கு செய்ப‌வ‌ர்களின் பித்த‌லாட்ட‌த்தையே, 'உண்மைக‌ளைப் பேசுவோம்' என்றொரு த‌லைப்பில் இங்கே ப‌திந்திருக்கின்றேன்)

இர‌ண்டாவ‌து ம‌னித‌ச்ச‌ங்கிலி பெருந்திர‌ளான‌ ம‌க்க‌ளோடு நட‌ந்த‌போது, என்னைப் போல‌வே ம‌ன‌நிலையில் இருந்த‌ ந‌ண்ப‌ன் (அவ‌ரும் ப‌ங்குப‌ற்றியிருந்தார்) இர‌வு அனுப்பிய‌ மின்ன‌ஞ்ச‌லில், We want Freedom என்கிறார்க‌ள்....யாரிட‌மிருந்து? என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதுவே என‌து நிலைப்பாடாக‌வும் இருந்த‌து. அந்த‌வ‌கையிலே வ‌ன்னியிலிருந்து த‌ப்பிவ‌ந்த‌ ம‌க்க‌ளின் குர‌ல்க‌ள் சில‌வ‌ற்றை ஆங்கில‌க்க‌ட்டுரைக‌ளிலிருந்து மொழிபெய‌ர்த்தேன். அதுவே என்னை ஆறுத‌ற்ப‌டுத்த‌ என்னால் ஒரள‌வு செய்ய‌க்கூடிய‌தாக‌ இருந்த‌து.

சென்ற‌ வெள்ளிக்கிழ‌மை ந‌ட‌ந்த‌ நினைவ‌ஞ்ச‌லிக்கூட்ட‌த்தில் கூட‌, இற‌ந்த‌வ‌ர்க‌ளுக்கான‌ நினைவேந்த‌லில் கூட‌, மேடையில் பேசிய‌வ‌ர்க‌ள் வீர‌ம் பேசிய‌போது இவ‌ர்க‌ளை உதைத்தால் என்ன‌வென்று தோன்றிய‌து. அதைவிட‌ ஆபாச‌மாய் அங்கு, 'ந‌ம்புங்க‌ள் த‌மிழீழ‌ம் நாளை பிற‌க்கும்' ஒருவ‌ர் பாடிய‌போது (அவ‌ர் அதைப் பாட‌முன்ன‌ர் பேசிய‌ உண‌ர்ச்சிவ‌ச‌ப்ப‌ட்ட‌ சொற்க‌ளுக்காக‌வே இவ‌ரைக் கொஞ்ச‌ நாட்க‌ளுக்கு வாயைக்க‌ட்டி ஒரு அறைக்குள் விட‌வேண்டும் என்று நினைத்தேன்) இனி என‌க்கு அங்கே நிற்ப‌த‌ற்கு எதுவுமே இல்லையேன‌ அந்த‌ நிக‌ழ்வை விட்டு வெளியேறிவிட்டேன். சொல்லுங்க‌ள் ந‌ண்ப‌ர்களே , இந்த‌ப் பாட‌லை நான் என‌து ஏழு எட்டு வ‌ய‌திலிருந்து கேட்டுக்கொண்டிருக்கின்றேன்....இந்த‌ நாளை என்ப‌து 20 வ‌ருட‌ங்க‌ளாகியும் வ‌ர‌வில்லையே? அதுவும் இன்றைய‌ ஒரு அப‌த்த‌ச் சூழ்நிலையில் எப்ப‌டி இவ‌ர்க‌ளால் வெட்க‌மின்றிப் பாட‌முடிகிற‌து.?ம‌க்க‌ளை மாந்தைக‌ளாக்கி வைத்திருப்ப‌து என்ப‌த‌ற்கு, இன்னும் 20 வ‌ருட‌ங்க‌ளுக்கு இவ‌ர்க‌ளுக்கு திட்ட‌ம் இருக்கிற‌து போலும்.

......
இங்கே புலிக‌ளை ம‌ட்டுந்தான் அதிக‌ம் க‌தைக்கின்றேன். எங்கே புலியெதிர்ப்புக் கூட்ட‌ங்க‌ளைப் ப‌ற்றி ஒன்றும் சொல்ல‌வில்லை என்று எவ‌ரும் நினைக்க‌க்கூடும். அவ‌ர்க‌ளைப் ப‌ற்றிப் பேசினால், ஒரு நாவ‌லே எழுத‌க்கூடிய‌ அள‌விற்கு அல்ல‌வா விசய‌ம் இருக்கிற‌து. போன‌வ‌ருச‌ம் வ‌ரை ச‌மாதான‌த்திற்கான‌ இந்த‌க் குழு, அந்த‌க் குழு என்று கூட்ட‌ம் போட்டுக்கொண்டிருந்தார்க‌ள். இன்ன‌ திக‌தியில் கூட்ட‌ம் ந‌ட‌க்கிற‌து வாருங்க‌ளென‌ ஒரு அழைப்புப் போட்டு ப‌த்துப் ப‌தினைந்து குழுக்க‌ளின் பெய‌ர் இருக்கும். கூட்ட‌ம் ந‌டைபெற‌ அண்மிக்கும் வார‌ங்க‌ளில் ப‌த்துக் குழுவிலிருந்து எட்டுப் போய், இர‌ண்டு ம‌ட்டுமே எஞ்சியிருக்கும் அட‌ நாசாமாய்ப் போவான்க‌ளே, போர் செய்யத்தான் ப‌த்து வ‌ழியிருக்கும், ஆனால் ச‌மாதான‌ம் என்ப‌து ஒரேயொரு விட‌ய‌ந்தானே....ஏன் ச‌மாதான‌ம் பேச‌க்கூட‌ உங்க‌ளால் ஒற்றுமையாக‌ வ‌ர‌முடிய‌வில்லை என்று நினைப்ப‌துண்டு. அதேயேதான் ச‌மாதான‌ம் பேசுகின்ற‌தாய் கூறுகின்ற‌ ஒரு அமைப்பிட‌ம் கேட்டிருக்கின்றேன். உங்க‌ளால் ஆர‌ம்ப‌த்தில் அறிவிப்புப் போடுகின்ற‌ ப‌த்துக் குழுக்க‌ளைக்கூட‌ ஒன்றாக‌க் கூப்பிட‌ முடிய‌வில்லை, பிற‌கு எப்ப‌டி எங்க‌டை சன‌த்துக்கு ச‌மாதான‌த்தைக் கொண்டு வ‌ருவீர்க‌ளென்ப‌தை ந‌ம்புவ‌தென்று?

