Monday, December 24, 2007

இனி வரும் நாட்களும் இனிதாகட்டும்

-இந்த ஆண்டில் எனக்குப் பிடித்த சில பாடல்கள்-


(உனக்கு)

Alicia Keys, ஒரு நேர்காணலில், தான் எப்போதும் தனது கவலைகள் இன்னபிறவற்றை தனக்குள்ளே பூட்டிவைத்தபடி நண்பர்களோடு/உறவுகளோடு பகிர்ந்துகொள்ளாத அழுத்தத்திற்குட்பட்ட ஒரு பெண்ணாய் ஒரு பொழுதில் இருந்திருக்கின்றேன் என்று கூறியிருந்தார். Alicia Keys மட்டுமில்லை Mary J. Blige கூட, இன்றைய காலகட்டத்தில் சந்தோசமாய் இருக்கும்போது, ஏன் உங்களின் (சென்ற வாரம் வெளிவந்த) இறுவட்டுக்கு Growing Pains என்று பெயர் வைத்திருக்கின்றீர்கள் என்று BETயில் கேட்கப்பட்டபோது, பழைய துயரங்களிலிருந்து வெளிவருவது அவ்வளவு இலகுவானது அல்ல, அத்தோடு இன்னொரு நிலைக்கு நகரும்போதும் அங்கும் வேறுவிதமான துயரங்கள் இருக்கின்றதெனக்கூறியிருந்தார். Alicia Keysயின் எனக்குப் பிடித்த இன்னொரு பாடலை இங்கே அழுத்திப் பார்க்கலாம்.


(எனக்கு)

ஆடுவதைத் தவிர வேறொன்றும் வேண்டாம் என்றால் Soulja Boysன் இந்தப்பாட்டுக்குள் நுழைந்துவிடலாம். இந்த ஆண்டில் hip-hop உலகில் இந்தப்பாடலின் நடன அசைவுகள்தான் அதிகம் கவனம் பெற்றது. இந்த நடனத்தை எவ்வாறு ஆடலாம் என்று ஆடியவர்கள் விளக்கந்தருவதை இங்கே பார்க்கலாம்.. Soulja gal ஜத் தேடுபவர்களுக்கும் ஒரு பாடலைப் பாடியிருக்கின்றார்கள். விரும்பியவர்கள் அதில் நுழைந்து தெளியலாம் அல்லது மூழ்கலாம்.


(நமக்கு)
புது வருடத்தை ஆவலுடன் எதிர்ப்பார்த்திருப்போம் அல்லவா? இந்தாருங்கள் Kanye West ன் Good Life. 50CENT ன் இறுவட்டும், Kanye Westன் இறுவட்டும் ஒரே நேரத்தில் வந்து Kanye Westன் இறுவட்டுகள் அதிகம் விற்றுத் தீர்ந்திருக்கின்றன. Outspoken ஆகவும், சிலவேளைகளில் கோமாளித்தனங்களை Kanye West காட்டிக்கொண்டிருந்தாலும், பாடல்களில் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றார் என்பதை ஒப்புக்கொள்ளத்தான்வேண்டும்.



Kanye West ஆல் Lupe Fiasco வெளியுலகிற்கு விரைவில் தெரியவந்தாலும், எதிர்காலத்தில் நல்லதொரு ராப்பராக வரக்கூடியவர். சற்று Kanye Westன் பாதிப்பு இவரது பாடும் முறையில் இருந்தாலும், இரசிக்க முடிகின்றது. அரசியல் பேசுகின்ற இந்தப்பாடலையும் நேரமிருப்பின் கேட்டுப்பாருங்கள். நெற்றியில் அறைகின்ற மாதிரி இருக்கும்.



இந்தப்பாடலை இரசிதேன் என்பதைத் தவிர இதில்ல் சொல்வதற்கு வேறொன்றுமில்லை. டீஜேயொருவர் தயாரிப்பும் (DJ Khalid), ராப் பெருந்தலைகள் பலர் இப்பாடலில் தலைகாட்டுவதாலும் பிடித்திருக்ககூடும்.

-நண்பர்கள அனைவருக்கும் இனிய நத்தார், புதுவருட வாழ்த்துக்கள்-

Saturday, November 10, 2007

பெயல் மணக்கும் பொழுதும், அயல் நிலத்துக் கவிதையும்

-சேரன்

'பெயல் மணக்கும் பொழுது' எனும் ஆழமான, அர்த்தம் செறிந்த தலைப்புடன் ஈழப் பெண் கவிஞர்கள் கவிதைகள் தொகை நூல் ஒன்றை அ. மங்கை தொகுத்து வெளியிட்டுள்ளார். ஈழத் தமிழர்கள், இஸ்லாமியர் வாழ்வில் முக்கியமான மாற்றங்களும் சிதறல்களும் அலைவுகளும் இடம்பெற்று வரும் இந்தக் காலகட்டத்தில் தொண்ணூற்று மூன்று கவிஞர்களின் கவிதைகள், சிக்கலானதும் பல்வேறு முகங்களுடையதும் முரண்பாடுகளும் அவலமும் நிறைந்ததான ஈழ வாழ்வைப் பாடுகின்றன. தொகுதிக்கு வ. கீதா வழங்கியுள்ள சிறப்பான பின்னுரை கருத்தியல் சார்ந்து பெரும் முக்கியத்துவம் உடையது.

''தமிழ் பேசும் மக்களின் நிதர்சனங்களைச் சலனப்படுத்தி பெண்மை, பெண் ஒழுக்கம், கட்டுப்பாடு முதலியன குறித்து நமது மரபுகள் சலிக்காமல் முழங்கும் . . . செய்திகளைப் புரட்டிப்போட்டு நமது மனச்சாட்சிகளைத் தொடர்ந்து செயல்படவைக்கும் ஈழ வரலாற்றுக்கும் குறிப்பாக அவ்வரலாறு கண்டுள்ள பெண்ணியச் சொல்லுக்கும் வாக்கிற்கும் நாம் கடமைப்பட்டுள்ளோம்'' என்னும் அவரது முடிவுரையுடன் இந்தக் குறிப்பைத் தொடங்குவது சாலப் பொருத்தமாகும்.

போரும் தேசியவாதங்களும் தீவிரமாக ஆட்சி பெற்றுள்ள சூழலில் பெண்ணிய வாதங்களுக்கும் இவற்றுக்குமிடையிலான உறவுகள், முரண்கள்யாவை? பங்காளியாக, பாதிப்புற்றவளாக, போரில் குதித்தவளாக, பெண்களது வாழ்வும் அனுபவமும் கருத்தியல்களும் எவை? போன்ற கேள்விகள் கடந்த பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வந்துள்ளன. இந்தக் கேள்விகள் சிக்கலான பதில்களை எழுப்பவல்லன. இத்தகைய கேள்விகளுக்குரிய பதில்களை இனங்கண்டுகொள்வதில் பெண்களுடைய இலக்கியப் பதிவுகள், வாய்மொழி, நேர்காணல்கள், சினிமா எனப் பல வழிமுறைகளை ஆய்வாளர்கள் பயன்படுத்தியுள்ளனர். பெண்ணியத்துக்கும் தேசியத்துக்கும் / தேசிய விடுதலைப் போராட்டத்துக்கும் இடையேயான உறவின் நெருக்கடிகள் பற்றி ஈழ வரலாற்றனுபவங்களை முன்னிட்டுப் பல நிலைப்பாடுகளை இனங்காண முடிகிறது. போரில் ஈடுபட்டாலும் தேசியவாத எழுச்சியில் தீவிரமான பங்குபெற்றாலும் பெண் விடுதலை என்பது தேசியப் போருக்கூடாகச் சாத்தியமில்லை. ஏதாவது மாற்றங்கள் ஏற்பட்டாலும் அவை நிரந்தரமானவையன்று என்பது முதலாம் நிலைப்பாடு (எ-கா: ராதிகா குமாரசுவாமி, குமாரி ஜயவர்த்தனா போன்றவர்கள்). ஆயுதம் தரித்த போராளிகளாகத் தமிழ்ப் பெண்கள் மாறியமை தமிழ்ச் சமூகத்தின் பிற்போக்கான விழுமியங்கள் மீதான பேரிடி என்பதும் அதனூடாகப் பெண்களின் ஒட்டு மொத்தமான விடுதலை சாத்தியம் என்பதும் இரண்டாம் நிலைப்பாடு (எ-கா: அடேல் ஆன் பாலசிங்கம்). இந்த இரண்டு நிலைப்பாடுகளுக்கும் அப்பால், மூன்றாம் நிலைப்பாட்டை வலியுறுத்துபவர்கள், போராளிகளாய்ப் பெண்கள் மாறுவதும் தேசியச் சிக்கலில் அவர்களுடைய பங்கும் பெண்களுக்கு அதிகாரங்களையும் உரிமைகளையும் வழங்கியுள்ள போதும் இவை ஐயத்துக்கிடமானவையாகவும் ஊசலாடும் தன்மையதாகவும் இருக்கின்றதெனக் கருதுகிறார்கள் (எ-கா: தரிணி ராஜசிங்கம், சேனநாயக்க, நெலுஃபர் டீ மெல் போன்றோர்). ஈழ விடுதலைப் போராட்ட ஆரம்ப கால அமைப்புகளைப் பற்றிக் குறிப்பிடுகிறபோது, விடுதலைப் போராட்ட அமைப்புகள் / இயக்கங்களுக்கு உள்ளே பெண் உரிமைகள், பெண் விடுதலை என்பன பற்றிய குறிப்பான கவனம் எதுவும் இருந்திராதபோதும், பெண் விடுதலை எனும் எண்ணக் கருவை எல்லா இயக்கங்களும் ஏற்றுக்கொண்டமையே முக்கியமான வெளிகளையும் வழிகளையும் பெண்களுக்குத் திறந்துவிட்டது என்பது சித்திரலேகாவின் கருத்தாக இருந்தது. ''உயிர் ஈனும் ஆற்றலுடையோர் சாவை அரவணைத்து ஏற்றது காலத்தின் கட்டாயமும் முரணும்'' என்பதை இன்னொரு கருத்துத் தளமாகக் கொள்ள முடியும் (எ-கா: வ. கீதா).

இப்போது உள்ள நிலைமையைப் பார்க்கிறபோது, தேசியவாதப் போராட்டத்தின் வேட்கைக்கும் வெம்மைக்கும் கீழ்ப்பட்டதாகவே பெண் விடுதலை பேசப்படுகிற நிலையே மேலோங்கியுள்ளது. கூடவே, நீண்டகாலக் கண்ணோட்டத்தில் தமிழ்ச் சமூகத்தில் பெண் விடுதலை எப்படி அமையும் என்பதில் நிச்சயமின்மையும் முடிவு கூற முடியாமையுமே நிலவுகின்றன என்பதை அடேல் பாலசிங்கமும் தமிழினியும் குறிப்பிடுகிறார்கள்.

'கட்டாயமும் முரணும்' கிளப்புகிற சிக்கல்கள் மிகப்பல என்பதையும் ஈழ வரலாற்று, சமூக அனுபவங்கள் உணர்த்துகின்றன. நான் மேலே குறிப்பிட்ட பல கருத்துத் தளங்களுக்கு அப்பால், வேறுபாடுகளும் சிக்கல்களும் நிறைந்த இன்னும் முடிவுறாத போராட்டமாகத் தொடரும் வேறு பல நிலைப்பாடுகளும் பெண் / பெண்ணிய அனுபவங்களும் கருத்துத் தளங்களும் படிம நிலைகளும் சாத்தியம் என்பதை ஈழப் பெண் படைப்பாளிகளின் இலக்கியப் படிமங்களும் பதிவுகளும் நேரடியாகவும் உள்ளடங்கியும் உணர்த்துகின்றன என்பதற்குப் பெயல் மணக்கும் பொழுது சிறந்த எடுத்துக்காட்டாக அமைகிறது.

பெண் மொழியைப் பற்றி மட்டுமே பேசுவதை விடுத்து, பெண் மொழி, பெண்ணிய அனுபவங்கள் என்கிற சாளரத்துக்கூடாக விரியும் புதிய வடிவங்கள், புதிய உறவு நிலைகள், புதிய பண்பாட்டுக் கோலங்கள், புதிய கலாசார இலக்கணங்கள், புதிய பாலின / பாலியல்பு உறவுகள் என்பனவற்றைப் பற்றிப் பேச வேண்டியிருக்கிறது. இவை பற்றிய கேள்விகளும் கவிதைப் படிமங்களும் நூலில் ஆங்காங்கே பெயல் நிலையில் பயில்கின்றன.

சமவெளிகள், காடுகள், மலைகள் எங்கும் /தனித்தே சுற்றுவேன் (செல்வி); போராடும் எதுவும் நின்று நிலைக்கும் (தமிழவள்); உண்மைகளை நினைத்து அழுகிறேன் / நியாயப்படுத்த முடியாதவளாக (தில்லை); எனக்கான ஒரேயொரு காதலனையும் காண முடியவில்லை (நஜீபா); ஒரே உலகத்திலேயேதான் / இருக்கின்றன / எனக்கும் அவனுக்குமான வெவ்வேறு உலகங்கள் (அனார்); உன் தனிமை பற்றிப் பேசு (றஞ்சினி); நான் சிந்தும் கண்ணீர் / திரும்பவும் என்னிடமே கேள்வி கேட்கிறது (சந்திரா ரவீந்திரன்); பொய்க் கால்களும் / போய்விட்ட விழிகளுமாய் / உலா வருகின்ற / எண்ணற்ற காலடிகள் (சிரஞ்சீவி) - இவை சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே. நூலின் ஒட்டுமொத்தமான பாதிப்பைச் சுட்டிக்காட்ட இவை தூண்டுதலாக அமையலாம் என நம்புகிறேன். பலதரப்பட்ட கவிதைகளையும் பலதரப்பட்ட அனுபவங்களையும் பிரதிபலிக்கக்கூடிய வகையில் இப்பொழுது எழுதிவருகிற, எப்பொழுதோ எழுதிய, எப்போதாவது எழுதுகிற, மற்றும் அவ்வப்போது எழுதுகிற எல்லா ஈழப் பெண் கவிகளையும் இயலுமானவரை தொடுத்து எடுத்துள்ளார் அ. மங்கை. விடுபட்டுப் போனவர்கள் மலரா, மாதுமை, சாரங்கா, லதா என மிகச் சிலரே. இத்தகைய தொகுதியை நிறைவேற்றுவதிலுள்ள சிக்கல்கள், சங்கடங்கள் பற்றி மங்கை உணர்ந்துள்ளமையை அவரது முன்னுரையும் பின்னுரையும் உணர்த்துகின்றன. புவியியல் திணைகளைக் கடந்து ஈழ மக்களுடனும் ஈழ வாழ்வுடனும் ஈழ அரசியலுடனும் ஈழப் பெண் கவிகளுடனும் தன்னுடைய அரசியல், அறவியல் ஒருமைப்பாட்டை (solidarity) அ. மங்கை தெளிவாக வெளிப்படுத்துகிறார்.

இந்த நூல் தொடர்பாகவும் பெண் / பெண்ணியப் படைப்பாளர்கள் தொடர்பாகவும் ஆக்கபூர்வமான பதிவுகளும் விவாதங்களும் எழ வேண்டும். பெண்கள் பெயரில் ஆண் எழுதுவது பற்றிய சர்ச்சை முன்னரும் எழுந்ததொன்றே. இந்தத் தொகுதியிலும் ஆதிரா, ஆமிரபாலி ஆகியோர் 'ஆண்' எழுத்தாளர் எனச் சொல்லப்படுகிறது. இவர்களை ஏன் சேர்த்தீர்கள்? ஆண் எப்படிப் பெண் பெயரில் எழுதலாம்? என்ற ஆரவாரங்களைத் தவிர்த்துப் புனைபெயர்களின் அரசியல் பற்றிய விவாதங்களை நாம் எழுப்ப முடியும். பெண் பெயரை மட்டும் சூடுவதா அல்லது பெண்ணியப் பார்வையையும் குரலையும் காட்டுவதான படைப்பு மனோநிலையின் விளைவா அது எனும் கேள்விகளை எழுப்ப முடியும் அல்லவா? பெயர்களின் பாலின அரசியல் என்ன என்பது இன்னொரு கேள்வி. ஆண்மை/பெண்மை போன்ற கட்டமைப்புகளைக் கட்டுடைப்பது பற்றிக் குறிப்பிடுகிறார் மங்கை. அந்தக் கேள்வி நமது சூழலில் இலக்கியப் படைப்புகளூடாக ஆழமாக முன்னெடுக்கப்பட முடியும். அதேபோல ஒடுக்கப்படுபவர்களின் குரலையும் அடையாளத்தையும் ஒடுக்குபவர்கள் அபகரித்துவிடுதலும் சாத்தியமானதுதான். ஆண்கள் பெண் பெயரில் எழுதுகிறபோது, இத்தகைய ஆபத்துகள் உள்ளன. ஒருமைப்பாட்டுக்கும் (solidarity) அபகரிப்புக்கும் (appropriation) இடையே இருப்பது ஒரு பெருவெளி அரசியல். பாலற்றவர்களும் பாலினங்கடந்தோரும் (transgender) ஆண்/பெண் பெயர்களை மாறிமாறிப் பயன்படுத்த முன்பாக ஆண் / பெண் ஆடைகள், அணிகள் என்பவற்றை மாறிமாறி அணிந்து ஆண்/பெண் நடைமுறைகளை மாறிமாறி மாற்றிப் பாலினக் கலகத்தையும் பண்பாட்டுக் கலகங்களையும் உருவாக்குகிறார்கள். இவர்களது படைப்பிலக்கியத் தொகுதிகள் பல வெளியாகி உள்ளன. இத்தகைய பதிவுகளை நோக்கித் தமிழ்ப் படைப்பாளிகளும் நகர்வது தவிர்க்க முடியாதது.

'தமக்கான காலமும் நேரமும் வெளியும் அற்று இடப்பெயர்வும் அங்கலாய்ப்பும் அவற்றை எதிர்கொள்வதுமே வாழ்வாகிப்போன இக்கால கட்டத்தில்' ஈழப் பெண் கவிகளின் இத்தொகை சீரிய முயற்சியாகும்.

(நன்றி: காலச்சுவடு, நவம்பர் இதழ்)

இத்தொகுப்பு குறித்து...
(1)
ஊடறுவில், றஞ்சி எழுதியது
(2)
முரண்வெளியில், நிகிதா இம்மானுவல்பிள்ளை எழுதியது

Friday, November 09, 2007

பார்த்து இரசித்த சில குறும்படங்கள்

குறும்படங்களை எடுப்பதில், நடிப்பதிலென அக்கறையுள்ள ஒரு நண்பருக்காய் என்னாலும் ஏதேனும் ஒரு சிறு துரும்பை எடுத்துக்கொடுக்க முடியுமா என தமிழல்லாத குறும்படங்களைக் குடைந்துகொண்டிருந்தேன். குறும்படங்களுக்கான நேர அளவீடுகள் கதையின் களங்களுக்கேற்ப வேறுபடலாம் என்றாலும், பத்து நிமிடத்திற்கப்பால் நீளும் படங்களைப் பார்க்க நிறையப் பொறுமை வேண்டும் (என்னைப் பொறுத்தவரை ஐந்து நிமிடத்திற்குள் எடுத்தால் இன்னும் சிறப்பாகவிருக்கும்). நான் பார்த்த அனேக தமிழ்க்குறும்படங்களில் குடும்பம்/அரசியல்/உணர்ச்சிகள் என்ற எல்லையைத் தாண்டிச் சென்ற படங்கள் குறைவே என்றே சொல்லவேண்டியிருக்கின்றது. இவ்வாறான எல்லைகளுக்குள் படங்கள் எடுப்பது அவசியமானது என்றாலும், அதற்கப்பாலும் விரிவுபடுத்த வேண்டிய பார்வைகள் இருக்கின்றன என்ற புரிதலுக்காய் நான் பார்த்த குறும்படங்களில் சிலவற்றைத் தெரிந்தெடுத்துத் தருகின்றேன்.


SPIN

இதொரு டீஜேயின் விரல்களில் அசைவில் நகரும் சிறு உலகைப்பற்றிய கதை ('கடவுள்' கூட ஒருவகையில் டீஜேதான் என்ற பாரவையைக்கூட இப்படம் தரக்கூடும்). எவ்வளவு அழகாக இதைப் படமாக்கியிருகின்றார்கள் எனப்பாருங்கள். டீஜே ஒவ்வொருமுறையும் ஸ்பின் பண்ணும்போது அடுத்து என்ன நடக்கப்போகின்றதென்ற சுவாரசியம் நமக்குள் வந்துவிடும்போதே படம் நம்மில் பாதிப்பை ஏற்படுத்திவிடுகின்றது. எத்தனையோ தீயவர்கள்/தீயவிடயங்கள் இருந்தாலும், ஒரு நல்ல விடயத்தால் (ஒரு chain reaction போல) எப்படி இந்த உலகமே அழகாய் மாறிவிடுகின்றதென்ற கரு வசீகரிக்கின்றது.

Wrong side of the bed

இக்குறும்படம், இரண்டு நிமிடங்களுக்குள் முடிவடைந்துவிடுகின்றது. ஒரு நாளில் ஒரு தவறான தெரிவைச் செய்வதால் வரும் விளைவுகளை நகைச்சுவையுடன் எடுத்திருக்கின்றார்கள். இப்படி ஒரு தவறான முடிவால், நாள் முழுக்க... சிலவேளைகளில் வருசக்கணக்காய் எல்லாம் வேதனைப்பட வேண்டி வந்திருக்கும் அல்லவா நமக்கும்?

Death Is My Co-Pilot

மரணம் எப்படி நம்மைப் பின் தொடர்கின்றதென்பதை பயமுறுத்தாமல் மெல்லிய நகைச்சுவையுடன் இதில் கூறியிருக்கின்றார்கள். பார்த்துமுடிக்கையில் ஒரு புன்சிரிப்பு வருவதைத் தவிர்க்கவே முடியாது.

Snap

இப்படம் நமது பொதுப்பார்வையை எள்ளி நகையாடுகின்றது. ஆரம்பக்காட்சிகளுக்கு எதிர்மறையான இன்னொரு பார்வையை அதன் முடிவு தருகின்றது.

10 minutes

பத்து நிமிடங்களுக்குள் இருவேறு உலகங்களுக்குள் நடக்கும் இருவேறு சம்பவங்களை காட்சிப்படுத்துகின்றது. பத்து நிமிடங்களுக்குள் எத்தனை பேரின் வாழ்வு அழிக்கப்படுகின்றது....ஆனால் அது குறித்த அக்கறையில்லாது இன்னொரு உலகம் இயங்கிக்கொண்டிருக்கின்றது என்ற பார்வையை நம்மிடையே விதைக்கின்றது. இதை ஞானதாசோடு இருந்து (ஈழத்தில் இருந்துகொண்டு குறிப்பிடும்படியான குறும்படங்களைத் தந்திருக்கின்றார்) பார்த்திருக்கின்றேன்... படத்தின்பின் ஒரு சிறுகுழுவாய் இப்படம் குறித்து உரையாடியதும் நல்லதொரு அனுபவம்.

(Thanks: YouTube)

Thursday, November 08, 2007

கனடாவின் இலக்கிய விருதுகள்

-Giller Price 2007-

கனடாவில் இலக்கியத்திற்கான விருதுகள் என்று வரும்போது Governor General's Literary Award, Giller Prize ஆகிய இரு விருதுகளே அதிக கவனத்தைப் பெறுகின்றன. இம்முறை இவ்விரு விருதுகளுக்கான shortlistற்கு மைக்கல் ஒண்டாஜ்ஜியின் Divisaderoம், எம்.ஜி.வசாஞ்ஜியின் The Assassin’s Songம் தெரிவுசெய்யபட்டிருக்கின்றன. கனடா எழுத்தாளர்கள் என்றவளவில் இவர்களிருவரின் எழுத்துக்கள் என்னை அதிகம் கவர்கின்றவை (இவர்களிருவரும் கனடாவில் பிறந்தவர்கள் அல்ல என்பதும் கவனிக்கத்தக்கது).

