- ஈழத்தமிழர் தோழமைக் குரல்
Stop the war in Srilanka என்று அச்சிடப்பட்ட கருப்புவண்ண`டி.சர்ட் அணிந்து 'ஈழ மக்கள் தோழமைக் குரல்' அமைப்பினைச் சேர்ந்த தோழர்களின் பயணம் பிப்ரவரி பத்தில் சென்னையில் தொடங்கி டில்லி மண்டி ஹவுஸ் பகுதியை பிப்ரவரி பனிரெண்டில் அடைந்தது. ஒவ்வொருவரின் கைகளும் சென்னை கவின் கலை கல்லுரி மாணவர்கள், ஒவியர்கள் இராப் பகலாய் வரைந்து தந்த நூற்றுக்கணக்கான, போர் நிறுத்தம், ஈழ மக்களின் பாதுகாப்பு, வாழ்வுரிமை, தமிழ் மீனவர்களின் கோரிக்கைகள், அகதிகளின் மாண்புரிமை ஆகிய முழக்கங்கள் அடங்கிய கைப்பதாகைகளை ஏந்தியிருந்தன. மண்டி ஹவுஸ் இருக்கும் பகுதியிலிருந்து ஊர்வலம் புறப்பட்டது. பறை காய்ச்ச தீ மூட்டப்பட்டது. கொழுந்துவிட்டு எரிகின்ற தீயில் காய்ச்சிய பறைகளை புத்தர் கலைக்குழுவினர் அடிக்க, ஊர்வலம் புறப்பட்டது.
ஜந்தர்மந்தர் வரை இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் நடைபயணம் நடந்தது. பேருந்துகள், மகிழுந்துகள் , தானிகளில் சென்ற பயணிகள் கைப்பதாகைகளைப் படித்துக் கொண்டே சென்றனர். தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் முழக்கங்கள் எழுப்பப் பட்டன. 'போரை நிறுத்து; போரை நிறுத்து ஈழத்தில் நடக்கும் போரை நிறுத்து, இந்திய அரசே போரை நிறுத்து, காந்தி தேசம் கொல்வதா, புத்த தேசம் அழிப்பதா, எங்கள் ரத்தம் ஈழத்தமிழர் ரத்தம், விளம்பர இடைவேளைக்குப் பிறகு தொடங்கும் போர்' என்பது போல பல முழக்கங்கள் டில்லி குளிர்க்காற்றில் கலந்து தேசிய இனங்களின் காதுகளை அறைந்தது.
முன்னால் பறையிசையும் அதற்கு அடுத்து படைப்பாளிகளும், மனித உரிமை ஆர்வலர்களும், மீனவ நண்பர்களும் அதனைத்தொடர்ந்து மாணவர்களும் பேரணியில் அணிவகுத்தனர். டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்களும், உச்ச நீதி மன்ற வழக்கறிஞர்களும், கலைஞர்களும் இந்த பேரணியில் முக்கிய பங்காற்றினர்.
பாராளுமன்றத்தை நெருங்க நெருங்க ஊர்வலத்தில் வந்தவர்களின் உள்ளங்களில் உத்வேகம் கூடிக்கொண்டே இருந்தது. பாராளுமன்ற வீதியை நெருங்க காவலர்கள் உள்ளே போகக்கூடாது என்று தடுக்க ஈழ மக்கள் தோழமைக்குரல் நிறுத்தப்பட்ட இடத்திலேயே ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். சிறிது முன்னேறி மீண்டும் வேறு ஒரு இடத்தில் காவலர்கள் தடுக்க அங்கேயும் சாலையிலேயே அமர்ந்து முழக்கங்கள் எழுப்பினர். டில்லி மற்றும் தேசிய ஊடகவியலாளர்கள் சூழ ஈழத் தமிழ தோழமைக் குரலின் செய்திகளும், கோரிக்கைகளும் நாடெங்கும் சென்று சேர்ந்தது.
பிறகு புத்தர் கலைக்குழுவின் குரலிசைக்கலைஞர் மகிழினி அவர்கள் ஈழம் சார்ந்த துயரங்களை ஒப்பாரிப்பாடலாகப் பாடினார். பறையிசையும் பாடல்களும் பாராளுமன்ற தெருவை வெம்மையாக்கின. சமர்ப்பா குமரன் அவர்கள் பாடிய பாடல்கள் எழுச்சிக்கொள்ள வைத்தன. இதற்கிடையில் ஜே.என்.யு.பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் தர்ணாவிற்கான ஏற்பாட்டினையும் ஒலி பெருக்கியும் ஏற்பாடு செய்தனர். 33% இட ஒதுக்கீடு வேண்டி போராட்டம் நடத்தி முடித்த பெண்கள் இயக்கத் தோழர்கள் இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் தேசியச் செயலாளர் தோழர்.ஆனி ராஜா அவர்களின் தலைமையில் ஈழத்தமிழர் மீது நடத்தபடும் போரை நிறுத்தக்கோரி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் உற்சாகமாக பங்கேற்றனர். ஈழப்பிரச்சினை தமிழர் பிரச்சினை மட்டுமல்ல, மானுடத் துயர் என்றும், அந்த துயரைத் துடைக்க தம்மால் ஆனவற்றையெல்லாம் செய்வோம் என ஆதரவு குரல் எழுந்தது. எழுத்தாளர்கள், கவிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோரின் உரைவீச்சு உணர்வுகளை ஒன்றிணைத்தது. டெல்லி பல்கலைக் கழக மாணவர்கள் முழக்கங்களை இந்தியில் எழுப்ப, பெருங்கூட்டம் திறண்டது.