அதில் ஒருவ‌ர் சொன்னார், த‌ம்பி எங்க‌ள் குழுதான் உண்மையான‌ சமாதான‌ம் பேசுகிற‌ குழு....ம‌ற்ற‌வ‌ங்க‌ள் எல்லாம் க‌ள்ள‌ங்க‌ள் என்று. உண்மையான‌ ச‌மாதான‌ம் பேசுகிற‌ குழு என்கின்ற‌ உங்க‌ளிட‌ம் ம‌ற்ற‌வ‌ர்க‌ளிட‌மிருந்து பிரித்துப் பார்க்க‌ அப்ப‌டி என்ன‌ வித்தியாச‌மான‌ கொள்கைக‌ள் இருக்கிற‌து என்று கேட்ட‌போது, கொள்கைத் திட்ட‌ங்க‌ள் இணைய‌த்த‌ள‌த்தில் விரிவாக‌ இருக்கின்ற‌து அங்கே சென்று வாசியும் என்றார். ச‌ரி இணைய‌ முக‌வ‌ரி தாருங்க‌ள் என்றால், அவ‌ருக்கு ஒழுங்காய் முக‌வ‌ரி கூட‌ச் சொல்ல‌த் தெரிய‌வில்லை. ஒரு ச‌ராச‌ரியான‌ ம‌னித‌ன் நேருக்கு நேர் கேட்கும்போது த‌ங்களின் கொள்கைக‌ளை விள‌க்க‌முடியாத‌வ‌ர்க‌ள் எல்லாம் ஈழ‌த்திற்கு ச‌மாதான‌ம் கொண்டுவ‌ர‌ப்போகின்றார்க‌ள் என்று இன்னும் நான் ந‌ம்பிக்கொண்டிருந்தால் என்னைப் ப‌ச்சைம‌ட்டையால் தான் அடிக்க‌வேண்டும்.

அது கூட‌ப்ப‌ர‌வாயில்லை...அண்மைய க‌டும் போர்ச்சூழ‌லில் இந்த‌ நாச‌ம‌றுபான‌கள் ஏன் ஒரு ச‌மாதான‌க்கூட்ட‌மும் போடுறாங்க‌ளில்லை என்ப‌தும் என்ப‌தும் விள‌ங்க‌வில்லை. புலியை அழித்தாப்பிற‌கு இர‌கசிய‌க்கூட்ட‌ங்க‌ள் ந‌ட‌த்திக்கொண்டு திரியிறாங்க‌ள் என்றொரு கேள்வி. புலியும் வேண்டாம் இராணுவ‌மும் வேண்டாம் என்றால், நேர‌டியாக‌ ம‌க்க‌ளிட‌ம் வ‌ந்து உங்க‌ளை வெளிப்ப‌டுத்துங்க‌ளேன். ஏன் க‌ள்ள‌மாய் செய்துகொண்டிருக்கிறிய‌ள்? இதைத்தான் முன்பு புலிக‌ளும் செய்தார்க‌ள், இல‌ங்கை இராணுவமும் செய்கிற‌து. சென்ற‌ வார‌ங்கூட‌, முகாங்க‌ளிலுள்ள‌ ம‌க்க‌ளுக்காய் இங்கே இவ‌ர்க‌ள் நிதி/நிவார‌ண‌ம் சேர்க்கின்றார்க‌ள் என்று கேள்விப்ப‌ட்டேன். அங்கு எதுவுமின்றியிருக்கும் ச‌ன‌த்துக்கு நேர‌டியாக‌ப் போய்ச் சேருமென்றால் எந்த‌ப் பிசாசென்றாலும் என்னால் உத‌வி செய்ய‌முடியும். ஆனால் பொதுவாய் எங்கு கூட்ட‌ம் ந‌ட‌க்கிற‌து என்று அறிவிக்கிறார்க‌ளில்லை. இந்த‌ ந‌ம்ப‌ருக்கு தொட‌ர்புகொள்ள‌வும் என்கிறார்க‌ள். என‌க்கு இதையெல்லாம் பார்க்க‌, ப‌தின்ம‌ வ‌ய‌தில் இருப்ப‌வ‌ர்க‌ள் பெற்றோருக்குத் தெரியாம‌ல் த‌ங்க‌ள் காத‌ல‌ன்/காத‌லியோடு க‌ள்ள‌மாய் காத‌லிப்ப‌து போன்றுதான் தெரிகிற‌து. மாற்று அர‌சிய‌ல் பிதாம‌க‌ன்க‌ளே முத‌லில் உங்க‌ளின் diapersஐ க‌ழ‌ற்றி கொஞ்ச‌ம் வ‌ள‌ர்ச்சிய‌டையுங்க‌ள். இதிலும் ஒருவ‌ர் ஒரு ச‌ந்திப்பில் என‌க்கு அட்வைஸ் செய்தார், 'என்னுடைய‌ கொள்கை என்ன‌வென்றால், என்னால் புலிக்கொடிக்குக் கீழேயோ சிங்க‌க்கொடிக்கு கீழேயோ எதையும் செய்ய‌முடியாது; என்று. இன்றைக்குப் பார்த்தால் அவ‌ருடைய‌ ச‌கோத‌ர‌ர் ஒருவ‌ர் சிங்க‌ககொடிக்குக் கீழே ச‌ன‌த்துக்காய்ப் பேசுவ‌தாய் திரிகிறார்.

