Wednesday, December 10, 2008

க‌விஞ‌ர்க‌ளின் க‌ண‌ட‌ன‌ப்போராட்ட‌ம் குறித்த‌ இர‌ண்டு ப‌திவுக‌ள்

இலங்கையில் நடைபெற்று வரும் இன அநீதிகளை கண்டித்து கவிஞர்களின் கண்டன கவிதை போராட்டம் சென்னையில் நடைபெற்றது

-யசோதா (இந்தியா)



இலங்கையில் நடைபெற்று வரும் இன அநீதிகளை கண்டித்து சென்னை மெரீனா கடற்கரை காந்தி சிலைக்கு அருகில் கவிஞர் இன்பா சுப்ரமணியம் தலைமையில் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட கவிஞர்கள் கலந்துகொண்டு கண்டன கவிதையை வாசித்தனர்.

இந்த கண்டன கவிதை போராட்டத்தில் கவிஞர் கனிமொழி, கவிஞர் தமிழச்சி, கவிஞர், சுகிர்தராணி,கவிஞர் இன்குலாப், கவிஞர் ஜெயபாலன், கவிஞர் லீலா மணிமேகலை உள்ளிட்ட பல முன்னணி படைப்பாளிகள் கலந்து கொண்டு தங்கள் கவிதை மூலம் இலங்கை அரசிற்கு கண்டனத்தை தெரிவித்தார்கள். இங்கு கிராமியப்பாடல்கள், ஒப்பாரிப்பாடல்கள் போன்றனவும் பெண்களால் பாடப்பட்டது


இந்த போராட்டத்தை ஒழுங்கு செய்த கவிஞர் லீனா மணிமேகலை கூறுகையில் "இலங்கையில் நடைபெற்று வரும் இன அழித்தொழிப்பு நடவடிக்கையினை நிறுத்துவதற்காகவும் முதலில் சமாதானத்திற்கான உரையாடலை தொடங்கவேண்டும். அதன் முன் அங்கு போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும். நியாயமான அரசாக இலங்கை அரசு நடந்து கொள்ளாததால் அங்கு நிலவி வரும் இன பிரச்சினை உள்நாட்டு பிரச்சினை என்ற எல்லையை தாண்டி சர்வதேச பிரச்சினையாக மாறிவிட்டது,என்றும் தமிழக மீனவர்களையும் இலங்கைத் தமிழர்களையும் அழித்தொழிக்கும் இலங்கை அரசுக்கு எதிராகவே இக் கவிதைப்போராட்டம் என்றும் . இலங்கை அரசு போர்நிறுத்தம் செய்யவேண்டும் சமாதானம் பேசும் போது கலைஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் போன்றவர்களையும் உள்ளடக்கவேண்டும் என்றும் அவர்கள் தீர்மானம் எடுத்துள்ளனர்.

ந‌ன்றி: ஊட‌று
------------------


கண்டனக் கவிதைப் போராட்டம்-ஓர் பதிவு (தமிழ் நதி)

கடலலைகளின் பின்னணியில்
கவிஞர்களின் கண்டனக் கவிதைப் போராட்டம்

பல்லாண்டுகளுக்குப் பிறகு ஈழத்தமிழர்கள்பால் தமிழகத்தின் கவனமும் அனுதாபமும் குவிந்திருப்பதன் நீட்சிகளில் ஒன்றாக, கடந்த ஏழாம் திகதி ஞாயிற்றுக்கிழமை மெரீனா கடற்கரையில் நடந்தேறிய கண்டனக் கவிதைப்போராட்டத்தைக் கூறலாம். இந்நிகழ்வானது, ஈழத்தில் இடம்பெயர்ந்து அகதிகளாக அலைக்கழியும் மக்களின் துயரத்தினை வெளிப்படுத்தி அவர்களை நோக்கி ஆதரவுக் கரம் நீட்டியிருக்கிறது.

காலை ஒன்பது மணிக்கு ஆரம்பித்து மாலை ஐந்து மணிவரை நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழகத்திலின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கவிஞர்கள், கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் வந்து கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

கண்டனக் கவிதைப் போராட்டத்தில் தொடக்க உரை நிகழ்த்திய கவிஞர் லீனா மணிமேகலை, அகதிகளாகி ஈழத்தமிழர்கள் படும் அவலங்களை எடுத்துரைத்ததுடன், அப்பிரச்சனை குறித்த அரசியல் மௌனங்களைச் சாடிப்பேசினார். பறையொலிக்கும், கற்பனை வளம் மிகுந்த ஒப்பாரிக் கலைஞரான லஷ்மியின் பிரலாபத்திற்கும் அலையோசை பின்னணி இசைத்தது. பல்வேறுபட்ட உணர்வுடையவர்கள், கருத்துடையவர்கள் ஒரு நல்ல நோக்கத்திற்காகக் கூடியிருப்பதையிட்டு மகிழ்வதாக கவிஞர் சுகிர்தராணி தனது உரையில் குறிப்பிட்டார். கவிஞர் இன்பா சுப்பிரமணியம் பேசுகையில், "நமது முதுகில் இருக்கும் உலகத்திற்குக்
கண்கள், காதுகள் மட்டுமே இருக்கின்றன. வாய் கிடையாது. அதனால் நாம்
பிரயோகிக்கும் வார்த்தைகளில் கவனம் வேண்டும்"என்றார். எந்த அரசையோ
தனிமனிதரையோ சாடிப் பேசுதல் ஆகாது என்ற நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி, அத்தனை கவிஞர்களுக்குமிடையில் சப்பணமிட்டு அமர்ந்திருந்ததை நிகழ்வு நெடுகிலும் காணக்கூடியதாக இருந்தது.