மைக்கல் ஒண்டாஜ்ஜியின் The English Patient, Anil's Ghost ஆகியவற்றை அவை வந்த காலங்களில் வாசித்திருக்கின்றேன். அண்மையில் Running in the Family யையும், கவிதைத் தொகுப்பான The Cinnamon Peelerயையும் வாசித்து, அவை குறித்து எழுத ஆரம்பித்தது அரைகுறையில் நிற்க, மற்றொரு நாவலான Coming Through Slaughter இப்போது வாசித்துக்கொண்டிருக்கின்றேன். ஒண்டாஜ்ஜியின் Divisadero நாவல், Single தகப்பனையும் அவரின் இரண்டு மகள்களையும் வைத்து எழுதப்பட்டதாய் அறிகின்றேன். அமெரிக்காவில் கலிபோர்ணியாவில் ஆரம்பிக்கும் கதை பிள்ளைகள் வளர வளர அமெரிக்காவின் பிற பகுதிகள், பிரான்ஸ் என நகர்வதாய் சொல்லப்படுகின்றது. தனது முதல் பதினொரு வருடங்களை இலங்கையிலும், பிறகு எட்டு வருடங்களை இங்கிலாந்திலும், மிச்சக்காலங்கள் முழுதும் கனடாவில் வசித்துவரும் ஒண்டாஜ்ஜியின் ஒரு நாவலை (In the Skin of a Lion) தவிர, மிகுதி அனைத்தும் கனடாவின் பின்புலத்தைப் பின்னணியாகக் கொண்டவை அல்ல எனபது ஒரு விசித்திரமான அவதானம்.

எம்.ஜி.வசாஞ்ஜியின், The Assassin’s Song குஜராத்தில் நடந்த இந்து-முஸ்லிம் கலவரத்தைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டதாக வாசித்திருக்கின்றேன். வசாஞ்ஜியின், When she was a Queen என்ற சிறுகதைகளின் தொகுப்பு எனக்குப் பிடித்தமான ஒன்று. Giller Prize தவறவிட்ட இந்த இருவர்களில் ஒருவர் Governor General's Literary விருதைப் பெறவேண்டுமென்று விரும்புகின்றேன். Giller Prize பரிசுத்தொகை 40, 000 கனடியன் டொலர்களாகும்.. 15,000 டொலர்களாயிருந்தத் Governor General's Literary விருதை இந்தமுறை 25, 000மாக உயர்த்தியிருக்கின்றார்கள்.

Giller Prize நிகழ்வு தொலைக்காட்சியில் போய்க்கொண்டிருந்தபோது கொஞ்சம் பதிவுசெய்திருக்கின்றேன். படம் இங்கே அங்கேயென ஆடுவதற்கு நான் இன்னொரு கையில் வைத்திருந்த சூடான தேநீர் மட்டுமே காரணம் என உறுதிப்படுத்துகின்றேன். இம்முறை Giller பரிசு, Elizabeth Hayயின் நாவலான Late Nights on Air ற்குக் கிடைத்திருக்கின்றது. கனடாவின் வடக்குப்பகுதிகளை நோக்கி பயணம் செய்து, அதிகம் 'நாகரிகம்' தீண்டாத (பூர்விக மக்கள் அதிகம் வாழும் பகுதி) பின்னணியாக வைத்து இந்நாவல் எழுதப்பட்டதென விருது விழாவில் Elizabeth Hay கூறியிருந்தார்.


பேசும் இப்பெண்மணியைத் தெரிகின்றதா? தீபா மேத்தாவின் water படத்தில் நடித்தவர். தமிழ்ப்படத்தில் நமது சாத்தானோடும் ஒரு படத்தில் நடித்திருக்கின்றார் (சாத்தான் எனபது சரத்குமாரிற்கு நாங்கள் இட்ட செல்லப்பெயர், அவரின் இரசிகர்க்ள்/தொண்டர்கள் கோபிக்கக்கூடாது). Lisa Ray.


மைக்கல் ஒண்டாஜ்ஜியின் நூல் பற்றிய அறிமுகம்.


மைக்கல் ஒண்டாஜ்ஜி நூலில் கையெழுத்திடல்


சென்றவருடம் மிக இளம் வயதில் Giller Price பெற்ற Vincent Lam.

Elizabeth Hayயின் விருதைப் பதிவு செய்திருந்தாலும், அது நீளமாய் இருப்பதால் YouTube என்னோடு மல்லுக்கட்டுகின்றது. சாத்தியமாகும்பட்சத்தில் அதையும் பிறகு இங்கே இணைத்துவிடுகின்றேன்.

Friday, October 26, 2007

எமினெம் - da best

நேற்று எமினெமைத் திருப்பவும் -அமைதியான இரவில்- கேட்க முடிந்திருந்தது (நன்றி: YouTube). ராப் பாடல்களை (அல்லது hip-hop) அவ்வப்போது முன்பு கேட்டுக்கொண்டிருந்தாலும், மிகவும் நெருக்கமாய் உள்வாங்கத்தொடங்கியது எமினெமின் பாடல்களினூடாகத்தான். (இப்போதும், என்னிடமிருக்கும் ஏதாவது ராப் பாடலகளின் இறுவட்டை எடுத்துக்கொண்டுபோய் காரில் கேட்டுவிட்டு, ஒரேமாதிரியாக இருக்கும் இதையெல்லாம் எப்படி சுவாரசியமாய்க் கேட்கின்றாய் எனும் அண்ணாவின் விமர்சனத்தை சற்று ஒதுக்கிவைப்போம் :-)).

எமினெமின் பாடல்கள் ஒரு நவீன மனிதனுக்குப் பொருந்தக்கூடியவை. தன்னளவில் சிதைந்துகொண்டிருப்பவனாய், அன்புக்காய் ஏங்கிக்கொண்டிருப்பவனாய், வக்கிரமான/வன்முறையான செயற்பாடுகளில் மனதின ஆழங்களில் இச்சைகளைப் பதுக்கி வைத்திருப்பவனாய், அவ்வப்போது மனப்பிறழ்வுக்கு ஆளாபவனாய், உலகின் இன்றையபோக்குக்கண்டு மூர்க்கப்படுபவனாய் என் எல்லாவிதமாய்...ஒரு ஆணை எமினெமின் பாடல்களில் கண்டுகொள்ளலாம். இவற்றையெல்லாம் பாடல்களில் வெகு தீவிரத்தன்மையில் அல்ல, மிகவும் எள்ளல் தொனியுடன் தந்துகொண்டிருப்பதால்தான் எமினெம் எனக்கு அதிகம் நெருக்கமாயிற்றார் போலத் தோன்றுகின்றது. பொதுவான ராப் வீடியோப் பாடல்களில் பெண் உடல்கள் அதிகளவு சேர்க்கபட்டு வெகுசனங்களின் பாலியலுக்கு அவை தீனியாக்கப்படுகையில், வெகு குறைவாகவே எமினெமின் பாடல்களில் பெண் உடல்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன என்பது கவனிக்கத்தக்கது (Shake that A** என்ற பாலியல் இச்சையைப் பாடுகின்ற பாடல் கார்ட்டூனாய் எடுக்கப்பட்டிருக்கும். எப்படி தனது (முன்னாள்) மனைவி, தாயார், Mariah Carey போன்ற பெண்களின் மீதான வெறுப்பை வெளிப்படையாக எமினெம் பாடியிருக்கின்றாரோ, அதுபோல அவரது குழந்தைகள் மீதான நேசிப்பையும் நேர்மையாகப் பாடியிருக்கின்றார். எமினெமைப் போல, தனது துறையிலிருக்கும் சக கலைஞர்களையோ, பிற அரசியல்வாதிகளையோ நக்கலடித்த பாடகர்களை ராப்பில் காண்பது மிக அரிது என்றுதான் கூறவேண்டும். எமினெம், பிறர் மீது வைக்கும் விமர்சனங்கள், வெள்ளைத்தோலர் போன்ற காரணங்களால் சில ராப் விமர்சகர்கள்/சஞ்சிகைகள் எமினெமை இருட்டடிப்புச் செய்தாலும், ராப்பின் முக்கிய MCக்களில் ஒருவர் அவர் என்பதை மறுக்காமல் ஒப்புக்கொள்ளுமளவிற்கு எமினெமின் இருப்பு ராப்பில் இருக்கின்றது என்பதே உண்மையாகும்.



Lose Yourselvsஎன்ற இப்பாடல், வருகின்ற சந்தர்ப்பத்தைத் தவறவிடாது பாவிக்கவேண்டும் என்று சொல்கின்ற.... கேட்கும்போதே உற்சாகம் வரச்செய்கின்ற பாடல். 8 Mile என்ற எமினெமின் கடந்தகாலக் கதையைக்கூறும் திரைப்படத்திலும் வந்திருந்தது. ஒரு விளிம்புநிலை மனிதனாய் வாழ்க்கையை ஆரம்பத்தில் எமினெம் வாழ்ந்திருந்தாலும், அதிகம் கறுப்பின் மக்கள் புழங்கும் ராப் சூழலில் எமினெமை எவரும் முதலில் ஏற்றுக்கொள்ளவில்லை (White America என்ற இன்னொருபாடலில் இது பற்றி எமினெம் பாடியிருப்பார்). எனவே கிளப் ஒன்றில் நடக்கும் Best Mcற்கான போட்டியில் வெல்வதற்கும் அதற்கும் முன்பான நிலையையும் வைத்து இதை எமினெம் பாடியிருப்பார். எனினும் எல்லாச் சூழல்களுக்கும் பொருந்தக்கூடியதே.

Like Toy soliders


இப்பாடல், ராப் சூழலில் பாடகர்களுக்கிடையில் இருக்கும் முரண்பாடுகளைச் சொல்கின்றது இம்முரண்பாடுகள்தான் ரூபாக் (Tupac), பிக்கி(Notorious B.I.G) போன்ற பாடகர்களை பலியாக்கியது. இப்பாடலைக் கேட்டால் யார் யாருக்கு எல்லாம் யாரோடு சண்டை என்ற 'வரலாறு' வெளிப்படும். தான் விரும்பித் தேர்ந்தெடுத்த துறையை தான் எப்படி அழிக்க விரும்புவேன், இனியிந்த சண்டைகள் வேண்டாம் என்றரீதியில் எமினெம் பாடியிருப்பார். முரண்நகையாக இப்பாடல் காட்சியில் சுடுபட்டிறப்பவராய் நடித்த எமினெமிம் நண்பரும் எமினெமோடு (D-12) குழுவில் இருந்தவருமான Proof அண்மையில்தான் டிட்ரோயிட் கிளப்பொன்றில் நடந்த சண்டையில் கொல்லப்பட்டிருக்கின்றார்..

MOSH


இப்பாடல் அமெரிக்கா பிற நாடுகளில் நடத்தும் போர்களை கடுமையாகக் கண்டனம் செய்கின்றது. அமெரிக்காவிற்கு, வேறு நாடுகளில் நடத்தும் போர்களல்ல,அமெரிக்காவின் உள்ளேயேயுள்ள வறுமையான மக்களை எப்படி வறுமையிலிருந்து இல்லாமற்செய்யும் போர்களே முக்கியமென எமினெம் கூறுகின்றார். ஜோர்ஜ் புஷ்ஷை, இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பதற்காய் நடந்த தேர்தல் சமயம் வந்த இப்பாடல் ஜோர்ஜ் புஷ்ஷைக் கடுமையாக விமர்சிக்கினறது. போர் புஷ்சிற்கும் அவரது தந்தைக்கும் போர் வேண்டுமென்றால், ஏகே-47 எடுத்துக்கொண்டு அவர்களிருவரையும் போர்முனைக்குச் செல்லச்சொல்லும் வசனங்களும் இதிலுள்ளது.

When I'm gone


குழந்தைகளின் மீதான நெகிழ்ச்சியான எமினெம் பாடல்கள் அற்புதமானவை. ஏற்கனவே வந்த Mocking bird, Haillie's Song போன்ற பாடல்கள் போல இதுவும் மிகவும் நெகிழ்ச்சியானது. பாடலின் நெருக்கத்தில் இதை தமிழில் மொழிபெயர்த்துப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் கூட எனக்கு சென்ற வருடம் வந்திருந்தது :-). Just Lose It என்ற பாடலில் மைக்கல் ஜக்சனின் சிறுவர்கள் மீதான் பலாத்காரத்தைக்கூட எமினெம் கேள்விக்குட்படுத்தியிருப்பார். அதனால் எமினெம் மீது பலத்த விமர்சனங்கள் கறுப்பின மக்களிடையே இருந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.



இதொரு வித்தியாசமான பாடல். தனது சொந்த அம்மாவைத் திட்டித் தீர்க்கின்ற பாடல் (இன்னும் ஒன்றிரண்டு பாடல்கள் இவ்வாறு இருக்கின்றது). தன்னைச் சிறுவயதில் எப்படி ஒரு நோயாளியாக்கினார் தாய் என்பதைப்பற்றி பேசுகின்றது. எமினெம், தான் தன்னை பிரபலப்படுத்துவதற்காய் சொல்லவில்லை, தனக்கு என்ன நடந்தது என்று கேளுங்கள் என்று பாடலைக் கேட்பவர்களிடம் கேட்கின்றார். தனது தாயைக் காயப்படுத்த் இதைச் சொல்லவில்லை என்று ஆரம்பத்தில் எமினெம் கூறினாலும், மிகக் கடுமையான வார்த்தைகளால் தனது தாயைத் திட்டுகின்றார். அவரது சகோதரன்(?) ரோனி இளம்வயதில் இறந்தபோது, தாயார் எமினெமிடம், ரோனிக்குப் பதிலாக நீ இறந்திருக்கலாம் என்று சொல்லியிருக்கின்றார் என்பதினூடாக எமினெமிற்கு அவரது தாயாரின் மீதான வெறுப்பும் புரிந்துகொள்ளப்படக்கூடியதே. வன்முறைக்கும், போதைமருந்துக்கும் அடிமையான தாயிடமிருந்து எமினெம் வளர்ந்திருக்கின்றார் என்பதும், அவரது தகப்பனார் யாரென்பதே எமினெமிற்கு தெரியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.


(அஸினுக்கு, அவரது பிறந்தநாளுக்கு...)

Tuesday, October 16, 2007

ஈழத்துக்கவிஞர்கள் ---> கவிதைகள்

ஈழத்துப்பெண் கவிஞர்கள் மூவரின் கவிதைத்தொகுப்புகள் விரைவில் வரப்போகின்றது என்று காலச்சுவடின் அறிவிப்பு -அதன் மீதான விமர்சன்ங்களைத் தாண்டி- மகிழ்ச்சியைத் தருகின்றது. அனாரின், 'எனக்கு கவிதை முகம்' (அனாரின் இரண்டாவது தொகுப்பு என நினைக்கின்றேன்), ஆகர்ஷியாவின், 'நம்மைப் பற்றிய கவிதை', வினோதின்யின், 'முகமூடி செய்பவள்' ஆகிய தொகுப்புக்களே அவையாகும். ஏற்கனவே இரண்டொரு இடங்களில் குறிப்பிட்டமாதிரி, தேக்கம்டைந்த ஈழ/புலம்பெயர் கவிதையுலகை முன்னகர்த்தும் நம்பிக்கையைப் பெண் படைப்பாளிகளே இன்றைய பொழுதில் தருகின்றார்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றவிதமாய் இவர்களது கவிதைத் தொகுப்புககளும் துலங்கட்டுமாக..
(~டிசே)


------------------
வெறித்தபடி இருக்கும் கனவு
-அனார்

வெளிச்சத்தை இருட்டைத்
தின்று வளர்கிறது கனவு
தண்ணீரிலும் காற்றிலும்
தன்னைப் பூசிவிடுகின்றது
காலத்தின் தொலைவுவரை தகிக்கும்
வெப்பத்தைக் குடித்த கடுங்கோடையென
உதடுகளில் தேங்கிக்கிடக்கிறது
அறியப்படாத புலத்திலிருந்து
நீலச்சிறகுகள் மின்னலென விரிந்திற்று
அவ்விரு சிறகுகளில் தூக்கிவைக்க முயல்கிறேன்
தழல் விட்டெரிகிற அதே கனவைத்
தப்பமுயன்ற அதன் அதிசய நிழல்
காலை வெயிலில்
உருவற்று அலைகின்றன
ஆதியில் விடுபட்டுப்போயிருந்த
என் பொற்காலக் கனவை
மெல்லக் கைகளில் அள்ளுகிறேன்
இசையின் நுண்இழைகளால் மூடுண்டகாடு
அதன் இயல்புகளுடன்
அனுமதிக்கின்றது மழையின் கனவை
நீர்ப்பெருக்கின் கசிவு படிந்திருக்கும் கரையில்
தீராத கேவல்களாய்ப்
பரவிச் சிதறும் கனவுக் குமிழிகள்
கட்டிலின் மூலை நான்கிலும்
முயலின் பளபளக்கும் கண்களாய்
மிரட்சியுடன்
உன்னை வெறித்தபடியிருக்கும் என் கனவு

அனார் (இஸ்ஸத் ரீஹானா முஹம்மட் அஸீம்) கிழக்கிலங்கையின் சாய்ந்த மருதுவில் பிறந்தவர். இவரது 'எனக்குக் கவிதை முகம்' தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் இவை.
--------------

நம்மைப் பற்றிய கவிதை
-ஆகர்ஷியா


ஆளாளுக்கு ஒப்பனையேற்றி
மேடையேறுகிறோம்.
இயங்கியல்
நம்மைத் தத்தமது வட்டத்துள்
வரையறுத்துள்ளது.
உன் ஒப்பனை கலையாது நானும்
என்னைக் குலைக்க மனமின்றி நீயும்
சம பருமன்களைச் சுமக்க வேண்டியிருக்கிறது.
வேடிக்கையதுவல்ல
ஒப்பனையற்றிருத்தல்கூட ஒருவித
பாத்திரமேற்பிற்கான
ஒத்திகையென்பதை
ஆளாளுக்கு மறந்து
விடாதிருக்கிறோம்.
இதனால்தான் போலும்
நம்முடைய வட்டங்கள்
ஒன்றையொன்று இடை
வெட்டிக்கொண்டதேயில்லை.
வெளியே பலரும் மெச்சுகிறார்களாம்
நம் இயங்கியலுக்குள்ளோடும்
ஒத்திசைவை
எத்தனையோ வருடத் திரைநீக்கத்தில்
ஒருவித கலையலங்காரத்துடன்
சலிப்பேதுமின்றிய பாவனையில்
ஆனாலும் என்னவோ
வட்டங்கள் மையொழுகக் கரைந்து
வெண்தாளில் பீச்சியடிப்பதாய்
ஏக்கம் மிகுந்த கனவுகள் மட்டும்
இப்பவும் என் இரவுகளில்!

ஆகர்ஷியா (பவானி அருளையா) யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பிறந்தவர். இவரது 'நம்மைப் பற்றிய கவிதை' தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதை இது.
-----------------

முகமூடி செய்பவள்
-வினோதினி

அவளது வீட்டின் சுவர்களெங்கும்
அவள் செய்யும் முகங்கள்.

தனது
குருதியிலொரு துளி
மூச்சின் ஒற்றைத் துணுக்கு
மூப்புறுந் தசைத்திரள் சிறிது சேர்த்து
முகங்கள் செய்கிறாள்.

நடு நிசியில் பகலின் வெளிச்சத்தில்
எனது ஊரில்
எங்கோ ஓர் உயிர் இறக்கையிலும்
மற்றொன்று பிறக்கையிலும்
யாரோ ஒருவர் கொல்லப்படுகையில்
கேள்வி கேட்கும் உரிமை தொலைத்து
அவர்கள் தலைகள் தாழ்கையில்
அவள் முகங்கள் செய்கிறாள்.

ஒரு பெண்ணின் காதல் மறுக்கப்படுகையில்
அவள் பலவந்தமாக இச்சிக்கப்படும்
பொழுதுகளில்
குழந்தைகள் பயந்து அழ மறக்கையில்
வெடிச்சத்தங்கள் பறவைகளின் கூடுகளை
உலுப்புகையில்
காரணமேதுமற்றுக் கடத்தப்பட்டவன்
தன் வாழ்வு பற்றி அச்சமுறுகையில்
வீடொன்று ஆளற்றுத் தனிக்கையில்
கிராமமொன்று கைவிடப்படுகையில்
அங்கே நாயொன்று
உணவின்றி அலைந்து உயிர்விடுங் கணத்தில்
பாலுந் தேனுங் குடிக்கும் எமது கடவுளர்
இல்லை எனத் திட்டப்படுகையில்
அவள் முகங்கள் செய்கிறாள்.

முகங்களின் மூச்சும்
மூடாத கண்களின் பார்வையும்
குழந்தைகளது என ஏமாந்து
அவள் உயிரூட்டும் முகங்கள் எப்படியோ
அவளது கனவுகளைக் களவாடிவிடுகின்றன
அவ்வப்போது.

வினோதினி (வினோதினி சச்சிதானந்தன்) யாழ்ப்பாணத்தில் இருக்கிறார். இவரது 'முகமூடி செய்பவள்' தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் இவை.

நன்றி: காலச்சுவடு( கவிதைகளுக்கும், எழுதியவர்கள் பற்றிய குறிப்புகளுக்கும்)

Sunday, October 07, 2007

ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா

இசைக்குயில் 2007 (ரொரண்டோ)


(கிருஷ்ணமூர்த்தி, கெளசிக்..., சின்மயி, விஜய லக்ஷ்மி n others)

விஜய் தொலைக்காட்சியில் நடந்தேறிய Super Singer(?) என்ற சிறுவர்களின் நிகழ்ச்சியில் பங்குபற்றிய/வென்ற சிறுவர்களோடு கனடிய சிறுவர்களும் பாடும் இசைக்குயில்-2007யிலிருந்து சில (அரைகுறைப்)பதிவுகள்.














இங்கே என்னிடம் தமிழ் தொலைக்காட்சி/வானொலி எதுவும் இல்லையென்பதால், super singer என்ற நிகழ்ச்சி பற்றிய மேலதிக எந்தச்செய்தியும் எனக்குத் தெரியாது. வீட்டிலிருப்பவர்கள் இறுவட்டு மூலம் விஜய் ரீவியில் நடந்த நிகழ்ச்சியைப் பார்த்திருந்தார்கள். எங்கள் குடும்பத்திலிருக்கும் சிறுவர்களை அழைத்துச்செல்ல நிகழ்வுக்கு நானும் ஒரு உதிரியாகச் சென்றிந்தேன். குழந்தைகளோடு குழந்தைகளாக இருப்பதைப்போல வேறு எது அதிக சுகந்தரப்போகின்றது?

பாடிய சிறுவர்கள் பழைய பாடல்களோடு மட்டும் நின்றது ஒரு பலவீனந்தான். போட்டி இன்னபிறவற்றிற்கு தேர்ச்சியான பாடல்களைத் தேர்ந்தெடுத்துப்பாடலாம்; தவறில்லை. ஆனால் ஒரு மேடை நிகழ்வுக்கு, அதுவும் குழந்தைகள் நிறைய வரும் நிகழ்வுக்கு குழந்தைகளுக்குப் பரிட்சயமான அதிகதியிலுள்ள பாடல்களைப்பாடியிருக்கலாம்.

சிவாஜி பாடலின் பல்லேலக்காவைத் தவிர, மனதை அதிரச்செய்த எந்தப்பாடலையும் காணவில்லை. இது போதாது என்று அவ்வபோது பாடிய சின்மயியும் தனது கர்நாடக சங்கீத சாமர்த்தியத்தைக் காண்பிக்க என்று அந்தக்காலத்து தில்லானா மோகனாம்பாள் பாடல்களோடு மட்டும் நின்றது இன்னொரு சோகம். சிவாஜி படத்தின், 'சஹானா தூறல் வீசும்' பாடலுக்கு கிருஸ்ணமூர்த்தியோடு (super singersல் முதற்பரிசு வென்றவர்) கூட சின்மயியால் இசைந்து பாடமுடியவில்லை. குரல்களின் இடைவெளியில் மடுவுக்கும் மலைக்குமான இடைவெளி தெரிந்திருந்தது. சின்மயிக்கு அல்ல, அநேக பெண்பாடகர்களுக்கு ஆண்களோடு பாடும்போது, ஆண்களின் குரல் பெண்களின் குரலை விழுங்கிவிடுவது நடந்துகொண்டுதானிருக்கின்றது. அப்படி ஆண்கள் உச்சஸ்தாயியில் பாடும்போது அதற்குச் சவால் விட்டுப்பாடக்கூடிய ஒருவர் என்றால் ஜானகியைத்தான் முன்னுதாரணமாய்க் கொள்ளவேண்டியிருக்கின்றது. உதாரணத்திற்கு முதல்வன் படத்தில் வரும் முதல்வனே பாடலைக் கேட்டுப்பாருங்கள்.

