Monday, December 22, 2008

இலங்கை பிரச்சனையும் யுத்த குற்றவாளிகளும்

-தமிழவன்

இலங்கையின் வெளிநாட்டுத் தூதுவர்கள் சிலர் கொடுத்த விருந்துகளில் கலந்துகொண்டிருக்கிறேன். அவர்களில் பலர் சிங்களத்தைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள். பௌத்தமத்தைப் பின்பற்றக் கூடியவர்கள். இலங்கையை வெளிநாட்டார்களிடம் நல்லமுறையில் அறிமுகப்படுத்துவதற்காக அனுப்பி வைக்கப்பட்டவர்கள் அவர்கள். வெறிபிடித்த சிங்களவனைப் போல் இவர்கள் நடந்துகொள்ளமாட்டார்கள். நாகரிகமானவர்கள்.

இன்றைய சூழலில் அமெரிக்காவில் தூதுவராக இருப்பவர்களுக்குத்தான் அதிக மதிப்பு. மூன்றாமுலகத்தைச் சார்ந்த பல நாடுகளுக்கும் அமெரிக்கா தான் முக்கியம். எனவே அங்கிருக்கும் தூதுவர் தங்கள் தங்கள் நாட்டைப் பற்றி அமெரிக்கர்களிடம் நல்லெண்ணத்தை உருவாக்க வேண்டும். அதற்காகத் தான் அவருக்கு அந்த நாடு சம்பளம் கொடுக்கிறது. இலட்சக்கணக்கான டாலர் பணத்தை ஏழை நாடுகளின் தூதுவர்களும் பணக்கார நாடுகளில் செலவு செய்து அந்நாடுகளின் விருந்தும் உபச்சாரமும் நடத்தி ‘நண்பர்களை’ அந்தந்த நாடுகளில் உருவாக்க வேண்டும். அந்தந்த நாடுகளின் சுதந்திரதின விழாக்களும் குடியரசு தினவிழாக்களும் இத்தகைய சந்தர்ப்பங்களாகும். தூதரகங்கள் பற்றித் தெரிந்தவர்களுக்கு இவை தெரியும்.

இப்படிப் பணத்தை நீராக இறைத்த பிறகும் அமெரிக்கா இலங்கையை மோசமான மனித உரிமைக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் நாடாகவே கருதுகிறது. 2007-ஆம் ஆண்டின் அமெரிக்க நிபுணர்கள் தயாரித்த மனித உரிமை ரிப்போர்ட் இலங்கையை ஒரு பயங்கரவாத அரசாகவே கருதுகிறது. State Terrorism என்னும் அரச பயங்கரவாதம் என்ற தொடரை விடுதலைச் சிறுத்தைகள் சமீபத்தில் இலங்கைப்படுகொலைகளை விளக்கப் பயன்படுத்தியது தமிழ் நாட்டினருக்கு தெரிந்திருக்கும். இலங்கை அரசு ஒரு பயங்கரவாத அரசு என்பதை அமெரிக்கா அறிந்திருக்கிறது. இந்து ‘ராம்’ அறியவில்லை. மன்மோகன் சிங்கும் அறியவில்லை.

ஆனால் அமெரிக்கா இன்னும் அதிகாரபூர்வமாக இலங்கையை ஒரு பயங்கரவாத நாடாக அறிவிக்கவில்லை. ஏற்கனவே ஐந்து நாடுகளை பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் அரசுகளைக் கொண்டிருப்பதாக அறிவித்துள்ளது அமெரிக்கா. அவை: க்யுபா, சூடான், வடகொரியா, சிரியா மற்றும் இரான் ஆகும். ரோனால்ட் ரீகனின் முன்னாள் அட்டார்னியான, வழக்கறிஞர் புரூஸ் ஃபீன், இந்த ஐந்து நாடுகளை விட கொடூரமான பயங்கரவாதத்தை, அதாவது ஜீனோசைட் என்றழைக்கப்படும், சொந்த நாட்டு மக்களையே விமானத் தாக்குதல் செய்துகொல்லும் செயலைச் செய்கிறது இலங்கை அரசு என்கிறார் இவர்.

