Wednesday, December 10, 2008

இந்தா பிடியுங்கள் இந்தியா டுடே (கழிப்பறையில் தண்ணீரை மிச்சம் பிடிக்க)

-ஆதவன் தீட்சண்யா


அஞ்சலி என்ற பெயரில் 'இந்தியா டுடே' கீழ்க்கண்ட கட்டுரையைப் பிரசுரித்திருக்கிறது

----------------------------------------------------------------------------------

அஞ்சலி / வி.பி.சிங் 1931-2008

மண்டல் நாயகனான இவர் இந்தியாவின் அரசியலில் மாபெரும் சமூக சீரழிவைக் கொண்டு வந்தவர்.

அலகாபாத்தில் கங்கைக்கரையில் நவம்பர் 29ம் தேதி எரிந்த சிதை இந்திய அரசியலின் மிக சாகசமிக்க ஒருவரின் வாழ்வை முடித்து வைத்தது. அந்தத் தீயின் அர்த்தத்தைப் புரி்ந்துகொள்ள கடந்த நூற்றாண்டின் கடைசி காலங்களில் கொழுந்துவிட்டெரிந்த இன்னமும் இருக்கும் தீயின் நாவுகளை நினைத்துப் பார்க்க வேண்டும்.

பிரதமர் விஸ்வநாத் பிரதாப் சிங்கின் சமூகத்தை சீரழித்த செயலும் அதன் விளைவாக பிறந்த மக்களை மிக மோசமாக பிளவு படுத்திய மண்டலுக்கும் எதிர்வினையாக வந்ததுதான் தில்லி பல்கலைக்கழக மாணவர் ராஜீவ் கோஸ்வாமியின் நெருப்பு யுத்தம். அவரது தியாகம் தடுக்கப்பட்டது.

அரசு வேலைகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை சிபாரிசு செய்த மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்துவேன் என்று 1990 சுதந்திர தின உரையில் வி.பி.சிங் உறுதிபூண்டது ஒரு மாபெரும் புரட்சிகர நடவடிக்கைதான்; வெகுஜனங்களை மயக்குவதற்கான அரசியல் நாடகம். சிறுபான்மை அரசை நடத்திச்சென்ற முதல் பிரதமரான வி.பி.சிங், ஜாதியை முன்னிறுத்தி, தகுதியை புறந்தள்ளிய மண்டல் கமிஷன் அறிக்கை மூலம் சமூக அடுக்கு முறையை குலைத்தார்.

அவர் பதவியிலிருந்த 11 மாதங்களில் அவருடைய திட்டங்களை முழுமையாக செயல்படுத்த முடியாமல் போயிருக்கலாம். எனினும் மண்டல் கமிஷன் இந்திய அரசியலின் கட்டமைப்பையே மாற்றி அமைத்தது. ஜாதி செயல் திட்டத்துடன் பல அரசியல் தலைவர்கள் அதிலிருந்து பிறந்து வந்தார்கள். அரசியல்வாதியாக வி.பி.சிங் கொள்கைகளின்படி வாழ்ந்தார். அந்தக் கொள்கைகளின் பின்னணியாக என்ன இருந்தது என்பது என்பது வேறு கதை.

அரசியல் வாழ்விலிருந்து ஒதுங்கியிருந்த அவரின் இறுதிக்காலத்தில் மதசார்பின்மையின் இஷ்டதெய்வமாகவும் கண்ணுக்கு தெரியாத ஆலோசகராகவும் அவர் இருந்தார். சமூகநீதி அரசியல் என்ற பெயரில் இந்தியாவை உலுக்கிய மனிதர் இறுதியில் நிஜ அரசியலுடன் தொடர்பில்லாமல், கவிதை, ஓவியங்களால் ஆறுதல்பட்டவராக இருந்தார்.

-எஸ். பி

----------------------------------------------------------------------------------


இந்தியா டுடே இதழின் உள்ளடக்கத்திற்கு எதிர்வினையாக அதைக் கிழித்து மலம் துடைத்து அதன் பொறுப்பாசிரியருக்கு அஞ்சலில் அனுப்பி வைக்கப்பட்டது நினைவிருக்கிறதா? நல்லமாட்டுக்கு ஒரு சூடு, நல்ல மனுசனுக்கு ஒரு சொல். ஆனால் இந்தியா டுடே மாடுமல்ல மனுசனுமல்ல திருந்துவதற்கு. எனவே அது முன்னிலும் திசைகெட்டு துடைக்கவும் அருகதையற்றதாய் வந்துகொண்டிருக்கிறது.