எனினும் வந்திருந்த சிறுவர்கள் நன்றாகவே பாடினார்கள், அவ்வாறே இங்கு கனடாவில் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பாடிய ஆறு சிறுவர்களும்.

சில ஒளித்துண்டுகள் (முழுமையாக அல்ல)


பெயரிலி, சிறிரங்கன் போன்ற அந்தக்காலத்தைய நண்பர்களுக்கு (இந்தப்பாடல் பி.யு.சின்னப்பா காலந்தானே :-))


எனக்கும் அசினுக்கும்


இது இப்பதிவு பார்க வந்த உங்கள் அனைவருக்கும்; பாடலிற்கு முன்பான தீம் உரையாடலைத் தயவுசெய்து புறக்கணிக்குக..

Saturday, August 25, 2007

Akonம் அஸினும்



Akonனின் அண்மையில் வெளிவந்த பாடலிது. ஒரு பலவீனமுள்ள மனிதனாய், தான் பிறருக்குத் தீங்கிழைத்த அனைத்துச் சந்தர்ப்பங்களுக்கும் மன்னிப்புக் கேட்கின்றார். ஆரம்ப காலங்களில் கார்களைத் திருடுபவராய் இருந்ததிலிருந்து(அதில் பிடிபட்டு ஜெயிலில் சில வருடங்களாய் இருந்திருக்கின்றார்) சமீபத்தில் நடந்த அனைத்துச் சம்பவங்கள் வரை எல்லாவற்றிற்கும் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்கின்றார். முக்கியமாய் அண்மையில் கரீபியன் தீவுகளின் கிளப் ஒன்றில் பாடிக்கொண்டிருக்கும்போது பதினெட்டு வயதுக்குட்பட்ட பெண்ணோடு தகாத வழியில் ஆடியிருந்தார் என்ற சம்பவம் அனைவரும அறிந்ததே. 21 வயதுக்குட்பட்டவர்களை அனுமதிக்காத கிள்ப்பிற்கு எப்படி ஒரு பதினெட்டு வயதுக்குட்டபட்ட பெண் வருவார் என்று தான் எதிர்பார்க்கமுடியும் என்று இப்பாடலில் Akon கூறுகின்றபோதும், அந்தச் சம்பவத்திற்காய் வெளிப்படையாக அவர் மன்னிப்புக்கேட்கின்றார். அத்தோடு அந்தச்சம்பவத்தால் மூடப்பட்ட கிளப்பிற்கும், மேலும் இதனால் வெரிஸன் வயர்லஸின் பெரும் விளம்பரத்திலிருந்து தான் நீக்கப்பட்டதையும் தெரிவிக்கின்றார். இவ்வாறான சம்பவங்களைச் செய்துவிட்டு அதையொரு வீரதீரச்செயலாய் ராப் பாடல்களில் பாடிக்கொண்டிருப்பவர்கள் போலல்லாது தனது குறைகளை குறைகளாகவும் அப்படி நடந்துகொண்டதற்கு மன்னிப்புக் கேட்கவும் செய்கின்ற Akonனின் ஆளுமை, அவரது பாடல்களைப்போல என்னை வசீகரிக்கின்றன.

...I'm sorry for the hand that she was dealt
And for the embarrassment that she felt
She's just a little young girl trying to have fun
But daddy should of never let her out that young

I'm sorry for Club Zen getting shut down
I hope they manage better next time around
How was I to know she was underage
In a 21 and older club they say

Why doesn't anybody want to take blame
Verizon backed out disgracing my name
I'm just a singer trying to entertain
Because I love my fans I'll take that blame...


அவரது அழகான 'ஆபிரிக்கா தாய்' (Mamma Africa) பற்றிக்கூறும் இப்பாடலைக் கேட்டுப்பாருங்கள். எத்தனை குறைகள் இருந்தாலும், தாய் நாடு தரும் சுகத்திற்கு இணையேது?


......
நயன்தாரா இரசிகர்களைச் சந்தோசப்படுத்துகின்றேன் என்று வி.ஜெ.சந்திரன் இப்பதிவில் (கடைசிப்பாடலிற்கு முதல்) எங்களின் அஸினை இருட்டிப்புச் செய்து அஸினின் அருமையான நடனத்தை மறைத்து, நயன்தாராவை சிம்புவோடு சேர்க்கஸ் ஆடவைத்ததைக் கண்டித்து அசல் பாடல் இங்கே...

Friday, August 17, 2007

எனக்கும் அ.முத்துலிங்கத்தைப் பிடிக்கும்தான்....எப்போது என்றால்....?

நீங்கள் ஜெயமோகன், அ.முத்துலிங்கத்தின் தீவிர வாசகர்கள் என்றால் நேரடியாக ஜெயமோகனின் குறிப்பை வாசிக்கவும் (தயவு செய்து கொஞ்சம் மவுஸைக் கீழே கொண்டு போகவும்) . மற்றவர்கள் விரும்பினால் இவனென்ன -வழக்கம்போல- அலட்டுகின்றான் என்று பார்க்கவிரும்பின் என்னுடைய குறிப்புக்களையும் வாசித்துவிட்டுச் செல்லவும்.)

ஜெயமோகன், அ.முத்துலிங்கத்தின் தொகுப்பொன்றை முன்வைத்து எழுதிய உரையொன்றை கீழே பதிவிலிடுகின்றேன். ஷோபா சக்தி போன்ற படைப்பாளிகளே, 'திரு.மூடுலிங்க' என்று அ.முத்துலிங்கத்தின் 'பாதிப்பால்' அலசிப் பிழிந்து கதையெழுதும்போது என்னைப்போன்றவர்கள் அ.முத்துலிங்கத்தை வாசிக்காவிட்டால், தமிழ் கூறும் நல்லுலகம் வாசகர்களின் பட்டியலில் என்னைச் சேர்க்காது என்பதும் நன்கு தெரியும்..

'தமிழில் எழுதிய எல்லாவற்றையுமே எவரையும் படிக்கவைக்கும் திறன் கொண்ட மூன்று எழுத்தாளர்கள் மட்டுமே உள்ளனர். கல்கி அவர்களில் காலத்தால் முன்னோடி. சுஜாதா அடுத்தவர். அ.முத்துலிங்கம் தொடர்பவர்.' என்று ஜெயமோகன் சொல்வதை ஏற்றுக்கொள்வதில் எந்தத் தயக்கமுமில்லை. நானும், அ.முத்துலிங்கத்தின் கதைகளை/கட்டுரைகளை 'சுவாரசியத்துடன்' வாசிப்பதை மறைக்க வேண்டிய அவசியமுமில்லை.

ஜெயமோகன், எழுதிய இந்தப்பதிவு குறித்து சில விடயங்கள் எழுத விருப்பு உண்டு. ஆனால் ஏற்கனவே சில இலக்கிய ஆளுமைகளைப் பற்றிக்கேள்வி கேட்டதற்கே, உனக்கென்ன தெரியுமென்று எனது தனிப்பட்ட வாழ்க்கையையும் சேர்த்துத் திட்டியவர்கள்தான் இந்தக்கணத்தில் பயமுறுத்துகின்றார்கள் :-). ஆனால் அது கூடப்பரவாயில்லை; 'நான் நாய்தான் குரைக்கத்தான் செய்வேன்' என்று அந்தப் பல்லக்குத்தூக்கிகளுக்கு எதிராய் எழுதியதை -நண்பரொருவர் எதிர்ப்பார்க்காமல்/கேட்காமல்- அச்சுப்பிரதியொன்றில் எடுத்துப்போட்டதுதான் இன்னும் கூட வினையாகிவிட்டது.. எழுதப்பட்டது எந்தச்சந்தர்ப்பம் அல்லது அந்தக்கவிதை எதைக் கூறவருகின்றது என்றறியாமல் யாரோவொரு நாய்ச்சித்தர் என்னோடு (?) அச்சுப்பிரதியொன்றில் சொறிந்துகொண்டிருக்கின்றார். அவரை நோக்கி நான் மீண்டு வள்ளெனப் பாய்வதா அல்லது வாலையாட்டியபடி பாதம் பணிந்து அவர் கால் நக்குவதா என்று அவதியில் தற்சமயம் நிற்கின்றேன் (இதைவிட நீண்டகாலமாய் ஏன் அஸினின் படமொன்றும் வரவில்லை என்ற கவலையும் உண்டு) ஆகவே, இப்போது ஜெயமோகனின் பதிவை அலசி ஆராய்ந்து நீண்ட பதிவெழுதும் எண்ணமிலை என்க.

சின்னதாய் சில குறிப்புகள் மட்டும்:
(1) பதிவில் வரும் உரையாடலில் ஜெமோ அறிந்தோ அறியாமலோ ஒரு உண்மையைக் கூறிவிடுகின்றார்...

''படிச்சிட்டேன் சார். சூப்பர். சிரிச்சு சிரிச்சு மண்டைக்குள்ள ஒருமாதிரி டிரா·பிக் ஜாம் ஆயிட்டேன் சார்... ''என்றபடி சிரிக்க ஆரம்பித்தார். ''யார் சார் இவரு?'' என்றார்.

''இலங்கைக்காரர் சார்''

நண்பரால் நம்ப முடியவில்லை''அப்டியா சார்? அவங்களுக்கு அங்க யுத்தம் வெட்டு குத்துன்னு ஆயிரம் பிரச்சினைகள். எப்டி சார் சிரிப்பா எழுதறாங்க


ஆக, இங்கே அ.முவை வாசித்த -அ.மு எந்த நாட்டுக்காரர்- என்றறியாத சக பணியாளருக்கு வியப்பு வருகின்றது....அதாவது 25 வருடங்களாய் போர் தீவிரமாய் நடக்கின்றதாய் சொல்லப்படும் நாட்டிலிருந்து வந்தவரின் ஒரு முழுத்தொகுப்பிலிருந்து ஒரு சிறுகுறிப்புக்கூட போரின் வடுவை வாசிப்பவருக்கு ஏற்படுததவில்லை என்றால், அ.மு எவரை அடையாளப்படுத்துகின்றார் என்ற கேள்வி வருகின்றது.
இதுவே முக்கிய புள்ளி. இங்கிருந்து தான் அ.முவின் படைப்புகளின் எழுச்சியும் (பரவலாய் பலரைப் போய்ச் சென்றடைவதும்), வீழ்ச்சியும் ஆரமபிக்கின்றது.

போருக்குள் வாழ்ந்திருக்கவேண்டும் என்றுதானில்லை. புலம்பெயர்ந்து இருக்கும்போதே வானொலி, பத்திரிகை, இணையம் இன்னும் எத்தனையோ ஊடகங்களால் நாம் எம்மண்ணின் நிகழ்வுகளோடு தொடர்புபட்டிருக்கின்றோமே... அவை எதுவும் கூட அ.முவை பாதிக்கவில்லையா? அட, போர் நடக்கும் ஈழத்தில் வாழாத எத்தனையோ தமிழகத்து நண்பர்கள்கூட தமக்கான புரிதல்களுடன் அக்கறையுடன் ஈழ அரசியல் குறித்து எத்த்னை குறிப்புகள் எழுதிக்கொண்டிருக்கின்றனரே? இப்படியொரு தொகுப்பில் போர் நடைபெற்ற நாட்டிலிருந்து நீங்கள் வந்தீர்கள் என்பதை சிறுகுறிப்பில் கூட வாசகருக்கு உணர்த்தாமல் இருப்பது அவமானம் அல்லவா அ.மு?

(2) ஜெயமோகன் இந்தப்பதிவில் அ.முத்துலிஙகம் எந்த சாதி என்பதைக் குறிப்பிட்டுகின்றார். இதற்கு முன், அ.முத்துலிஙகம் தான் இன்ன சாதியென்று எங்கையாவது தனது எழுத்தில்/நேர்காணலில் குறிப்பிட்டிருந்தாரா? இதையேன் அ.முவின் பின்புலம் அறியவிரும்பாதா/ இதுவரை அறியாத ஒரு வாச்கருக்கு வெளிப்படையாக ஜெமோ முன்வைக்கவேண்டும்? ஒரு எளிய கேள்வியாக, 'இப்படிச் சாதியை வெளிப்படையாகக் கூறுவதில், உயர்சாதியிலிருந்து ஒரு நல்லதொரு படைப்பாளி வந்திருக்கின்றார் என்று பூடகமாய் வெளிப்படுத்தும் அரசியல் தான்' இது என்று நான் சொன்னால் என்ன எதிர்வினையாக ஜெமோவினது இருக்கும்?

சரி, அ.மு 30 வருடங்களுக்கு முன் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்துவிட்டார், அவரால் ஈழ அரசியல் குறித்து பேசக் கஷ்டந்தான் என்று சும்மா ஒரு சாட்டுக்கு வைத்துக்கொள்வோம். ஒரு உயர்சாதி ('Quote noted:'வேளாளராக') ஈழத்திலிருந்த அ.மு தனது படைப்புக்களில் ஈழத்தில் பஞ்சமர்கள் ஒடுக்கப்பட்டதை எங்கையாவது வெளிப்படையாக எழுதியிருக்கின்றாரா? அந்த ஒடுக்கப்பட்ட மக்களது வாழ்க்கை முறை குறித்து எங்கேனும் கரிசனையாக பதிவுசெய்திருக்கின்றாரா? எங்களைப்போன்ற சந்ததிகளுக்குத்தான் போர் வ்ந்து சாதிப்போராட்டங்கள் குறித்து அறியமுடியவில்லை என்றாவது கூறமுடியுமென்றாலும், பஞ்சமருக்கான போராட்டங்கள் தீவிரமாய் நடைபெற்ற காலங்களில் அ.மு ஊரிலிருந்த போதும் ஏன் அதைத் தனது படைப்புகளில் இன்றுவரை வெளிப்படுத்தாது மவுனஞ்சாதித்துக்கொண்டிருக்கின்றார்? எழுத்தாளருக்கென்று இருக்கவேண்டிய கொஞ்ச நஞ்ச அறத்தையாவது அ.முத்துலிங்கத்திடம் என்னைப்போன்றோர் எதிர்பார்ப்பது தப்பா? அது குறித்துக்கூட ஜெயமோகன், நீங்கள் உங்கள் வாயை சிப் (ஜிப்) போட்டு இழுத்துமூடிவிட்டு ஆகா ஓகோவென்று பாராட்டிக்கொண்டிருப்பது எத்தகைய அரசியல்?

(3) ஜெயமோகன், அ.முத்துலிங்கத்தின் விமர்சனப்பார்வைகள் கூட 'மிகக்கறாரானவை' என்கின்றார். என்னைப்பொறுத்தவரை, எல்லோருக்கும் நல்லவராய் இருந்து எல்லா இலக்கிய இதழ்களுக்கும் அ.முத்துலிஙக்ம் படைப்புக்கள் அனுப்புவதுபோலத்தான், அவரது அநேக விமர்சனங்களும் நிறையப் பாராட்டிவிட்டு எளிமையாக நின்றுவிடும். உதாரணத்திற்கு இதைப்பாருங்கள்.

திருவள்ளுவர் எத்தனை நூல்கள் எழுதினார். ஒன்றுதான், அது திருக்குறள். கணியன் பூங்குன்றனார் 1800 வருடங்களுக்கு முன்னர் படைத்த ஒரு கவிதைக்காக இன்றுவரை போற்றப்படுகிறார். ஹார்ப்பர் லீ தன் வாழ்நாளில் எழுதிய புகழ் பெற்ற ஒரேயொரு நாவல் To Kill a Mocking Bird. பிரிட்டிஷ் இளம் பெண் Emily Bronte படைத்த வாழ்நாள் சாதனை இலக்கியம் Wuthering Heights.

இந்த வகையில் 'ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்' நூல் அடங்கும். ஒரு வாழ்வுக்கு ஒரு நூல் போதுமானது. ஒரு தேசத்துக்கு ஒரு நூல் போதுமானது. ஒரு வரலாற்றுக்கு ஒரு நூல் போதுமானது. ஓர் இலக்கியத்துக்கு ஒரு நூல் போதுமானது.


பரீட்சைத்தாள்களில் கேள்வி வருவதுபோல, ஜெமோ இந்தக் கட்டுரையிலுள்ள 'கறாரான விமர்சனம்' எதுவென்பதை எங்களுக்காய் கட்டுடைப்பாரா?

(4) அ.முத்துலிஙக்ம், இங்குள்ள மற்றமொழி எழுத்தாளர்களோடு சந்தித்ததை காலச்சுவட்டிலோ, உயிர்மையிலோ தொடர்ந்து எழுதிக்கொண்டு வந்திருந்தார். நானும் அதை விருப்புடன் வாசித்து, சிலாகித்து நண்பர்களுடன் பேசிக்கொண்டிருப்பேன் (இங்கிருந்து தோழியொருவர், தனக்கும் தொடர்ந்து செலவுக்கு பணம் வந்து, அ.முத்துலிங்கம் போல நேரங்கிடைத்தால் இதைவிட இன்னும் சிறப்பாகச்செய்வேன், நீயேன் இப்படி வியக்கின்றாய் என்பார்.)

அதுவல்ல விசயம், அ.மு, மேரி ஆன் மோகன்ராஜ் பற்றி எழுதிய குறிப்புத்தான் அ.முத்துலிங்கம் எழுதிய மற்றக்குறிப்புகள் குறித்து என்னை யோசிக்க வைத்தது. . மிக எளிமையாக மேரியின் கதைகளைப் புரிந்துகொண்டு ஒரு பதிவு எழுதியிருந்தார். மேரியின் படைப்புக்களின் ஆழங்களுக்குச் செல்வதை விடுத்து, அவரை எப்படி நேர்கண்டேன், என்ன மேரி அப்போது செய்துகொண்டிருந்தார் என்றெழுதுவதில்தான் அதிக அக்கறையைத்தான் அ.மு. அதில் எடுத்திருந்தார்.

அந்த எரிச்சலில்தான், அந்தப்பதிவு 'பதிவு'களில் வந்தபோது, எற்கனவே வலைப்பதிவுகளில் எழுதியிருந்த மேரியின் படைப்பை நான் 'பதிவுகள்' இணையத்தளத்துக்கு அனுப்பியிருந்தேன். ஆக, 'கறாரான விமர்சனத்தை முத்துலிஙகம் செய்கின்றார்' என்று பெருமிதமாய் கூறும் ஜெமோ, -நீங்களும், அமுவும் மாறி மாறி முதுகுசொறியும் நட்புக்காகத்தான்- இப்படி பெருந்தன்மையாய்ப் பாராட்டியிருக்கின்றீர்கள் என்று நான் கூறினால் கோபப்படமாட்டீர்கள்தானே?

எப்படி சிறுகதைகள் இருக்கவேண்டும் என்று 'பதிவு'களில் எங்களுக்கு ஜெயமோகன் வகுப்பு எடுத்ததுமாதிரி, விமர்சனம் எழுதுவது எப்படியென இப்போது வகுப்பு எடுக்க - 'நான் கடவுளில்' ஜெ.மோ பிஸியாக இருப்பதால்- அவருக்கு நேரம் இருக்காது என நினைக்கின்றேன். (இதே சமயம் ஆரம்பத்தில் பாவனாவை நடிக்க வைக்க இருந்த பாலாவையும், பாவனாவை படத்தின் இடைநடுவில் விலத்தியபோது அதற்கு- பாவனாவின் தீவிர இரசிகர்கள்- மனம் புண்படும் என்று எதிர்ப்புக்குரல் சிறிதும் கொடுக்காத ஜெ.மோவையும் கண்டிக்கின்றேன்).


சுவாரஸியம் என்பது என்ன ? அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்கள்

-ஜெயமோகன்

என் அலுவலகத்தில் அ.முத்துலிங்கத்தின் இந்தக் கட்டுரைத்தொகுதியை மேஜைமேல் வைத்திருந்தேன். ஒரு சக ஊழியர் பார்த்துவிட்டு சும்மா மேஜைமேல் வைத்தே புரட்டிப்பார்த்தார். ஏதோ சினிமாபற்றிய கட்டுரை அவருக்கு ஆர்வமூட்ட அதை படித்துப் பார்த்தவர் அப்படியே படிக்க ஆரம்பித்துவிட்டார்.


''சார் படிச்சுட்டு குடுத்திடறேனே'' என்றார்.

எனக்கு பயம். நான் அதைப்பற்றி படித்துவிட்டு பேசவேண்டியிருக்கிறது. நண்பருக்கு எதையுமே படிக்கும் பழக்கம் கிடையாது.

ஏற்கனவே ஒருமுறை இந்த நண்பர் என் மேஜைமேல் இருந்த ஒரு நூலை எடுத்துப் பார்த்துவிட்டு ''இது எப்டி சார் வாராவாரம் வருமா?'' என்று கேட்டவர்.

''இல்லீங்க, இது ஒண்ணுதான் வரும்'' என்றேன், எப்படி விளக்குவது என்று தெரியாமல்.

''மாசாமாசமா சார்?''.

நான் பொறுமை காத்து ''சார் இது இப்டி ஒண்ணுதான் சார் ...தொடர்ச்சியா வராது''என்றேன்.

''நிறுத்திட்டானா?''என்றபடி அதைப்புரட்டிப்படித்து ''எண்பது ரூபாயா? அச்சடிச்ச தாளுக்கா? என்னசார் அநியாயமா இருக்கு!'' என்றார்.

''ஏன் சார்?'' என்று பரிதாபமாகக் கேட்டேன்

'சார் விகடனேகூட பத்து ரூபாதானே? எம்பது ரூபா போட்டா எவன் வாங்குவான்? அதான் நின்னிருச்சு'' என்றார்.

நண்பர் நன்றாக படித்து நல்ல பதவியில் இருப்பவர். ஆனால் அவர் பாடநூல்கள், இதழ்கள் தவிர நூல்கள் என ஒரு விஷயமும் உண்டு என்பதையே அறிந்திருக்கவில்லை. அப்படிப்பட்ட நண்பர் புத்தகத்தை இரவல் கேட்கிறார். ஆனால் அவர் ஒன்றை நினைத்தால் நடத்தாமல் விடமாட்டார். என்னால் எதையும் எவருக்கும் மறுக்கவும் முடியாது. கொண்டுபோய்விட்டார்.

நான்காம் நாள் திருப்பிக் கொண்டுவந்தார். சரிதான், இரும்புக்கடலை கடித்து பல்வீக்கம் என நான் நினைத்தேன்.''படிச்சீகளா சார்?''என்றேன்.

''படிச்சிட்டேன் சார். சூப்பர். சிரிச்சு சிரிச்சு மண்டைக்குள்ள ஒருமாதிரி டிரா·பிக் ஜாம் ஆயிட்டேன் சார்... ''என்றபடி சிரிக்க ஆரம்பித்தார். ''யார் சார் இவரு?'' என்றார்.

''இலங்கைக்காரர் சார்''

நண்பரால் நம்ப முடியவில்லை''அப்டியா சார்? அவங்களுக்கு அங்க யுத்தம் வெட்டு குத்துன்னு ஆயிரம் பிரச்சினைகள். எப்டி சார் சிரிப்பா எழுதறாங்க?''.

நான் ''கஷ்டம் இருந்தாத்தானே சார் நல்லா சிரிப்பு வருது?'' என்றேன்.

''ஆமா சார். எங்கம்மா சொல்லுவா, எங்கப்பா செத்துப்போய் பிள்ளைகளோட தனியா நின்னப்போ அழுது அழுது தீந்துபோய் ஒருநாள் ராத்திரி சிரிச்சுட்டாளாம். அன்னையோட கஷ்டம் போச்சுடான்னு சொல்வாள்.வாஸ்தவம்''என்றார் ''என்ன சார் வேலபார்த்தார்?''

''இவரு பெரிய அதிகாரியா வேல பார்த்தார் சார்...''

''சும்மாருங்க சார்,வெளையாடாதீங்க...''

''இல்ல சார் நிஜம்மாவே பெரிய அதிகாரிதான்''

''சார் எனக்கு முப்பதுவருச சர்வீஸ். நான் இன்னை தேதிவரை சிரிக்கிற மூஞ்சியோட ஒரு அதிகாரிய பாத்தது இல்ல...நிஜம்மாவே அதிகாரியா, இல்ல அதிகாரி மா....திரியா?''

நான் யோசித்து ''ஐநாவிலே இருந்தார்...'' என்றேன்.