மேலும் புரூஸ் ஃபீன் அவர்கள், இலங்கை அதிபர் ராஜபக்ஷவின் சகோதரரான கோதபைய ராஜபக்ஷ அமெரிக்காவின் குடியுரிமை பெற்றவர். அவர்தான் இலங்கையின் பாதுகாப்புத் துறை செயலர். அவர் மீது அரச பயங்கரவாதத்தைத் தூண்டிவிட்டதற்கு வழக்கு தொடுக்க முடியும் என்கிறார். அரசபொறுப்பில் இருப்பவர்கள் தன்குடிகளில் ஒரு பகுதியினருக்குத் துன்பம் விளைவித்தால் அவர்களைத் தண்டிப்பதற்கு அனைத்துலக சட்டத்தில் விளைவித்ததில் வழிவகைகள் உள்ளன. இதற்கான முன் உதாரணங்கள் உள்ளன.

இலங்கை அரசு மெதுமெதுவாக ஒரு பயங்கரவாத அரசாக மாறியதை அறியமுடியும்.
1. குடியுரிமைச் சட்டம் என்ற பெயரில் இந்தியாவிலிருந்து குடியேறி, இலங்கைத் தேயிலைத் தோட்டங்களில் சுமார் மூன்று நான்கு தலைமுறைகள் உழைத்தவர்கள், இலங்கையின் சுதந்திரத்திற்குப் பிறகு 1948-இல் தேர்தலில் வாக்கு கொடுக்க முடியாதவர்களாக மாற்றப்பட்டனர். கொடூரமான இந்த மனித உரிமை மீறலை இந்தியா கவனிக்காமல் இருந்தது. நேரு தான் இந்த கொடுமையைச் செய்தவர். உலகில் சமாதானம் வேண்டுமென்ற இந்த மனிதர் ஏழை, கூலித் தமிழர்களை மறந்ததுமட்டுமின்றி மனித உரிமை மீறலுக்குத் துணைசெய்தார். அதன் பின் மலைப்பிரதேசத்தில் வாழும் கூலி மக்களில் ஒரு பகுதியினர் மட்டும் தேர்தலில் பங்கெடுக்கும் உரிமை பெற்றனர். இந்த கூட்டு அநியாயத்தை சாஸ்திரி- பண்டாரநாயகா ஒப்பந்தம் என்றனர்.
2. அடுத்ததாக இலங்கை ஒரு பயங்கரவாத நாடு என்ற பாதையில் போவதற்கான எத்தனத்தை 1956-இல் செய்தது. சிங்களம் மட்டும் என்ற அறிவிப்பின்மூலம் அதிகாரபூர்வ மொழியாக முஸ்லிம்களும் தமிழர்களும் பேசும் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டது.
3. அதற்கடுத்ததாக இலங்கை அரசு 1961-இல், தமிழர்கள் காந்தி வழியில் சாத்வீகமாகப் போராடிய போது கைதுசெய்தும், துப்பாக்கி சூடு நடத்தியும் சித்திரவதை செய்தும் மனித உரிமைகளை துவம்சம் செய்தது. அந்த நேரத்தில் மா.பொ. சிவஞானம் இலங்கைக்கு சென்று நிலவரத்தை அறிய விரும்பியபோது இலங்கை அரசு ‘விசா’ வழங்கவில்லை. முதலில் இலங்கைத் தமிழர்களை ஆதரித்த தமிழக கம்யுனிஸ்டுகள் பின், வழக்கம்போல் பின்வாங்கினார்கள். இலங்கை கம்யுனிஸ்டுகளுடன் தொடர்புகொண்டிருந்த பி.ராமமூர்த்தி இலங்கை செல்ல இலங்கை விசா வழங்கியது. சென்று திரும்பிய ராமமூர்த்தி, தமிழர்களுக்கு அநியாயம் செய்யப்படவில்லை என்பது போல் பிரச்சாரம் செய்ததாக மா. பொ. சி கூறினார். (தினமணியில் சமீபத்தில் பி.ராமமூர்த்தியைப் பற்றிக் கட்டுரை எழுதிய அவருடைய மகள் இந்தச் செய்தியையும் சேர்த்து எழுதியிருக்க வேண்டும்.)