இவையெல்லாவ‌ற்றுக்கும் அப்பால் ம‌க்க‌ளுக்காய் எதையாவ‌து செய்துகொண்டிருக்க‌வேண்டும் என்று உண்மையாக‌ உழைத்துக்கொண்டிருக்கும் மிக‌ச் சொற்ப‌மான‌ ம‌னித‌ர்க‌ளையும் அறிவேன். அவ‌ர்க‌ளுடான‌ ச‌ந்திப்பில் என்ன‌ நாம் செய்ய‌லாம் என்று கேட்டார்க‌ள்... உட‌ன‌டித்தேவையாக‌ இப்போது முகாங்க‌ளுள்ள‌ ம‌க்க‌ளை வெளியிலிருந்து எவ‌ரும் பார்ப்ப‌த‌ற்கு முழு அனும‌தி வ‌ழ‌ங்க‌ப்ப‌ட‌வேண்டும் (Fully Access to Outsiders) என்று வ‌ற்புறுத்த‌வேண்டும் என்று கூறியிருகின்றேன். எனெனில் இது குறைந்த‌ப‌ட்ச‌ம் அங்கேயிருக்கும் ம‌னித‌ர்க‌ள் கொல்ல‌ப்ப‌டுவ‌தையோ/ காணாம‌ற்போவ‌தையோ த‌டுக்கும். என்ன‌தான் ஆயிர‌ம் விம‌ர்ச‌ன‌ம் இருந்தாலும், இன்றைய‌ பொழுதில் இல‌ங்கை இராணுவ‌த்திட‌மிருந்து, அர‌ச‌ சார்ப‌ற்ற‌ நிறுவ‌ன‌ங்க‌ள் (பால‌ஸ்தீனிய‌ முகாங்க‌ளைப் போல‌) முகாங்க‌ளைப் பொறுப்பேற்க‌வேண்டும். நாம் அந்த‌ நிறுவ‌ங்க‌ள் மூல‌மாக‌ எங்க‌ளால‌ இய‌ன்ற‌ உத‌விக‌ளையோ அல‌ல்து இங்குள்ள‌ அர‌சாங்க‌ளையோ வ‌ற்புறுத்தி நிவார‌ண‌ப் ப‌ணிக‌ளையோ செய்ய‌ச் செய்ய‌லாம். முத‌லில் அங்குள்ள‌ ம‌க்க‌ளின் உட‌ன‌டித்தேவைக‌ளையும், ம‌ன‌ உளைச்ச‌ல்க‌ளையும் தீர்த்த‌ல் மிக‌ அவ‌சிய‌மான‌து.

சென்ற‌ வார‌ம் முழுவ‌தும் இங்குள்ள‌ வைத்திய‌சாலைக‌ளில் அதிக‌மான‌ த‌மிழ‌ர்க‌ள் இத‌ய‌ அழுத்த‌ம் ச‌ம்ப‌ந்த‌மான‌ சிகிச்சைக‌ளைப் பெற்றிருக்கின்றார்க‌ள் என்று ஒரு வைத்திய‌ர் தெரிவித்திருக்கின்றார். இவ்வ‌ள‌வு தொலைவிலிருக்கும் எங்க‌ளுக்கே அங்கே ந‌டைபெறும் நிக‌ழ்வுக‌ள் மிகுந்த‌ ம‌ன‌ அழுத்த‌த்தைத் த‌ருகின்ற‌தென்றால், நேர‌டியாக‌ப் பாதிப்புற்ற‌ ம‌க்க‌ளைப் ப‌ற்றி எதுவுமே கூற‌த்தேவையில்லை.

இன்னொரு ந‌ண்ப‌ர் (த‌மிழ்த் தேசிய‌ கூட்ட‌மைப்பிலுள்ள‌வ‌ர்க‌ளோடு தொட‌ர்பிலுள்ள‌வ‌ர்), இந்தியா அர‌சாங்க‌ள் த‌மிழ்ச் தேசிய‌ கூட்ட‌மைப்பிட‌ம், ஈழ‌த்திலுள்ள‌ ம‌க்க‌ளுக்கான‌ ஒரு தீர்வு முன்வ‌ரைவைக் கேட்டிருந்தாக‌க் கூறினார். இந்தியாவிட‌ம் போவ‌து/கெஞ்சுவ‌து குறித்து நான் எனது க‌டுமையான‌ எதிர்ப்பைத் தெரிவித்தே இருந்தேன். இந்தியாவிட‌ம் கேட்ப‌தை விட‌ ம‌கிந்த‌விட‌ம் நாம் ம‌ன்றாட‌லாம். மகிந்தா கூட‌ ம‌ன‌ம் மாறி எங்க‌ளை உள்ளிழுத்துக் கொள்ள‌க்கூடும், ஆனால் இந்தியா ஒருபோதும் எங்க‌ள் ந‌ல‌ம் சார்ந்து ஒரு துரும்பையும் எடுத்துப் போடாது என்ப‌தைச் சொல்லித்தான் தெரிய‌வேண்டும் என்ப‌தில்லை. இந்தியாவில் என‌க்குச் சிறுவ‌ய‌திலிருந்தே ந்ம‌பிக்கையில்லை. இன்றைய‌ கால‌ம் என‌து ந‌ம்பிக்கை மிக‌ச் ச‌ரியான‌து என்ப‌தை என‌க்கு உண‌ர்த்தியிருக்கிற‌து.