''அது சரி, ஐநாவே நம்ம சுப்பிரமணியம் சாமி மாதிரி ஒரு ஜோக்குதான் சார்''. என்றபின் ''சார் நான் இதைப் படிச்சிட்டு குடுக்கறேன்''என்று நான் அதிர்ச்சியில் வாய் திறக்கும் முன் கோணங்கியின் 'பொம்மைகள் உடைபடும் நகர'த்துடன் நடந்து போனார்

நண்பர் மிக பரபரப்பான ஆள். விவசாயம் உண்டு. ஆகவே இரவு பதினொரு மணிக்குமேல் பன்னிரண்டுமணிவரைத்தான் படிக்க நேரம் கிடைக்கும். அந்நேரத்தில் தூங்காமல் உட்கார்ந்து படித்தேன் என்றார். அதன் பின் என் மனைவியும் அதேபோல நள்ளிரவில் விளக்கைப் போட்டுக்கொண்டு இதைப்படிப்பதைக் கண்டேன். இவ்வளவுக்கும் இது ஒரு கதைத்தொகுப்பு அல்ல. இது கட்டுரைத்தொகுப்பு.

* ஒரு உயர் அதிகாரி. சிறு வயதில் மாணவராக இருந்த போது கைலாசபதியால் தூண்டுதல் அடையப்பெற்று அக்கா என்று ஒரு சிறுகதைத்தொகுதியை வெளியிட்டார். அதன் பெரிய வேலைக்கு போய் விட்டார். ஈழ இனப்பிரச்சினை காரணமாக வெளியேறி சியரா லியோன் சென்றார். அங்கிருந்து ஐநா அதிகாரியாக ஆப்ரிக்கா மேற்காசியா நாடுகளில் வேலைக்குச் சென்றார். அந்நாட்களில் பல வருட உழைப்பின் விளைவாக கணிப்பொறி மென்பொருளை நிர்வாக இயலுக்கு பயன்படுத்துவது பற்றி தடிமனான மூன்று பகுதிகள் கோண்ட ஒரு நூலைஎ ழுதினார். அது புகழ் பெற்ற மேலைநாட்டு பதிப்பகம் ஒன்றால் வெளியிடப்பட்டது. நூல் வெளிவந்த சில மாதங்களில் அந்த மென்பொருளே இல்லாமலாயிற்று

மனம் சோர்ந்திருந்த நாளில் இலங்கை சென்றபோது அங்கெ ஒரு இலக்கியக்கூட்டத்தில் ஒருவர் அக்கா தொகுதியின் ஒரு கதையைக் குறிப்பிடுவதைக் கேட்டார். முப்பது வருடமாகியும் இலக்கியம் காலாவதியாகவில்லை! நான் கூட அக்கா தொகுதி பற்றி அப்போது எழுதியிருக்கிறேன்.

அதன்பின்னர்தான் * இலக்கியத்துக்கு வந்தார். இனி தன் வாழ்நாள் முழுக்க இலக்கியத்துக்கே என எண்ணும் * இலக்கிய சர்ச்சைகளுக்குக் கூட ஒதுக்க நேரம் இல்லை என்று எண்ணுபவர். இன்று தமிழில் மிக விரும்பி படிக்கப்படும் முக்கியமான எழுத்தாளர். இத்தனை நாள் வரலாற்றில் எந்த ஈழ எழுத்தாளரும் தமிழ்நாட்டில் இத்தகைய வரவேற்பையும் அங்கீகாரத்தையும் பெற்றதில்லை

தமிழில் எழுதிய எல்லாவற்றையுமே எவரையும் படிக்கவைக்கும் திறன் கொண்ட மூன்று எழுத்தாளர்கள் மட்டுமே உள்ளனர். கல்கி அவர்களில் காலத்தால் முன்னோடி. சுஜாதா அடுத்தவர். அ.முத்துலிங்கம் தொடர்பவர். ஆனால் அ.முத்துலிங்கம் வணிக எழுத்தாளர் அல்ல. எழுத்தை ஒவ்வொரு கணத்திலும் தீவிரமாகவே அணுகிய இலக்கியவாதி. அவ்வகையில் அவரை நாம் புதுமைப்பித்தனின் மரபுவரிசையைச் சேர்ந்தவர் என்று அடையாளப்படுத்தவேண்டும். கி.ராஜநாராயணன்,நாஞ்சில்நாடன் வகையைச் சேர்ந்தவர் என்று சொல்லவேண்டும்.

ஒட்டுமொத்தமாக இவர்களை சுவாரஸியமான எழுத்தாளர்கள் என்று சொல்கிறோம். நீண்டநாளாக தமிழ்ச் சிற்றிதழ் உலகில் சுவாரஸியம் என்பது இலக்கியத்துக்கு எதிரான ஒன்று என்ற எண்ணம் இருந்தது. இலக்கியம் என்றால் சுவாரஸியமே இல்லாமல் வரண்டுதான் இருக்கும் என்ற மனப்பிம்பம். தமிழ் சிற்றிதழ்களுக்கு அழகியல் ரீதியாக இரண்டு முகங்கள்தான் இருந்தன. ஒன்று இயல்புவாதம்[ நாச்சுரலிசம்] இன்னொன்று அதிலிருந்து சற்றே முன்னகர்ந்த நவீனத்துவம்.

அன்று ஓங்கி நம் பண்பாட்டையே நிறைத்திருந்த வணிக இலக்கியத்துக்கு எதிரான ஒரு பண்பாட்டு சக்தியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டது தமிழ் சிற்றிதழ் உலகம் என்பதைக் காணலாம். ஒருபக்கம் அகிலன்,நா.பார்த்த சாரதி, சாண்டில்யன் என பெரும் பட்டியல். லட்சக்கணக்காக விற்கும் இதழ்கள். லட்சக்கணக்கான வாசகர்வட்டம். பணம் புகழ் . அதற்கு எதிராக இருநூறு பிரதிகள் அச்சிடப்படும் சிற்றிதழ்களில் தமிழ் நவீன இலக்கியம் உருவானது.

அந்த வணிக எழுத்து சுவாரசியத்தையே அடிப்படையாகக் கொண்டது. மிதமிஞ்சிய கற்பனாவாதம் மூலமும் செயற்கையான உத்திகள் மூலமும் சுவாரஸியத்தை உருவாக்கிக் கொண்டிருந்தது அது. ஆகவே நவீன இலக்கியம் சுவாரஸியத்துக்கு எதிராக ஆகியது. வாழ்க்கை அப்படி கனவுக்கொந்தளிப்பாகவும் திடுக்கிடும் திருப்பங்களும் மர்மங்களும் நிறைந்ததாகவும் இல்லை என்ற எண்ணம் இலக்கியச் சூழலில் வலுவாக உருவாயிற்று.

வாழ்க்கை சலிப்பூட்டுவது. சாதாரணமான விஷயங்களால் ஆனது. அதை அப்படியே சொல்ல முயல்வதுதான் இலக்கியம் என்று எண்ணினார்கள். இந்த நோக்கே இயல்புவாதத்தை உருவாக்கியது. நீல பத்மநாபன், ஆ.மாதவன் ஆ.மாதவன் போன்றவர்களை இதற்கு சிறந்த முன்னுதாரணமாகச் சொல்லலாம். இங்கே நவீனத்துவம் உருவானபோது இயல்புவாதத்தின் நீட்சியாக அது இருந்தது. இயல்பான அன்றாடவாழ்க்கையின் தளத்தில் வைத்து வாழ்க்கையின் சாரமின்மையையும் மனிதவாழ்க்கையின் தனிமையையும் அது பேசியது.இப்போக்கின் முன்னுதாரணமான படைப்பாளிகள் நம்மிடையே உண்டு அசோகமித்திரன், சா.கந்தசாமி போன்றவர்கள்.

நவீனத்துவம் பின்னகர்ந்த காலகட்டத்தில் இலக்கியம் தன்னை உருமாற்றிக் கொண்டபோது மீண்டும் கற்பனைவீச்சுக்கும், வாசிப்புச் சுவாரஸியத்துக்கும் முன்னுரிமை அளிக்க ஆரம்பித்தது. இறுக்கமான வடிவமுள்ள படைப்புக்குப் பதிலாக நெகிழ்வான ஆனால் சிக்கலான அமைப்புள்ள படைப்புகள் வெளிவந்தன. அ.முத்துலிங்கம் அந்த மாற்றத்தை முன்னெடுத்த படைப்பாளி.

ஓர் எழுத்தின் ஆழம் என்பது அதன் கதாபாத்திரங்கள், நிகழ்வுகள், கருத்துச் சரடு ஆகியவற்றில் உருவாகும் நுட்பமான மோதலின் விளைவாக உருவாவது. ஆழம் என்பது எப்போதும் ஒரு முரணியக்கமாகவே உள்ளது. ஆழத்தை நிராகரிக்கும் இலக்கியப் படைப்பு இருக்க முடியாது. ஆழம் என்று ஏதுமில்லை, மேல்தளம் மட்டுமே உள்ளது என்று வாதிடும் பின்நவீன இலக்கியப்படைப்புகளுக்கும் இது பொருந்தும். ஒரு எழுத்தை இலக்கியமாக்குவது அதன் ஆழமேயாகும்.

ஆனால் இன்றைய 'நவீனத்துவத்துக்கு பிறகான எழுத்து' என்பது எப்படியோ சுவாரஸியத்தை கட்டாயமாக்குகிறது. பிடிவாதமாக அதற்கு எதிரான நிலை எடுக்கும் சில படைப்புகள் உண்டு. அவை தங்களை காவியமாகவோ ஆய்வாகவோ ஆவணத்தொகையாகவோ உருவகம்செய்துகொள்ளும் படைப்புகள். ஆனால் இன்றைய சூழல் என்பது சுவாரஸியம் தேவை என்று வலியுறுத்துகிறது.

முதல் காரணம் இன்றைய எழுத்துப்பெருக்கம். நவீனத்துவம் ஆண்ட காலத்தில் தமிழில் வருடத்துக்கு நாநூறு நூல்கள் வெளிவந்தன. இப்போது பன்னிரண்டாயிரம் நூல்கள் வெளிவருகின்றன. இதைத்தவிர இணையத்தில் வெளியாகும் ஆயிரக்கணக்கான பக்கங்கள். இந்த பெரும்பரப்பில் வாசகனை தன்னிடம் அழைக்கும் பொறுப்பு எழுத்துக்கு வந்துவிடுகிறது. தன்னை கவனிக்கச் செய்யவும் வாசிக்க வைக்கவும் அது முயல்கிறது. ஆகவே சுவாரஸியமான மேல்தளம் தேவையாகிறது. ஆய்வுக்கட்டுரைகள் செய்திக்கட்டுரைகள் எல்லாமே சுவாரஸியமாக எழுதப்பட்டாக வேண்டுமென்ற நிலை படிப்படியாக உலகமெங்கும் உருவாகி வருகிறது.

இந்த இயல்பை இன்றைய எழுத்துக்களில் நாம் சாதாரணமாகக் காணலாம்.லெஸ்.ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர் போன்றவர்களின் எழுத்து இந்த சுவாரஸிய அம்சத்துக்கு முக்கியத்துவமளிப்பதைக் காணலாம்.


சுவாரஸியம் என்பது என்ன? எப்படி உருவாகிறது அது? எதற்காக நாம் சிரிக்கிறோம்?திரைப்பட நண்பர் ஒருவர் சொன்னார், நமது கதாநாயக நடிகர்களை தெலுங்கிலும் கன்னடத்திலும் கொண்டு செல்ல முடியும். நகைச்சுவை நடிகர்களை தமிழை விட்டு வெளியே எடுக்க முடியாது. காரணம் அவர்கள் மண்ணுடன் கலந்தவர்கள் என.

சுவாரஸியம் என்பது ஒரு பண்பாட்டுடன் இரண்டறக் கலந்துள்ளது. ஒரு பண்பாட்டின் உணர்ச்சிகரமான ஈடுபாடுகள், வெறுப்புகள், இடக்கரடக்கல்கள் ஆகியவற்றை அறிந்த ஒருவரால்தான் அப்பண்பாட்டின் நகைச்சுவையை ரசிக்க முடியும். நகைச்சுவை என்பது இப்படிப்பட்ட 'பண்பாட்டு ஒழுங்குமுறைகள்' மூலம் அன்றாட வாழ்க்கையில் உருவாகும் அபத்தத்தை சுட்டிக்காட்டுவதன் மூலமே நம்மைச் சிரிக்க வைக்கிறது.

இதற்குச் சிறந்த உதாரணமாக இந்நூலில் உள்ள அக்காவின் சங்கீத சி¨க்ஷ என்ற கட்டுரையைச் சுட்டிக்காட்டலாம். கட்டுப்பெட்டியான யாழ்ப்பாணத்து வேளாளச் சூழலை நம் மனத்தில் உருவகித்துக் கொள்ளும்போதே ''தெருவில் வாரானோ என்னை திரும்பிப்பாரானோ'' என்று ஒரு கன்னிப்பெண் பாடி இசைபயிலும்போது ஏற்படும் அபத்தம் உறைக்கிறது.

கல்கி ஒரு குட்டிக்கதையை ஒரு இடத்தில் சொல்கிறார். நான்குநேரி ஜீயருக்கு திருநெல்வேலியில் ஒரு கிளைமடம். அங்கே இருந்த தாத்தாச்சாரிய சாமிகள் குளத்தில் விழுந்து கால் ஒடிந்துவிட்டது. குப்பனை அழைக்கிறார்கள். ''டேய், நீ என்ன பண்றே , ஓடி நான்குநேரிக்குப் போய் ஜீயர் சன்னிதானத்தைப் பார்த்து இப்டிச் சொல்றே. எப்டிச் சொல்லுவே? ''ஸ்ரீஸ்ரீஸ்ரீ உபய வேதாந்த மகா கனம் ராமானுஜதாச அண்ணா தாத்தாச்சாரியார் ஸ்வாமிகள் ஸ்ரீ புஷ்கரணியிலே திருப்பாதம் வழுக்கி விழுந்து திருக்கால் ஒடிந்து ஸ்ரீமடத்திலே திருப்பள்ளிக் கொண்டிருக்கிறார்' அப்டீன்னு சொல்லணம் புரியறதோ?''

சரி என்று குப்பன் ஓடிப்போய் நான்குநேரி மடத்தில் ஜீயரைக் கண்டு சுருக்கமாகச் சொன்னான் ''மொட்டைத்தாதன் குட்டையிலே விழுந்தான்''

இந்த நகைச்சுவையில் நாம் சிரிப்பது அந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீயில் உள்ள நீண்டகால பண்பாடு ஒன்றின் உள்ளீடற்ற படோடோபத்தைப் பார்த்துதான். நகைச்சுவை என்பது எப்போதும் நுண்ணிய பண்பாட்டு விமரிசனமாகவே அமைகிறது. தன் எழுத்தின் முதல்தளத்தில் மென்மையாக இந்த விமரிசனத்தைப் படரவிட்டிருப்பதனாலேயே அ.முத்துலிங்கத்தின் எல்லா எழுத்தும் நம்மால் சிறு புன்முறுவலுடன் படிக்கப்படுகிறது. அக்காவும் அவரும் சேர்ந்தே படிக்க ஆரம்பித்தவர்கள். 'அக்கா மு.வரதராசனார், நா.பார்த்த சாரதி என்று படிப்படியாக முன்னேறி இப்போது ரமணி சந்திரனை எட்டியிருக்கிறாள்' என்ற வரி மூலம் அ.முத்துலிங்கம் முன்வைப்பது மிக ஆழமான ஒரு பண்பாட்டு விமரிசனத்தை.

ஆனால் அ.முத்துலிங்கம் ஒருபோதும் நக்கல் செய்வதோ மட்டம் தட்டுவதோ இல்லை. பண்பாட்டின் பலதளங்கள் பல முகங்களைப்பற்றிய புரிதல் கொண்ட ஒருவரின் சமநிலை எப்போதும் அவரிடம் உள்ளது. ஒவ்வாத விஷயங்களை நோக்கி ஒரு சிறு புன்னகையே அவரது எதிர்வினையாக இருக்கிறது.

சுவாரஸியத்தை உருவாக்கும் இரண்டாவது அம்சம் நடையழகு. நடை என்று நாம் சொல்லும்போது எப்போதும் மொழியையே உத்தேசிக்கிறோம். ஆனால் மொழித்தேர்ச்சிக்கும் நடைக்கும் தொடர்பே இல்லை. நல்லநடை என்பது முழுக்க முழுக்க கவனிப்புத்திறன் சார்ந்தது. வெளியுலகையும் அக உலகையும் கூர்ந்து பார்ப்பதும் அவற்றை துல்லியமாகச் சொல்லி விட முயல்வதுமே நல்ல நடையாக ஆகிறது. நல்ல நடை என்று சொல்லப்படும் படைப்புகளை கூர்ந்து ஆராயுங்கள் அவற்றில் மொழியாலான சித்திரங்கள் நிறைந்திருக்கும்.

அ.முத்துலிங்கம் ஒரு கதையில் கனகி என்ற பெண்ணைப்பற்றிச் சொல்கிறார். அவள் வாய் மூடியிருக்கும்போதும் வட்டமாக இருக்கும். அத்துடன் ஓர் உவமை. மீனின் திறந்த வாய் போல.

இத்தகைய வர்ணனை என்பது குழந்தைத்தனம் மிக்க ஒரு கவனிப்பினூடாக உருவாகக் கூடியது என்பதை கவனிக்கலாம். உலகத்தின் சிறந்த இலக்கிய நடை எல்லாமே உள்ளே ஒரு குழந்தைப்பார்வையை கொண்டிருக்கிறது. உலகம் நமக்குப் பழகிவிட்டிருக்கிறது. தொடர்ந்து பழகி வருகிறது. அதன் புதுமையால் நாம் உலகை அடையாளப்படுத்துவதில்லை அதன் பழகிய தன்மையால் அடையாளப்படுத்துகிறோம். குழந்தைகள் உலகை எப்போதும் புதிதாகப் பார்க்கின்றன. வேறுபாடுகளால் அடையாளப்படுத்துகின்றன. இலக்கியமும் அதையே செய்கிறது.

அப்படி அவதானிப்பைச் சொல்லும் போது எழுத்தாளனின் மன இயல்பும் வந்து கலந்துகொள்கையிலேயே நடை முழுமைபெறுகிறது. ஆப்கானிஸ்தானில் கல்விமான்களும் சாதாரணர்களும் ஒன்றாக ஒரே ரொட்டியை பிய்த்து தின்பார்கள். கல்விமான்கள் ஏழாம் வாய்ப்பாடு தெரிந்தவர்கள். மற்றவர்கள் தெரியாதவர்கள் என்று ஒரு வரி வருகிறது. நட்பார்த்த ஒரு கிண்டல். ஒரு புன்முறுவல். இவை இரண்டும் கலந்ததே அ.முத்துலிங்கத்தின் நடை.

இந்த நூலின் முக்கியமான சிறப்பம்சம் ஒன்று உண்டு, இதுவரை சொன்னவற்றின் நீட்சியாகவே அதைக் கொள்ளவேண்டும். இந்த நூல் அ.முத்துலிங்கத்தின் பிரமிக்கத்தக்க பலதுறை அலைதலுக்கான சான்று. இதில் திரைப்பட விமரிசனங்கள்,உலக நவீன இலக்கிய நிகழ்வுகள், நூல் விமரிசனங்கள், மனிதர்களைப்பற்றிய குணச்சித்திரங்கள், நினைவோட்டங்கள், பல்வேறு அன்றாடவாழ்க்கைக் குறிப்புகள் என பல விஷயங்கள் உள்ளன. ஒரு சமகால எழுத்தாளனின் அக்கறைகள் எந்த அளவுக்கு விரிய வேண்டுமென்பதற்கான சான்றுகளாக உள்ளன இக்கட்டுரைகள். கணிப்பொறி முதல் சமையல் வரை இவற்றின் கைகள் நீண்டு தொடுகின்றன.

இந்நூலுடன் ஒப்பிடத்தக்க இன்னொரு நூல் சுஜாதா எழுதி கணையாழியின் கடைசிப்பக்கமாக வெளிவந்துள்ள 'கணையாழியின் கடைசிப்பக்கங்கள்'. சுஜாதாவின் அக்கறைகளும் ஆண்டாள் முதல் அணுகுண்டு வரை நீள்கின்றன. ஓயாது தன் சமகாலத்தை எதிர்கொண்டபடியே இருப்பதன் பதிவுகள் இவை. அந்த கனத்த நூலையும் நாம் மிகச் சுவாரஸியமாக புன்னகையுடன் வாசித்துச் செல்ல முடியும்.

ஆனால் ஏற்கனவே சொன்னதுபோல அ.முத்துலிங்கத்தின் ரசனையும் தெரிவும் ஆழமானவையும் கறாரானவையும் ஆகும். தீபா மேத்தாவின் வாட்டர் படத்தையோ அல்லது கிரண் தேசாயின் நாவலையோ அவர் மதிப்பிடும்போது வெளிப்படும் கறார்தன்மை தமிழின் மிக ஆக்ரோஷமான விமரிசகர்களுக்கு நிகரானது, ஆனால் மென்மையான நகைச்சுவையுடன் சொல்லப்படுகிறது, தீபா மேத்தாவின் காலைத்தொட்டு சீமா பிஸ்வாஸ் கும்பிடும்போது ''என்ன தொலைத்தார்கள்?''என்று கேட்கும் கனடாக்கிழவியின் சித்திரம் 'தண்ணீரின் ஓட்டம் பலவந்தமாக திசைதிருப்பப்பட்டிருக்கிறது, தண்ணீரை தண்ணீராகவே ஓடவிட்டிருக்கவேண்டும்' என்ற கடும் விமரிசனத்துடன் கலக்கப்பட்டிருக்கிறது.

இந்த நூல் ஒரு சமகால கலை இலக்கியப் பயணத்துக்கு நம்மை இட்டுச்செல்கிறது. வெளிநாடுகளில் மிகுந்த பயிற்சியுடன் நகைச்சுவையும் தகவல் திறனும் கலந்து பேசி கொண்டுசெல்லும் வழிகாட்டிகளைக் கண்டிருக்கிறோம். அத்தகைய ஒரு தேர்ச்சிமிக்க வழிகாட்டியாக அ.முத்துலிங்கத்தின் குரல் நம்முடன் வருகிறது.

[11-08-07 அன்று மதுரை புத்தகக் கண்காட்சியில் உயிர்மை வெளியீடான அ.முத்துலிங்கத்தின் 'பூமியின் பாதி வயது' என்ற நூலை வெளியிட்டு ஆற்றிய உரை]

நன்றி: திண்ணை

Wednesday, August 15, 2007

மாயா அருள்பிரகாசம் (M.I.A)

எம்.ஐ.ஏ யின் (M.I.A), இரண்டாவது இறுவட்டான 'கலா' வருகின்ற வாரம் ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் வெளியாகின்றது (ஜப்பானில் ஏற்கனவே வெளிவந்துவிட்டது). தனது தந்தையின் இயக்கப்பெயரை முதல் இறுவட்டுக்கு வைத்ததுபோன்று (அருளர்), இப்போது தனது தாயாரின் பெயரை (கலா) இரண்டாவது இறுவட்டிற்கு வைத்துள்ளார்.

ஏற்கனவே முதல் இறுவட்டு வந்தபோது -வெளியிடப்பட்ட நாளன்றே- கடை திறந்த காலையிலேயே வாங்கியது மாதிரி (இவ்விறுவட்டில் வரும் அநேக பாடல்களை ஏற்கனவே கேட்டுவிட்டேன் என்றாலும்) இதையும் வாங்காமல் விடுவேனா என்ன?

Jimmy


Boys: இந்தப்பாடல் ஏற்கனவே வந்த Bird-flu beatஐ நினைவுபடுத்துகின்றது.


'கலா'வில் வரும் மேலேயுள்ள இந்த இரண்டு வீடியோ அல்பங்களோடு 'அருளரில்' வந்த இந்தப்பாடலை ஒப்பிட்டுப் பார்க்கும்போது மாயாவின் Innocent face போய்விட்டதுபோலத்தோன்றியது. ஒரு கலகக்காரிக்கு அதுவும் நல்லதுதான்.

SunShowers


அரசியல் பாடலென மிகவும் விவாதிக்கப்பட்ட இப்பாடலில், செக் ஷேர்ட்டுக்களோடு, ரிபன்களால் இழுத்துக்கட்டப்பட்ட பின்னல்களுள்ள பெண்கள் எவரைக் குறிப்பிடுகின்றதெனச் சொல்லத்தேவையில்லை. மாயா அமெரிக்கா வருவதற்கான் விஸா பத்து மாதங்களாய்த் தடுக்கப்பட்டதற்கும், இன்னும் அவரது பெயர் சிவப்பு நாடாவில் இருப்பதற்கும் இந்தப்பாடலே முக்கியகாரணம் எனச்சொல்லப்படுகின்றது.