போராட்டத்தின் இறுதிக்கட்டம் உணர்ச்சிமிக்கதாக அமைந்தது. சமர்ப்பா குமரன் பாடிய 'செவல மாடு கட்டியிருக்கும் சலங்க ஒடியட்டும்; சிங்களவ கொட்டமடிக்கும் இலங்க ஒடியட்டும்' பாடலுக்கு எல்லாரும் இணைந்து ஆட ஆரம்பிக்க வேகம் கூடிக்கொள்கிறது. பல்வேறு இடங்கள்லிருந்த மக்கள் எல்லாரும் அங்கே வந்து ஒருமித்தனர். இந்த நேரத்தில் டில்லி மாணவர் அமைப்பை சார்ந்த ஆதிகேசவன் அவர்கள் இந்தியில் பேசிய இறுதி உரை அனைவரையும் கவர்ந்தது. இலங்கை அரசின் கொடூரம்; இந்திய அரசின் துரோகம், தமிழக அரசியல் கட்சிகள் ஈழப்பிரச்சினையை தேர்தல் சந்தையில் விற்கும் நிலைப்பாடு ஆகியவற்றைக்குறித்து சூடான விவாதங்களோடு ஆர்ப்பாட்டம் முடிந்தது
இந்திய இறையான்மைக்கு விழுந்த பலத்த அடி
ஈழத்தமிழர் தோழமைக் குரல் அமைப்பின் சார்பில் இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்தக் கோரியும் ஈழத்தமிழர் வாழ்வாதாரங்களை உறுதிப்படுத்தக் கோரியும் தலைநகர் டெல்லியில் இரண்டாவது நாளும் போராட்டம் தொடர்ந்தது.ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள பாராளுமன்ற வீதியில் அமைக்கப்பட்டிருந்த உண்ணாவிரதப் பந்தலில் போரை நிறுத்த வலியுறுத்தும் முழக்கங்களுடன் எழுத்தாளர்கள்,மாணவர்கள்,மீனவ அமைப்பினர், டெல்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தொடர் உண்ணாவிரதத்தில் அமர்ந்தனர். சமர்ப்பா குமரன் புத்தர் கலைக்குழுவோடு இணைந்து எழுச்சிப்பாடல்களைப் பாட பறையிசையும் ஆட்டமும் பந்தலின்முன்பு ஜந்தர் மந்தரில் வெவ்வேறு சமூகப் பிரச்சினைக்ளுக்காக கூடியிருந்த மற்ற மாநிலப் போராளிகளின் கவனத்தை ஈர்த்தது.
உறவுகளை இழந்தவர்கள் தலைமுடி நீக்குவது என்பது தமிழர்களின் மரபுவழிப் பண்பாடு. ஈழத்தில் கொல்லப்பட்ட தமிழர்களின் நினைவாகவும் போரை நிறுத்த வலியுறுத்தியும் மொட்டைப் போடும் போராட்டத்தை நடத்தினார்கள் மாணவர்கள்.பறையும் வாழ்த்தொலியும் வேகமாக எழும்ப சாமுவேல்,ரமேஷ்,டில்லிராஜ்,வினோத்குமார்,மற்றும் எழுத்தாளர் லஷ்மி சரவணக்குமார் ஆகியோர் மொட்டை அடித்து தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர். இது சுற்றியிருந்த அனைவரையும் வேறொரு தளத்தில் பிரச்சனையின் தீவிரத்தை உணர வைத்தது. அருகே வைகோ உண்ணாவிரதம் இருந்ததால் மதிமுக தொண்டர்கள் வந்து ஈழத்தமிழர் ஆதரவுக் குரல் அமைப்பினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றனர்.திடீரென ராஜபக்சேவின் படத்தை அனைவரும் செருப்பால் அடித்தனர்.
பாராளுமன்றக் கூட்டத்தொடர் நடந்துக்கொண்டிருக்கும் இந்த சூழலில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் பற்றி கேள்விப்பட்ட தமிழக மற்றும் பாண்டிச்சேரி பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு வந்தது. அதில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், கிருஷ்ணன், பா.ம.க. உறுப்பினர்கள் கு.ராமதாஸ், ஏ.கே.மூர்த்தி, மோகன், கு.ராமதாஸ் உண்ணாவிரதத்தை வாழ்த்திப் பேசினர். அவர்கள் உரையாற்றும் போது 'எத்தனை முறை கேட்டும் பாராளுமன்றத்தில் ஈழத்தமிழர் பிரச்சனைக்குறித்து பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி தரவில்லை. நீங்கள் இங்கே வந்து போராடியதன் விளைவுதான் இன்று பேசுவதற்கு எங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஈழத்தில் நடக்கும் போரை நிறுத்தச் சொல்லி பாராளுமன்றத்தில் நாங்கள் தொடர்ந்து வற்புறுத்துவோம். அதற்காக எதையும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.' என்றார். போராட்டத்திலிருந்த மாணவர்கள் இந்தியா போரை நிறுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவிலகவேண்டும் என்று முழக்கம் எழுப்பினார்கள்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான டி.ராஜா போராட்டத்தில் பங்கேற்றுப் பேசினார். ஈழத்தில் மிகவும் கொடுமையான முறையில் தமிழர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். 'ஈழத்தில் நடக்கும் போருக்கு இந்திய அரசு ஒருவகையில் காரணமாகவே இருக்கின்றது.
போரை தடுக்க வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு இருந்தாலும் அதுவே போரை நடத்திக்கொண்டிருப்பதுதான் மிகவும் கொடுமை. இந்திய அரசு போரை நிறுத்தவேண்டும் என்று பாராளுமன்றத்தில் தொடர்ந்து உரக்க குரல் எழுப்புவேன்' என்று உரையாற்றினார். யாழ்ப்பாணப் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் உரையும், கலந்துரையாடலும், ஈழத்தின் அவலத்தை உக்கிரமாக பதிவு செய்து, ஈழ மக்களின் விடுதலைப் போராட்டதை அங்கீகரிக்கும் அவசியத்தை அனைத்து தளங்களிலும் அழுந்த எடுத்துச் செல்லும் உத்வேகத்தை தந்தது.
