Wednesday, December 03, 2008

தமிழுணர்வு பற்றிய மார்க்சிய நிலைபாடு

-தமிழவன்

ஈழப்பிரச்சனையைப் பொறுத்தவரையில் சி.பி.எம்-மும் சி.பி.ஐ-யும் வேறுவேறு நிலைப்பாடுகளை எடுத்துள்ளன என்று செய்தித் தாளில் படித்தேன்.

ஆச்சரியமாக இருந்தது.

தேசிய இனப்பிரச்சனை பற்றி மிக அதிகமாகச் சிந்தித்துள்ளவர்கள் மார்க்ஸியர்கள். ஸ்டாலின், லெனின், மார்க்ஸ், காட்ஸ்கி, ரோஸா லக்ஸம்பர்க் என்று இப்படிப்பவர்.

ஆனால் தமிழகத்தில் மார்க்ஸியத்தின் பெயரால் செயல்படுகிற இரண்டு கட்சிகள் இரண்டு நிலைப்பாடுகளை எடுக்கின்றன.

இந்த இரண்டு கட்சிகளிலும் உறுப்பினர்களாக இருப்பவர்கள் இரு அணியாகப் பிரிகிறார்கள். இரு அணியினரும் தமிழர்கள்தாம். என்றாலும் கட்சியின் மத்தியக் கமிட்டிகள் கூறுவது போல்தான் நிலைப்பாடு எடுக்க முடியும். அந்த மத்தியக் கமிட்டியில் பலமாநிலங்களையும் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் குரல்தான் ஓங்கி ஒலிக்கும். அதில் பொலிட்பீரோ உறுப்பினர்கள், பழைய முதலமைச்சர்கள், பெரிய பெரிய படிப்பாளிகள், சட்ட நிபுணர்கள் இருப்பார்கள். அவர்களைத் திருப்தி படுத்த ஒரு வரதராஜனுக்கு முடியுமா?

ஆக சி.பி.எம்மின் தமிழர்கள் பற்றிய நிலைபாட்டைத் தீர்மானிப்பவர்கள் தமிழர்கள் அல்லாதவர்கள்.

மார்க்சியம் பற்றித் தெரிந்தவர்கள் மொழி, இனம், பிராந்திய உணர்வு அற்ற நியாய உணர்வு மட்டும் கொண்டவர்கள் மார்க்ஸியவாதிகள் என்பார்கள். இதனையும் தாண்டி இன்னொரு விஷயமும் சொல்வார்கள். மார்க்சியக் கருத்தால் வழி நடத்தப்படுகிறவர்கள் மார்க்சீயவாதிகள் என்பார்கள்.

இங்கு இரண்டு கட்சிகளுக்கும் இருவித மார்க்சீயம் இருக்கமுடியாது. மார்க்சியம் என்பது ஒன்றே தான்.

அப்படியென்றால் சி.பி.எம்மின் நிலைப்பாடு அனைத்திந்தியா என்ற கருத்தின்பக்கம் சாய்ந்துள்ளது. சி.பி.ஐ-யின் கருத்து பிராந்தியங்கள் தான் முக்கியம் என்ற கருத்தின் பக்கம் சாய்ந்துள்ளது.

அனைத்திந்தியா என்ற கருத்தாக்கம் பெரும்பாலும் பிரிட்டிஷார் வந்த பிறகு உருவானது. அதுவும் 1947-ன் பிறகு உருவானது. பாக்கிஸ்தான், இலங்கை, பர்மா இவைகளும் பிரிட்டிஷ் ஆட்சிக்குள் இருந்தவை தாம். பாகிஸ்தான் தனி தேசம் என்று ஏன் உருவானது? இலங்கை ஏன் தனித்தே சமானது? (பணிக்கர் போன்றவர்கள் இலங்கையை இந்தியாவுடன் சேர்ப்பதில் தவறில்லை என்று பிரிட்டிஷாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்கள்.)

அதன் பிறகு திராவிடஸ்தான், தமிழ்நாடு போன்றன பிரிய ஆசைப்பட்டன. காஷ்மீர் பிரச்சனை தொடர்கிறது. வங்காளதேசம் இடையில் பிரிந்தது. அஸ்ஸாம், பஞ்சாப் பிரச்சனைகள் தோன்றின.

முதலில் இந்தியா பல மாநிலங்களின் ஒன்றியமாகத் தான் இருந்தது. பின்பு பிரிவினைத் தடைச் சட்டம் வந்தது.

சோவியத் யூனியன் பல நாடுகளாகப் பிரிந்து போனது. யூகோஸ்லேவேக்கியா பலநாடுகளாகப் பிரிந்து போனது.

இதுபோல் முதல் உலகப் போரின் சந்தர்ப்பத்தில் இருந்த தேசங்கள் அல்ல இரண்டாம் உலகப் போர் நடந்த சந்தர்ப்பத்தில் இருந்தவை. நாடுகள் தோன்றுவதும் மறைவதும் சகஜம்.

உலகத் தொழிலாளர்கள் உலகத்தைத் தீர்மானிக்கிறார்கள் என்ற தத்துவத்தைப் பின்பற்றுகிறவர்கள் கம்யுனிஸ்டுகள். குறிப்பிட்ட நாடுகள் என்று பெரிதாய் கவலைப்பட மாட்டார்கள் அவர்கள். உலகமே அவர்களுக்கு ஒன்று.

என்றாலும் லெனின், மார்க்ஸ் போன்ற எல்லோருமே சுய உரிமையுடன் பிரிந்து போக மக்கள் குழுக்களுக்கு உள்ள உரிமையை மறுக்கவில்லை. இங்கிலாந்திலிருந்து அயர்லாந்து பிரிந்துபோக ஆசைப்பட்டால் போகட்டும் என்றுதான் மார்க்ஸ் சொன்னார்.

அதுபோல் பிரிந்துபோனால் அப்படி ஒன்றும் நல்ல வாழ்க்கை கிடைக்காது என்று கருதுகிறவர்கள் மீண்டும் கூட விரும்புகிறார்கள். ஐரோப்பிய யூனியனை அப்படித்தான் பார்க்க வேண்டும். சில அம்சங்களில் தனித்தனியாக வாழ மனிதக் குழுக்கள் விரும்புகின்றன. வேறு சில அம்சங்களைப் பொறுத்தவரையில் சேர்ந்து, இன்னொரு மொழி பேசுபவனோடு, இன்னொரு பிராந்தியத்திலிருந்து வந்தவனோடு ஒன்றிணைந்து வாழ சில குழுக்கள் விரும்புகின்றன. சேர்ந்து வாழ்வதும் பிரிந்து போவதும், வரலாறு, பொருளாதாரம் - எல்லாவற்றிலும் முக்கியமாய் கலாச்சாரத் தேவையைப் பொறுத்தது.