----------
ம‌க்க‌ளுக்காய் எதையாவ‌து செய்ய‌த் துடிக்கும் எவ‌ரோடும் சேர்ந்து இய‌ங்க‌வே விரும்புகின்றேன். இங்குள்ள‌ த‌மிழ் வானொலி/தொலைக்காட்சியை என‌து உய‌ர்க‌ல்லூரிக்குப் பிற‌கு கேட்ப‌து/பார்ப்ப‌து இல்லை. (எப்போதாவ‌து இணைய‌த்தில் சென்று கேட்டால‌ன்றி). சென்ற‌ ஞாயிற்றுக் கிழ‌மையும் யாரோ ஒருவ‌ர் அமெரிக்காவிலிருந்து வ‌ந்திருக்கின்றார். ப‌ல்வேறு புல‌ம்பெய‌ர் நாடுக‌ளிலிருந்து ம‌க்க‌ளைத் திர‌ட்டி அங்குள்ள‌ ம‌க்க‌ளுக்காய் எதையோ செய்ய‌ப்போகின்றார் (வைத்திய‌ர் என்றும் சொன்னார்க‌ள்) என்றொருவ‌ர் சொல்ல‌, ச‌ரி போய்ப் பார்த்துவிடுவோம் என்று போயிருந்தேன். அமைப்ப‌ற்ற‌ அமைப்பு என்றெல்லாம் அறிமுக‌ஞ்செய்து சில‌வ‌ற்றைப் பேசிக்கொண்டிருந்தார்க‌ள்...அங்கே நான் மேலே குறிப்பிட்ட‌ இளைஞ‌ர்க‌ள் இருந்தார்க‌ள்... புலித்த‌லைமை அழிந்துவிட்ட‌தா இல்லையா எது உண்மை...எல்லோரும் குழ‌ப்பிக்கொண்டிருக்கின்றார்க‌ள்...என்று அழுத்த‌த்தோடு இருந்த‌ அந்த‌ இளைஞ‌ர்க‌ளைப் பார்க்க‌ உண்மையில் மிக‌வும் க‌வ‌லையாக‌ இருந்த‌து...ஒரு இளைஞ‌ன் கூறினான், என்னால் க‌ட‌ந்த‌ நான்கு நாட்க‌ளாய் உற‌ங்க‌வே முடிய‌வில்லை என்று... அது கூட‌ப் ப‌ர‌வாயில்லை, என‌க்குத் தெரிந்த‌ ஒரு ந‌ண்ப‌ர், அவ்ருக்கு ஒரு கால‌த்தில் புலிக‌ள் இங்கே கொடுக்காத‌ தொல்லைகளே இல்லை...அந்த‌ ந‌ண்ப‌ர் கூட‌ தொலைபேசியில் அழைத்த‌போது இன்றைய‌ நிலை க‌ண்டு அழ‌த்தொட‌ங்கிவிட்டார்...எல்லோரும் அழுத்த‌ங்க‌ளோடுதான் இருக்கின்றோம் இல்லையா?

இந்த‌க் கூட்ட‌த்தில், அவ‌ர் அமெரிக்கா வ‌ளாக‌த்தில் PhD செய்வ‌தாக‌க் கூறினார்...ஒரு அறிவுஜீவித்தோர‌ணையில் ம‌ட்டுமின்றி தானொரு த‌லைவ‌ராக‌ வ‌ருவ‌த‌ற்கான‌ முய‌ற்சியில் இருப்ப‌து போல‌த் தோன்றிய‌து. 'அமைப‌ற்ற‌ அமைப்பு' ம‌ற்ற‌து 'வெளியிலிருக்கும் முன்னாள் போராளிக‌ளை உள்ளிழுத்து பொது வேலைத்திட்ட‌த்தில் இய‌ங்குத‌ல்' என்றெல்லாம் க‌தைக்க‌ தொட‌ர்ந்து கேட்க‌லாம் என்றிருந்தேன். தொட‌ர்ச்சியில் ஏதோ ஒருபுள்ளியில் ச‌ன‌ம் க‌ளையெடுத்த‌ல்/துரோகிக‌ள் என்றெல்லாம் க‌தைக்க‌, ச‌ரி பேசிய‌ அறிவுஜீவி என்ன‌ சொல்ல‌போகின்றார் என்று உன்னிப்பாய் இருந்தேன். எல்லாப் பாதைக‌ளும் ரோமிற்கே என்ற‌ மாதிரி, அந்த‌ ஆளும், ஆம் ந‌ண்ப‌ர்க‌ளே ஒரு கையில் புலிக்கொடியும், ம‌ற்ற‌க் கையில் தேசிய‌த் த‌லைவ‌ர் ப‌ட‌மும் தூக்குவ‌த‌ற்கு த‌ய‌ங்குப‌வ‌ன் எல்லாம் துரோகிக‌ளே என்றார்... பிற‌கென்ன‌ துரோகிக‌ளில் ஒருவ‌னான‌ என‌க்கு அங்கு ஏது வேலையென வெளியேறிவிட்டேன். அதைவிட‌, இந்த‌க் கூட்ட‌த்திற்கு என்னோடு கூட‌வே அழைத்துச் சென்றிருந்த‌ ந‌ண்ப‌ர், இத‌ற்குத்தானா என்னையும் கூட்டிக்கொண்டுவ‌ந்தாய்? என்று பார்த்த‌ ஒரு பார்வை இருக்கிற‌தே....

இதேபோல‌, என்னோடு ஒர‌ள‌வு உரையாட‌க்கூடிய‌ 'மாற்று' இய‌க்க‌ ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் தெளிவாக‌ ஒன்றைக் கூறியிருந்தேன். நீங்க‌ள் உண்மையான‌ மாற்று அர‌சிய‌லை முன்னிறுத்தி இருந்திருந்தால், கட‌ந்த‌ 20 வ‌ருட‌மாய் நீங்க‌ள் பேசிய‌ அர‌சிய‌ல் ஸ்திர‌மான‌தாய் இருந்திருந்தால், இன்று புலிக‌ளையோ இல‌ங்கை இராணுவ‌த்தையோ ஏற்றுக்கொள்ள‌ முடியாத‌ ஆயிர‌க்க‌ண‌க்கான‌ என்னைப் போன்ற‌ உதிரிக‌ளை நீங்க‌ள் உள்ளிழுத்திருப்பீர்க‌ள்...ஆனால் நீங்க‌ள் இதுவ‌ரை மாற்று அர‌சிய‌ல் என்று புலியெதிர்ப்பு அர‌சிய‌லே செய்திருக்கின்றீர்க‌ள்...ஆக‌வே உங்க‌ளால் இன்றும் புலி ப‌ல‌வீன‌மிழ‌ந்த‌பின்னும் ம‌க்க‌ளை உள்வாங்கிக்கொள்ள‌ முடிய‌வில்லை. இன்னும், இன்று மாற்று அர‌சிய‌ல் பேசிய‌வ‌ர்க‌ளில் அநேக‌ர் இல‌ங்கை அர‌சோடு சேர்ந்து இய‌ங்க‌ அழைப்பு விடுகின்றார்க‌ள்... திரும்ப‌வும் எங்க‌ள் ம‌க்க‌ளை அழிவுக‌ளுக்கு கொண்டுபோவ‌தே உங்க‌ளுக்கு விருப்ப‌மாக‌ இருக்கிற‌து என‌ நேராக‌வே சொல்லியிருக்கின்றேன். அந்த‌ ந‌ண்ப‌ர்க‌ளைக் காய‌ப்ப‌டுத்தும் என்ற‌போதும், இதையும் சொல்லியிருக்கின்றேன்...' என‌க்கு உங்க‌ள் அமைப்புக‌ளுக்கும், இந்த‌ ஊர்ச்ச‌ங்க‌ம்/பாடசாலைச் ச‌ங்க‌ளுக்குக்கும் இடையில் பெரிய‌ வித்தியாச‌ம் தெரிய‌வில்லை. அவ‌ர்க‌ள் நேர‌டியாக‌ எங்க‌ளைச் சுற்றுகின்றார்க‌ள்....நீங்க‌ள் கொஞ்ச‌ம் சுற்றிவ‌ளைத்துச் சுற்றுகின்றீர்க‌ள்...இறுதியில் மொட்டைய‌டிக்க‌ப்ப‌ட்டு நிற்ப‌து ம‌க்க‌ளே' என்று. அத்தோடு இற்றைவ‌ரை உங்க‌ளால் இங்கு பிற‌ந்த‌ அல்ல‌து உங்க‌ளுக்கு அடுத்த‌ த‌லைமுறையான ஒரு இளைஞ்ரைக் கூட உள்ளிழுக்க‌ முடிந்த‌தா? எப்ப‌டி ஊர்ச்ச‌ங்க‌ங்க‌ளை அடுத்த‌ த‌லைமுறை எடுத்துச் செல்லாதோ அதுபோல‌வே, உங்க‌ள் அமைப்புக்க‌ளும் உங்க‌ளுக்குப் பிற‌கு அடையாளமின்றிப் போய்விடுமென்றே கூறியிருந்தேன்.