இச்சூழலில் போராட்டவாதிகளில் ஒரு பிரிவினர் எழுத்தாளர்களில் கவிஞர் லீனா மணிமேகலை, கவிஞர் மாலதி மைத்ரி, ஊடகவியலாளர் இன்பா சுப்ரமணியம், எழுத்தாளர் கோணங்கி, கவிஞர். யவனிகா ஸ்ரீராம், அஜயன் பாலா உள்ளிட்ட குழுவினரும் மாணவர்கள் வெங்கடாசலம்,பிரபாகரன், தர்மேந்திரன் ஆகியோர் கொணட குழுவும் மற்றும் மனித உரிமையாளர்கள் தனம், மஹேஷ், மீனவ இயக்கத் தோழர்கள் லிங்கன், பாரதி என 28 பேர் இலங்கை தூதரகம் முன் சென்று முற்றுகைப் போராட்டமும் ராஜபக்சேவின் கொடும்பாவி எரிப்பும் நடத்த புறப்பட்டனர். தூதரகம் முன் சென்றதும் தாங்கள் கொண்டுவந்த ராஜபக்சேவின் கொடும்பாவியை கொளுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
இலங்கைத் தூதரகத்தின் வாயிலில் வைக்கப்பட்டிருந்த பெயர்ப்பலகையை மிகுந்த ஆவேசத்துடன் செருப்பால் அடித்தனர். ராஜபக்சேவின் உருவப்படத்தினை மிதித்தும் அதை கொளுத்தியும் முழக்கங்கள் எழுப்பியவாறே இருந்தனர். பெண்கள் I am your sister rape me, I am your mother rape me, Leave our sisters in Eelam என்று எழுதப்பட்ட பதாகைகளை கைகளில் வைத்திருந்தனர். தூதரகத்தினை காவல் காத்த காவலர்கள் துப்பாக்கிகளுடனும் நீண்ட தடிகளுடனும் வந்து சூழ்ந்து நின்றனர். இதனால் அப்பகுதி ஒரு போர்க்களக் காட்சியினை அடைந்தது. இதற்கிடையில் டெல்லி காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களைச் சூழ்ந்துக் கொண்டது. திடீரென அனைவரும் 'போர் நிறுத்தம் செய்' என்று கத்தியவாறே அந்த முக்கிய சாலையில் சென்று படுத்து மறித்தனர். போக்குவரத்து தடை ஏற்பட்டது. இதனால் காவல்துறை போக்குவரத்தை வேறு சாலைப் பக்கம் திருப்பியது. தொடர்ந்து சாலையில் அமர்ந்து இலங்கை அரசு ராஜபக்சே ஆகியோருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிக்கொண்டே இருந்தனர்.
காவல்துறை அவர்களை கைது செய்து சாணக்கியபுரி காவல்நிலையத்தில் வைத்தது.கைது செய்யப்பட வேண்டியது ராஜபக்சேதான் நாங்களல்ல என்று போலீஸ் வாகனத்தில் ஏறிய பிறகும் அவர்கள் முழக்கம் எழுப்பிக்கொண்டிருந்தனர். இரவு ஒன்பது மணிக்குமேல் தீவிர விசாரணைகுப்பின் அவர்கள் விடுதலைச் செய்யப்பட்டனர்.
இது இலங்கை தூதரகம் முன் நடந்துக்கொண்டிருந்த அதே நேரத்தில் ஜந்தர் மந்தரில் நடந்த உண்ணாவிரதமும் அதன் உச்சக்கட்டத்தை அடைந்தது. போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதைக் கேள்விப்பட்டவுடன் அனைவரும் உரத்து முழக்கம் எழுப்பினர். ஒவ்வொருவரும் உணர்ச்சிப்பிழம்பாகி இருந்தனர். போராட்டத்தை வாழ்த்த பத்திரிகையாளரும் இங்கிலாந்து நாட்டிற்கான இந்திய தூதுவராக பணியாற்றியவரும் தொடர்ந்து மனித உரிமைக்காக எழுதிவருபவருமான குல்தீப் நய்யார் வந்திருந்து பேசினார். சச்சார் அறிக்கையைத் தந்த ராஜேந்திர சச்சார் அவர்கள் போராட்டத்திற்கு வந்திருந்து கலந்துக் கொண்டவர்களை வாழ்த்தியும் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் பேசினார். கைது செய்யப்பட்டவர்களை விடுதலைச் செய்யப்படும் வரை அவ்விடத்தைவிட்டு வரமாட்டோம் என்றும் வேண்டுமானால் எங்களையும் கைது செய்யுங்கள் என்றும் உண்ணாவிரதம் இருந்தவர்கள் முழங்கினார்கள்.
அதே நாளில் தன் டில்லி உண்ணாவிரதப் பொதுக் கூட்டத்தில் பேசிய வைகோ அவர்கள், ஈழத் தமிழர் தோழமைக்குரலின் இலங்கை தூதரக முற்றுகை இந்திய இறையான்மைக்கு விழுந்த முதல் அடி என்று குறிப்பிட்டு பேசினார். ஜெனிவாவில் தீக்குளித்த முருகதாசின் தீ தோழர்களின் மனதையும் பற்றி கொந்தளித்ததில் அன்று இரவு சிவந்து இருண்டது.