தமிழ்க் கலாச்சாரத்தைப் பொறுத்த வரையில் நீண்ட பாரம்பரியமும் மிகப் பெரும் இலக்கிய வரலாறும் தனிப் பண்பாட்டு, தத்துவக் கூறுகளும் அது கொண்டது. பல விஷயங்களில் தனிக் கூறுகளால் வரையறுக்கப்பட்ட மக்கள் கூட்டம்.

ஆனால் உலக மார்க்சியமும் இன்று மாறிவிட்டது. மார்க்சியம் என்றால் பொருளாதாரம் என்ற காலகட்டம் மாறிவிட்டது. தொழிலாளர் யூனியன் மட்டுமே மார்க்சியர்கள் செய்ய வேண்டியது என்ற பொருளாதாரப்பார்வை கலாவதியாகிவிட்டது. சாதியும் பெண்விழிப்புணர்வும் பொருளாதாரம் காலாவதியாகி விட்ட பார்வை என்பதை சுட்டுகின்றன. தலித் அரசியல் இதைத்தானே சுட்டுகிறது? ஆக, மேலை மார்க்சியர்கள் அறுபதுகளுக்குப் பிறகும் - சோவியத் யூனியன் உடைந்த பிறகும் வலியுறுத்தியது கலாச்சார மேன்மையைத்தான். சோவியத் ஒன்றியம் தனி தேச அடையாள முக்கியத்துவத்தை அங்கீகரித்தது. அதனால் உடைந்தது. கோர்பச்சேவ் அண்ணா வழியை அனைத்துலக அரசியலில் பின்பற்றினார்.

இந்த கலாச்சாரம் தான் பொருளாதாரத்தை விட முக்கியம் என்ற வாதம் தான், தி.மு.க.வால் இந்திய அரசியலில் அறிமுகப்படுத்தப்பட்ட புதுமை. ஆட்சிக்கு வரும்வரை அண்ணாதுரை கூறிய புதிய தத்துவம் இதுதான்.

இந்திய அரசியலானது பொருந்தாத மேற்கத்திய அரசியல் கலைச் சொற்களால் கஷ்டப்பட்டபோது, அண்ணாத்துரை பிராந்தியப் பண்பாட்டை வலியுறுத்தியது முக்கியமான செயல். இந்தியாவுக்குப் பொருத்தமானது கலாச்சார அரசியல்.

நாகாலாந்து, காஷ்மீர், அஸ்ஸாம், அந்தீராவின் விசாலாந்திரா இயக்கம், சிவசேனா கண்ட மகாராஷ்டிரா, இந்தப் பிரச்சனைகளெல்லாம் நாளைய புதிய இந்தியாவின் மாறுபட்ட பிரச்சனைகளைக் காட்டுகின்ற அடையாளங்கள்.

சி.பி.எம். தோழர்கள் பல பிரச்சனைகளில் சரியான நிலைப்பாடு எடுக்கிறார்கள். ஆனால் அனைந்திந்தியாவின் பண்பாட்டு அரசியலைப் புரிந்து கொள்ள மறுக்கிறார்களே. நாளை வரப்போகிற பெரிய பிரச்சனையாக பண்பாட்டு அரசியல் அமையப்போகிறது. எனவே தான் ஈழப்பிரச்சனையில் அவர்கள் எடுக்கும் நிலைப்பாடு சி.பி.ஐ-யை விட வேறுபடுகிறது.

அண்ணாத்துரையையும் அவரது அரசியல் தத்துவத்தையும் சி.பி.எம். பொலிட்பிரோ கவனமாகப் படித்து ஆயும் நாள் வரும். அல்லது தங்கள் மேற்கத்திய தத்துவக்கனவில் மூழ்கி மாய்ந்து போகப் போகிறார்கள். எவ்வளவு பெரிய படிப்பாளிகள் அந்தக் கட்சியில் இருக்கிறார்கள்? இருந்தார்கள்? எவ்வளவு பெரிய தியாக வரலாற்றைக் கொண்ட கட்சி அது? ஆனால் தத்துவத்தில் சோடை போகிறதே என்று வருத்தமாக இருக்கிறது.

இன்று வங்காளப் பிராந்திய கலை இலக்கிய ஆய்வை - கேரள வரலாற்றை, பிராந்திய மக்கள் உணர்வை அடிப்படையாகக் கொண்டு அல்லவா ஆய வேண்டும்.

தொல்காப்பியத்தை ஆய்ந்து அதன் வழி ஓர் அனைத்துலகப் பார்வையை நீங்கள் உருவாக்கினார்கள் அணு எதிர்ப்புப் பார்வை வேறு என்னவாம்? அப்படிப்பட்ட அற்புதமான பார்வையைக் கொடுத்த யெச்சூரியும் பிரகாஷ் காரத்தும் பாராட்டுக்குரியவர்கள். ஆனால் இ.எம்.எஸ் நம்புதிரிபாட் அங்கு செய்தது போல் தமிழக சி.பி.எம், தமிழக வரலாற்றை எடுத்து ஆயாததாலோ என்னவோ தமிழ் உணர்வைப்புரிந்து கொள்ள முடியவில்லை. ஈழப்பிரச்சனையை ஒரு பிரிவினைப் பிரச்சனையாய் பார்க்க முடியாது. அது ஒரு மூலப்படிமப் பிரச்சனை என்று பார்க்க வேண்டும். இதற்கு சொந்த மார்க்சிய அறிவு வேண்டும். மிகப்பெரிய விஞ்ஞான அறிவு என்பது மக்களின் உணர்வைப் புரிந்து கொள்வதுதான்.

இப்போது சி.பி.எம். தோழர்களை அலைக்கழிக்கிற மார்க்சியப் பார்வை, கடன்பெற்ற வெளிநாட்டுப் பார்வை; பழைய பொருளாதாரப் பார்வை; சுயத்தன்மையற்ற பார்வை. ஒவ்வொரு தமிழனுக்குள்ளும் இருக்கிற பார்வையல்ல; 1962-ற்கு பிறகு தமிழக அரசியலில் சி.பி.எம், ஏன் பிற கட்சிகளை அண்டி நிற்க வேண்டியிருக்கிறதென்று இப்போது தெரியும். அகில உலகத்தை ஆச்சரியப்பட வைத்த வரலாற்றுப் பொருள் முதல்வாதத்தையும் இயங்கியல் பொருள் முதல்வாதத்தையும் தமிழனின் உணர்வு கலந்த மூச்சில் படிக்கலாம். படிக்கத்தெரிய வேண்டும். ஜீவானந்தத்திற்கு மட்டும் அது சாத்தியமாகியிருந்தது. அந்தக் குரலின் நீட்சியைத்தான் தா.பாண்டியனிடமும் மகேந்திரனிடமும் நான் சில கணங்களிலாவது கண்டேன்.

சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபை, ஆதிவாசிகள் போன்ற தனிப்பண்பாட்டு அடையாளம் உள்ள மக்கள் கூட்டத்தினர் எந்த நாட்டிலிருந்தாலும் சுய நிர்ணய உரிமை பெறலாம் என்று கூறியுள்ளது.

அகில உலகமும் மீண்டும் மார்க்சியம் சரியான அறிவுமுறை என்பதைச் சுட்டுகின்றது. பொருளாதாரமும் பண்பாடும் இணைந்த பார்வையே இன்றைய மார்க்சியம். இந்த அடிப்படையில் சுரண்டுகிறவர்களையும் சுரண்டப்படுகிறவர்களையும் வேறு வேறு அளவுகோல்களை வேறு வேறு பிராந்தியங்கள் மூலம் காண வேண்டும். அதுதானே இன்றைய மார்க்சிய அடிப்படை. பெஞ்சமின் History against the grain என்று சொன்ன விஷயம் இத்தகைய பார்வை தானே.

அண்ணாத்துரை அவர்கள் தொடக்கத்தில் தமிழக அரசியல் வானில் முப்பதுகளில் தோன்றி செயல்பட்டபோது அவரது அரசியல் நிலைப்பாடுகளில் வெளிப்பட்ட பல உணர்வுகள் கவனமாகப் பரிசீலிக்கப்பட வேண்டியவை. மேலே நான் கூறிய சிந்தனைகள் அப்படிப்பட்டவை.

ஆனால் தி.மு.கவே அண்ணாவின் அந்த பாதையில் நடைபோடவில்லை என்பது வேறு. அப்படி நடை போடாது என்பதை உணர்ந்ததால் தானோ என்னவோ அண்ணா அவர்கள் 1967- தேர்தலில் வெற்றி பெற்ற தன் கட்சி வேட்பாளர் எண்ணிக்கை 110-யைத் தாண்டியதும் கவலைகொண்ட முகத்தோடு காட்சி தந்தார்?


ந‌ன்றி: உயிரோசை (12-01-2008)

6 comments:

-/பெயரிலி. said...

DJ


CPM is ready to accept chauvinist sinhala party, JVP as its fraternity brothers of left, but Tamils of that island 'do not behave in the right way' for CPM.

I am sorry to say this in this way. However there is no other way to say:

"if you just press the CPM jibba jabbawallas' jibbas, you will see where the difference starts from."

I believe, any party linked with Ram in Tamilnadu has a deeply rooted fear that eelam tamils are against the party's state bosses' clan. Other state CPM stalwarts - as far as I see- do not behave against the interests of the state, but only in Tamilnadu. Look at Kerala and West Bengal. Do they behave like Tamilnadu CPM top brass goons act? being proud of your language, culture and heritage is against the national interests. (Of course, there are thousand elements in the 'enriched' culture that hurt the contemporary society. How these CPM people are not after those elements as far as I see).

Read any typical santhippu blog. Is this guy coming from the Tamilnadu mass or from flying saucer from Mars?

Anonymous said...

Peyarili, I dont think that CPI(M) supports JVP. You should read Theekkathir. They are anti-LTTE and want a solution within the
federal set up of Sri Lanka.
'I believe, any party linked with Ram in Tamilnadu has a deeply rooted fear that eelam tamils are against the party's state bosses' clan'.
You too Peyarili :(. CPI(M) is
not anti-Tamil. They are pressing for compulsory tamil in schools,
tamil in high court and in general for tamil medium in education.
Santhippu does not understand a thing. Read Puthu Visai or Semmalar
to know the views of better informed persons in CPM.Both are
in keetru.

Anonymous said...

'இங்கு இரண்டு கட்சிகளுக்கும் இருவித மார்க்சீயம் இருக்கமுடியாது. மார்க்சியம் என்பது ஒன்றே தான்.'
Pure rubbish, because both parties have taken different views on various issues after the split in 1964. The differences in views should be obvious as there is
no single marxism.Tamilavan should know that CPI(M-L) which also swears by Marxism has taken stands
that are opposite of CPI and CPM.
Even in the international marxist
movement there are many groups whose basic views and strategies are very different. This is reflected in issues on nationality and struggles for establishing a nation.
The nationality issue in marxist
thought has been addressed by many
in many ways and by now the problems with position taken by Stalin are well known. Marx and Engles started the debate on nationality question but only fools
will write that all the solutions
can be found in the framework they put forth. Today the in the debates on nation,nationalism and nation-state, marxist perspectives constitute just one stream of thought..

அற்புதன் said...

//மிகப்பெரிய விஞ்ஞான அறிவு என்பது மக்களின் உணர்வைப் புரிந்து கொள்வதுதான்.//

//பொருளாதாரமும் பண்பாடும் இணைந்த பார்வையே இன்றைய மார்க்சியம்.//

தங்களை மாக்சியர்கள் என்று கூறிக் கொள்ளும் கிளிப்பிள்ளைகள் அறிய வேண்டிய , சிந்திக்க வேண்டிய விடயங்களை கட்டுரை தொட்டுச் சென்றிருக்கிறது.

மார்கிசியம் என்பது வெறும் சொல்லாடல்கள் என்பதாகவே சிலர் புரிந்து வைத்திருகிறார்கள்.சமூகம் பற்றிய அறிவு சார் அரசியற் சிந்தைனையே மார்கிசிய வழி என்பதாகவே நான் மார்க்சியத்தைப் புரிந்து கொள்கிறேன்.ஏனெனில் அறிவென்பது வளர்வது, மார்க்ஸ் சொன்னது தான் அறிவென்பது ,அறிவியல் அல்ல.அப்படியாயின் நியூட்டனின் கோட்பாடுகளுடனியே பவுதீக அறிவியல் முடிந்திருக்க வேண்டும்.

சிந்தனைக்கும் உணர்வுக்கும் உள்ள தொடர்பையும் நாம் ஆளமாகப் பார்க்க வேண்டும்.உதாரணத்துக்கு 'எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்' என்னும் உணர்வு மார்க்சிய சிந்தனை வயப்பட்டது.இந்த உணர்வே பலரை ,மார்க்சிய சிந்தனையின் மீது ஈடு பாடு கொள்ள வைக்கிறது.