இவ்விதழின் கட்டுரையாளர்கள் காலையில் டீ காபிக்குப் பதிலாக புஷ்ஷின் மூத்திரத்தைக் குடித்துவிட்டு எழுத உட்காருவார்கள் போலும், இந்தியாவில் நடக்கும் எதுவுமே அவர்களுக்கு உவப்பாயிருப்பதில்லை. எனவே எப்போதும் அமெரிக்காவப் பாரு, அவுத்துப்போட்டு ஆடு என்கிற ரீதியில் எதையாச்சும் எழுதிக்குமிப்பார்கள். முதலாளித்துவ லாபவெறிக்குத் தடையாக இருக்கிற சட்டதிட்டங்களை உடைத்து நொறுக்கவேண்டும், அரசியல் பொருளாதாரத் தளங்களில் நிலவும் கட்டுப்பெட்டித் தனங்களை மீறிப் பாயவேண்டும் என்பார்கள். அதற்கிசைவான நுகர்வுவெறியை உருவாக்க பக்கம்பக்கமாக எழுதுவார்கள். அதேநேரத்தில் பண்பாட்டுத்தளத்தில் நிலவும் கட்டுப்பாடுகளாலும் பழமைவாதத்தாலும் சிக்கித் திணறிக்கொண்டிருக்கும் சமூகத்தை விடுவிக்கும் முயற்சிகள் ஏதேனும் நடப்பதுபோல் தெரிந்தால் இந்தியாவின் மரபுக்கும் பாரம்பரியத்திற்கும் ஆபத்து வந்துவிட்டதாக அலறிக் கொதிப்பார்கள். ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாக மனங்களைத் தகவமைக்கவும் சாதியத்தின் பிடியிலேயே சமூகம் தொடர்ந்து கட்டுப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும் தேவையான தலைப்புகளில் அவ்வப்போது கருத்துக்கணிப்புகளை நடத்தி தமது கைச்சரக்குகளை அவிழ்த்துவிடுவார்கள்.

பத்திரிகைச் சுதந்திரம் என்ற போர்வைக்குள் ஒளிந்துகொண்டு வெளியாகும் இந்தியா டுடேயின் எழுத்துக்கள் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களின் வாழ்வுரிமைக்கு எதிராக தொடர்ந்து விஷம் கக்குவதைத்தான் நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. இந்துத்துவ வெறியர்கள் நிகழ்த்தும் கருத்தியல் வன்முறையின் கெடுவிளைவுகளை இவ்விதழின் எந்தவொரு வரியிலிருந்தும் நம்மால் உணரமுடியும். இங்குள்ள சிறுபான்மையினர் அனைவரையும் தேசவிரோதிகளாக- தீவிரவாதிகளாக சித்தரிக்கும் இந்துத்துவ நிலைபாட்டை தன் மொழிநடையில் வெளியிட்டு இந்தியா டுடே, இந்துத்துவ டுடேவாக மாறுவது தற்செயலானதல்ல.

என்னதான் ஒருவர் தேசம், மக்கள் ஒற்றுமை, நாட்டின் வளர்ச்சி, கட்டற்ற சுதந்திரம் என்ற பொதுப்பதங்களில் பதுங்கித் திரிந்தாலும் இடஒதுக்கீடு குறித்துப் பேசும்போது அவரது எல்லா வேஷங்களும் கலைந்து அப்பட்டமான பார்ப்பனராக மாறிவிடுகிறார் என்பது இந்தியா டுடே பத்திரிகைக்கும் பொருந்தும். இடஒதுக்கீடு பற்றி எழுதும் போதெல்லாம் ஆத்திரத்தின் எல்லைக்கே சென்றுவிடுவதற்கும் இவங்கப்பன் வூட்டு சொத்தில் பங்கு கேட்க வந்ததைப்போல பதறுவதற்கும் இது துளிகூட வெட்கப்பட்டதில்லை. எந்தவொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக் கொண்டு இடஒதுக்கீட்டின் எதிர்ப்பாளர்கள் தமது விஷமத்தனமான கருத்துகளை வெளிப்படுத்தி விடுகிறார்கள். ஆனால் இடஒதுக்கீட்டுக்கு எதிராக எவ்வளவு அவதூறுகள் முன்வைக்கப்பட்டாலும் அதை எதிர்கொண்டு பதிலடி கொடுக்க இடஒதுக்கீட்டின் ஆதரவாளர்களும் பயனாளிகளும் முன்வரமாட்டார்கள் என்ற தைரியத்திலேயே இந்தியா டுடே இவ்வாறு எழுதுகிறது.