அறம் நின்று கொல்லும்
மூன்றாவது நாளும் தொடர்ந்த உண்ணாவிரதத்தில், ரிசர்வ் போலீசும் கலந்துக் கொணடது என்று தான் சொல்ல வேண்டும். வலுவான பாதுகாப்பு வளையம். அமைதியான வகையில் நாள் முழுதும் டில்லி தோழர்களும், கலைஞர்களும், மாணவர்களும் வருகை தந்த வண்ணம் இருக்க, போராட்டம் வலுப் பெற்றது. போராட்டங்களில் கலந்துக் கொண்ட ஒவ்வொரு தோழர்களும் தங்கள் கருத்துக்களையும், உணர்வுகளையும், தொடர்ந்து ஆற்ற வேண்டிய பணிகளையும், போராடும் சக்திகளை ஒன்று சேர்க்கும் அவசியத்தையும் பகிர்ந்துக்கொண்டனர். தொடர்ந்து பத்திரிக்கையாள்ர்கள் சந்திப்புகளும் கலந்துரையாடல் போலவே நடைபெற்றது ஊடகங்களின் ஈழம் குறித்த ஊடகங்களின் தவறான புரிதல்களை, முன்முடிவுகளை களைய உதவியது.
ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் மாலை நடைபெற்ற பேரணியும், கலை நிகழச்சிகளும், கலந்துரையாடலும், பேரெழுச்சியாய் நடைபெற்றது.இந்திய ஏகாதிபத்தியத்தின் நாடி பிடித்து உலுக்கும் வேளை வந்துவிட்டது என்பதே கூடியிருந்த அத்தனை பேரின் உணர்வொருமையாக இருந்தது. ஈழம் குறித்த தேசிய இனங்களின் கொலைகார மெளனத்தை கலைக்கும் பணியை இனி மாணவர்களும், அறிவு சமுதாயமும் மூர்க்கமாக செய்யத் தொடங்கவில்லையென்றால், இனப்படுகொலைக்கும் பார்த்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் பொறுப்பாகி விடுவோம் என்ற உண்மையை உடைத்து தொடங்கிய விவாதங்களின் ஆவேசம் அறத்தின் மடையைத் திறந்தது. நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த ஜவஹர்லால் நேரு பல்கலைகழக மாணவர்கள் முத்துக்குமாருக்கும், உயிர் நீத்த மற்ற நண்பர்களுக்கும் தமிழிலேயே வீரவணக்கம் செய்து முழங்கியது, ஈழ விடுதலையின் குரலை மானுடத்தின் மனசாட்சியாக ஒலித்துக் காட்டியது.
-15-02-2009
நன்றி: ஈழத்தமிழர் தோழமைக் குரல்
--------
(இப்போராட்டத்தில் கலந்துகொண்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. போராடத்தில் பங்குபற்றிய ஒருவரோடு உரையாடிய நண்பர், ஈழத்தமிழர் தோழமைக் குரல் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபடப்போவதாய்க் கூறியதாய்ச் சொன்னார். நண்பர்கள் தொடரப்போகும் முயற்சிகளுக்கு நன்றியும் அன்பும் ~டிசே)
13 comments:
உங்கள் வர்ண்ணை நேரில் கலந்து கொண்ட உணர்வைத்தந்தது.
அது என்ன மீனவ நன்பர்கள்.... அங்கு கலந்து கொண்ட அனைவரையும் அவ்வாறா பகுத்து எழுதியுள்ளீர்கள்...
அறிவு யுத்தம் எங்கோ சறுக்குகின்றதே..டீ..ஜே
பகிர்வுக்கு நன்றி அண்ணன் ..
+
என்னுடைய அன்பையும் ஆதரவையும்..
நன்றி டிசே!
அறிவுத்தளத்தில் கடும் பணிகள் செய்ய வேண்டும்! இந்திய பிற மொழிகளிலும், உலக மொழிகளிலும் ஈழத்தில் இந்திய வல்லாதிக்கம் நடத்துகிற இனப்படுகொலையை பற்றிய பரப்புரைகள் அவசியம். மற்ற தேசிய இனங்களுக்கு ஈழத்தின் நியாயங்களை கொண்டு சேர்க்கும் தோழர்களுக்கு வாழ்த்துக்களும், நன்றிகளும்!
'அவர்கள் உரையாற்றும் போது 'எத்தனை முறை கேட்டும் பாராளுமன்றத்தில் ஈழத்தமிழர் பிரச்சனைக்குறித்து பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி தரவில்லை. நீங்கள் இங்கே வந்து போராடியதன் விளைவுதான் இன்று பேசுவதற்கு எங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஈழத்தில் நடக்கும் போரை நிறுத்தச் சொல்லி பாராளுமன்றத்தில் நாங்கள் தொடர்ந்து வற்புறுத்துவோம். அதற்காக எதையும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.' என்றார்'
இந்த பாராளுமனற உறுப்பினர்கள் இப்படியுமா புளுகுகிறார்கள். ஜீரோ அவர் zero hour என்று ஒன்று உண்டு. அதில் உறுப்பினர்கள் எந்தப் பிரச்சினையை வேண்டுமானாலும் பேசலாம் அல்லது அரசின் பதிலை கோரலாம். இதற்கு யாரிடமும் முன் அனுமதி பெற வேண்டியதில்லை. மேலும் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் கவன ஈர்ப்பு தீர்மானம்
கொண்டுவரலாம்.அதற்கு 40 எம்பிகள்
தேவையில்லை.ஒருவர் கூட போதும்.