Thursday, August 09, 2007

நேர்காணல்: அழகிய பெரியவன்

இங்கு நல்ல விமர்சகர்களே இல்லை: அழகிய பெரியவன்
நேர்காணல் கண்டவர்கள்:: மினர்வா & நந்தன்
...........................
............................
வெகுஜன பத்திரிகைகளிலும் சரி, பொது இடங்களிலும் சரி தலித் எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் தரப்படுவது போன்ற தோன்றம் அண்மைக்காலமாகத் தென்படுகிறது. தலித் எழுத்துக்கு தரப்படும் இந்த முக்கியத்துவம் தலித் பிரச்சனைகளுக்கு தரப்படுவதில்லை. இதை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?

வெகுஜனப் பத்திரிகைகள் தமிழில் அதிகரித்து விட்டன. பத்திரிகைகள் அதிகரித்த அளவுக்கு தலித் எழுத்தாளர்களின் கவிதைகள், அனுபவம் சார்ந்த படைப்புகள் இடம்பெறவில்லை என்பதுதான் உண்மை. தலித் எழுத்தாளர்களின் அதிகம் அறியப்பட்ட, மிகவும் பிரபலமான படைப்பாளிக்குத் தான் அந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. படைப்புகளுக்கு இருக்கும் இந்த குறைந்த முக்கியத்துவம் கூட தலித் பிரச்சனைகளுக்கு இல்லை என்பதும் உண்மைதான்.

வெகுஜன பத்திரிகைகள் சினிமா, பரபரப்பு போன்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் தருவதால் சமூக மாற்றம் தொடர்பான விஷயங்களுக்கு அதிக கவனம் தருவதில்லை. ஒரு சில நேரங்களில் தலித் பிரச்சனைகளுக்கு எதிராகவே வெகுஜனப் பத்திரிகைகள் செயல்படுகின்றன. உதாரணமாக மதுரை நல்லக்காமன் பிரச்சனையை எடுத்துக் கொள்ளலாம். மதுரையைச் சேர்ந்த நல்லக்காமன் என்பவர் மீது காவல்துறை ஆய்வாளர் ஒருவர் மனித உரிமை மீறல் செய்ததாக சில ஆண்டுகளுக்கு முன் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சட்டம் ஒழுங்கின் பெயரால் மனித உரிமைகளை மீறுவதைத் தான் அவர் தொடர்ந்து செய்து வந்தார். பல பதவி உயர்வுகள் பெற்று பல முக்கியமான வழக்குகளையும் விசாரித்து வந்தார்.

இந்நிலையில் தொடர் புகார்களுக்குப் பிறகு சில மாதங்களுக்கு முன் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். அடுத்த வாரமே ஆனந்த விகடனில் அவரைக் கதாநாயகன் போல் சித்தரித்து கட்டுரை வெளியானது. அவரது சொந்த ஊருக்கே போய் புகைப்படம் எடுத்து அதை வெளியிட்டிருந்தார்கள். இது எவ்வளவு அநியாயமான ஒரு விஷயம். அடிவாங்கியவனை கண்டுகொள்ளாமல் விடுவதும், அடித்தவனை தூக்கிப் பிடிப்பதும் போன்ற இயல்பு வெகுஜனப் பத்திரிகைகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பத்துக் கொலை செய்தவனின் வாழ்க்கையை தொடராக வெளியிடுவதில் தான் பத்திரிகைகள் ஆர்வம் காட்டுகின்றன. வெட்டுப்பட்டவனின் வாழ்க்கை, அவனது குடும்பம் பற்றி யோசிக்க இங்கு யாரும் தயாராக இல்லை. வெகுஜனப் பத்திரிகைகள் தலித் பிரச்சனைக்கு தரும் முக்கியத்துவம் இவ்வளவு தான்.

தீவிர இலக்கியப் பத்திரிகைகளில் தலித் பிரச்சனைகளை சொல்வதற்கு இடம் இருக்கிறது. அதிலும் சில பத்திரிகைகள் தலித் பிரச்சனைகளை பிரச்சாரம் சார்ந்த இலக்கியம் என்று சொல்லி நிராகரித்து விடுகின்றன. இடம் தரும் பத்திரிகைகளும் சில படைப்பாளிகளுக்கே இடம் தருகின்றன. அதனால் புதிய சிந்தனைகள், புது எழுத்துக்கள், புது படைப்பாளிகளுக்கு இங்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.
...........................
...............................
..................................
தலித் சிந்தனையாளர்கள் சிலர் பெரியாரைப் புறக்கணித்து விட்டு சாதியை ஒழித்து விடலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பெரியாரைப் புறக்கணித்து விட்டு சாதி ஒழிப்பு என்பது சாத்தியமா?

நான் திராவிடக் குடும்பத்தில் இருந்து வந்தவன். திராவிடச் சிந்தனைகள் எனக்குள் ஊறிப்போன விஷயம். பெரியாரின் பங்களிப்பை நாம் சரியாக மதிப்பிடவும் புரிந்து கொள்ளவும் இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. தற்போது ஏற்பட்டுள்ள இந்த சமூக மாற்றத்திற்கு பெரியாரின் தீண்டாமை ஒழிப்பு, சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு போன்றவை தான் காரணம். பெரியாரை முன்னிறுத்துவதால் தனக்கான இடம் இல்லாமல் போய்விடுமோ என்று இவர்கள் நினைக்கிறார்கள். தலித் தலைவர்களைத் தான் அந்த இடத்தில் வைக்க வேண்டும் என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.

பெரியாரின் பங்களிப்பை மறுத்து விட்டு சாதி ஒழிப்பு பேசுவது என்பது ஒருவகையான துரோகம் தான். பெரியாரின் பங்களிப்பு தான் நம் சமூகத்தில் பரவலான, வலுவான அடித்தளத்தை உருவாக்கித் தந்திருக்கிறது. சாதிய ஒழிப்பை நீங்கள் கடுமையாக இன்று பேச முடியும் என்றால் அதற்கு பெரியார் ஏற்படுத்திக் கொடுத்த அடித்தளம் தான் காரணம். தலித் அறிவுஜீவிகளைத் தான் பெரியார் இடத்தில் நிறுவ வேண்டும், பெரியாருக்கு பிறகு பிற்படுத்தப்பட்ட சமூகம் ஒன்று திரண்டிருக்கிறது அதனால் தலித்களுக்கான இடம் பறிபோய்விட்டது போன்ற விமர்சனங்களை, தவறான அனுமானங்களால் எழக்கூடிய விமர்சனங்களாகத் தான் நான் பார்க்கிறேன்.

இந்திய அளவிலேயே தலித்துகளுக்கான போராட்டத்தில் தலித்கள் அல்லாத இடைச்சாதியினரும் தீவிரமான பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில் தான் பகுஜன் போன்ற கருத்தோட்டங்கள் வடமாநிலங்களில் உருவானது. அந்தச் சிந்தனை ஏன் தமிழ்நாட்டில் வரவில்லை என்று எனக்குத் தெரியவில்லை. பெரியாரை நிராகரித்து விட்டு தலித்துகளின் முன்னேற்றம் சாத்தியமே இல்லை. அவரை வைத்துக்கொண்டே நாம் அந்தப் பாதையில் பயணிப்பதுதான் நம்முடைய பலம்.
..........................
...........................
.............................
பெண் எழுத்தாளர்கள் உடல் எழுத்துக்கு அதிக முக்கியத்துவம் தருவதாக, ஆசிரியர் குழுவில் ஒருவராக இருக்கும் தலித் முரசுவில் ஒரு விமர்சனம் வெளிவந்தது. கவிஞராக, சக படைப்பாளியாக நீங்கள் இதை எப்படி பார்க்கிறீர்கள்?

இந்தப் பிரச்சனையில் பெண் எழுத்தாளர்களுக்கு ஆதரவானது தான் என்னுடைய குரல். பெண் எழுத்தாளர்கள் வெளிப்படையாக எழுதுவதாக ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. வெளிப்படையாக எழுதுவது அவ்வளவு தவறா, ஆண் எழுத்தாளர்கள் வெளிப்படையாக பேசுவதில்லையா? போன்ற கேள்விகள் இந்த இடத்தில் எனக்குத் தோன்றுகிறது.

காலங்காலமாக ஊறிக்கிடக்கும் ஆணாதிக்கச் சிந்தனையின் வெளிப்பாடாகத் தான் நான் இதை பார்க்கிறேன். பெண்கள் உரத்துப் பேசக்கூடாது, வீட்டை விட்டு வெளியே வந்து பேசக்கூடாது, பஞ்சாயத்திலோ, பொதுவிடங்களிலோ பேசக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள் இருந்த சமுதாயம் தானே இது. அதன் எச்சங்கள் இன்னமும் இருந்து கொண்டிருக்கிறது என்பதற்கான அடையாளம் தான் பெண்கவிஞர்கள் மீது வைக்கப்படுகிற குற்றச்சாட்டு.

இந்த ஆணாதிக்க மனநிலை தான் பெண் கவிஞர்களின் வெளிப்படையான எழுத்தை கொச்சையானதாக, அருவருப்பாக பார்க்கிறது. பெண் எழுத்தாளர்கள் எந்த மாதிரியான விஷயங்களை பார்க்கிறார்கள், எதன் அடிப்படையில் எழுதுகிறார்கள் என்றுதான் பார்க்க வேண்டும். ஆரம்பத்தில் தலித் எழுத்துக்கு இருந்த எதிர்ப்பை இந்த இடத்தில் பொருத்திப் பார்த்துக் கொள்வது சரியாக இருக்கும் என்றே தோன்றுகிறது.

தலித் எழுத்துக்கள் வெளிப்படையாக இருக்கிறது, அதிகம் வசவுச்சொற்களை பயன்படுத்துகிறார்கள் போன்று மிகக்கடுமையாக விமர்சித்தார்கள். தலித்களின் மொழியை அப்படியே பயன்படுத்திய காரணத்திற்காக என்னுடைய சில கதைகள் கூட தொகுப்புகளில் இடம்பெறாமல் போயிருக்கிறது. இந்த வார்த்தைகளை வேண்டுமென்றோ, சுவாரஸ்யத்திற்காகவோ பயன்படுத்துவதில்லை. கதையில் வரும் தலித் கதாபாத்திரங்களின் கோபம், ஆத்திரம் வெளிப்பட வேண்டுமானால் உக்கிரமான வார்த்தைகளைத் தான் பயன்படுத்தியாக வேண்டும். இதேபோன்று தான் பெண் படைப்பாளிகளும் உடல்சார்ந்த மொழியை பயன்படுத்துகிறார்கள்.

அந்த வார்த்தைகள் வைத்திருக்கக் கூடிய அரசியல் என்ன, அந்தக் கவிதை என்ன மாதிரியான அரசியலில் இயங்குகிறது என்பதைப் புரிந்து கொண்டால் இப்படியான கேள்விகள் எழாது என்று நினைக்கிறேன்.

விரிவான வாசிப்புக்கு....


நன்றி: கீற்று

Tuesday, July 17, 2007

கிழக்கு பதிப்பகம் - தொடரும் திருட்டுக்கள்?

இப்போது இதைப் பதிவதற்கு எதுவும் பெரிய காரணங்களில்லை. கிழக்குப்பதிப்பகத்தின் அறிவுத்திருடல்கள் வலைப்பதிவுலகத்தோடு பரீட்சயமானவர்களுக்கு புதிய விடயமுமல்ல. ஆனால் எனக்கு வரும் ஆச்சரியம் என்னவென்றால், தொடர்ந்து திருடல்களும் பிறகு அம்பலப்படுத்தல்களும் நடந்துகொண்டிருந்தும் இப்படியே திருட்டுக்கள் செய்ய என்னவொரு நெஞ்சுரம் வேண்டும் என்பதுதான். அண்மையில் சிங்கப்பூரில் வசிக்கும் எம்.கே.குமாரின் சிங்கப்பூர் பற்றிய தொடர் அபபடியே வேறொருவரின் பெயரில் புத்தகமாய் வந்து விவாதிக்கப்பட்டதை வலைப்பதிவில் அறிந்திருப்பீர்கள். அதேபோன்று திருட்டுக்களைச் செய்துவிட்டு அத்னோடு சம்பந்தப்பட்டவர்களின் குரல்களை சமரசத்தின் மூலம் அமுக்குவதிலும் கிழக்குப்பதிப்பகத்தார் கெட்டிக்காரர்கள். இவர்களிடம் இருக்கும் இந்த வகையான ethicsஜ மேற்குலத்தவர்களும் கற்றுக்கொள்ளவேண்டும். இல்லையெனில் காவ்யா விஸ்வநாதன் போன்றவர்களின் பிரதிகள் எல்லாம் இங்கே முடக்கப்படவேண்டிய தேவையிருந்திருக்காது. இவ்வாறான விவாதங்கள் வரும்போது அய்யோ பதிப்பகத்தில் இருக்கும் அவர் நல்லவர் இவர்தான் அப்படிப்பட்டவர் என்று வரும் குரல்கள் இன்னமும் விசனமளிப்பவை.
திருந்தவே மாட்டீங்களா சாமிகளா?
(~டிசே)

கிழக்கு பதிப்பகம் - பதிப்பகத் துறையில் ஒரு குளோனிங்
-திலீபன்


நாட்டில் உள்ள அனைத்து துறைகளிலும் பணம் சம்பாதிப்பது என்பதுவே பிரதானமாகவும், சேவை என்பது பெயரளவுக்குக் கூட இல்லாமல் எவ்வித உத்திகளையும் பணத்திற்காக தத்தமது துறைகளில் ஈடுபடுத்துவது சகஜமாகி விட்டது.

தமிழகத்தில் தற்பொழுது அந்த நிலைக்கு பதிப்புத் துறையும் வந்துவிட்டது. ஒருசில தமிழ் பதிப்பக நிறுவனங்களைத் தவிர பதிப்புத் துறையில் இருப்பவர்கள் அனைவரும் வணிக நோக்கில் செயல்படுபவர்கள்தான். எந்த ஒரு வெளியீடானாலும் தங்களுக்கென்று குறைந்தபட்ச லாபம் வைத்து தொழில் நடத்துபவர்கள்தான். அதில் ஒன்றும் தவறில்லை.

(ஆனால் இப்பொழுது முடி வெட்டும் கடை, மளிகைக்கடை, காய்கறிக் கடையில் இருந்து தொழில் நுட்ப நிறுவனங்கள் வரை நுழைந்துள்ள தாராளமயம் பிரமாண்டம் போன்றவை பதிப்புத் துறையிலும் நுழைந்துள்ளது. தாராளமயம் பணத்திற்ககாக எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கும்.

பதிப்புத் துறையில் அது கிழக்குப் பதிப்பகமாக உருவெடுத்துள்ளது.

கிழக்குப் பதிப்பகம், சதாம் உசேன், ஹிட்லர், பின்லேடன், எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா, அம்பானி, அசிம் பிரேம்ஜி போன்றவர்களின் வாழ்க்கை வரலாறு அவர்கள் வாழ்வில் ‘முன்னேறிய' கதை, தன்னம்பிக்கை, வரலாறு போன்றவைகளை வெளியிடுகின்றன. அல்லது மிகத் தீவிரமான மக்கள் பிரச்சனைகளை அப்போதைக்கப்போது உடனடியாக வெளியிட்டு காசு பார்க்கின்றன.

இவ்வாறு பணம் சம்பாதிப்பதே தொழில் என்றாகி விட்ட பிறகு, அங்கு நேர்மை என்பது எங்கு வரும்? தினசரி ஒரு வெளியீடு என்று திட்டம் வைத்து வியாபாரம் நடத்தி வரும் கிழக்கு பதிப்பகம் அதற்காக எந்த வழிமுறையையும் கையாளத் தயாராய் இருக்கிறது.

கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடுகள் பெரும்பாலும் இணையத்தில் இருந்து சுடப்படுபவைதான். இணையத்தில் இருந்து பிறரது எழுத்துக்களை டவுன்லோடு செய்து, அதனை மொழிபெயர்த்து அப்படியே வெளியிடுவதுதான். இதன் மொழிபெயர்ப்பைச் செய்பவர் பெயர், மற்றும் ஒட்டு வேலைகள் பார்ப்பவர் பெயர், ஆசிரியராக உருமாற்றம் பெற்றிருக்கும். பலர் இது பற்றி அதிக அளவில் குற்றம் சுமத்திய பின்பும் கிழக்கு திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. ஏனென்றால் திரும்பிப் பார்க்கும் நேரத்தில் இன்னொரு நூல் வெளியிட்டு காசு பார்க்க முடியும் என்பதனால்தான். ஆதாரத்திற்கு ஒரு சமீபத்திய திருட்டைப் பார்ப்போம்;

மதுரையைச் சேர்ந்த கருத்துப் பட்டறை அமைப்பைச் சேர்ந்தவர்கள் தங்களது பகுதி முல்லை பெரியாறு பிரச்சனை முடிவில்லாமல் நீண்டு கொண்டிருக்கிறதே. விவசாயிகளின் அவலம் தீர வழியில்லையே? என்ற உண்மையான சமுதாய அக்கறையுடன் முல்லை பெரியாறு அணை குறித்த சிறு வெளியீடாக, "முல்லைப் பெரியாறு நதிநீர்ப் பிரச்சினைகள். ஒப்பந்தமும் தீர்ப்பும்'' என்ற சிறு நூலை பிப்ரவரி 2007 இல் கொண்டு வந்தார்கள். அந்த நூலில் சென்னை மாகாணம் அப்போதைய திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு இடையே ஏற்பட்ட 999 ஆண்டு கால ஒப்பந்தம், முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு போன்றவற்றை மொழிபெயர்த்து வெளியிட்டிருந்தனர்.

999 ஆண்டு கால ஒப்பந்தத்தை மதுரை நீதிமன்ற வழக்கறிஞர் எஸ். நாகராசன் மொழிபெயர்த்திருந்தார். மதுரை கருத்துப்பட்டறை நண்பர்களின் முயற்சி, உண்மையான சமுதாய அக்கறையின் வெளிப்பாடு. அப்பொழுது முல்லை பெரியாறு பிரச்சனை தமிழகத்தில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த நேரம்.

எந்தப் பிரச்சினையையும் காசு சம்பாதிக்கும் நோக்கில் பார்க்கும் கிழக்கு இதிலும் காசு சம்பாதிக்கும் நோக்கில் "முல்லைப் பெரியாறு அணையா? நெருப்பா?'' என்ற நூலை ஏப்ரல் 2007 இல் வெளியிட்டது. நல்ல விற்பனையும் அடைந்தது. முல்லை பெரியாறு பிரச்சனை தீர்ந்ததோ இல்லையோ? கிழக்குப் பதிப்பகத்துக்கு நல்ல வருமானம் கிடைத்தது.

ஆனால், அவ்வாறு வெளியிட்ட நூலிலும் நிறைய திருட்டுத்தனம் இருக்கிறது. கிழக்குப் பதிப்பகம் வெளியிட்ட நூலிலும் 999 ஆண்டு கால ஒப்பந்தத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு இருக்கிறது. அவ்வாறு வெளியிட்ட மொழிபெயர்ப்பு முழுவதும் பிப்ரவரி 2007 இல் மதுரை கருத்துப் பட்டறை வெளியிட்ட மொழிபெயர்ப்பின் நகலாக இருக்கிறது. வரிக்கு வரி, முற்றுப்புள்ளி உட்பட அனைத்தும் மதுரை கருத்துப் பட்டறை அமைப்பினரின் வெளியிட்ட நகல்தான்.

இருவரும் ஒப்பந்தத்தை ஒரேபோல மொழிபெயர்ப்பு செய்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் மொழிபெயர்ப்பு என்பது நபருக்கு நபர் மாறுபடும். இந்த திருட்டைக் கண்டு அதிர்ச்சியுற்ற கருத்துப் பட்டறை வெளியீட்டாளர்கள் கிழக்கு பதிப்பகத்திற்கு கடிதம் எழுதினர். கிழக்கு பதிப்பகத்திற்கு பதில் கூறவோ, வருத்தம் தெரிவிக்கவோ ஏது நேரம்? ஏனென்றால் தவறு, காப்பி அடித்ததற்கு வருத்தம் என்று கூற ஆரம்பித்தால் பிறகு தினம் தினம் வருத்தம் மட்டுமே அல்லவா தெரிவித்துக் கொண்டு இருக்க வேண்டும். ஏனென்றால் பெரும்பாலும் ‘டவுன்லோடு' தானே?

சரி, மொழிபெயர்ப்பு ஒன்றுபோல இருக்க வாய்ப்பே இல்லையா? என்று ஏங்கும் நண்பர்களுக்காக மட்டும் சிறு எடுத்துக்காட்டு மதுரை கருத்துப் பட்டறை வெளியிட்ட நூலின் மொழிபெயர்ப்பில் சிறு பிழை ஏற்பட்டு இருந்தது (பக்கம் 3ல் 1886 ஆம் ஆண்டு என்று கூறுவதற்குப் பதிலாக ஆயிரத்து எண்ணூற்று அறுபத்தாறாம் ஆண்டு) என்று பிழையாக கூறப்பட்டிருந்தது.

ஆனால், இதே பிழை கிழக்கு பதிப்பக வெளியீட்டிலும் ஏற்பட்டிருக்கிறது. பக்கம் 153 இல் உள்ள மொழிபெயர்ப்பிலும் 1886 ஆம் ஆண்டு என்று கூறுவதற்குப் பதிலாக ஆயிரத்து எண்ணூற்று அறுபத்தாறாம் ஆண்டு என்று அதே பிழை ஏற்பட்டுள்ளது. உண்மையான மொழிபெயர்ப்பு என்றால் இது நேர வாய்ப்பில்லை.

ஈயடிச்சான் காப்பியில் மட்டுமே இது நேரும்.

இனிமேலாவது ‘கிழக்குப் பதிப்பகம்' தனது திருட்டை நிறுத்துமா?

நன்றி: விழிப்புணர்வு

Saturday, July 14, 2007

பரீட்சைக்குப் படிப்பவளுக்கு...

-பிரியங்களுடன் -
A.R.Rahman & Vairamuthu Special



மெட்டுப்போடு மெட்டுப்போடு
என் தாய் கொடுத்த தமிழுக்கில்லைத் தட்டுப்பாடு


சொல்; எதுவென்றாலும் சொல்
ஆனால் விழிகளைத் திறந்து வைத்திரு சகோதரா..!


பேரன்பே உந்தன் நினைவு
என் கண்ணைச் சுற்றும் கனவு
இது உயிரைத் திருடும் உறவு
உன் துன்பம் என்பது வரவு


வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் வசப்படவில்லையடி!