இப்போது கூறுங்க‌ள் ந‌ண்ப‌ர்க‌ளே... எம்மால் இய‌ன்ற‌ எல்லா வ‌ழிக‌ளிலும் நாங்க‌ள் எங்க‌ள் க‌ர‌ங்க‌ளைக் கொடுக்க‌வே விரும்புகின்றோம். ஆனால் எந்த‌க் க‌ர‌முமே எங்க‌ளை உள்ள‌ன்போடும் உண்மையான‌ அர்ப்ப‌ணிப்போடும் கோர்த்து கொள்ள‌த் தயாரில்லையே?

இப்போது வ‌வுனியாவிலுள்ள‌ அக‌தி முகாங்களிலிருந்து ஊர‌வ‌ர்க‌ள், உற‌வின‌ர்க‌ள் என்று தொலைபேசுகின்றார்க‌ள். க‌ண‌வ‌னை இழ்ந்துவிட்டோம், ச‌கோத‌ர‌னை இழந்துவிட்டோம் என்று கூறுகின்ற‌ செய்திக‌ள் வ‌ந்துகொண்டேயிருக்கின்ற‌ன‌. நீங்க‌ள் எல்லாம் வெளிநாட்டில் இருந்து என்ன‌ செய்து கொண்டிருந்தீர்க‌ள் என்றொரு கேள்வி கேட்டால் என்ன‌ சொல்வ‌தென்ற ப‌ய‌த்திலேயே நான் தொலைபேசியில் அவ‌ர்க‌ளுட‌ன் பேசுவ‌தைத் த‌விர்த்துக்கொண்டிருக்கின்றேன். ஆம் ந‌ண்ப‌ர்க‌ளே, அவ‌ர்க‌ள் கூறுகின்ற‌ க‌தைக‌ள் ந‌ம‌து க‌ற்ப‌னைக்கு அப்பாற்ப‌ட்ட‌ இர‌த்த‌மும் ச‌தையுமான‌ கைவிட‌ப்ப‌ட்ட‌ க‌தைக‌ள். 'பாட‌ல‌ற்ற‌வ‌ர்க‌ளின் பாட‌லாக‌ இருப்போம்' என்று ம‌ஹ்மூத் த‌ர்வீஷ் போல‌ அவ‌ர்க‌ளுக்குக் கூற‌க்கூட‌ ந‌ம்மிட‌ம் எந்த‌ ந‌ம்பிக்கையும் இல்லையே. குற்ற‌ங்க‌ளின‌தும் அவ‌மான‌ங்க‌ளின‌தும் க‌ட‌லில் மூழ்கிக்கொண்டிருப்ப‌தை விட‌ வேறென்ன‌ வ‌ழியுள்ள‌து என்னைப் போன்ற‌வ‌ர்க‌ளுக்கு, கூறுங்க‌ள் ந‌ண்ப‌ர்க‌ளே...

9 comments:

pandiyan said...

அண்ணே ! நான் சிலவற்றை சொல்கிறேன்!

உடனடியாக தமிழீழ புறநிலை அரசு ஒன்றை அமையுங்கள் தலாய்லாம அருணாச்சலத்தில் அமைத்திருப்பது போன்று எதாவது ஒரு நாட்டினை கலந்து பேசுங்கள்..அமையுங்கள் அதுதான் ஒரு நாடு என நமக்கு இருந்த்தது என உங்கள் வருங்கால சந்திக்கு புரிய வைக்கும் அடுத்தது ஒன்றினை சொல்லவிரும்புகிறேன் இதுவரை நோபல் பரிசு வென்றவர்களில் கணிசமானவர்கள் யூதர்களே! தாங்கள் 30 வருடங்களாக வெளிநாட்டில் இருந்தாலும் உங்கள் பிள்ளைகளுக்கு நம் நாடு இது என்று ஊட்டி ஊட்டி வளருங்கள்... அவன் வளர்ந்த் பெரியவனானதும் ஒரு விஞ்சானியாகவோ அல்லது வேறு எதாகவோ!.. தன்னால் இயன்றதை தன் தாயகத்திற்கு அளிக்க சொல்லுங்கள் பணம் மட்டும் அல்ல குறிப்பாக அணு ஆயுதங்கள் பற்றிய அறிவு ரசாயன ஆயுதகள் என்பன இந்த காலத்தில் எவன் மனித உரிமை பற்றி பேசுகிறான் வலிந்தவனே வாழ்கிறான்..