( இந்துத்துவ/ பார்ப்பன சங்கத்தின் செய்திமடல்போல வெளியாகும் இந்தியா டுடே மாதிரியான பத்திரிகைகள் அதன் நேரடிப் பயனாளிகளான குறிப்பிட்ட அந்த சாதியினருக்குள் மட்டுமே புழங்கித் தொலைப்பதில்லை. தமக்கு எதிரான துவேஷங்களை அப்பட்டமாக வெளிப்படுத்தினாலும் தலித்துகளும் பிற்படுத்தப்பட்டவர்களும் சிறுபான்மையினரும் இந்துத்துவ எதிர்ப்பாளர்களும் இவற்றை விலை கொடுத்து வாங்குமளவுக்கு கூருணர்வற்று மொன்னையாகக் கிடக்கிறார்கள் என்ற பலவீனத்தையும் பயன்படுத்திக்கொண்டே கடைவிரிக்கப் படுகின்றன. கருத்துச் சுதந்திரத்தையும் கொழுப்புச் சுதந்திரத்தையும் ஒன்றெனக் குழப்பி நடத்துகிற இந்த செய்தி வியாபாரத்தில் கைவைக்கிற முடிவை தலித்துகளும் பிற்படுத்தப்பட்டவர்களும் மேற்கொள்வதும்கூட இந்தியா டுடே போன்றவற்றின் கொட்டத்தை அடக்கும் வழிகளில் ஒன்றென வலியுறுத்த வேண்டியுள்ளது. எவ்வளவுதான் எதிர்ப்புக் கருத்தை வெளியிட்டாலும் ஒரு பத்திரிகையைப் புறக்கணிப்பது எப்படி சரியாகும் என்று குழப்பமடைகிற பெருந்தன்மைக்காரர்கள், குறைந்தபட்சம் அவற்றில் வரும் விஷமங்களுக்கு எதிர்வினை புரியவும் முன்வருவதில்லை. )

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மண்டல் அறிக்கையை அமல்படுத்தியதற்காக மறைந்த பிரதமர் வி.பி.சிங் மீது பார்ப்பனக்கூட்டம் இன்றளவும் பகையுணர்வு கொண்டிருக்கிறது என்பதைத்தான் அவருக்கான அஞ்சலிக்குறிப்பில் இந்தியா டுடே வெளிப்படுத்தியுள்ளது. கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பிற்படுத்தப்பட்டவருக்கு இடஒதுக்கீடு வழங்கி சமூகத்தை சீரழித்தவர் என்றும் சமூக அடுக்குமுறையைக் குலைத்தவர் என்றும் அது வி.பி.சிங்கை வசைபாடியிருக்கிறது. இடஒதுக்கீட்டால் எதுவும் நடக்கவில்லை என்று சிலர் உதட்டைப் பிதுக்கிக்கொண்டு திரிந்தாலும், இந்தியா டுடேவுக்குத் தெரிந்திருக்கிறது- தமது எந்த நரம்பை அறுத்தெடுத்திருக்கிறது இடஒதுக்கீடு என்று.