Monday, July 02, 2007

வானமற்ற வெளி (அறிவிப்பு)

‘காலம்’ சஞ்சிகையின் இலக்கிய நிகழ்வு

யூலை 14, 2007 சனி மாலை 5.30
YORKWOOD LIBRARY THEATRE
1785 FINCH AVE. WEST, NORTH YORK

மூன்று புத்தகங்களின் வெளியீடு

‘கடலை விட்டுப்போன மீன்குஞ்சுகள்’
செழியன் கவிதைகள்

‘வாத்து’
சோலைக்கிளி கவிதைகள்

‘வீழ்ச்சி’
சீனுவா ஆச்சுவியின் நாவல்
தமிழில்: N.K.மகாலிங்கம்

நெஞ்சினில் ஊறும் நினைவுகள்
(இசை நிகழ்வு)

ஜெயராணி சிவபாலனின் மாணவி: ஆரணியா பாபு
வயலின்: ஆதிரை சிவபாலன், கீபோட்: முகுந்தன் சிவபாலன்,
தபேலா: ஜோன்சன்

தென்மோடி நாட்டுக்கூத்து
வீரர்கள் துயிலும் நிலம்
(வீரபாண்டிய கட்டபொம்மன் கூத்தின் சுருக்கம்)

மூலப் பிரதி பாசையயூர் புலவர் நீ.மிக்கோர்சிங்கம்
அண்ணாவி வயித்தியாம்பிள்ளை யேசுதாஸ்
பிரதி ஆக்கம், தயாரிப்பு: செல்வம் அருளானந்தம்
நெறியாள்கை:சவரிமுத்து
ரெஜிமனுவேற்பிள்ளை,சவரிமுத்து, மரியதாஸ் அன்ரனி
அருள்தாஸ் மரியதாஸ், மெலிஞ்சிமுத்தன்,அல்பிரட், கலைமாமணிமாலினிபரராஜசிங்கம்
ஆர்மோனியம்:டானியல், மிருதங்கம்:வயித்தியாம்பிள்ளை யேசுதாஸ்
பிற்பாட்டு:அருளப்புயோஜ் ஞானம்பிரகாசம்;

('காலம்' செல்வம் அனுப்பியது)

Wednesday, June 20, 2007

நான் நீ அவர்கள். ((Me You Them - Eu Tu Eles)

- ரதன்

ரதன்: ரொரண்டோவில் வசிக்கின்றவர். உலகத்திரைப்படங்களில் ஆழமான பார்வையும் தேடலும் உடையவர். கனடாவில் வருடந்தோறும் நடக்கும் குறும்பட விழாவை ஒருங்கிணைப்பவர்களில் முக்கியமான ஒருவர். ரதனின் திரைப்படப் பார்வைகள் கனடாவில் வரும் 'வைகறை', 'விளம்பரம்' போன்ற சஞ்சிகைகளிலும், கன்டாவிற்கு அப்பால் 'உயிர்நிழல்', 'நிழல்' போன்ற சஞ்சிகைகளிலும் வந்திருப்பதை வாசித்திருக்கின்றேன். மூன்று கவிஞர்கள் வெளியிட்ட தொகுப்பு ஒன்றில் இரதனும் ஒரு கவிஞர் (தொகுப்பின் பெயர் மறந்துவிட்டேன்). விரிவான தளஙகளில் திரைப்படங்களை அறிமுகப்படுத்தும் இரதனின் விமர்சனங்கள் எனக்குப் பிடித்தமானவை.
(~டிசே)


நான் நீ அவர்கள். ((Me You Them - Eu Tu Eles) போர்த்துக்கீஸ் பிரேசில்!
- ரதன் (கனடா) -


சில மாதங்களின் முன் உங்களில் பலர் காதலர் தினத்தை கொண்டாடியிருப்பீர்கள். இது ஓர் காதலர் தின படமல்ல. பெண்ணியப்படமுமல்ல. இது ஓர் வாழ்க்கை. பிரேசிலின் வட மேற்குப்பிரதேசத்தில் ஓர் குக் கிராமம். Darlene தாயின் செத்த வீட்டிற்கு கிராமத்திற்கு வருகின்றாள். வயிற்றில் கருவுடன் கிராமத்தை விட்டுச் சென்ற Darlene மீண்டும் வயிற்றில் கருவுடன், கையில் சிறுவனுடன் தாயின் முகத்தை இறுதியாக சந்திக்க வருகின்றாள். அவளது வறுமை, அவளுக்கு ஒசியஸ் சுடன் திருமணம் செய்ய நிர்ப்பந்திக்கின்றது. திருமணம் ஓர் ஒப்பந்தம். வெகு இலகுவானது. ஒசியஸ் தங்குவதற்கு வீடு தருகின்றான். டார்லின், ஓசியஸ்ற்கு சமைத்து போடவேண்டும்.. ஓசியஸ் வயது முதிர்ந்தவன். ஆடு மேய்ப்பவன். பிள்ளை பிறக்கின்றது. பிள்ளை கருப்பு நிறம். ஊட்டச் சத்து குறைவு என கருத்துக் கூறுகின்றாள். ஆனாலும் கருப்பு நிறம் நிரந்தரமாகிவிடுகின்றது. இவர்களது வீட்டில் தங்க, தனது வீட்டால் கலைக்கப்பட்ட, ஓசியஸின் ஒன்று விட்ட உறவினன் சிசின்கோ (Zezinho) வருகின்றான். இவனும் ஓசியஸின் வயதை ஒத்தவன். இவனுக்கும் டாhலினுக்கும் உறவு ஏற்படுகின்றது. டார்லின் மீண்டும் கர்ப்பமாகின்றாள். டார்லின் கரும்புத் தோட்டத்திற்கு வேலைக்கு செல்கின்றாள். மூன்றாவது பிள்ளை பிறக்கின்றது. சிசின்கோ நன்றாக சமைப்பான். இதனால் ஒசியஸ் எதுவும் கூறவில்லை. மீண்டும் கரும்புத் தோட்டத்திற்கு வேலைக்குச் செல்லும் டார்லின், இளைஞனான சைரோ வைச் சந்திக்கின்றாள். அவளது வீட்டில் தங்க வைக்கின்றாள். இவர்களுக்கு உறவு ஏற்பட்டு, மற்றொரு பிளளை பிறக்கின்றது. இப்பொழுது மூன்று கணவன்கள். நான்கு பிள்ளைகள் ஒரே வீட்மல். ஒரு நாள் காலை, புதிதாக பிறந்த பிள்ளையும், ஏனைய பிள்ளைகளையும் காணவில்லை. தேடிக்கொணடிருந்த பொழுது ஓசியஸ் இந்தப் பிள்ளைகளுடன் வந்து கொண்டிருக்கின்றான். ஓசியஸ் ஒரு பத்திரத்தை டார்லினிடம் நீட்டுகின்றான். அது பிள்ளைகளின் பிறப்பு அத்தாட்சி பத்திரம். அந்த பிள்ளைகள் அனைத்தும் தனது பிள்ளைகள் என ஓசியஸ் அதில் பதிந்துள்ளான்.

இது உண்மைக்கதையை மையமாகக் கொண்டது. இந்த லத்தீன் அமெரிக்கப் படத்துக்கான திரைக்கதையை Elena Soarez என்ற பெண் எழுதியிருந்தார். சில வருடங்களுக்கு முன்னர் ரொரண்ரோ சர்வதேச திரைப்படவிழாவில் இப்படம் திரையிட்ட போது பல மேற்கத்திய விமர்சகர்கள், இப்படம் படமாக்கப்பட்ட முறைக்காக பாராட்டினார்கள். திரைக் கதையை பெரிதாக வரவேற்கவிலலை. காரணம் மூன்று கணவன்மார். மேற்கத்திய முற்போக்கு கலாச்சாரம் என்று கூறிய போதும் இவர்கள் பெண்கள் விடயத்தில் பிற்போக்கானவர்களே.

இபபடத்திலும்; ஆணாதிக்க வெளிப்பாடுகள் சிறப்பாக வெளிப்படுகின்றன. ஆணாதிக்க சமுதாயத்தில் வளர்ந்த ஓசியஸ், தனது மனைவயின் உறவுகளை அங்கீகரிப்பதன் காரணம் என்ன? முதலில் டார்லினை வயிற்றில் கருவுடனும், கையில் குழந்தையுடனும் ஏற்றுக் கொள்கின்றான். தனது வீடு அவளது வீடு எனக் கூறுகின்றான். பின்னர் அதன் விளக்கத்தை கூறுகின்றான் “நீ எனக்கு சொந்தமானவள், எனவே உனது வீடும் என்னுடையதே”. சைரோ வீட்டினுள் வரும் பொழுது, ஓசியஸ் அழுத்தமாக கூறுகின்றான் “இது எனது வீடு, இவள் எனது மனைவி”. இவ்வளவு அழுத்தமுள்ள பாத்திரம், இறுதியாக தனது ஆணாதிக்க வெளிப்பாட்டை வெளிப்படுத்துகின்றது. சகல பிள்ளைகளையும் தனது பிள்ளைகளாக பதிவு செய்வதன் மூலம். இது தியாகமாக வெளிப்படலாம், ஆனால் உண்மையில் இதுவும் ஓர் ஆணாதிக்க வெளிப்பாடே. அனைத்தும் எனக்கே சொந்தம். கதாசிரியர், இவற்றையெல்லாம் மீறி டார்லினை தனது மூன்று கணவன்மாருடனும் தொடர்ந்து சேர்ந்து வாழவைக்கின்றார்.

பாலச்சந்தர் தனது படங்களில் மரபை மீறிய உறவுகளை காட்டிவிட்டு, மரபு கலாச்சாரம் மிக முக்கியமானது எனக் கூறி, இந்த உறவுகளை உடைத்துவிடுவார். மிக அண்மையில் வெளி வந்த “ பச்சைக்கிளி முத்துச்சரம்” என்ற படத்தில் வேறு பெண்ணுடன், கணவனுக்கு ஏற்படும் நட்புக்கு, சுகயீனமுற்ற பிள்ளைக்காக உடலுறவை மறுத்த மனைவி காரணம் எனக் காரணம் காட்டப்படுகின்றது. இவ்வாறு பெண்கள் மீது மரபையும் கலாச்சாரத்தையும் திணிக்கின்றார்கள் படைப்பாளிகள். ஜெயகாந்தன் “சினிமாக்குப் போன சித்தாளு” வில் பிரபல நடிகனை நினைத்து உறவுகொள்ளும் மனைவியைப்பற்றி கூறுகின்றார். எத்தனை கணவன்மார் நடிகைகளை நினைத்து மனைவிகளுடன் உறவு கொள்கின்றனர் அதனைப்பற்றிய பதிவு எதுவும் இல்லை

தர்மசிறி பண்டாரநாயக்கவின் “சுத்திலாகே கத்தாவ” (சுத்தியின் கதை) என்ற படத்தில் கணவன் சிறைக்குச் சென்ற பின்னர் தனது வயிற்றை நிரப்ப வேறு ஆண்களுடன் உறவு கொள்கினறாள் சுத்தி, பின்னால் தனது கணவனாலேயே கொலை செய்யப்படுகின்றாள். பிரசன்ன விதானகேயின் பௌரு வலலு படத்தில் வயலிட்டின் முதல் மகள் திருமணமாகி விடுகின்றாள், மற்றவளுக்கு திருமண வயது. இந்நிலையில் தனது முன்னால் காதலனுடன் உறவு ஏற்பட்டு வயிற்றில் கருவைச் சுமக்கும் வயலட், தனது கரு பாவத்தின் சுமை என நினைக்கும் அளவிற்கு, சமுதாயம் அவளை விமர்சிக்கின்றது. பிரசன்னா சமூகத்தை எள்ளி நகையாடுகின்றார். அபர்ணா சென் தனது பரோமா படத்தில் தனது காதலுனுக்காக காத்திருக்கும் மனைவியைக் காட்டுகின்றார். அபர்ணா பெண் படைப்பாளி. அதனால் பெண் மீதான அக்கறையுடனும் துணிச்சலுடனும் பரோமாவை படைத்துள்ளார். பிரசன்னா மிக வித்தியாசமான படைப்பாளி, துணிச்சலுடன் சமூகத்தை விமர்சித்துள்ளார்.

இங்கும் டார்லினின் வாழ்க்கை நேரடியாக காட்டப்படுகின்றது. எதுவும் ஒளித்து வைக்கப்படவில்லை. டார்லினுக்கு எந்த குற்ற உணர்வும் இல்லை. இயல்பாகவே உள்ளாள். சிசின்கோ விடம் (இரண்டாவது கணவன்) சென்று சைரோ தங்குவதற்கு அறை கட்டி தருமாறு கேட்கின்றாள். அத்துடன் தனக்கும் சைரோவுக்கும் உள்ள உறவைப்பற்றியும் கூறுகின்றாள். பார்வையாளரிடம் இந்த தன்மை உணர்வு வெகு யதார்த்தமாக கொண்டு செல்லப்படுகின்றது. இது ஓர் பெண் கதாசிரியரால் தான் முடியும். அவளது பாத்திரக் கூறுகள் முக்கியமானவை. திருமணம் தனது வறுமைக்கே. குறிப்பாக தனது இரு கருக்களுக்காக. பின்னால் குடும்பத்துக்காக உழைக்கின்றாள். பின்னர், தனது புதிய கணவனுக்காக தங்குவதற்கு இடமும் குடும்பமும் ஏற்படுத்துகின்றாள். இவள் ஓர் சுமை தாங்கியாக செயற்படுகின்றாள். ஒவ்வொரு கணவனிடமும் ஒவ்வொன்று உண்டு ஒருவனிடம் காசு, மற்றவனிடம் பாசம், உழைப்பு, மற்றவனிடம் நவீனத்துவம். டார்லின் ஓசியஸ் எனது கணவன் என அழுத்திக் கூறுகின்றாள். ஓசியஸ் அவளுக்கு சொந்தமானவன். அதே போல் தனது மற்றைய இரு கணவன்மாருக்கும் “குஞ்சை அடை காப்பது போல்” தனது மற்றைய இரு கணவன்மாரையும் காக்கின்றாள். மீண்டும் தாய்வழி சமுதாய முறைக்கு சென்று விட்டோம் என நினைக்கத் தோன்றுகிறது. வெகு தூரத்தில் இல்லை தாய்வழி சமுதாய முறை.

டார்லினாக நடித்த சுநபiயெ ஊயளé பிரேசிலின் பிரபல அழகி. படத்தில் அவரது அழகை பார்க்க முடியாது. அவரது சுமையைத்தான் பார்க்க முடியும். அவளது மன அழுத்தங்களின் வித்தியாசமான பரிமாணங்களைத்தான் காணலாம். படத்தின் மையமாக இவர் இருந்த பொழுதிலும், இவர் படைப்பு எந்த வணிக தன்மைகளையும் கொண்டிருக்கவில்லை.

லத்தீன் அமெரிக்க படங்கள் இன்று உலகின் சிறந்த படங்களுக்கு வழிகாட்டி. தனி நபர், சமூக மரபுகள், ஒழுக்கங்கள் மீதான விமர்சனங்களை விமர்சிக்கின்றன. கேள்வி கேட்கின்றன. ஆண்களின் உடல் உறவுக்கும், அதிகாரத்துக்குமான தொடர்புகள், அரசியல் சக்திகளுக்கு சமூகத்தின் மீதான அக்கறை போன்றவற்றின் மீதான தொடர்ச்சியான விமர்சனங்கள், எதிர்-முரண் நிலை மீதான கருத்தியல்கள் .குற்ற உணர்வுகள் மீதான பார்வைகள் இவற்றையெல்லாம் தாங்கி படைப்புக்கள் வெளிவருகின்றன. இந்த விமர்சனவியலே இன்றைய சினிமாவின் தேவை.

இறுதியாக இப்படத்தின் இயக்குனர் Andrucha Waddington டம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அவர் அளித்த பதில் இது.

'If you were given $10 million to be used for moviemaking, how would you spend it?'
First I would need a great script and then the money.

இதுவே இப்படத்தின் சிறப்புக்கு காரணம்.

நன்றி: பதிவுகள் (pathivukal.com)

Thursday, June 14, 2007

2007 புக்கர் பரிசு - சினுவா ஆச்(சு)பே

achebenew

இவ்வருட புக்கர் பரிசு சினுவா ஆச்(சு)பேயிற்கு கிடைத்திருக்கின்றது. விருது அவரது நாவல்கள் அனைத்துக்கும் பொதுவாய் வழஙக்ப்பட்டிருக்கின்றது. இருவருடங்களுக்கு ஒருமுறை -2005 லிருந்து? - எழுதப்பட்ட அனைத்து நாவல்களையும் கவனத்தில் கொண்டு உயிர்வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு நாவலாசிரியருக்கு இப்புதிய விருது வழங்கப்படுகின்றது.

சினுவா ஆச்(சு)பேயின் நாவலான Things Fall Apart தமிழில் 'சிதைவுகள்' என்ற பெயரில் கே.மகாலிங்கம் மொழிபெயர்த்திருக்கின்றார்; தலைப்பின் மொழிபெயர்ப்பு சரியா? என்று சிவசேகரம் கொஞ்சம் கொழுவியதை 'சிவசேகரத்தின் விமர்சனங்கள் - 2' நூலில் பார்க்கலாம்.

இவ்வருட புக்கர் விருதிற்கான இறுதிப்பட்டியலில் கனடாவின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களான மார்க்கரட் அட்வூட்டும் (Margaret Atwood) , மைக்கல் ஒண்டாச்சியும் (Michael Ondaatje) இருந்திருக்கின்றார்கள்.

Friday, June 08, 2007

உடல் அரசியல்

-ரமேஷ்-பிரேம்

மனித உடம்பு பற்றிய மனிதரின் அச்சம் மனித உடம்பின் மீதான மேலதிகப் பற்றினால் விளைந்த ஒன்று. தன் உடல், பிற உடல் என்ற இருமை நிலையை இனம் என்ற கருத்தாக்கம் ஏதோ ஒரு வகையில் பிணைத்த போதும் சரி, தன் இன உடல், பிற இன உடல் என்று எதிர் எதிர் நிலையில் இடப்படுத்தியபோதும் சரி, உடல் என்ற ஒன்று மையப்பட்டு, அது பற்றி கருத்தாக்கங்களும் புனைவுகளும் அதைச் சுற்றிலும் விரிந்தும் விலகியும், முரண்பட்டும் பெருகத் தொடங்கிவிட்டன.

மனிதர் என்ற நிலை மட்டுமல்ல ‘மனித உடம்பு' என்ற நிலை கூட ஒரு இன உற்பத்திதான்; அது சமூகத்தால் கட்டமைக்கப்பட்டது; சமூக விதிகளால் விளக்கப்பட்டு வரையறுக்கப்பட்டு, மற்றொரு வகையில் விரிவுபடுத்தப்பட்டு ஒவ்வொருவருக்கும் வழங்கப்படுவது. தனி மனித மனம் என்பது எப்படி இயலாத, சாத்தியமற்ற ஒன்றாக உள்ளதோ, அதேபோல் தனி மனித உடல் என்பதும் சாத்தியமற்றதே. இந்த சாத்தியமற்ற ‘தனித்த’ தனிமனித உடலைச் சுற்றி இயங்கும் எல்லாப் புனைவுகளும் கருத்தாக்கங்களும் உடலை அரசியல்படுத்துகின்றன; அரசியலை உடலுடன் பிணைக்கின்றன. எல்லா அரசியலும் உடலையும், உடல் பற்றிய கருத்தாக்கங்கள் மற்றும் புனைவுகளையும் மையமாகக் கொண்டு இயங்கிக் கொண்டுள்ளன.

ஒவ்வொரு உடலும் ஒரு அரசியல் இயந்திரமாக இயங்குவதும், மற்றொரு உடலுடன் அது அரசியல் எந்திரவியலின் அடிப்படையிலேயே ஊடாட்டம் கொள்வதும் பேரளவிலான ஒருமையற்ற அரசியல் இயந்திரத் தொகுதியின் ஒரு உப இயந்திரமாக இருந்து கொண்டிருப்பதும் உடல் தேர்வுக்கு உட்படாத மாபெரும் அரசியல் விளையாட்டு. அரசியலை செயல்படுத்தாத, அரசியலால் செயல்படுத்தப்படாத உடல் என்பது எந்த நிலையிலும், எந்த தருணத்திலும் சாத்தியமில்லை என்பதை நாம் ஒரு வலியாகவோ, தண்டனையாகவோ விளங்கிக் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் ‘மனித உடம்பு' என்பதையும் ‘மனித உடல்தன்மை' என்பதையும் உருவாக்கித் தந்ததே அரசியல்தான் என்னும்போது அரசியலின் பகுதியாக உடம்பு இருப்பதும், உடம்பின் ஒவ்வொரு அசைவிலும், இயக்கத்திலும் அரசியல் இருப்பதும் அடிப்படையான ஒரு ‘மெய்நிலை’. சமூகம், பண்பாடு, வரலாறு, மொழியமைப்புகள் என்ற அனைத்தையும் உருவாக்கி விரிவுபடுத்திய உடல்தான் இந்த அரசியலையும் உருவாக்கிக் கொண்டது, மற்றொரு வகையில் கூறுவதென்றால் உடல் எப்பொழுது தனக்கான செயலை, இயக்கத்தை உறவமைப்பை நிகழ்த்தத் தொடங்கியதோ, அப்போதே அது தன்னை அரசியல் உறுப்பாக, அரசியல் இயந்திரமாக மாற்றிக் கொண்டதெனலாம். விலங்கு நிலையிலிருந்து ‘மனிதநிலைக்கு’ மாறிய அக்கட்டமே மனிதர்கள் உடல் அரசியலைத் தொடங்கிய கட்டமாகும். இறப்பு முதல் பிறப்பு வரை உள்ள எல்லா உடல் சார் நிகழ்வுகளும் ஏதோ ஒரு அரசியல் பின்னல் அமைவால் வடிவமைக்கப்படுவதுடன் இதற்கு முன் இருந்த உடல்கள் பற்றியும் இனி வரப்போகும் உடல்கள் பற்றியும் கூட அரசியலே விதிமுறை செய்கிறது. உடல்களின் தற்கால நிலை மட்டுமின்றி, இனி வரும் காலத்திற்கான நிலைகளையும்கூட அரசியல் திட்டமிட்டு அமைக்கிறது. இத்திட்டமிடுதல் தனிஒரு நிறுவனத்தாலோ, அமைப்பாலோ, தனி ஒரு மனிதராலோ செய்யப்படுவதில்லை; ஒவ்வொரு ‘உடல் நிலையாலும்’ ‘கூட்டு உடல்களாலும்’ இணைந்து உருவாக்கப்படும் செயல்திட்டம், ஏற்கப்படும் செயல்வடிவம் இதற்குள் இருக்கிறது. ‘நான்’ என்ற உடல்தன்மையும் ‘நான்’ என்ற மனத்தன்மையும் இணையும் இடம் இந்த உடல் அரசியலை உருவாக்கி வளர்த்து, விரிவுபடுத்தி என்றும் தொடரும் களமாக இருந்து கொண்டிருக்கிறது. இந்தக் களத்தை மதங்களும் கருத்தாக்க நிறுவனங்களும், சமூக விதிகளும், நம்பிக்கைகள் மற்றும் தொன்மங்களும், சமூக நிறுவனங்களும் தொடர்ந்து தமக்குத் தேவையான வகையில் கலைத்தும் கலந்தும், மாற்றியும் வடிவமைத்தபடியே உள்ளன. இந்த வடிவமைப்பும் வடிவ மாற்றமும் சில உடல்களை மையத்திலும் பல உடல்களை விளிம்பிலும் வைப்பதற்கான காரணமும், தேவையும் என்ன என்பது பற்றிய கேள்வியும் கூட அரசியல் கேள்வியே. பல சமயங்களில் இந்தக் கேள்வி மட்டுமே அரசியல் தன்மை உடையதாக மீந்து நிற்பதும் உண்டு.

***************

உடலைக் கொண்டாடுதல், உடலை அருவருப்பாக உணர்தல், உடல் பற்றிய அச்சம், உடலைப் பகைப்படுத்தல், உடலைக் கடந்து செல்லுதல், உடலை உயர்நிலைக்குக் கொண்டு செல்லுதல், உடலைக் கட்டுப்படுத்தல், உடலை அடிமைப்படுத்துதல், உடலை விடுவித்தல், உடலை உடலாக நடத்துதல், உடலைப் பழக்குதல், உடலை வரையறை செய்தல், உடலுக்கான வரையறைகளைக் கடந்து செல்லுதல், உடல் மீதான புனைவுகளை உருவாக்குதல், உடல்களைத் தேர்ந்தெடுத்தல், உடல்களை பதிலீடு செய்தல் என்பவை அனைத்தும் ஒவ்வொரு கலாச்சாரத்திலும் ஏஅ தா ஒரு வடிவில் எல்லா காலத்திலும் நிகழ்ந்தபடியே உள்ளன. ஆனால் இதற்கு உட்படும் உடல்கள் மட்டும் மாறுபட்ட விதிகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. ஒரே சமூக அமைப்பில் சில வகை உடல்கள் பெருமதி மிக்கவையாகவும் சில வகை உடல்கள் பெருமதியற்றவைகளாகவும் இருத்தி வைக்கப்படுவதன் அடிப்படை மிகவும் சிக்கலானது.

சமயங்கள், மதங்கள் என்பவை ஒரே நிலையில் சில உடல்களை உயர்வானவைகளாகவும் சில உடல்களை பொருளற்றவைகளாகவும் வரையறுக்க ‘இறைமை’ என்ற புனைவைப் பயன்படுத்துகின்றன. இறைமைக்கு நெருக்கமானவைகள், இறைமையால் வகுக்கப்பட்ட விதிகளுக்குப் பொருந்தக் கூடியவைகள் அல்லது அவற்றிற்கு பொருந்தாத விலகிய நிலையில் உள்ளவைகள் என்ற வகையில் ‘உடம்புகள்’ வகை பிரிக்கப்படுகின்றன. மனித வாழ்வின் மொத்த முயற்சியும் இந்த இறைமை விதிக்குள் பொருந்தும் செயலாக விளக்கப்பட்டு விட்ட பின் உடல்களை விலக்குதலும், தேர்ந்தெடுத்தலும் இலகுவாகிவிடுகிறது.