இதனை இன்னொரு வகையிலும் பார்க்கலாம் , மனிதனின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை ,உறையுள் என்பனவற்றை பொருளாதாராம் தீர்மானிக்கும் வேளை அவனின் உளத் தேவைகளை அவனது கலாச்சார உணர்வு தீர்மானிக்கின்றது.ஆகவே பொருளாதரத் தேவைகளும் கலாச்சாரப் பண்பாட்டுத் தேவைகளும் ஒரு மனிதனுக்கு அடிப்படைத் தேவைகள் ஆகின்றன.

தமிழ்த் தேசியம் என்பதை இத்தகைய உளத் தேவையின் நோக்கிலையே பார்க்க வேண்டி இருக்கிறது.ஈழத்தில் தமிழ்த் தேசிய உணர்வு ஏற்பட்டமைக்கு சிங்களப் பவுத்த பேரினவாத தேசிய எழுச்சி காரணம் என்றாலும், சிங்களப் பவுத்த பேரினவாதம் உருவாதற்கான அடிப்படைகள் கலாச்சாரம் பண்பாடு மற்றும் புவியியற் தேவைகளில் இருந்தே ஆரம்பிக்கின்றன.

-/பெயரிலி. said...

/You too Peyarili :(/

Yes me too.
CPI(M) may not be anti-Tamil (that is my least concern), but certainly they are anti-eelam tamil. While this much of bombing going on in the north and people are got killed, what thEkkathir gives important to publish: "How bad the LTTE is."

If you google you may see how CPI(M)'s stand on JVP changes with time.

I read puthuviasai & semmalar when keetru webpage was started. I do not read them now as I lost interest in backpating petty parrots. To be honest with you, I never thought semmalar was a CPI (M)

(More than anything, when that Mountroad rogue is linked with anything, I do not trust it. I may be blindfolded, but i like it to be so. After all The Hindu mentions Tamil as the vernacular language. since when have the comfortably living English speaking elites started to fight for the vernacular language speaking poor?)

சந்திப்பு said...

இலங்கைப் பிரச்சனை பாட்டாளி வர்க்கத் தீர்வு
தமிழ்மணம் பரிந்துரை : 2/10Pathivu Toolbar ©2009thamizmanam.comஇலங்கையில் அரை நூற்றாண்டுகளாக தீர்க்கப்படாமல் புரையோடிப் போயுள்ள தமிழ் மக்கள் வாழ்விலும், அமைதியை இழந்து தவிக்கும் இலங்கை இனவாத நோய்கும் முற்றுப் புள்ளி வைக்கப்படுமா என்று இலங்கை மக்களும் - தமிழக மக்களும், இடதுசாரி, ஜனநாயக சக்திகளும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

பிரச்சனையின் வரலாற்று வேர்களைத் தேடி அலசிக் கொண்டிருப்பது இப்பதிவின் நோக்கமல்ல; இருப்பினும், சில விசயங்களை தொட்டுக் காட்டி தீர்வை தேடுவது பொருத்தமாக இருக்கும் என்ற நோக்கில் எழுதப்பட்டுள்ளது.
மகத்தான ரஷ்யப் புரட்சியால் உத்வேகம் பெற்று எழுச்சியடைந்த அடிமைப்பட்ட நாட்டு மக்களின் வீரமிக்க போராட்டங்களால் விடுதலையடைந்த நாடுகளில் குறிப்பிடத்தக்கது இந்தியா, பாகிஸ்தான், சீனா, இலங்கை.

தனது காலனியாதிக்க நாடுகளில் இருந்து வெளியேறிய ஏகாதிபத்தியம் இந்தியா, பாகிஸ்தான், சீனாவில் மதத்தின் பெயராலும், சாதியத்தின் பெயராலும், இனத்தின் பெயராலும் விஷ விதைகளை புதைத்து விட்டுத்தான் சென்றன. சீனாவில் மாவோ தலைமையில் மகத்தான சோசலிசப் புரட்சி வெற்றியடைந்ததால் அங்குள்ள தேசிய இன முரண்பாடுகள் உட்பட பலவற்றிற்கு மார்க்சிய அடிப்படையில் தீர்வு காணப்பட்டது.

ஒன்றுபட்ட இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள வற்றாத செல்வங்களை ஒட்டச் சுரண்டிய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்த நாடுகளில் இருந்த உழைக்கும் வர்க்கத்தை பெரும்பான்மையாக பிரதிநிதித்துவப்படுத்திய சாதியத்தை பாதுகாத்ததோடு, அதனால் எழுந்த எந்தவிமான முரண்பாடுகளுக்கும் தீர்வு காண முற்படாமல் - தனது சுரண்டல் கொள்கைகளுக்கு பாதிப்பு வராமல் மட்டும் பார்த்துக் கொண்டது. இறுதியில் இந்த நாடுகளின் தீராத நோயாக மாறுவதற்கு பதியம் போட்டவர்கள் இவர்களே!

அடுத்து இலங்கையில் ஆட்சியதிகாரத்திற்கு வந்த முதலாளித்துவ வர்க்கம். தன்னாட்டு சிறுபான்மை மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு எந்தவிதமான தொலைநோக்குப் பார்வையும் அற்ற நிலப்பிரபுத்துவ மரபுவதிகளாக இருந்ததோடு, ஒடுக்கப்பட்ட சாதி மற்றும் சுரண்டப்படும் மலையகத் தமிழர்களின் எழுச்சி பெற்று வந்த போராட்ட பேரலைகளை சந்திப்பதற்கு திராணியற்றதாக இருந்ததோடு. இதனை திசை திருப்பும் வகையில் தமிழ் மற்றும் சிங்கள அடையாளத்தை முன்னிறுத்தி இனவாதத்திற்கு வித்திட்டன.

முதன் முதலில் மலையகத் தோட்டத் தொழிலாளர்களான அம்மக்களை இலங்கை பிரஜைகளாக ஏற்க முடியாது என்று அறிவித்தது. அதைத் தொடர்ந்து சிங்களத்தை ஆட்சி மொழியாக அறிவித்தது. இதற்கடுத்து உயர் கல்வியில் தமிழர்கள் போட்டியிட முடியாதபடி திட்டமிட்டு முடக்கியது என்று அடுக்கடுக்காக தமிழர்களுக்கு எதிராக தாக்குதல்களைத் தொடுத்தது. இலங்கைத் தமிழர்கள் மீதான இத்தகைய தாக்குதல்களுக்கு எதிராக அன்றைக்கு குரல் கொடுத்தது இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே. இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான இத்தகைய தாக்குதல்களை எதிர்த்து சிங்கள - தமிழ் உழைக்கும் மக்களை பெருவாரியாக அணிதிரட்டுவதில் ஏற்பட்ட தொய்வும், தமிழர் பகுதியில் இதற்கு எதிரான உணர்வு ரீதியான எதிர்வினைகள் - சிங்கள இனவெறியர்கள் தமிழ் மக்கள் மீது தாக்குதல் என்று புறப்பட்டு அங்குள்ள உழைக்கும் மக்கள் இனவாதத்தின் பிடிக்கு இறையானார்கள