மும்பை ஓட்டல்களில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் நாடு திணறிக்கொண்டிருந்தபோது வி.பி.சிங் மரணமடைந்ததால், அவரது மரணத்தை ஊடகங்களால் பொருட்படுத்தவியலாமல் போய்விட்டதாக ஒரு அங்கலாய்ப்பு இருக்கிறது. தப்பு நண்பர்களே தப்பு. யாதொரு பிரச்னையும் இல்லாத காலத்தில் வி.பி.சிங் இறந்திருந்தாலும்கூட இதேயளவில்தான் ஊடகங்கள் பேசியிருக்கும் என்பதை கவனத்தில் வையுங்கள். ஊடகங்களுக்குள் ஆதிக்கம் செலுத்தும் ஒற்றைச்சாதியின் மனநிலையில் வி.பி.சிங் திட்டவட்டமான எதிரியாகவே பதித்துக் கொள்ளப்பட்டிருக்கிறார். எனவே நடுநிலை என்கிற ஜிகினாப்பூச்சுகளை உதிர்த்துவிட்டு அப்பட்டமாக விரோத குரோதங்களை வெளியிட்டு வி.பி.சிங்கின் மரணத்தை அவை கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. தலித்துகளைத் திரட்டி பார்ப்பன மேலாதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவரப் போராடிய அண்ணல் அம்பேத்கரின் நினைவுநாளுக்கும், தனக்குக் கிடைத்த அதிகாரத்தைக் கொண்டு பிற்படுத்தப்பட்டவர்களை மேலெடுக்கத் துணிந்த வி.பி.சிங்கின் நினைவுநாளுக்கும் உரிய முக்கியத்துவத்தைப் பின்னுக்குத் தள்ள உதவியமைக்காக இந்த ஊடகங்கள் பயங்கரவாதிகளுக்கு ரகசியமாய் நன்றி சொல்லவும்கூடும்.

எனவே, வி.பி.சிங்கின் மரணம்கூட இந்தியா டுடே போன்ற பத்திரிகைக்கு நிம்மதியைத் தராமல் போனதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. அதனால்தான் இடஒதுக்கீடு எதிர்ப்பு ரகளையில் தன்னைத்தானே கொளுத்திக்கொண்ட ராஜீவ் கோஸ்வாமி என்கிற சாதிக் கொழுப்பேறியவனின் உடலில் படர்ந்த தீயின் எச்சமே, 2008 நவம்பர் 29 அன்று கங்கைக்கரையில் வி.பி.சிங்கின் சிதையை எரித்ததாக எழுதி ஆத்திரத்தைத் தீர்த்துக்கொள்ள முயன்றிருக்கிறது அது. வி.பி.சிங்குக்கு கொள்ளிவைத்தான் என்றால், ராஜீவ் கோஸ்வாமி அவருக்குப் பிறந்தவனா என்றெல்லாம் கேட்டு கொச்சைப்படுத்த நாம் விரும்பவிலை. ஆனால் எவ்வளவு ஆங்காரமிருந்தால் இப்படி எழுதுவதற்கு இ.டு துணியும் என்பதுதான் இங்கு கண்டனத்துக்குரியது.

ராஜீவ் கோஸ்வாமி எதற்காக தன்னைத்தானே கொளுத்திக்கொண்டான்? அவனும் அவன் பரம்பரையும் ஊருக்கு வெளியே ஒதுக்கிவைக்கப்பட்ட அவமானம் தாங்காமலா? அல்லது அதிகாலையில் எழுந்து ஊரான் பேண்டதையும் மோண்டதையும் அள்ளிச் சுமக்க வேண்டியிருக்கிறதே என்ற அருவருப்பினாலா? அழுக்குத் துணியை வெளுக்கணுமே அல்லது அக்குளிலும் அடியிலும் சவரம் செய்து தொலைக்கணுமே என்ற உளைச்சலிலா? காலத்துக்கும் இப்படி சேற்றில் உழன்று மாய வேண்டியிருக்கிறதே என்கிற வெறுப்பிலா...? அவன் வீட்டுப் பெண்டு பிள்ளைகள் யாருடைய பிறப்புறுப்பிலாவது தீப்பந்தம் சொருகப்பட்டிருக்கிறதா? இத்தனை வகையான கொடுமைகளுக்கும் ஆளாகிற நாங்களே சகித்துக் கொண்டு உயிரோடிருக்கும்போது, தீவைத்துக்கொண்டு சாகுமளவுக்கு உனக்கென்னடாப்பா குறை வச்சோம்.... இந்த நாட்டோட நிலம் நீச்சு, ஆஸ்தி பாஸ்தி, கோயில் குளம் எல்லாத்தையும் கொடுத்தோம். எங்க ஊரு ராஜாவே கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் ராணியை கன்னி கழிக்கும் உரிமையை உங்களுக்குக் கொடுத்தோம். நாலு குதிரையோடும் நாலு வேதசுலோகத்தோடும் வந்த உங்களுக்கு இவ்வளவையும் கொடுத்தப்புறமும் உனக்கு என்னடாப்பா மனக்குறை... ஒருவேளை உங்க தாயாதிகளும் பாட்டன்மார்களும் சொல்கிற அகண்ட பாரதம் உருவாக லேட்டாகும் போல என்று அவசரப்பட்டு கொளுத்திக்கிட்டாயா என்று கேட்பதற்கு அவன் உயிரோடு இல்லை இப்போது.