சோம்நாத் சாட்டர்ஜி மிகவும் ஜனநாயகம முறையில் அவையை
நடத்துபவர். காரணமின்றி அவர் அனுமதி மறுப்பதில்லை.உறுப்பினர்கள்
விவாதிப்பதை, கேள்வி எழுப்புவதை
அவருக்கு முற்றாக தடுக்கும் அதிகாரம்
இல்லை. அவருடைய பிரச்சினை
உறுப்பினர்கள் அமளி செய்வது,
கூச்சல் போட்டு அவையை ஒத்தி
வைக்கச் செய்வதே அன்றி முறையான
விவாதங்கள் அல்ல. இந்திய பாராளுமன்றத்தில் தமிழக உறுப்பினர்கள் கட்சிகளுக்கு
அப்பாற்பட்டு ஈழத்தமிழருக்காக
ஒருமித்த குரலில் எத்தனை முறை
பேசியிருக்கிறார்கள், போர் நிறுத்தத்தினை வலியுறுத்தியுள்ளார்கள்?
இவர்கள் எத்தனை முறை ஜீரோ அவரில் இலங்கைத் தமிழர் குறித்து பேசினார்கள், எத்தனை
முறை கவன ஈர்ப்புத் தீர்மானம்
கொண்டு வந்தார்கள், இந்த் 5 ஆண்டுகளில் ஈழத்தமிழர்
குறித்து எத்தனை மணி நேரம் இந்திய
பாராளுமன்றம் விவாதித்துள்ளது, எத்தனை கேள்விகளை இவர்கள் ஈழத்தமிழர் பிரச்சினைகள், இந்திய அரசின் இலங்கை குறித்த நிலைப்பாடு பற்றி கேட்டுள்ளார்கள் - இதையெல்லாம் அவர்களிடம் கேளுங்கள்.
டில்லியில் இது போன்ற ஆர்ப்பாட்டஙகள், பேரணிகள்,
ஊர்வலங்கள் மிகவும் சாதாரணம்.
ஒரு குல்தீப் நய்யாரோ, அல்லது
ராஜிந்தர் சச்சாரோ இதில் ஒன்றும்
செய்துவிட முடியாது. இன்று ஈழப்
பிரச்சினை, நாளை வேறொரு பிரச்சினை என்று இவர்கள் ஆதரவு
தெரிவித்து பேசிக்கொண்டிருப்பார்கள்.
இவர்களை நான் குறை கூறவில்லை.
இவர்களால் ஏற்படும் தாக்கம் மிகக்குறைவு என்றே கூறுகிறேன்.
நீங்கள் குறிப்பிட்டுள்ள ‘அறிவு யுத்தம்' சிறு சலசலப்பை ஏற்படுத்தி
அத்துடன் நின்று விடும்.அதனால் பயன் விளையாது. இது போன்ற
‘அறிவு யுத்தங்களை' அருகிருந்து
பார்த்தவன், பங்கேற்றவன் என்பதால்
அவற்றின் போதாமைகளை நான் நன்கு
அறிவேன்.
‘இந்திய பிற மொழிகளிலும், உலக மொழிகளிலும் ஈழத்தில் இந்திய வல்லாதிக்கம் நடத்துகிற இனப்படுகொலையை பற்றிய பரப்புரைகள் அவசியம். மற்ற தேசிய இனங்களுக்கு ஈழத்தின் நியாயங்களை கொண்டு சேர்க்கும் தோழர்களுக்கு வாழ்த்துக்களும், நன்றிகளும்!'
திரு, பிரதான எதிரி இந்திய
வல்லாதிக்கம் என்று வகுத்துக் கொண்டு நீங்கள் பிரஸ்ஸலில் உட்கார்ந்து கொண்டு எதை வேண்டுமானாலும்
எழுதலாம். நான் டோக்கியோவிலும்,
டிசே டொரொண்டாவிலும் உட்கார்ந்து
கொண்டு எதை வேண்டுமானாலும்
எழுதலாம்.நாம் வன்னியில் இல்லை.
பாதிப்புள்ளாகிற ஈழத்தமிழர்கள் இப்போது இலங்கை,
இந்தியா என்ற இரு சக்திகளையும்
வல்லாதிக்க சக்திகள் என்று எதிர்க்க
வேண்டுமா அல்லது இந்தியா போர்
நிறுத்தம் ஏற்பட உதவ வேண்டும்
என்று கோர/எதிர்பார்க்க வேண்டுமா?.
பிறர் அவலத்தில் அரசியல் நடத்தும்
உங்களைப் போன்ற ‘மேதாவிகள்' எதை வேண்டுமானாலும் பிரஸ்ஸலில் இருந்து கொண்டு
எழுத முடியும். நடைமுறை அரசியலுக்கும், மக்கள் பிரச்சினைகளை தீர்க்கவும் அது
பயன்படாது.
//திரு,
பிரதான எதிரி இந்திய வல்லாதிக்கம் என்று வகுத்துக் கொண்டு நீங்கள் பிரஸ்ஸலில் உட்கார்ந்து கொண்டு எதை வேண்டுமானாலும் எழுதலாம். நான் டோக்கியோவிலும், டிசே டொரொண்டாவிலும் உட்கார்ந்து கொண்டு எதை வேண்டுமானாலும் எழுதலாம்.நாம் வன்னியில் இல்லை. பாதிப்புள்ளாகிற ஈழத்தமிழர்கள் இப்போது இலங்கை, இந்தியா என்ற இரு சக்திகளையும் வல்லாதிக்க சக்திகள் என்று எதிர்க்க வேண்டுமா அல்லது இந்தியா போர் நிறுத்தம் ஏற்பட உதவ வேண்டும் என்று கோர/எதிர்பார்க்க வேண்டுமா?.//
அனானி,
நீங்கள் விண்ணப்பம் அனுப்புவதையோ, மன்றாடுவதையோ தடுக்க நான் யார்? சொகுசாக இருக்கிற உங்களையும், என்னையும் விடுங்கள். வன்னியில் செத்துக்கொண்டிருக்கும் மக்கள் மன்றாடி கதறியும் இந்தியா என்ன செய்தது? மனிதசங்கிலி முதல் எல்லா சங்கிலியிலும் மக்கள் உலகின் பெருநகரங்களில் மன்றாடியும், வேதனையில் மடிந்தும் இந்தியா என்ன செய்தது? போர்த்தளபாடங்களும், ஆலோசனையும், தொழில்நுட்பமும், பணமும் கொடுத்து இராணுவத்தை இரகசியமாக அனுப்பி தமிழர்களை படுகொலை செய்கிறது இந்தியா. இதுவரையில் மக்களை இனப்படுகொலை செய்வதையும், பாலியல் பலாத்காரம் செய்து, சித்திரவதை செய்து தமிழ் இளையோரை படுகொலை செய்வது பற்றியும் கண்டித்திருக்கிறதா இந்தியா? உங்கள் பின்னூட்டத்தைப் போல சில அறிக்கை, பேச்சுடன் தந்திரமாக நழுவுகிறது இந்தியா. நீங்கள் குறிப்பிடுவது போல இந்தியா பிரதான எதிரியா/கடைசியா என்பதெல்லம் எனது பின்னூட்டத்தில் இல்லை (முன்முடிவுகளோடு வாசிக்காமல், சிந்திக்கவும் நேரம் ஒதுக்கினால் இந்த தவறை தொடரமாட்டீர்கள்!). இருப்பினும், ஈழத்திற்கு எதிராக இந்தியா நடந்துகொள்கிறது என்பதை காங்கிரஸ்காரனே ஒப்புக்கொண்ட உண்மை.