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளின் ஆட்சிக் காலத்திலேயே தமிழர்களுக்கான பிரதேச உரிமைகள் குறித்த முழக்கங்கள் எழுந்த போது அவற்றுக்கு தீர்வு காணாத பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இலங்கையை விட்டு வெளியேறியபோது இந்தப் பிரச்சனைகளையும் விட்டுச் சென்றது. மேலும் இலங்கையைப் பொறுத்தவரை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிரான சுதந்திரப் போராட்டம் இந்தியாவில் நடைபெற்ற அளவிற்கு ஒரு வெகுஜன இயக்கமாக மலரவில்லை என்ற விமர்சனமும் உண்டு. இப்படியொரு வெகுஜன இயக்கம் அங்கு கட்டியெழுப்பப்பட்டிருக்கும் என்றால் அந்த மக்களுக்கு இடையிலான இனவேறுபாடுகள் பெரிய அளவிற்கு மோதலுக்கு உள்ளாவதில் இருந்து தடுக்கப்பட்டிருக்கும்.

மேற்கண்ட சூழலில் தமிழர்களுக்காக டி.யூ.எல்.எப்., டெலோ, இ.பி.ஆர்.எல்.எப்., எல்.டி.டி.இ., ஈராஸ் என்று விதவிதமான இயக்கங்கள் முளைத்தெழுந்தன. இது இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் கோபாவேசத்தின் வெளிப்பாடுகளாய் வெளிக்காட்டியது. இருப்பினும் சுதந்திர ஆட்சியாளர்கள் இவற்றுக்கு தீர்வு காணாமல் - இனவெறிக்கு தலைமை தாங்கியது பிரச்சனையை மேலும் சிக்கலாக்கியது. இந்நிலையில் இதற்கான ஒரே தீர்வாக தனி ஈழம் என்ற கோரிக்கை அங்கே முளைத்தெழுந்தது. வட்டுக்கோட்டை மாநாட்டு முழக்கம் பிரிவினை கோஷமாகவும் ஓங்காரம் பெற்றது. அதே சமயம் இலங்கையின் பாரம்பரியத் தமிழர்களான ஈழத் தமிழர்கள் மலையகத் தமிழர்கள் மீதான அரசின் தாக்குதல் தொடங்கியபோது அவர்களுக்காக முதலில் குரல் கொடுக்கத் தயங்கினர். இதில் தந்தை செல்வா விழிப்புடன் இருந்து அதனை ஒரு அரசியல் பிரச்சனையாக முன்னுக்கு கொண்டு வந்தார். மொத்தத்தில் ஈழம் என்ற முழக்கம் ஒட்டுமொத்த இலங்கைத் தமிழர்களுக்கான முழக்கமாக அமையவில்லை என்ற விமர்சனம் இங்கே கணக்கில் கொள்ள வேண்டியது.

இரண்டு கோடிக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட இலங்கையில் 74 சதவிகிதம் பேர் சிங்கள இனத்தைச் சார்ந்தவர்கள். 18 சதவிகிதம் பேர் தமிழ் இனத்தைச் சார்ந்தவர்கள். சோனகர் மற்றும் பரங்கியர்கள் 8 சதவிகிதம். மேலும் தமிழர்களிலேயே பாரம்பரியத் தமிழர்கள் 11 சதவிகிதமாகவும், மலையகத் தமிழர்கள் 7 சதவிகிதமாகவும், சோனகர் என்ற பிரிவினரும் தமிழ் பேசக்கூடியவர்கள்தான். பிரிந்துக் கிடந்தனர். இதற்குள் தமிழ் பேசும் முஸ்லீம்கள் கணிசமான தொகையினர். அதாவது, தமிழர்களிலேயே பாதிக்கப்பட்ட மலையகத் தமிழர்களின் பிரச்சனை தீவிரமானது. மேலும் ஈழம் உட்பட மற்ற பகுதியில் உள்ள தமிழர்களின் அடித்தட்டு உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்த தலித் (தாழ்த்தப்பட்ட) தமிழர்கள் பிரச்சனை தனியானது. மேற்கண்ட முரண்பாடுகளின் ஊடாகத்தான் இனவாதம் அனைத்தையும் ஒன்றாகப் போட்டு கலக்கி தனி ஈழம் என்ற முழக்கமாக முன்னுக்கு வந்தது.

இதில் பிரபாகரன் தலைமையிலான புலிகள் இயக்கம் ஆரம்பத்தில் பெருவாரியான மக்கள் ஆதரவை பெற்றிருந்தது என்பது உண்மையே! இருப்பினும் அது துரோகிகளை அழித்தொழிப்பது என்று நாமகரணம் சூட்டிக் கொண்டு சக போராளி அமைப்புகளைச் சார்ந்த தலைவர்களை வேட்டையாட ஆரம்பித்ததோடு, புலிகள் செயல்பட்ட இடங்களில் மற்ற அமைப்புகள் செயல்படுவதற்கு தடையும் விதிக்கப்பட்டது. இத்துடன் புலிகள் இயக்கம் அமிர்தலிங்கம், சபாரத்தினம், உமா மகேஸ்ரன், மாத்தையா, உட்பட பலரையும் வேட்டையாடியது. அத்துடன் பத்மநாபா உட்பட 14 பேர் சென்னையிலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர் புலிகளால். இறுதியாக இந்த புலி பயங்கரவாதம் ராஜீவ் கொலை வரை நீண்டது. தொடர்ச்சியாக தமிழர் அமைப்புகளுக்கும் - தலைவர்களுக்கும் சிங்களா இனவாதத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை விட அதிகமான பாதிப்பு புலிகளால்தான் ஏற்பட்டது. புலிகள் எப்படிப்பட்டவர்கள் என்பதற்கும், தற்போது இலங்கையில் நிலவும் நிலை எப்படியிருக்கிறது என்பதற்கும் ஷேபாசக்தியின் வாக்குமூலங்கள் நமக்கு சாட்சியங்களாய் முன்னிற்கிறது.