எதை நீ கொண்டுவந்தாய் அதை நீ இழப்பதற்கு என்ற மோசடி வாசகத்தை ஊரெல்லாம் ஸ்டிக்கர் போட்டு ஒட்டிவைத்துவிட்டு விதி, வினைப்பயன், யாகம், பூசை, புனஸ்காரம் என்பதன் பெயரால் தன் சாதி மட்டுமே சுகித்துவந்த இந்த நாட்டின் வளங்களிலும் அதிகாரத்திலும் பங்கு கேட்டு தலித்துகளும் பிற்படுத்தப்பட்டவர்களும் வருகிறார்கள் என்றதுமே பதறிப்போய் கொளுத்திக் கொண்ட அவன், இந்தியா டுடேவுக்கு வேண்டுமானால் தியாகியாகத் தெரியலாம். ஆனால் அந்த ராஜீவ் கோஸ்வாமியை மசுருக்கு சமானமாகக்கூட நாங்கள் கருதமுடியாது. ஒரு சூத்திரனோ அவர்ணனோ சுவாசித்து வெளியேற்றியக் காற்றை சுவாசிக்க விரும்பாது மூக்கைப் பிடித்துக்கொண்டு செத்துப் போகிறவனை எப்படி தியாகியாகக் கருதமுடியும்?

மண்டல் அறிக்கை அமலாக்கத்தின் மூலம் பிற்படுத்தப்பட்டவர்களிடம் தங்களது இடங்களை இழக்கவேண்டி வருமே என்ற பயத்தில் எப்பாடு பட்டேனும் அதைத் தடுத்து நிறுத்த ஆதிக்கசாதியினர் இறக்கிய துருப்புச்சீட்டுகளில் ஒன்றுதான் ராஜீவ் கோஸ்வாமி. பார்ப்பன மேலாதிக்க கருத்தியலை உள்வாங்கி வளர்ந்த அவனது சாவு பொதுநலன் பொருட்டானதல்ல. அவன் தானாக நெருப்பிட்டுக் கொள்ளவில்லை என்றும், கொளுத்தப்பட்டானென்றும் உலவுகிற கதைகூட உண்மையாக இருக்கலாம். தமது சுயநலத்துக்காக யாரை வேண்டுமானாலும் கொளுத்துகிற நெடிய வரலாறு இந்நாட்டின் பார்ப்பனர்களுக்கு உண்டு. அதோடு அதற்கான பழியை பிறர்மீது சுமத்திவிடுகிற சாமர்த்தியமும் அவர்களுக்கு எப்போதுமுண்டு.

இந்தியா டுடே சொல்வதுபோல வி.பி.சிங்கை எரித்த நெருப்பு ராஜீவ் கோஸ்வாமியுடையதா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இந்த மண்ணின் வேளாண்குடிகளது கால்நடைகளை, நந்தனை, வள்ளலாரை, விதவைகளை, கலைஇலக்கியங்களை யாகமென்றும் ஜோதியென்றும் சதியென்றும் அனல்வாதமென்றும் எரித்துப் பொசுக்கினீர்களே அந்த நெருப்பிலும் கருகாது கனன்று கனன்று காலம்தாவி வந்த எங்கள் கோபம்தான் தன்னைத்தானே எரித்துக்கொள்ளும் மனநெருக்கடிக்குள் ராஜீவ் கோஸ்வாமியை நெட்டித் தள்ளியிருக்கும் என்ற உண்மையை உணர்வதற்கு இந்தியா டுடேவுக்கு திறந்த மனமும் சாதிப்புரையேறாத கண்ணும் தேவை.

ஹோமத்தில் உடைத்துப்போடும் மாங்குச்சியைப்போல முகூர்த்த நேரம் முடிந்ததும் அணைந்துவிடும் என்ற நினைப்பில் இந்துத்வம் கொளுத்திப்போட்டு விசிறி விட்ட நெருப்பு இந்த நாட்டின் நாலாதிசைகளிலும் எமது மகவுகளை பொசுக்கித் தின்றுவிட்டு ரத்தக் கவுச்சியோடு அலைந்து கொண்டிருக்கும்போது ராஜீவ் கோஸ்வாமியின் தற்கொலை மட்டும் இந்தியா டுடேவுக்கு இழப்பாகத் தெரிவதில் நியாயமென்று ஒரு வெங்காயமும் இல்லை- சாதிப்புத்தியைத் தவிர.