//பிறர் அவலத்தில் அரசியல் நடத்தும் உங்களைப் போன்ற ‘மேதாவிகள்' எதை வேண்டுமானாலும் பிரஸ்ஸலில் இருந்து கொண்டு எழுத முடியும். நடைமுறை அரசியலுக்கும், மக்கள் பிரச்சினைகளை தீர்க்கவும் அது பயன்படாது. //
ஆமாம். இனப்படுகொலைக்கு ஆளாகிற தமிழ்மக்களுக்கு ஆதரவான அரசியலை பேசுகிறேன். அதற்கு காரணமான இந்திய தேசிய அரசியலையும், சிங்களப் பேரினவாத அரசியலையும் கண்டிக்கிறேன். இவற்றை எழுதுவதையும், பேசுவதையும் சென்னையிலிருந்தும் செய்ய முடியும். இந்தியா செய்கிற இனப்படுகொலையை கண்டிப்பது பலனில்லை என்பது உங்கள் கருத்தாக இருக்கட்டும்.
இனப்படுகொலைகளையும், மனித உரிமை மீறல்களையும் கண்டும்காணாமல் இருப்பது மனிதநாகரீகத்திற்கு நல்லதல்ல.
ஆயுதங்களை போட்டுவிட்டு அப்படியே ராஜபக்சேயின் கொலைக்களத்தில் கழுத்தை நீட்ட இந்தியா/சிதம்பரம் போன்றோர் அழைக்கின்றனர். அரசியல் தீர்வு எங்கே என்றால். கள்ள மௌனம். அல்லது இத்துப்போன இந்தியா-இலங்கை ஒப்பந்தம். கிழக்குமாகாணத்தில் இலங்கை அரசு செய்கிற பித்தலாட்ட நாடகத்தை அவதானிக்கும் அனைவருக்கும் சொல்வது ‘சிங்கள பேரினவாத இலங்கை அரசால் தமிழர்களுக்கு நேர்மையான எந்த அரசியல் உரிமையையும் வழங்க இயலாது.’
வன்னியில் அவலத்திலிருக்கும் மக்களின் பிரச்சனையை தீர்க்க உங்களால் வழி சொல்ல இயலுமா?
திரு, இந்தியா ராணுவ தாக்குதலை
நிறுத்து, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு என்பதை வலியுறுத்துகிறது.12ம் தேதி பாராளுமன்ற உரையில் பிரதீபா பாட்டில் கூறியது இதுதான். இலங்கைக்கு ஆயுதம் வழங்கியது
இந்தியா மட்டுமா, சீனா, பாகிஸ்தான்
வழங்கவில்லையா?.இல்லை இந்தியா வழங்காவிட்டால் அவை கிடைக்காதா? சிலவற்றை இந்தியா
செய்யாவிட்டால் இந்திய விரோத
நாடுகள் இலங்கையை தம் பக்கம்
பயன்படுத்திக் கொள்ள முயல்வர்.
இன்றைய நிலையில் இந்தியா இன்னும் அழுத்தம் தர வேண்டும், போர் நிறுத்தம் முதலில் என ஐநாவில்
கூற வேண்டும் என்று கூறுவது வேறு,
இந்தியாவை தமிழர்களின் எதிரியாக
காட்டுவது வேறு. அரசியல் தீர்வு
குறித்து இந்தியா பல முறை பேசியுள்ளது. அதற்கு உதவும் தயார்
என்று கூறியுள்ளது.இந்தியாவை பகை சக்தியாக முன் வைப்பது சிங்கள பேரினவாதம் முற்றாக வெல்ல
உதவும். இந்தியாவை விமர்சியுங்கள்,
எதிரி என்று சித்தரிக்காதீர்கள்.அதனால்
நீங்கள் யார் கரங்களை வலுப்படுத்த
விரும்புகிறீர்கள்.திமுக, காங்கிரஸ்,
அதிமுக மூன்றும் கிட்டதட்ட இந்திய
அரசின் நிலையை ஏற்றபின் சில சக்திகள் இந்தியாவை எதிரியாக, இனப்படுகொலை செய்யும் அரசு என பிரச்சாரம் செய்வது யாருக்கு நல்லது.ஈழத்தமிழர் ஆதரவாளர்கள், இயக்கங்கள் நிலமையை முடிந்த அளவு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தேசிய இனப்
பிரச்சினை குறித்த முரண்களை
பேசுகிறோம் என்ற பெயரில் இந்தியாவும் எதிரி, இலங்கையும்
எதிரி என்று வாதிடுபவர்கள் தங்கள்
நட்பு சக்திகள் யார், யார் உதவுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்பதை சொல்ல வேண்டும்.