தீராநதியில் அவரது பேட்டியில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில், "உங்களது இந்தக் கேள்விக்குத் தெளிவான ஒரு பதிலைச் சொல்ல முடியாத நிலையில் இப்போதைக்கு நான் இருக்கிறேன். உள்ளதை உள்ளபடி சொல்வதற்கு ஏற்றதான ஒரு சனநாயகச் சூழல் எங்களுக்கு இல்லை. ஈழத்தில் மட்டுமல்ல, புலம்பெயர்ந்த நாடுகளிலும்கூட என் போன்றவர்களுக்குக் கருத்துச் சுதந்திரம் மறுக்கப்படுகிறது. சொல்வதானாலும், எழுதுவதானாலும் கொல்லப்படக்கூடிய ஒரு சூழலில் நாங்கள் வாழ்கிறோம்."

மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில், "எல்லாவிதமான சமூக ஒடுக்குமுறைகளுக்கமான தீர்வு தமிழீழத்திலேயே சாத்தியம் என்று நம்ப வைக்கப்பட்டேன். 80களிலே ஆயுதம் தாங்கிய இயக்கங்களால் கம்யூனிஸ்ட் கட்சிகள், தொழிற்சங்கங்ள், சாதி ஒழிப்பு இயக்கங்கள் என்று எல்லாவித மாற்று அமைப்புகளுமே மெளனமாக்கப்பட்டன.", "இலங்கையைப் பொறுத்தவரை விடுதலைப் புலிகளின் ஆஸ்தான பேச்சாளர்களும் எழுத்தாளர்களும் மட்டுமே கருத்து தெரிவிக்கலாம் என்ற சூழல்தான் இருக்கிறது". என்று உரைத்திருக்கிறார்.

இலங்கையில் உள்ள நிலையை நாம் இங்கிருந்து விளக்குவதை விட, அங்கிருந்தவர் விளக்குவதே பொருத்தமாக இருக்கும் என்பதாலேயே சோஷபா சக்தியின் அனுபவம் மேலே பதியப்பட்டுள்ளது. அதாவது, ஒரு கட்டத்திற்குப் பிறகு இலங்கைத் தமிழர்களின் பிரச்சனை என்பது திசை திரும்பி, சிங்கள இனவாதத்திற்கு எதிராக எழுந்த இயக்கம் தமிழ் பேசும் மக்களுக்கான ஜனநாயகத்தையே அழிக்கும் பயங்கரவாதமாக புலிகளால் மாற்றப்பட்டது. அத்துடன் தமிழ் பேசும் இசுலாமியர்களை 48 மணி நேரத்திற்குள் அனைத்து உடமைகளையும் விட்டு விட்டு வெளியேற வேண்டும் என்று சொல்லி விரட்டியடித்த அமைப்புதான் புலிகள். அத்துடன் புலிகள் அமைப்பின் பேச்சாளர் மறைந்த தமிழ்ச்செல்வன் கூறும்போது ஈழம் விடுதலையடைந்த பிறகுதான் இசுலாமியர்கள் தங்களது உரிமை குறித்து பரிசீலிக்கப்படும் என்று கூறினார். இலங்கை பேரினவாதம் குறித்து வாய் திறக்கும் தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் இனவாதிகள் புலிகளின் இத்தகைய இசுலாமிய மற்றும் மலையகத் தமிழகர்களுக்கு எதிரான போக்கை கண்டும் காணமல் போவதேனோ? மேலும் அந்த அமைப்பிலேயே ஜனநாயகம் நிலவுவதற்கான சூழல் இல்லாததைத்தான் பல்வேறு தலைவர்கள் வெளியேறியதுக் கூட காட்டுகிறது.

மேற்கண்ட பின்னணியில் இனப் பிரச்சனைக்கு தீர்வு காண இந்தியா உதவுவதற்கு மாறாக, எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்தார் போல் புலிகள் உட்பட பல்வேறு அமைப்புகளுக்கு இங்கு ஆயுதப் பயிற்சி உட்பட - ஆதரவும் வழங்கியது. அதாவது இந்தப் பிரச்சனையை கொம்பு சீவி விட்டதில் இந்திரா காந்தி உட்பட முன்னாள் - இன்னாள் முதல்வர்களுக்கும் பங்குண்டு. மறுபுறத்தில் அமைதிப்படை என்ற பெயரில் இந்தியா இராணுவத்தை அனுப்பியது போன்ற செயல்கள் இந்திய அரசுக்கு எதிராக கடும் விவாதங்களைக் கிளப்பியது.

இலங்கையிலோ புலிகள் - சிங்கள பேரினவாதி என்று வர்ணிக்கப்பட்ட பிரமேதாசாவோடு கூட்டணி அமைத்து அமைதிப்யைப்படையை வெளியேற்றினர். அதாவது புலிகளின் இனவாதம் என்பது அதிகார வெறியுடன் கட்டமைக்கப்பட்டதாக உருவெடுத்தது.

இப்படியான குழப்பமான நிலையில் தெற்காசிய பிராந்தியத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியம் திருகோண மலையில் தனது கப்பற்படைத் தளத்தை அமைத்தது. தற்போதுகூட அவர்கள் ஏவுகணை தளம் ஒன்றை நிறுவுவதற்கு தொடர்ந்து முயற்சிப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வந்துள்ளது. இலங்கை அரசு மற்ற நாடுகளுக்கு எதிராக இதுபோன்ற தளம் அமைப்பதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று கூறி வந்தாலும், அமெரிக்கா தொடர்ந்து இலங்கையில் தனது தளத்தை அமைத்திட முயற்சித்து வருகிறது என்ற உண்மை வெளிப்படையானது. அதாவது ஏகாதிபத்தியம் இந்த இன மோதல்களை ஊக்குவித்து வருகின்றது.

புலிகளும் சந்திரிகா மற்றும் நார்வே நாட்டு குழுக்கள் எடுத்து முயற்சிகளை எல்லாம் பலமுறை தூக்கி எறிந்து விட்டு அங்கு தமிழர் பகுதியில் அபலைகளாகவும், அகதிகளாகவும், புலம் பெயர்ந்தவர்களாகவும் மாறிப்போன இலங்கைத் தமிழர்களின் உயிர் மற்றும் வாழ்வைவிட தனது அதிகார வெறி மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகள் இந்தப் பிரச்சனைக்கு ஒரு அரசியல் தீர்வை நோக்கி நகர்த்துவதற்கு தடையாக இருந்துக் கொண்டிருக்கிறது.