மண்டலுக்கு எதிராக மாணவர் போராட்டம் என்ற பெயரில் பார்ப்பனர்களும் அவர்களுக்கு அடுத்த நிலையிலிருந்து சில ஆதிக்க சாதியினரும் நடத்திக் கொண்டிருந்த அட்டூழியங்களை கல்விநிலையங்களுக்கும் வெளியே பரப்பும் நோக்கத்தோடு ரதயாத்திரை கிளம்பினார் அத்வானி- ராமனையும் கூட்டிக்கொண்டு. நாடு முழுவதும் கலவரங்கள்.... கொலைகள்... கொள்ளைகள்... பாலியல் வன்கொடுமைகள்.... காமிக்ஸ் கதைகளில் வருகிற அ.கொ.தீ.கவிடம் மாட்டிக் கொள்கிற ஒரு சிறுமியைப் போல இந்த சமூகம் இந்துத்வாவினால் அடைந்த இழப்புகள் சொல்லி மாளாதவை. பார்ப்பன மேலாதிக்கத்தை இந்த மண்ணில் தக்கவைத்துக் கொள்ள இந்துத்துவ கும்பல் நிகழ்த்திய இத்தனை அட்டூழியங்களுக்கும் வி.பி.சிங்கை பொறுப்பாளியாக்க தனது அஞ்சலிக்குறிப்பை பயன்படுத்தப் பார்க்கிறது இந்தியா டுடே. எனவே அது ‘மண்டல் நாயகரான இவர் இந்திய அரசியலில் மாபெரும் சமூகச் சீரழிவைக் கொண்டுவந்தவர்’ என்ற தலைப்பின் கீழ் அஞ்சலி செலுத்துவதாய் கூறிக்கொண்டு அவதூறு செய்திருக்கிறது.

மண்டல் அறிக்கையின் வழியாக ஜாதியை முன்வைத்து தகுதியைப் பின்னுக்குத் தள்ளி சமூக அடுக்குமுறையை சீர்குலைத்தவர் என்று இந்தியா டுடே வி.பி.சிங் மீது சுமத்தும் குற்றச்சாட்டில் ஒளிவுமறைவு எதுவுமில்லை. ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் இந்த சாதியமைப்பு பார்ப்பனர்களுக்குத் தேவையாயிருக்கிறது என்பதைக் கொஞ்சமும் கூச்சநாச்சமின்றி அது வெளிப்படுத்தியுள்ளது. இதுவரை போட்டியிட வாய்ப்புப்பெறாத சாதியினர், இடஒதுக்கீட்டினால் தங்களைப் பின்னுக்குத்தள்ளி முன்னேறிவிடக்கூடும் என்ற கையாலாகாத்தனத்திலிருந்து அது இவ்வாறு பிதற்றுகிறது. திருடிக்கொண்டு ஓடுகிறவன் துரத்திக்கொண்டு வருகிறவனை திருடன் என்று சொல்லி திசைதிருப்பும் மோசடியைப்போல, தகுதியையும் திறமையையும் நிரூபித்துக் காட்டாமலே சாதியின் பெயரால் எல்லாவற்றையும் அபகரித்துக் கொண்ட கூட்டம், சாதிரீதியான இடஒதுக்கீடு தகுதி திறமையை பின்னுக்குத் தள்ளிவிடும் என்று கதைவிடுகிறது.