மா. பொ. சி அதன் பின்பு ராஜாஜியை அழைத்து தமிழர்களுக்கு நடக்கும் அநியாயத்தைப் பற்றிக் கூறும்படிக் கேட்டுக்கொண்டதாகவும் அதற்கு இசைந்து ராஜாஜி இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்ததாகவும் அன்று மா. பொ. சி. எழுதினார். தொடர்ந்து பொருளாதாரக் கோட்பாட்டை மட்டும் கவனித்த அன்றைய கம்யுனிஸ்டுகளின் பூதங்களால் மூளைச் சலவைச் செய்யப்பட்ட இன்றைய இடதுசாரி கம்யுனிஸ்டுகளும் இலங்கைத் தமிழர்கள் போராட்டத்தைச் சரியாகக் கணிக்கவில்லை. கலாச்சாரம் பொருளாதாரத்தைவிட முக்கியமானது என்று இன்றைய மார்க்சியம் கூறுகிறது. இன்றைய மார்க்சியம் பற்றி அமைப்பியல் சார்ந்த பல சிந்தனையாளர்களின் கருத்துகளும் இன்று தமிழில் பிரசுரமாகியுள்ளன. எனினும் இடதுசாரி கம்யுனிஸ்டுகள் தங்கள் திட்டங்களை மாற்றவில்லை.

4. பின்னர் 1972-இல் இலங்கையில் அரசில் இருந்தவர்களே போதிய பெருவாரி ஆதரவு இன்றி அரசியல் சாசனத்தை மாற்றினர்.
5. 1983-இல் அரசின் ஆதரவுடன், வாக்காளர் பட்டியலைக் கையில் வைத்தபடி தமிழர்களைத்தேடி சிங்கள ரௌடிகள் தமிழ் மக்களைத் தாக்கினர். ஜெயவர்த்தனே இதனை ஆதரித்ததாக வெளிப்படையாகக் கூறினார்.
6. இதற்கிடையில் செல்வநாயகம் 1974-இல் தமிழர் விடுதலை முன்னணி என்ற பெயரில் உபதேர்தலில், தனிஈழம் கோரிக்கையை முன்வைத்தபோது அதற்கு மக்கள் ஆதரவு கொடுத்தனர். கொஸாவா, மக்கள் பாராளுமன்றம் மூலம் தனிநாடு அடைந்தது போல் இலங்கை பாராளுமன்றம் மூலம் ஈழம் எப்போதோ தனிநாடாகியிருக்க வேண்டும். குறைந்தது தனி அரசாகவாவது(separate State) ஆகியிருக்க வேண்டும். 1983 கலவரத்தில் 4000 தமிழர்கள் கொல்லப்பட்டதாகத் தகவல் சொல்கிறது. இது ஒரு ஐரோப்பிய தேசமாக இருந்தால் எப்போதோ பிரச்சனை ஐ.நா. சபைக்குச் சென்றிருக்கும். மூன்றாமுலக மக்களில் ஒரு பகுதித் தமிழர்களின் பிரச்சனையாக இருப்பதால் இது தமிழ் பயங்கரவாதமாக அழைக்கப்படுகிறது.
7. 1979-இல் இலங்கை அரசு ஒரு ‘போட்டா’ சட்டத்தை அமுலுக்குக் கொண்டு வந்தது. இந்த பயங்கரவாதத் தடைச் சட்டம் பெரும்பாலும் எல்லாவித தமிழர்களின் எதிர்ப்பையும் பயங்கரவாதமாகப் பார்க்கவும் எந்தவித தண்டனையும் கொடுக்கவும் வகை செய்தது.
8. 1970-இல் இயற்றப்பட்ட சட்டத்தின் மூலம் தமிழ் மாணவர்கள் சிங்கள மாணவர்களைவிட அதிகம் மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டது.இவ்வாறு ஒரு அரசு குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்த, குறிப்பிட்ட மொழியைப் பேசும், குறிப்பிட்ட மதவழிபாட்டைக் கைக்கொண்ட தனது நாட்டு மக்களை எல்லா வகையிலும் அடிமைபோல் நடத்துகிறது.அனைத்துலக சட்டங்கள் எல்லாவற்றையும் புறக்கணிக்கிறது. குடியுரிமைச் சட்டத்தை இயற்றி பக்கத்திலிருக்கும் இந்திய நாட்டை ஆண்ட வடநாட்டுத் தலைவர்களின் மூலம் தமிழ் மக்களின் அரசியல் உரிமையை நாசம் செய்துள்ளது.