உடலை விட்டொழித்தல், உடல் வாழ்வை விட்டு விடுதலையடைதல், உடல் என்ற சிறையிலிருந்து வெளியேறுதல், உடல் என்ற ஊன்பிண்டத்தைவிட்டு வெளியேறுதல் என்ற உடல் மறுப்பு, உடல் அருவருப்புக் கருத்தாக்கங்கள் இந்திய சமய மரபுகளில் மிகவும் பலம் கொண்டவையாக இருந்து வந்திருக்கின்றன. வாழ்வு என்பது நோயாக, தண்டனையாக, பிறவி என்பது பிணியாக சித்திரிக்கப்பட்ட பின் இறப்பு என்பது இறைமையுடன் கலத்தலாக பொருள்படுத்தப்படுகிறது. பிறவாமை என்பது விடுதலையாக மாறும் நிலை உடல் பற்றிய அச்சத்தில் மட்டுமின்றி உடல் பற்றிய மர்ம உணர்வாலும் ஏற்படக்கூடியது.

உடலைத் துறக்க, உயிரைத் தர எந்த நொடியிலும் ஆயத்தமாக இருக்கும் நிலை பக்தியிலும், வீரத்திலும் ஒன்றிணைந்து காணப்படுவது, ‘தெய்வீகம்’ என்பதன் உருவக நிலையாக மறைவு பொருள்படும் இடம் உடல் மற்றும் உடலின்மை என்பதை மேலும் சிக்கலாக்குகிறது.

சில உடல்களுக்காக பல உடல்கள் அடக்கப்படுவது, பல உடல்கள் அழிக்கப்படுவது என்னும் இடத்தில் மதங்களும் ஆதிக்கங்களும் ஒன்றிணைகின்றன. பல உடல்களின் ஆற்றல், உழைப்பு பிழிந்தெடுக்கப்பட்டு சில உடல்களுக்கான இன்பமும் பெருமதியும் கூட்டப்படும் இடத்தில் மதங்களும் மூலதனமும் ஒன்றிணைகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட, இறைநிலை பெற்ற உடல்களுக்காக மற்ற உடல்கள் பிழிந்தெடுக்கப்படுவதற்கு சமயக்கோட்பாடுகளின் வரையறுப்புகள் அடிப்படைகளாகின்றன.

மனித உடல் என்பது வீழ்ந்த, மதிப்பிழந்த ஒன்றாகவும் தெய்வீக உடல், இறைநிலை உடல் மேம்பட்ட ஒன்றாகவும் வைக்கப்பட்டுவிட்டபின், எல்லா உடல்களும் ‘தெய்வீக உடல்’ என்பதற்கு பலியாவதன் மூலம் தெய்வீக நிலையை அடையலாம்; அல்லது தெய்வீக உடலுக்குத் தம் ஆற்றலைப் படைப்பதன் மூலம் தெய்வீகத்துடன் நெருங்கலாம். எப்படி என்றாலும் ‘உடலாக’ இருப்பது கீழ்மையானதாகவே வைக்கப்பட்டுவிடுகிறது. மனம், உடல் என்ற இருமைகளில் இந்த மேல்கீழ் வெளிப்படையாகப் படுகிறது. இந்திய சனாதன மரபில் வர்ண, சாதி அமைப்புகளில் இந்த உடல் வகைப்பாடு மிகவும் தீவிரமாகச் செயல்படும் ஒன்று. மொத்த சமூகத்தையும் இறைமைத் தன்மையுடைய உடல்கள், இறைமை தன்மையற்ற உடல்கள் என்று படிநிலைப் படுத்துவதன் மூலம் உடல் என்பது முழுமையான கருத்தாக்க, புனைவு வடிவமாக மாற்றப்பட்டுள்ள நிலை உருவாகி விடுகிறது. பிறகு உடல்களை அழித்தலும், ஒடுக்குதலும், பிழிதலும் இயல்பான சமூகச் செயல்பாடுகளாகி விடுகின்றன. ‘பெண்’ உடல் ஆணுக்கானதாகவும் ‘ஆண்’ உடல் என்பது வேறு பால சமூக நிறுவனங்களுக்கானதாகவும் விதிநிலைப்படுத்தப்பட்டபின் ‘தனித்த உடலின்’ நிலை என்பது முற்றிலும் அழிந்து போகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட உடல்களை உருவாக்கும் உத்தியில் வரலாறு, சமூக மதிப்பீடுகள், சமயவிதிகள் அனைத்தும் ஒன்றிணைந்து கொள்கின்றன. தமக்கெதிரான ‘உடல்விதிகளை’த் தாமே ஏற்கவும், பணியவும், பெருக்கவும் உடல்கள் தயார்படுத்தப்படுகின்றன. இன்றைய உயர் தொழில் நுட்ப உலகில் உடல்கள் என்பவை தேவையற்றதாக மாறிவிட்டன.

******************

அடிமைச் சமூகத்தில் அடிமை உடல்கள் ஆதிக்கப் பகுதிக்குத் தேவைப்பட்டன. அனைத்தையும் ஆக்கித்தர நிலவுடைமைச் சமூகத்திலும், காலனியாதிக்கச் சமூகத்திலும் அடிமைப்பட்ட உடல்கள் தேவைப்பட்டன. உடல்கள் உழைப்பு எந்திரங்கள், தொழில்நுட்ப சமூகத்தில் உடல்கள் உழைப்புக்கான கருவிகளாகின. உழைப்பு, உற்பத்தி என்பது உடல்களின் அடையாளமானது. ஆனால், உயர் தொழில் நுட்ப சமூகத்தில் இனி உடல்கள் தேவையில்லை. உடல்கள் அற்ற, உடல்கள் இல்லாத, உடல்களுக்கான இடங்கள் தேவைப்படுகின்றன.

இன்றைய உலகமயமான, உயர் தொழில்நுட்ப அமைப்பில் உடல் அரசியல் மிகவும் சிக்கலாகி உள்ளது. இயற்கை வளங்கள், நிலப்பரப்புகள் தேவைப்படும் அளவுக்கு உடல்கள் தேவைப்படுவதில்லை. அதனால் முன்பு காலனியாதிக்கத்தின் மூலம் மனித உடலின் ஆற்றலைச் சுரண்டிய நாடுகள் இன்று உள்நாட்டுப் போர்களை உருவாக்குவதன் மூலம் ஆப்பிரிக்க, ஆசிய, தென் அமெரிக்க நிலப்பகுதிகளில் உடல்களைக் குறைக்கின்றன.

வளர்ச்சி, முன்னேற்றம், அறிவியல் பெருக்கம், மேம்பட்ட வாழ்வு, எல்லையற்ற இன்பவெளி என்ற கருத்தாக்கங்களைப் புனைவுகளைப் பெருக்குவதன் மூலம் இன்றைய பன்னாட்டு, நுகர்பொருள் பொருளாதார, ஆதிக்கக் கருத்தியல்காரர்களும் புராதன சமயவாதிகளும் ஒரு கட்டத்தில் ஒன்றிணைகிறார்கள். தெய்வீக உடல்கள், தெய்வீக நிலை, சொர்க்கபூமி என்ற புனைவுகளுக்கு இணையான இன்றைய உயர்தொழில் நுட்பப் புனைவுகள், இரண்டிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட, தெய்வீக நிலை பெற்ற இறைமைக்கு நெருக்கமான உடல்கள் மையப்படுகின்றன.

தேவதையாக்கம், தெய்வநிலையாக்கம் என்பதே இன்றைய நுகர்பொருள், உயர்தொழில்நுட்ப ஊடக வெளிகளின் தொடர் மாந்திரீகச் செயல்களாகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட இனங்கள், தேசங்கள், உடல்களுக்கானதாக இந்த உலகம் மாற்றப்படுவதற்கான நியாயங்கள் பலப்பட்டுவிட்டன.

மனித உடல்கள் மாசுகளாகப் பார்க்கப்படுகின்றன. உழைப்பு இனி தேவையில்லை என்னும் போது உழைக்கும் உடல்கள் எதற்கு? உடல்கள் அற்ற உற்பத்திப் பெருக்கம். உழைப்பும் உற்பத்தியும் விடுதலையை நோக்கியவை என்ற கனவுகள் தகர்ந்துவிட்டன. உடல்களுக்கு எதிரான உற்பத்திப் பெருக்கம், உழைப்பும் இனி அழிவின் தந்திரம்தான்; ஏனெனில், இனி வரப்போகும் காலத்தில் உருவாகப் போகும் உடல்களுக்கான வளத்தையும் நாசமாக்கும் உத்திதான். உழைப்பும், உற்பத்திப் பெருக்கமும். உலகம் என்பது நுகர்வோருக்கான சந்தை, உடல்கள் இனி தேவையற்ற கழிவுகள்.

இதைத்தான் இன்றைய உலகளாவிய உயர்தொழில் நுட்ப சந்தைப் பொருளாதார அரசியல் கோட்பாடுகள் தொடர்ந்து கூறிக்கொண்டிருக்கின்றன; வெறும் சொற்களால் அல்ல இயந்திரங்களினாலும், ஆயுதங்களிலும் இரண்டு உடல்களுக்கு இடையே உள்ள இடைவெளிகளில் இந்த அரசியல் தனது போர்ச் செயலைத் தொடங்கிவிடுகிறது. உடல்களை அறிதலில் உடல்களை வகைப்படுத்தலில், உடல்களை மேலானது கீழானது என ஒதுக்குதலில், உடல்களில் தெய்வீக, தேவதைத் தன்மைகளைப் படிய வைப்பதில், உடல்களில் பயனற்றவை, பயனற்றவை எனப் பாகுபடுத்துவதில் ‘உடல் அரசியல்’ அழிவரசியலாக மாற்றமடைகிறது.

இன்று ‘உலகநிலம்’ என்பது அனைத்து உடல்களுக்குமானது இல்லை என்பதைக் கூறவும், வலியுறுத்தவும் யாரும் தயங்குவது இல்லை, எந்த நிலத்து மக்களும் எப்போது வேண்டுமானாலும் இடம் பெயர்த்தப்படலாம், எந்த நாட்டு வளமும் எவராலும் விலைக்கு வாங்கப்படலாம். எதிர்க்கும் ‘மக்கள் கூட்டம்’ அழித்தொழிக்கப்படலாம். இவையெல்லாம் நேரடியான தாக்குதல்.

இவையின்றி உடல்களின் மீதான கருத்துருவ, புனைவுருவத் தாக்குதல்கள் தொடர்ந்து நிகழ்ந்தபடியே உள்ளன. ஊடகங்கள், தகவல் தொழில் நுட்பங்கள், கலை வடிவங்கள், காட்சி மற்றும் குறியீட்டு சாதனங்கள், அரசியல், பண்பாட்டு, மதவாதச் சொல்லாடல்கள் என ஏதேதோ வடிவங்களில் ‘உடல் அரசியல்’ குழப்பியடிக்கப்படுகிறது.

உடல்கள் விளம்பர, தகவல் ஊடகங்களில் கொண்டாடப்படுகின்றன; ஆனால் அவை தேர்ந்தெடுக்கப்பட்ட தேவதையாக்கம் பெற்ற உடல்கள். உடல் அசைவுகள், உடல் விளையாட்டுகள் வண்ணமயமாக பிம்பமாக்கப்படுகின்றன. ஆனால், அவை நசுக்கப்படும் உடல்களை மறைக்கும் திரைகளாகின்றன. நகரங்கள் என்பவை தெய்வீகத் தோட்டமாகவும் பிற இடங்கள் நரகத்தின் பள்ளத்தாக்குகளாகவும் வடிவம் பெருகின்றன. உடல்கள் அற்ற ‘மனிதவெளிகளை’ உருவாக்கும் ‘உயர்தொழில் நுட்பம் உடல்களைப் பற்றிய பயத்தை உருவாக்கிக் கொண்டே ‘உடல் மீதான மோகத்தைப் பெருக்கிக் கொண்டிருக்கிறது. இந்த முரண்நிலை மதங்களின் புராதன முரண்நிலையுடன் உறவுடையது; இறைமை உயர்வானது இறைமையால் உருவாக்கப்பட்ட இறைமையின் வடிவான ‘மனித உடல்’ கீழானது என்னும் முரண்நிலை.

இன்றைய ‘உடல்அரசியல்’ உலக அரசியலின் ஒரு பகுதியாக இயங்கும் சூழலில் உடல் பற்றி எந்த ஒரு புனைவையும், கருத்தாக்கத்தையும் நான் வெறும் உடல் சார்ந்ததாக புரிந்து கொள்ள முடியாது. அது நிலம், இனம், மொழி தேசம், தேசியம், வர்க்கம், மேலாதிக்கம் என்பவற்றின் பூடகமான வலைப்பின்னல்களால் அமைந்திருப்பதை நினைவு கொள்ள வேண்டியுள்ளது.

நம் ஒவ்வொருவருடைய உடல் இருப்பும், உடல் அசைவும், உடல் மொழியும் ஏதோ ஒரு அரசியல் போராட்டத்தின், அரசியல் செயல் உத்தியின் பகுதியாக இருந்து கொண்டிருக்கிறது. வெறும் உடல், வெறும் கறுப்பு என்பது சாத்தியமற்றுவிட்ட அரசியல் வெளியில் ‘வெறும் மனித வாழ்வு’ என்பது ‘அதிபயங்கர’ பேய்த்தன்மை உடையதாக கணிக்கப்படும். வெறுமையாய் இருந்துவிட்டுப் போக விரும்பும் மனிதர்களுக்கு இனி இந்த உலகில் இடம் இல்லை என்ற கொடுமையான உண்மை உறைக்கத் தொடங்கும் பொழுது ‘உடல்கள்’ உயர்தொழில் இயந்திரங்களாகவோ, பேரழிவு ஆயுதங்களாகவோ மாறி ஆக வேண்டிய தேவை ஒரு அழகியலாகப் பதிவாகிவிடுகிறது.

உலக அளவிலான மேலாதிக்கம், சரண்டர் என்பதை மேற்கு, வெள்ளை ஆதிக்கம் என்பது செய்வதாகத் தோன்றினாலும், சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய உலக மயமாக்கலின் விளைவால் உலகம் முழுவதும் ஒரு ஆதிக்க வளையமாகி அந்த நிலப்பரப்பில், தேசத்தில் சில தேர்ந்தெடுக்கப்பட்ட உடல் குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேவதையாகிய உடல்களாக மாறி பிற உடல்களை அழித்தும் விலக்கியும் தமக்கான தெய்வீகத் தோட்டங்களை உருவாக்கிக் கொள்கின்றன. அதற்கு ‘அதிமனித நிலை’ என்ற இன்றைய உயர்தொழில் நுட்ப கருத்தாக்கம் மிகக் கடுமையான பின்புலமாக அமைந்துவிடுகிறது. இனி இந்த உலகம் வெற்றிபெற்றவர்களுக்கானதாக, தெய்வீக ஆதிக்கம் நிறைந்தவர்களுக்கானதாக மட்டுமே இருக்க முடியும் என்பதைத்தான் இன்றைய உலகமயமான பன்னாட்டுத் தன்மை கொண்ட ‘உடல் அரசியல்’ நமக்கு மிகத் தீவிரமாக உணர்த்திக் கொண்டிருக்கிறது.

நன்றி: தீராநதி (ஜூன்)

Wednesday, June 06, 2007

விமர்சன அரசியலினூடாக ஒரு அரசியல் விமர்சனம்

-காளி
(அ. மார்க்சின் 'ஆரியக் கூத்து’ நூலை முன்வைத்து)

காஞ்சி சங்கரமடம், தமிழ்நாடு பிராமணர் சங்கம் ஆகியவற்றின் பின்னணியில், காஞ்சி மட ஆதரவாளர் லட்சுமி நாராயணன் எனும் பார்ப்பனரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்துள்ள 'தமிழக அந்தனர் வரலாறு’ எனும் நூலுக்கான எதிர்வினையாக ஒரு பகுதியும், எஸ்.ராஜாராம் எனும் அயல்நாடுவாழ் பார்ப்பனரின் சிந்துவெளி நாகரிகம் குறித்த இணையதள மோசடிகளை அம்பலப்படுத்தும் இன்னொரு பகுதியுமாக வெளிவந்திருந் திருக்கிறது அ.மார்க்சின் 'ஆரியக் கூத்து.”

90களின் பிற்பகுதியில் வெளிவந்த அ.மா.வின் பின்நவீனத்துவம் நூலின் மீது நான் ஈர்க்கப்பட்டதற்கு சார்பியல் எனும் மெய்யியல் குறித்து அப்போது வெளியாகியிருந்த நூலும் ஒரு காரணம். சார்பியல் குறித்து எளிய சான்றுகளுடன் விளக்கும் அந்நூலில் காணப்படும் ஒரு செய்தி நமது வரலாற்றாய்வாளர்களுக்கும் பொருந்தும் என்று கருதுகிறேன். 'நமது அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் கருத்துகள் பலவும் சார்பானவை. பார்வையிடும் நிலைமைகளைக் குறிப்பிட்டுச் சொல்லும்போது மட்டுமே அவை பொருளுடைய கருத்துகளாகின்றன என்பதே அச்செய்தி.

ஆரியக் கூத்தின் இரண்டாம் பகுதியின் முதல் கட்டுரைக்கு அ.மா. கொடுத்திருக்கும் தலைப்பு, 'வரலாறு அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம்.” முன்பொருமுறை, 'வரலாறெழுதுவது பாசிசம்” என்றொரு முழக்கத்தினை முன் வைத்திருந்தார். ஆர்.எஸ்.எஸ். கோல்வாக்கர், இட்லர் போன்றோர் வரலாறு குறித்து கொண்டிருந்த கருத்துகளைப் பொறுத்து அ.மா.வின் முழக்கங்கள் உண்மையானவைதான் என்றபோதிலும், ஆதிக்க சக்திகளின் அரசியல் நலன்களுக் கானதாய்க் கட்டப்படும் வரலாற்றை உடைத்தெறிந்து ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுக்கான வரலாற்றை மீளுருவாக்கம் செய்வதை நாம் வேறு விதமாகத்தான் பொருள் கொள்ள வேண்டியுள்ளது. ரவிக்குமாரின் 'தலித்” இதழ், வரலாற்றுச் சிறப்பிதழாக (ஏப்ரல் 2007) வெளிவர உள்ளதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். எல்லாக் காலங்களுக்கும், எல்லா இடங்களுக்குமான பொதுவான முழக்கங்கள் சாத்தியமில்லை என்றபோதிலும் அ.மார்க்சின் முழக்கங்கள் இவ்வாறே ஒலிக்கின்றன.

பின் நவீனத்துவ சிந்தனையாளர்கள் குறித்து அ.மா. பேசிய அளவிற்கு தமிழ்ச் சூழலில் பின்நவீனத்துவத்தின் பொருத்தப்பாடு குறித்து அவர் பேசியதில்லை. பார்ப்பன-வெள்ளாள மயமாகியிருந்த தமிழ் இலக்கியச் சூழலைக் கட்டுடைத்து, அதன் சாதியச் சார்பு அரசியல் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகச் செயல்பட்டதை வெளிக் கொண்ர்ந்த அளவிற்கு, பார்ப்பன-இந்துத்துவ- மரபிற்கு மாற்றான ஒரு தொன்மையான வரலாற்றையும், ஆரியக் கருத்தியல்களுடன் தொடர்ந்து போராடிக் கொண்டிருந்த பல்வேறு பார்ப்பன-வேத-வைதிக எதிர்ப்பு மெய்யியல் பள்ளிகளையும் கொண்ட தமிழ் மரபைப் பற்றிப் பேச மறுத்தார்; அல்லது தவிர்த்தார். தவிர்க்க இயலாமல் தமிழ் மரபு குறித்துப் பேசவேண்டிய சூழலில், விரிவாகப் பேசவேண்டிய செய்திகளை மௌனமாகக் கடந்து செல்லும் அ.மார்சின் பண்புக்குச் சான்றாக இன்குலாப்பின் 'ஒளவைஃ நாடக பனுவலுக்கான அவரது எதிர்வினையையும், தமிழிசை ஆய்வாளர் மம்மதுவின் தமிழிசை குறித்த நூலுக்கு அவரெழுதிய முன்னுரையையும் சுட்டலாம்.

ஆரிய வரலாற்றின் மீது கட்டப்பட்ட (சமஸ்கிருதம் வேத பாஷை உள்ளிட்ட) வரலாற்று ஆய்வுகளை விரிவாக விளக்கும் அ.மா. அதற்கு மாற்றாகச் சொல்லப்பட்ட தமிழ்/திராவிட வரலாற்றுக் குறிப்புகளின் முக்கியத்துவத்தினைக் கவனமாகப் புறந்தள்ளிச் செல்கிறார்.

குறிப்பாக அம்பேத்கரின் நாகர்கள் பற்றிய ஆய்வுகளையும், திராவிட மொழிக் குடும்பத்தில் தமிழின் பங்களிப்பையும் அவர் ஏற்க மறுக்கிறார். 'தமிழ்தான் பூர்வ திராவிடம் என்கிற கருத்தை மொழியலாளர்கள் ஏற்பதில்லை’ (பக்.49) என்ற கருத்துக்குச் சான்றாக ரொமிலா தாப்பரின் கட்டுரையொன்றை குறிப்பிடும் அ.மா., மம்மதுவின் தமிழிசை குறித்த நூலுக்கான முன்னுரையில், "தமிழிலிருந்தே திராவிட மொழிகள் அனைத்தும் கிளைத்தனஃ என்கிறார். இது குறித்து அவர் தகுந்த விளக்கங்களை அளிக்க வேண்டும்.

ஆரிய இனம் என ஒன்று இல்லை எனவும், ஆரியர் படையெடுத்து வந்து தாசர்களை அடிமைப்படுத்தினர் என்பது தவறு எனவும் அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளதாகவும், அவரின் இக்கருத்துகளை மேற்கோள் காட்டி, 'ஆரியர் என்ற மொழிக் கூட்டத்தினர் இந்தியாவின் மண்ணின் மைந்தர்கள்” என சேக்கிழார் அடிப்பொடி என்பவர் தமிழக அந்தனர் வரலாற்று நூலில் கட்டுரை ஒன்றை எழுதியிருப்பதாகக் குறிப்பிடுகிறார் அ.மா. இதனையொட்டி கருத்துச் சொல்லும் அ.மா. அம்பேத்கரின் மேற்படி கருத்துகள் இன்று வரலாற்றுலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றே எனவும் இன அடிப்படையிலான வரலாறெழுதலுக்கு எதிரான அம்பேத்கரின் ஆய்வுகளுக்கு இதனை சான்றாகவும் குறிப்பிடுகிறார். அடிப்பொடி அம்பேத்கரின் கருத்தை மோசடித்தனமாக பயன்படுத்துவதையும் தோலுரித்துச் செல்கிறார்.

ஆயினும் நாகர்கள் பற்றிய அம்பேத்கரின் கருத்துகளும், தனது கருத்துகளை நிறுவ அவர் மேற்கோள் காட்டும் ஓல்டுகாம் என்பவரது கருத்துகளும் அம்பேத்கர் இன அடிப்படையிலான வரலாற்றெழுதியலுக்கு எதிரானவர் எனும் அ.மா.வின் கூற்றை வலுப்படுத்துவதாக இல்லை. நாகர்களை ஆரியரல்லாதோர் எனக் குறிப்பிடும் அம்பேத்கர், 'வேதகால இலக்கியங்களில், பண்பாட்டிலும் சிந்தனைப் போக்கிலும் முரண்பட்ட இரண்டு இனங்களுக்கு இடையேயான போட்டிகள்-மோதல்கள் பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கின்றன’ என்பார்.