இடஒதுக்கீடு கூடாது, தகுதியும் திறமையும் உள்ளவர்கள் போட்டியில் வெற்றிபெற்று வரட்டும் என்கிற வாதத்தில் பெரிய நியாயம் இருப்பதுபோல தோன்றும். அப்படியொரு புண்ணாக்கும் இல்லை. போட்டியிட வருவதற்கே இடஒதுக்கீடு தேவையாயிருக்கிறது. அவ்வளவு மறிப்புகள், தடைகள். சரி, தகுதியும் திறமையும் தங்களிடம் உச்சி முதல் பொ... வரை நிரம்பிக்கிடப்பதாய் அலட்டிக் கொள்கிறார்களே போட்டியிலாவது நேர்மையாக பங்கேற்கிறார்களா என்றால் அதுதான் இல்லை. போட்டித்தேர்வுகளில் பங்கேற்று முன்னேறிய சாதியினரை விடவும் கூடுதல் மதிப்பெண் பெற்றுவிடுகிற ஓபிசி, தலித் மாணவர்களை பொதுப் பட்டியலுக்குள் கொண்டுவராமல் அவரவர் சாதிக்கான ஒதுக்கீட்டு இடத்தில் (கோட்டாவுக்குள்) தள்ளி நிரப்பிவிட்டு, பொதுப்பட்டியலுக்கான 50.5 சதவீதத்தையும் முன்னேறிய சாதிக்கான தனிஒதுக்கீடாக அபகரித்துக் கொள்கிற இந்தியா டுடேயின் சொந்தக்காரர்கள் மானவெட்கமற்று தகுதி திறமை பற்றிப் பேசுகிறார்கள். யுபிஎஸ்சி தேர்வில் பங்கேற்று தேர்ச்சிபெற்ற 474 பேரில், அகில இந்திய அளவில் முதல் மதிப்பெண் பெற்ற முத்தியால் ராஜூ ரேவு என்ற ஓபிசியை கோட்டாவுக்கு தள்ளியதன் மூலம், பட்டியலில் 474வது இடத்தில் இருந்த பார்ப்பனர் ஒருவரை மெரீட்வாலாவாக மாற்றி பொதுப்பட்டியலுக்குள் இழுத்துக்கொண்ட மோசடி இன்று நீதிமன்றத்தில் இழுபட்டு நாறிக்கொண்டிருக்கிறது.

Mandal vs Kamandal என்ற இந்துத்துவாவின் உத்தி கடைசியில் வி.பி.சிங் தலைமையிலான அரசைக் கவிழ்த்துவிட்டது. ஆட்சியை இழந்தாலும் தமது வாழ்வில் ஒரு அடிப்படையான மாற்றத்தைக் கொண்டுவந்தவர் என்ற அடிப்படையில் பிற்படுத்தப்பட்டவர்கள், சமூகநீதி ஆர்வலர்கள் அனைவரின் மனதிலும் என்றென்றைக்கும் தன்னிகரற்ற இடத்தைப் பெற்றிருப்பவர் வி.பி.சிங். ஆகவே, இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்து சமூக அடுக்குமுறையை குலைத்தவர் என்ற இந்தியா டுடேயின் குற்றம்சாட்டுக்கு முழுப்பொருத்தம் பெற்றவர் அவர். பிரதமர் பதவியிலிருந்து வெளியேறியதும் பென்ஷனை வாங்கிக்கொண்டு பேரப்பிள்ளைகளோடு பினாத்திக் கொண்டிருக்காமல் நாட்டின் அரசியல் நிகழ்வுகளில் குறுக்கிட்டு கருத்து சொல்கிறவராகவும் களத்தில் நிற்பவராகவும் அவர் கடைசிவரை இருந்தார் என்பதும்கூட இந்தியாடுடேவுக்கு எரிச்சலூட்டும் விசயம்தான். எனவேதான் மதச்சார்பின்மையின் இஷ்டதெய்வமாக இருந்தார் என்று கிண்டலடிக்கிறது. நடக்கமுடியாமல் நகர்கிற வயதிலும் மதவெறி கொண்டலைகிற வாஜ்பாய் போன்றவர்கள் இருக்கும் நாட்டில், மதச்சார்பின்மை என்ற உயரிய கோட்பாட்டிற்காக தனது மரணம் வரையிலும் ஒருவர் வாழ்ந்தார் என்பது பெருமைக்குரிய செய்திதானே.

-------------------------------
குறிப்பு: மேலேயுள்ள‌ ஆத‌வ‌னின் க‌ட்டுரையிலுள்ள‌ அழுத்த‌ம்( bold) என்னுடைய‌து. ~டிசே
ந‌ன்றி: கீற்று

2 comments:

Anonymous said...

நல்லது என்றுமே (இந்தியா டுடே போன்ற) நாய்களுக்கு தெரிவதில்லை

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஒதுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் மேல் கொட்டிய நஞ்சு; இதில் அதிகம் உள்ளதால்; அந்தப் பாவனைக்குக் கூட அது லாயக்கற்றது.
எரித்தழிப்பதொன்றே ஓரளவுக்குப் பாதுகாப்பானது.