அடுத்து தமிழர்களை வென்று விட்டதாக கூத்தாடுகிறானே சாதாரண சிங்களான்..அவன் வீட்டில் இழவு விழுந்தால் தான் வலி என்ன என்று தெரியும் இதில் மனிதம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.. அதாவது 1 தமிழன் செத்தால் 9 சிங்களன் உயிர் எடுக்கபடவேண்டும்

அடுத்து சர்வதேச அரசியல் தெரியவில்லை ஒவ்வொரு நாட்டுக்கும் கதிர்காமன் ரூம் போட்டு புலிகளை தடைசெய்யும் போது நீங்கள் இந்த அளவு ஆர்பாட்டம் செய்திருந்தால் இந்நேரம் இந்த பிரச்சனை வந்திருக்காது! அல்லது சர்வதேச அரசியலை உள்வாங்கி சீனாவையும் இந்தியாவையும் மேற்குலகையும் உள்குத்து குத்த விட்டிருக்கவேண்டும்..

தென்னிலங்கைக்கு தெற்கே கடலாராய்ச்சி செய்ய உதவிடுங்கள் யார் வந்தேறி என தெரிந்துவிடும்


அதுவரை இந்த மக்கள் அவலம் நீங்க போவது இல்லை ..சினிமாவில் காட்டுவார்கள் இல்லையா?சின்ன குழந்தைகளை குருடாக்கி பிச்சை எடுக்கவிடுவார்கள்..அது போல குண்டும் போட்டுவிட்டு தமிழ்கள் கஸ்டபடுகிறார்கள் என உலக நாடுகளிடம் காட்டி நன்றாக இனிவாரும் காலங்களில் வாங்கி திங்கபோகிறான் சிங்களன்..இங்கே மனிதம் இல்லை நரிகளும் பிணம்தின்னிகளுமே வாழ்கிறர்கள்.. பலமானதான புலம் பெயர் ஈழ தமிழசமுதாயதினை கட்டி எழுப்புங்கள் ஈழத்திற்காக போரடும் அமைப்பு இன்று புலி நாளை வேறு ஏதோ.. அவர்களுக்கு உதவுங்கள்

ஒரு அகதியின் நாட்குறிப்பு !!! said...

//வ‌வுனியாவிலுள்ள‌ அக‌தி முகாங்களிலிருந்து ஊர‌வ‌ர்க‌ள், உற‌வின‌ர்க‌ள் என்று தொலைபேசுகின்றார்க‌ள். க‌ண‌வ‌னை இழ்ந்துவிட்டோம், ச‌கோத‌ர‌னை இழந்துவிட்டோம் என்று கூறுகின்ற‌ செய்திக‌ள் வ‌ந்துகொண்டேயிருக்கின்ற‌ன‌. நீங்க‌ள் எல்லாம் வெளிநாட்டில் இருந்து என்ன‌ செய்து கொண்டிருந்தீர்க‌ள் என்றொரு கேள்வி கேட்டால் என்ன‌ சொல்வ‌தென்ற ப‌ய‌த்திலேயே நான் தொலைபேசியில் அவ‌ர்க‌ளுட‌ன் பேசுவ‌தைத் த‌விர்த்துக்கொண்டிருக்கின்றேன்.//

இது தற்காலிக தப்பிதல்.மனச்சாட்சியும் இதயமும் உடையவர்களுக்கு வெளிநாட்டினரினால் தான் இந்தக் கொலைகளே நடந்தன என்பது புரியும்.
கூட்டம் போட்டுக் கொடிபிடித்தவர்களெல்லாம் தங்கள் முகம் தொலைக்காட்சிகளில் வரவேண்டும், தங்கள் தங்கள் வானொலி,பத்திரிகைகளுக்குச் செய்தி சேகரிக்கவேண்டும் என்று எதிர் பார்த்தார்களே தவிர வன்னி பதுங்கு குழிகளில் மருந்தற்று, உணவற்று, ஏன் மூச்சற்று பேச்சற்றுக் கிடந்த மனிதருக்காய் பேச வேண்டுமென்ணும் விருப்புகொண்டவர்களாயில்லை.அப்படி
அவர்களுக்காய் இவர்கள் பேசவிரும்புவோராய் இருந்திருந்தால் சர்வதேசமும் எமக்குத் தயவோடு இல்லை என்பது புரிந்தவர்களாக இருந்திருந்தால்
இவர்கள் இற்றைக்கு 3 மாதத்திற்கு முன்னரே புலித்தலைமையை மூன்றாவது நாடொன்றிடம் சரணடையுமாறு கேட்டு வெளிநாட்டுத்தெருக்களில் இப்போநடாத்தும் போராட்டங்களைச் செய்து அவர்களைச் சரணடையச்செய்து அவர்களையும் காப்பாற்றி அப்பாவி வன்னித் தமிழர்களையும் காப்பாற்றியிருக்கலாம்.
ஆனால் தமிழர்கள்தான் உச்சிமீது வான் இடிந்து விழுந்தாலும் அஞ்சாதவராயிற்றே?
தமிழ்சித்தன்

கல்வெட்டு said...

//...நீங்க‌ள் உண்மையான‌ மாற்று அர‌சிய‌லை முன்னிறுத்தி இருந்திருந்தால், கட‌ந்த‌ 20 வ‌ருட‌மாய் நீங்க‌ள் பேசிய‌ அர‌சிய‌ல் ஸ்திர‌மான‌தாய் இருந்திருந்தால், இன்று புலிக‌ளையோ இல‌ங்கை இராணுவ‌த்தையோ ஏற்றுக்கொள்ள‌ முடியாத‌ ஆயிர‌க்க‌ண‌க்கான‌ என்னைப் போன்ற‌ உதிரிக‌ளை நீங்க‌ள் உள்ளிழுத்திருப்பீர்க‌ள்...ஆனால் நீங்க‌ள் இதுவ‌ரை மாற்று அர‌சிய‌ல் என்று புலியெதிர்ப்பு அர‌சிய‌லே செய்திருக்கின்றீர்க‌ள்...ஆக‌வே உங்க‌ளால் இன்றும் புலி ப‌ல‌வீன‌மிழ‌ந்த‌பின்னும் ம‌க்க‌ளை உள்வாங்கிக்கொள்ள‌ முடிய‌வில்லை.....//

******


இதே கருத்தை நான் சமீபத்திய உரையடலில் வைத்தேன்...

http://masivakumar.blogspot.com/2009/05/blog-post_21.html

....பிரபாகரன் காட்டில் போர் புரிவது பிளான் A என்று இருந்தால் பிளான் B ஆக உலக அளவில் ஒரு அரசியல் அமைப்பை ஏற்படுத்தி அதை பெரும் மக்கள் இயக்கமாக இதுவரை மாற்ற யாரும் முயலவில்லை.