வன்னி மக்கள் அவலம் தீர சர்வதேச
சமூகம் போதிய அழுத்தமும், அக்கறையும் காட்ட வேண்டும்.
இந்தியா மட்டும் இதில் தீர்வை
கொண்டு வந்துவிட முடியாது.
இதுதான் யதார்த்தம். எனவே இந்தியா, சர்வதேச சமூகம்
போர் நிறுத்தத்தினை இன்னும்
அழுத்தமாக வலியுறுத்த அழுத்தம்
தரப்பட வேண்டும்.
அநாமதேய நண்பர் 1: இக்கட்டுரையை நான் எழுதவில்லை. 'ஈழத்தமிழர் தோழமைக் குரல்' என்ற அமைப்பைச் சேர்ந்த நண்பர்/கள் எழுதியிருக்கின்றார்கள். அவர்களின் இணையத்தள முகவரிக்குப் பதிவின் கீழே இணைப்புத் தரப்பட்டுள்ளது.
/அது என்ன மீனவ நன்பர்கள்.... அங்கு கலந்து கொண்ட அனைவரையும் அவ்வாறா பகுத்து எழுதியுள்ளீர்கள்... /
நீங்கள் குறிப்பிடும் வரிகள் உறுத்தத்தான் செய்கின்றது; அவர்களைப் பிரித்துப் பார்க்கவேண்டியதில்லை. ஆனால் போராட்டத்தில் மீனவர் சங்கங்களைப் பிரதிநிதிப்படுத்த்தும் நண்பர்களும் கலந்துகொண்டிருந்தால், அவர்களுக்குரிய இடத்தைப் பிரதிநிதிப்படுத்துவதற்காய் இவ்வாறு குறிப்பிட்டிருக்கலாம் என்று நினைக்கின்றேன்.
.......
அநாமதேய நண்பர் 2:
நீங்கள் குறிப்பிடுவதைப் போல, இதுவும் நியூ டெல்கியில் நடைபெறுகின்ற பத்தோடு பதினொன்றாய் நடைபெறுகின்ற போராட்டமாய் நடந்தாலும், 'எறும்பூரக் கற்குழியலாம்' என்ற நம்பிக்கை, சும்மா வாளா இருப்பதை விடப் பரவாயில்லை தானில்லையா?
/இலங்கைத் தூதரகத்தின் வாயிலில் வைக்கப்பட்டிருந்த பெயர்ப்பலகையை மிகுந்த ஆவேசத்துடன் செருப்பால் அடித்தனர். ராஜபக்சேவின் உருவப்படத்தினை மிதித்தும் அதை கொளுத்தியும் முழக்கங்கள் எழுப்பியவாறே இருந்தனர். பெண்கள் I am your sister rape me, I am your mother rape me, Leave our sisters in Eelam என்று எழுதப்பட்ட பதாகைகளை கைகளில் வைத்திருந்தனர். தூதரகத்தினை காவல் காத்த காவலர்கள் துப்பாக்கிகளுடனும் நீண்ட தடிகளுடனும் வந்து சூழ்ந்து நின்றனர். இதனால் அப்பகுதி ஒரு போர்க்களக் காட்சியினை அடைந்தது. இதற்கிடையில் டெல்லி காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களைச் சூழ்ந்துக் கொண்டது. திடீரென அனைவரும் 'போர் நிறுத்தம் செய்' என்று கத்தியவாறே அந்த முக்கிய சாலையில் சென்று படுத்து மறித்தனர். போக்குவரத்து தடை ஏற்பட்டது. இதனால் காவல்துறை போக்குவரத்தை வேறு சாலைப் பக்கம் திருப்பியது. தொடர்ந்து சாலையில் அமர்ந்து இலங்கை அரசு ராஜபக்சே ஆகியோருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிக்கொண்டே இருந்தனர்.
காவல்துறை அவர்களை கைது செய்து சாணக்கியபுரி காவல்நிலையத்தில் வைத்தது.கைது செய்யப்பட வேண்டியது ராஜபக்சேதான் நாங்களல்ல என்று போலீஸ் வாகனத்தில் ஏறிய பிறகும் அவர்கள் முழக்கம் எழுப்பிக்கொண்டிருந்தனர். இரவு ஒன்பது மணிக்குமேல் தீவிர விசாரணைகுப்பின் அவர்கள் விடுதலைச் செய்யப்பட்டனர்./
இன்னொரு நாட்டில், தாங்கள் அவமானப்படுவதை எந்த ஒரு நாடும் விரும்பாதிருக்கும்போது, இப்படி இலங்கைத் தூதரகத்தின் முன் செய்யப்படும்போது, தூதரகம் கொதித்துத்தான் இருக்கும். இங்கே ரொரண்டோவில் இலங்கைத் தூதரகம் உட்பட பல இடங்களில் ஆர்ப்பார்ட்டப் பேரணிகள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றபோது, அடிக்கடி தங்களைக் காப்பாற்றிக்கொள்ள இலங்கைத் தூதரகம் அறிக்கைகள் விடுத்துக்கொள்வதையும், வெவ்வேறு சிங்கள அமைப்புக்களை உசுப்பேற்றி தங்களின் குரல்களை அவர்களின் மூலம் பேசச் செய்வதும் நிகழ்ந்துகொண்டிருக்கின்றது.