சமீபத்தில் ஜூலை மாதம்(2008) ராஜபக்ஷவின் படைத்தளபதி சரத் பொன்சேகா இலங்கை சிங்களவர்களுக்கு மட்டும் உரிமையுள்ள நாடு என்று கூறியுள்ளார். இலங்கையின் படைகள் சிங்கள மக்களால் மட்டும் அமைக்கப்பட்டது. அமெரிக்க ராஜபக்ஷ கோதபையா பாதுகாப்பு செயலாளர் ஆனபிறகு சட்டத்துக்குப் புறம்பாக சுமார் 1500 கொலைகளை தனது அரசு ஆட்கள் புரிய காரணமாகவுள்ளார். பல நியாயமற்ற கைதுகள், சிறைக்கூட சித்திரவதைகளுக்குக் காரணராகியுள்ளார். சுமார் 2 இலட்சம் மனிதர்களும் அவர்களின் குடும்பத்தினரும் குழந்தைகளும் பல மாதங்களாக நோய்க்கு ஆளாகி போதிய உணவுக்கும் வழியில்லாமல் வாழுகின்றனர். யுத்தத்திற்கு நடுவில் வாழ நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். இதற்கெல்லாம் காரணமான அமெரிக்க குடியுரிமை பெற்ற ராஜபக்ஷவின் சகோதரன் ராஜபக்ஷ கோதபையா ஒரு யுத்த- குற்றவாளி(War Criminal) ஆகும். ஆசியாவின் மனித உரிமை கமிஷன் 2007 பெப்ருவரி மாதம் இரண்டாம் தேதிய ரிப்போர்ட்டின் படி ஒவ்வொரு 5 மணி நேரத்திலும் ஒருவர் இலங்கையில் காணாமல் போவதற்கு ராஜபக்ஷ கோதபையாவும், ராஜபக்ஷவும், சரத்பொன்சேகாவுமே காரணம் என்கிறது. இப்படி மக்கள் காணாமல் போவதற்குச் சட்டத்திற்குப் புறம்பான கைதும், சித்திரவதையும், செத்த உடல்களை அரசாங்கம் தன்னிச்சைப்படி புதைப்பதும் காரணங்களாகும். 2007-இல் அமெரிக்க ஸ்டேட் மனித உரிமை அமைப்பின் ரிப்போர்ட்டின்படி இளவயதுள்ள தமிழர்கள் சட்டத்துக்குப் புறம்பாகக் கொல்லப்பட்டும் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டும் காணாமல் போகிறார்கள்; அரசாங்கத்துக்கு ஆதரவான குழுக்களும் ரௌடிகளும் யாழ்ப்பாணம் முதலிய இடங்களில் இத்தகைய கொடுமைகளைப் புரிகிறார்கள் என்கிறது.