அகதியாக வந்து அந்த நிலையில் இருப்பவர்களைச் சொல்லிக் குற்றம் இல்லை. அமெரிக்க மற்றும் கனடா குடியிரிமை வாங்கிய நிம்மதியாக வாழும் மக்கள், ஒரு பெரிய அரசியல் அமைப்பை இலங்கைக்கு வெளியே ஏன் உருவாக்க முயற்சிக்கவில்லை இந்த 30-40 ஆண்டுகளில் ?

அப்படியும் அரசியல் களம் கண்டவர்கள் புலியை விமர்சித்தே வாழ வேண்டிய நிர்ப்பந்தம். என்ன கொடுமை?.......

*******

ஈழத்து மண்ணில் இருந்து வந்த உங்கள் பார்வையும் , தமிழகத்து தமிழனான எனது பார்வையும் விமர்சனங்களும் வேறு வேறாக இருக்கலாம். அது அவரவர் புரிதலின் அடிப்படையிலும் , தெரிந்த தகவல்களில் அடிப்படையிலும் அமைவது.

ஆனால், தீவிற்கு வெளியே ஒரு மாற்று அரசியல் (புலி எதிர்ப்பை மட்டும் தாரக மந்திரமாக கொள்ளாத) இந்த 20- 30 ஆண்டுகளில் தோன்றி வலுப்பெற்று இருந்திருக்க வேண்டும்.

அது நடக்கவில்லை. நாம்தான் குற்றவாளிகள்.

இதோ, இந்தியன் ஆயில் நிறுவனம் கடைவிரிக்க கிளம்பிவிட்டது.

இலங்கையில் மேலும் 300 பங்குகள் திறக்கும் இந்தியன் ஆயில்
http://thatstamil.oneindia.in/news/2009/05/28/business-ioc-to-open-300-new-outlets-in-sri-lanka.html

ஊகம்/Uuukam said...

//அடுத்து தமிழர்களை வென்று விட்டதாக கூத்தாடுகிறானே சாதாரண சிங்களான்..அவன் வீட்டில் இழவு விழுந்தால் தான் வலி என்ன என்று தெரியும் இதில் மனிதம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.. அதாவது 1 தமிழன் செத்தால் 9 சிங்களன் உயிர் எடுக்கபடவேண்டும்

அடுத்து சர்வதேச அரசியல் தெரியவில்லை ஒவ்வொரு நாட்டுக்கும் கதிர்காமன் ரூம் போட்டு புலிகளை தடைசெய்யும் போது நீங்கள் இந்த அளவு ஆர்பாட்டம் செய்திருந்தால் இந்நேரம் இந்த பிரச்சனை வந்திருக்காது! அல்லது சர்வதேச அரசியலை உள்வாங்கி சீனாவையும் இந்தியாவையும் மேற்குலகையும் உள்குத்து குத்த விட்டிருக்கவேண்டும்..//

He who is used to the absurd will get along fine in our time!

சோமி said...

என்னை மன்னித்து விடுங்கள்.....
நான் இதுவரை பேசியதற்க்கும் ... நம்பியிருந்த நம்பிகைகளுக்கும். ..உங்களுக்கு சொல்லிய வார்த்தைகளுக்கும்... எல்லாவற்க்குமாக மன்னித்து விடுங்கள்....இதுதான் நான் அந்த முன்று லட்சம் மக்களிடமும் போரளிகளிடமும்.துரோகிகளிடமும் வேண்டிக் கொள்வது.

என்னால் உங்களுக்காக எதுவும் செய்து விட முடியவில்லை. இப்போது சாப்பாடு போடக்கூட முடியவில்லை. இப்போது ஒரு 3 லட்சம் மக்கலை காக்ஜும் மிகப் பெரிய போராட்டம் நமக்கிருகிறது. மற்ற மயிருகளை அடுதடுத்து அறுக்கலாம்

அருண்மொழிவர்மன் said...

இங்கே நடைபெற்ற ஏறக்குறைய அனைத்து போராட்டங்களிலும் நானும் கலந்து கொண்டிருக்கின்றேன்; அதுவும் உங்களின் அதே மன நிலையில். ஒரு சமயத்தில் இங்கே போராட்டத்தை முன்னெடுப்பவர்களுல் சிலர் தமக்கான ஆதாயங்களுக்காக சிலவற்றை செய்கின்றார்களோ என்று கூட தோன்றியது. பின்னர் அமரிக்க தூதரகம் முன்பாக போலிசாருடன் ஏற்பட்ட மோதலின் பின்னர் நடைபெற்ற சம்பவங்கள் தம் சுய அடையாளாங்களுக்காகத்தான் இதை செய்கின்றார்களோ என்ற என் கருத்தை ஓரளவு உறுதி செய்தது.

இதே வேளை ஊடகங்கள் கூட பொறுப்பற்ற முறையில் செய்திகளாஇ பரப்பி மக்களை உணர்ச்சி வசப்படுத்தி சில அனுகூலங்களி பெற்றுச் செல்ல துணை போயின என்றே சொல்ல வேண்டும். அதுபோல போராட்டங்கள் எல்லாம் ஒரே தலைமையின் கீழ் நடைபெறவேண்டும் என்பது ஒரு வலிந்த சட்டமாகவே பாவிக்கப்பட்டது. அந்த தலைமையை ஏற்காதவர்கள் எல்லாம் அந்த போராட்டத்தை முன்னெடுக்கவே கூடாது என்றா மனப்பாங்கு பல இடங்களிலும் தெளிவாகவே தெரிந்தது......

இது பற்றி கதைப்பதையெல்லாம் ஒரு தனிப்பதிவாகவே போடலாம்.... எங்கே தொடங்குவது எங்கே முடிப்பது என்றே தெரியவில்லை/.

DJ said...

க‌ருத்துக்க‌ளைப் ப‌கிர்ந்த‌ ந‌ண்ப‌ர்க‌ளுக்கு ந‌ன்றி.
....
அருண், குறிப்பிட்ட‌துமாதிரி, 'எங்கே தொடங்குவது எங்கே முடிப்பது என்றே தெரியவில்லை' என்ற குழ‌ம்பிய‌ ம‌னோநிலையில்தான் நானும் இருக்கிறேன். என்றேனும் ஒருநாள் நிதான‌மாய், இவை ப‌ற்றி விரிவாக‌ உரையாடுவோம்.
...
ம‌ற்ற‌து, இந்த‌ப் ப‌திவை முன்வைத்து, என் மீது ந‌ண்ப‌ர்க‌ள் வைத்த‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ளை ஏற்றுக்கொள்கின்றேன். ந‌ன்றி.

செல்வநாயகி said...

டிசே,

நீங்கள், சயந்தன், சோமி போன்றோர்களினது இப்போதைய உணர்வுகளைப் பதிவுகளில் கண்டபின் மனம் பேதலித்துப் போகிறது. ஆனால் கேட்டுக்கொள்வதெல்லாம் நீங்கள் சொல்கிற "எங்கே தொடங்கி எங்கே முடிப்பது" எனத் தெரியாததால் தயங்கி நிற்கும் உரையாடல்கள் இனியும் தள்ளிப்போடப்படாமல் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதே.
உங்களைப் போன்றவர்கள் அம்முயற்சிகளை நிச்சயம் தொடங்கவேண்டும்.

DJ said...

அன்பின் செல்வ‌நாய‌கி,
ஈழ‌த்து நிக‌ழ்வுக‌ளை வெளியில் நின்று பார்த்தால்தான் நிதான‌மாய் எழுத‌வோ விவாதிக்க‌வோ முடியும். அந்த‌ப் ப‌க்குவ‌ம் இன்னும் என‌க்கு வாய்க்க‌வில்லை.
....
சில‌ தின‌ங்க‌ளுக்கு முன் கூட‌ ஒரு ச‌ம்ப‌வ‌த்தை ‍(ந‌ண்ப‌ரொருவ‌ரினூடாக‌க்) கேள்விப்ப‌ட்டேன். இப்போது த‌மிழ்ம‌க்க‌ளை அடைத்துவைத்திருக்கும் இடைத்த‌ங்க‌ல் முகாங்க‌ளிலிருந்து 70 வய‌துக்கு மேற்ப‌ட்ட‌ முதிய‌வ‌ர்க‌ளை வெளியே போக‌விடுகின்றார்க‌ள். அப்ப‌டி வெளியே வ‌ந்து கொழும்பில் நிற்கும் ஒரு முதிய‌ பெண் கூறிய‌ ச‌ம‌ப‌வ‌ம் இது. யுத்த‌ம் முடிவ‌த‌ற்கு முன் ம‌க்க‌ள் ப‌குதி ப‌குதியாக‌ யுத்த‌ப்ப‌குதியை விட்டு த‌ப்பிவ‌ந்திருக்கின்ற‌ன‌ர். அப்ப‌டித் த‌ப்பி வ‌ந்த‌ ஒருப‌குதி இளைஞ‌ர்க‌ளை வடிக‌ட்டி, அவ‌ர்க‌ளை ப‌ங்க‌ருக்குள் இற‌ங்க‌ச்சொல்லி குண்டுக‌ள் போட்டு ஒரேய‌டியாக‌ இல‌ங்கை இராணுவ‌ம் கொன்ற‌தை இந்த‌ப் பெண்ம‌ணி நேர‌டியாக‌ப் பார்த்திருக்கின்றார். எவ்வ‌ள‌வு கோர‌மான‌ ச‌ம்ப‌வ‌ம் இது. ச‌ர‌ண‌டைந்த‌வ‌ர்க‌ள் எவ‌ராயிருந்தாலும் (அது புலியாக‌ இருந்தால்கூட‌) அவ‌ர்க‌ளைக் கொல்வ‌த‌ற்கு எந்த‌ உரிமையையும் எந்த‌ இராணுவ‌த்திற்கும் இல்லையென்றே ஐநாவின் ம‌னித‌வுரிமைக‌ள் சாச‌ன‌ம் வ‌ரைய‌றுக்கின்ற‌து.

ஏற்க‌ன‌வே இறுதியாக‌ நிக‌ழ்ந்த‌ போரில் காய‌ம்ப‌ட்டு குற்றுயிரும் குலையுமாய் துடித்துக்கொண்டிருந்த‌வ‌ர்க‌ளை க‌வ‌ச வாக‌ன‌ங்க‌ளை ஏற்றி முற்றாக‌ கொன்ற‌ழித்த‌ன‌ர் என்ற‌ செய்திக‌ள் க‌சிந்ததையும் நீங்க‌ள் அறிந்திருப்பீர்க‌ள்.
....
இப்ப‌டியான‌ மிக‌ மோச‌மான‌ ம‌னித‌ உரிமைச் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை அறிந்துகொண்டு எப்ப‌டி ஒரு நிம்ம‌தியான‌ ம‌னோநிலையில் இருப்ப‌து என்று தெரிய‌வில்லை. இப்ப‌டி ஒரு தொலைதூர‌த்தில், போரின் எந்த‌ ஒரு பாதிப்பும் ஏற்ப‌டாத‌ இட‌த்திலிருந்துகொண்டு ஈழ‌த்தில் க‌ட‌ந்த‌ சில‌ வ‌ருட‌ங்க‌ளில் நிக‌ழ்ந்த‌வ‌ற்றை விரிவாக‌ எழுத‌வேண்டுமென்றால் முத‌லில் என‌து ம‌ன‌ச்சாட்சியைக் கொன்று புதைக்க‌ வேண்டியிருக்கிற‌து.