ரிக் வேதத்தில் காணப்படும் 'அகிவித்ரா’ எனும் நாகதெய்வம் ஆரியக் கடவுளான இந்திரனுக்கு எதிரி, நாகத்தை ஆரியர்கள் வழிபடவில்லை என்பதற்கும். வலிமை வாய்ந்த தீய சக்தி எனக் கருதி அதனை அழித்தொழிக்க வேண்டினர் என்பதற்கும் அகிவித்ராவைப் பற்றிய பாடல்கள் உறுதி செய்கின்றன. ரிக் வேதத்தில் காணும் நாகங்கள் பற்றிய குறிப்புகள் நாகர்கள் தொல்குடிகள் என்பதைப் புலப்படுத்துகின்றன. கடம்ப அரசனான கிருஷ்ண வர்மனைப் பற்றிய தேவநாகரி கல்வெட்டு ஒன்று கடம்பர்களுக்கும் நாகர்களுக்கும் இடையே உள்ள உறவின் தொன்மையைத் தெரிவிக்கின்றது. நாகர்களின் தாயகம் மராட்டியம், மாராட்டியத்தின் மக்களும், மன்னர்களும் நாகர்களே. இவை நாகர்களைப் பற்றி அம்பேத்கர் கூறியவை.

நாகர்களே தாசர்கள் எனவும் திராவிடர்கள் எனவும் அழைக்கப்பட்டதின் பின்னணியை ஓல்டுகாம் என்பாரை மேற்கோள் காட்டி விளக்குவார் அம்பேத்கர்.

தாசர்களை திராவிட இனமாய்ப் பார்ப்பதை ஏற்க முடியாதென கூறும் அ.மா. இதற்குச் சான்றாக ரொமிலா தாப்பரின் கட்டுரையை மேற்கோள் காட்டிச்சொல்லும் கருத்துகள் வலுவானவை அல்ல. தாசர்களோடு ஆரிய கலப்பு ஏற்பட்டதற்கு மொழி/கலாச்சார/சமூக வேறுபாடுகளின் அடிப்படைகளே காரணம் எனும் அ.மார்க்சின் கூற்றை நாம் ஏற்கலாம். தொல்காப்பிய பொருளதிகார நூற்பாக்களும், சங்கப் பாடல்கள் சிலவும் தமிழரும் ஆரியரும் பண்பாட்டு ரீதியில் கலந்ததை குறிப்பிடுகின்றன. 'பார்ப்பன மகனே, பார்ப்பன மகனே’ எனத் தொடங்கும் குறுந்தொகைப் பாடல் இதற்கொரு சான்று.

ஆயினும் இதற்கு ஆரிய/தாச இன வேறுபாடு காரணமல்ல என அவர் கூறுவதை ஏற்க இயலாது. இந்திரனைப் பற்றிய துதிப்பாடலொன்று 'ஓ, இந்திரனே, இழிவாகப் பேசுகின்ற இவர்களை வெற்றிகொள்ள உதவுவாயாக’ என்று கூறுவதை ஓல்டுகாம் குறிப்பிடுவார். மொழி/சமூக/கலாச்சார ரீதியாக ஆரிய-தாச கலப்பு ஏற்பட்டபின் தாசர்கள் தாழ்த்தப்பட்டதற்கும், அடிமைகளாக்கப்பட்ட தற்கும் சூத்திரர்களாக்கப்பட்டதற்கும் இன வேறுபாடும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

நாகர்கள் தாசர்கள் என்று அழைக்கப்பட்ட பிண்ணணியைப் பற்றிச் சொல்லும் அம்பேத்கர், 'தாக்கா எனும் இந்தோ இரானியன் சொல்லிலிருந்து சமஸ்திருதத்தில் மருவியதே தாசர் எனும் பெயராகும். பிற்கால ஆரியர்கள் நாகர் குல மன்னர்களின் பெயருக்குப் பின்னால் தாக்கா எனும் சொல்லைச் சேர்த்து வழங்கினர். அதாவது தாக்கா எனும் சொல் சமஸ்கிருத வடிவம் பெற்று தாசர் என்றாகி அனைத்து நாகர் இனத்திற்குரிய பெயர்ச் சொல்லாகிவிட்டது’ எனக் குறிப்பார். 'இப்போது 'தாசர்” என்ற சொல்லுக்கு அடிமை என்ற பொருள் ஏற்பட்டுள்ளது.

ஆனால் வேதத்தில் தாஸ், தாச் என்ற இரண்டு வினைப்பகுதிகளையும் கொடுத்தல் எனும் பொருளில் வழங்கியிருக்கிறார்கள். எனவே 'தாசன்” என்ற சொல்லுக்கு முதலில் உண்டான பொருள் 'கொடை வள்ளல்”, 'உயர்குடித் தோன்றல்” என்பதேயாகும். அவெஸ்தாவின் தாசர்களை 'தாஹி’ எனக் குறித்துள்ளார்கள். தாசர்கள் உயர்ந்தவர்களாயிருந்து பின்னர் அடிமைகளானவர்கள்” என்பது தருமானந்த கோசாம்பியின் கருத்தாகும். தாசர்கள் (நாகர்கள்) திராவிடர்களே எனும் கருத்தை ஓல்டுகாமை மேற்கோள் காட்டி விளக்குவார் அம்பேத்கர். ஓல்டுகாம் அவர்களின் கருத்துகளின் தொகுப்பாகக் கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிடலாம்:

'சேரர் (பழந்தமிழர் சாரை) என்பது நாகர் எனும் சொல்லுக்கு இணையானதாகும். சேர மண்டலம் என்பதும் நாகதீபம் என்பதும் நாக நாட்டினைக் குறிக்கும் சொற்கள். கங்கைச் சமவெளியில் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கும் சேருசு (அ) சியோரிசு என்னும் மக்கள் தங்களை நாக தெய்வத்தின் வழித்தோன்றல்கள் என அழைத்துக் கொள்கிறார்கள்.

இச் சேருசு மக்களின் சடங்குகள் லிச்சாவி இன, நேப்பாளத்து நேவார் இன மக்களின் சடங்குகளை ஒத்துள்ளன. நேவார் மக்களின் தாய் வழி சொத்துரிமை, பஞ்சாபில் உள்ள ஆரட்டர், பாகிகர், தாக்கர் ஆகியோருக்கு உரிய மருமக்கள் வழியான சொத்துரிமை (ஆணின் உடன் பிறந்த பெண்ணின் மகனுக்கான உரிமை) ஆகியவை தமிழர்களிடையே உள்ள வழக்கத்தை ஒத்துள்ளது. திராவிட ஆராய்ச்சியாளரான பாலகிருஷ்ண நாயர் குறிப்பிடுவதைப் போலத் தமிழர்களும் நேவார் மக்களும் ரத்த உறவினராக இருக்க வேண்டும். லிச்சாவி, நேவார், வைசாலி, காசுமீர மக்கள் அனைவரும் நாக வழிபாட்டினரே.

இமயமலைக்கு அடுத்துள்ள சமவெளியில் சார அல்லது சியோரஜ் என்னும் பெயரில் ஒரு நாடு இருந்தது. இம்மக்களால் வணங்கப் பெற்ற தெய்வங்களில் நாகம் தலையானது. இதைப் போன்றே சீனாப் நதியின் மேல் சமவெளி பகுதி சியோரஜ் எனும் நாக வழிபாட்டினரால் ஆளப்பெற்று வந்துள்ளது.

இமயப் பகுதிகளில் வாழும் மக்களின் மொழிகளில் கிரா அல்லது கிரி என்றும் சொல்லுக்கு நாகம் எனும் பொருள் உண்டு. கங்கரா நாட்டின் பெல்ஜ்நாத் கோவிலில் கிடைத்த கல்வெட்டு ஒன்று அப்பகுதி முன்னர் 'கிர்கிராம்” என அழைக்கப்பட்டதைத் தெரிவிக்கிறது. கிர்கிராம் எனும் சொல்லுக்கு அப்பகுதியில் வட்டார வழக்கில் நாகங்களின் ஊர்கள் என்பது பொருளாகும்.

மலை என்னும் பொருளைத் தரும் கிரி என்னும் வடசொல் நாகத்தைக் குறிக்க வழங்கியுள்ளது இதன் தமிழ்த் தன்மையை உறுதிப்படுத்துகின்றது. நாகம் எனும் தமிழ்ச் சொல்லுக்கு, 'யானை, ஒருவகை மரம், தெய்வலோகம், மலை’ முதலான பொருள்கள் உண்டு என்று விளக்குவார் முனைவர் க. நெடுஞ்செழியன்.

மேற்கண்ட செய்திகளைச் சொல்லும் ஓல்டுகாம், 'பெயர்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையை நாம் முழுதாக ஏற்க முடியாதுதான். எனினும் அம்மக்கள் அனைவரும் ஒரே இனத்தவராக இருக்கக்கூடும் என நாம் நம்புவதற்கு மேலும் பல சான்றுகள் உள்ளன. நாம் இதுகாறும் கண்ட முடிவுகளின்படி தென்னகத்து திராவிடர்களும், வடபுலத்து அசுரர்களும் ஒரே இனத்தவரே, அதாவது நாகர்களே என்பது உறுதி’ என்று கூறுவார்.

நாகர்களுக்கும் திராவிடர்களுக்குமான உறவு பற்றி குறிப்பிடும் அவர், 'தமிழையும் அதன் கிளை மொழிகளையும் பேசியவர்கள் அசுரர்களே என்பதை, சிந்து மாநில எல்லைகளில் வாழும் 'பிராகுவி’ மக்களின் பேச்சு மொழி உறுதி செய்கின்றது. இக்கண்டுபிடிப்பானது திராவிட இனத்தவர் சிந்து மாநிலத்தையும் தாண்டி நடுஆசியா வரை பரவி இருந்ததைப் புலப்படுத்துவதாக அறிஞர் கால்டுவெல்லும் கூறுகின்றார்.

"நான் முன்னர் குறிப்பிட்டதைப்போன்று இந்த நாடு அசுரர்கள் அல்லது நாகர்களின் தாயகம் என்பதும், தென்னகத்தில் செழித்தோங்கிய அரசுகளை உருவாக்கிய திராவிடர்கள் இம்மரபினரே என்பதும் தெளிவாகின்றது’ என்பார்.

திராவிட எனும் சொல் மூலச்சொல் அல்ல எனவும் தமிழ் என்னும் சொல்லின் சமஸ்கிருத வடிவமே அது என குறிப்பிடும் ஓல்டுகாம், 'தமிழ் அல்லது திராவிடம் என்பது தென்னகத்து மக்களின் தாய்மொழி மட்டுமன்று. ஆரிய வருகைக்கு முன்பு காசுமீரத்திலிருந்து கன்னியாகுமரி வரை பேசப்பட்ட மொழி’ எனவும் சுட்டுவார்.

திராவிடர் எனும் சுட்டுப் பெயர் தென்னக மக்களை மட்டுமே குறிப்பிடப் பயன்படுவதை வட இந்திய நாகர்கள் தம் தாய் மொழியாகிய தமிழை விடுத்து ஆரிய மொழியான சமஸ்கிருதத்தை ஏற்றதையும், தென்னகத்து நாகர்கள் தமிழை தக்கவைத்துக் கொண்டதையும் காரணமாகக் குறிப்பிடுவார்.

'நாகர் என்பது இனத்தின் (அ) பண்பாட்டின் அடிப்படையில் உருவான பெயர் என்பதும் தெளிவு. எனவே தாசர்களும், நாகர்களும், தமிழர்களும் ஒரே இனத்தவரே. சுருங்கச் சொன்னால், இந்தியாவில் இரண்டே இனங்கள்தான் உண்டு. ஒன்று இம்மண்ணுக்குரிய நாகர் இனம். மற்றது வந்தேறிகளான ஆரிய இனம். இவை அம்பேத்கர் மேற்கோள் காட்டும் ஓல்டுகாம் என்பவரது கருத்துக்கள்.

அம்பேத்கர் சொன்னதற்காகவே/மேற்கோள் காட்டியதற்காகவே ஒரு கருத்தை நாம் ஏற்க வேண்டியதில்லைதான். அம்பேத்கரைத் தாண்டி நவீன ஆய்வுக்களம் வெகு தூரம் பயணித்திருக்கும் சாத்தியங்களை நாம் மறுப்பதற்கில்லைதான். ஆயினும் அம்பேத்கர் எனும் மகத்தான சமூகவியல்/வரலாற்று அறிஞரை மறுத்துரைக்க எமக்குத் தேவை வலுமிக்க வரலாற்றுச் சான்றாதாரங்கள்.

விடுதலைச் சிறுத்தைகளின் பொதுச் செயலர் தொல். திருமாவளவன் அவர்கள் தான் முன் வைக்கும் தமிழ்த் தேசியத்தின் அடிப்படைகளாக மேடை தோறும் முழங்கி வருவது அம்பேத்கர் மேற்கோள் காட்டும் மேற்சொன்ன கருத்துகளைத்தான். இந்துத்துவ அரசியலுக்கு எதிரான ஒரு கருவியாக தமிழ்த் தேசியத்தைத் தான் முன் வைப்பதற்குக் காரணமாக அகில இந்திய அளவில் இந்துத்துவ எதிர்ப்பை முன்னிறுத்தக்கூடிய ஒரே கொள்கையாக தமிழ்த் தேசியத்தையும் மற்ற எல்லா மொழி வழி தேசியங்களும் இந்திய/இந்துத்துவ தேசியத்தை ஏற்றுக் கொள்வதையும், சமற்கிருதத்தை-சமற்கிருதமயமாதலை ஏற்றுக் கொள்வதையும் குறிப்பிடுவார்.2 'திருமாவளவனின் ஆபத்தான பரிமாணங்களைக் கட்டுடைக்கும் அ.மார்க்ஸ் மௌனமாகும் புள்ளியாக திருமாவின் மேற்படி தமிழ்த் தேசியக் கருத்தியலைச் சொல்ல முடியும்.

'பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு என்பது அவர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்” என அ.மா. குறிப்பிடுவதை அவர் அம்பேத்கரின் நாகர்கள் பற்றிய கருத்துகளைத் தவிர்த்துவிடுதலுக்குக் காரணமாக நாம் புரிந்துகொள்ளலாம். 'பார்ப்பன ஆதிக்கத்தை நாம் எதிர்ப்பது வருணசாதி உருவாக்கத்திலும், நடைமுறையிலும் அவர்களின் பங்கை எதிர்ப்பதே’ (பக். 62) எனவும், அண்ணல் அம்பேத்கர் இந்த அடிப்படையிலேயே பார்ப்பனியத்தை எதிர்ப்பதாகவும் குறிப்பிடுகிறார் அ.மா.

பன்முக வாசிப்பின் சாத்தியங்களை ஆதரிக்க வேண்டிய அ.மா. தனது வாசிப்பினையே எல்லோருக்குமான வாசிப்பாக மாற்றுகிறாரோ என எண்ணத் தோன்றுகிறது. இதற்குச் சான்றாக 'இந்திய வரலாற்றை எல்லாப் பக்கங்களிலிருந்தும் திரும்பத் திரும்ப மறுபரிசீலனைக்குள்ளாக்க வேண்டும் என்பதில் எந்த அய்யமு மில்லை. ஆனால் இத்தகைய பெரும் மறுவாசிப்புகள் புதிய ஆதாரங்களின் அடிப்படையில் அமைய வேண்மேயொழிய எக்காரணம் கொண்டும், தேசியப் பெருமையை நோக்கமாக கொண்டோ, குழுவாதத் தன்மையுடனோ மேற்கொள்ளப்படக் கூடாதுஃ என அவர் கூறுவதைக் குறிப்பிடலாம். 'மறுவாசிப்புகள் குழுவாதத் தன்மையுடன் மேற்கொள்ளக்கூடாது’ என அவர் ஆணையிடுவது பின்நவீனக் கருத்தியலுக்கு எதிரானது.

புதிய ஆதாரங்களின் அடிப்படையில் செய்யப்படும் மறு வாசிப்பினைக்கூட அவர் ஏற்கக்கூடியவரல்லர் என்பது சிந்துவெளி ஆய்வுகள் குறித்த அவரது கருத்துகளிலிருந்து தெரிகிறது. ஆரியக்கூத்தின் முதல் பகுதியில் உள்ள 5ஆவது கட்டுரையும் இரண்டாம் பகுதியில் உள்ள முதல் மூன்று கட்டுரைகளும் சிந்துவெளி ஆய்வுகள் மற்றும் அந்த ஆய்வுகளினூடாக முன்வைக்கப்படும் பார்ப்பன மோசடிகள் குறித்ததாகும்.

சிந்து வெளியினரின் மொழி திராவிட மொழிகளில் ஒன்றாக இருக்கலாம் என்பது ஒரு சாரார் கருத்து. 'ப்ராகுய்” சிந்து வெளிப்பகுதியான பலூசிஸ்தானத்திலும், 'மால்ட்டோ’ மொழி கங்கைச் சமவெளியில் பயிலப்படுவதையும் (இவைகள் திராவிட மொழி குடும்பத்தைச் சேர்ந்தவை), திராவிட மொழிச் சொற்கள் ரிக் வேத மொழியில் ஊடுறுவி இருப்பதையும் இதற்கு ஆதாரமாகச் சுட்டுவதாக அ.மா. குறிப்பிடுகிறார். 'ஆரிய வருகைக்கு முன்னதாக இந்தியா முழுமையும் திராவிட மொழி பரவி இருந்தற்கான ஒரு ஆதாரமாக இவற்றை இக்கருத்தினர் முன்வைப்பர். சமீபத்தில் மறைந்த மொழியறிஞர் எமனோவ் மற்றம் பர்ரோ முதலியோர் இக்கருத்தை முன் வைப்பவர்களில் சிலர்” (பக்.33) என குறிப்பிடும் அ.மா. இக்கருத்து அனைத்து தரப்பு வல்லுனர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை, பெரும்பாலானவர்கள் இதை ஏற்பதில்லை என்கிறார்.

சிந்து வெளி ஆய்வுகள் குறித்து கருத்துச் சொல்லும் கமில் சுவலபிள், 'உயிருள்ள எந்தவொரு மொழிக் குடும்பத்தையாவது ஹரப்பன் மொழியோடு தொடர்புபடுத்தி பார்க்க நாம் நினைப்பின், திராவிட மொழிக் குடும்பத்துக்கே அத்தகுதி உண்டு.... ஹரப்பன் நாகரிகத்திற்கேயுரியவையென்று தொல்லியலாளர்கள் கண்டறியப்பட்டுள்ள பொருள்களை பட்டியலிட்டு அவற்றுக்கான திராவிட மொழிப் பெயர்களை மீட்டமைக்கவும் திராவிடவியல் நிபுணர்கள் முயலவேண்டும்” என்று பரிந்துரைப்பார்.

சிந்துவெளியில் ஆய்வுகள் நிகழ்த்திய பலரும் சிந்து வெளியினரின் மொழி திராவிட மொழியாக இருக்கலாம் என்ற கருத்தையே கூறியுள்ளனர். 'சிந்து வெளியில் காணப்படும் புகழ்பெற்ற முத்திரைகளில் உள்ள குறியீடுகள் இன்றுவரை வாசித்தறியப் படவில்லை என்கிறார் அ.மா. 500 குறியீடுகள் வாசிக்கப் பட்டுள்ளதாக கூறுகிறார் முனைவர் வீ. அரசு.

இந்நிலையில் சென்ற ஆண்டின் தொடக்கத்தில் நாகை மாவட்டம் செம்பியன் கண்டியூரில் கிடைத்த சிந்துவெளி குறியீடுகளுடன் கூடிய புதிய கற்கால கோடாரி குறித்த செய்திகளை அ.மா. விரும்பாவிட்டாலும் நான் விளக்க வேண்டியுள்ளது. இது குறித்து கவிதாசரண் (மே-ஜூன் 06) இதழில் கட்டுரை எழுதியுள்ள முனைவர் வீ. அரசு கீழ்க்காணும் செய்திகளைத் தருகிறார்.

'முதுமக்கள் தாழி பானையோடுகளில் ஓரிரண்டு சிந்துவெளி குறியீடுகளுடன் தமிழகத்தில் இதற்கு முன்னர் கிடைத்துள்ளன. இக்குறியீடுதான் முழுமையாகக் கிடைத்துள்ளது. இதன் மூலம் ஆரிய-திராவிட வரலாற்று முரண்கள் பலவற்றிற்கு விடை கிடைத்துள்ளது. இக்கண்டுபிடிப்பு மூலம் சிந்து வெளிப் பகுதி களிலும் தென்னாட்டிலும் ஒரே திராவிட மொழியைப் பேசும் மக்கள் வாழ்ந்திருக்க வேண்டும் என்பது உறுதிப்படுகிறது’ என் ஐராவதம் மகாதேவனை மேற்கோள் காட்டிக் குறிப்பிடுகிறார்.

சிந்துவெளி குறியீடுகளை, விரிவாக ஆய்வு செய்த பின்லாந்து அறிஞர் அஸ்கோ பர்போலோவும், ஐராவதம் மகாதேவனும் அவை திராவிட மொழி பேசும் மக்கள் பயன்படுத்திய குறியீடுகள் என சொல்வதைக் குறிப்பிடுகிறார். சிந்துவெளி மக்களின் மொழி திராவிட மொழியே என்ற கருத்தினை நிராகரிக்கும் அ.மா. தான் முன்வைக்கும் அரசியலுக்கு எதிராக புதிய ஆதாரங்களுடன் மாற்றுக் கருத்தினை முன்வைத்தாலும் ஏற்க மாட்டார் என்பதற்கு டிசம்பர் 2006இல் பதிப்பு செய்யப்பட்டு வெளிவந்துள்ள அவரது 'ஆரியக் கூத்து’ நூலே சான்றாகிறது.

பார்ப்பனப் பெருமிதங்களாக பார்ப்பனர்கள் உலக அரங்கில் எடுத்துச் செல்லும் ஆயுர்வேதம், கர்நாடக இசை, தொன்ம நாகரிகம் இவை யாவுமே ஒரு காலத்தில், 'இங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் மூதாதையருக்குச் சொந்தமாயிருந்து பின்னர் பார்ப்பனர்களின் மூதாதையரால் களவாடப்பட்டவைகள்தான்.” பொய்யும் புரட்டுகளும் கொண்டு தமது அரசியல் ஆதிக்கத்தை நிலைநிறுத்த பார்ப்பனர் கட்டமைக்கும் வேதகால வரலாற்றுப் புனிதங்களைக் கட்டுடைத்து தீண்டாமைக்குள்ளாக்கப்பட்ட இம்மண்ணின் மைந்தர்களின் வரலாற்றை மீளுருவாக்கம் செய்ய வேண்டிய சூழலில் 'வரலாற்றை மீட்பதே அரசியலை மீட்பதற்கான முதற்படி’ என்று சொல்லலாம்.

பின்நவீனத்துவச் சிந்தனையாளர்களாக நமக்குச் சொல்லப் பட்டிருக்கும் அறிஞர்களின் வரிசையில் வைத்துப் பேசக்கூடிய அளவுக்கு அ. மார்க்ஸ் உழைப்பையும், படிப்பறிவையும் கொண்டவர்தான். ஆயினும் கடந்த காலங்களில் அவர் முன்வைத்த சிந்தனைகளின் மீதான பற்றுதலால் தமிழர்/திராவிடர் வரலாறு தொடர்பான மாற்றுப் பார்வைகளை நேர் கொள்ளத் தயங்குவதும், விரிவாகப் பேச வேண்டியவற்றைப் புறந்தள்ளிவிடுவதுமாகத் தொடர்கிறது அவரது அரசியல். அ. மார்க்சின் இத்தகைய அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு அவரது 'ஆரியக் கூத்துஃ நூலுக்குள் புகுந்தால், வரலாற்று நூல்களை படிப்பதினால் உண்டாகும் சோர்வுகள் ஏதுமின்றி, படிப்போரை கவர்ந்திழுக்கும் ஆற்றொழுக்கான நடையில் பார்ப்பனப் பொய்களையும், புரட்டுகளையும் அவர் தோலுரித்துச் செல்வதுடன் நாமும் பயணிக்க முடியும்.

1. இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள அம்பேத்கர், ஓல்டுகாம், தருமானந்த கோசாம்பி ஆகியோரது கருத்துகள் முனைவர் க. நெடுஞ்செழியனின் 'உலகத் தோற்றமும் தமிழர் கோட்பாடும்” (மனிதம் பதிப்பகம், 1996) நூலிலிருந்து எடுக்கப்பட்டவை. முனைவர் நெடுஞ்செழியன் அம்பேத்கர் மற்றும் ஓல்டுகாம் ஆகியோரது கருத்துகளை, ‘Collected works of Dr.Ambedkar vol/7’ எனும் நூலிலிருந்து மேற்கோள் காட்டுகிறார்.

2. தாய்மண், திசம்பர் 2006.

3. ஆய்வு வட்ட கட்டுரைகள், (பக். 206) ஆய்வு வட்ட வெளியீடு (1995)