யவனிகா ஸ்ரீராம், எஸ்.தேன்மொழி, கம்பீரன், தமிழச்சி தங்கபாண்டியன், தாரா கணேசன், கு.பழனிச்சாமி, ராஜா சந்திரசேகர், தமிழ்ச்செல்வன், செல்வகுமாரி, சரவணகுமார், மரகதமணி, நிஷாந்தினி, பாலை நிலவன், அக்கினி சிவகுமார்,அ.வெண்ணிலா, லதா ராமகிருஷ்ணன், பழ.புகழேந்தி, கண்டராதித்தன்,அய்யப்பமாதவன், ஸ்ரீதேவி, டி.எஸ்.எஸ்.மணி, சக்தி அருளானந்தம், இளங்கவி அருள், பத்தினாதன், சுகுணா திவாகர், இன்குலாப், இளம்பிறை, கோணங்கி,பாக்கியம் சங்கர், சல்மா பிரியதர்சன், நரன், கு.உமாதேவி, ராஜதுரை,வ.ஐ.ச.ஜெயபாலன், தமிழ்நதி,பிரியம்வதா,இசை,கனகபாரதி,ஐகோ, யாழன் ஆதி,இன்பா சுப்பிரமணியம், பவுத்த அய்யனார், வ.கீதா, அ.மங்கை, ரேவதி, உமாஷக்தி பிரசன்னா ராமஸ்வாமிஅபிலாஷ், விஜயலஷ்மி, கனிமொழி, சுகிர்தராணி, தினகரன், சந்திரா, கிருஷாங்கினி, ஆனந்த், செந்தமிழ் மாரி, யூமா வாசுகி, ரமேஷ் பிரேதன், அரங்கமல்லிகா இவர்களோடு மேலும் பலர் கவிதை வாசிப்பில் கலந்துகொண்டனர். செம்பை மணவாளன், றொபேட், ரவி சுப்பிரமணியன் ஆகியோரால் இடையிடையே உணர்வெழுச்சி மிக்க பாடல்களும் பாடப்பட்டன.

ஈழத்துக் கவிஞர்களான கருணாகரன், சேரன், பா.அகிலன், சிவரமணி ஆகியோரின் கவிதைகளும் அங்கு வாசிக்கப்பட்டன. ரவி சுப்பிரமணியனின் கணீரென்றதும் உருக்கமானதுமான வாசிப்பு அக்கவிதைகளை மெய்யான பொருளில் வெளிக்கொணர்ந்தன.

கவிஞர் யூமா வாசுகி தனதுரையில், 'கவிஞர்களின் கண்டனப் போராட்டமானது உணர்வெழுச்சி மிக்க எதிர்ப்புக்குரல்'என்றார். மதியத்தின் பின்னான நிகழ்வுகளை எழுத்தாளர் கோணங்கி, கவிஞர் ரவி சுப்பிரமணியம் ஆகியோர் தொகுத்தளித்தனர். கவிஞர்களின் போராட்டத்திற்குஆதரவு தெரிவித்து கனடாவிலிருந்து எழுத்தாளர் அ.முத்துலிங்கம், இளங்கோ, இலண்டனிலிருந்து எழுத்தாளர் நாகார்ஜுனன் ஆகியோர் அனுப்பியிருந்த அஞ்சல்கள் அக்கூட்டத்தில் வாசிக்கப்பட்டன. இறுதியாக, வளர்மதியின் நெறியாள்கையில் நாடகம் ஒன்று நிகழ்த்தப்பட்டது. இனப்படுகொலையை மையமாகக் கொண்ட அவ்வளிக்கை பெரும் வரவேற்பைப் பெற்றது.

கண்டனப் போராட்டத்தின் தீர்மானங்களை தமிழில் கவிஞர் லீனா மணிமேகலையும் ஆங்கிலத்தில் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியனும் வாசித்தார்கள். பல்வேறு ஊடகங்களைச் சேர்ந்தவர்களும் அங்கு சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பதிவு : தமிழ் நதி

ந‌ன்றி: tamilpoets.blogspot.com

1 comment:

King... said...

கவிஞர்கள் கண்டனம் பற்றிய தகவலை தமிழனின்
(தமிழன்-கறுப்பி...) பதிவில் இருந்து அறிந்து கொண்டேன் பகிர்வுக்கு நன்றி அண்ணன்...