இஃதெல்லாம் ஈழத்தில் நிகழ்த்தப்படும் படுகொலைகளை நிறுத்தச் செய்யுமா என்று கேட்டால் மவுனமே பதில். ஆனால் இவ்வாறு செய்வதைத் தவிர வேறு எதைச் செய்வது என்றும் தெரியவில்லை. திரு குறிப்பிட்ட மாதிரி /வன்னியில் அவலத்திலிருக்கும் மக்களின் பிரச்சனையை தீர்க்க உங்களால் வழி சொல்ல இயலுமா? / என்றுதான் கேள்விகளை மட்டுமே வைத்திருப்பவர்களிடம் நாங்களும் கேட்டுக்கொண்டிருக்கின்றோம்.
டோக்கியோவில் இருந்து கதைத்தால் என்ன, டெல்கியிலிருந்து கதைத்தால் என்ன? அநாமதேய நண்பரே நீங்கள் எனக்கு ஏற்கனவே அறிமுகமான நண்பராயிருந்தால் உங்கள் இந்தக் குரல் பயமுறுத்துகிறது.
/இதுதான். இலங்கைக்கு ஆயுதம் வழங்கியது
இந்தியா மட்டுமா, சீனா, பாகிஸ்தான்
வழங்கவில்லையா?.இல்லை இந்தியா வழங்காவிட்டால் அவை கிடைக்காதா? சிலவற்றை இந்தியா
செய்யாவிட்டால் இந்திய விரோத
நாடுகள் இலங்கையை தம் பக்கம்
பயன்படுத்திக் கொள்ள முயல்வர்./
இந்த குரலையே மாலனும் வெளிப்படுத்தியிருந்தார். கோபப்படாமல் நாகார்ஜூனனின் இந்தப்பதிவையும் அதன் பின்னூட்டங்களையும் பொறுமையாக வாசியுங்கள். இதைவிட உங்களோடு உரையாடுவதற்கு எனக்கு எதுவுமில்லை. நன்றி.
யுத்தம் விரும்பப்படாத ஒன்றாயிருந்தும் விருப்பத்தோடு செய்து கொண்டிருக்கிற இலங்கையை இல்லாத கடவுளர்கள் வந்தாலும் காப்பாற்ற முடியாது என்கிற நிலமையில் அறவழி யுத்தங்கள் அதற்கான சிறு காரியமேனும் ஆற்றுகின்றன...
நன்றி அந்த நண்பர்களுக்கு...
பகிர்வக்கு நன்றி அண்ணன்..
இந்த விவகாரத்தில் மாலனின் பக்க சார்புகளும், நாகார்ஜுனனின் பக்க சார்புகள் தெரிந்தவைதான்.
நீங்கள் குறிப்பிடும் பதிவையும்,பின்னூட்டங்களையும்,கீற்று, உயிரோசையில்
வெளியாகியவற்றையும், இன்னும் பிபிசி தளம் உட்பட பலவற்றையும்,
வாசிக்கின்ற எனக்கு தமிழில் விவாதங்கள் எப்படி கட்டமைப்படுகின்ற, எவை பேசப்படுவதில்லை,ஏன் என்பதை புரிந்து கொள்வது கடினமல்ல.
இந்தியா போரை நிறுத்தச் சொல்லவில்லை என்று துணிந்து
பொய்களை எழுதுபவர்களை அறிவிஜீவியாக நான் கொண்டாட
முடியாது.
டோக்கியோவில் இருந்து கதைத்தால் என்ன, டெல்கியிலிருந்து கதைத்தால் என்ன? அநாமதேய நண்பரே நீங்கள் எனக்கு ஏற்கனவே அறிமுகமான நண்பராயிருந்தால் உங்கள் இந்தக் குரல் பயமுறுத்துகிறது.
அஞ்ச வேண்டாம்,பயமுறுத்த இங்கு பின்னூட்டத்தில் யாரும் படங்காட்டவில்லையே :)
/இந்தியா போரை நிறுத்தச் சொல்லவில்லை என்று துணிந்து
பொய்களை எழுதுபவர்களை அறிவிஜீவியாக நான் கொண்டாட
முடியாது /
அறிவுஜீவிகளாய் யாரைக் கொண்டாடுவது என்பதை பிறகொருதரம் வைத்துக்கொள்வோம். ஆனால் இன்று இந்தியப் பாராளுமன்றத்தில் பிரணாப் முகர்ஜி, இலங்கை அரசை போரை நிறுத்த நாம் வற்புறுத்த முடியாது; புலிகளே வன்னியிலுள்ள மக்களைக் கொல்கின்றார்கள் என்றொரு இன்னொரு ராஜபக்சே போல அறிக்கை விட்டதும், பா.ம.க, ம.தி.மு.க கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து பாராளுமன்ற விவாதத்தொடர்(?) இரண்டோ மூன்று முறைகள் ஒத்திவைக்கப்பட்டதாகவும் எவ்வளவு தொலைவிலிருந்து ரொரண்டோவிலிருந்து நானறியும்போது டெல்கியிலிருக்கும் நீங்கள் அறியாதிருக்கும் சாத்தியமில்லை என்றே நம்புகின்றேன். எனக்கென்னவோ இப்போது நாம் அறிவுஜீவிகளைத் தேடுவதைவிட, சாதாரண நேர்மையான மனிதர்களாய் யாரெல்லாம் இருக்கின்றோம் என்று எங்களை நாங்களே சுயவிமர்சித்துக்கொள்வதுதான் அவசியம்போலத் தோன்றுகின்றது
' எனக்கென்னவோ இப்போது நாம் அறிவுஜீவிகளைத் தேடுவதைவிட, சாதாரண நேர்மையான மனிதர்களாய் யாரெல்லாம் இருக்கின்றோம் என்று எங்களை நாங்களே சுயவிமர்சித்துக்கொள்வதுதான் அவசியம்போலத் தோன்றுகின்றது '
அவசியமான கருத்து.
Post a Comment