இந்தப் பின்னணியில்தான் தற்போது இலங்கை இராணுவத்தின் புலிகளுக்கு எதிரான நடவடிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. புலிகள் தங்களது பரந்து விரிந்த சாம்ராஜ்ஜீயத்தை இழந்து தற்போது முல்லைத் தீவோடு சுருங்கிப் போயுள்ளதும். அங்கு ஒரு லட்சம் அப்பாவி தமிழ் மக்களை கேடயமாக - பணயமாக முன்வைத்து தாக்குதல் நடத்தி வருவதையும் சர்வதேச அமைப்புகள் அம்பலப்படுத்தியுள்ளன. ராஜபக்சே அரசாங்கமும் புலிகளுக்கு எதிரான நடவடிக்கை என்ற காரணத்தைக் காட்டி அரசியல் தீர்வை தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறது. இது எந்தவிதத்திலும் தமிழ் மக்களுக்கு நன்மை பயப்பதாகவும், நம்பிக்கை ஊட்டுவதாகவும் அமையாது. எனவே காலம் தாழ்த்தாமல் - ஒன்றுபட்ட இலங்கையில் வாழும் அனைத்து தமிழ் மக்களையும் உள்ளடக்கிய கிழக்கு - வடக்கு பகுதிகளுக்கான மாநில சுயாட்சியை வழங்கிடவும் இதில் அரசியல், பொருளாதார, கலாச்சார உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இதுஒன்றுதான் அந்த நாட்டின் அமைதியான வாழ்விற்கு வித்திடும் மாமருந்தாக அமையும். இந்திய அரசு இவ்விசயத்தில் இருநாட்டு நல்லுறவின் அடிப்படையில் சமூகமான தீர்வினை காண்பதற்கு அணுக வேண்டும்.

இப்படிக்கூறும்போதுதான் தமிழகத்தில் உள்ள பல இனவாத நக்சலிச அமைப்புகள் உட்பட பலரும் சுயநிர்ணய உரிமை வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். இதற்கு லெனின் உட்பட மார்க்சிய ஆசான்களையெல்லாம் அழைக்கின்றனர். எனவே, அவர்களுக்காக நாமும் அந்த ஆசான்களிடம் இருந்தே தீர்வை நோக்கி அலசுவது பொருத்தமாக இருக்கும். இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் மக்கட் தொகை அதில் உள்ள பிரிவினை மற்றும் புவியில் ரீதியாக தமிழர்களின் வாழ்விட அமைப்பு போன்றவற்றையும் - இலங்கையே ஒரு குட்டி நாடு என்பதை மனதில் வைத்து எதிர்காலத்தில் ஒரு குட்டி சாம்ராஜ்யம் அமைந்தால் அதனுடைய பொருளாதார அமைப்பு எப்படியிருக்கும் என்பன போன்றவற்றை எல்லாம் கணக்கில் கொள்ளாமல் புலிகளின் சர்வாதிகார - முதலாளித்துவ அரசு அமைவதற்காக இங்குள்ளவர்கள் சுயநிர்ணய உரிமை என்று அரசியல் பம்மாத்து காட்டுகின்றனர். இத்தகைய கோரிக்கை குறித்து மார்க்சிய ஆசான் லெனின் கூறுவதை இனி பார்ப்போம்!

பிரிந்து செல்லவும் ஒரு சுதந்திர அரசை உருவாக்கவும் ஒவ்வொரு தேசத்துக்கும் உரிமை உண்டு என்பதை லெனின் உறுதிப்படுத்திய போது எல்லா இடங்களிலும் எல்லாச் சமயங்களிலும் இவ்வுரிமையைப் பயன்படுத்த வேண்டும் என்று வாதிட பாட்டாளி வர்க்க் கட்சி கடமைப்பட்டிருக்கிறது என்ற பொருளில் அவர் சொல்லவில்லை. மாறாக, சில சமயங்களில் பிரிவினை என்பது தகாத ஒன்றாக இருக்கும் என்பதை அவர் ஏற்றுக் கொண்டார்.

தேசங்களுக்குத் தன்னாட்சி உரிமை என்பதை எச்சூழ்நிலையிலும் ஒரு குறிப்பிட்ட தேசத்துக்கு பிரிந்து செல்வதற்கான தகுதி உண்டு என்பதுடன் சேர்த்துக் குழப்பக் கூடாது. பிரிவினைப் பிரச்சனை ஒவ்வொன்றையும் சமூக வளர்ச்சி முழுவதன் நலன்கள், சோசலிசத்துக்கான பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் நலன்கள் ஆகியவற்றுடன் அது பொருந்துகிறதா என்ற தகுதியை மட்டுமே கொண்டு சமூக ஜனநாயகக் கட்சி தீர்மானிக்க வேண்டும்.(லெ.தொ.நூ.19.429)
பக்கம் 80-மார்க்ஸ் முதல் மா சேதுங் வரை

மேற்கண்ட லெனின் நிர்ணயிப்பு இலங்கைப் பிரச்சனைக்கு மிகப் பொருத்தமானது. நமது மார்க்சிய மனப்பாடவாதிகள் பாராளுமன்றம் எப்போதும் பன்றித் தொழுவம் என்று அப்பாவி தொண்டர்களை ஏமாற்றுவது போலவே இவ்விசயத்திலும் சுயநிர்ணய உரிமை என்று பிதற்றுவது வேதனையானது. இதனால் இலங்கை மக்களுக்கு தீர்வு கிடைப்பதற்கு மாறாக தள்ளிப் போடுவதற்குதான் அது உதவிடும். போகாத ஊருக்கு வழிகாட்டுவது என்று சொல்வார்களே அதுபோல...

மேலும் லெனின் கூறுவதைக் பார்ப்போம்:

தேசிய வாதத்தைப் புனிதமாக்க முயலும் எந்த முயற்சியையும் பாட்டாளி வர்க்கத்தால் ஆதரிக்க முடியாது; இதற்கு மாறாக, தேசிய வேறுபாடுகளைத் துடைத்தெறிய உதவும் ஒவ்வொன்றையும், தேசியத் தடைகளை நீக்கும் ஒவ்வொரு முயற்சியையும் பாட்டாளி வர்க்கம் ஆதரிக்கிறது....
பக்கம் 76-மார்க்ஸ் முதல் மா சேதுங் வரை

தமிழ் இன தேசியவாதத்தை கழுவி புனிதப்படுத்தி, முத்துக்குமரனின் மரணத்தின் விளைவால் ஏற்பட்ட அனுதாபங்களை அறுவடை செய்யும் பிணவாத அரசியலுக்கும் சொந்தக்காரர்களாக மாறிட துடிக்கிறார்கள் திரிபுவாத - சந்தர்ப்பவாத தமிழ் இனவாத அரசியல் நடத்துகின்றனர். இதற்கு அடிக்கடி அவர்கள் மார்க்சியத்தையும் துணைக்கு அழைப்பது விந்தையிலும் விந்தைதான்.

மேலும் சுயநிர்ணய உரிமை குறித்து லெனின் மிக அற்புதமாக கூறுகிறார். இத்தகைய சுயநிர்ணய உரிமை - அதாவது ஒரு தேசத்தில் உள்ள மக்கள் பிரிகிறார்கள் என்றால் அது ஒன்றுபடுவதற்காக - இணைதற்காக என்று அறுதியிட்டுக் கூறுகிறார். இது குறித்து லெனின் கூறுவதைப் பார்ப்போம்.

நாம் சுதந்திரமாக ஒன்றுபடுவதை விரும்புகிறோம் அதனால்தான் நாம் பிரிந்து செல்லும் உரிமையை அங்கீகரிக்க வேண்டும். பிரிந்து செல்வதற்கான சுதந்திரமில்லாமல் ஏற்படும் ஒன்றிணைப்பைச் சுதந்திரமானது என்று சொல்ல முடியாது
பக்கம் 76-மார்க்ஸ் முதல் மா சேதுங் வரை

பிரிந்து செல்லவும் ஒரு சுதந்திர அரசை உருவாக்கவும் ஒவ்வொரு தேசத்துக்கும் உரிமை உண்டு என்பதை லெனின் உறுதிப்படுத்திய போது எல்லா இடங்களிலும் எல்லாச் சமயங்களிலும் இவ்வுரிமையைப் பயன்படுத்த வேண்டும் என்று வாதிட பாட்டாளி வர்க்கக் கட்சி கடமைப்பட்டிருக்கிறது என்ற பொருளில் அவர் சொல்லவில்லை. மாறாக, சில சமயங்களில் பிரிவினை என்பது தகாத ஒன்றாக இருக்கும் என்பதை அவர் ஏற்றுக் கொண்டார்.
பக்கம் 80-மார்க்ஸ் முதல் மா சேதுங் வரை

இவைகள் எதையும் கணக்கில் எடுக்காமல் கணித சூத்திரம் போல் பிரிவினைவாதம் பேசி இனவாதத்திற்கு நெய் ஊற்றுகிறார்கள் இனவாதிகள்... இலங்கையில் உள்ள தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமையின் மூலம்தான் தெற்காசிய மக்களின் ஒற்றுமை பாதுகாக்கப்படும் என்ற வரலாற்று உண்மையைக் கூட உணராமல்... ஏகாதிபத்திய அரசியலுக்கு இரையாகும் இனவாதப்போக்கு இயலாமைத்தான் காட்டுகிறது.

இறுதியாக லெனின் கூறுகிறார் இதுபோன்ற நெருக்கடியான சூழ்நிலையில் எப்படிப்பட்ட தீர்வினை முன்னெடுப்பது என்று:

பரந்த பிரதேசத் தன்னாட்சியும் முழுமையான ஜனநாயக சுய நிர்வாகமும் ஆகும். தன்னைத்தானே ஆள்கிற தன்னாட்சிப் பிரதேசங்களின் எல்லைகள் பொருளாதார சமூக நிலைமைகள், மக்கள் தொகையின் தேசிய இயல்பு முதலியவற்றைக் கொண்டு அவ்வட்டார மக்களால் தீர்மானிக்கப்படும்.
பக்கம் 82-மார்க்ஸ் முதல் மா சேதுங் வரை

பாட்டாளி வர்க்கத் தலைவர் லெனின் சுட்டிக்காட்டுவது போல இப்பிரச்சனைக்கு இரு எதிர் எதிரான தீர்வுகள் உள்ளன: பண்பாட்டு - தேசியத் தன்னாட்சி என முதலாளி வர்க்கம் சொல்லும் தீர்வு ஒன்று; பிரதேச மற்றும் வட்டாரத் தன்னாட்சி என்ற பாட்டாளி வர்க்கத் தீர்வு மற்றொன்று.

பண்பாட்டு-தேசியத் தன்னாட்சி என்ற கோட்பாட்டின்படி ஒவ்வொரு தேசிய இனத்தின் உறுப்பினர்களும் ஒரு `தேசியக் கழகத்தை` உருவாக்கிக் கொள்வர். இது கல்வி உள்ளிட்ட அவர்களது சமுக, பண்பாட்டு வாழ்வைக் கட்டுப்படுத்தும். இவ்வகையில் பள்ளிகள் தேசிய இனத்தின் அடிப்படையில் வேறுபடுத்தப்படும்.
பக்கம் 80-மார்க்ஸ் முதல் மா சேதுங் வரை

அதாவது, பொருளாதார மற்றும் புவியில் ரீதியாகவும் அந்த நாட்டின் உள்ள உட்கட்டமைப்புச் சூழலுக்கு ஏற்பவும் - அறிவியல் ரீதியாக பொருந்துவது மாநில சுயாட்சி என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தும் கோட்பாடுதான் பொருத்தமானது. இதனை நோக்கி இலங்கை அரசாங்கத்தை அரசியல் ரீதியாக இலங்கையில் உள்ள உழைக்கும் மக்களை திரட்டிட வேண்டும். இந்த கோரிக்கை முழக்கம் விண்ணில் எழும்நாள்தான் அங்குள்ள மக்களின் விடுதலைக்கான நாளாக மாறும். இத்தகைய நிலை இலங்கையில் எழ வேண்டும் என்றால் தொழிலாளி வர்க்கக் கோரிக்கைகள் முன்னுக்கு வரவேண்டும் என்றால் பயங்கரவாதப் புலிகள் அரசியல் ரீதியாக முறியடிக்கப்பட்டாக வேண்டும். அவர்களிடம் உள்ள அப்பாவி தமிழ் மக்கள் மீட்டெடுக்கப்பட வேண்டும். இலங்கை அரசாங்கமும் இலங்கைத் தமிழர்களுக்கான மாநில சுயாட்சி உரிமையை வழங்குவதற்கு - அரசியல் தீர்வினை காண்பதற்கு முன்வர வேண்டும். இதுமட்டுமே இலங்கையையும் - தமிழ் மக்களையும் காப்பாற்றும். அதுவரை அதிதீவிர சீர்குலைவு சித்தாந்தவதிகளின் செயலினை லெனின் வார்த்தைகளில் விமர்சிக்க வேண்டும் என்றால் முதலாளிகளின் பின்னால் வால்பிடிக்கும் சுயநிர்ணய உரிமை என்று முழக்கமிடுவது பாட்டாளி வர்க்கத்தின் நலன்களை மறுக்கும் மாபெரும் மோசடியாகும்.

புத்தகத்தின் வாயிலாக மார்க்சியம் கற்க முயலும் நமது நண்பர்கள் இனியாவது பூமியில் கால் வைத்து நடப்பார்கள் என்று நம்புவோம்!
கே. செல்வப்பெருமாள்

http://santhipu.blogspot.com/2009/02/blog-post_8815.html