இவை எல்லாவற்றையும் விட அகில உலகத்தின் மனசாட்சியை உலுக்கியிருப்பது ஒரு முக்கிய உண்மையாகும். 1983 இனக்கலவரங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் யாரும் எந்தத் தண்டனையும் பெற்றதில்லை. அதுபோல் இன்றுவரை எந்த சிங்களத் தரப்பினரோ, அரசு தரப்பினரோ தமிழர்களை இனஅழிப்பு செய்ததற்காகத் தண்டிக்கப்படவில்லை. சரத் பொன்சேகா கூறியுள்ளது போல் இது சிங்களவரின் அரசு என்பது உண்மை.

இதற்கான ஒரே தீர்வு சிங்களவர் அல்லாதவர்களுக்கான ஒரு அரசு அந்த தீவில் தோன்றுவது தான். செர்பியாவிலிருந்து கொஸாவோ, பிரிந்தது போல், பிடிக்காத மக்களை அவர்கள் விருப்பப்படி பிரிந்துபோக அனுமதிப்பது தான் அகில உலக சட்டங்கள் எல்லாம் கூறுவது. தேர்தல் மூலம் கிழக்கு திமோர், எரித்திரியா, மான்ட்நிக்ரோ சிறு தேசங்களாக முடியுமென்றால் ஈழமும் தனியாகப்போவதில் தவறில்லை. கனடாவில் க்யுபெக் தனியாகப் போகவேண்டுமா என்று இருமுறை தேர்தல்கள் நடந்தன. அது தேசத்துரோகம் என்றோ பயங்கரவாதம் என்றோ அனைத்துலக மக்கள் கருதவில்லை. அமெரிக்கா கூட ப்யுர்டோ ரிக்கோவுக்கு தனியாகப் போக விரும்பினால் பிரிந்துபோகும் உரிமையைக் கொடுத்துள்ளது. நான்கு சதமானம் மக்கள் கூட பிரிந்துபோக விரும்பவில்லை. பிரிந்துபோவதைத் தடுக்கும்போது வரலாறு இரத்தத்தால் கறைபடும். இவ்வளவு சாவுகள் தேவையா என்று தான் கேட்கத் தோன்றும்.

வரலாற்றில் ஈழத்தமிழர்கள் தனியான மொழி, நடை, உடை, வழிபாடு கொண்டவர்கள். ஆங்கிலேயர் வருவதுவரை யாழ்ப்பாண இராச்சியம் என்று தனிநாட்டை வைத்திருந்தவர்கள் பெருவாரிமக்கள் அவர்களை குறையின்றி பாதுகாக்காததால் ஏற்பட்ட குரல் பிரிவினை. இனி வேறு வழியில்லை என்றுதான் தோன்றுகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் சிலவித மனோபாவங்கள் பரவலாக காணப்படும். அந்த மனோபாவங்கள் காரணகாரியத் தொடர்பற்றுக் கூடச்செயல்படும். அடிப்படையில் இந்த மனோபாவம் மத மனோபாவம். எனவே பெரியாரின் கருத்தைக்கூட ஒரு மதமனோபாவனையாய்தான் புரிந்து கொண்டிருக்கிறது தமிழகம். இத்தகைய மனோபாவங்களே பிரிவினை என்ற கருத்தைச் சுற்றியும் கட்டப்பட்டிருக்கின்றன. அதனால் பிரிவினையை ஒரு மதக்கருத்துருவச் சாயலில் கருதுகிறார்கள். அண்ணாத்துரையவர்களின் பிரிவினை/ பிரிவினையைக் கைவிடுதல் என்பது ஒரு இயங்கியல் கருத்தாக்கம். எந்தச் சிந்தனையையும் புதிதாக, இன்று தோன்றிய பிரச்சனை என்பதுபோல் மதஉணர்வகற்றிச் சிந்திக்க வேண்டும். பெரியார் கற்பித்தது சிந்திக்கப் பயப்படக்கூடாது என்பதைத் தான்.

சிந்திக்கப் பயப்படாமல் இறங்குபவர்களுக்கு இலங்கைப் பிரச்சனையின் அடிப்படைகள் தெளிவாக விளங்கும்; தீர்வும் கூட எளிதாக விளங்கும்.


ந‌ன்றி: உயிரோசை(22.12.2008)

No comments: